சின்னமனூர், தாடிக்கொம்பு

மேகமலையில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருந்தாலும் நல்ல உணவு கிடைத்தது. மதியம் ஆட்டுக்கறி. கல்பற்றா நாராயணன் ”உக்கிரன்!” என்றார். ”அந்த கறிக்கு என்ன பெயர்?” நான் ”சுக்கா” என்றேன். ”எங்களூரில் வரட்டல் என்போம்” என்றார். இரண்டும் ஒன்றே என்றேன்.

அரைமணிநேரம் ஓய்வெடுத்தபின்னர் வண்டிகளில் ஏறி மீண்டும் அந்த அழகிய ஏரியைச் சுற்றிச் சென்றோம். சமீபகாலத்தில் அத்தனை தூயநீல நிறம் கொண்ட நீர்நிலையை இந்தியாவில் நான் கண்டதில்லை. ஆழமும் நீரின் தூய்மையும் வானத்தின் துல்லியமும்  சேர்ந்து உருவாக்கும் நீலம். ஒரு பேரழகு கொண்ட கண் போல.

ஏரிக்கு அப்பால் தேயிலைத்தோட்டங்கள் வழியாகச் சென்று ஒரு மலையுச்சியை அடைந்தோம். அங்கே ஒரு கோயில். என்ன சிலை என்று அருகே சென்று பார்த்தேன். ஜேஷ்டாதேவி. மூதேவி. உடலின் எல்லா உறுப்புகளும் சாமுத்ரிகா இலக்கணத்துக்கு நேர் எதிராக இருக்கும். அங்கே ஒதுக்குபுறமாக அந்த கோயிலை நிறுவியதற்குக் காரணம் மாந்த்ரீக பூஜையாகவே இருக்கும். ஆனால் நள்ளிரவில் எல்லாம் அத்தனை தூரம் வந்து யார் அதைச் செய்யப்போகிறார்கள் என்றுதான் ஆச்சரியமாக இருந்தது

மலையுச்சியில் நின்றால் கம்பம் பள்ளத்தாக்கு முழுக்க தெரிந்தது. நீலப்படலம் மூடிய தேக்கடி நீர்த்தேக்கம். அப்பால் சபரிமலை மகரஜோதிகூட தெரியும் என்றார் உள்ளூர்க்காரர் ஒருவர் பிற்பாடு. இனிய இளவெயிலுடன் மாலை அடங்கிக்கொண்டிருந்தது. மலையிறங்கி மீண்டும் விடுதிக்கு வந்தோம்.

 

நல்ல நிலா நாள். முன்நிலவு. ஏழுமணிக்கெல்லாம் காடுகள் முழுக்க இருட்டி மேலே நிலா எழுந்துவிட்டது. நிலவில் ஒரு நடைசெல்லலாம் என்றார் தனசேகர். ஏரிக்கரை வழியாக நிலவில் நடந்து சென்றோம். ஜப்பானிய ஓவிய மரபில் மெல்லிய கரித்தூளை கைவிரலால் தொட்டு வரையப்படும் ஓவியங்கள் உண்டு. அதைப்போல இருந்தது காடு. தேயிலைத்தோட்டங்களை பாறையடுக்குகள் என கற்பனைசெய்து கொள்ளலாம். மேகங்களை பறக்கும் மலைகள் என எண்ணிக்கொள்ளலாம். வெளிர்சாம்பல் நிறம் கொண்ட கண்ணாடி வெளி.

நான் ஆஸ்திரேலியாவிலும் அமெரிக்காவிலும் கனடாவிலும் ஓரளவுக்கு காட்டு விளிம்பில் நடந்திருக்கிறேன். அங்கெல்லாம் இல்லாத ஒன்று இந்தியக் காடுகளுக்கு உண்டு. அச்சம். இந்தக்காடு அபாயத்தை உள்ளே ஒடுக்கிக் கொண்டிருக்கிறது. யானைகள் சிறுத்தைகள் கரடிகள் பாம்புகள்… மரணம் உரிய விகிதத்தில் கலக்காத இயற்கைக்கு இயற்கைக்குரிய கம்பீரமே இல்லாமலாகிவிடுகிறது. அது ஒரு தோட்டமாக ஆகிவிடுகிறது. அதில் தத்துவார்த்தமான ஒரு வெறுமை குடியேறுகிறது.

