(2009 ல் நான் எழுதிய குறிப்பு இது. அன்று இச்சிற்றிதழ்களின் இடத்தை இணைய ஊடகம், குறிப்பாக வலைப்பூக்கள் எடுத்துக்கொள்ளும் என எண்ணினேன். அதன்பின் ஒருவேளை சமூகவலைத்தளங்கள் எடுத்துக்கொள்ளும் என நினைத்தேன். மாறாக வலைப்பூக்கள் மிக விரைவிலேயே நின்றுவிட்டன. சமூகவலைத்தளங்கள் விவாதக்களங்களாக ஆனதுமே எல்லா வகையான தற்பெருமைகள், மேட்டிமைத்தனங்களும் பதிவாகத் தொடங்கின. சினிமா, அரசியல், சாப்பாடு, வம்பு தவிர வேறேதுமே பேசுவதற்கில்லாத சூழலாக மாறின. இன்று இச்சிற்றிதழ்கள் பற்றிய பதிவு ஓர் ஏக்கத்தையே அளிக்கிறது)
தமிழில் வெளிவரும் சிற்றிதழ்கள் அபாரமான ஒரு தனியுலகம். தனியொருவர் தன் இருப்பை வெளிக்காட்டிக்கொள்வதற்காக நடத்தும் சிற்றிதழ்கள் முதல் சிறிய குழுக்கள் நடத்தும் சிற்றிதழ்கள் வரை எத்தனை வகைகள். எத்தனை எழுத்துக்கள்.
பொதுவாக தமிழின் சிற்றிதழ்களில் அறிதலுக்காக வாசிக்கத்தக்கவை குறைவே. எளிய வாசிப்பும் எளிய இலக்கியப்புரிதலும் கொண்டவர்கள் தங்கள் குரலைப் பதிவுசெய்வதற்காக நடத்தும் இதழ்களே அதிகம். ஆனால் இந்த முயற்சிகள் எவையுமே வீணல்ல என்பதே என் எண்ணம். தமிழ்ச்சூழலின் அறிவியக்கத்தை முன்னெடுத்துச் செல்லும் சலியாத முயற்சியின் சரடு ஒன்று இவற்றில் உள்ளது. அதிகாரம் பணம் எதனுடனும் சம்பந்தப்படாமல் தூய அர்ப்பணத்தாலேயே இவை நடத்தப்படுகின்றன
இவ்விதழகளை நடத்துபவர்களும் எழுதுபவர்களும் தனி சாதி. லௌகீகமாக ‘துப்பு கெட்டவர்கள்’. பலசமயம் கிராம ஆசிரியர் வேலை போன்ற சிறிய பணிகளில் இருப்பார்கள். அன்றாட வாழ்க்கையே பணச்சிக்கலுடன்தான் முன்னகரும். அதன் நடுவே நேரம் கண்டடைந்து இலக்கியம். அந்த எழுத்துக்களை கடன்வாங்கி பணம் சேர்த்து சுயமாக வெளியிடுவார்கள். எழுத்தாளன் என்ற சுய பெருமிதம் மட்டுமே மிஞ்சும். அதை எவருமே அங்கீகரிக்காவிட்டாலும்கூட, பெரும்பாலான சமயங்களில் அது கிண்டலுக்குள்ளாகும் என்றாலும் கூட, அது ஒரு ஆபரணம்தான் அவனுக்கு
அந்த உணர்ச்சி மிகவும் புனிதமானது என்றே நான் எப்போதும் எண்ணுவது. உலகம் முழுக்க இலக்கியமும் தத்துவமும் அந்த சுயபெருமிதத்தாலேயே இன்றுவரை சாத்தியமாகியுள்ளன. நான் காலத்தின் முன் நிற்கிறேன் என்ற பிரக்ஞையைப்போல மகத்தானதாக எது உண்டு அறிவுஜீவிக்கு?
‘கல்வெட்டு பேசுகிறது’ என்ற சிற்றிதழ் சொர்ணபாரதியை ஆசிரியராகக் கொண்டு சென்னையில் இருந்து வெளிவருகிறது. அதைச்சுற்றி சிறிய ஒரு நண்பர் குழு உள்ளது. அவர்களின் ஆக்கங்கள், சந்திப்பு நிகழ்ச்சிகள் பிரசுரமாகின்றன. அதில் வந்த இக்கடிதம் இதில் உள்ள உண்மை காரணமாக மனதைக் கவர்ந்தது.
