மதிப்பிற்குரிய திரு.ஜெயமோகன்,
வணக்கம்.
இந்துத்துவ அறிவியக்கம் என்பது ’ஐரோப்பியவெறுப்பில் தொடங்கி மெல்லமெல்ல தாங்கள் சார்ந்துள்ள குழுவுக்கு வெளியே அனைவரையும் வெறுப்பதில் சென்று’ முடிவதாகவும் ’இந்துத்துவர்களால் பௌத்ததையும் சமணத்தையுமே ஏற்றுக்கொள்ளமுடியவில்லை’ என்றும் கூறியுள்ளீர்கள். இது தவறானது. இந்துத்துவ அறிவியக்கம் ஆழமான வரலாற்று தத்துவ சமூக வேர்களை கொண்டது. துரதிர்ஷ்டவசமாக ஹிந்துத்துவத்தையும் ஹிந்து ஆசாரவாதத்தையும் வேண்டுமென்றோ அல்லது தெரியாமலோ குழப்பிக் கொள்ளும் ஒரு அரசியல் திட்டவட்டமாக நேருவால் முன்னெடுக்கப்பட்டது. டாக்டர். அம்பேத்கரின் ஹிந்து சிவில் சட்ட முன்வரைவை வைத்து அதை நேரு சாமர்த்தியமாக செயல்படுத்தினார். அந்த வலையில் அன்றைய இந்துத்துவர்கள் வீழ்ந்தனர். அதற்கு அவர்கள் பெரியவிலை கொடுக்க வேண்டி இருந்தது.
ஆனால் இந்துத்துவ அறிவியக்கம் சாதித்தவை மகத்தான சாதனை இன்று லகுவாக இயற்கையாக எடுத்துக் கொள்ளப்படும் பல விசயங்களுக்கு நாம் இந்துத்துவ அறிவியக்கத்துக்கு கடமைப்பட்டிருக்கிறோம். அதில் மிகவும் முக்கியமானது ஹிந்து எனும் பெயருக்கான வரையறை. 1941 இல் பாபா சாகேப் அம்பேத்கர் தாம் எழுதிய ‘பாகிஸ்தான் குறித்த சிந்தனைகள்’எனும் நூலில் வீர சாவர்க்கரின் இந்து குறித்த வரையறையை இப்படி விளக்குகிறார், ”திரு.சாவர்க்கரை பொறுத்தவரையில் ஹிந்து என்பவன் ‘சிந்து முதல் சமுத்திரம் வரை பரந்த இந்த பாரத பூமியை தன் தந்தையர் பூமியாகவும் புண்ணியபூமியாக -அதாவது தன் சமயத்தின் பிறப்பிடமாக- வும் கருதுபவன் ஆவான். எனவே வைதீகம், சனாதனம், சமணம், பௌத்தம், லிங்காயத் மதம், சீக்கியம், ஆரிய சமாஜம், பிரம்ம சமாஜம், தேவசமாஜம், பிரார்த்தனா சமாஜம், மற்றும் அத்தகைய பாரத மண்ணில் பிறந்த அனைத்து மதங்களையும் சார்ந்தவர்கள் முழுமையாக ஹிந்துக்களே ஆவர்.’
தொடர்ந்து இந்த வரையறை குறித்து பாபா சாகேப் அம்பேத்கர் கூறுவது முக்கியமானது: ”இந்த வரையறையானது மிகுந்த கவனத்துடனும் எச்சரிக்கையுணர்வுடனும் உருவாக்கப்பட்டுள்ளது. இது திரு.சாவர்க்கர் பார்வையில் கொண்டுல்ள்ள இரண்டு விசயங்களை பூர்த்தி செய்யுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. முதலில் இது இந்து எனும் வரையறையிலிருந்து கிறிஸ்தவ முஸ்லீம் பார்ஸி யூத மக்களை விலக்குகிறது. அதற்கு இந்த தேசத்தை புண்ணியபூமியாக கருதுகிறவனே இந்து என்பது வழி வகுக்கிறது. இரண்டாவதாக வேதங்களை ஆதாரப்படுத்தாததால் பௌத்தர்கள், சமணர்கள், சீக்கியர்கள் ஆகியோரை அது (இந்து எனும் வரையறைக்குள்) உள்சேர்க்கிறது. இதன் தொடர்ச்சியாக ஆதிவாசிகள் என அழைக்கப்படுவோரும் மலைவாசிகளும் கூட ஹிந்துக்களே. ஏனெனில் அவர்கள் எவ்விதமான வழிபாட்டு முறையை பின்பற்றினாலும் அவர்களுக்கும் இதுவே புனித பூமி ஏனெனில் இங்குதான் அவர்களின் வழிபாட்டு முறைகள் பிறந்தன.” இந்த வரிகளை 1941 இல் பாபா சாகேப் எழுதுகிறார்.
