பகுதி பதினேழு : புதிய காடு
[ 1 ]
மருத்துவச்சிகள் கையில் தன் உடலை ஒப்புக்கொடுத்தவளாக குந்தி கண்மூடிக்கிடந்தாள். உடல் தன் வலுவை இழப்பது என்பது ஒரு பெரும் விடுதலை என்று தோன்றத்தொடங்கி ஒரு மாதம் ஆகிவிட்டிருந்தது. உடலெங்கும் நுரைத்தோடி ஐயங்களாக, அலைக்கழிப்புகளாக, வஞ்சங்களாக, சினங்களாக, எதிர்பார்ப்புகளாக, கனவுகளாக குமிழியிட்டுக்கொண்டிருந்தது குருதிதான். குருதி உடலில் இருந்து வழிந்து சென்று வற்றவற்ற உடல் தன் நெருப்பை இழந்து வெளுத்து குளிர்ந்து வாழைமட்டைபோல ஆகியது. வெம்மைக்காக அது ஏங்கியது. இரவில் கணப்பையும் பகலில் வெயிலையும் அவள் விரும்பினாள். தோலில் படும் வெம்மை உள்ளே குருதியில் படரும்போது மெல்ல அவள் தசைகள் தளர்ந்து அதை வாங்கிக்கொண்டன.
சேடியர் அவள் கால்களில் சூடான தைலத்தைத் பூசி மரவுரியால் தேய்த்துக்கொண்டிருந்தனர். கணப்பின் வெம்மை மெல்லிய அலைகளாக வந்து இடப்பக்கத்தை மோதிக்கொண்டிருந்தது. கணப்பின்மேல் வைக்கப்பட்டிருந்த கலத்தில் கொதித்துக் குமிழியிட்டுக்கொண்டிருந்த தைலத்தின் ஒலியை அவள் கேட்டுக்கொண்டிருந்தாள். ஒற்றைச் சொற்களை அவ்வப்போது அது சொல்வதுபோலிருந்தது.
அவள் நெடுந்தொலைவில் எங்கோ இருந்தாள். புல்வெளிசூழ்ந்த ஆயர்கிராமத்தில் உயரமற்ற புல்கூரைகள் கொண்ட குடில்களுக்குள் மத்துகள் தயிர்கடையும் ஒலி புறாக்குறுகல் போலக் கேட்டுக்கொண்டிருக்க, முற்றத்தில் மேயும் கோழிகளின் சிறு கொக்கரிப்புகள் சேர்ந்து ஒலிக்க, அவ்வப்போது கன்று எழுப்பும் ஒலி மேலெழுந்து ஒலிக்க, இளவெயில் கலந்த மெல்லிய காற்று மரங்களின் இலைகளை பளபளக்கச்செய்து கடந்து சென்றது. புல்வெளிகளில் இருந்து எழுந்த தழைவாசனை அதிலிருந்தது. காற்றுக்கு எதிர்முகம் கொடுத்த காகம் ஒன்று சிறகடுக்குகள் குலைய மேலெழுந்து வளைந்து சென்றது.
அவள் செந்நிறமான பட்டுப்பாவாடை அணிந்திருந்தாள். அதை இரு கைகளாலும் பற்றி சுழற்றியபடி மெல்ல அமர்ந்தபோது வண்ணம்நிறைந்த சிம்மாசனம் ஒன்றில் அமர்ந்திருப்பவள் போல உணர்ந்தாள். மேலே பார்த்தபோது இளமஞ்சள் நிற சிறகுகளை விரித்து ஒரு சிறிய பறவை எழுந்து சென்றது. தன்னையும் ஒரு வண்ணக்குருவியாக உணர்ந்தபடி அவள் அதை நோக்கி கைவீசியபடி ஓடினாள். சுருண்டு தூங்கிக்கொண்டிருந்த சிறுசெந்நிற நாய் ஒன்று எழுந்து வாலைச்சுழற்றியபடி கூர்நாசியை நீட்டிக்கொண்டு சிரிக்கும் கண்களுடன் ஓடிவந்தது.
கனவுதான் இது என எப்போதோ ஓர் எண்ணம் கடந்துசெல்லும். நாள் முழுக்க அக்கனவு மிகமிக மெதுவாக விரிந்து விரிந்து செல்லும். பின்பு அக்கனவுடன் துயிலில் மூழ்கி விழிக்கையில் தொலைதூரத்தில் அதன் கரைந்த வண்ணம் தெரிவது அகத்துள் ஏக்கத்தை நிறைக்கும். ஆனால் மிக விரைவில் இன்னொரு கனவுக்குள் நுழைந்துவிடமுடியும். நான்குபக்கமும் கதவுகள் கொண்ட குடில்போலிருந்தது அவள் உடல். எந்தக்கதவைத் திறந்தும் கனவுகளுக்குள் இறங்கிவிடமுடியும். இறந்தகாலம் எப்படி கனவாக ஆகமுடியும்? அப்படியென்றால் ஒவ்வொருநாளையும் கனவைநோக்கித்தான் தள்ளிக்கொண்டிருக்கிறோமா? கனவுகளை அவள் அத்தனை திடமாக எப்போதுமே உணர்ந்ததில்லை. கனவுக்கு அப்பால் இன்னும் மெல்லிய மங்கிய புகைச்சித்திரம் போன்ற கனவாகவே அவள் நனவை உணர்ந்தாள். சதசிருங்கம், பாண்டு, மாத்ரி, தருமன்…
நனவைத் தொட்டதுமே அகம் மண்ணுளிப்பாம்புபோல ஆகி கிடந்த இடத்திலேயே தன்னுடலுக்குள் தானே நெளிந்து சென்றபடி கிடப்பதை உணர்ந்தாள். அதை அவளாலேயே பார்க்கமுடிந்தது. இத்தனை நேரம் இதைப்பற்றியே எண்ணிக்கொண்டிருக்கிறோமே என்ற திகைப்பு எழுந்தால் அது இன்னொரு மண்ணுளிப்பாம்பாக அருகே நெளியத்தொடங்கியது. எண்ணை ஊறிய உடலுடன் நாவும் கண்களும் செவிகளும் நாசியும் அற்ற வெற்று உடல்மட்டுமேயான நெளிவு. அதைவெல்ல ஒரே வழிதான். உடலை அசைப்பது. உடலுக்கு சித்தத்தைக் கொண்டுசெல்ல முடிந்தால் கையையோ காலையோ உயிர்கொள்ளச்செய்ய முடியும். அந்த அசைவு நீரசைந்து நிழல் கலைவதுபோல அகத்தை அழிக்கும். மெல்ல புரண்டுகொள்ளமுடியும் என்றால் மீண்டும் கனவுகளுக்குள் செல்லமுடியும்.
