இந்துத்துவ அறிவியக்கம்-அரவிந்தன் கன்னையன்- பதில்கள்

மதிப்பிற்குரிய திரு.ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம். தங்கள் இணைய தளத்தில் திரு. அரவிந்தன் கன்னையன் எனது எதிர்வினைக்கு எழுதிய ’விரிவான மறுப்பினை’க் கண்டேன். துரதிர்ஷ்டவசமாக இந்த ‘விரிவான மறுப்பு’ அலங்கார வார்த்தைகளால் நெய்யப்பட்ட தனிநபர் தாக்குதல்களைத் தாண்டி நான் முன்வைத்த எந்த ஒரு தரப்பையும் காத்திரமாக மறுதலித்துவிடவில்லை. அதற்குள் செல்வதற்கு முன்பாக தாங்கள் எழுதியுள்ள விசயங்களைக் குறித்து சில எதிர்வினைகளை முன்வைக்கிறேன்.

தாங்கள் சொல்கிறீர்கள்: //அரவிந்தன் சொல்வதுபோல உண்மையிலேயே ஓர் இந்துத்துவ அறிவியக்கம் இருந்தால்கூட அது முதலில் சந்திக்கும் எதிர்ப்பு பெருவாரியான இந்துத்துவர்களிடமிருந்துதான்.// இதை இந்தியாவில் எந்த அறிவியக்கத்துக்கும் நீங்கள் சொல்லலாம். உதாரணமாக ஒரு சுதந்திரமான இடதுசாரி அறிவியக்கம் இருந்தால் குடுஅ அதற்கான பெருவாரியான எதிர்ப்பு இடதுசாரிகளிடமிருந்துதான் வரும் என்று சொல்லலாம். தலித்துகளை அரவணைக்கும் காந்திய அறிவியக்கம் எழுந்தால் கூட அதற்கான பெருவாரியான எதிர்ப்பு காந்தியர்களிடமிருந்துதான் வரும் என்று சொல்லலாம். இந்துத்துவ இயக்கமோ இடதுசாரி இயக்கமோ காந்திய இயக்கமோ அங்கெல்லாம் ஆச்சாரவாதிகள் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ‘நிலவொளியில் உரையாடலாமே’ என தலித் எழுத்தாளரை வீட்டிற்குள் நுழையவிடாமல் சமத்காரமாக வெளியே அழைத்து சென்ற இடதுசாரி அறிவியக்கவாதிகள் உண்டு. தலித் குழந்தைகளும் தலித்தல்லாத குழந்தைகளும் இணைந்து கல்வி கற்பதை முரணியக்க அடிப்படையில் மறுத்து வாதிட்ட ஆதி கம்யூனிஸ்ட்கள் கேரளாவிலேயே உண்டு. ஆனால் இந்துத்துவ அறிவியக்கம் மட்டுமே தனது ஆதார அடிப்படைக்கு எதிராகத் தொடர்ந்து குரல் எழுப்பி வரும் இயக்கம். ஸ்ரீ நாராயண குரு எப்படி ஈழவ சமுதாயத்தின் அன்றைய பொருளாதார அடிப்படையான ஒரு தொழிலையே எதிர்த்து தனது ஆன்மிக வலிமையை மட்டுமே நம்பி சமூக சீர்திருத்தத்தை மேற்கொண்டாரோ அதே போன்றதொரு செயல்பாட்டையே தொடர்ந்து இந்துத்துவ அறிவியக்கவாதிகள் செய்து வந்திருக்கிறார்கள்.

