சர்வதேச தமிழ் எழுத்தாளர் விழா

அன்புடையீர் வணக்கம்,

சர்வதேச ரீதியாக புலம்பெயர்ந்து வாழும் தமிழ் எழுத்தாளர்களைத் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் ஒன்றிணைத்து கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கும் வருடாந்த ஒன்று கூடல்களை நடத்துவதற்கும் இலங்கையில் 2011 ஆம் ஆண்டு ஜனவரியில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் விழாவை நடத்துவதற்காக தங்களது ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் பெறுவதற்காக இம்மடலை எழுதுகின்றேன்.

கடந்த ஒன்பது ஆண்டு காலமாக அவுஸ்திரேலியாவில் ஆண்டுதோறும் தமிழ் எழுத்தாளர் விழாக்களை நடத்தியிருக்கும் அனுபவத்தின் தொடர்ச்சியாக இலங்கையில் வதியும் பல எழுத்தாளர்களின் வேண்டுகோளின் நிமித்தம் குறிப்பிட்ட சர்வதேச தமிழ் எழுத்தாளர் விழாவை இலங்கையில் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளோம்.

இலங்கையில் யுத்த நெருக்கடி நீடித்தமையால் இந்த நோக்கம் செயல்வடிவம் பெறுவதில் தாமதம் ஏற்பட்டது. வவுனியாவில் இடைத்தங்கல் முகாம்களிலிருக்கும் தமிழ் மக்கள் தமது சொந்த வாழ்விடங்களுக்கு திரும்பும்வரையில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் விழாவை இலங்கையில் நடத்துவதில்லை என முன்னர் தீர்மானித்திருந்தோம்.

இலங்கையிலும் சில சர்வதேசநாடுகளிலும் வதியும் கலை, இலக்கியவாதிகள் சிலருடன் தொடர்புகொண்டு உரையாடியதன் பின்னர், எதிர்வரும் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாத முற்பகுதியில் குறிப்பிட்ட விழாவை இலங்கையில் கொழும்பில் நடத்துவது என தீர்மானித்துள்ளோம்.

இந்த சர்வதேச விழாவுக்கான செயற்குழு இன்னமும் தெரிவாகவில்லை. முதலில் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் பெற்றபின்னர் இலங்கைக்கு விழாவில் கலந்துகொள்ள வருபவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் குழு தெரிவாகும்.

இதற்கு முன்னோட்டமாக இலங்கையில் கொழும்பில், எதிர்வரும் 2010 ஜனவரி 3 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இலங்கை தமிழ் எழுத்தாளர்கள் கலந்துகொள்ளும் ஒரு ஆலோசனைக்கூட்டத்தை ஒழுங்குசெய்துள்ளோம்.

அதில் கலந்துகொள்பவர்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பெற்றுக்கொண்ட பின்னர் விழாவின் நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்படும்.

சர்வதேச தமிழ் எழுத்தாளர் விழா நடத்தப்படுவதன் நோக்கம்:

1. தமிழ் இலக்கியம் சர்வதேச ரீதியாக கவனிப்புக்குள்ளாகியிருப்பதனால் தமிழ் இலக்கியப்படைப்புகளில் செம்மைப்படுத்தும் கலையை வளர்த்தெடுப்பது.

2. தமிழ் இலக்கிய படைப்புகளை பிற மொழிகளில் மொழி பெயர்க்கும் பணிகளை ஊக்குவிப்பதற்காக இத்துறைகளில் ஈடுபடுபவர்களுடன் தொடர்புகளை பேணிவளர்த்து மொழிபெயர்க்கப்படும் தமிழ் படைப்புகளை சர்வதேச ரீதியாக அறிமுகப்படுத்தல்.

3. தமிழ் இலக்கிய படைப்புகளை (நூல்கள் – இதழ்கள்) ஆவணப்படுத்துவது தொடர்பாக இதுகுறித்த சிந்தனைகொண்டவர்களுடன் இணைந்து இயங்குவது.

4. இலங்கையில் இயற்கை அனர்த்தம், யுத்தம், விபத்து ஆகியனவற்றால் பாதிப்புற்ற தமிழ் எழுத்தாளர்களின் குடும்பத்தினருக்கு உதவுவதற்காக ஒரு நம்பிக்கை நிதியத்தை (வுசரளவ குரனெ) உருவாக்குவது.

5. தொடர்ச்சியாக இலங்கையில் வெளியாகும் கலை, இலக்கிய சிற்றேடுகளுக்கு அரச மானியம் பெற்றுக்கொடுப்பது தொடர்பாக ஆராய்ந்து மானியம் பெற்றுக்கொடுக்க முயற்சிப்பது.

6. தமிழ் மக்களிடம் வாசிப்புப்பழக்கத்தை ஊக்குவிப்பதற்கான பணிகளை முன்னெடுப்பது தொடர்பான ஆலோசனைகளை பெறுதல்.

7. நடத்தப்படவிருக்கும் சர்வதேச எழுத்தாளர் விழாவில் கலை. இலக்கியத்துறையில் வாழ்நாள் சாதனையாளர்களை பாராட்டி கௌரவித்தல்.

8. தமிழ் எழுத்தாளர்கள், இலக்கிய மொழிபெயர்ப்பாளர்கள், பத்திரிகை, இதழாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள், ஓவியர்கள் மத்தியில் கருத்துப்பரிவர்த்தனைகளை தொடர்ச்சியாக மேற்கொள்வதற்காக உறவுப்பாலத்தை ஆரோக்கியமாக உருவாக்குதல்.

9. இலங்கையிலும் சர்வதேச ரீதியாகவும் இலக்கியத்துறைகளில் ஈடுபடும் இளம் தலைமுறை படைப்பாளிகளின் பங்களிப்புகளுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களை ஊக்குவித்தல்.

  1. குறும்படம் தொடர்பான பிரக்ஞையை தமிழ் மக்கள் மத்தியில் வளர்த்து தேர்ந்த சினிமா ரஸனையை வளர்த்தல்.

முக்கிய குறிப்பு: நீங்கள் தெரிவிக்கும் ஆலோசனைகள் கருத்துக்களின் அடிப்படையில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்களில் மாற்றங்கள், திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.

இலங்கையில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் விழா நடத்தப்படும் காலகட்டத்தில் (2011) கலந்துகொள்ளும் வெளிநாட்டு பிரதிநிதிகள், இலக்கிய சுற்றுலாவுக்கு அழைத்துச்செல்லப்பட்டு இலங்கையில் பல பாகங்களிலும் கலை இலக்கிய சந்திப்புகளுக்கு ஒழுங்குசெய்யப்படும்.

[email protected]

தங்கள் பதிலை தாமதமின்றி எதிர்வரும் 06-12-2009 ஆம் திகதிக்கு முன்னர் எமது மின்னஞ்சலுக்கு எழுதவும்.

நன்றி.

தங்கள் பதிலுக்காக காத்திருக்கும்

லெ.முருகபூபதி.

முந்தைய கட்டுரைஒரு வலைப்பதிவு
அடுத்த கட்டுரைசின்னமனூர், தாடிக்கொம்பு