நாட்கள் சென்றுகொண்டிந்தன. நூற்றுக்கணக்கான துயில்களும் விழிப்புகளுமாக அவள் அவற்றினூடாகச் சென்றுகொண்டிருந்தமையால் அவள் பலமடங்கு நீண்ட காலத்தில் வாழ்ந்துகொண்டிருந்தாள். பல திசைகளிலும் உடைப்பு கொண்டு பெருகிவழிந்த சித்தத்தால் அவள் பலநூறுமடங்கு வாழ்ந்துகொண்டிருந்தாள். பொருளில்லாத நிகழ்வோட்டங்களின் உள்ளே மேலும் மேலும் பொருளின்மைகள் ஊடுருவிக்கலக்க இருத்தலும் சுவைத்தலும் அறிதலும் கடத்தலும் ஒன்றேயாகி மண்புழு மண்ணைத் தின்று தின்று சென்றுகொண்டே இருந்தது. முடிவேயில்லாத நெளிதல். நெளிவு மட்டுமேயான உடல். நெளிவுக்குள் நெளிந்து செல்லும் அகம்.
பாண்டு உள்ளே வந்து “நலம் பெற்றிருக்கிறாளா?” என்று வினவ மருத்துவச் சேடி “குருதியிழப்பு நின்றுவிட்டது அரசே. தசைகள் இன்னும் வலுப்பெறவில்லை. சித்தம் நிலைகொள்ள இன்னும் நாட்களாகும்” என்றாள். “அஹிபீனா கொடுத்திருப்பதனால் உடல் முழு ஓய்வில் இருக்கிறது”. பாண்டு தன் தோளில் இருந்த தருமனை அருகே நின்ற அனகையிடம் கொடுத்துவிட்டு அவளருகே குனிந்து மெல்ல “பிருதை… பிருதை” என்று அழைத்தான். அவள் வானத்தின் கீழ்மூலையில் ஒரு மெல்லிய சிவப்பு நிறமான அதிர்வாக அந்தக்குரலைக் கேட்டாள். பின்பு அவள் முன் ஒரு இளமஞ்சள்நிறப் பஞ்சுக்குவைபோல கிடந்து காற்றில் அலைபாய்ந்தது அக்குரல். “பிருதை!”
அவள் குனிந்து அதை தொட்டாள். அவ்வளவு மென்மையாக, இளவெம்மையுடன், ஈரத்துடன் இருந்தது. கண்விழித்து சிவந்த விழிகளால் அவனைப் பார்த்து உலர்ந்த உதடுகளை மெல்லப் பிரித்தாள். நா நுனியால் கீழுதட்டை ஈரப்படுத்தியபின் பெருமூச்சு விட்டாள். “பிருதை, உன்னால் எழுந்தமர முடியுமா?” என்றான். “ம்” என்றபின் அவள் கைகளை நீட்டினாள். சேடி அவளை மெல்லத் தூக்கி அவளுக்குப்பின் ஒரு தலையணையை வைத்தாள். அவள் தலைக்குள் வெடித்தபடி சுழன்றுகொண்டிருந்த வண்ணக்குமிழிகளை பார்த்தபடி சிலகணங்கள் கண்மூடி அமர்ந்திருந்தாள்.
அவளை அதிரச்செய்தபடி ஓர் ஐயம் எழுந்தது. கைகள் பதைத்து அசைய கண்விழித்து நெஞ்சைப் பற்றியபடி அவனை நோக்கி சற்றே சரிந்து “இளையவன் நலமா?” என்றாள். “நலமாக இருக்கிறான் பிருதை…” என்றான் பாண்டு. அவள் “ம்?” என மீண்டும் கேட்டாள். “நலமாக இருக்கிறான். சற்றுமுன்னர்கூட நான் சென்று பார்த்தேன்.” அவள் அச்சொற்களை தனித்தனியாக பிரித்து உள்வாங்கிக்கொண்டாள். நலமாக. நலம். நலம். மீண்டும் கண்களைத் திறந்தபோது அவள் சித்தம் சிறகு குவித்து வந்து அமர்ந்துவிட்டிருந்தது. கண்களில் மயக்கம் வடிந்து ஒளிஎழுந்தது.
“இன்று காலை பலாஹாஸ்வ முனிவர் கைலாயப்பயணம் முடித்து இறங்கி வந்திருக்கிறார் பிருதை. அவருடன் சென்ற பன்னிருவரில் ஐவரே திரும்பியிருக்கின்றனர். இந்திரத்யும்னத்தின் பீதாகரம் என்னும் மணல்மேட்டிலுள்ள குடிலில் அவர் தங்கியிருக்கிறார்.” குந்தி தலையசைத்தாள். “நம் மைந்தனைப் பற்றிக் கேட்டார். அவனுடைய நாமகரணத்தை அவரே நடத்தலாமென்று எண்ணினேன். அவருடைய ஆற்றலில் ஒரு துளியையேனும் அவன் பெறுவானென்றால் நல்லதல்லவா?”
மண்ணுளி தன்னை தானே வழுக்கி நீண்டு தன் உடல்முடிச்சை அவிழ்த்துக்கொண்டது. அவள் கைகளை ஊன்றி எழுந்து அமர்ந்துகொண்டாள். “நாளைக் காலை நல்வேளை என்றார் மாண்டூக்யர். நாளை முதற்கதிர்வேளையில் அவர் ஹம்சகூடத்துக்கு வருவார்” பாண்டு சொன்னான். குந்தி தலையசைத்தாள். தருமன் அனகையிடம் இருந்தபடி பாண்டுவை நோக்கி கைநீட்டினான். பாண்டு அவனை திரும்பவும் வாங்கி தன் தோள்மேல் ஏற்றிக்கொண்டு அவன் கால்களைப் பற்றிக்கொண்டான். அத்தனை உயரத்தில் இருந்தே அனைத்தையும் நோக்கி அவன் பழகிவிட்டான் என்று குந்தி எண்ணிக்கொண்டாள். உயரம் குறைவாக இருக்கையில் தெரியும் உலகம் அவனுக்கு அயலாக இருக்கிறது போலும்.