//சீதாராம் கோயலும் கெயின்ராட் எல்ட்ஸும் அதைத்தான் சந்தித்தார்கள். அதைப்பற்றி எழுதியிருக்கிறார்கள். ராமர்பாலம் பற்றிய விவாதத்திலும், சந்திரசேகர சரஸ்வதி விவாதத்திலும் அரவிந்தன் நீலகண்டனே அதை நேரில் உணர்ந்திருப்பார். அவர் கிறித்தவ ஐந்தாம்படை என்றே குற்றம்சாட்டப்பட்டார் [அவரது மனைவி கத்தோலிக்க கிறித்தவர், கிறித்தவராகவே நீடிப்பவர் என்பதனால்]//

தகவல் பிழையை முதலில் சொல்லிவிடுகிறேன். என் மனைவி புரோட்டஸ்டண்ட் கிறிஸ்தவர். ராமர் பாலம் விவாதம் மற்றும் சந்திரசேகரேந்திர சரஸ்வதி விவாதம் ஆகிய இரண்டிலும் நான் கடுமையாக ஆச்சாரவாதிகளால் விமர்சிக்கப்பட்டேன் என்பது உண்மைதான். ஆனால் அப்படி விமர்சித்தவர்களில் ஒருவர் கூட இந்துத்துவ இயக்கம் சாராதவர்கள். அவர்களில் பெரும்பாலானோர் இணைய இந்துத்துவர்கள். அதே அளவு கடுமையாக நானும் அவர்கள் ஆதர்சமாக ஏன் தெய்வமாகவே நினைக்கும் ஆளுமைகளை விமர்சித்தேன் என்பதையும் கணக்கில் எடுக்க வேண்டும். அதன் பின்னரும் என் நிலைபாட்டில் எவ்வித மாற்றமும் இன்றி இன்று வரை இந்துத்துவ இயக்கங்களால் தொடர்ந்து அறிவியக்க செயல்பாடுகளில் நான் ஈடுபடுத்தப்படுகிறேன் என்பதையும் தாங்கள் கணக்கில் எடுக்க வேண்டும். என் மனைவி அடிப்படையிலான அவதூறு ஒரு சில இணைய இந்துத்துவர்களால் ஒரு மின்னஞ்சல் கிசுகிசுப்பாக செய்யப்பட்டது என்பது உண்மைதான் ஆனால் என் திருமண வாழ்க்கையை எவ்வித உண்மை அடிப்படையும் இல்லாமல் ஆபாச அவதூறாக்கி மஞ்சள் இலக்கியம் படைக்கும் செயலில் இந்துத்துவர்கள் -இணைய இந்துத்துவரோ இயக்க இந்துத்துவரோ- ஈடுபடவில்லை. அந்த திருபணியை செய்தவர் இடதுசாரி இலக்கிய அறிவியக்கத்தைச் சார்ந்த ஒரு நபர்தான். இதனூடேதான் நீங்கள் ஏற்கனவே இந்துத்துவர்கள் மீது முன்வைத்த மற்றொரு குற்றச்சாட்டையும் பார்க்க வேண்டும். சமநிலையின்மை. இந்த சமநிலையின்மையை நீங்கள் காண்பது பரவலாக இணைய இந்துத்துவர்களிடம். ஆனால் குழந்தைகளையும் பெண்களையும் எரித்த கோத்ரா சம்பவத்தில் இறந்தவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கவேண்டியதில்லை என்பது தொடங்கி ஆடிட்டர் ரமேஷ் கொல்லப்பட்டது வரை சமநிலையின்மை என்பதை தாண்டி மனிதத்தன்மையே இல்லாத நிலைபாடுகளை எடுத்தவர்களை தொலைகாட்சி அமர்வுகளில் தொடர்ந்து கண்டோம். அவர்கள் மின்னணு குமிழ்களாக தோன்றி மறையும் இணைய இந்துத்துவர்கள் அல்லர். ஆண்டாண்டுகள் இடதுசாரி அறிவியக்கத்திலும் களத்திலும் செயல்பட்டவர்கள். அந்த அறிவியக்கத்தின் முகமாக இருக்கக் கூடியவர்கள். இந்த சமநிலையின்மைக்கு எதிரான எதிர்வினைகளை மட்டுமே வடித்தெடுத்து அவற்றை இந்துத்துவ அறிவியக்கம் சமநிலையின்மை கொண்டது என சொல்வது எத்தனை சரியான செயல் என்பது தெரியவில்லை.

