பஞ்சப்பாட்டு

கொங்குவட்டாரத்தின் வரலாற்று- பண்பாட்டு ஆய்வாளரான செ.இராசு சென்ற முப்பதாண்டுக்காலமாக தொடர்ந்து எழுதிவருபவர். கொங்குநாட்டில் சமணம் போன்ற அவரது நூல்கள் நுண்வரலாறு என்னும் வகைமையில் மிக முக்கியமானவை. நாட்டாரியல் படைப்புகளை சேகரிப்பதிலும் அவர் பெரும்பங்காற்றியிருக்கிறார். அவரது முக்கியமான தொகுப்புநூல்களில் ஒன்று பஞ்சக்கும்மிகள்.

செ.இராசு

1769 லும் 1870 லும் பிரிட்டிஷ் ஆட்சியின்போது இந்தியாவை மாபெரும் பஞ்சங்கள் தாக்கின.இந்தியா என்றுமே பருவமழையின் விளையாட்டால் அலைக்கழிக்கப்படுவதாகவே இருந்தது. ஆனால் அது தொடர்நிகழ்வென்பதனால் அதைப்பற்றிய ஒரு கணிப்பு நம்மிடையே இருந்தது. சொல்லப்போனால் நூறுவருடங்களுக்கொருமுறை பருவமழை பொய்க்குமென்றே நம்பப்பட்டது. ஒருவகையில் அது உண்மைதான். 1980 களிலும்கூட இந்தியாவில் வரட்சி அலை எழுந்தது. அந்த அறிதல் காரணகாக பஞ்சம்தாங்கும் அமைப்புகள் உருவாகிவந்திருந்தன. மக்கள் இடம்பெயர்வு, சேமிப்பு என்னும் வழிகளினூடாக பஞ்சத்தை எதிர்கொண்டனர்.

பிரிட்டிஷ் ஆட்சியின்போது தொடர்ச்சியான உச்சகட்ட வரிவிதிப்பு மூலம் இந்திய சிற்றரசர்களும் நிலவுடைமையாளர்களும் ஒட்டச்சுரண்டப்பட்டனர். பஞ்சகாலத்துக்கான அனைத்துச் சேமிப்புகளும் பிரிட்டிஷாரால் உறிஞ்சப்பட்டு அவர்கள் போரிட்டுக்கொண்டிருந்த மத்திய ஆசியாவுக்கும் ஆப்ரிக்காவுக்கும் கொண்டுசெல்லப்பட்டன. பிரிட்டிஷ் ஆலைகளுக்குத் தேவையான பருத்தியும் அவுரியும் விவசாயம் செய்யும்படி விவசாயிகள் கட்டாயப்படுத்தப்பட்டனர். விளைவாக உணவுப்பஞ்சம் உருவாகியது

தாதுவருஷப்பஞ்சம்
என்று தென்னிந்தியாவில் சொல்லப்பட்ட அப்பஞ்சங்களில் இந்திய மக்கள்தொகையில் மூன்றில் ஒருபங்கினர் உணவின்றி இறந்தனர். பல லட்சம்பேர் அகதிகளாக அன்னிய மண்ணுக்குக் குடியேறினர்

இந்தப்பேரழிவு இந்தியாவின் அடித்தள மக்களிடையேதான் நிகழ்ந்தது. முந்தைய பேரரசுகளும் மதம்சார்ந்த பொதுஅமைப்புகளும் பதினெட்டாம் நூற்றாண்டின் போர்களாலும் பிரிட்டிஷ் ஆட்சியாலும் அழிந்து இந்தியாவின் சமூகக் கட்டுமானமே சிதைந்துவிட்டிருந்த சூழலில் ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாத சிறிய வட்டங்களாக இந்தியமக்கள் வாழ்ந்தன. உண்மையில் பஞ்சத்தின் வீச்சே அன்று உயர்தளத்தில் இருந்தவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.

ஆகவே இந்தியச் செவ்விலக்கிய மரபில் பஞ்சகாலம் பற்றிய பதிவே அனேகமாக இல்லை. இன்னும் சொல்லப்போனால் பதினேழாம்நூற்றாண்டுக்குப்பின் செவ்விலக்கியமரபே முழுமையாக நின்றுவிட்டிருந்தது. சில உதிரிச் சிற்றிலக்கியங்கள் மட்டுமே இக்காலகட்டத்துக்குரியனவாக உருவாகின. ஆகவே பஞ்சகாலத்தைப்பற்றிய நேரடிப்பதிவுகள் நாட்டாரிலக்கியத்திலேயே காணக்கிடைக்கின்றன.