ஆண்டுகளுக்கு பின்னர் பாபா சாகேப் அம்பேத்கர் உருவாக்கிய ஹிந்து சிவில் சட்ட முன்வரைவில் இந்து என்பதற்கான வரையறையை பாபா சாகேப் அம்பேத்கர் இவ்விதமாக விளக்குகிறார்: “This Code applies, (a) to all Hindus, that is to say, to all persons professing the Hindu religion in any of its forms or developments, including Virashaivas or Lingayatas and members of the Brahmo, the Prarthana or the Arya Samaj; (b) to any person who is a Buddhist, Jaina or Sikh by religion; (c) (i) to any child, legitimate or illegitimate, both of whose parents are Hindus within the meaning of this section. (ii) to any child, legitimate or illegitimate, one of whose parents is a Hindu within the meaning of this section; provided that such child is brought up as a member of the community group or family to which such parent belongs or belonged; and (d) to a convert to the Hindu religion. This Code also applies to any other person, who is not a Muslim, Christian, Parsi or Jew by religion.”
இந்துத்துவ அறிவியக்கமே இன்றைய இந்திய அரசியல் நிர்ணய சட்டத்தில் உள்ள இந்து எனும் வரையறைக்கான சட்டகத்தை அளித்தது. இது சாதாரணமான ஒரு சாதனை அல்ல. இதனுடைய சமூக விளைவுகள் முக்கியமானவை. குஜராத்தில் உள்ள சுவாமி நாராயண் அமைப்பினர் தாங்கள் ஹிந்துக்கள் அல்ல எனவே தங்கள் கோவில்களுக்குள் தலித்துகள் நுழையமுடியாது என கூறி வழக்காடிய போது இந்த இந்துத்துவ அடிப்படையிலான ஹிந்து வரையறையின் மூலமாகத்தான் சுவாமி நாராயண் அமைப்பினர் இந்துக்களே என்றும் எனவே அவர்கள் கோவில்களுக்குள் தலித்துகள் செல்வதை தடுக்கக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி சமூகநீதியை நிலை நாட்டியது. இது ஒரு உதாரணம் மட்டுமே. இன்று இந்திய ஜனநாயகத்தில் taken for granted ஆக இருக்கும் பல முற்போக்கு செயல்பாடுகளின் வேர்களில் ஹிந்துத்துவர்களின் அறிவியக்கம் மட்டுமல்ல கடும் உழைப்பும் தியாகமும் கூட இருந்துள்ளது. பெண்களின் திருமண வயது முதல் தென்னாப்பிரிக்க நிறவெறி அரசுக்கு எதிராக சர்வதேச அரங்கில் குரல் எழுப்பப்பட்டது வரையாக ஹிந்துத்துவ அறிவியக்கத்தின் பங்கு ஒழுங்காக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவே இல்லை. நேருவியத்தின் ஸ்டாலினிய பரிமாணம் அது.
ஏதோ ஒரு பெயர் தெரியாத அல்லது சொல்லமுடியாத ஒரு அசட்டு பிராம்மண மேட்டுமைவாதி ஒருவர் கூறிய பதில் அல்ல ஹிந்துத்துவ அறிவியக்கத்தினை அளவிடுவதற்கானது. உதாரணமாக மறைந்த தலித் தலைவரான சூரஜ் பான் இந்திய அரசின் எஸ்.ஸி எஸ்.டி கமிஷன் தலைவராக செயல்பட்டவர். அந்த கமிஷனின் தலைவர்களாக செயல்பட்டதில் தலித் நிலவுரிமை மீட்பில் முக்கிய செயலாற்றியவர் சூரஜ் பான் அவர்கள். அவர் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகர். சாதிய தலித் எதிர்ப்பு கருத்துகள் இந்து மறைநூல்களில் இருப்பின் அந்த நூல்கள் புறந்தள்ளப்பட வேண்டும் அல்லது மாற்றப்பட வேண்டும் என அவர் கூறினார். இதற்கு இந்து ஆச்சாரியர்களின் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பிய போது சூரஜ் பான் அவர்கள் கூறியது சரியே என குரல் கொடுத்தவர் விசுவ இந்து பரிஷத் அமைப்பின் அசோக் சிங்கல் அவர்கள். அவரது நூலில் சிங்கல் மனு ஸ்மிருதி என்பது தூக்கி எறியப்பட வேண்டிய ஒரு நூல் என்றும் அது புஷ்யமித்ர சுங்கரின் காலத்துக்கு பிறகு உருவானது என்றும் கூறுகிறார்.
