வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 74

பகுதி பதினைந்து : தென்றிசை மைந்தன்

[ 1 ]

“பிறப்பும் இறப்பும் ஊடியும் கூடியும் பின்னும் வலையால் ஆனது இப்புடவி என்பதனால் ஒவ்வொரு பிறப்பும் இங்கு நிகழும் அனைத்துடனும் இணைந்துள்ளது என்பதே நிமித்திக நூலின் முதல் அறிதல்” என்றார் முதியசூதராகிய யூபாக்‌ஷர். “இப்புடவி ஒன்பதின் அடுக்குகளினாலானது என்பதனால் ஒவ்வொரு பிறப்பும் புடவி என்னும் பெருநிகழ்வின் ஏதேனும் ஒன்பது நிகழ்வுகளுடன் இணைந்திருக்கும்.”

அவர் மென்மரத்தாலான குழைகளை காதிலணிந்திருந்தார். கழுத்தில் செந்நிறக்கற்களாலான மாலை. கன்னங்கரிய நிறம்கொண்டவர். முகத்தில் வெண்விழிகள் யானையின் தந்தங்கள் போலத்தெரிந்தன. சுரிகுழல் தோள்களில் விரிந்துகிடக்க மடியில் தன் மகரயாழை வைத்து சக்ரவர்த்திகளுக்குரிய நிமிர்வுடன் அமர்ந்து குந்தியை நோக்கி “காந்தார அரசியில் நிகழப்போகும் பிறப்பின் நிமித்தங்கள் ஆறுதிசைகளில் தீமையைச் சுட்டுகின்றன. மூன்றில் பேரொளியையும் சுட்டுகின்றன அரசி!’ என்றார்.

குந்தி திரும்பி அனகையைப் பார்த்தபின் பெருமூச்சுடன் ”அனைத்தையும் சொல்லுங்கள், சூதரே” என்றாள். “நிமித்திகர்கள் அவர்களின் குலகுருவான பிரஹஸ்பதியின் ஆலயத்தில் கூடியபோது நானும் அங்கிருந்தேன்” என்றார் யூபாக்ஷர். “அன்று நிகழ்ந்தவற்றை எல்லாம் பாடல்களாக மாற்றி அஸ்தினபுரியின் அவைக்கூடங்களிலெல்லாம் பாடினேன். அரசி, நிமித்திகர் நாளையில் வாழ்பவர்கள். சூதர்கள் நேற்றில் வாழ்கிறோம். நாங்கள் இன்றில் சந்தித்துக்கொள்ளும் தருணங்களில் முக்காலமும் ஒன்றை ஒன்று கண்டுகொள்கின்றன.”

குந்தி பெருமூச்சுடன் தன் நிறைவயிற்றை மெல்ல எடைமாற்றி வைத்து உடலை ஒருக்களித்துக் கொண்டாள். பெருமூச்சுவிட்டபோது முலைகளின் எடையை அவளாலேயே உணரமுடிந்தது. அவை எடைகொண்டு கீழிறங்கும்தோறும் தோளிலிருந்து வரும் தசையில் மெல்லிய உளைச்சல் இருந்தது

அஸ்தினபுரியில் இருந்து ஒரு முதுசூதரை அனுப்பிவைக்கும்படி அவள் செய்தி அனுப்பியிருந்தாள். அங்கிருந்த அவளுடைய உளவுப்படையினர் முதுசூதரான யூபாக்‌ஷரை படகில் கங்கையில் ஏற்றி பின் காட்டுப்பாதைவழியாக அழைத்துவந்து சேர்த்தனர். தவக்குடிலில் இளைப்பாறியபின் சூதரை இந்திரத்யும்னத்தின் வடக்குகோடியில் ஹம்ஸகூடத்திற்கு அப்பால் இருந்த சிராவணம் என்னும் சிறிய சோலைக்கு வரச்சொன்னாள். பாண்டு அவர் வந்ததை அறியவில்லை. மாத்ரி அறிந்தால் அதை அவளால் பாண்டுவிடம் சொல்லாமலிருக்க முடியாதென்பதனால் அவளுக்கும் தெரிவிக்கப்படவில்லை. அங்கிருந்த முதிய முனிவர்கள் மலையேறி கைலாயம் சென்றுவிட்டிருந்தனர். இளையவர்கள் எவரும் அரசியலுக்கு சித்தம் அளிப்பவர்களல்ல.

“அஸ்தினபுரியின் அரசி, சென்றபல மாதங்களாக அஸ்தினபுரியில் தீக்குறிகள் தென்படத்தொடங்கின. சென்ற ஆடி அமாவாசைநாளில் நள்ளிரவில் நகருக்குள் நரிகளின் ஊளை கேட்டதாகவும் மென்மணலில் நரிகளின் காலடித்தடங்கள் காணப்பட்டதாகவும் நகர்மக்கள் பேசிக்கொண்டனர். நரிகளின் ஊளை நகருள் கேட்பது ஆநிரைகளுக்குத் தீங்குசெய்யும் என்ற நம்பிக்கை கொண்ட ஆயர்குடித்தலைவர்கள் எழுவர் நிமித்திகர்களை அணுகி குறிகள் தேர்ந்து சொல்லச்சொன்னார்கள்” என்றார் யூபாக்‌ஷர்.

“அன்று மேலும் பல தீங்குகள் நிகழ்ந்திருப்பது தெரியத்தொடங்கியது. நகரின் மூத்தபெருங்களிறான உபாலன் அலறியபடி வந்து அரண்மனை முற்றத்தில் உயிர்துறந்தது. அரண்மனைவளாகத்தில் எல்லைக்காவலர்தலைவர்களில் ஒருவனான ஸஷோர்ணன் இறந்துகிடந்தான். அவன் முகம் பேரச்சத்தில் விரைத்து விரிந்திருந்தது. உதடுகள் பற்களால் கடிக்கப்பட்டு துண்டாகி விழுந்திருந்தன. அன்று உபாலனுக்காகத் தோண்டப்பட்ட சிதைக்குழியில் மும்மடங்கு பெரிய கதாயுதம் ஒன்று கிடைத்தது…” யூபாக்‌ஷர் தொடர்ந்தார்.

