‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 79

பகுதி பதினாறு : இருள்வேழம்

[ 2 ]

சகுனி வழக்கம்போல காலையில் எழுந்து பீஷ்மரின் ஆயுதசாலையில் பயிற்சிகளை முடித்தபின்னர் திரும்பும் வழியில் “வடக்குவாயிலுக்கு” என்று சொன்னான். ரதமோட்டி அதை மெலிதாகவே கேட்டானென்றாலும் உணர்ந்துகொண்டு கடிவாளத்தை இழுத்து ரதத்தைத் திருப்பிக்கொண்டு சென்றான். அரண்மனைமுகடுகள் கோடைகாலத்தின் வெண்ணிற வானத்தின் பின்னணியில் மெல்லிய ஒளியுடன் தெரிந்தன. காலை நன்கு விடிந்துவிட்டபோதிலும் தெருக்களில் மனிதநடமாட்டம் மிகவும் குறைவாகத்தான் இருந்தது. நகர்மீது வெயில் கொழுத்த பளிங்குத்திரவம்போல படர்ந்திருக்க அதனுள் நீந்துபவர்கள் போல மக்கள் கால் துழாவி அசைந்து சென்றனர். அஸ்தினபுரியின் மக்கள்மேல் கனத்த எடை ஒன்று வந்தமர்ந்துவிட்டது போலிருந்தது.

முந்தையநாள் காலையில் அவனுக்கு செய்தி வந்தது. தன் அறையில் தனக்குத்தானே சதுரங்கமாடியபடி அவன் அதற்கு முந்தைய இரவுமுதலே விழித்திருந்தான். மறுநாள் காலையிலும் மைந்தன் பிறக்கவில்லை என்று அறிந்ததும் தன் சேவகனை அனுப்பி விசாரிக்கச் சொன்னான். மதங்ககர்ப்ப்ம் ஆதலால் மேலும் ஒருநாள் ஆகலாமென்றனர் மருத்துவர்கள். பகலெல்லாம் அவன் அறையிலேயே இருந்தான். அறையிலேயே உணவுண்டான். சதுரங்கம் சலித்தபோது எழுந்து சாளரங்கள் வழியாக கோடையில் வெந்து விரிந்த நகரத்தெருக்களைப் பார்த்துக்கொண்டிருந்தான். மீண்டும் வந்தமர்ந்தான். இரவாகியது. மீண்டுமொருமுறை தூதனை அனுப்பினான். நள்ளிரவுக்குப்பின் மீண்டும் ஒருமுறை சென்றுவந்த தூதன் “நெருங்குகிறது இளவரசே!” என்றான்.

பகலெல்லாம் வெந்தபுழுதியும் சருகுமாக தெற்குக்காட்டிலிருந்து வீசிய வெங்காற்று மாலையில் சற்று அமைதிகொண்டது. அஸ்தினபுரியின் மக்கள் தூசுக்கு கதவுகளை மூடி வீட்டுக்குள்ளேயே இருந்தனர். மாலையில் சாலைகளில் உடைகளின் வண்ணங்கள் தெரியத்தொடங்கின. அந்தி சாய்ந்ததும் மீண்டும் காற்று வீசத்தொடங்கியது. தென்திசைச் சுடுகாடுகளின் சிதையெரியும் புகைமணமா அதில் நிறைந்திருப்பது என சகுனி வியந்துகொண்டான். கோடை பல உயிர்களை பலிகொண்டிருந்தது. ஒவ்வொருநாளும் காலையில் தென்திசைநோக்கிச் செல்லும் சாலையில் நிரைநிரையாக பாடைகளில் சடலங்கள் சென்றுகொண்டிருந்தன. குழந்தைகள், முதியவர்கள், பெண்கள்…

கோடையின் உச்சம் என்று உணரத்தக்க அளவில் வெப்பமிருந்தது. தொடர்ந்து ஏறிவந்த வெயில் மண்ணில் எஞ்சிய அனைத்து நீரையும் உறிஞ்சி விண்ணுக்கு அனுப்பிவிட்டது. மேற்குத்திசையின் ஏரிகள் முழுமையாகவே வற்றிச் சேற்றுப்பரப்பாக மாறி பின் உலர்ந்து வெடித்து ஓட்டுவில்லைப்பரப்பாக ஆயின. நகரத்தின் கிணறுகளில் பெரும்பாலானவற்றில் அடிக்கல் தெரிந்தது. அனைத்து மரங்களும் இலைகள் பழுத்து உதிர்ந்திருக்க எஞ்சிய நம்பிக்கையை கிளைநுனிகளில் சில இலைகளாக தக்கவைத்துக்கொண்டு வானோக்கி கைவிரித்து இறைஞ்சி நின்றன. செடிகள் தங்கள் விதைகளை மண்ணில் பரப்பிவிட்டு படிந்து உலர்ந்து மட்கி அழிந்தன.

காற்று வீசிக்கொண்டே இருந்தது. அஸ்தினபுரியெங்கும் செம்புழுதியின் படலத்தை போர்த்திமூடியது அது. காலையில் கண்விழித்து எழுந்தவர்கள் செம்புழுதி மெல்லிய பட்டு போல அனைத்தையும் மூடி அலையலையாக நெளிந்துகிடப்பதைக் கண்டார்கள். புராணகங்கையின் இருபது பெருங்கிணறுகளில் மட்டுமே நீர் இருந்தது. அந்த நீரை பெரிய மரப்பீப்பாய்களில் அள்ளி மாட்டுவண்டிகளில் ஏற்றி தெருக்கள் வழியாக கொண்டுசென்றனர். காளையின் சிறுநீர்த் தடங்கள் போல அவைசென்ற வழி புழுதியில் நீண்டுகிடந்தது. ஏறி ஏறி வந்த வெயிலின் உச்சியில் பெருமரங்களில் சில முற்றிலும் இலையுதிர்ந்து காய்ந்து துடைப்பங்கள் போல மாறி வானை வருடி நின்றன.

