எரிமருள் வேங்கை

fire

திருவிளையாடலில் ஆயிரம் பொன் பெற்ற தருமி ஒரு சிறந்த வணிகராக ஆனார். மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு முன்னால் பூசைப்பொருட்கள் விற்கும் கடை ஒன்றைத் தொடங்கி பல்லாயிரம் பொன் ஈட்டினார். அழகிய பெண்ணை மணந்துகொண்டு மாளிகை கட்டி நிறைய மக்களுடன் பல்லக்கும் பரிவட்டமுமாக வாழ்ந்தார்.

ஒருநாள் ஆலயம்தொழவந்த நக்கீரரை அவர் கண்டார். உயிர்த்தெழுந்த பொற்றாமரைக்குளத்தை அடிக்கடி வந்து பார்த்துச்செல்வது அவரது வழக்கம். இருவரும் பிராகாரத்தில் ஒதுங்கி நின்று பேசிக்கொண்டார்கள். தருமி தன்னுள் நீண்டகாலம் இருந்த கேள்வியைக்கேட்டார். ‘திருவிளையாடல் நடந்தது. ஆயிரம் பொன்னும் பெற்றேன். அய்யா, உண்மையிலேயே கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டா?’

ரகசியமாக தருமி சொன்னான் ‘நான் ஈட்டும் பொன்னில் பாதி இதைத்தெரிந்துகொள்வதற்காகவே கணிகையர் தெருவில் வீணாகிப்போகிறது.’ தாடிக்குள் நகைத்த நக்கீரர் சொன்னார் ‘நான் சென்ற வருடங்களில் வாசித்த அனைத்து நூல்களும் இந்த வினாவுக்கு விடைதேடித்தான்.’ ’உங்கள் முடிவென்ன புலவரே?’ என்றான் தருமி.

’உண்டு என்கிறது கவிதை. இல்லை என்கிறது அறிவு. ஆனால் விடைமீது செம்பொன் மேனியன் என அறிவின் மீதமர்ந்திருக்கிறது கவிதை. பூத்தகாடு தேன்கொண்டிருப்பதுபோல கவிதையை தேக்கியிருக்கிறது அறிவு’ ‘நீங்கள் எம்முடிவை வந்தடைந்தீர்கள்?’ ‘நான் வேழம். காட்டையே உண்ணமுடியும். தேன்சுவை அறியமுடியாது’ என்றார் நக்கீரர்.

கவிதைக்கு இருபக்கமும் இவர்கள் நின்றுகொண்டிருக்கிறார்கள். சாமானியனும் அறிஞனும். இருவரும் திகைத்து நோக்குகிறார்கள். இது என்ன? நான் புழங்கும் உலகைப்பற்றியது இது, நானறிய முடியாதது என்கிறான் சாமானியன். நான் கற்ற மொழியில் இது அமைந்திருக்கிறது, ஆனால் நான் கற்கமுடியாதது என்கிறான் அறிஞன்.

இந்த மர்மமான, அற்புதமான, முற்றிலும் தேவையற்ற, சற்றும் தவிர்க்கமுடியாத விஷயத்தைப்பற்றி எத்தனையோ பேசப்பட்டிருக்கிறது. எவ்வளவோ விளக்கப்பட்டிருக்கிறது. அனைத்து விளக்கங்களுக்கும் மிக அண்மையில் அது நின்றுகொண்டிருக்கிறது, நிறைக்கமுடியாத இடைவெளியுடன்.

‘கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத்தும்பி
காமம்செப்பாது கண்டது மொழிமோ
நறியியது செறிந்த செறியெயிற்று அரிவை கூந்தலின்
நறியதும் உளவோ நீ அறியும் பூவே

என்னும் இறையனாரின் கவிதையைக்கொண்டே அதை விளக்கலாமே. காட்டை உண்ணும் யானைக்குரியதல்ல கவிதை. கொங்குதேர் வாழ்க்கை கொண்ட அஞ்சிறைத் தும்பிக்கு உடையது அது. கவிஞனுக்கு இதைவிடச் சிறந்த வரையறை இருக்கமுடியுமா என்ன? காட்டில் உள்ள மலர்களில் ஊறிய தேனை மட்டுமே அருந்தும் சுவை கொண்டது. அந்தத் தேனை நாடிச்செல்வதற்கான அழகிய சிறகுகள் கொண்டது. மலரில் அமரும் சிறகும் மலர்போலவே அமையவேண்டுமென நினைத்தவனாதலால்தானே அவனை நாம் முழுமுதல் கவிஞன் என்கிறோம்.

ஆம், வாழ்க்கை அல்ல, வாழ்க்கையின் சாரமென ஊறும் தேன் மட்டும் போதும் அவனுக்கு. காட்டை அதன் தேன் வழியாகவே அறிய அவனால் முடியும். அந்தக்காடு அவன் வழியாகவே காய்த்துக் கனிகிறது. ஒரு செடியின் ஆன்மாவை மகரந்தமாக ஆக்கி இன்னொரு செடிக்குக் கொண்டுசெல்லக்கூடியவன் அவன் இல்லையா?

கொங்குதேர்வாழ்க்கை கொண்டிருந்தால் மட்டும் போதாது. காமம் செப்பாது கண்டது மொழியும் நேர்மையும் தேவை கவிஞனுக்கு. உறையுருவப்பட்ட வாளின் சமரசமின்மை. இவ்வாழ்க்கையின் அனைத்து பொய்மைகளுக்கும் அப்பால் நிற்கும் தனிமை. இதன் விருப்புவெறுப்புகளை கடந்த தூய்மை.

