சு.கிருஷ்ணமூர்த்தி எனும் தனிநபர் இயக்கம்

ஒருமுறை உரையாடல் ஒன்றில் கூடியிருந்த நண்பர்களிடம் அவர்களுக்குப்பிடித்தமான கதாபாத்திரங்களைப்பற்றிச் சொல்லும்படி கோரினேன். ஏராளமானவர்கள் தமிழ்ப்புனைவுலகில் உள்ள கதாபாத்திரங்களைப்பற்றிச் சொன்னார்கள். அடுத்தபடியாக குறிப்பிடபட்டவை மொழியாக்கம் செய்யப்பட்ட இந்திய நாவல்களில் உள்ள கதாபாத்திரங்கள். அதிகமானவர்கள் சொன்ன கதாபாத்திரம் அதீன் பந்த்யோபாத்யாயவின் நீலகண்டப் பறவையைத் தேடி நாவலில் வரும் மணீந்திரநாத்.

சு கிருஷ்ணமூர்த்தி மொழிபெயர்ப்பாளர்
சு கிருஷ்ணமூர்த்தி மொழிபெயர்ப்பாளர்

வியப்பூட்டுவது தான் என்றாலும் அதன் காரணங்களை ஊகிக்கமுடிகிறது. என்னதான் வெளிநாட்டுநாவல்களை வாசித்தாலும் அக்கதாபாத்திரங்களை உள்ளே நுழைந்து அறிவதில் நமக்கு ஒரு தடை உள்ளது. அவர்களின் புறவாழ்க்கையும் அகவாழ்க்கையும் நம்மிடமிருந்துவேறுபட்டவை என்பதே காரணம். இந்தியநாவல்களின் கதைமாந்தர்கள் நமக்கு மிக நெருக்கமானவர்கள். அவர்கள் சிந்திப்பது நம்முடையசிந்தனைபோலவே இருக்கிறது. அதேசமயம் அவர்கள் நாமறியாத புதிய சூழலில் வாழ்கிறார்கள். நீலகண்டபறவையைத்தேடி அதிகமான தமிழ் வாசகர்களைக் கவர்ந்தமைக்குக் காரணங்களில் ஒன்று அது தமிழன் கனவுபோல உணரும் ஒரு நிலப்பகுதியில் நடக்கிறது. எங்கு நீரோடைகளும் குளங்களும் நிறைந்த பச்சைச்சதுப்பில்!

நீலகண்டப்பறவையைத் தேடி சென்ற இருபதாண்டுக்காலத்தில் கிட்டத்தட்ட ஒரு தமிழ்நாவலாகவே வாசகர் நெஞ்சில் பதிந்துள்ளது. அந்நாவலை தமிழாக்கம் செய்தவர் சு.கிருஷ்ணமூர்த்தி. சென்ற அரைநூற்றாண்டில் தொடர்ச்சியாக வங்க இலக்கியங்களை அவர் தமிழில் மொழியாக்கம்செய்திருக்கிறார்.வங்காளத்தில் இருந்து 36 நூல்களைத் தமிழுக்குக் கொண்டுவந்திருக்கிறார். தமிழில் இருந்து ஆதவன் ,இந்திராபார்த்தசாரதி, சின்னப்பபாரதி என பலருடைய ஆக்கங்களை வங்கமொழிக்கு கொண்டுசென்றிருக்கிறார். அவரது பல முக்கியமான மொழியாக்கங்களையும் அவரையும் சென்ற இருபதாண்டுகளாக நான் கவனப்படுத்திவந்திருக்கிறேன். அவரைப்பற்றிய கட்டுரை ஒன்றையும் முன்னர் எழுதியிருக்கிறேன். இப்போது 86 வயதாகும் சு.கிருஷ்ணமூர்த்தி நல்லி திசை எட்டும் மொழியாக்க விருதை பெற்றிருக்கிறார். வங்காள சாகித்ய அக்காதமி இவருக்கு லீலா ராய் ஸ்மாரக் விருதை அளித்திருக்கிறது