இரவில் காடு ர்ர்ர் என்று ஒலித்துக்கொண்டிருந்தது. சட்டென்று நின்று பின் எண்ணம் கொண்டு மீண்டும் தொடரும் ஒலி. விதவிதமான பறவைகளின் சத்தங்கள். கொட்டாங்கச்சிகளை கொட்டுவதுபோல ஓர் ஒலி. மெல்லிய கட்டைக்குரல் நகைப்பு போல. விக்கல் போல. அகவல் போல. மணியோசைகள் போல

புதர்களுக்குள் ஒரு காட்டுப்பூனை தெரிந்தது. சிவா சிறிய டார்ச் விளக்கை அடித்தபோது சுடரும் கண்களுடன் அது அசையாமல் நின்றது. பச்சையும் நீலமும் கலந்த இரு விழிநெருப்புகள். மெல்ல அவை பின்வாங்கி புதர்களுக்குள் சென்றன. அங்கேயே கொஞ்சநேரம் அமரலாம் என்றார் கிருஷ்ணன்.

அந்த மனநிலைக்கு ஏற்ப நல்ல பேய்க்கதை ஒன்று சொல்லுங்கள் என்றார் கிருஷ்ணன். நான் இரு பேய்க்கதைகளைச் சொன்னேன். ஒன்று நான் எழுதியது, வெளிவராதது. இன்னொன்று கேள்விப்பட்டது. ”இப்ப ஒரு இரோட்டிக் கதைதான் ஜெயன் வேணும்” என்றார் வசந்தகுமார். ஆகவே இன்னும் வெளிவராத என்னுடைய ஒரு கதையைச் சொன்னேன். தனசேகர் அவர் வாசித்த ஒரு கதையைச் சொன்னார். அவர் பரீக்ஷா ஞாநியின் நாடகக்குழுவில் பணியாற்றியவராதலால் நாடகத்தன்மையுடன் சிறப்பாகச் சொன்னார்.

நடந்து திரும்பி வரும்போது எங்கள் காரில் வனக்காவலர் தேடி வந்தார். ”எங்க போனீங்க? நீங்க போன எடம் ரொம்ப டேஞ்சரான எடம்…யானைகள் தண்ணிகுடிக்க எறங்கற வழி அது…” என்றார். அந்தத் திகிலே ஓர் இன்ப அனுபவம். இரவு பதினொரு மணிவரை ஓட்டல் முகப்பில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். இருளுக்குள் மெல்லிய அலையொளியாக இருந்த ஏரியைப் பார்ப்பது கனவுபோன்ற அனுபவமாக இருந்தது

மறுநாள் காலையில் நாங்கள் செல்லாத மூன்றாவது அணைவரைக்கும் ஒரு காலைநடை சென்றோம். பனியின் ஈரத்தில் குளிர்ந்து கிடந்தது காடு. காட்டுக்குள் செல்லலாம் என்று ஓர் ஓடை வழியாக ஏறிச்சென்றோம். கொஞ்ச தூரம் ஏறியதுமே அட்டைகள் கால்களில் அப்பிக்கோண்டன. திரும்பி விட்டோம். இன்னொரு வழியாக ஏறி மேலே சென்றோம்.

 

அடர்ந்த காடு. இலைத்தழைப்புகள் வழியாக வேர்களைப் பற்றிக்கொண்டு ஓடைகளுக்குள் இறங்கி ஏறி காட்டுக்குள் சென்றோம். காடு ஈரமும் நீராவியுமாக எங்களைச் சூழ்ந்து கொண்டது. ஓர் எல்லையில் மேலே செல்லவே முடியாதபடி வழி இறுக்கமாகி விட்டது. அது விலங்குகள் செல்லும் வழி, அவை மட்டுமே செல்லமுடியும் போலும். திரும்பிவிட்டோம்

மீண்டும் வந்து பாறையில் அமர்ந்து அவரவர் கைகால்களில் இருந்து அட்டைகளை பிடுங்கிப் போட்டோம்.சிவாவின் கால்களில்தான் அதிகமான அட்டைகள் இருந்தன. காட்டுக்குள் இருக்கிறோம் என்ற உணர்வின் உற்சாகமே தனிதான். அந்தப் போதையை அடைந்தவர்கள் மீண்டும் மீண்டும் காட்டுக்கு வந்தபடியேதான் இருப்பார்க்ள்.  வியர்வை குளிர நடந்து திரும்பி வந்தோம்.