“அனலோன் மண்ணிறங்கும் பருவம். அவன் மண்ணைத் தூய்மைசெய்தபின் விண்ணரசன் வானிலெழுவான். அவன் ஒளிவில் கீழ்த்திசையில் வளையும். நீரோன் நகர்மேல் கனிவான்” என்றனர் முதியோர். “அக்கினிநாட்கள் ஐந்து. ஆறாம் நாள் இந்திரனுக்குரியது.” ஆனால் அனல்நாட்கள் அவ்வாறே நீண்டன. ஐந்து ஐந்து நாட்களாக மறு மாதம் கடந்தது. இரவிலும் வெப்பம் தாளாமல் யானைகள் குரலெழுப்பிக்கொண்டிருந்தன. மக்கள் திறந்தவெளிகளில் விசிறிகளுடன் இரவுறங்கினர்.

கோடையில் காடு முற்றாக வறண்டது. சிற்றுயிர்களெல்லாம் வளைகளுக்குள்ளும் மரங்களுக்குள்ளும் மாள, காகங்கள் நகர்நோக்கி வந்தன. ஒவ்வொருநாளும் காகங்கள் வந்தபடியே இருந்தன. வந்தவை கரைந்து கரைந்து பிறகாகங்களைக் கொண்டுவந்துசேர்த்தன. அங்காடிகளிலும் அடுமனைப்பின்பக்கங்களிலும் அவை கூடின. பின்னர் யானைக்கொட்டிலிலும் குதிரைக்கூடங்களிலும் வந்து கூச்சலிட்டன. சிறிது சிறிதாக அஸ்தினபுரியைச் சுற்றியிருந்த பெரும் காட்டில் வாழ்ந்த அனைத்துக் காகங்களும் நகரின் மரங்களில் வந்து கூடின. இலையுதிர்ந்த மரங்களில் கரிய இலைகளெழுந்ததுபோல அவை நிறைந்து அமர்ந்திருந்தன.

சகுனி வடக்குக் கோட்டையை அடைந்ததும் ரதத்தில் இருந்து இறங்கி நடந்து யானைக்கொட்டிலுக்கு முன்னால் வந்து நின்றான். புராணகங்கையின் கிணற்றுக்குக் குளிக்கச்செல்லும் யானைகள் கைகளில் சங்கிலிகளுடன் கிளம்பிச்சென்றுகொண்டிருந்தன. அவன் யானைகளையே பார்த்தான். அவற்றின் கண்கள் அவனறிந்த அனைத்துக்கும் அப்பால் இன்னொரு உலகிலிருந்து அவனை வெறித்து நோக்கிச் சென்றன. அவன் அக்கண்களை நோக்கியபடி கைகளை கட்டிக்கொண்டு நின்றான். யானைகள் மட்டுமே காணும் அஸ்தினபுரி என ஒன்று உண்டா என்ன?

முந்தையநாள் விடியலில் அவன் முதலில் கேட்டது முதியபெண்யானையின் பேரொலியைத்தான். பின்னர் வடதிசையே பிளிறல் ஒலிகளால் நிறைந்தது. அவன் எழுந்து வந்து வாசலருகே நின்று சேவகனிடம் “என்ன அது?” என்றான். சேவகன் “தெரியவில்லை இளவரசே” என்றான். “புழுதிப்புயல் அடித்துக்கொண்டிருக்கிறது… யானைகள் அஞ்சியிருக்கலாம்.” அவன் பேசிக்கொண்டிருக்கையிலேயே நிலப்பரப்பை ஒரு பெரும்பாயாக சுருட்டி எடுத்துவிடும் வல்லமைகொண்டது போல பெருவேகத்துடன் வெங்காற்று வீசியது. அரண்மனைக்குள் வெவ்வேறு இடங்களில் ஆயுதங்களும் உலோகக் கலங்களும் உருண்டுவிழும் ஒலிகளும் வீரர்கள் கூவும் குரல்களும் கேட்டன. சகுனி பின்னால் சரிந்து சுவரைப்பற்றிக்கொண்டான். மூக்கிலும் கண்களிலும் படிந்த தூசுகளையும் சருகுத்துகள்களையும் சால்வையால் தட்டிவிட்டுக்கொண்டான்.

காற்று சுழன்று வீசிக்கொண்டே இருந்தது. “நீ சென்று அரண்மனையில் என்ன நிகழ்கிறதென்று கேட்டுவா” என்றான் சகுனி. சேவகன் கிளம்பும்போது அரண்மனையிலிருந்து செய்திவந்தது. விரைந்தோடி வந்த சேவகன் “மைந்தன் பிறந்திருக்கிறான். வலுவான வளர்ந்த குழந்தை. கார்த்தவீரியனும் ராவணேஸ்வரனும் கொண்டிருந்த பெருந்தோற்றத்துடன் இருக்கிறான்” என்றான். “என்ன நேரம்?” என்றான் சகுனி “அக்னிசர அஸ்வினி மாதம், கிருஷ்ண நவமி அதிகாலை. பெருநாகங்களுக்குரிய ஆயில்ய நட்சத்திரம்” என்றான் சேவகன். “மைந்தனை எப்போது பார்க்கலாமென்றனர்?” என்று சகுனி கேட்டான். “அரண்மனை வழக்கப்படி தூய்மைச்சடங்குகளும் தெய்வங்களுக்கான பலிகளும் முடிய ஒருநாள் ஆகிவிடும். நாளைகாலை முதற்கதிர் எழுந்து முதற்சாமத்தில் மைந்தனைப் பார்க்கலாம் என்றார் அரசி” என்று சேவகன் சொன்னான்.