தமிழின் முதன்மையான மொழிபெயர்ப்பாளர்களான டி.எஸ்.சொக்கலிங்கம், க.சந்தானம், த.நா.குமாரசாமி,த.நா.சேனாபதி, அ.கி.ஜெயராமன், அ.கி.கோபாலன், ஆர்.ஷண்முகசுந்தரம் ஆகியோர் முதல்தலைமுறையைச் சேர்ந்தவர்கள் எனலாம். துளசி ஜெயராமன் ,சரஸ்வதி ராம்நாத், சௌரி, சித்தலிங்கையா ,சி.ஏ.பாலன் ,ஹேமா ஆனந்ததீர்த்தன், இளம்பாரதி போன்றவர்கள் இரண்டாவது தலைமுறை. சு.கிருஷ்ணமூர்த்தி இந்த இரண்டாவது தலைமுறையில் முக்கியமானவர். மு.கி.ஜகன்னாதராஜாவை இவ்வரிசையில் புனைவல்லாத நூல்களை மொழியாக்கம் செய்தவர்களில் முக்கியமானவர் என்று சொல்லமுடியும்

பொதுவாக மொழியாக்கங்களுக்கு இருக்கும் அன்னியத்தன்மை சற்றும் இல்லாமல் அதேசமயம் மிக நுணுக்கமாக மொழிபெயர்ப்புசெய்யப்பட்டவை சு.கிருஷ்ணமூர்த்தியின் நூல்கள். நீலகண்டப்பறவையைத்தேடி போன்றநாவல்கள் தமிழிலேயே மிகச்சிறந்த நடையில் எழுதப்பட்ட மூலநூல்கள் என்ற எண்ணத்தை உருவாக்குபவை. நிலக்காட்சி விவரணைகளில் உள்ள சரியான தகவல்களைத் தேடி அளிப்பதற்கும், பண்பாட்டுநுட்பங்களை சரியானபடி விளக்குவதிலும் எப்போதும் பெரும் கவனம் எடுத்துக்கொள்பவர் சு.கிருஷ்ணமூர்த்தி. அவரது மொழிபெயர்ப்புகளில் நீலகண்டபறவையைத் தேடி[ அதீன் பந்த்யோபாத்யாய] கறையான் [சீர்ஷேந்து முகோபாத்யாய] கொல்லப்படுவதில்லை [மைத்ரேயிதேவி ] போன்றவற்றை சாதனைகள் என்று சொல்லலாம்

சு.கிருஷ்ணமூர்த்தியின் மொழியாக்கத்திறனுக்குச் சான்றாக உடனடியாகச் சுட்டிக்காட்டவேண்டிய இடங்கள் என்றால் நீலகண்டப்பறவையைத் தேடி நாவலில் மணீந்திரநாத் நீர்த்தெய்வம் போல உடலில் பாசிகளுடன் எழுந்துவரும் காட்சிவிவரணைகளைச் சொல்வேன். கொல்லப்படுவதில்லை நாவலில் அவர் மொழியாக்கம் செய்துள்ள கவிதைகளை அடுத்தபடியாகச் சுட்டிக்காட்டுவேன். இருமொழிகளில் தேர்ச்சியுடன் சமகாலப்புனைவுமொழியில் ஆழ்ந்த படைப்பூக்கம் உடையவர்களுக்கு மட்டுமே சாத்தியமானது அது.