காலையுணவுக்குப் பின்னர் குளித்துவிட்டு காரில் ஏறி திரும்பி மலையிறங்க ஆரம்பித்தோம். வழியில் ஓரு டீ தொழிற்சாலை. வெட்டிக்கொண்டுவந்து குவிக்கபப்டும் இலைகளை வெவ்வேறு இயந்திரங்கள் துண்டுகளாக வெட்டி நசுக்கி அரைத்து வேகவைத்து உலரச்செய்து வறுத்து ஒன்றரை மணி நேரத்தில் டீத்தூளாக ஆக்கி பொதிகட்டும் இடத்துக்குக் கொண்டு சென்றன. ஒரு தொழிலாளர் மிக உற்சாகமாக அச்செயல்பாட்டை எங்களுக்கு விளக்கினார்.

பொதுவாக அத்தகைய தொழிற்சாலைகள் என்னை மூச்சுத்திணறச் செய்வது வழக்கம். இயந்திரங்களுடன் வாழ்வதென்பது ஒரு பெரிய வதை என்றே என் மனம் எண்ணுகிறது. கடுமையாக உழைத்தாலும் வயலில் வேலைசெய்யும் விவசாயி இயற்கையின் மடியில் உற்சாகமாக வாழ்கிறான் என எண்ணுவேன். ஆனால் பெரும்பாலும் தொழிலாளர் அப்படி நினைப்பதில்லை. எளிய மனிதர்கள் இயந்திரங்களுடன் இணைந்திருப்பது ஓரு வலிமையை அளிப்பதாக உணர்கிறார்கள்.

மலையிறங்கி சின்னமனூர் வந்தபோது ஓர் ஆனந்தமான விஷயம். சின்னமனூருக்கு வெளியே மையச்சாலையில் ரேக்ளா போட்டி நடந்துகொண்டிருந்தது. சாலையெங்கும் கூட்டம் கூட்டமாக கிராமத்து மனிதர்கள். நாங்கள் வண்டிகளை ஓரமாக நிறுத்திக்கொண்டு காத்திருந்தோம்.  ஏழெட்டு ரேக்ளா வண்டிகள் சாலையின் இறக்கத்தில்  துள்ளிக்கொண்டு பாய்ந்து சென்றன. மாடுகளின் கால்கள் காற்றில் சுழன்றன. குளம்புகளின் ஒலி உருளைப்பாறைகள் மலைச்சரிவில் செல்வது போல கேட்டது.

சிறிய மாடுகள். குட்டையான கொம்பும் ஒடுங்கிய உடலும் கொண்டவை. ரேக்ளாவுக்காகவே வளர்க்கப்படுபவை அவை. அதிகமாக உணவு கொடுக்கப்படுவதில்லை. உழவுக்கோ வண்டி இழுப்பதற்கோ பயன்படுத்தப்படுவதில்லை. அவற்றின் வாழ்க்கையே இந்த சில போட்டிகளுக்காகத்தான். அதிகமாக சாட்டையை பயன்படுத்தாமல் ரோஷம் கொண்ட காளைகளாகவே வளர்ப்பார்களாம்

போட்டிக்கு முதல் நாள் முதலே மாடுகளுக்கு எந்த உணவும் அளிக்கப்படுவதில்லை. குளோக்கோஸ் மற்றும் பேரீச்சம் பழம் மட்டுமே அளிக்கப்படுமாம். போட்டிக்கு முன்னர் மாடுகளுக்கு சாராயமோ கஞ்சாவோ அபினோ கொடுக்கப்படவில்லை என்று மருத்துவர் சோதித்துச் சொல்லவேண்டும். போட்டியின் பரிசு என்பது இரண்டாயிரம் ரூபாய் ரொக்கமும் கோப்பையும்தான். ஆனால் அது ஒரு பெரும் கௌரவம். வென்ற மாடுகளின் விலை பலமடங்காக பெருகும். நல்ல ஜோடிமாடுகள் முப்பதாயிரம் ரூபாய் வரைச் செல்லும். நூற்றிப்பத்து மாடு வரை ஒருவர் வைத்திருப்பதாகச் சொன்னார்கள்.