“ஒவ்வொன்றையும் இணைத்து ஆராய்ந்த நிமித்திகர் அனைவரும் ஒப்புக்கொண்ட ஒன்றுண்டு, அரசி. அன்றுதான் அக்கரு நிகழ்ந்திருக்கிறது. அந்நாள் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கலிசாந்தி பூசை நிகழும் ஆடிமாத அமாவாசை.” யூபாக்‌ஷர் சற்று இடைவெளிவிட்டு வெண்விழிகள் ஒளிவிட கூர்ந்துநோக்கி “கலியுகம் தொடங்கிவிட்டது, அரசி” என்றார்.

குந்தி வெறுமனே தலையசைத்தாள். “ஆம், அத்தனை நிமித்திகர்களும் அதையே சொல்கிறார்கள். துவாபரயுகத்தின் முடிவு நெருங்குகிறது. யுகப்பெயர்ச்சி அணுகிவருகிறது. இரு மதவேழங்கள் மத்தகங்களை முட்டிக்கொள்வதுபோல இரு யுகங்களும் மோதப்போகின்றன. கண்ணுக்குத்தெரியாத கை ஒன்று சதுரங்கக் களம் ஒருக்குவதுபோல ஒவ்வொரு கட்டத்திலும் அதற்குரிய சதுரங்கக்காய்கள் மெல்லமெல்ல வந்து அமைகின்றன. ஆட்டத்தை நடத்தவிருப்பவர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். மேடை நிறைந்துகொண்டிருக்கிறது” என்றார் யூபாக்‌ஷர்.

யூபாக்‌ஷர் தொடர்ந்தார் “நிமித்திகர்களின் கூற்றுப்படி வரப்போவது கலிதேவனின் மானுடவடிவம். அவன் வருகையை செம்மைசெய்து அவனை இட்டுச்செல்ல துவாபரபுருஷனின் மானுடவடிவம் மண்ணில் முன்னரே நிகழ்ந்துவிட்டிருக்கிறது. நாமறியாத யாரோ, எங்கோ. ஆனால் முதியயானை இளங்களிறை வழிகாட்டிக் கொண்டுசெல்கிறது. கொடுங்காற்று காட்டுநெருப்பை தோளிலேற்றிக்கொண்டிருக்கிறது…”

பிரஹஸ்பதியின் ஆலயத்துக்கு முன்னால் நிமித்திகர்களின் மூதாதைவடிவமான அஜபாலரின் சிற்றாலயம் இருக்கிறது. முப்பதாண்டுகளுக்கு முன் சந்தனு மன்னர் விண்ணேகியநாளில் முக்காலத்தையும் உணர்ந்தமையால் காலாதீத சித்தம் கொண்டிருந்த அஜபாலர் அஸ்தினபுரியின் அழிவை முன்னறிவித்தார் என்கிறார்கள். காஞ்சனம் ஒலித்து அரசரின் விண்ணேகுதலை அறிவித்த அக்கணம் ஒரு வெண்பறவை அரண்மனை முகட்டிலிருந்து பறந்துசென்றதை அவர் பார்த்தாராம். தர்மத்துக்குமேல் இச்சையின் கொடி ஏறிவிட்டது என்றும் வெற்று இச்சை வீரியத்தை அழிக்கிறது. பலமிழந்த விதைகளை மண் வதைக்கிறது என்றும் அவர் சொன்ன இரு மூலவாக்கியங்களை நிமித்திகர் இன்றும் ஆராய்ந்துவருகிறார்கள். அதன் பொருள் ஒவ்வொருநாளும் தெளிவடைந்து வருவதாகச் சொல்கிறார்கள்.

அஜபாலரின் கருவறைமுன் நூற்றெட்டு அகல்விளக்குகளை ஏற்றிவைத்து பன்னிருதிகிரிக்களம் அமைத்து நிமித்திகர்குலங்கள் அமர்ந்து நிகழ்முறையும் வருமுறையும் தேர்ந்தனர். மும்முறை மூன்று திசைகளிலிருந்தும் வந்த காற்று அனைத்து அகல்களையும் அணைத்தது. நான்காம்முறை சுடர்கள் அசைவிழந்து கைகூப்பி நின்றன. அது நற்குறி என்றனர் நிமித்திகர். காலத்தின் சதுரங்கக் களத்தில் செந்தழலென ஒளிவிடும் போர்ப்புரவிகள் வந்தமரவிருக்கின்றன என்றார்கள். குருகுலத்தின் பேரறச் செல்வன் கருபீடம் புகவிருக்கிறான் என்றனர்.

ஐந்தாம் முறை உருள்கற்கள் உருட்டப்பட்டபோது அனைத்தும் வெண்ணிறமாக விழுந்தது. காற்றில் மிதந்துவந்த நீலமயிலிறகொன்று களத்தின் மையத்தில் வந்தமர்ந்தது. அக்கணம் அப்பால் எங்கோ ஆழியளந்தபெருமாளின் ஆலயத்தில் சங்கொலியும் எழுந்தது. முதுநிமித்திகர் கைகளைக்கூப்பியபடி கண்களில் விழிநீர் வழிய எழுந்து நின்று ‘எந்தையே வருக! இம்மண்ணும் எங்கள் குலங்களும் பெருமைகொள்கின்றன!’ என்று கூவினார். குனிந்து குறிமுறை நோக்கிய அனைத்து நிமித்திகர்களும் கண்ணீருடன் கைகூப்பினர்.

அது ஏன் என்று நான் கேட்டேன். மூத்த நிமித்திகர் அதற்கு பதில் சொன்னார். ஒரு யுகத்தின் முடிவு என்பது ஒரு மனிதனின் முடிவேயாகும். இன்றியமையாத அழிவு அது. வலிமைகள் மறையும். நோய்பெருகும். இந்த மாபெரும் காட்டில் ஒன்று பிறிதொன்றுக்கு உணவாதலே அழியாநெறியுமாகும். அந்தப்பேரழிவை உரியமுறையில் பயனுறுவழியில் முடித்துவைக்க யுகங்களை தாயக்கட்டைகளாக்கி விளையாடும் விண்ணகமுதல்வனின் மானுடவடிவமும் மண்நிகழும் என்றார்.