எட்டு மாதங்களுக்கு முன் சதசிருங்கத்துக்குச் செல்லும் முனிவர்களை பலாஹாஸ்வர் இட்டுவந்திருந்தார். அவருக்காக கௌதமரின் பெருங்குடில் ஒருக்கப்பட்டிருந்தது. செய்தியறிந்து காலையில் பாண்டுவும் குந்தியும் மாத்ரியும் அவரை வணங்கச் சென்றபோது அவர் இந்திரத்யும்னத்தின் வெண்ணிறமான கூழாங்கல் பரவிய கரையில் மான்தோலால் ஆன சிற்றாடை மட்டும் கட்டி நின்றிருந்தார். தொலைவிலேயே அவரது தோற்றத்தைக் கண்டு திகைத்த மாத்ரி “அக்கா, இவரென்ன கந்தர்வரா?” என்றாள். குந்தி அவள் கைகளைப்பற்றி அழுத்தி பேசாமலிருக்கும்படி சொன்னாள்.
பலாஹாஸ்வர் செந்நிறமான பெரும்பாறை போலிருந்தார். தான் கண்டதிலேயே பேருடல்கொண்டவரான திருதராஷ்டிரன் அவர் அருகே இளையோன் எனத் தெரிவார் என்று குந்தி எண்ணிக்கொண்டாள். கைகால்களை அசைத்து தன் தசைகளை இறுகியசையச்செய்தபடி அவர் நின்றபோது அவர் தசைகளாலான ஒரு நீர்த்தேக்கம்போல அலையடிப்பதாகத் தோன்றினார். “வெண்ணிறமான யானை ஒன்றை மலைப்பாம்பு சுற்றி இறுக்கிக்கொண்டிருப்பதுபோலத் தோன்றுகிறது” என்றாள் மாத்ரி. குந்தி அந்தக் குழந்தைக்கற்பனையை எண்ணி புன்னகையுடன் திரும்பிப்பார்த்தாள்.
பலாஹாஸ்வரின் சிறிய உருண்ட செந்நிறச் சடைக்கற்றைகள் தோளில் அனல்சுள்ளிகள் போல விழுந்துகிடந்தன. அவருக்கு மீசையும் தாடியும் ஏதுமிருக்கவில்லை. மார்பிலும் தொடைகளிலும் எங்கும் முடியே இல்லை. இறுகிய உடல் தாமிரத்தை உருக்கிச் செய்ததுபோல காலையிளவெயிலில் மின்னியது. புடைத்து எழுந்த மலைத் தோள்கள். நீலநரம்பு எழுந்த பெரும் புயங்கள். இரு இணைப்பாறைகள் போல விரிந்த மார்புகள். அடுக்கிவைக்கப்பட்ட எட்டு செம்பாறைகள் போன்ற வயிறு. அடிமரம்போல நரம்புகள் புடைத்து செறிந்து மண்ணில் ஊன்றிய கால்கள்.
அவர்கள் வணங்கியதும் பலாஹாஸ்வர் “வாழ்க” என்றபின் உரக்க நகைத்து கைகளை வீசியபடி “இந்த சதசிருங்க கௌதம குருகுலம் போல வீணான இடம் ஏதுமில்லை. வந்ததுமே ஒரு மற்பிடிக்கு எவரேனும் உள்ளனரா என்று கேட்டேன். அத்தனைபேரும் குடலைச்சுருட்டிக்கட்டி வாழ்வதனால் காய்ந்த புடலங்காய் போலிருக்கிறார்கள்” என்றார். “நான் எப்போதும் கர்த்தமரின் குருகுலத்தையே விரும்புவேன். அங்கே பத்துப்பன்னிரண்டு சீடர்களை நல்ல மல்லர்கள் என்று சொல்லமுடியும். ஒருநாளைக்கு ஒருவர் வீதம் மலர்த்தியடித்தால் பத்துநாட்கள் மகிழ்வுடன் செல்லும்” என்றார்.
பாண்டு புன்னகையுடன் “தங்களிடம் மற்போர் செய்யவேண்டுமென்றால் மலைவேழங்கள்தான் வரவேண்டும் மாமுனிவரே” என்றான். அவர் அண்ணாந்து வெடித்துச்சிரித்து தன் தொடைகளைத் தட்டினார். “ஆம், நான் மானுடரில் இதுவரை மூவரிடமே நிகர்வல்லமையைக் கண்டிருக்கிறேன். சிபிநாட்டு பால்ஹிகரும் பீஷ்மரும் என்னுடன் கைகோர்த்திருக்கிறார்கள். பரசுராமர் என்னை இறுக அணைத்துக்கொண்டார். அப்போதே அவர் யாரென எனக்குத் தெரிந்தது. அடுத்த தலைமுறையில் நான் உன் தமையனுடன் கைகோர்க்கவேண்டும். பார்ப்போம். சதசிருங்கம் விட்டு இறங்கியதும் நேராக அஸ்தினபுரிக்குத்தான் செல்வதாக இருக்கிறேன்.”
“எனக்கு முதல் மைந்தன் பிறந்திருக்கிறான் தவசீலரே. மாதவத்தாரான துர்வாசரால் அவன் யுதிஷ்டிரன் என்று பெயரிடப்பட்டான். நான் அவனை தருமன் என்கிறேன். தங்கள் வாழ்த்துக்கள் அவனை வலுப்படுத்தும்” என்றான் பாண்டு. “என் வாழ்த்துக்கள் எப்போதும் உண்டு. நான் வந்து அவனை வாழ்த்துகிறேன்” என்றார் பலாஹாஸ்வர். “இன்று அக்னியைப்பற்றிய வகுப்பொன்றை நிகழ்த்தினேன். அதைப்பற்றி எண்ணிக்கொண்டிருக்கையில் நீ வந்தாய்…” பலாஹாஸ்வர் சொன்னார்.