விதவிதமான மனிதர்கள். வேலைகளை விட்டுவிட்டு இந்த கொண்டாட்டத்துக்காக வந்திருக்கிறார்கள். கிராம வாழ்க்கையே சின்னச் சின்ன கொண்டாட்டங்களால் ஆனது. நடுவே ஒருவர் கோவைக்கிழங்கு பிடுங்கிக் கொண்டிருந்தார். அந்தக்கொடிக்கிழங்கு மாடுகளுக்கு விஷக்கடிக்கு சிறந்த மருந்தாம். புல்லும்பறிக்கலாம் அண்ணனுக்கு பெண்ணும் பார்க்கலாம் என்பது போன்ற கொள்கை கொண்டவர்.

மாடுகள் திரும்பி வரும்போது நாக்கு வெளியே தள்ளிக்கிடந்தது. மூச்சில் நுரை வழிந்தது. எட்டு கிலோமீட்டர் ஓடவேண்டுமாம். மொத்தம் நான்கு குழுக்கள். சிறிய மாடுகள், நடுத்தர மாடுகள், பெரிய மாடுகள் என… தார்க்குச்சி பட்டு சிலவற்றுக்கு காயத்தில் குருதி வழிந்தது. ஒரு கோணத்தில் குரூரம் என்று சொல்லலாம். ஆனால் மனிதனுடன் பிணைந்த வாழ்க்கையில் அவை மனித வாழ்க்கையையே நடிக்க வேண்டியிருக்கின்றன. ஒரு வன வாழ்க்கையின் உக்கிரத்தை விட இது பாதுகாப்பானது, எளியதுதான்.

சின்னமனூரில் கல்பற்றா நாராயணனை இறக்கி விட்டோம். அவர் அப்படியே குமுளி வழியாக கோழிக்கோடு செல்வதாக திட்டம். தனசேகரிடம் விடைபெற்றுக்கொண்டோம். செல்லும் வழியில் வீரபாண்டி கோயில் அருகே இறங்கி ஆற்றின் கரையில் அமர்ந்திருந்தோம். கோயிலில் அந்த மதிய நேரம் யாருமில்லை. சில பண்டாரங்கள். ஒருவருக்கு முதல் மனைவி இழப்பை தடுப்பதற்காக தோழ நிவர்த்தி பூஜை நடந்துகொண்டிருந்தது. அவர் தாலி கட்டிய வாழை பூசாரியால் வெட்டுபட்டு சாவதற்காக மாலையுடன் காத்திருந்தது.

பண்டாரங்கள் குளிரான நிழலில் தூங்கிக்கொண்டிருந்தன. அவர்களின் பொக்கணங்களும் டப்பாக்களும் தனியாக காத்திருந்தன. ஒரு கிளி சோதிடர் அமர்ந்திருந்தார். எனக்காக குறி பார்க்க முன்வந்தார் செந்தில். பெயர் ஜெயமோகன், வயது நாற்பத்தெட்டு. கிளியிடம் சோதிடர் ”ஜெயமோகன், ·பாட்டி எயிட் ஏஜு” என்றார். ஆங்கிலம் அறிந்த கிளி அக்கறையில்லாமல் வந்து ஒரு சீட்டை கொத்தி போட்டுவிட்டு உள்ளே போயிற்று. சலித்துப்போன ஒரு குடும்பப்பெண் பாவனை.

சோதிடர் எங்கள் கும்பலைப் பார்த்தார். என்ன நினைத்தாரோ ”கூட்டு வியாபாரம் பண்ணக்கூடாது. கூட்டாளி சேக்கை கேடு வருத்தும்” என்று ஆரம்பித்தார். பணக்கஷ்டம் இருக்கிறது. நினைப்பதெல்லாம் நடக்காமல் ஒத்திப்போகிறது. ஆனால் ஆறு மாதத்திற்குள் நிலைமை சரியாகும். வாகனங்களால் ஆபத்து வரலாம். ஐந்து ரூபாய்க்கு ஐந்து நிமிடம். ஓர் எச்சரிக்கை ஓர் ஆறுதல்.

அங்கிருந்து கிளம்பி தாடிக்கொம்பு சென்றோம். நான் தாடிக்கொம்பு கோயிலைப் பார்த்ததில்லை. மற்றவர்கள் எல்லாருமே பார்த்திருந்தார்கள். நான் உண்மையில் அன்றே நாகர்கோயில் திரும்ப வேண்டும். ஆனால் ஆவலால் தாடிக்கொம்பு செல்ல முன்வந்தேன். தேனியில் இறங்கி சாப்பிட்டோம். புறநகரில் ஒரு நல்ல ஓட்டல். நேர் எதிரில்தான் முற்போக்கு எழுத்தாளர் தேனி சீருடையானின் பழக்கடை. அங்கே சென்று அவர் இருக்கிறாரா என்று கேட்டோம். அவர் மதுரை சென்றிருப்பதாக கடை ஊழியர் சொன்னார்.

