ஜான்: இன்னொருகடிதம்

அன்புள்ள ஜெயமோகன்,

ஜாண் ஆபிரகாமுடனான உங்களது நேரடி அநுபவம் பற்றிய தகவல்களை படித்தேன். ஜாண் ஆபிரகாம் என்ற பெயரைத் தவிர அவரைப்பற்றிய வேறு எந்த- நல்ல / கெட்ட – தகவல்களோ , போலி அறிவுஜீவிகளின் அவரைப்பற்றிய அதீத அறிமுகங்களோ முற்றிலும் அற்ற ஒரு நிலையில் அவரது இரு படங்களை 90 களின் தொடக்கத்தில் காண நேரிட்டது. ஒரு திரைப்பட சஙத்தில்  ‘ அம்மா அறியான் ‘ படமும் , முன்றில் இலக்கிய நிகழ்வில் ‘அக்ரஹாரத்தில் கழுதையும் பார்த்தேன். என்னைப் பொறுத்தவரையில் இவை இரண்டும் நல்ல படங்கள். நானறிந்த நல்ல சினிமா வரிசையில் வைத்து மறுவாசிப்பு செய்யப் படவேண்டியவை  என்பது என் கருத்து.  அவர் ஒரு கலகக்காரன் என்ற தலைப்பில் மலையாளத்திலிருந்து தமிழில் மொழியாக்கம் செய்யப்படவிருந்த ஒரு புத்தகத்திற்கு முன்பணம் கொடுத்ததோடு சரி. புத்தகமும் கைக்கு கிடைக்கவில்லை அவரது வேறு ப்டங்களையும் நான் பார்த்ததில்லை .  தனது  ஆத்மார்த்த குருவான ரித்விக் கட்டக்போலவே குடியால் தன்னை அழித்துக்கொண்டவர் என அறிவேன். அவரைப்பற்றிய பல அறியாத விவரங்கள் உங்கள் கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கிறது.  ஜாணின் வாழ்வு ஒரு அவலமிகுந்த குடிகாரனின் விளிம்பு நிலை வாழ்வாக இருந்து முடிந்ததை – உங்கள் நேரடி அனுபவங்களை சொல்லியிருக்கிறீர்கள்.

உங்களது கட்டுரை வரிகள் – “ஜானின் சினிமாக்கள் அனைத்துமே எந்தவிதமான பொறுப்பும் பிரக்ஞையும் இல்லாமல் கண்டபடி எடுக்கப்பட்டு கண்டபடி தொகுக்கப்பட்டவை. அவற்றுக்கு கலைரீதியாக எவ்வித மதிப்பும் இல்லை.” – உங்களைப்பொறுத்தவரையில் சரியாக இருக்க்லாம். வாழ்வில் அவர் இருந்தது எப்படியோ. ஆனால் நான் மேற் சொன்ன இரு திரைப்படஙகளும் நான் பார்த்த நல்ல படங்களின் வரிசையையே சாரும். வெயில் மற்றும் தசாவதாரம் பற்றிய உங்கள் கருத்துகளிலும் எனக்கு உடன்பாடில்லை.  எனது கருத்தை இங்கு  சொல்கிறேனேயன்றி உஙள் கருத்தை நான்  ஆமோதிக்காவிடினும், இதில் எனக்கு பிரச்சினை ஒன்றுமில்லை.  சினிமா பார்வை என்பது தனி மனித ரசனையை ஒட்டியது என்பதில் ஐயமில்லை. ஆனால்  கறாராகவும் ஆழமாகவும் , மிகச் சரியாகவும்   வெளிப்படும்  உஙளது இலக்கிய பார்வைகளுடன் எனக்கு மிகுந்த உடன்பாடுண்டு.

நிற்க, ஷாஜியின்  கட்டுரைகள் மிக அற்புதமாக உங்களால்மொழிபெயர்க்கப்படிருக்கின்றன.  தமிழில் ஷாஜியின் எழுத்தை அறிமுகம் செய்ததற்கு மனமார்ந்த நன்றி.

அன்புடன்
ஆனந்த்.
 

அன்புள்ள ஆனந்த்

உங்கள் கருத்து மதிப்பீடும் எனக்கு ஆச்சரியத்தையே அளிக்கின்றன. சரி, என்னசெய்வது? ரசனைகள் பலவிதம் என்று எண்ணிக்கொள்ளவேண்டியதுதான். எனக்கு அப்படங்களைப்பற்றி அசைக்க முடியாத நிராகரிப்பே மனதில் உள்ளது. அவை கலை என்றால் நான் கலை என எண்ணியிருக்கும்  அனைத்துமே கலை  அல்ல என்றாகிவிடும். இன்று வரை நான் குறைந்தபட்ச கலையுணர்வு கொன்டவர்கள் என எண்ணும் எவரும், அவர்களில் பலர் பெரும் திரைப்பட ரசிகர்கள்,  ஜான் ஒரு நல்ல கலைஞன் என்று சொல்லி கேட்டதில்லை. அவர் கலைஞர் என்றால் அடூரும் கெ.ஜி.ஜார்ஜும் கலைஞர்கள் அல்ல. நேரத்தை வீணடித்த முட்டாள்கள். அவரது படங்கள் கலை என்றால் எதை வேண்டுமானாலும் கலை என்று சொல்லலாம்.