“அக்னியின் இயல்புகளில் முதன்மையானது அது தன்னைத்தானே வெளிப்படுத்த முடியாதென்பதே. அது எதை உண்கிறதோ அதையே தன் ஊர்தியாகவும் உடலாகவும் கொள்கிறது. விண்ணகக்கோள்களில், உலோகங்களில், கல்லில், மண்ணில், மரங்களில் எல்லாம் அக்னி உறைகிறது. அனைத்து உயிர்களின் உடல்களிலும் அக்னியே வசிக்கிறது. இங்குள்ள அனைத்துமே அக்னி எரியும் வேள்விமேடைகள்தான். இங்குள்ள அனைத்தும் அக்னிக்கு அவிகளுமாகும்.”
அவரது முகம் அப்போது இன்னொன்றாக மாறிய விந்தையை குந்தி திகைப்புடன் பார்த்தாள். “அன்னத்தில் வசிக்கிறது எரி. அன்னத்தை உண்டு வாழ்கிறது அது. ஆகவே ஒவ்வொரு அன்னமும் பிற அன்னத்தை உண்டு தன்னுள் வாழும் அனலுக்கு அவியாக்குவதற்கே முயல்கிறது. மண்ணிலும் விண்ணிலும் வாழும் வைஸ்வாநரன் என நெருப்பை வாழ்த்துகிறது வேதம். ஆற்றலே வடிவான ஹிரண்யகர்ப்பன் என்கிறது.”
“எரியெழுப்புதலைப்போல உயிர்களுக்கு புனிதமான முதற்கடமை ஏதுமில்லை. ஆகவே மண்ணில் நிகழும் முதற்பெரும்செயல் உண்பதேயாகும்” கைவீசி பலாஹாஸ்வர் சொன்னார். “கண்ணைத்திறந்துபார்! பார்… நம்மைச்சுற்றி என்ன நடந்துகொண்டிருக்கிறது என. உண்ணுதல்! ஒவ்வொன்றும் பிறிதை உண்டுகொண்டிருக்கிறது! இப்புடவியே ஒரு பெரும் சமையலறை, உணவுக்கூடம்!”
அச்சொற்கள் குந்தியின் முன் அச்சமூட்டும் கரியதெய்வம் என பேருருக்கொண்டு எழுந்து நின்றன. அவள் உடல் சிலிர்க்க மெல்ல மாத்ரியின் தோள்களை பற்றிக்கொண்டாள். பலாஹாஸ்வர் ஓங்கிய குரலில் சொன்னார் “அரசனே, உண்பதைப்போல வேள்வி பிறிதில்லை. அன்னமே பிரம்மம். அதற்கான படையலும் அன்னமேயாகும். அந்தவேள்வியை உன் மைந்தனுக்குக் கற்றுக்கொடு. அவன் உணவை விரும்பட்டும். மண்ணில் குறையாத பேரின்பத்தை அவன் அடைவான். அனைத்து அறங்களையும் ஆற்றி விண்ணில் மூதாதையர் மடியிலும் சென்றமர்வான். ஆம், அவ்வாறே ஆகுக!”
பலாஹாஸ்வர் நீரில் குதித்து நீந்தத் தொடங்கினார். சற்று நேரத்தில் அவரது தலை மிகச்சிறிதாக ஏரிக்குள் மறைந்தது. “இந்த ஏரியின் நீர் பனியுருகி வருவதனால் கடும்குளிர்கொண்டது இதில் நீந்தக்கூடாது என்பார்கள்” என்றாள் மாத்ரி. அச்சத்துடன் பாண்டுவை பற்றிக்கொண்டு, “அவர் நெடுந்தூரம் செல்கிறார். அவரால் மீண்டுவர முடியாதுபோகலாம்” என்றாள். புன்னகையுடன் பாண்டு “அவரால் இந்த ஏரியை ஒரு பட்டுப்பாய் எனச் சுருட்டி கையிடுக்கில் வைத்துக்கொள்ளமுடியும். ஒரு வேளைக்கு முந்நூறு அப்பங்களை உண்ணக்கூடியவரைப்பற்றிப் பேசுகிறாய். மதயானையை இரு கொம்புகளையும் பற்றிச் சுழற்றி மத்தகம் தாழச்செய்பவர் அவர்” என்றான்.
மாத்ரியை நோக்கி “அனகையிடம் சென்று மைந்தன் எப்படி இருக்கிறான் என்று பார்” என்றாள் குந்தி. “மாலை பலாஹாஸ்வர் நம் குடிலுக்கு மைந்தனைப்பார்க்க வருவார் என்று சொல்.” அவள் தன்னை விலகச்சொல்வதை உணர்ந்த மாத்ரி தலையசைத்தபின் முன்னால் ஓடிச்சென்றாள். குந்தி பெருமூச்சுவிட்டாள்.
பாண்டு “என்ன அச்சம்? அஸ்தினபுரியில் இருந்து விதுரன் அனுப்பிய ஒற்றர்களால் இரவும் பகலும் காக்கப்படுகிறான் உன் மைந்தன்” என்றான். “அவர்கள் ஒற்றர்களல்ல” என்றாள் குந்தி சினத்துடன். “சரி, அவர்கள் தவசீலர்கள். மரவுரி அணிந்து காவல் நிற்கிறார்கள். பிருதை, இவ்வளவுதூரம் நகரை உதறி காட்டுக்குள் வந்தபின்னரும் நீ அரசி என்ற அடையாளத்தை இழக்கவில்லையே. இங்கே உன் மைந்தன் அரசமகனல்ல, எளிய முனிகுமாரன். அவனை யார் என்ன செய்யப்போகிறார்கள்? எதற்கு இந்தக் காவலும் கட்டுப்பாடும்? என் மைந்தனை நான் தனியாக எடுத்துக்கொண்டு காட்டுக்குள் சென்றால் புதர்களுக்குள் மறைந்து அமர்ந்து அவர்கள் என்னை கண்காணிக்கிறார்கள். ஒருகணம்கூட அவனுடன் நான் தனித்திருக்க இயலவில்லை.”