நிலைகொள்ளாதவனாக பகல் முழுக்க சகுனி அறைக்குள் அமர்ந்திருந்தான். படைக்கலப்பயிற்சிக்குச் செல்லவில்லை. நீராடவுமில்லை. சாளரம் வழியாக வெளியே நோக்கி நின்றபோது ஏதோ வேறுபாட்டை உணர்ந்தான். அது என்ன என்று சிந்திக்கையிலேயே இயல்பாக அதை சிந்தை சென்று தொட்டது. நகருக்குள் எங்கும் காகங்களே இல்லை. வியப்புடன் அவன் நகரை கூர்ந்து நோக்கினான். வீட்டுக்கூரைகளெங்கும் செம்புழுதி படர்ந்திருந்தது. மரங்களின் இலைகள் மண்ணால் செய்யப்பட்டவை போலிருந்தன. எங்கும் காகங்களே இல்லை. அவை அந்தப் பெரும்புயல்காற்றால் அள்ளிச்செல்லப்பட்டுவிட்டனவா?

மதியம் உணவருந்தாமல் அவன் சென்று மஞ்சத்தில் படுத்துக்கொண்டான். மைந்தன் பிறந்திருக்கிறான். இந்தக்கோடையின் அனைத்துத் தீமைகளையும் அவன் மேல் ஏற்றிக்கொள்கிறார்கள் மூடர்களான இந்நாட்டு மக்கள். ஆம் அவன் பெருங்கோடைகள் ஆளும் பாலையின் மைந்தன். அவ்வாறுதான் அவன் வருகை நிகழமுடியும். அவனை அவர்கள் அஞ்சட்டும். அச்சம் பணிவைக் கொண்டுவரும். தாங்கள் அஞ்சாத எவரையும் மக்கள் தலைவனாக ஏற்பதில்லை. அச்சமே மக்களை ஒன்றாக்கும் விசை. அதுவே ஆற்றலாக ஆகிறது. அதுவே படைக்கலனாகிறது. பாரதவர்ஷம் நோக்கி கூரின் ஒளியுடன் எழும் வாள் அது!

நரிகளின் ஊளைகள் கேட்டு அவன் எழுந்துகொண்டான். நரிகளா? அவன் எழுந்து சென்று சாளரம் வழியாக நோக்கினான். மேற்குத்திசையிலிருந்து நரிகளின் ஊளைகள் கேட்டன. அங்கே வறண்டுகிடந்த ஏரிக்குள் மடைவழியாக உள்ளே புகுந்த ஒரு நரிக்கூட்டத்தை அவனால் அரண்மனை உப்பரிகையில் நின்றே காணமுடிந்தது. நரிகளின் குரல் கேட்டதும் நகரமே அஞ்சி ஒலிக்கத் தொடங்கியது. வீரர்கள் வேல்களுடன் ஏரிக்கரையில் கூடி கூச்சலிட்டனர். கற்களைப்பொறுக்கி வீசி அவற்றை விரட்டினர். நூற்றுக்கும் மேற்பட்ட நரிகள் ஏரியின் உலர்ந்த சேற்றில் ஓடி வளைந்து மீண்டும் மறுகரைசேர்ந்தன. அங்கே அவை நின்றும் அமர்ந்தும் மூக்கைத் தூக்கி ஊளையிட்டன.

வறண்ட ஏரிக்குள் நுழைய மடை ஒரு நல்ல வழி. ஏரியின் சதுப்பில் அவை நண்டுகளைத் தேடி வராமலிருந்தால்தான் வியப்பு. ஆனால் இந்த அச்சம் நிறைந்த நகர்மக்களுக்கு இதுவும் ஒரு தீக்குறியாகிவிடும். சூதர்கள் தங்கள் பாடல்களை அப்போதே இயற்றத் தொடங்கிவிட்டிருப்பார்கள் என அவன் கசப்புடன் எண்ணிக்கொண்டான். சற்று நேரத்தில் அரண்மனையில் இருந்து அம்பிகையின் சேவகன் வந்தான். “மைந்தர் நலமாக இருக்கிறார். அரசியும் நலமே. தூய்மைச்சடங்குகள் முறைப்படி நடக்கின்றன.” “எப்போது மைந்தனைப் பார்க்கமுடியும்?” என்று சகுனி கேட்டான். “மூன்றுநாட்கள் தூய்மைச்சடங்குகள் முடிந்தபின்னரே மைந்தரை ஆண்களுக்குக் காட்டுவார்கள்” என்றான் சேவகன்.

ஓவியம்: ஷண்முகவேல் [பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

சகுனி அடுமனைச் சேவகனை அழைத்து “எனக்கு அக்காரஅடிசில் கொண்டுவா” என்றான். “உடனே கொண்டுவருகிறேன் இளவரசே” என்றபின் அவன் விரைந்தோடி இனிப்புணவைக் கொண்டுவந்தான். சகுனி அதை தனிமையில் அமர்ந்து உண்டுவிட்டு மஞ்சத்தில் படுத்துக்கொண்டான். நீண்டநாட்களுக்குப்பின் தன்னை மறந்து துயின்றான். கண்விழித்தபோது மாலையொளி சாளரம் வழியாக உள்ளே சரிந்திருப்பதைக் கண்டான். தன் முகம் உறக்கத்திலும் புன்னகையுடன் இருந்ததை, விழித்தபோதும் அப்புன்னகை நீடிப்பதை அவன் வியப்புடன் உணர்ந்தான்.

அவன் எழுவதைக்காத்து சேவகன் நின்றிருந்தான். சகுனி பார்த்ததும் அவன் வணங்கி “சதசிருங்கத்திலிருந்து பறவைச் செய்தி வந்துள்ளது” என்றான். சகுனி ஒரு கணம் தன் நெஞ்சை உணர்ந்தான். பின் கைநீட்டினான். சேவகன் அளித்த தோல்சுருளில் மந்தண எழுத்துக்களில் சுருக்கமாக குந்திக்கு இரண்டாவது ஆண்குழந்தை பிறந்திருக்கும் செய்தி இருந்தது. சுருளை கையில் வைத்துக்கொண்டு சேவகனை செல்லும்படி சைகை காட்டியபின் அவன் சில அடிகள் நடந்தான். பின் மீண்டும் அதை விரித்துப்பார்த்தான். காந்தாரியின் மைந்தன் அதிகாலையில் ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்திருந்தான். அன்று பின்மதியம் மகம் நட்சத்திரத்தில் குந்தியின் மைந்தன் பிறந்திருந்தான்.