இனி அரவிந்தன் கன்னையனின் ’விரிவான மறுப்பு’. அவர் கூறுகிறார்: ’பம்பாய் உயர் நீதிமன்றம் குருட்டுத்தனமாக அம்பேத்கரின் வரையறையை பயன்படுத்தவில்லை. மாறாக இது பெரிய அளவில் சுவாமிநாராயண் குழுவினரின் தத்துவத்தாலும் பாரம்பரியத்தாலும் அவர்கள் இந்துக்கள் என நிரூபித்தது. இதில் நீலகண்டன் பெருமை எடுத்துக் கொள்ள எதுவுமில்லை. மேலும் நீதிமன்றம் 25 ஆம் பிரிவின் அடிப்படையில் ஒரே மதநம்பிக்கை உடையவர்களிடையே சமத்துவத்தை ஒரு கோட்பாடாக வலியுறுத்தியது.’ (’The Bombay High court did not just blindly use the Ambedkar definition but rather it went to great lengths to establish that the Swaminarayan sect were indeed Hindus by virtue of the philosophy and tradition.There is nothing here for Neelakandan to take credit for. The court further went into Article 25 to establish equality as principle within practitioners of the same faith. ’)

என் எதிர்வினையில் நான் மிகத் தெளிவாக உச்சநீதிமன்ற தீர்ப்பு என கூறியிருக்கிறேன். அந்த தீர்ப்பை வழங்கியவர் நீதியரசர் கஜேந்திரகட்கர். பாபா சாகேப் அம்பேத்கரின் நெருங்கிய நண்பர். இந்த தீர்ப்பில் அவர் இந்து என்பதை வரையறுத்துள்ளவிதம் முக்கியமானது. அவர் பாபா சாகேப் அம்பேத்கரின் வரையறையை முக்கியமாக தீர்ப்பில் முன்வைக்கிறார்: ”The development of Hindu religion and philosophy shows that from time to time saints and religious reformers attempted to remove from the Hindu thought and practices elements of corruption and superstition and that led to the formation of different sects. Buddha started Buddhism; Mahavir founded Jainism; Basava became the founder of Lingayat religion, Dnyaneshwar and Tuk-aram initiated the Varakari cult; Guru Nank inspired Sikhism; Dayananda founded Arya Samaj, and Chaitanya began Bhakti cult; and as a result of the teachings of Ramakrishna and Vivekananda, Hindu religion flowered into its most attractive, progressive and dynamic form. If we study the teachings of these saints and religious reformers, we would notice an amount of divergence in their respective views; but underneath that divergence, there is a kind of subtle indescribable unity which keeps them within the sweep of the broad and progressive Hindu religion. … The Constitution makers were fully conscious, of the broad and comprehensive character of Hindu religion; and while guaranteeing the fundamental right to freedom of religion made it clear that reference to Hindus shall be construed as including a reference to persons professing the Sikh, Jaina or Buddhist religion. Philosophically, Swaminarayan was a follower of Ramanuja and the essence of his teachings is acceptance of the Vedas with reverence, recognition of the fact that the path of Bhakti or devotion leads to Maksha, insistence or devotion to Loard Krishna and a determination to remove corrupt practices and restore Hindu Religion to its original glory and purity. This shows unambiguously and unequivocally that Swaminarayan was a Hindu saint.”