குந்தி அதற்கு பதில் சொல்லாமல் நடந்தாள். பின்பு “நான் இன்னொரு மைந்தனைப் பெற்றுக்கொள்ளப்போகிறேன் என்று சொன்னேன் அல்லவா?” என்றாள். “அதைத்தான் சொல்லிக்கொண்டிருக்கிறேன். எனக்கு ஆறு மைந்தர்கள் தேவை. என் இறைவன் சுப்ரமணியனைப்போல ஆறுமுகம்கொண்ட ஒரே மைந்தனாக அவர்களை ஆக்குவேன். இன்னும் ஐந்து மைந்தர்களைப் பெற்றுக்கொடு!” குந்தி அதைக்கேட்காதவள் போல “ஆற்றலே வடிவான மாருதி. பேருடல் கொண்ட பீமாகாரன். மண்ணிலுள்ள அத்தனை அன்னத்தையும் தின்றாலும் அடங்காத பெரும்பசி கொண்ட விருகோதரன். அன்னவேள்வி செய்து பிரம்மத்தைக் காண்பவன். அவனை நான் பெறவேண்டும். அவன் என் மைந்தனுக்குக் காவலனாக நிற்கவேண்டும்” என்றாள்.
“ஆம் அதைத்தான் அன்றுமுதல் சொல்லிக்கொண்டிருக்கிறாய்… நான் வேண்டுவதும் அத்தகைய ஒரு மைந்தனைத்தான்” என்றான் பாண்டு. குந்தி அதன்பின் ஒன்றும் சொல்லவில்லை. குடிலுக்கு வருவதுவரை பாண்டு தான் பெற்றுக்கொள்ளவிரும்பும் மைந்தர்களைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தான். சிறுவனைப்போல கைகளை ஆட்டியும், தானே சிரித்தும், அகவிரைவெழுந்து மூச்சுவாங்கியும் பேசினான். இருகைகளையும் விரித்து துள்ளிக்குதித்து “என் மைந்தர்களை பாண்டவர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். அவர்கள் குருவம்சத்தினர் அல்ல. பாண்டு வம்சத்தினர்… கௌரவர்கள் என என் தமையனின் மைந்தர்கள் அழைக்கப்படட்டும்…” என்றான்.
“பாண்டவ குலம்! குலம்! குலம் என்பதுதான் எவ்வளவு அழகான சொல். எத்தனை ஓங்கி ஒலிக்கும் சொல்!” பாண்டு பரவசத்துடன் சொன்னான். “குலம்! அது மனிதனின் அனைத்து தனிமைகளையும் அழித்துவிடுகிறது. மனிதர்களை சேர்த்துக் கட்டி முன்வைக்கிறது. தெய்வங்கள் மனிதனை தனியனாகத்தான் படைத்தன. அவன் தெய்வங்கள்முன் குலமாக மாறி நின்று அறைகூவுகிறான். மனிதனுக்கு இறப்புண்டு. குலம் இறப்பதில்லை. சாவுக்கரசன் குலங்களின் முன் வந்து தலைகவிழ்ந்து நிற்கிறான். ஹஸ்தி இறக்கவில்லை. குரு இறக்கவில்லை. பாண்டுவுக்கும் இறப்பே இல்லை!”
“என் மைந்தனை தோளில் சுமந்துகொண்டிருக்கையில் நானடையும் மனமயக்குகள்தான் எத்தனை அழகியவை” என்றான் பாண்டு. “என் மூதாதையரை சுமந்துகொண்டிருக்கிறேன் என்று உணர்வேன். என் மூதாதையரின் ஊர்தியே நான். அவர்களுக்கு மண்ணைத்தொட்டு நடக்க ஊன்பொதிந்து உருவான கால்கள். அவர்களை தொட்டறிய தசைஎழுந்த கைகள். பின்பு நினைப்பேன். மண்ணாக விரிந்து கிடப்பவர்கள் என் மூதாதையரல்லவா என. அவர்களில் ஒரு துளியை அல்லவா என் தோளில் சுமந்துசெல்கிறேன் என…”
“அர்த்தமற்ற எண்ணங்களில் இருக்கும் எழிலும் விசையும் பிறவற்றுக்கில்லை பிருதை. ஒருநாள் காட்டில் தருமனுடன் செல்லும்போது தோன்றியது நான் என்னைத்தான் சுமந்து கொண்டு செல்கிறேன் என்று. இரு பாண்டுகள். கீழே இருப்பது குன்றிக்கொண்டிருப்பவன். மேலே திகழ்பவன் வளர்ந்துகொண்டிருப்பவன். நான் விறகு. கருகியழிகிறேன். அவன் நெருப்பு என்னை உண்டு எழுகிறான். அவன் நானே. நான் அவனுக்குள் என் அனலை முற்றிலுமாகச் செலுத்தியபின் அமைதியாகக் கரியாவேன். அவன் வழியாக இந்த மண்ணில் நிலைத்து வாழ்வேன்.”
பாண்டு சொன்னான் “அன்று கண்ணீருடன் மலைச்சரிவில் நின்று என் மூதாதையரை வாழ்த்தினேன். அழிவின்மையின் பெருமுற்றத்தில் நின்று ஏறிட்டு நோக்கினேன். மலைகளே வானமே மண்சரிவே என அழைத்தேன். இதோ நான். இங்கிருக்கிறேன். நான் நான் நான் என என் அகம் கூவியது.” புன்னகையுடன் “மனநெகிழ்வை சொற்களாக ஆக்கக் கூடாது என எண்ணுபவள் நான். ஆனால் அப்படி ஆக்கிக்கொள்ளலாம் என்று இப்போது படுகிறது” என்ற குந்தி சிரித்தபடி “சொற்களாக ஆக்கி வெளியேதள்ளிவிட்டால் மேலும் மனநெகிழ்வை தேக்கிவைக்க இடம் கிடைக்கிறது” என்றாள். பாண்டு உரக்கச் சிரித்துவிட்டான்.
அன்றுமாலை வடக்கிலிருந்து குளிர்காற்று வீசத்தொடங்கியது. பாண்டு மைந்தனை தன் வயிற்றின் மென்மையான வெப்பத்தின்மேல் கவிழ்த்துப்போட்டு நட்சத்திரங்களை நோக்கியபடி மல்லாந்து படுத்திருந்தான். “குளிர் கூடி வருகிறது, உள்ளே வருக!” என்றாள் மாத்ரி. “என் அகவெம்மையே என் மைந்தனுக்குப்போதும்” என்று பாண்டு சொன்னான். “எந்நேரமும் கைகளில் இருக்கும் குழந்தைகள் நலம் பெறுவதில்லை அரசே. தங்கள் பேரன்பினால் மைந்தனை உடலாற்றல் அற்றவனாக ஆக்கிவிட்டீர்கள்” என்றாள் அனகை.