அனுமன் ஆலயத்துக்கு முன்னால் புதியதாகக் கட்டப்பட்ட கல்மேடையில் அந்தப் பெரிய கதாயுதம் இருந்தது. அவன் அதை அணுகி சுற்றிப்பார்த்தான். அது நன்றாகக் கழுவப்பட்டு கருமை ஒளிவிட அமர்ந்திருந்தது. துதிக்கைநீட்டிய சிறிய யானைமகவு போல. அத்தனைபெரிய கதாயுதத்தை எந்த மனிதனாவது எடுத்துவிடமுடியுமா என்ன? ஒருவேளை எடுப்பதென்றால் அது திருதராஷ்டிரரால் மட்டுமே முடியும். அது ஒரு சிலையின் கையிலிருந்ததுதான். ஆனால் அது மைந்தன் கருக்கொண்ட நாளில் கண்டடையப்பட்டது. அதுதான் தன் மனதில் மைந்தனும் அதுவும் இணைந்துகொள்ளக் காரணம். எத்தனை அளவையறிதல் இருந்தாலும் அந்த எண்ணத்தைக் கடந்துசெல்லமுடியவில்லை. நிமித்திகர்களின் அரைகுறைச் சொற்களை அதற்கேற்ப விரித்துக்கொள்கிறது அகம்.

ஒருவேளை அந்த கதாயுதம் காந்தாரியின் மைந்தனுக்குரியதாக இருக்கலாம். ஆம், அதுதான் உண்மை. அவன் மும்மடங்கு பெரிய குழந்தை என்கிறார்கள். இருபதுமாதம் கருவில் வாழ்ந்திருக்கிறான். மதங்ககர்ப்பம். அதனால்தான் யானைகள் அதை அறிகின்றன. யானைகள். இது யானையின் நகரம். ஹஸ்தியின் நகரம். ஹஸ்தியின் மைந்தன் மதங்ககர்ப்பத்தில் மட்டும்தான் பிறக்கமுடியும். ஹஸ்தி எப்படிப்பிறந்தான்? மதங்க கர்ப்பத்திலா?

எண்ணங்களை அறுத்தபின் அனுமனை வணங்கிவிட்டு சகுனி தேரிலேறிக்கொண்டான். “அரண்மனைக்கு” என்றான். ஆயுதசாலையிலேயே அவன் நீராடிவிட்டிருந்தான். நிழல்களைப் பார்த்தபோது அவனுக்கு உரைக்கப்பட்ட நேரத்தில்தான் சென்றுகொண்டிருக்கிறோம் என்று தோன்றியது. அரண்மனை வாயிலில் ரதமிறங்கியதுமே திருதராஷ்டிரனின் அணுக்கச்சேவகனாகிய விப்ரன் அவனுக்காகக் காத்திருந்தான் போல நெருங்கிவந்து வணங்கினான். “மன்னர் அவையிலிருக்கிறாரா?” என்றான் சகுனி. “ஆம், அமைச்சரும் இருக்கிறார்” என்றான் விப்ரன். சகுனி மௌனமாகப் பார்த்தான். “மைந்தன் பிறந்ததிலிருந்து அமைச்சர் சற்று அமைதியிழந்திருக்கிறார்…” என்றான் விப்ரன். சகுனி தலையசைத்தான். “அவர் இந்த நிமித்திகர்களின் பேச்சை நம்புகிறார் என நினைக்கிறேன்” என்று விப்ரன் சொன்னான்.

சகுனி நின்று திரும்பிப்பார்த்தான். “அமைச்சர் அவ்வாறு நிமித்திகர் கூற்றுகளை நம்புபவரல்ல… அளவையறிவையே என்றும் நம்பிவந்திருப்பவர். ஏன் இதை இப்போது நம்புகிறார் என்று எனக்குப்புரியவில்லை” என்றான் விப்ரன். “அதை அவர் மன்னரிடம் பேசிவிட்டாரா?” என்று சகுனி கேட்டான். “இன்னும் பேசவில்லை. ஆனால் அவர் பேரரசியிடம் பேசியதை என் உளவுச்சேடி சொன்னாள்.” விப்ரனின் முகத்தை சிலகணங்கள் கூர்ந்து நோக்கியபின் “சொல்” என்றான் சகுனி.

“இளவரசே, அரண்மனையின் எந்த ஆண்மகனும் இன்னமும் மைந்தனைப் பார்க்கவில்லை. பெண்கள் மட்டுமே கண்டிருக்கிறார்கள். பேறெடுத்த மச்சரும் சீர்ஷரும் அவரது சீடர்களும் நேற்றே எங்கோ அனுப்பப்பட்டுவிட்டார்கள். மைந்தன் மிகப்பெரிய உடலுடன் இருப்பதாகவும்…” என்று சொல்லி விப்ரன் சற்று தயங்கினான். பின் “அவருக்கு வாயில் பற்கள் இருப்பதாகவும் சொல்கிறார்கள்” என்றான். சகுனி “அது அத்தனை அரிதா என்ன?” என்றான். “மதங்ககர்ப்பமே மிகமிக அரிதானது. ஆகவே இதில் வியப்பேதுமில்லை… ஆனால் அவ்வாறு பற்களுடன் இருப்பது தீயகுறி என்கிறார்கள். அவர் பிறந்தபோது கொடுங்காற்று வீசியது என்றும் காகங்கள் கூச்சலிட்டன என்றும் நடுமதியத்தில் நரிகள் ஊளையிட்டன என்றும் கதைகள் உருவாகிவிட்டன.”