(முழுமையான தீர்ப்பு இங்கே: http://indiankanoon.org/doc/145565/)

இந்த தீர்ப்பில் தொடர்ந்து பௌத்தம் சமணம் சீக்கியம் ஆகியவற்றை இந்து எனும் வரையறைக்குள் கொண்டு வருவதையும், இந்து சமுதாய சீர்திருத்த இயக்கங்களாக அவை காட்டப்படுவதையும் காணலாம். அதன் வரலாற்று இயக்கத்தன்மையானது முற்போக்கானது என்பதை அதை கொண்டு நீதியரசர் நிறுவுகிறார். சுவாமி நாராயண் ராமானுஜ பாரம்பரியத்தில் வருபவர். வேதங்களை ஏற்றுக் கொண்டவர். எனவே சுவாமி நாராயண் இயக்கம் இந்து எனும் வரையறைக்குள் வருகிறது என்பதுடன் இந்து ஞான மரபின் இயக்கம் ’பரந்ததும் முற்போக்கானதுமான’ இந்து மதத்தினுடையது என கஜேந்திரகட்கர் கூறுகிறார். ஆக வரையறை அடிப்படையில் இந்துவாக சுவாமிநாராயண் வருகிறது என்பதுடன் இந்து ஞானமரபே பரந்ததும் முற்போக்கானதும் ஆகும் என கூறுகிறார். இந்த வரையறை அவர் பாபா சாகேபின் அரசியல் அமைப்பிலிருந்து எடுத்து கையாள்கிறார். அதற்கு முன்பாக இந்த வரையறையை அப்படியே பயன்படுத்தியவர் வீர சாவர்க்கர் மட்டுமே. அதை குறிப்பாக கண்டறிந்து சிலாகித்தவர் பாபா சாகேப் அம்பேத்கர் மட்டுமே. இதற்கும் மேலாக கன்னையன் இந்த வரையறைக்கும் அந்த வரையறை பயன்படுத்தியுள்ள உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கும் தொடர்பில்லை என நானோ பரிமாணங்களில் இழை பிரித்து வாதாடலாம். அத்தகைய வாதாடலுக்கு என் அனைத்து அறிவும் தோல்வி அடையும்.

அடுத்ததாக சிங்கல்- சூரஜ் பான் குறித்த விவகாரம்: அரவிந்தன் கன்னையன் இந்த விஷயத்தை இப்படி பார்க்கிறார்: ”இங்கு கூட அநீ சொல்கிறான்: அசோக் சிங்கல் மனு ஸ்மிருதியை ஏன் மறுதலிக்கிறார் என்றால் அது புஷ்யமித்ரர் காலத்துக்கு பிறகு எழுதப்பட்டது என்பதால். சில மனிதர்கள் பிறரை தொடுவது தீட்டாகிவிடும் என்பதும் அது மதத்தின் பெயரால் நியாயப்படுத்தப்பட்டது என்பதும் வெட்டி எறியப்படவோ அல்லது வெள்ளையடித்து மழுப்பவோ வேண்டிய விஷயமில்லை. ஆயிரமாண்டுகளாக தொடர்ந்து இன்றும் இருந்து வரும் கொடுமை வரலாற்றை அழிப்பதன் மூலமாக அகன்றுவிடும் என நினைத்துக் கொள்ள முடியாது. இது குறித்து இனியும் சொல்லிக் கொண்டிருக்க போவதில்லை.”(And even there he says that Singhal was ready to discard Manu Smriti because, in his opinion, it was written after the era of Pushyamitra. That some people were considered to pollute others by their mere shadow and that it was sanctioned by religious texts is not something to be bowdlerized and whitewashed. A tyranny that stretches over a millennia and to even today is not to be wished away by erasing history. I’ll not belabor this further.)