“ஆம். அவன் ஆற்றலற்றவன்தான். என் கைகளின் வெம்மையை விட்டு இறங்காததனால் அவனுடைய கைகளும் கால்களும் வலுப்பெறவில்லை. ஆனால் என் பேரன்பு அவனுக்குள் ஊறிநிறைகிறது. என் மைந்தனுக்கு அன்பே முதல் வல்லமையாக இருக்கும். அன்பினாலேயே இவ்வுலகை அவன் வெல்வான்” என்றான் பாண்டு. “பலாஹாஸ்வர் அன்னம் என்று சொன்னதெல்லாம் என் செவியில் அன்பு என்றே விழுந்தது. அன்பே பிரம்மம். அன்பே அதற்கு படையலுமாகும்.” மாத்ரி சிரித்துக்கொண்டு “அன்பையே உண்ணப்போகிறானா?” என்றாள். “ஆம், கனியில் இருப்பது மரத்தின் அன்பு. அன்னம் மட்டுமல்ல அது, அன்பும்கூடத்தான். என் மைந்தனுக்கு என்றும் அதுவே உணவாகும்.”
எதிர்பாராதபடி காற்று வலுத்தபடியே வந்தது. கீழிருந்து சதசிருங்கம் நோக்கி எழும் காற்று சுழன்று திரும்பியிறங்கியபோது பனிமலைக்குளிருடன் விரைவடைந்திருந்தது. குளிரில் தருமனின் உடல் அதிரத்தொடங்கியது. அவன் பாண்டுவை இறுகப்பற்றியபடி முனகினான். அவன் எச்சில் பாண்டுவின் வயிற்றின் வழி விலா நோக்கி வழிந்தது. சிரித்தபடி அவன் எழுந்து மைந்தனை அனகையின் கைகளில் அளித்தான். “நான் உள்ளே மைந்தன் அருகிலேயே படுத்துக்கொள்கிறேன் அனகை. இரவு முழுக்க மைந்தனைத் தீண்டாமல் என்னால் இருக்கமுடியாது” என்றான்.
நள்ளிரவில் காற்று மரங்களைச் சுழற்றியபடி ஓசையுடன் வீசியது. குடில் மரத்தின் மேலிருப்பதுபோல ஆடியது. “புயலல்லவா அடிக்கிறது!” என்று சொல்லி அனகை கதவின் படலைக் கட்டினாள். “மரங்களெல்லாம் தெற்குநோக்கி வளைந்துள்ளன அரசி. இந்திரத்யும்னத்தின் நீரை காற்று அள்ளி கரைமேல் வீசுகிறது.” காற்றின் ஓசையில் ஓர் அழைப்பு இருந்தது. குடிலின் இடைவெளிகள் வழியாக குளிர்பட்டைகள் வாட்களைப்போல அறைக்குள் சுழன்றன. குந்தி தன் மான்தோல் மேலாடையை எடுத்தபடி “நான் வெளியே செல்கிறேன்” என்றாள். அனகை “அரசி!” என்றாள். “இது உக்ரமாருதத்தின் வேளை. என் மைந்தனும் மாருதியின் மைந்தனாக இருப்பான்” என்றபின் அவள் ஏரிநீர் எழுந்து சிதறி பக்கவாட்டில் மழையாக வீசிக்கொண்டிருந்த புயல்வெளிக்குள் இறங்கிச் சென்றாள்.
ஒவ்வொருநாளும் பேராற்றல்கொண்ட மைந்தனைப்பற்றியே குந்தி சொல்லிக் கொண்டிருந்தாள். மலைச்சரிவின் பெரும்பாறைகளை நோக்கி “இப்பாறைகளை தூக்கி விளையாடுவது புயலின் மைந்தனுக்கு ஒரு பொருட்டே அல்ல” என்று ஒருமுறை சொன்னாள். அனகை புன்னகையுடன் “காற்றால் ஆகாதது ஏதுமில்லை அரசி” என்றாள். நாள்தோறும் குந்தி காற்று சுழன்றுவீசும் மலையடிவாரத்தில் சென்று அமர்ந்துகொண்டாள். “இங்கிருந்தால் பெரும்பாறைகளைக் காணமுடிகிறது. அவை அசைவின்மையாலேயே ஆற்றலைக் காட்டுகின்றன. ஆற்றலை மட்டுமே என் விழிகள் பார்க்க விழைகிறேன்” என்றாள்.
“ஆற்றல் இல்லாத இடமுண்டா என்ன?” என்றாள் அனகை. “என் அன்னை என்னிடம் எறும்புகளைப் பார்க்கும்படி சொல்வாள். சிறிய எறும்பு தன்னைவிட மும்மடங்கு பெரிய எறும்பை சுமந்துகொண்டு மரத்தில் ஏறிச்செல்லும். எறும்பின் ஆற்றல் கொண்ட யானை ஏதும் இல்லை என்பாள்.” குந்தி புன்னகைத்தாள். “ஒரு பெரிய மலைப்பாம்பைக் கொண்டு வரும்படி நேற்று சேவகனிடம் சொன்னேன். அதன் இறுகும் உடல்வளைவை நான் பார்க்கவேண்டும்.”
ஆனால் மைந்தன் ஆறே மாதத்தில் பிறந்தான். அவள் மலைச்சாரலில் வழக்கமான பாறைமேல் அமர்ந்து கீழே காற்று மலையிடுக்கில் பொழிந்து குவிந்திருந்த வெண்ணிறமான மண்ணை அள்ளிச் சுழற்றிக்கொண்டு செல்வதை பார்த்துக்கொண்டிருந்தாள். மலைபுகைவதுபோலிருந்தது அது. அப்போது தன் முதுகில் கூழாங்கல் விழுந்தது போன்ற ஒரு மெல்லிய அதிர்ச்சியை உணர்ந்தாள். திரும்ப முயன்றபோது தோளில் இருந்து விலாநோக்கி ஒரு சுளுக்கு தெரிந்தது. ஐயத்துடன் எழுந்து நின்றபோது கால்களுக்கு நடுவே ஈரமாக ஒன்று நழுவி விழுந்தது. அவள் குனிந்து நோக்கியபோது பாறையிலும் மண்ணிலுமாக சிதறி விரிந்த குருதியைக் கண்டாள்.