மாலை நான்கரை மணிக்கு தாடிக்கொம்பு கோயிலுக்குச் சென்று சேர்ந்தோம். தாடிக்கொம்பு  பெருமாள் சௌந்தரராஜப்பெருமாள் கோயில் நெடுங்காலமாகவே புறக்கணிப்புக்கு உள்ளாகிக் கிடந்த ஒன்று. அங்குள்ள சுவர்ணலாபம் தரும் ஆஞ்சநேயர் சோதிடர்களால் சட்டென்று புகழுக்குக் கொண்டுவரப்பட்டார். அங்கே பூஜைசெய்தால் பொன் கொட்டும் என்று ஒரு நம்பிக்கை. ஆகவே மக்கல் வெள்ளம். ஊரே நிகிழ்ர்ந்துவிட்டது. பெருமாள் கோயிலும் திருப்பணிகள் செய்யப்பட்டு புதிதாக இருக்கிறது. பெருமாள் சன்னிதியில் பத்துபேர் இருந்தால்லைம்பதுபேர் ஆஞ்சநேயர் சன்னிதியில் இருந்தார்கள். சில அலுவலகங்களில் அதிகாரியை விட பியூன் அதிகாரம் கோண்டவராக இருப்பதுண்டு

தாடிக்கொம்பு ஆலயத்தின் சிற்பங்கள் தென்னகத்தில் உள்ள நாயக்கர்காலகட்ட சிற்பங்களுக்கு மிகச்சிறந்த உதாரணங்கள். அக்னி வீரபத்ரன், அகோர வீரபத்ரன், ரதி, மன்மதன் போன்ற சிலைகள் எங்குமுள்ளவை. இரணிய வதம்செய்யும் நரசிம்மரின் சிலை உக்கிரமும் அழகும் ஒருங்கு கூடும் அற்புதமான கலைக்கணத்தை காட்டுகிறது. அதேபோல பதினாறு கரங்கள் கொண்ட துர்க்கையின் சிலையும் பயங்கரமான அழகுகொண்டது

பயங்கரம் எப்படி அழகாக ஆகிறது? ஒத்திசைவு கூடும்போது எதுவும் அழகே. அத்துடன் நளினமான வளைவுகளும் சலனங்களும் கூடும்போது அழகு முழுமை கொள்கிறது. ஆழமான ஒரு தத்துவம் உள் பொதிந்திருக்கையில் அழகின் வீரியம் பன்மடங்காக ஆகிறது. மௌனிக்கு பயங்கர வசீகரம் என்ற சொல் மீது அபாரமான காதல் இருந்தது. பயங்கரம் கூடும்போது வசீகரம் பன்மடங்காகிறது. அடர்காடுகளில் அலைகடல்களில் நாம் உணர்வது அதையே

சுவர்ணவரம் தரும் அனுமார் முன் ஒரே ரகளை. அருகே ஒரு மண்டபத்தில் அமர்ந்தேன். கிருஷ்ணன் ‘இடத்துக்கு பொருத்தமா உபநிஷதம் பத்தி ஏதாவது சொல்லுங்க” என்றார். நான் நினைத்துக்கொண்டிருந்ததை சட்டென்ன்று உபநிடதத்துடன் பிணைத்துக்கொண்டேன். கடோபநிடதத்தில் எமன் மெய்ஞானம் கேட்கும் நசிகேதனுக்கு உலகியலில் சாத்தியமான அனைத்தையுமே அளிக்க முன்வருகிறான். பெரும் செல்வம், மக்கள்செல்வம், நிலம், அழியாப் புகழ். ஆனால் மெய்ஞானம் மட்டுமே போதும் பிறிது எதுவும் தேவையில்லை என்று மறுக்கிறான் நசிகேதன்

அதேதான் பிருகதாரண்யக உபநிடதத்திலும். கார்க்கியாயினிக்கு யாக்ஞவால்கியர் மண்ணில் சாத்தியமான அனைத்தையுமே அளிப்பதாகச் சொல்கிறார். அவற்றால் என்ன பயன் என அவள் ஒதுக்கி விடுகிறாள். மெய்ஞானம் அன்றி பிறிது எதையுமே அவள் ஏற்கவில்லை. கீதையில் கண்ணன் அர்ஜுனனுக்கு மண்ணில் சாத்தியமான புகழ் வெற்றி செல்வம் நாடு எல்லாமே வருமென சொல்லியும் அவன் ஞானத்தையே நாடுகிறான். உபநிடதங்களில் இந்த உலகியல் நிராகரிப்பு நிகழாமல் ஒருபோதும் ஒரு சொல் கூட உபதேசிக்கப்படுவதில்லை.