கவிஞர் யாழினி முனுசாமி பிரசுரித்திருப்பது இக்கடிதம். தமிழில் கடந்த ஐந்தாண்டுகளாக கவிதைகள் எழுதி வருகிறார் யாழினி முனுசாமி.
*
அஞ்சல் செய்யப்படாத ஒரு கடிதம்
பணப்பற்றாக்குறை ஏற்பட்டு சமாளிக்க முடியாத இயலாமைப்பொழுதுகளில் எங்கள் வீட்டில் நடந்த சண்டைகளில் ஒன்றில் என் மனைவி எனக்கு எழுதி வைத்த கடிதம் இது
எனக்கு பேசறதுக்குக் கூட ஒரு சந்தர்ப்பம் தரமாட்டேங்கிறீங்க. அதனாலதான் எழுதி வைக்கிறேன். இதையாவது நீங்க முழுசா படிப்பீங்கன்னு நான் நம்புறேன். நான் என்ன கேட்டேன். நான் என்னங்க அதிகமா செலவு பண்ரேன்னுதான் கேக்குறேன். துணிக்கு சாப்பாடு இல்லை வெளியிலே சுத்துறதுன்னு எதுவுமே கிடையாது. இந்த 5 வருஷத்திலே நான் ஆசைப்பட்டு உங்ககிட்டே ஏதாவது கேட்டு இருக்கிறேனா சொல்லுங்க. நான் ஏதாவது அதிகமா செலவு பண்ணினா நீங்க சொல்லலாம். சாதரணமா செலவு கொஞ்சம் கம்மி பண்ணிக்கலாம்னு நீங்க சொல்லியிருந்தா பரவாயில்லை. கூலிவேலைசெய்றவங்க கூட திறமையா குடும்பம் நடத்துறாங்கன்னு நீங்க திட்டினதனாலதான் நான் வருத்தப்பட்டேன். உதாரணத்துக்கு நீங்க அண்ணியைச் சொல்றீங்க. உங்க அண்ணி மாதிரி இரண்டுநாளைக்கு புளிச்சாப்பாடு செஞ்சு வச்சா ஒத்துக்குவீங்களா? அவங்ககூட புடவை நகைன்னு எவ்ளவு மேக்கப் பண்றாங்க. நான் அப்படியாவா இருக்கிறேன்? நீங்க கடன் வாங்கி புக்ஸ் போட்டதை மறந்துட்டீங்களா? என்னால சராசரியான புருஷனா எல்லாம் இருக்கமுடியாதுன்னு சொல்லிட்டு இப்ப மொத்தப்பழியும் என் மேலே சொல்றது என்ன ஞாயம்? முன்னாடியெல்லாம் ஏதாவது பேசனாக்கூட முழுசாப் பேச விடுவீங்க. இப்ப பேசக்கூட விடமாட்டேங்கிறீங்க. நான் என்ன தப்பு பண்ரேன் ஏதாவது கேட்டு உங்களை தொல்லை பண்றேனா? இந்ததடவை என் மனசை ரொம்ப கஷ்டப்படுத்திட்டீங்க
-மேரி வசந்தி
*
இக்கடிதத்தில் உள்ள அந்த பெண்ணைப்போன்ற மனைவிகளை நான் மீண்டும் மீண்டும் சந்தித்திருக்கிறேன். அவர்கள் எளிய கிராமத்துப்பெண்கள். சுமாரான படிப்பு, எளிமையான கனவுகள், சாதாரணமான உலக நம்பிக்கைகள், எதிர்காலம் குறித்த நம்பிக்கை நோக்கு கொண்ட இனிய பெண்கள். சிறந்த மனைவிகளாவதற்காகவே வடிவமைக்கப்பட்டவர்கள். அவளை விட அறிவுத்திறன் மேலான கணவர்களால் முழுமையாக வசீகரிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். உள்ளூர அவர்களுக்காக பெருமிதம் கொண்டிருப்பார்கள். மேல்பேச்சுக்கு அவன் வெளியிட்ட கவிதை நூலை அவர்கள் நிராகரிக்கக் கூடும், உள்ளூர அது அவளுக்கு மிகமிக முக்கியமானதாக இருக்கும். அவள் கணவன் சாதாரணர்களில் ஒருவனல்ல என்பதற்கான ஆதாரம் அது. அதை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.