அனகையை அவள் கூவி அழைத்தபோது குரலெழவில்லை. அவள் கையசைப்பதைக்கண்டே அனகை ஓடி அருகே வந்தாள். அதற்குள் அவள் பின்பக்கமாக கை ஊன்றி சரிந்து அமர்ந்துவிட்டாள். அனகை அருகே வந்து பார்த்து “அரசி!” என்று கூவியபடி குனிந்தபோது அவளும் பார்த்தாள். அவளுடைய உள்ளங்கையளவுக்கே இருந்த மிகச்சிறிய குழந்தை குருதிக்கட்டி போல கிடந்து அசைந்தது. பெரியதலை ஒரு செங்குமிழ் போலிருக்க அதற்குக்கீழே கைகளும் கால்களும் உடலும் ஒன்றாக ஒட்டிச்சுருண்டிருந்தன.
“உயிர் இருக்கிறதா? உயிர் இருக்கிறதா?” என்று கையை உந்தி சற்றே எழுந்து அடைத்த குரலில் குந்தி கேட்டாள். “ஆம் அரசி… உயிருடன்தான் இருக்கிறது… ஆனால்…” என்றாள் அனகை. “நீ சென்று மருத்துவச்சிகளை அழைத்துவா… அவன் சாகமாட்டான். அவன் காற்றின் மைந்தன்” என்றாள் குந்தி. அனகை ஒற்றையடிப்பாதை வழியாக ஓடினாள்.
குந்தி உடலை தூக்கி எழுந்து அரையமர்வில் குனிந்து குழந்தையைப் பார்த்தாள். எலிக்குஞ்சின் முன்னங்கால்கள்போன்ற கைகள் தொழுதுகொண்டிருந்தன. மெல்லிய தொடைகளுடன் கால்கள் மடிந்து ஒட்டியிருந்தன. காந்தள் புல்லிகள் போல ஒட்டிக்கொண்டிருக்கும் மிகச்சிறிய விரல்கள். பெரிய இமைகளுக்குள் இரு குமிழிகள் ததும்புவதுபோன்ற அசைவு. சிவந்த புண்போன்ற உதடுகள் கூம்பின, ஓசையின்றி அதிர்ந்தன.
குழந்தை நடுங்குவதை குந்தி கண்டாள். என்னசெய்வதென்றறியாமல் பார்த்தபின் காலாலேயே அதை அருகே கொண்டுவந்து இடக்கையால் எடுத்து வெங்குருதி கொட்டிக்கொண்டிருந்த தன் கருவாயிலிலேயே சேர்த்து வைத்துக்கொண்டாள். தன் உடல் வெம்மையை முழுக்க அதற்கு அளிக்கவிழைபவள்போல கைகளால் அழுத்தியபடி திரும்பி ஒற்றையடிப்பாதையைப் பார்த்தாள். எத்தனைநேரம்! அவர்கள் வருகையில் இறந்து குளிர்ந்திருக்கும் மைந்தனைப் பார்ப்பார்களா? இல்லை, அவன் சாகமாட்டான். அவன் வாயுவின் மைந்தன். ஆனால் காற்று அசைவே இல்லாமலிருந்தது. இலைகளில் கூட சற்றும் அசைவில்லை. காலமும் நிலைத்து நின்றது.
அனகையும் நான்கு மருத்துவச்சிகளும் நிலமதிர ஓடிவந்தனர். அவர்களின் பேச்சொலிகளும் மூச்சொலிகளும் சேர்ந்து கேட்டன. அனகை ஓடிவந்து குழந்தையைத் தூக்க முயல “கைகள் படக்கூடாது… மைந்தனுக்கு தோலே உருவாகவில்லை” என்றாள் முதிய மருத்துவச்சி. வாழையிலைக்குருத்தின் மேல் எண்ணையை பூசி அதைக்கொண்டு குழந்தையை மெல்ல உருட்டி ஏற்றி எடுத்துக்கொண்டாள். அதை கவிழ்த்து அதன் உடலில் இருந்த நிணத்தை வழிந்து சொட்ட விட்டாள். இன்னொரு மருத்துவச்சி வாழையிலைக்குருத்தால் அதன் நாசியைப் பற்றி மெல்ல பிழிந்தாள்.
“இத்தனை சிறிய குழந்தையை நான் கண்டதேயில்லை அரசி… இறையருள் இருக்கவேண்டும். நாம் முயன்றுபார்க்கலாம்” என்றாள் முதுமருத்துவச்சி. “ஆறுமாதமென்பது மிகமிக குறைவு… மைந்தனின் குடல்கள் வளர்ந்திருக்காது. மூச்சுக்கோளங்கள் விரிந்திருக்காது” என்றாள் இன்னொருத்தி. “அவன் வாழ்வான்… அவன் வாயுவின் மைந்தன்” என்று குந்தி உரக்கச் சொன்னாள். “பேசவேண்டாம் அரசி… குருதி பெருகி வெளியேறிக்கொண்டிருக்கிறது” என்றாள் அனகை. குந்தியும் அதை உணர்ந்துகொண்டிருந்தாள். அவள் உடலே ஒழுகிச்செல்ல மெல்லமெல்லக் கரைந்துகொண்டிருந்தாள். உடலில் இருந்து வெம்மை விலகிச்செல்ல குளிர் கைவிரல்களில் செவிமடல்களில் மூக்குநுனியில் ஊறி தேங்கி நிறைந்து வழிந்து உடலெங்கும் பரவிக்கொண்டிருந்தது.