அங்கிருந்த அனைவருமே ஒரேகுரலில் உடல் விதிர்ப்புற எங்கே என்றுதான் கூவினோம். அதற்கு ‘எங்கே என்று சொல்லமுடியாது. யாரென அறிவதும் முடியாததே. ஆனால் அவன் வருவான். யுகங்கள் தோறும் அவன் நிகழ்வான்’ என்றார் முதுநிமித்திகர்.

இருகரங்களையும் கூப்பி அவர் கூவினார் ‘ஆக்கமும் அழிவும், வாழ்வும் மரணமும், இருப்பும் இன்மையும், நன்றும் தீதும் ஒரு நிறையளவையின் இரு தட்டுக்கள். ஒரு கணத்தின் ஒரு புள்ளியில் மட்டுமே அவை முற்றிலும் நிகராக அசைவிழந்து நிற்கின்றன. அந்த முழுமைக்கணத்தை அறிகையில்தான் மனித அகமும் முழுமைபெறுகிறது. அந்த முழுமைக்கணத்தில் முழுவாழ்க்கையையும் வாழ்பவன் காமகுரோதமோகங்களில் ஆடினாலும் யோகி. செயலாற்றாமலிருந்தாலும் அனைத்தையும் நிகழ்த்துபவன். மானுடன்போல புலன்களுக்குள் ஒடுங்கினாலும் வாலறிவன். அவன் வருவான்.’

ஆகவே அழிவு நல்லது என்றனர் நிமித்திகர். குருதிப்பெருநதியில்தான் அந்த இளநீல ஒளிமலர் விரியுமென்றால் அவ்வண்ணமே எழுக. நிணமலைக்கு அப்பால்தான் அந்த இளஞாயிறு எழுமென்றால் அதுவே நிகழ்க. கருமையும் வெண்மையுமான ஆட்டக்களத்தில் இருக்கும் காய்களனைத்தும் அவனுடைய விரல்களுக்காகக் காத்திருக்கின்றன எனில் அவ்வாறே ஆகுக என்றார். ஆம்! ஆம் ! ஆம்! என அங்கிருந்தவர்களனைவரும் குரலெழுப்பினர். அப்பால் நெய்த்திரிச்சுடர் ஒளியில் அமர்ந்திருந்த அஜபாலர் திகைத்த கல்விழிகளுடன் பார்த்திருந்தார்.

“அந்தச்செய்தி பிதாமகருக்கு சொல்லப்பட்டதா?” என்றாள் குந்தி. “இல்லை அரசி. பிதாமகர் பீஷ்மர் இப்போது சிந்துவின் கரையில் எங்கோ இருப்பதாகச் சொல்கிறார்கள். நகரை ஆள்வது அமைச்சர் விதுரர். அவர் தன் தமையனுக்கு எத்தனை அணுக்கமானவர் என அனைவரும் அறிவர். அவரிடம் சொல்வதெப்படி என்று அஞ்சுகிறார்கள் நிமித்திகர்கள். அனைத்துக்கும் மேலாக அதைச் சொல்வதனால் ஆவதொன்றுமில்லை என்று அவர்கள் எண்ணுகிறார்கள்” என்றார் யூபாக்‌ஷர்.

“ஆம்” என்று குந்தி பெருமூச்சுவிட்டாள். “அறிந்துகொண்ட எதையாவது மனிதர்கள் உணர்ந்துகொண்டதாக வரலாறுண்டா என்ன?” யூபாக்‌ஷர் தொடர்ந்தார். “நகரில் தீக்குறிகள் இன்றும் தொடர்கின்றன அரசி. மெல்லமெல்ல நகரின் அனைத்துப்பறவைகளும் விலகிச்சென்றன. நகரமெங்கும் காகங்கள் குடியேறின. புராணகங்கையின் குறுங்காடுகள் மரங்களின் இலைகளைவிட காகங்களின் சிறகுகள் செறிந்து கருமைகொண்டிருக்கின்றன. அஸ்தினபுரியின் வெண்மாடமுகடுகள் காகங்களின் கருமையால் மூடப்பட்டிருக்கின்றன. நகர்மேல் கருமேகம் ஒன்று இறங்கியதுபோலிருக்கிறது. வெய்யோனொளியை முழுக்க காகச்சிறகுகள் குடித்துவிடுவதனால் நகரம் நடுமதியத்திலும் நிழல்கொண்டிருக்கிறது.”

அரண்மனையில் அரசி அரசின் தலைமகனை கருவுற்றிருக்கிறாள் என்பது நகர்மக்களை கொண்டாடச்செய்யவேண்டிய செய்தி. ஆனால் அனைவரும் அஞ்சி அமைதிகொண்டிருக்கிறார்கள். அவர்கள் கண்களில் படுவதெல்லாம் அவநிகழ்வுகள் மட்டும்தான். அரசி கருவுற்ற செய்தியை நாற்பத்தொருநாட்களுக்குப்பின் மருத்துவர் உறுதிசெய்தனர். அரண்மனை கோட்டைவாயிலில் அரசி கருவுற்றிருக்கும் செய்தியை அறிவிக்கும் பொன்னிறக்கொடி மேலேறியது. வைதிகர்களும் சூதர்களும் அக்கருவை வாழ்த்தினர்.

அரண்மனையில் முறைப்படி ஏழுநாட்கள் சூசீகர்ம நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அரண்மனை முற்றிலும் தூய்மைசெய்யப்பட்டது. வைதிகர்கள் தூய்மைசெய்யும் வேள்விகளை செய்து அப்புகையால் அனைத்து அறைகளையும் நீராட்டினர். மருத்துவர்கள் நூற்றெட்டுவகை மூலிகைகளை பீலித்தோரணங்களாகக் கட்டி அறைகளின் காற்றை நலமுடையதாக்கினர். வைதாளிகர் வரவழைக்கப்பட்டு மந்திரத்தகடுகள் எழுதி அரண்மனைமூலைகளெங்கும் அமைக்கப்பட்டு கண்ணுக்குத்தெரியாத தீயிருப்புகள் விலக்கப்பட்டன.