“ஆம், அறிவேன்” என்றான் சகுனி. விப்ரன் “பேரரசி மைந்தனைப்பார்க்கச் செல்லும்போதே அஞ்சிக்கொண்டுதான் சென்றிருக்கிறார்கள். துணைக்கு அவரது அணுக்கச்சேடி சியாமையும் சென்றாள். அவரது காலடியோசை கேட்டதும் குழந்தை திரும்பி அவர்களை நோக்கியது என்கிறார்கள். அவர்கள் அஞ்சி நடுங்கி குழந்தையருகே செல்லாமல் அப்படியே திரும்பிவிட்டார்கள். வரும் வழியிலேயே நினைவிழந்து இடைநாழியில் விழுந்துவிட்டார்கள். சியாமையும் சேடியரும் அவர்களை அந்தப்புரம் சேர்த்தார்கள். கண்விழித்த கணம் முதல் கண்ணீர்விட்டுக்கொண்டு தெய்வங்களைத் தொழுதபடி மஞ்சத்தில் கிடக்கிறார்கள்” என்றான்.

“விதுரர் என்ன சொன்னார்?” என்றான் சகுனி. “விதுரர் வந்ததும் அவர் கரங்களைப்பற்றியபடி அக்குழந்தை தன்னை திரும்பிப்பார்த்தது என்று பேரரசி கூவினார். அது தீய குறிகளுடன் வந்திருக்கிறது. அஸ்தினபுரியின் அழிவைக் கொண்டுவந்திருக்கிறது என்று அழுதார். அவர்கள் அருகே அமர்ந்து அமைச்சர் அவர்களை அமைதிப்படுத்தினார். பின்னர் சியாமையை அழைத்து என்ன நடந்தது என்று விசாரித்தார். சியாமை திடமான குரலில் அந்த மைந்தன் கலியின் பிறப்பு, அதில் ஐயமே இல்லை என்றாள். அமைச்சர் நான் நிமித்திகரிடம் சூழ்கிறேன் என்று அதற்கு பதில் சொன்னார்” என்றான் விப்ரன்.

“அவர் பார்த்த நிமித்திகர் எவரென்று தெரியவில்லை. ஆனால் அவர் முடிவுசெய்துவிட்டதாகவே தெரிகிறது” என்றான் விப்ரன். “இன்றுதான் அரசரும் தாங்களும் மைந்தனை பார்க்கவிருக்கிறீர்கள். மைந்தரை அரசரே தொட்டுப் பார்த்துவிட்டபின் அவரிடம் நிமித்திகர் கூற்றுக்களைச் சொல்லலாமென அமைச்சர் திட்டமிட்டிருக்கிறார் என நினைக்கிறேன்.” சகுனியின் எண்ணத்தை உய்த்தறிந்து “அரசர் மைந்தனைப் பார்க்கையில் உடனிருப்பதற்காக தீர்க்கசியாமரையும் விதுரர் வரச்சொல்லியிருக்கிறார்” என்றான்.

இடைநாழியின் மறுபக்கம் இசை கேட்டது. “யாழ் வாசிப்பது யார்? அந்த விழியற்ற சூதரா?” என்றான் சகுனி. “இல்லை அது அந்த வைசியப்பெண் பிரகதி. அவள் எந்நேரமும் அரசருடனேயே இருக்கிறாள்” என்றான் விப்ரன். அவர்கள் இசையரங்குக்குள் நுழைந்தனர். பிரகதி கூந்தலை வலம்சாய்ந்த கொண்டையாகக் கட்டி பெரிய செந்நிற மலர்களைச் சூடியிருந்தாள். செந்நிறமான பட்டாடையை அணிந்து கால்களை மடித்துவைத்து யாழை மீட்டிக்கொண்டிருந்தாள். தலையை இருவேறு கோணங்களில் சரித்துவைத்து திருதராஷ்டிரனும் தீர்க்கசியாமரும் இசையைக் கேட்டுக்கொண்டிருந்தனர். பீடத்தில் தன் எண்ணங்களில் தானே ஆழ்ந்தவனாக விதுரன் அமர்ந்திருந்தான். சகுனி வந்ததும் திருதராஷ்டிரனுக்கு தலைவணங்கிவிட்டு பீடத்தில் அமர்ந்தான். அவன் காலடியைக் கேட்டு திருதராஷ்டிரன் அமரும்படி சைகை காட்டிவிட்டு இசையில் அமைந்திருந்தான்.

யாழ் ஓய்ந்ததும் திருதராஷ்டிரன் “காந்தாரரே, உங்கள் மருகன் மண்ணுக்கு இறங்கிவிட்டான். பாரதவர்ஷத்தை வெல்லும்படி உங்களுக்கு தெய்வங்களின் ஆணை வந்துள்ளது” என்றான். சகுனி “ஆம் அரசே, சிம்மம் குகைவிட்டெழுவதுபோல வந்திருக்கிறான் மைந்தன். ஐந்து பூதங்களும் அதற்கு சான்றுரைப்பதைக் கேட்டேன்” என்றான். திருதராஷ்டிரன் தொடைகளில் அறைந்தபடி உரக்கச்சிரித்தான். “அஸ்தினபுரியின்மேல் குருமூதாதையர் கனிந்துகொண்டே இருக்கிறார்கள் காந்தாரரே. அங்கே என் இளையோனுக்கு அதேநாளில் இன்னொரு மைந்தன் பிறந்திருக்கிறான். மைந்தர்களால் இந்த அரண்மனை நிறையட்டும்…” என்றான். விதுரனின் கண்களை சகுனியின் கண்கள் தொட்டு மீண்டன.

மீண்டும் உரக்க நகைத்து “நான் நேற்று மைந்தன் பிறந்த செய்திவந்ததுமே கேட்ட முதல்வினா ஒன்றுதான். மைந்தனுக்கு விழியிருக்கிறதா என்று. விழிமட்டும் போதும் காந்தாரரே, மீதியனைத்தும் உடன்வந்துவிடும். விழியற்றவனுக்கு புறவுலகில்லை. அவனே ஆக்கிக்கொள்ளும் பொய்யுலகு மட்டுமே உள்ளது. அது எத்தனை மகத்தானதாக இருந்தாலும் பொய்யே” என்றான். பிரகதி எழுந்து யாழுடன் தலைவணங்கினாள். திருதராஷ்டிரன் தலையசைத்ததும் வெளியே சென்றாள்.