அங்கேயே மண்பாத்திரத்தை கல்கூட்டிய அடுப்பில் வைத்து சருகில் தீயிட்டு வெம்மையாக்கிய ஜீவாம்ருதத் தைலத்தில் தொப்புள் வெட்டிக்கட்டிய குழந்தையைப் போட்டார்கள். அப்படியே அதை எடுத்து ஆதுரசாலைக்குக் கொண்டுசென்றார்கள். அங்கே எண்ணைப்பாத்திரத்தினுள் முகம் மட்டும் வெளியே இருக்கும்படி அவனைப் போட்டுவைத்திருந்தனர். அருகே வெப்பத்தை நிலைநாட்ட ஐந்து நெய்விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன. கொழுத்த பச்சைநிறத் தைலத்துக்குள் தவளைக்குட்டி போல அவன் கால்களை சற்று விரித்தான். உடல் நடுக்கம் நின்றதும் மெல்ல அசைந்து நீந்தினான்.
மூங்கில் தட்டில் தன்னை ஏற்றிக் குடிலுக்குக் கொண்டுசெல்லும்போது குந்தி கேட்டாள், “என்ன நாள்? அனகை, மைந்தன்பிறந்த நாள்குறி என்ன?” அனகை “அரசி இது அக்னிசர அஸ்வினி. கிருஷ்ணநவமி. பின்மதியம் முதல்நாழிகை, எட்டாம் அங்கம், நாலாம் கணிகை. மகம் நட்சத்திரம் என்று எண்ணுகிறேன்” என்றாள். “ஆம், மகம். மகம்தான். மகம் பிறந்தவன் ஜகத்தை ஆள்வான் என்பார்கள்” என்றபடி குந்தி தன் கண்களை மூடிக்கொண்டாள். அவள் குருதி மூங்கில்தட்டில் இருந்து கீழே சருகில் சொட்டும் ஒலியைக் கேட்டாள்.
மைந்தன் பிறந்த செய்திகேட்டு ஓடிவந்த பாண்டு ஆதுரசாலை அருகே வந்ததும் திகைத்து நின்றான். பின் தருமனை சேடியிடம் கொடுத்துவிட்டு தயங்கும் கால்களுடன் குடிலின் மூங்கிலைப்பற்றியபடி நடந்தான். எண்ணைத்தாலத்தை அணுகி “எங்கே?” என்றான். “இதோ” என்றாள் மருத்துவச்சி. அவன் அங்குமிங்கும் பார்த்துவிட்டு பார்வையை எடுக்கும்போதுதான் குழந்தையைப் பார்த்தான். உடல்நடுங்கி “விண்ணவரே! மூதாதையரே” என்று கூவிவிட்டான். “அரசே…மைந்தன் நலமாகவே இருக்கிறான்… அஞ்சவேண்டாம்” என்றனர் மருத்துவச்சிகள்.
அவர்கள் சொல்வதெதையும் அவன் செவிகள் கேட்கவில்லை. வெளியே ஓடிச்சென்று கைகள் நடுங்க தருமனை அள்ளி அணைத்துக்கொண்டு காட்டுக்குள் ஓடி தனித்து அமர்ந்துகொண்டான். இரவு செறிந்தபின்னர் சேடிகள் அவனை அழைத்துவந்தனர். துயிலில் மூழ்கிய தருமனை மஞ்சத்தில் படுக்கச்செய்தபின் அவன் முற்றத்தில் மரப்பட்டை மஞ்சத்தில் சென்று அமர்ந்துகொண்டு வானில் விரிந்த விண்மீன்களையே இரவெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தான்.
மறுநாள் காலை முதல்நினைவு வந்ததும் குந்தி “மைந்தன் எப்படி இருக்கிறான்?” என்றுதான் கேட்டாள். “இறையருளுக்காக வேண்டிக்கொண்டிருக்கிறோம் அரசி” என்று அனகை சொன்னாள். “அவன் சாகமாட்டான். அவன் வாழ்வான்… அவன் மாருதியின் மைந்தன்” என்று குந்தி சொன்னாள். அச்சொற்களை அவள் இறுகபற்றிக்கொண்டிருக்கிறாள் என அனகை அறிந்திருந்தாள். “அவனுக்கு என்ன உணவு கொடுக்கிறீர்கள்?” “அவனுக்குச் செரிப்பது குரங்கின் பால் மட்டுமே என்றனர் அரசி. ஆகவே காட்டிலிருந்து மகவீன்ற பன்னிரு குரங்குகளை பொறிவைத்துப்பிடித்துக்கொண்டு வந்திருக்கிறார்கள். அவற்றின் பாலைத்தான் பஞ்சில் நனைத்துக் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.”
குந்தி கண்ணீருடன் தன் முலைகள் மேல் கையை வைத்தாள். அவை சற்றே கனத்து திரண்டிருந்தன. “அவனுக்காக ஒரு துளியேனும் என்னுள் ஊறாதா?” என்று கேட்டாள். அனகை “மாதம் நிறையாமல் பிறந்திருக்கிறார் அரசி… ஆகவே முலைப்பால் வருவதற்கு வாய்ப்பே இல்லை” என்றாள். குந்தி பெருமூச்சுடன் “முன்பொருமுறை முலையைப் பிழிந்து இருளுக்குள் விட்டேன். அந்தப்பாலில் ஒரு துளியேனும் இன்று இங்கே வராதா என ஏங்குகிறேன்” என்றபின் கண்களை மூடிக்கொண்டாள்.
சதசிருங்கத்தின் முனிவர்கள் கூடி மைந்தன்பிறந்த நாட்குறி தேர்ந்தனர். சிம்மத்தில் குருவும் துலாத்தில் சூரியனும் மகத்தில் சந்திரனும் சேர்ந்த கணம். மங்கலம் நிறைந்த திரயோதசி திதி. பித்ருகளுக்குரிய முகூர்த்தம். “காலைவரை மிகமிகத் தீய நேரம் அரசி. காலை கடந்து இருள் விடிந்து கதிர் எழுவது போல பொன்னொளிர் தருணம் அமைந்ததும் மைந்தன் மண்நிகழ்ந்திருக்கிறான்” என்றார் மாண்டூக்யர். “அவனுக்கு நிறைவாழ்வுள்ளது என்கின்றன நிமித்தங்கள். அஞ்சவேண்டியதில்லை அரசே.” அங்கே தன் மடித்த கால்களுக்கு மேல் விழிகள் மலர்ந்து அமர்ந்திருந்த தருமனை அணைத்துக்கொண்டு பாண்டு பெருமூச்சுவிட்டான்.