ஜெ

அன்புள்ள ஜெயமோகன்,

ஜாணின் மீதான உங்களின் தார்மீக கோபத்தை உணரமுடிகிறது. எனக்கும் இதேமாதிரியான கோபம் தமிழ் சினிமாவை மலினப்படுத்தும் , சினிமாவுக்கு உண்மையில்லாத இயக்குந்ர்கள் அனைவர் மீதும் உண்டு. ஜாணின்  இந்த இரு சினிமாக்களும் பரவலாக மாற்று சினிமா ஆதரவாள்ர்களால் பேசப்படுபவை என்பதே நானறிந்தது. . கலை இலக்கிய பரிச்சயமுள்ள எனது கேரள நண்பர்கள்  ஜாணை உயர்வாக கருதுபவர்களே.  உஙளது கருத்து எனக்கு உடன்பாடில்லையே தவிர இதில் என்ன பிரச்சினை ?  என்னைப் பொருத்தவரையில் , பல ரசனையுள்ள  பார்வைகளை நான் சந்தித்துவருகிறேன். ரேக்கும் கட்டக்குகும் தனித் தனி ரசிகர்கள் உண்டு. ரேயை மலினமாகத் தாக்குவார்கள். என்னைப்பொருத்தவகையில் இருவரும் இந்திய சினிமாவின் இருகண்கள்.

ஏனக்கு மிகவும் பிடித்த சினிமா அறிஞர்/ சினிமா எழுத்தாளர் டேவிட் போர்ட்வெல் , நான் கொண்டாடும் பெர்க்மனையும் , அந்தொனியொணியையும் கிழி கிழியென்று கிழித்துவிடுபவர். நியூயர்க் டைம்ஸ் விமரிசகர்கள் தார்கொவ்ஸ்கியை மிக மலினமாகவே பிரதிபலித்துள்ளனர். இவர்கள் சொல்வதனால்  தார்க்கோவ்ஸ்கியின் சினிமா பற்றிய எனது தனிப்பட்ட ரசனைக்கு எந்த பங்கமும் இல்லை. கோடார்டை ஒரு காலத்தில் எட்டி உதைத்துக்கொண்டிருந்த நான் இன்று அவரை மரியதையுடன் எதிர்கொள்ளுபவன்.   சினிமாவுக்கான மொழி உலகமனைத்தும் ஒன்றுதான் என்பதில் எந்த குழப்பமும் இல்லை. தமிழ் சினிமா தனி இலக்கணம் கொண்டதென நாம் நம்மையே ஏமாறிகொண்டிருக்கிறோம். கடந்த 76 ஆண்டுகளில் ஏற்க்குறைய 4300 படஙளுக்கு மேல் வெளிவந்திருக்கின்றன. எண்ணி 4 அல்லது 5 ப்டஙளுக்கு மேல் இந்திய தரத்துக்கான படங்க்ளை குறிப்பிட்டு சொல்ல முடியாது. நான் சொல்லுவது ஒரிஜினல் கதை மற்றும் காட்சிகளுள்ள திரைப்படங்கள். கதை, காட்சி  திருட்டை இலக்கியத்தில்  ஆதரித்தால் , சினிமாவிலும் அது ஆதரிக்கப் படுவதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. சினிமா பல கலைகளின் சங்கமம். மிக உயர்ந்த ஒரு கலை வடிவமாக அதை எதிர்கொள்ளுவதில் எனக்கு சிரமம் ஏதுமில்லை. . இலக்கியத்துடன் ஒப்பிட்டு பேசுவது சரியா என்பது கேள்விக்குறியான விஷயம். ஆனால் எந்த நல்ல சினிமாவும் ஒரு நல்ல இலக்கிய வாசிப்பின் பாதிப்பை அளிக்க வல்லது , ஏன் ஒர் கவிதையின் அனுபவத்தில் திளைக்கும் நிலைக்கு கொண்டு செல்ல வல்லது என்பதை நான் அனுபவ பூர்வ்மாக அறிவேன். இந்த அளவுக்கு ஜாணின் திரைப்படஙளைக் கூறமுடியாது என்றாலும்  நான் இங்கு குறிப்பிட்ட 2 திரைப்படஙளும்  சினிமாவை நன்கறிந்தவர்களால் சிலாகிக்கப்பட்டவையேயகும். இதுதான் எனக்குத் தெரிந்த உண்மை.

மலையாள சினிமா நம் தமிழ் சினிமாவின் அத்தனை அசிங்கங்களையயுன் சுவீகரித்துவிட்ட போதிலும், வருடத்திற்கு 2 அல்ல்து 3 மிக நல்ல திரைப்படஙகள் வெளிவருவதைப் பார்க்கிறோம். கர்நாடக இசை பற்றி ஒரு சிறந்த  மலையாள இதழில்  எழுதி வந்த எனது 25 வருட கேரள நண்பருக்கு ஜாணைப் பிடிக்கும். அடூர் பிடிக்கது. ஏனக்கு அடூர் மிகவும் பிடிக்கும். அரவிந்தனைப் பொறுத்தவகையில் பிடித்தத்தவை எஸ்த்த்ப்பானும்  சிதம்பரமும் மட்டுமே. அடிக்கடி மலையாள படங்கள் பார்க்க நேரம் ஒதுக்க முடியாவிட்டாலும்   சமீபத்தில் நான் மிகவும் ரசித்த இரண் டு திரைப்படங்கள் ‘பெருமழைக்காலம்’ மற்றும் ‘ஆகாசம்” . நீங்கள் கொடுத்துள்ள மலையாளப்பட பட்டியலை நிதானமாக பார்க்கவேன்டும்.

அன்புடன்
ஆனந்த்.

முந்தைய கட்டுரைஜான் ஆபிரகாம்:மீண்டும் ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைகென் வில்பர், ரமணர், முழுமையறிவு : ஓரு உரையாடல்