விண்ணாளும் வேந்தர்களில் ஒருவன் மண்ணாள வருவதற்கான அழைப்பாக பும்ஸவனச் சடங்கு நிகழ்ந்தபோது அரசியைப்பார்த்து புகழ்ந்துபாடுவதற்காக சூதர்களாகிய நாங்களும் சென்றோம். அரண்மனையின் சடங்குகளைப்பாடுவது அங்கே கிடைக்கும் பரிசுகளுக்காக மட்டும் அல்ல. அரண்மனைச்செய்திகள்தான் நாங்கள் ஊர்மக்களிடமும் பாடவேண்டியவை. எங்களை நகரங்களிலும் கிராமங்களின் அதன்பொருட்டே வரவேற்று அமரச்செய்கிறார்கள். அங்கே கூடியிருந்த நூற்றுக்கணக்கான சூதர்கள் அரண்மனைமுற்றத்தில் அந்தப்புர வாயிலை நோக்கி காத்து நின்றோம்.

அரசி காந்தாரி படிகளிறங்கி வரக்கண்டு நாங்கள் வாழ்த்தொலி மறந்து நின்றுவிட்டோம். இரு தங்கையரும் தோள்பற்ற தளர்ந்த முதியவள்போல அவள் வந்தாள். இலைமூடிய காய்போல வெளுத்துப்போயிருந்தது அவள் உடல். முன்நெற்றி மயிர் உதிர்ந்து வகிடு விலகியிருந்தது. கன்னம் பழைய உடுக்கையின் தோல் போல வீங்கிப் பளபளத்தது. உதடுகள் வெளுத்து வீங்கி வாடிய செந்தாமரை போலிருந்தன. அரசியே, அவள் கருமுதிர்ந்து கடுநோய் கொண்டவள் போலிருந்தாள். அவள் வயிறு அப்போதே இரட்டை காளை வாழும் கருப்பசுவின் வயிறென புடைத்துத் தொங்கியது.

அரசிக்கு ஆறுமாதமாவது கருவளர்ச்சியிருக்கும் என்றனர் விறலியர். எக்காரணத்தாலோ அந்த உண்மை மறைக்கப்படுகிறது என்றனர் இளைய சூதர். ஆனால் முதுசூதர் நால்வர் மூன்றுமாதம் முன்னால் அரசியைக் கண்டிருந்தனர். அப்போது அவள் புதியகுதிரை போல இருந்தாள் என்று அவர்கள் சான்றுரைத்தனர். எவருக்கும் ஏதும் சொல்லத்தெரியவில்லை. சந்தனமணைமேல் விரித்த செம்பட்டில் வந்து அமர்ந்த காந்தாரத்து அரசி தன் இருகைகளையும் இருபக்கமும் ஊன்றி கால்களை மெல்ல மடித்து பக்கவாட்டில் சரிந்து அமர்ந்தாள். இரு கைகளையும் ஊன்றியபடிதான் அவளால் அமரமுடிந்தது. அருகே தன் தங்கையரை அமரச்செய்து அவர்களின் தோள்களில் சாய்ந்தே அவளால் தலைதூக்கமுடிந்தது.

மூன்றாம் மாதம் அஸ்தினபுரியின் நகர்க்காவல்தெய்வங்கள் ஊன்பலி கொடுத்து நிறைவுசெய்யப்பட்டனர். முப்பெரும் கடவுளர்க்கும் முறைப்படி பூசைகள் செய்யப்பட்டன. வெற்றியருள் கொற்றவைக்கும் நிலமங்கைக்கும் பொன்மகளுக்கும் கலைமகளுக்கும் வழிபாடுகள் செய்யப்பட்டன. ஒவ்வொரு நாளும் அரண்மனைக்கு பூசகர்கள் சென்றுகொண்டிருந்தனர். ஒவ்வொருநாளும் அதிகாலையில் பூசைச்சடங்கை அறிவித்து காஞ்சனம் முழங்கிக்கொண்டிருந்தது. காந்தாரத்து அரசி பெருங்காயை சிறுகாம்பு தாங்கியதுபோல கருக்கொண்டிருக்கிறாளென அறிந்திருந்தமையால் நாங்கள் அவளைத்தான் பார்க்க விழைந்தோம்.

கொற்றவை ஆலயத்தருகே அரசரதம் வந்து நிற்க அவள் வெளியே காலடி எடுத்துவைத்தபோது அந்தப்பாதங்களைக் கண்டு விறலியர் மூச்சிழுக்கும் ஒலி கேட்டது. அரசியின் வெண்ணிறப்பாதம் வீங்கி அதில் சிறுவிரல்கள் விரைத்து நிற்க வெண்பசுவின் காம்புகள் புடைத்த அகிடுபோல் இருந்தது அது. அவள் உடலை வெண்பட்டால் மூடி மெல்ல நடக்கச்செய்து ஆலயமுகப்புக்கு கொண்டு சென்றனர். ஒவ்வொரு அடிவைக்கவும் அவள் மூச்சிரைக்க, உடல் அதிர, தளர்ந்து நின்றுவிடுவதைக் கண்டோம். அவள் கைகளை நான் கண்டேன். அவை நீரில் ஊறியவை போல வீங்கியிருந்தன. ஆலயமுகப்பில் அவள் நிற்பதற்காக தங்கையர் பற்றிக்கொண்டனர். அவள் வயிறு தரையை நோக்கி கனத்துத் தொங்குவதாகத் தோன்றியது. வயிற்றுக்குள் இருப்பது இரும்புக்குழவி என்றும் அது தோல்கிழிந்து மண்ணில்விழப்போகிறதென்றும் நினைத்தேன்.

