சிவகாசி

வலைப்பூக்கள் வந்ததும் எழுத்த்தில் ஒரு பெரிய கொந்தளிப்பு ஏற்படும் என அதை தொடக்ககாலத்தில் முன்வைத்த சில எழுத்தாளர்கள் சொன்னாகள். ‘எல்லாரும்தான் எழுதுவார்கள். இனிமேல் எழுத்தாளன்னு தனியா யாரும் கெடையாது’ என்றவகை கருத்துக்கள் பறந்தன. ஆனால் அப்போது நான் சந்தித்த அசோகமித்திரன் ‘ரேடியோ வந்தப்ப இப்டித்தான் சொன்னாங்க…ஆனால் அதுக்கு முன்னாடி பாடினவங்கதான் ரேடியோவில பாடினாங்க’ என்று ஒரு கல்யாணவீட்டில் என்னிடம் சொன்னார். வலைப்பூக்களிலும் அதுதான் நிகழ்ந்தது.

ஆனால் வலைப்பூக்கள் வழியாக ஒன்று நிகழுமென நான் நினைத்தேன். வெவ்வேறு வகையான வாழ்க்கைச்சூழல்களில் இருப்பவர்களின் அன்றாடவாழ்க்கைச்சிக்கல்களும் நிகழ்வுகளும் பதிவாகுமென்றும் அது இலக்கியத்துக்கு அடிப்படைகளை அளிக்கும் ஒரு தகவல்வெளியாக ஆகும் என்றும் நினைத்தேன். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட வெவ்வேறு அலுவலகப் பணிக்குறிப்புகள், பயணக்குறிப்புகள், குடும்பவரலாறுகள் அவர்களின் இலக்கியத்துக்கு அளித்துள்ள கொடை மிக முக்கியமானது. நமக்கு தமிழில் அவ்வாறு இலக்கியத்துக்கு உதவக்கூடிய அடுத்தகட்ட எழுத்தென்பதே இல்லை.

அவ்வகையில் சில அபூர்வமான கட்டுரைகளை வலைப்பூக்களில் காணமுடிகிறது. முரளிகண்ணன் சிவகாசி பற்றி எழுதிய நடைச்சித்திரம் அதில் ஒன்று. சிவகாசியின் ஒரு கீற்று நம் கண்ணில்பட்டு மறையும் அனுபவம். கள்ள ஓட்டு குறித்து அவர் எழுதியிருப்பதும் ஓர் இயல்பான சித்தரிப்பு. காட்சிகளை நன்றாகச் சொல்லமுடிகிறது அவரால். தொடர்ச்சியான எழுத்தும் அதனுடன் இணைந்த வாசிப்பும் அவரை நல்ல எழுத்தாளராக ஆக்கலாம்.


சிவகாசி முரளிகண்ணன்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 70
அடுத்த கட்டுரைநூஹ் நபிக்கு வழங்கப்பட்ட வேதம்