இதில் சுவாரசியமான வேதனைக்குரிய விசயம் நான் எழுதியதற்கும் அரவிந்தன் கன்னையன் எழுதியுள்ளமைக்குமான வேறுபாடு. நான் எழுதியிருந்ததாவது: ”அவரது நூலில் சிங்கல் மனு ஸ்மிருதி என்பது தூக்கி எறியப்பட வேண்டிய ஒரு நூல் என்றும் அது புஷ்யமித்ர சுங்கரின் காலத்துக்கு பிறகு உருவானது என்றும் கூறுகிறார்.” எந்த இடத்திலும் சிங்கலோ அல்லது நானோ மனு ஸ்மிருதி புஷ்யமித்ர சுங்கனின் காலத்துக்கு பின்னர் எழுதப்பட்டதால் தூக்கி எறியப்பட வேண்டியது என கூறவில்லை. இரண்டுக்கும் எத்தனை வேறுபாடு இருக்கிறது பொருளே மாறிவிடுகிறது என்பது படிக்கிறவர்களுக்கு புரியும். சரி என்னை விடுங்கள். நான் இந்துத்துவவாதி சமநிலையற்றவன் வெறுப்பு பிரச்சாரம் செய்கிறவன். ஆனால் அசோக் சிங்கலின் நூலை குறித்து ஒருவர் பின்வருமாறு கருத்து தெரிவிக்கிறார்: “அண்மையில் எனக்கு ஒருவர் திரு. அசோக் சிங்கல் எழுதிய ‘ஸ்ரீமத் பகவத் கீதையே ஆதி மனுஸ்மிருதி’ எனும் நூலை அளித்தார். அந்த நூலில் அவர் மனுஸ்மிருதியை நிராகரித்திருப்பது எனக்கு பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. … திரு. அசோக் சிங்கல்ஜி அவர்களின் நூலை வாசித்த பிறகு ஒரு முக்கியமான தலைவர் இந்த தவறான கோட்பாடுகளை நிராகரிக்க முன்முய்றசியை எடுத்திருக்கிறார் என்பது பெரும் மகிழ்ச்சியை தருகிறது. சில வெறியர்கள் அவரை எதிர்ப்பார்கள் என்பதை நான் உணர்ந்திருக்கிறேன். ஆனால் அத்தகைய எதிர்ப்புகளை சிங்கல்ஜி போன்ற ஒரு வலிமையான தலைவரால்தான் (Only a strong leader like Shri Singhal ji ) எதிர்கொள்ள முடியும் என நான் நம்புகிறேன்.சமுதாயத்தின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் வலிமைப்படுத்த இத்தகைய நன்மை தரும் முயற்சிகள் பல மேலும் எடுக்கப்பட வேண்டியது அவசியம். இந்த திசையில் முக்கிய முதலடி எடுத்து வைக்கப்பட்டுள்ளது என்படு உண்மையாகவே பாராட்டுதலுக்குரியது.” – எழுதியவர் பௌத்த விபாசனா முறையை உலகமெங்கும் பரப்பிவந்தவராகிய சத்ய நாராயண கோயங்கா அவர்கள். 2006 இல் அவர் இக்கடிதத்தை எழுதி வெளியிட்டார். (பார்க்க: http://www.vridhamma.org/en2006-03)

பாபா சாகேப் அம்பேத்கரை குறித்து கன்னையன் கூறுகிறார் : “இன்று நீலகண்டனும் பிறரும் ஏன் அம்பேத்கரை தழுவிகிறார்கள் என்றால் அம்பேத்கருக்கு காந்தி குறித்து இருந்த மனக்கசப்பும் (இந்துத்துவர்களுக்கு) செமிட்டிக் மதங்களுக்கு எதிராக ஓரணியில் இந்துக்களை திரட்ட வேண்டிய அவசியம் இருப்பதும்.” (Today Neelakandan and others are eagerly embracing Ambedkar out of a shared animosity towards Gandhi and out a desire to fashion unified Hindu front as a rampart against the Semitic religions.)