இதையே பாபா சாகேப் அம்பேத்கரும் கூறுகிறார். அதாவது பாபா சாகேப் அம்பேத்கரின் வரலாற்று பார்வை இந்துத்துவ அறிவியக்கத்தால் ஏற்கப்படுகிறது. அருண் ஷோரி பாபா சாகேப் அம்பேத்கரை தாக்கி எழுதிய போது ஆர்.எஸ்.எஸ் அறிவுஜீவி அமைப்பு ‘அருண் ஷோரியின் அம்பேத்கரும் தேசபக்த அம்பேத்கரும்’ என நீண்டதொரு மறுப்பை வெளியிட்டது. அருண் ஷோரியை ஆதரிக்கவில்லை. காந்திய சிந்தனையை சரியான முறையில் முன்னெடுத்தவர்களும் இந்திய வரலாற்றை காந்திய பார்வையில் அறிவதற்கான ஒரு சட்டகத்தை அமைத்தவர்களும் ஹிந்துத்துவர்களே.
தரம்பாலும் ராம் ஸ்வரூப்பும் தீன் தயாள் உபாத்யாயாவும், கேவல்ராம் மல்கானியும், நானாஜி தேஷ்முக்கும் இந்த விஷயத்தில் ஆற்றிய பணி முக்கியமானது காந்திய சிந்தனையின் அடுத்த கட்ட பரிபூரண வளர்ச்சிக்கு இன்றியமையாதது இவர்களின் பங்களிப்புகள். இப்பங்களிப்புகள் குளிர்பதன அறைகளுக்குள் உறைந்துவிட்ட சிந்தனைகளும் அல்ல. அவை களத்திலும் செயல்படுத்தப்படுகின்றன. ஷுமேச்சருக்கு குறைந்தது பத்தாண்டுகளுக்கு முன்பாக ராம் ஸ்வரூப் காந்திய பொருளாதாரத்தின் இயற்கை வள பேணும் தன்மை குறித்து விரிவாக எழுதியுள்ளார். இன்று மேற்கில் நியூரோதியாலஜி என அறியப்படும் அறிதல் புலத்தின் பல முன்னகர்வுகளையும் சட்டக கட்டமைப்பையும் ராம் ஸ்வரூப்பின் எழுத்துகளில் நீங்கள் காண இயலும்.
இறுதியாக தங்களிடம் வினா எழுப்பியவர் கூறுகிறார்: ‘முரளி மனோகர் ஜோஷி போன்றவர்கள் நடத்தை கோமாளித்தனமாகவே இருந்தது’. நேருவிய-மார்க்ஸிய இடதுசாரி ஊடக பரப்புரை பிம்பமே இது. நிதி பற்றாக்குறையால் தத்தளித்து கொண்டிருந்த பல்கலைக்கழகங்கள் அன்றைக்கு ஜோதிடத்தை ஒரு பாடமாக ஏற்றுக் கொள்வது குறித்து யூஜிஸி எடுத்த முடிவு ஏதோ இந்துத்துவ போலி அறிவியல் என இடதுசாரிகள் தொடர்ந்து குரல் எழுப்பினர். அப்போது ‘இந்தியா டுடே’ இதழ் ஜோஷியை பேட்டி கண்ட போது ஜோஷி ஜோதிடத்தை போலி அறிவியல் என்றோ அல்லது அறிவியல் என்றோ சொல்லவில்லை. ஆனால் இந்த முடிவு தன்னுடையது அல்ல என திட்டவட்டமாக அறிவித்தார். ஜோதிடம் மதுரை பல்கலைக்கழகம் உட்பட பல பல்கலைக்கழகங்களில் பல்லாண்டுகளாக பட்டய படிப்பு பாடமாக இருந்து வருகிறது.