அரசி, குழந்தைக்கான சடங்குகளை கருபுகும் கணம் முதல் வகுத்துள்ளன நூல்கள். பார்த்திவப் பரமாணு கருபுகும் நாள் கர்ப்பதாரணம் எனப்படுகிறது ‘நான் யார்?’ என அது வினவுகிறது. ‘நீ இப்பிறவியில் இக்கரு’ என உடல் விடைசொல்கிறது. அதன்பின் கரு ஊனையும் குருதியையும் உண்டு வளர்ந்து ‘நான் இங்கிருக்கிறேன்’ என தன்னை அறிகிறது. அது முதல்மாதத்தில் அணுவுடல் கொண்டிருக்கிறது. இரண்டாம் மாதத்தில் புழுவுடல். மூன்றாம் மாதத்தில் மீனுடல். நான்காம் மாதத்தில் வால்தவளையின் உடல். ஐந்தாம் மாதத்தில் மிருக உடல். ஆறாம் மாதத்தில்தான் மானுட உடல் கொள்கிறது. அதற்கு மனமும் புத்தியும் அமைகிறது. முந்தையபிறவியின் நினைவுகளால் துயருற்றும் தனிமையுற்றும் கைகூப்பி வணங்கியபடி அது தவம்செய்யத்தொடங்குகிறது.

ஆகவே ஆறாவது மாதத்தில் சீமந்தோன்னயனம் என வகுத்துள்ளனர் முன்னோர். அப்போதுதான் வயிற்றில் வளரும் கருவுக்கு கைகால்கள் முளைக்கின்றன. அது வெளியுலக ஒலிகளை கேட்கத்தொடங்குகிறது. ஒரு மனித உடலுக்குள் இன்னொரு மனிதஉடல் வாழ்கிறதென்று காட்டுவதற்காக அன்னையின் நெற்றிவகிடை இரண்டாகப்பகுத்து நறுமணநெய்பூசி நீராட்டுவதே சீமந்தோன்னயனம் என்கின்றனர். அன்று வேள்வித்தீ வளர்த்து திதி தேவிக்கு காசியபரிடம் பிறந்த ஏழு மருத்துக்களுக்கும் முறைப்படி அவியளித்து வரவழைத்து தர்ப்பை, மஞ்சள்நூல், குதிரைவால்முடி, யானைவால்முடி, பனையோலைச்சுருள், வெள்ளிச்சரடு, பொற்சரடு ஆகியவற்றில் அவர்களைக் குடியமர்த்தி அன்னையின் உடலில் காப்புகட்டி தீதின்றி மகவு மண்ணைத்தீண்ட நோன்புகொள்வார்கள்.

சீமந்தோன்னயனத்துக்கு பெண்கள் மட்டுமே செல்லமுடியும். என் துணைவி சென்றுவிட்டு மீண்டு என்னிடம் அங்கு கண்டதைச் சொன்னாள். அவள் கண்டது முற்றிலும் புதிய காந்தார அரசியை. அவளுடைய வலிவின்மையும் சோர்வும் முற்றாக விலகி நூறுபேரின் ஆற்றல் கொண்டவளாக ஆகிவிட்டிருந்தாள். வயிறுபுடைத்து பெருகி முன்னகர்ந்திருக்க அவள் பின்னால் காலெடுத்துவைத்துவரும் பசுவைப்போலிருந்தாள் என்றாள். அரண்மனைக்கூடத்துக்கு அவள் நடந்துவந்த ஒலி மரத்தரையில் யானைவருவதுபோல அதிர்ந்தது என்றும் அவள் உள்ளே நுழைந்தபோது தூணில் தொங்கிய திரைகளும் மாலைகளும் நடுங்கின என்றும் சொன்னாள்.

அரசி, ஏழாம் மாதம் முடிவில் சூதர்களுக்கு பொருள்கொடை அளிக்கும் நிகழ்வில் நான் மீண்டும் அவளைப்பார்த்தேன். அரண்மனை முகப்பிலிட்ட அணிப்பந்தலில் பொற்சிம்மாசனத்தில் அவள் வந்து அமர்வதை முற்றத்தில் நெடுந்தொலைவில் நின்று கண்டேன். அவள் மும்மடங்கு பெருத்திருந்தாள். பெருத்த வெண்ணிற உடல்மீது சிறிய தலை மலையுச்சிக் கரும்பாறைபோல அமர்ந்திருந்தது. கழுத்து இடைதூர்ந்துவிட்டிருந்தது. முகம்பருத்து கன்னங்கள் உருண்டமையால் மூக்கும் உதடுகளும் சிறியவையாகியிருந்தன. பெருந்தோள்களின் இருபக்கமும் கைகள் வெண்சுண்ணத்தூண்கள்போலிருந்தன.

அவளை அணுகி அவள் பாதத்தருகே குனிந்து என் கிணையைத்தாழ்த்தி வாழ்த்தொலித்து பரிசில் பெற்றுக்கொண்டேன். அவள் தன் வயிற்றை ஒரு மென்பஞ்சுமெத்தையில் தனியாக தூக்கி வைத்திருப்பதைக் கண்டு என் உடல்சிலிர்த்தது. பரிசைப்பெற்று மீண்டபோது என்னால் நடக்கவே முடியவில்லை. விழா முடிந்தபின்னர் பெருமுரசு ஒலித்ததும் அவள் எவர் துணையும் இல்லாமல் கையூன்றி எழுந்தாள். படிகளில் திடமாகக் காலடி எடுத்துவைத்து நிமிர்ந்த தலையுடன் நடந்துசென்றாள். அரசி, அப்போது அவள் உடலே கண்ணாகி அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்தது. இரும்பாலான உடல்கொண்டவள் போல செல்லும் வழியில் சுவர்களை இடித்துத் துளைத்துச்செல்வாளென்று தோன்றியது.