இந்துத்துவர்களுக்கும் டாக்டர் அம்பேத்கருக்குமான இணக்க உறவு என்பது இன்று நேற்று ஏற்பட்டதல்ல. ஆரிய இனவாத கோட்பாட்டை எதிர்ப்பது ஆகட்டும், கிழக்கு வங்க அகதிகள்/சிறுபான்மையினர் தொடர்பாக நேரு அரசு எடுத்த பாரபட்ச மனிதத்தன்மையற்ற நிலைபாடுகளுக்கு எதிர் குரலாகட்டும், மாவோ அரசிடம் நேரு அரசு காட்டிய அதீத பரிவை எதிர்த்ததாகட்டும் ஏன் இந்தியாவின் தேசிய கொடியாக காவிகொடி இருக்க வேண்டும் என்பதாகட்டும் பாபா சாகேப் அம்பேத்கருக்கும் இந்துத்துவர்களுக்குமான கருத்தொற்றுமை அதிகம் வெளியில் பேசப்படாத ஒன்றாகும். ஆனால் டாக்டர் அம்பேத்கரை கருத்தியல் ரீதியாக இந்துத்துவர்கள் சுவீகரித்தது எப்போது? உண்மையில் டாக்டர் அம்பேத்கரை எல்லா கட்சிகளும் தங்கள் சுவரொட்டிகளில் பயன்படுத்த தொடங்கிய காலகட்டம் 1990களுக்கு பிறகுதான். ஆனால் 1970கள் முதலே ஆர்.எஸ்.எஸ்ஸின் ஏகாத்மதா ஸ்தோத்திரம் எனும் காலை வணக்கப் பாடலில் (காஷ்மிர் முதல் கன்யாகுமரி வரை எல்லா ஆர்.எஸ்.எஸ் காரியாலயங்களிலும் காலையில் சொல்லப்படும் துதி அது) பாரதத்தின் ஏற்றமிகு தேசிய சிற்பிகள் வணங்கப்படுவார்கள். அப்பெயர்களில் காந்தி பெயரும் சொல்லப்படும். பாபா சாகேப் பெயரும் சொல்லப்படும். ஆர்.எஸ்.எஸ்ஸின் மூன்றாவது தலைவர் மதுகர் தத்தாத்ரேய தேவரஸ் தான் பொறுப்பேற்ற தனது முதல் வசந்தகால உரையில் பாபா சாகேப் இந்து சமுதாய அமைப்பின் மீது வைத்த விமர்சனத்தில் உள்ள உண்மையிலிருந்துதான் ஆரம்பித்தார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சமுதாய பார்வையை தீர்மானிக்கும் ஆவணமாக செயல்திட்டங்களின் சட்டகமாக இந்த உரையே இன்றும் விளங்குகிறது. ஆக ஆபிரகாமிய மதங்களுக்கு எதிரான ஆள் திரட்டல் என்று குறுக்குவது வளமையான அறிவுஜீவி மேட்டிமை வாதம் மட்டும்தான்.

நியூரோ தியாலஜி ஒரு போலி அறிவியல் புலமென்கிறார் அரவிந்தன் கன்னையன். துரதிர்ஷ்டவசமாக அவர் இது குறித்து மேலும் படிக்க வேண்டும் என்பதை தவிர வேறெதையும் நான் கூற இயலாது. நியூரோதியாலஜி என்பது சமய அனுபவங்களின் நியூரல் செயல்பாடுகளை ஆராய்வது. அது பல புலங்கள் ஒருங்கிணையும் ஒரு முக்கியமான துறை. எனக்கு அந்த பெயரில் சிறிது தயக்கம் உள்ளது. ஆனால் மத அனுபங்களுக்கு மானுட பரிமாணத்தில் (கூட்டு பரிமாணத்திலும் சரி தனி மனித அக பரிணாம வளர்ச்சியிலும் சரி) ஒரு முக்கிய பங்கு உண்டு. அதற்கு உயிரியல் வேர்கள் உண்டு. பதஞ்சலி திருமூலரென இங்கே பரந்து விரிந்த அக அறிவியல் மரபொன்றும் உண்டு. இவை இன்றைய நியூரோதியாலஜிக்கு மிக தேவையான ஒரு அறிதல் சட்டகத்தை அளிக்க இயலும். இந்திய பாரம்பரிய ஞானமரபு கட்டாயமாக உரையாட வேண்டிய ஒரு அறிவியல் புலம் நியூரோதியாலஜி. மைக்கேல் பெர்சிங்கர், ஆண்ட்ரூ நியூபெர்க், வி.எஸ். ராமசந்திரன் என முக்கிய அறிவியலாளர்களின் பங்களிப்பு கொண்டது அந்த புலம். இந்த அறிவியல் புலத்தின் அடிப்படையில் நான் முன்வைக்கும் கருத்துகள் கட்டாயமாக விவாதிக்கவும் விமர்சிக்கவும் படலாம். மறுக்கவும் எதிர்க்கவும் படலாம். ஆனால் நியூரோதியாலஜி என்பதையே ‘patented pseudo-science.’ என கூறுவது மிகவும் மென்மையாக கூறுவதானால் துரதிர்ஷ்டவசமானது.