“எங்கே என் விழிகள்?” என்றான் திருதராஷ்டிரன். “அரசே, சஞ்சயன் தங்களுக்காக வெளியே காத்து நிற்கிறார்” என்றான் விப்ரன். திருதராஷ்டிரன் நகைத்து “அந்தச்சிறுவனை இசைகேட்கச்செய்ய என்னால் முடிந்த அளவுக்கு முயன்றேன். அதைவிட சிம்மத்தை புல்தின்ன வைக்கலாம்” என்றபடி எழுந்தான். “நான் ஆடையணிகள் அணியவேண்டும். பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தியைக் காணச்செல்லும்போது எளிய ஷத்ரியனாகச் செல்லக்கூடாது” என்றான். மீண்டும் உரக்கநகைத்து “சொல்லவேண்டிய சொற்களைக்கூட யாத்துவிட்டேன் காந்தாரரே…. அஸ்தினபுரியின் சக்ரவர்த்திக்கு விசித்திரவீரியரின் தலைமைந்தனின் வணக்கம்… சரியாக உள்ளதல்லவா? நானும் எளியவனாகிவிடக்கூடாதே?”

அவன் உள்ளம் பொங்கிக்கொண்டிருக்கிறது என்று சகுனி உணர்ந்தான். இப்போது சொல்லப்படும் எந்தச் சொல்லும் அவனை தன் மைந்தனிடமிருந்து விலக்காது என்று எண்ணிக்கொண்டான். தீர்க்கசியாமர் இன்னும் இசையிலிருந்து மீளாதவராக அமர்ந்திருந்தார். சஞ்சயன் உள்ளே வந்து அனைவரையும் வணங்கியபின் திருதராஷ்டிரன் அருகே சென்றான். “சஞ்சயா மூடா, என் கைகளைப் பற்றிக்கொள்…” என்றான் திருதராஷ்டிரன். “இசையைக்கேட்டு மிரண்டோடும் வேடிக்கையான மிருகம் நீ ஒருவன் மட்டுமே” என்றான். சஞ்சயன் “அரசே, அணியறைக்குத்தானே?” என்றான். “நான் சொல்லாமலேயே இவன் என் நெஞ்சை அறிகிறான்” என்றான் திருதராஷ்டிரன்.

அவர்கள் சென்றதும் சகுனி விப்ரனைப் பார்க்க அவன் தலைவணங்கி “நான் மன்னரின் வருகையை அறிவிக்கிறேன்” என்று வெளியே சென்றான். சகுனி விதுரனை நோக்கிக்கொண்டு மீசையை மெல்ல நீவியபடி அமர்ந்திருந்தான். விதுரன் அமைதியிழந்து பலமுறை இருக்கையில் அசைந்தான். பெருமூச்சுவிட்டான். சகுனி “சதசிருங்கத்திலிருந்து செய்திகள் ஏதேனும் வந்தனவா அமைச்சரே?” என்றான். விதுரன் திடுக்கிட்டு சகுனியின் கண்களை நோக்கியபின் “சதசிருங்கத்திலும் உங்கள் ஒற்றர்கள் உள்ளனர் அல்லவா?” என்றான். “ஆம், இளையபாண்டவன் பிறந்திருப்பதாகச் சொன்னார்கள். நீடித்த ஆயுள் நிகழட்டுமென வாழ்த்தினேன்” என்றான் சகுனி.

“ஆம், பாண்டவர்களுக்கு நீடித்த ஆயுள் உண்டு என்று நிமித்திகர்கள் சொல்கிறார்கள்” என்றான் விதுரன். “ஆகவே எவர் சதிசெய்தாலும் அவர்களுக்கு எந்தத்தீங்கும் விளையாது.” சகுனியின் புன்னகை அணைந்தது. அவன் கண்கள் இடுங்கின. மென்னகையுடன் “காந்தாரத்தின் ஒற்றர்கள் சற்று திறனற்றவர்கள்…” என்றான் விதுரன். சகுனியின் கண்கள் விரிந்தன. அவன் தருவித்த புன்னகையுடன் “திறனற்ற ஒற்றர்கள் மட்டுமே செய்யக்கூடிய பணிகளும் உள்ளன” என்றான். அந்தச் சொற்கள் எங்கு சென்று தைக்குமென அறிந்திருந்தான். “திறனற்றவர்கள் நேரடியான சிலவற்றைச் செய்ய தயங்கமாட்டார்கள் அமைச்சரே.”

“ஆனால் என்னுடைய திறன்மிக்க ஒற்றர்கள் இப்போது அங்கிருக்கிறார்கள்” என்றான் விதுரன். “அத்துடன் ஒற்றர்களை அறிந்து வழிநடத்தும் தலைமையும் அங்குள்ளது.” சிலகணங்களுக்குப்பின் “முறைமீறிய செயல்கள் இருபக்கமும் கூர் கொண்டவை காந்தார இளவரசே. நாம் முறைமீறுவது வழியாக நம் எதிர்தரப்பு முறைமீறுவதற்கு ஒப்புதல் அளிக்கிறோம்.” அவன் சொற்களுக்கென்ன பொருள் என்று சகுனி இன்னொரு முறை ஒவ்வொரு சொல்லாக நெஞ்சுக்குள் ஓட்டி சிந்தித்தான். சட்டென்று நெஞ்சை குளிர்வாள் கீறிச்சென்றதுபோல உணர்ந்து நிமிர்ந்து நோக்கினான். விதுரனின் விழிகளில் முதல்முறையாக கடும் குரோதத்தைக் கண்டான்.