அதையே நாம் கிறிஸ்துவின் சொற்களிலும் காண்கிறோம். உலகையே காட்டி சாத்தான் அவரைக் கவர முயலும்போது எனக்குப் பின்னால் செல்க சாத்தானே, உன்னை நான் அறிவேன் என்கிறார். மனிதன் உலகையே  வென்றாலும் ஆத்மாவை இழந்தால் என்ன பயன் என்கிறார்.

இந்த நிராகரணம் ஓரளவேனும் இல்லாமல் எந்த ஒரு ஞானத்தையும் நெருங்கமுடியாது.  ஆன்மீகம் அல்ல, எந்த ஒரு அறிவும் அதற்கு ஏற்ப ஒரு லௌகீக நிராகரணத்தைக் கோருகிறது.

ஆனால் கடந்த இருபதாண்டுக்காலமாக நான் கிறித்தவ தேவாலயங்களில் பிரார்த்தனைகளைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். கிறித்தவ இதழ்களில் செய்திகளை வாசிக்கிறேன். கிறித்தவ சுவரொட்டிகளைக் கவனிக்கிறேன். எப்போதுமே அது லௌகீக வேண்டுதல்கள்தான். வேலை, இடமாற்றம், திருமணம்,நோய் தீர்தல்,பேய் பிசாசு உபாதைகள் தீருதல், எதிரிகளை வெல்லுதல்… சென்ற காலங்களில் இந்து மதம் பௌராணிகர் கைகளில் இருந்தது. புராணங்கள் நம்பிக்கைகளையும் ஞானத்தையும் கலந்து முன்வைப்பவை. இப்போது இந்து மதமரபு அப்படியே சோதிடர்கள் கைகளுக்குச் சென்றுவிட்டது. லௌகீகம் மட்டுமேயான வழிபாடுகள், சடங்குகள். இன்று  எந்த ஆலயத்தையும் சோதிடர்கள் மட்டுமே முன்னிலைப்படுத்தமுடியும். இன்று மக்களிடம் உரையாடும் இந்துமத ஆசிரியர்கள் சோதிடர்கள் மட்டுமே.

தாடிக்கொம்பில் இருந்து நான் மதுரைக்குத் திரும்புவதாகத் திட்டம். வழியில் டீ குடிக்கும்போது நானும் கிருஷ்ணனும் அறிவார்த்தம் எங்கே ஆன்மீகத்தையோ கலையையோ மறைக்கிறது என்பதைப் பேசிக்கொண்டோம். ஒரு நல்ல கவிதையை ரசிக்க ஒரு குழந்தைத்தனம் தேவையாகிறது. அந்தக்குழந்தைத்தனத்தையே தகவலறிவு தருக்க அறிவும் இல்லாமலாக்கி விடுகிறது. அவை தங்கள் அளவில் எந்தபயனும் அற்றவை. ஆனால் அவை மட்டும் உள்ள மனிதர்கள் அகங்காரம் கொண்டவர்களாக எதையுமே அறியும் திறனற்றவர்களாக இருக்கிறார்கள்.

கிருஷ்ணன் இப்போதுதான் கவிதையின் உலகுக்குள் நுழைந்துகொண்டிருக்கிறார். அதற்கான பரவசங்கள் பதற்றங்கள். ஆமாம் என்று உற்சாகத்துடன் சொன்னார். இந்தக் கவிதைகளை வாசிக்காவிட்டால் நான் ஒருபோதும் இதையெல்லாம் உணர்ந்திருக்கப்போவதில்லை என்றார். மேலான ஆன்மீக நிலை என்பது அதி தூய கற்பனை நிலைக்கு கொஞ்சம் மேலே இருக்கக்கூடிய ஒன்றே. அதை அடைய கற்பனை உதவமுடியும் என்பதனாலேயே  கவிதை எழுதப்படுகிறது என்றேன் . ஆகவேதான் கிறிஸ்து குழந்தைகளைப்போல ஆகும்படிச் சொன்னார்.