இறுதியாக நான் முன்வைத்த முக்கியமான ஒரு விஷயம் – பாரம்பரிய அறிவுகளுக்கான மின்னணு நூலக களஞ்சியம் – (TKDL, Traditional Knowledge Digital Library). இந்த ஒரு செயல்திட்டத்தை உருவாக்கியது மட்டுமே இந்துத்துவ அறிவியக்கத்தின் ஒரே பங்களிப்பாக இருந்தாலும் கூட அது மகத்தான சாதனை. ஆனால் இதற்கான ‘விரிவான மறுப்பாக’ கன்னையன் முன்வைப்பது: “The old saw, of Indian science containing miracle cures that Western science only recently discovered, is brought out again by citing Dr Mashelkar’s article ‘Blending traditional wisdom and modern science’. Mashelkar, Director General of CSIR, recycled an old speech of his as an article in honor of Joshi’s 75th birthday. This is just sycophancy. The article contains the usual worthless shibboleth of greatness of ancient Indian science.” ஆனால் நான் சொல்லியிருப்பது வேறு விசயம். நம் மரபு சார் அறிதல்/பயன்பாடு கொண்ட உயிரி வளங்கள் தொடர்ந்து பன்னாட்டு நிறுவனங்களால் கொள்ளை அடிக்கப்பட்டு வந்தன. இந்த செயல்பாட்டிலிருந்து இந்தியாவை காப்பாற்றும் ஒரு மகத்தான செயல்பாடே TKDL. இது குறித்த கருத்தாக்கமும் இது உரு பெற்றதும் முரளி மனோகர் ஜோஷியின் காலகட்டத்தில்தான். இதன் விளைவாக தடுக்கப்பட்ட நம் உயிரி வளங்கள்/அறிதல் பயன்பாடுகள் ஆகியவற்றை இங்கே காணலாம் (http://www.tkdl.res.in/tkdl/langdefault/common/Outcome.asp)

இந்த ’விவாதங்களிலும்’ ’பிரகடனங்களிலும்’ மீண்டும் மீண்டும் நான் காண்பது ஒன்றை மட்டும்தான். ’நீ என்னதான் ஆதாரங்களை காட்டு. அதனால் என்ன நீ வெறுப்பாளன். நீ சமநிலையற்றவன். நான் உன்னை தீர்ப்பிடுபவன். என் தாராளத்தால் நான் உன்னை அனுமதிக்கிறேன். அதற்கு நன்றியுடையவனாக இரு. நான் எப்போதும் உன்னை தீர்ப்பிடுவேன். முத்திரை குத்துவேன். ஏனெனில் நான் இந்துத்துவனல்ல. நீ இந்துத்துவன்’. இதுதான் மீண்டும் மீண்டும் பல விதமான வாக்கியங்களில் தேர்ந்தெடுத்த வார்த்தைகளில் கூறப்படும் என நான் அறிவேன். ஆனாலும் இதை எழுதுவது என் கடமை.