லௌகீக வாழ்க்கை குறித்த பதற்றம் அவர்களில் சிலருக்கு இருக்கும். கணவன் திட்டங்களற்றவனாக இருந்துவிடுவானோ என்ற ஐயம் இருக்கும். அவனை அதற்காக கட்டாயப்படுத்தவும் கூடும். ஆனால் அவனுடைய பலவீனங்களை சங்கடங்களை எளிதாக இயல்பாக உள்வாங்கிச் சமனம் செய்துகொள்பவளாக இருப்பாள்.
சில சமயங்களில் இந்த மனைவிகளுக்காக நான் அனுதாபப்பட்டதுண்டு. இந்தப் புரியாத இலட்சியவாதிகளுக்குப் பதிலாக அவளுடைய தளத்தைச் சேர்ந்த ஒரு சாதாரண கணவனை அடைந்தால் மகிழ்ச்சியாக இருந்திருப்பாளா என. ஆனால் இன்று அது அப்படியல்ல என்று உணர்கிறேன். இந்த இலட்சியவாதி அந்த இலட்சியவாதத்தால்தான் அவளை தோழியாக ஏற்றுக் கொண்டிருக்கிறான். அவளை புரிந்துகொள்கிறான். அவண்டைய உணர்வுகளையும் கௌரவத்தையும் மதிக்கிறான்.
ஆனால் ஒரு நடுத்தர வர்க்க சராசரி கணவன் அவளை அடிமை என்பதற்கு அப்பால் எண்ண போவதில்லை. அவளை ஒவ்வொரு கணமும் சிறுமைப்படுத்துவதன் மூலமே அவன் ஆணாக உணர முடியும். வெளியே அவன் எதிர்கொள்ளும் எல்லா சிறுமைகளையும் சமன் செய்ய முடியும். நான் சூழலில் காணும் தொண்ணூறு சதம் நடுத்தர வற்க்கப் பெண்களின் வாழ்க்கையும் நீடித்த அவமானமே வாழ்க்கையாக ஆகியதாகவே உள்ளது. பெண்ணை மதிக்க இன்னமும் தமிழ்சமூகம் ஆணுக்குச் சொல்லித்தரவில்லை. அடக்கவே அவனை தயாராக்குகிறது, அவனுக்கு ஒருவயதிருக்கும்போதிருந்தே.
அவ்வகையில் இவள் அதிருஷ்டசாலி . அவன் குடிகாரனாக இல்லாதது வரை அவள் இழக்க ஏதுமில்லை. அடைவதற்கு அவளுடைய எந்தத் தோழியும் அடையாத கௌரவமான இனிய வாழ்க்கை உள்ளது. அவனுடைய உள்ளத்துடன் அவள் நெருங்கும் இனிய சில தருணங்கள் உள்ளன. அவனுடைய அத்தனை சிக்கல்களையும் அவன் உருவாக்கும் இழப்புகளையும் அந்த ஒரு காரணத்துக்காகவே அவள் தாங்கிக்கொள்ளலாம்.
நமது எழுத்தாளர்களின், தீவிர இலக்கிய வாசகர்களின் மனைவிகளில் மனம் குறுகிப்போன சிலர் தவிர பிறர் எங்கோ ஒரு புள்ளியில் இந்த யதார்த்ததை உணர்வதை நான் கண்டிருக்கிறேன். என்னிடம் கண்ணீருடன் சிலர் சொல்லியிருக்கிறார்கள். இக்கடிதத்தில் நான் உணர்வது அந்த புரிதல் உள்ளூர ஓடுவதைத்தான்.
கல்வெட்டு பேசுகிறது நவம்பர் இதழ் 2009
924 அ 29 ஆவது தெரு
பக்தவத்சலம் நகர்
வியாசர்பாடி
சென்னை 600039
மறுபிரசுரம். முதற்பிரசுரம் Dec 3, 2009
http://www.kalvettupesugiradhu.blogspot.com/