பின்னர் நவீன இலக்கியம் உருவாகிவந்தபோது பஞ்சம் முக்கியமான பேசுபொருளாக இருந்தது. பாரதி பஞ்சம் பற்றி எழுதியிருக்கிறார். வங்க இலக்கியம் பஞ்சத்தைப்பற்றிய விரிவான சித்திரத்தை அளிப்பது. வங்கநாவலான நீலகண்டப்பறவையைத் தேடி [அதீன் பந்த்யோபாத்யாய] குஜராத்தின் பஞ்சம் பற்றிய நாவலான வாழ்க்கை ஒரு விசாரணை [பன்னலால் பட்டேல்] ஆகியவை சிறந்த இலக்கிய உதாரணங்கள் சத்யஜித் ரேயின் அஷானி சங்கேத் சிறந்த திரைப்பட உதாரணம்

பஞ்சத்தால் பெரும்பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில் ஒன்று கொங்குவட்டாரம். பிரிட்டிஷ் ஆவணங்களின்படி ஒருநாளைக்கு இருபதாயிரம் பேர் பட்டினியால் செத்தார்கள். அதைப்பற்றி இன்றிருக்கும் பதிவு என்பது அப்பகுதியின் நாட்டார் பாடல்களே

புலவர் செ.இராசு தமிழில் கொங்குவட்டாரத்தில் இயற்றப்பட்ட பஞ்சகால நாட்டார்பாடல்களை தொகுத்து பஞ்சக்கும்மிகள் என்ற பேரில் நூலாக வெளியிட்டிருக்கிறார் [காவ்யா பிரசுரம்] கும்மி என்பது பெண்கள் கூட்டமாகச் சுற்றிவந்து கைகொட்டி ஆடும் ஒருவகை ஆடல். அதற்கான பாடலை கும்மிப்பாட்டு என்பார்கள். களியாட்டத்துக்குரிய அவ்வடிவில் இந்த பஞ்சகாலப்பாடல்கள் எழுதப்பட்டுள்ளன

இந்நூலுக்கு செ இராசு எழுதியிருக்கும் விரிவான பதிப்புரை இந்தியப் பஞ்சங்கள் பற்றிய முக்கியமான தரவுகளைச் சேகரித்துத் தருகிறது. லட்சக்கணக்கானவர்கள் மடிந்த 1877 ஆம் ஆண்டில் மட்டும் பிரிட்டிஷ் ஆவணங்களின்படி 79 லட்ச்ம் பவுண்ட் மதிப்புள்ள உணவுத்தானியம் இந்தியாவிலிருந்து ஏற்றுமதிசெய்யப்பட்டது . அது 1901 ஆம் ஆண்டில் 90 லட்சம் பவுண்டாக அதிகரித்தது என்கிறார் செ.இராசு.

அரசர்குளம் சாமிநாதன், கள்ளப்புலியூர் மலைமருந்தன், வெண்ணந்தூர் குருசாமி, வெண்ணந்தூர் அருணாச்சலம், வெங்கம்பூர் சாமிநாதன், ஜம்பை காசிம் புலவர் ஆகியோர் எழுதிய பஞ்சக்கும்மிகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. நாட்டார்பாடல்களுக்குரிய விரித்து விரித்து பாடிச்செல்லும் தன்மையும் எளிமையான கருத்துக்க்ளும் சந்தமும் கொண்டவை இப்பாடல்கள்

பஞ்சத்தில் முக்கியமானதாக அனைவருமே சொல்வது உறவுகளின் ஈரம் வரண்டுவிடுவதுதான். மனைவியை தானியத்துக்காக விபச்சாரத்துக்கு அனுப்புகிறார்கள். பெற்றபிள்ளைகளை விற்கிறார்கள்

பஞ்சத்துக்குத் தப்பி நாம் பிழைத்தால் பின்பு
பாலகரை பெற்றுக்கொள்வோமென்று
பலபேர்களில் விலைகொள்வார் இலையோ என
நலமே தரு பாலகனை விலை கூற்வந்தாள்

உணவுக்காக மக்கள் பட்டபாட்டை பலவகையில் சொல்லிச் சொல்லி மாய்கின்றன இப்பாடல்கள்

காட்டில் வதங்கிப் பழுத்திருக்கும்- மலைக்
கற்றாழை வெட்டிக் குருத்தெடுத்து
கடைவாய் பிதிரிடையே இடியிடியாகவே கொடிதாகிய
காலம் கழிக்கவென்றே தளைத்து

வேண்டுமட்டும் அதைத் தின்று உடம்பெல்லாம்
வீங்கியே பாண்டு போலே வெளுத்து
விதியோகெடு மதியோசனி சதியோ பல முதியோருயிர்
விட்டவர்ரோ லட்சம் கோடியடி!


பஞ்சம் எங்கும் மக்களை பேய்க்கோலமாக்கிவிட்டிருந்தது என்கின்றன கவிதைகள். நோயுற்று உடல்மெலிந்து கூன் விழுந்தவர்களே எங்கும் காணலாயினர்

எந்தச்சனங்களும் இந்தப்பஞ்சத்திலே
ஏக்கம் பிடித்தன்ன வீக்கத்தினால்
இளைத்துப்போய்த் திரேகம் களைத்துக்கீழேஎ விழுந்து
வளைந்து வளைந்து நடப்பர் வெகுகோடியே!

இந்தப்பாடல்களில் கவித்துவம் இல்லை. மொழியழகு இல்லை. வரலாற்றுப்பதிவுகள் கூட சீராக இல்லை. ஆனால் பதிவுசெய்யப்பட்ட மரண ஓலம் போல காலம் கடந்து நின்று நெஞ்சை அறுக்கின்றன இவை.

பெருமாள்முருகனின் மதிப்புரை

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 65
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 66