“தாங்கள் கருவுற்றிருக்கும் செய்தி அஸ்தினபுரிக்கு வந்துசேர்ந்தபோது காந்தாரத்து அரசி தன் அருகே நின்றிருந்த தன் தங்கையிடம் ‘நல்லது, வாழ்நாளெல்லாம் நம் மைந்தனுக்கு அகம்படி சேவைசெய்ய ஒருவன் கருக்கொண்டிருக்கிறான் அவன் வாழ்க’ என்று சொன்னாள். அதைக்கேட்டு பிற காந்தாரத்து அரசியரும் சேடிப்பெண்களும் நகைத்தனர் என்று சேடியர் அரண்மனையில் பேசிக்கொண்டனர்” யூபாக்‌ஷர் சொன்னார்.

குந்தி பெருமூச்சுவிட்டு “சூதரே, காந்தாரியின் கருநிறைவுநாள் ஆகிவிட்டதல்லவா?” என்றாள். “ஆம் அரசி… நான் அங்கிருக்கையிலேயே பத்துமாதம் கடந்துவிட்டிருந்தது. ஒவ்வொருநாளும் மருத்துவர்கள் சென்று கருவைநோக்கி மீள்கிறார்கள். கருமுதிர்ந்துவிட்டதென்றும் ஆனால் மண்ணுக்கு வருவதற்கு அது இன்னும் முடிவெடுக்கவில்லை என்றும் அவர்கள் சொன்னார்கள். அரண்மனையின் முன் காஞ்சனம் ஒவ்வொரு கணமும் காத்திருக்கிறது.”

“நான் அஸ்தினபுரியை விட்டுவந்து ஒருமாதமாகிறது அரசி” என்றார் யூபாக்‌ஷர். “அங்கே மைந்தன் பிறந்திருப்பான் என்றே நினைக்கிறேன்.” “இல்லை… பிறந்திருந்தால் மூன்றுநாட்களுக்குள் இங்கே செய்திவந்திருக்கும்” என்றாள் குந்தி. அனகை நீட்டிய பரிசிலை வாங்கி யூபாக்‌ஷருக்கு அளித்து “நலம் திகழ்க! நன்றியுடையேன் சூதரே. இத்தனை தொலைவுக்கு வந்து அனைத்துச்செய்திகளையும் அங்கிருந்து நானே விழியால் பார்ப்பதுபோலச் சொன்னீர்கள்” என்றாள்.

“அரசி, சூதர்கள் விழிகள். உடலின் விழிகள் அருகிருப்பவற்றைக் காட்டுகின்றன. நாங்கள் தொலைவிலிருப்பவற்றைக் காட்டுகிறோம்” என்றார் யூபாக்‌ஷர். “யார் எங்களைக்கொண்டு பார்க்கிறார்கள் என்று நாங்கள் எண்ணுவதில்லை. அதன்மூலம் என்ன நிகழ்கிறது என்று கணிப்பதுமில்லை. எங்களிடம் மந்தணமும் மறைவுப்பேச்சும் இருக்கலாகாது. நாங்கள் சொற்களின் ஊர்திகள் மட்டுமே” என்று பரிசிலை கண்களில் ஒற்றிக்கொண்டு “வெற்றியும் புகழும் கொண்ட நன்மகவு நிகழ்க!” என்று வாழ்த்திவிட்டு பின்பக்கம் காட்டாமல் விலகிச் சென்றார்.

குந்தி நிறைவயிற்றை வலக்கையை ஊன்றி மெல்லத் தூக்கி கால்களை விரித்து எழுந்தபோது கால்களின் நடுவே கருவாசலில் நீரின் எடை அழுத்துவதுபோல உணர்ந்தாள். அனகை கைநீட்ட மெல்லப் பற்றிக்கொண்டு “நான் நீர்கழிக்கச் செல்லவேண்டும்” என்றாள். “ஆம் அரசி” என்று அனகை அவளை அழைத்துச்சென்றாள். செல்லும்போது அவளுக்கு மூச்சுவாங்கியது. “அப்படியென்றால் பதினொரு மாதமாகிறது காந்தாரியின் கருவுக்கு… இன்னும் ஏன் மைந்தன் பிறக்கவில்லை?” என்றாள். அனகை “சில கருக்கள் சற்றுத் தாமதமாகலாம் அரசி” என்றாள். “தீக்குறிகள் உள்ளனவோ அன்றி கதையோ தெரியவில்லை. ஆனால் மக்கள் அஞ்சுகிறார்கள் என்பது உண்மை” என்றாள் குந்தி. “ஆம்” என்று அனகை சொன்னாள்.

“நமது மைந்தனுக்கு நாம் பும்ஸவனச் சடங்கை செய்யவில்லை அல்லவா?” என்றாள் குந்தி. “அரசி, நாம் அரசமைந்தனுக்குரிய பும்ஸவனத்தை செய்யவில்லை. ஆகவே குருதிக்கொடையும் மன்றுஅமர்தலும் நிகழவில்லை. அரசர் நம் மைந்தன் வேதஞானம் கொண்ட முனிவராகவேண்டும் என்றே விரும்புகிறார். வைதிகமைந்தனுக்குரிய பும்ஸவனம் தென்னெரி மூட்டி அவியளித்து நிகழ்த்தப்பட்டது” என்றாள் அனகை. “ஆம், அவன் மரவுரியன்றி ஆடையணியலாகாது. அரணிக்கட்டையன்றி படைக்கலம் ஏந்தக்கூடாது. சடைக்கொண்டையன்றி முடிசூடவும் கூடாது என்றார் அரசர்” என்றாள் குந்தி, மூச்சிரைக்க தன் முழங்காலில் கைகளை ஊன்றி நடந்தபடி.

சோலைவழியில் மெல்ல காலடி எடுத்துவைத்து நடந்த குந்தி மூச்சிரைப்பு அதிகரித்து கழுத்து குழிந்து இழுபட வாயை குவியத்திறந்து நின்றாள். மேலுதட்டில் கொதிகலத்து மூடி போல வியர்வை துளித்தது. “நான் எப்படி இருக்கிறேன்? என் கால்களும் சற்று வீங்கியிருக்கின்றன, பார்த்தாயா?” அனகை புன்னகைத்தபடி “இந்த அளவுக்காவது பாதங்கள் வீங்கவில்லை என்றால் அது கருவுறுதலே அல்ல அரசி… அஞ்சவேண்டியதில்லை. நான் இன்றுவரை இத்தனை இலக்கணம்நிறைந்த கருவைக் கண்டதும் கேட்டதுமில்லை.” என்றாள். குந்தி “ஆம், அப்படித்தான் மருத்துவரும் சொன்னார்” என்றாள்.