ஆனால் ஜோஷியின் உண்மையான பங்களிப்பு என்ன? இந்தியா போன்ற நாடுகளிலிருந்து மேற்கத்திய நாடுகளின் பெரும் கம்பெனிகளால் செய்யப்படும் உயிரி-வள கொள்ளையை (bio-piracy) பெரிய அளவில் தடுத்துக் கொண்டிருக்கும் மரபுசார் அறிவுக்களஞ்சிய மின்னணு சேகரம் (பார்க்க http://drmmjoshi.in/blending-traditional-wisdom-modern-science/) முரளி மனோகர் ஜோஷியின் சுதேசி பார்வையின் பங்களிப்பு ஆகும். அன்றைய இந்திய விண்வெளி அமைப்பின் தலைவரான கஸ்தூரி ரங்கன் சந்திரனுக்கு ஆய்வுகலத்தை மிக சிக்கனமாக செலுத்த இந்தியாவில் முடியும் என ஒரு உரையில் கூறியதை ஒரு செயல்திட்டமாக மாற்றியதும் ‘கோமாளி’ என இடதுசாரி பரப்புரையால் பட்டம் சூட்டப்பட்ட அதே ஜோஷிதான் (http://www.hindustantimes.com/india-news/pokhran-ii-to-chandrayaan-i/article1-346524.aspx)
இந்துத்துவ அறிவியக்கத்தில் நீங்கள் சுட்டிக்காட்டியுள்ள பிரச்சனைகள் இல்லாமல் இல்லையா? ஆம் இருக்கின்றன. அவை பேசப்பட வேண்டும் விவாதிக்கப்பட வேண்டும். இயக்கச்சுவர்களுக்குள் இல்லாமல் வெளிப்படையாக கூட அவை செய்யப்பட வேண்டும். ஆனால் அந்த பிரச்சனைகள் மட்டுமே இருக்கின்றன அவற்றைத் தாண்டி வேறெதுவும் இல்லை என்பது சரியல்ல. என்பதை சுட்டிக்காட்டவும், தேச கட்டமைப்பில் இந்துத்துவ அறிவியக்கத்தின் பங்களிப்பு சாதாரணமானதும் அல்ல என்பதையும் சுட்டவே இக்கடிதம்.
மட்டுமல்ல நேருவிய/மார்க்சிய அறிவுஜீவிகளுக்கு கிடைத்த நிறுவன ரீதியிலான அல்லது சோவியத் பிரச்சார தளங்கள் அமைத்து கொடுத்த சவுகரியங்களும் இந்துத்துவர்களுக்கு இருந்ததில்லை. இந்துத்துவ அறிவியக்கத்துக்கு பெரிய அளவில் பரப்புரை வெளி இல்லை என்பது உண்மைதான். அப்படி ஒரு அறிவியக்கம் இல்லை என்பது போலவும் ஒரு தொகாடியாவோ அல்லது ஒரு வினய் கட்டியாரோ ஹிந்துத்துவ குரல் என மீண்டும் மீண்டும் காட்டப்படுவதும் உண்மைதான். அத்தகைய மூட மூர்க்க குரல்கள் இடதுசாரிகளில் இல்லையா? ஆனால் அங்கே மட்டும் ஒரு தாமோதர் கோசாம்பி காட்டப்படுவார்.
முன்பு ராமஜென்மபூமி குறித்து முக்கியமான இடதுசாரி ஆவண பட இயக்குநர் எடுத்த ஒரு ஆவணப்படத்தை பார்த்தேன். ராமஜென்மபூமியின் உண்மையில் கோவில் இருந்ததா என ரொமிலாதப்பார் டி.என்.ஜா போன்ற இடதுசாரி வரலாற்றாசிரியர்களை கேட்கிறார்கள். அவர்கள் அப்படி கோவில் இருக்கவில்லை என அவர்கள் தரப்பை கூறுகிறார்கள். பின்னர் இங்கே கரசேவகர்களின் தலைவர்களாக இருக்கும் வினய் கட்டியார் போன்றவர்களை கேட்கிறார்கள். இவர்களோ உணர்ச்சி பொங்க பேசுகிறார்கள். இரண்டு பக்கமும் காட்டி ஒரு பக்க தரப்பை கூறும் கலை இது. ஆனால் இந்து தரப்பில் அகழ்வாராய்ச்சியாளர் எஸ்.பி.குப்தா பேரா.பி.பி.லால், ஆகியோரிடம் கேட்கப்பட மாட்டாது. இந்துத்துவ – இடதுசாரி அறிவியக்க ஒப்பிடுதல்களிலும் பெரும்பாலும் நடப்பது இதுதான்.
பணிவன்புடன்
அநீ