அர்ப்பணிப்புள்ள நெடுங்கால உழைப்பு என்பது தமிழில் அரிதினும் அரிது. ஏனென்றால் அத்தகைய உழைப்புகள் இங்கே அடையாளம் கண்டுகொள்ளப்படுவதில்லை. மேடைகளில் வந்து தொடர்ந்து தங்களை முன்வைப்பவர்களைப்பற்றி ஒருமேலோட்டமான அறிமுகம் மட்டுமே நம் பொதுமக்களுக்கும் அறிவியக்கத்துக்குமான உறவாக உள்ளது. ஆனால் அடையாளத்துக்காகவோ புகழுக்காகவோ அன்றி தனக்காக மட்டுமே செய்யப்படும் தவங்கள்தான் பெரும் விளைவுகளை உருவாக்குகின்றன. அவ்வாறு தமிழில் பெரும்பாலும் அடையாளம் காணப்படாமல்போன சாதனையாளர்கள் என மொழிபெயர்ப்பாளர்களைத்தான் சொல்லவேண்டும். மொழியாக்கத்துக்கான சாகித்ய அக்காதமி விருது சமீபத்தில் அறிவிக்கப்பட்டபின்னர்தான் அவர்கள் சற்றேனும் அறியப்படுகிறார்கள்.

சர்வசாதாரணமாக இன்று வாழ்நாள்சாதனை என்று சொல்லிவிடுகிறோம். தமிழுக்குக் கொடை என எவரையெல்லாமோ சுட்டிக்காட்டுகிறோம். உண்மையான வாழ்நாள்சாதனை, தமிழ்க்கொடை என்பது இத்தகைய சலிப்பில்லாத நீடித்த பங்களிப்புகள்தான். அறிவியக்கம் என்ற ஒன்று இவ்வாறு துளித்துளியாக தொடர்ந்து செய்யப்படும் படைப்பியக்கம் மூலம் கண்ணுக்குத்தெரியாதபடி திரண்டுவருவதாகும். எந்த நிறுவனத்துக்கும் இந்த இடம் கிடையாது. எளிய வினா ஒன்றை கேட்டுக்கொள்ளலாம், கோடிக்கணக்கான ரூபாய் செலவில் பலநூறு பேராசிரியர்களுடன் செயல்படும் தஞ்சை தமிழ்ப்பற்கலைகழகம் சு.கிருஷ்ணமூர்த்தி இரு பங்களிப்புகளில் எது பெரியது, முக்கியமானது? எளியமுறையில்கூட தஞ்சை பல்கலையை சு.கிருஷ்ணமூர்த்தியுடன் ஒப்பிடமுடியாது. அவரது பங்களிப்பு அழியாதது, தலைமுறைகள்தோறும் நீடிப்பது

சு.கிருஷ்ணமூர்த்தி ‘நான் கடந்துவந்த பாதை’ என்றபேரில் தன் வாழ்க்கையை நூலாக எழுதியிருக்கிறார். மொழியாக்கம் எப்படி ஆதாயமில்லாத புறக்கணிக்கப்பட்ட துறையாக இருந்தது என்றும் ஆயினும் தன் ஆர்வம் காரணமாக அதில் எப்படி முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டு செயல்பட்டேன் என்றும் அதில் சொல்ல்கியிருக்கிறார்

சு.கிருஷ்ணமூர்த்தி நம்மிடையே வாழும் முக்கியமான சாதனையாளர்களில் ஒருவர். சாதனையாளர்களை அடையாளம் காண்பதும் தலைமுறை நினைவுகளில் வாழச்செய்வதுமே அறிவியக்கத்தை அழியாது கொண்டுசெல்ல இன்றியமையாத செயல்பாடுகள்.

சு கிருஷ்ணமூர்த்தி பற்றி அம்பை

நான்கடந்துவந்தபாதை


கிருஷ்ணமூர்த்தி நூல்கள் 1

சு கிருஷ்ணமூர்த்தி நூல்கள்

தேசியபுத்தகநிறுவனம் வெளியிட்ட நூல்கல்

மைத்ரேயிதேவி -கொல்லப்படுவதில்லை பற்றி

நீலகண்டப்பறவையைத்தேடி பற்றி


கண்ணீரைப்பின்தொடர்தல்

முந்தைய கட்டுரைஇரு பறவைகள்
அடுத்த கட்டுரைஅஞ்சலி : சு கிருஷ்ணமூர்த்தி