“என் கனவுகள் என்ன என்று மருத்துவர் கேட்டார்” என்றாள் குந்தி. “என் கனவில் நீலநிறமான மலர்கள் வருகின்றன. குளிர்ந்த மழைமேகங்கள், இளந்தூறலில் சிலிர்த்து அசையும் குளிர்ந்த சிறுகுளங்கள், நீலநிறமாக நீருக்குள் நீந்தும் மீன்கள்…” குந்தி மூச்சிரைத்தாள். “இன்று சற்று அதிகமாகவே மூச்சிரைக்கிறது அனகை” என்றாள். அவள் உடலெங்கும் பூத்த வியர்வை காற்றில் குளிர்ந்தது. முதுகின் வியர்வை ஓடை வழியாக வழிந்து ஆடைக்குள் சென்றது. வியர்வையில் தொடைகள் சிலிர்த்ததன. நிற்கமுடியாமல் கால்கள் வலுவிழந்தன. “அப்படியென்றால் பேசவேண்டியதில்லை… குடிலுக்குச் செல்வோம்” என்றாள் அனகை. “பெரிதாக ஒன்றுமில்லை. அதிகநேரம் கதைகேட்டு அமர்ந்துவிட்டேன்… ஆனால் என் நீர்அழுத்தம் நின்றுவிட்டது… வியப்பாக இருக்கிறது.”

அனகை “சற்று விரைவாக நடக்கலாமே அரசி” என்றாள். “ஒன்றுமில்லை எனக்கு… இன்று அதிகாலையிலேயே விழித்துக்கொண்டேன். கருத்தாங்கத் தொடங்கியதுமுதல் நான் முன்னிரவில் இருமுறை விழித்துக்கொள்வதுண்டு. ஆகவே அதிகாலையில் நன்கு துயின்றுவிடுவேன். இன்று காலை விழிப்பு வந்ததும் விடிந்துவிட்டதா என்று பார்த்தேன். வெளியே பறவை ஒலிகள் இல்லை. புரண்டுபடுத்தபோது வயிற்றின் எடையை உணர்ந்தேன். நீரை அழுத்தமாக நிரப்பிய தோல்பைபோல. நீர் உள்ளே குமிழியிட்டு அசைவதுபோல. கண்களைமூடிக்கிடந்தபோது ஆழமான தனிமையுணர்ச்சியை அடைந்தேன்.”

ஓவியம்: ஷண்முகவேல் [பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

“நான் அருகில்தானே படுத்திருந்தேன் அரசி?” என்றாள் அனகை. “ஆம்… தனிமையுணர்ச்சி அல்ல அனகை… இது ஒருவகை வெறுமையுணர்ச்சி. பொருளின்மையுணர்ச்சி என்று இன்னும் சரியாகச் சொல்லலாமோ. ஒன்றுமில்லை ஒன்றுமில்லை என்று அகம் சொல்லிக்கொண்டிருந்தது. ஒருகணத்தில் உளமுருகி அழத்தொடங்கினேன். என் செயலில்லாமலேயே அழுதுகொண்டிருந்தேன். அழுது அழுது ஓய்ந்தபோதுதான் முதல்பறவையின் ஒலி கேட்டது. ஒரு சிறுபறவை. அதன் அன்னை ஏதோ சொன்னது. பின்னர் பல பறவைகள் ஒலிக்கத் தொடங்கின” குந்தி மூச்சிரைத்து “என் வயிறு தனியாக அசைவதுபோல இருக்கிறது” என்றாள்.

குந்தி அவளை அறியாமலேயே அமர்ந்துகொள்வதற்கு இடம்தேடுவது போல கையால் துழாவினாள். கையில் பட்ட அடிமரத்தை மெல்ல பற்றிக்கொண்டு நின்றாள். “ஒவ்வொருநாளும் உடலின் எடை மாறிவிடுகிறது. அதற்கேற்ப கால்கள் பழகுவதற்குள் எடை இன்னொருபக்கமாகச் சென்றுவிடுகிறது…” என்றாள். “இது உங்களுக்கு முதல் கரு அல்லவே” என்றாள் அனகை. “ஆம், ஆனால் நான் அச்சத்தைமட்டுமே முதல்கருவில் அடைந்தேன். இம்முறை விந்தையை மட்டும் அறிகிறேன்…”

கால்களை இழுத்து இழுத்து வைத்து நடந்த அவள் வாய் திறந்து “ஆ!” என்றாள். “என் வயிற்றுக்குள் அவன் உதைப்பது போல உணர்ந்தேன்!” வயிற்றுக்குள் நிறைந்திருந்த திரவத்தில் சிறிதும் பெரிதுமான குமிழிகள் மிதந்து சுழித்தன. ஒன்றுடன் ஒன்று மோதி உடைந்தன. மிகப்பெரிய கொப்புளம் ஒன்று உடைந்ததுபோது குந்தி தன் கால்களுக்கு நடுவே வெம்மையான கசிவை உணர்ந்தாள். “என்னால் முடியவில்லை அனகை” என்றாள்.

“சற்று தொலைவுதான் அரசி… அப்படியே சென்றுவிடலாம். அமர்ந்தால் மீண்டும் எழ நேரமாகிவிடும்” என்றாள் அனகை. “ஆம்… என் கால்களில் நரம்புகள் தெறிக்கின்றன… இன்றுகாலை எழுந்ததுமே மனம் ஒழிந்துகிடப்பதுபோல உணர்ந்தேன். சொற்களெல்லாம் அந்த வெறுமையில் சென்று விழுவதுபோலத் தோன்றியது. மீண்டும் அழுகை வருவதுபோலிருந்தது” என்றாள் குந்தி. அவளை மீறி கண்களில் கண்ணீர் வர விம்மிவிட்டாள்.