பணிவன்புடன்

அநீ

*

ஜெயமோகன் அவர்களுக்கு

திரு அரவிந்தன் கன்னையன் அவர்களின் பதிலை வாசித்தேன். எனக்கு அரவிந்தன் நீலகண்டனின் இந்துத்துவ நிலைபாடு மீது எவ்வித ஈடுபாடும் இல்லை. அரசியலுக்காக கலாச்சாரத்தைக் கருவியாக பயன்படுத்தும்போது அதைப்போன்ற ஒற்றைநிலைபாடும் [மன்னிக்கவும் தமிழில் சரியாகச் சொல்லத்தெரியவில்லை] அல்லது பிடிவாதமும் உருவாகாமலிருக்கமுடியாது.

ஆனால் அரவிந்தன் கன்னையனின் இணையதளத்துக்குப்போய் அவரது எழுத்துக்களை வாசித்தபோது திகைத்துப்போனேன். எந்தவித ஒளிவும்மறைவும் இல்லாத கிறிஸ்தவ அடிப்படைவாதத் தர்க்கங்கள் அவருடையவை. அவருடைய அத்தனை கட்டுரைகளிலும் ஒரே விஷயம்தான். அவர் கிறிஸ்தவர், கிறிஸ்தவ மதம் நாகரீகமானது, அவர் ஒரு நாகரீக உலகமான அமெரிக்காவில் இருக்கிறார், அங்கிருந்து எந்த நாகரீகமும் இல்லாத இந்தியாவைப்பார்த்து அருவருப்பு அடைகிறார், அதைத்தான் திரும்பத்திரும்ப எழுதுகிறார்

உங்கள் நண்பர் என்று சொல்கிறீர்கள். அவரது வாசிப்பும் மன அமைப்பும் எல்லாமே வெறும் இணையத்தில் கூகிள் சேவையாலும் வெட்டித்தர்க்கத்தாலும் கிடைக்கக்கூடியவை என்றுதான் எனக்குப்பட்டது. பன்னிரண்டு கட்டுரைகளை வாசித்தேன். ஒன்றில் கூட பொருட்படுத்தும்படியான எதுவும் இல்லை. வெறும் வம்பும் சழக்கும்தான்

என்ன விஷயம் என்றால் அரவிந்தன் நீலகண்டன் அவர் அடிப்படைவாதி அல்ல என்று வாதிட்டுக்கொண்டே இருக்கிறார். ஆதாரங்களைக் காட்டுகிறார். ஆனால் அரவிந்தன் கன்னையன் கிறிஸ்தவ அடிப்படைவாதியாக இருப்பதே ஒருபெரிய சுதந்திரவாதம் [தாராளவாதம்?]என்றும் உயர்ந்த நாகரீகம் என்றும் நினைக்கிறார். இந்த பயங்கரமான தன்னம்பிக்கையை நான் இங்கே [நானும் அமெரிக்காவில்தான் இருக்கிறேன்!!!] நிறைய வெள்ளையர்களிடம் கண்டிருக்கிறேன். அதைத்தான் அரவிந்தன் கன்னையன் கற்றுக்கொண்டிருக்கிறார்

என்னுடைய வாசிப்பிலே இரண்டு அரவிந்தன்களும் சமம்தான். அவர்களின் மதக்குறுகலை விட்டு வெளியே வந்து பார்க்கமுடியாதவர்கள். மதத்திலேயே ஆன்மீகத்தைவிட அரசியலை மட்டும் எடுத்துக்கொண்டு அதை வைத்து வெட்டிச்சண்டைகளில் ஆர்வம் கொண்டவர்கள். எதற்காக இதற்கெல்லாம் உங்கள் இணையதளத்தில் இடமளிக்கிறீர்கள்? இவையெல்லாம்தான் இணையத்தில் எல்லா ஃபேஸ்புக் சர்ச்சைகளிலும் கிடைக்கின்றன?

திருநாவுக்கரசு

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 63
அடுத்த கட்டுரைநாடக முகம்