சகுனி திகைப்புடன் பார்த்தபின் விழிகளை திருப்பிக்கொண்டான். தானறியாத இன்னொரு ஆழத்தை தொட்டுவிட்டிருப்பதாக உணர்ந்தான். குரோதமா? ஆம் அதுதான். குரோதமேதான். எந்த அநீதியையும் செய்யத்துணியும் குரோதம் அது. யாருக்காக? பெரும் அன்பிலிருந்தே பெரும் குரோதம் பிறக்கமுடியும். யார் மேல்? பாண்டுவின் மைந்தன் மேலா? இல்லை. ஒரு கணத்தில் அவனுள் நூற்றுக்கணக்கான வாயில்கள் திறந்துகொண்டன. அதுவரை கண்ட பலநூறு தருணங்கள் மீண்டும் நினைவில் ஓடின. ஒவ்வொரு தருணத்திலும் அவன் ஆழம் கண்டு பதிவுசெய்த விழிநிகழ்வுகளை மீட்டெடுத்து கோத்துக்கொண்டே சென்று இறுதி எல்லையில் அவன் மலைத்து நின்றான். ஆம், அவனுடைய பாதையில் இறுதிவரை எதிர்வரப்போகும் எதிரி இவன்தான். இவனிருப்பதுவரை அவள் ஒருபோதும் தனியளல்ல…

சகுனி பெருமூச்சு விட்டான். அந்த ஒலியைக்கேட்டு விதுரனும் எளிதானான். தன் விழிகளை சகுனி சந்திக்கலாகாதென்பதுபோல விதுரன் திரும்பாமலேயே அமர்ந்திருந்தான். திருதராஷ்டிரன் அரசணிக்கோலத்தில் சஞ்சயனுடன் வந்தான். விப்ரன் உள்ளே வந்து “அரசர் எழுந்தருள அனைத்தும் சித்தமாகியிருக்கின்றன” என்றான். விதுரன் எழுந்து விப்ரனிடம் “தீர்க்கசியாமரையும் அழைத்துக்கொள்… பெருஞ்சூதர் ஒருவர் மாமன்னனின் பிறப்பைப் பார்ப்பது தேவையானது” என்றான். “ஆம், நீங்கள் விழியால் பார்ப்பதைவிட அவர் மொழியால் பார்ப்பதே முதன்மையானது” என்றான் திருதராஷ்டிரன். “அவர் பார்ப்பது காலம் பார்ப்பது அல்லவா?” என்றபின் உரக்கச்சிரித்தான்.

அவர்கள் நடந்து சென்ற வழியெங்கும் இருபக்கமும் சூதர்களும் தாசியரும் அணிநிரை வகுத்து மலர்தூவி வாழ்த்தொலி எழுப்பினர். மங்கலவாத்தியங்கள் முழங்கின. அரண்மனை முழுக்க மலர்களாலும் தோரணங்களாலும் வண்ணக்கோலத்தாலும் அணிசெய்யப்பட்டிருந்தது. அரண்மனை முற்றத்தில் அமைக்கப்பட்ட நித்திலப்பந்தலுக்குக் கீழே பலநாடுகளிலும் இருந்து வந்திருந்த சூதர்களும் வைதிகர்களும் கலைஞர்களும் காத்திருந்தனர். “விப்ரா, மூடா, அங்கே என்ன ஓசை?” என்றான் திருதராஷ்டிரன். “அரசே, மைந்தனைப் பார்த்துவிட்டு திரும்பிவந்து தாங்கள் பந்தலில் அமர்ந்து பரிசில்கள் வழங்கப்போகிறீர்கள்…” விப்ரன் சொன்னான்.

“ஆம் பரிசுகள் வழங்கவேண்டும்… இன்றுவரை பாரதவர்ஷத்திலேயே எவரும் அளிக்காத பெரும் பரிசுகள்… அந்தப்பரிசுகளைப்பற்றி சூதர்கள் பல வருடகாலம் பாடி அலையவேண்டும்… காந்தாரரே, தங்கள் கருவூலத்தின் நான்கு திசைகளையும் திறந்துவிடுங்கள்” என்றான் திருதராஷ்டிரன். சகுனி நகைத்தபடி “ஆம், மேலும் நிறைப்பதற்கு இடம் வேண்டுமல்லவா? மைந்தன் பதினெட்டு அகவையை எட்டும்போது அஸ்தினபுரியே ஒரு மாபெரும் ஒழிந்த கருவூலம் போலிருக்கவேண்டும்” என்றான். தன் கைகளை ஓங்கி அறைந்தபடி திருதராஷ்டிரன் உரக்க நகைத்தான்.

அந்தப்புரவாயிலில் அம்பிகையும் காந்தாரஅரசியரும் சேடியர் சூழ அணிக்கோலத்தில் நின்றனர். அம்பிகை வந்து தன் மைந்தனுக்கு நெற்றியில் மஞ்சள்திலகமிட்டு வரவேற்றபோது தாசியரும் சேடியரும் குரவையிட்டனர். அம்பிகை “குருகுலம் வாழ வந்த மைந்தன் உள்ளே உனக்காகக் காத்திருக்கிறான்… செல்” என்றாள். அதுவரை திருதராஷ்டிரனிடமிருந்த சிரிப்பு மறைந்து முகம் அழுவதைப்போல ஆகியது. இடறிய குரலில் “அன்னையே, என்னால் இன்னமும் இதை நம்ப முடியவில்லை. எனக்கு இருவிழிகள் வந்துவிட்டதுபோலத் தோன்றுகிறது. என் தெய்வங்கள் என் மேல் அருள்கொண்டிருக்கின்றன…. என் வாழ்க்கையை நிறைவுசெய்துவிட்டனர் மூதாதையர்…” கைகளைத் தூக்கி “இனி எனக்கு ஏதும் தேவையில்லை… இது போதும். இந்த வெற்றுடல் இவ்வுலகில் இத்தனைநாள் உணவை அள்ளி உண்டதற்கான பயன் நிகழ்ந்துவிட்டது…” என்றான்.