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பேருந்தில் ஏறும்போது அருண்மொழியிடம் இருந்து போன் வந்தது. அவளுக்கு திங்கள் முதல் மதுரையில் பயிற்சி போட்டிருக்கிறார்கள். கிளம்பியாகவேண்டும். குழந்தைகளை அண்ணா வீட்டில் விட்டுவிட்டு இரவு பன்னிரண்டு மணிக்கு பேருந்தை பிடிப்பதாக இருக்கிறாள். அண்ணா வந்து ஏற்றிவிடுவார். சாவி பக்கத்து வீட்டில் இருக்கிறதாம்.

நான் செல்லும் வேகத்தில் நள்ளிரவில் இரண்டு மணிக்கு வீடு திரும்பிவிடுவேன். அந்நேரம் பக்கத்து வீட்டுக் கதவை தட்ட முடியாது. நேரத்தை என்ன செய்வது என்று மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இறங்கினேன். தங்கரீகலில் ஆதவன் படம். பார்க்கலாம் என்று போனால் பத்தரை மணிக்குத்தான் படம். மணி எட்டரை. மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்துக்கு வந்தேன். ஆனந்தவிகடன் குமுதம் இந்தியடுடே என எல்லா இதழ்களையும் வாங்கிக் கொண்டு அமர இடம்தேடி அலைந்தேன்

மதுரை பேருந்துநிலையம் போல ஒரு அராஜகம் ஏதுமில்லை. மொத்த இடத்தையும் வியாபாரிகள் கடைகளாக மாற்றி விட்டிருக்கிறார்கள். ஆரம்பத்தில் பேருந்து நிலைய நடைபாதைகளும் முகப்பும் கடைகளாக ஆயின. அங்கெல்லாம் பெஞ்சுகள் போட்டு உணவு சமைத்துப் பரிமாறினார்கள். இப்போது பேருந்து காத்து நிற்கும் இடங்கள் முழுக்க கடைகள். சமையலும் அங்கேயே. நாற்காலி போட்டு உணவு சாப்பிடுகிறார்கள். மழைக்கு ஒதுங்கக்கூட இடமில்லாமல் பயணிகள் பேருந்து வந்து நிற்கும் இடங்களில் நிற்க வேண்டியிருக்கிறது. பயணிகளுக்கான இடத்தில் நின்றால் என்ன வேண்டும், சாப்பிடாவிட்டால் விலகிப்போ என்று விரட்டுகிறார்கள்.

ஒரு பயணி ஏன்யா இது பயணிகள் நிற்கும் இடம், இங்கே நிற்காமல் மழைக்கு எங்கே நிற்பது என்றார் ஒருவர் இரு கடைக்காரர்கள் அவர்களை அடிக்கப்பாய்ந்தார்கள். சிலர் சமாதானம் செய்து அவரை கூட்டிக்கொண்டு விலகினார்கள். கடைகளில் ஒர் அழகிரி படத்தை மாட்டிவிட்டு எதையும் செய்யலாம் என்பதே மதுரையின் இன்றைய யதார்த்தம்.

மொத்த பயணிகளும் வண்டிகள் வரும் வழியில் நிற்க ஒலிப்பெருக்கியில் வழியில் நிற்காதீர், வண்டிகளுக்கு இடம் விடுங்கள் என்று சொல்லிக்கொண்டே இருந்தார்கள். அரசாங்கம்  மக்களை முட்டாள்களாக ஆக்கும் அளவுக்கு எவராலும் ஆக்க முடியாது

பன்னிரண்டு மணிவரை நின்றபடியே இதழ்களை வாசித்தேன். பலகாலமாயிற்று இவற்றை வாசித்து. ஒன்றுமே சுவாரசியமாக இல்லை. பழைய இதழ்களையே மீண்டும் வாசிப்பதுபோல இருந்தது. பன்னிரண்டு மணிக்கு பேருந்தில் ஏறி ஏறியதுமே தூங்க ஆரம்பித்தேன்

முந்தைய கட்டுரைசர்வதேச தமிழ் எழுத்தாளர் விழா
அடுத்த கட்டுரைஅப்பம்,கடிதங்கள்