“அரசி…” என்றாள் அனகை. “ஒன்றுமில்லை… ஏனோ அழுகை வருகிறது. என் அகம் என் கட்டுக்குள் இல்லை” என்றபடி குந்தி உதடுகளைக் கடித்தாள். கழுத்துச் சதைகள் இறுகின. ஆனால் உதடுகளை மீறி அழுகை வெளியே வந்தது. “ஆ” என்றாள். “என்ன ஆயிற்று அரசி?” என்றாள் அனகை. “கல்லை மிதித்துவிட்டேன். சற்று கால் தடமிழந்தது.” பின்பு அவள் நின்று “இல்லை அனகை. நான் எதையும் மிதிக்கவில்லை. என் வலதுகால் நரம்பு இழுபட்டு வலிக்கிறது” என்றாள். “நான் அந்த மரத்தடியில் சற்றே அமர்கிறேன்.”

“இருங்கள் அரசி” என்றபடி அனகை ஓடிச்சென்று அங்கே கிடந்த பெரிய சருகுகளை அள்ளி மெத்தைபோலப் பரப்பினாள். அதன்மேல் இலைகளை ஒடித்துப்பரப்பிவிட்டு “அமருங்கள்” என்றாள். குந்தி அனகையின் கைகளைப்பற்றி கால்களை மெல்ல மடித்து அமர்ந்துகொண்டாள். “என் தோளில் ஒரு சுளுக்கு விழுந்தது போலிருக்கிறது” என்றாள். “சுளுக்கு விலாவுக்கு நகர்கிறது அனகை.” அனகை பரபரப்புடன் “இங்கேயே சற்றுநேரம் படுத்திருங்கள் அரசி. நான் குடிலுக்குச் சென்று வருகிறேன்…” என்றபடி திரும்பி ஓடினாள். “ஏன்… எனக்கு ஒன்றுமில்லை. ஒரு சுளுக்குதான்…”

அனகை திரும்பிப்பாராமல் குடிலுக்கு ஓடினாள். அங்கே தினையை முற்றத்தில் காயவைத்துக்கொண்டு கிளியோட்டிக்கொண்டிருந்த மாத்ரியிடம் “உடனே சென்று முனிபத்தினிகளையும் மருத்துவச்சிகளையும் சிராவணத்துக்குச் செல்லும் பாதைக்கு வரச்சொல்லுங்கள் இளைய அரசி… அரசி மைந்தனைப் பெறப்போகிறார்” என்றாள். அங்கே அவள் முன்னரே எடுத்துவைத்திருந்த பொருட்கள் கொண்ட மூங்கில்கூடையை எடுத்துக்கொண்டு வெளியே ஓடினாள். ஒருகணம் திகைத்து நின்ற மாத்ரியும் மறுபக்கம் ஓடினாள்.

சிராவணத்தை நோக்கி மூச்சிரைக்க ஓடியபோது அனகை தன் அகம் முழுக்க பொருளில்லாத சொற்கள் சிதறி ஓடுவதை உணர்ந்தாள். அவ்வெண்ணங்களை அள்ளிப்பற்றித் தொகுக்க முனைந்த தன்னுணர்வு முதலில் கேட்ட அழுகையைத் தவறவிட்டுவிட்டது. அடுத்த கணம் குளிர்நீர் பட்டதுபோல திகைத்து நின்றாள். பின்பு ஓடிச்சென்று குந்தியின் விரித்த கால்கள் நடுவே குனிந்து பார்த்தாள். இலைகளில் நிணநீரும் குருதியும் வெம்மையுடன் சிந்திப்பரவியிருக்க மூடிய குருத்துக் கைகளுடன் நெளிந்த சிறுகால்களுடன் சிவந்த வாய்திறந்து குழந்தை ஓசையின்றி அசைந்து கொண்டிருந்தது.

அனகை அதை மெல்ல தன் கையில் எடுத்து தலைகீழாகத் தூக்கி அசைத்தாள். சிறுமூக்கைப்பிழிந்து உதறியபோது குழந்தை அழத்தொடங்கியது. அவள் அதன் உடலின் வெண்நிண மாவை மென்பஞ்சால் துடைத்து கருக்கொடியை வெட்டி தொப்புளருகே மடித்து குதிரைவால்முடியால் கட்டித் தூக்கி தாயின் அருகே படுக்கவைத்தாள். கீழிருந்த பனிக்குடத்தை அவள் அகற்றமுற்பட்டபோது மருத்துவச்சிகள் ஓடிவருவதைக் கண்டாள்.

குழந்தையின் அழுகைக்குரல் கேட்டு குந்தி விழித்து மயக்கம் படர்ந்த கண்களால் “எங்கே?” என்றாள். “அதோ உங்கள் அருகேதான்” என்றாள் அனகை. குந்தி திடுக்கிட்டு ஒருக்களித்து குழந்தையைப் பார்த்தாள். அதை மெல்ல அள்ளி தன் முலைகளுடன் அணைத்தபின் முலைக்காம்பை கிள்ளி இழுத்து அதன் சிறிய வாய்க்குள் வைத்தாள். அழுதுகொண்டிருந்த குழந்தை முலையைக் கவ்வும் ஒலி மொட்டுகள் வெடித்து மலரும் ஒலி என அனகை எண்ணிக்கொண்டாள்.

சதசிருங்கத்தின் பனிமலைகளுக்குமேல் விண்ணில் நீண்டு ஒளிரும் வாலுடன் ஒரு விண்மீன் தோன்றியது. சிலகணங்களுக்குப்பின் அது வெண்மேகத்தில் மறைந்துகொண்டது. அதை எவருமே காணவில்லை. “அனகை” என்று மெல்லிய குரலில் குந்தி கேட்டாள். “ஷத்ரிய முறைப்படிப் பார்த்தால்கூட இவன்தான் குருகுலத்திற்கு மூத்தவன். அரியணைக்கு உரியவன், இல்லையா?”

முந்தைய கட்டுரைசிறகு
அடுத்த கட்டுரைசங்கரப் புரட்சி