“என்ன பேச்சு இது? இன்று அஸ்தினபுரியின் மாமங்கலநாள். இனிய சொல்லே இன்று ஒலிக்கவேண்டும்” என்றாள் அம்பிகை. “செல்க” என்று அவனை மெல்ல தள்ளினாள். கைகளைக் கூப்பியபடி கண்களில் இருந்து கண்ணீர் வழிய தடுமாறும் கால்களுடன் திருதராஷ்டிரன் நடந்தான். அவன் தொண்டையைச் செருமும் ஒலி மட்டும் கேட்டது. சகுனி பெருமூச்சுடன் தன் உடலை எளிதாக்கிக் கொண்டான். அருகே வரும் விதுரனின் முகத்தை திரும்பி நோக்க விழைந்தாலும் அவன் அதை அடக்கிக்கொண்டான்.

“வருக தீர்க்கசியாமரே…. நாம் அரசியின் அந்தப்புரத்துக்குள் நுழைகிறோம்” என்றான் விதுரன். “மைந்தரும் அன்னையும் இங்குதான் இருக்கிறார்கள்” என்றான் சஞ்சயன். “ஆம்…. தெரிகிறது. மருத்துவ வாசனையும் கருவாசனையும் வருகிறது” என்று தீர்க்கசியாமர் சிரித்த முகத்துடன் சொன்னார். சஞ்சயன் திருதராஷ்டிரனை உள்ளே அழைத்துச்சென்றான். சகுனி உள்ளே சென்றதும் விதுரன் தீர்க்கசியாமரை உள்ளே கொண்டுசென்றான்.

உள்ளே மஞ்சத்தில் காந்தாரி மார்புவரை பட்டுச்சால்வையால் போர்த்தியபடி கிடந்தாள். அவளுடன் இன்னொருவர் படுத்திருப்பதுபோல இன்னும் வற்றாத பெரிய வயிறு இருந்தது. ஒரே பேற்றில் அவள் வயது முதிர்ந்து பழுத்துவிட்டவள்போலிருந்தாள். கன்னங்கள் கனத்து தொங்க வெளிறிய உதடுகளுடன் செவிகூர்ந்து தலைசரித்து கிடந்தாள். காலடியோசை கேட்டதும் கனத்த கைகளைக் கூப்பியபடி “அரசே வணங்குகிறேன். இதோ அஸ்தினபுரியின் மணிமுடிக்குரியவன்” என்று தன் வலப்பக்கமாக கைகாட்டினாள்.

பொன்னாலான மணித்தொட்டிலில் செம்பட்டுமெத்தை மேல் கிடந்த குழந்தையை விதுரன் திகைப்புடன் பார்த்தான். காலடியோசை கேட்டு குழந்தை திரும்பிப்பார்ப்பது போலிருந்தது. அதன் வாய்க்குள் வெண்கற்கள் போல பல்வரிசை தெரிந்தது. மிகப்பெரிய குழந்தை. மும்மடங்கு பெரிய உடல், பெரிய கைகள். அவன் படபடப்புடன் சற்று பின்னடைந்து தீர்க்கசியாமரை முன்னால் செலுத்தினான். அவர் சுவரை ஒட்டியவர் போல நின்றுகொண்டார். சகுனியும் பெருமூச்சுடன் சற்றே பின்னால் நகர்வதுபோலத் தெரிந்தது.

திருதராஷ்டிரன் தொட்டிலை நோக்கிக் குனிந்து தன் கைகளை நீட்டி துழாவி நடுங்கும் விரல்களினால் குழந்தையைத் தொட்டான். “இறைவா! நீத்தோரே! மூத்தோரே!” என அரற்றியபடி அதன் தலையிலும் கன்னங்களிலும் தோள்களிலும் கைகளால் வருடினான். இரண்டுவயதான கொழுத்த குழந்தையுடையது போலிருந்த அதன் உருண்ட வயிற்றையும் மடிப்புகள் செறிந்த கைகளையும் தொடைகளையும் தன் பெரிய விரல்களினால் தொட்டு நீவினான். குருதிவாசனை கிடைத்த இரு கரிய மிருகங்கள் இரையை முகர்ந்து பார்ப்பதுபோல அவன் கனத்த கரங்கள் மைந்தனை தழுவித் தழுவித் தவித்தன. பெருமூச்சுவிட்டபடியும் முனகியபடியும் தொண்டையைச் செருமியபடியும் அவன் அந்தத் தொடுகையில் முழுமையாகவே ஆழ்ந்து அமர்ந்திருந்தான்.

அப்போது தீர்க்கசியாமர் ‘அஹ்’ என்னும் ஒலியுடன் விதுரனை விலக்கி முன்னால் சென்றார். குழந்தையை நோக்கி கைகளை நீட்டியபடி “இது… இக்குழந்தை” என்றார். திகைப்புடன் “ஆ! ஆ!” என ஓலமிட்டார். கழுத்திறுகிய கன்றின் ஒலிபோல அது எழுவதாக விதுரன் எண்ணினான். சகுனி “தீர்க்கசியாமரே!” என்றான். “என்னால் இந்தக்குழந்தையைப்பார்க்க முடிகிறது… இதை மட்டும் பார்க்கமுடிகிறது…. ஆம்… தங்கத்தொட்டிலில் செம்பட்டுமெத்தைமேல் படுத்திருக்கும் பெரிய குழந்தை… கருங்கூந்தல்… வாயில்பற்கள்… ஆம், நான் அதைப்பார்க்கிறேன். இல்லை அது என்னைப்பார்க்கிறது!”

வெறிகொண்டவர் போல அனைவரையும் பிடித்துத் தள்ளிவிட்டு தீர்க்கசியாமர் வெளியே ஓடினார். கதவின்மேல் சரிந்த விதுரன் “பிடியுங்கள்… பிடியுங்கள் அவரை” என்று கூவினான். ஓலமிட்டபடி ஓடிய தீர்க்கசியாமர் நேராகச்சென்று சுவரில் ஓசையுடன் முட்டி அப்படியே கீழே சுருண்டு விழுந்தார்.

முந்தைய கட்டுரைபக்தியும் சங்கரரும்
அடுத்த கட்டுரைதிருவிழா – கடிதம்