அந்தக்கவிஞனிடம்தான் கோரிக்கை வைக்கப்படுகிறது. செறி எயிற்று அரிவை கூந்தலை விட மணம் கொண்ட மலர் உண்டா? எனக் கேட்பவன் காதலன். அவன் அறிந்த மணம் அவனுடைய காதலியான அரிவையின் கூந்தலில் எழுவது.

அதை ‘பெண்ணின் கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டா?’ என்று பொதுமைப்படுத்துவதே அறிவின் இயல்பு. இந்தப்பெண்ணின் கூந்தலுக்கு இயற்கை மணம் இருந்தால் அது அனைத்துப்பெண்களிடமும் இருந்தாகவேண்டும் என அது வாதிடும். அதை இவன் உணர்ந்தால் அனைவரும் உணர்ந்தாகவேண்டும் என அது கோரும்.

நக்கீரரின் அறிவு கோரியது ஓர் புறவய உண்மை. மைதானத்தில் நிற்கும் உண்மை. மேடையேறிய உண்மை. அனைவரும் கேட்கும் உண்மை. அக்காதலன் கவிஞனாகிய தும்பியிடம் கோரியதோ அந்தரங்க உண்மை. அறைக்குள் நிற்கும் உண்மை. அகம் மட்டுமே அறியும் உண்மை.

ஆம் கவிதைக்கும் பிற அறிதல்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு இதுதான். பிற அறிதல்கள் அனைத்தும் புறவயமானவை. கவிதை அகவயமானது. புறவயமான உண்மையின் நுனியில் கனிந்தூறிய அகவயமான உண்மை அது. மரத்தில் ஊறிய தேன் போல.

அந்தக்காதலன் தன் அரிவையின் கூந்தலை அள்ளி முகர்ந்து அடைந்த மனஎழுச்சியின் கணத்தில் அவன் அடையும் உச்சநிலையை கவிதை சென்று தொடுகிறது. அவன் சற்று நேரத்தில் கீழிறங்கி பொது உண்மையின் தரையை தொட்டு விடுவான். அவன் கணவனாக ஆவான். தந்தையாவான். கிழவனாவான். கவிஞன் மட்டும் அந்த உச்சகணத்தில் மட்டும் நின்றுகொண்டிருப்பான். மண்ணுக்கே வராமல் வானிலேயே வாழும் ஒரு பறவை கவிதை. மண்ணிலிருந்து எழுந்து வானைத்தொடுபவர்கள் அதைக் கண்டு மீளமுயலும் அவ்வளவுதான்.

நான் பள்ளியில் படிக்கும்போது ஐந்து மலைக்காணிப்பையன்கள் என்னுடன் படித்தனர். அவர்களும் மலையாளம்தான் பேசுவார்கள். ஆனால் அவர்கள் பேசுவது தனிமொழி. அவர்களுக்கு மட்டுமே புரியும். ஆட்டிலை என்றால் ஆட்டுக்காது. பூவால் என்றால் பூவின் அல்லி. கிணறு தன்னைப்பார்த்தது என்றான் ஒருவன், நான் அவனிடம் கிணற்றில் நீர் இருக்கிறதா என்று கேட்டபோது.

அவர்களின் மொழி முற்றிலும் படிமங்களால் ஆனது. அந்தப்படிமங்கள்கூட எல்லாருக்கும் உரியவை அல்ல. அவ்வப்போது அவர்கள் உருவாக்குவது. மரத்தின் உகிர் என்று அவன் ஒருமுறை சொன்னான். அப்போதுதான் வேரை மண்ணில் கவ்வி ஊன்றி நின்ற மரத்தை ஒரு மாபெரும் பருந்தின் காலாக நான் கண்டேன். அந்தமொழி அவர்களுக்கு புரியும்.

பெரும்பாலும் கவிதையும் அப்படித்தான் இருக்கிறது. கவிஞர்கள் ஒரு தனிக்குழு போல. தமிழகம் என்னும் வகுப்பில் அந்த மாணவர்கள் ஐந்துபேரும் தனியாக இருக்கிறார்கள். அவர்கள் பேசுவது எங்களுடைய அதே மொழிதான். ஆனால் அது மொழிக்குள் வேறு மொழி. தனிமொழி – ஆங்கிலத்தில் மெட்டாலாங்குவேஜ் என்கிறோம்.

ஆம், கவிதை என்பது ஒரு மொழிக்குள் செயல்படும் ஒரு தனிமொழி. அதை வாசிக்க உங்களுக்கு மொழி மட்டும் தெரிந்தால் போதாது. அந்தத் தனிமொழியும் தெரிந்திருக்கவேண்டும். கடல்நீரில் ஒருசதவீதம் கனநீர் இருக்கிறது என்கிறார்கள். ஒரு எலக்டிரான் கூடுதலாக உள்ள நீர் அது. கடல் தன் ஆழத்தின் அழுத்தத்தாலும் வெம்மையாலும் அதை உருவாக்கி வைத்திருக்கிறது. அதைப்போல மொழியும் தன் ஆழத்தால் தனக்குள் ஒரு கனமொழியை உருவாக்கி வைத்திருக்கிறது. ஒரு எலக்ட்ரான் கூடுதலான மொழி. அதுதான் கவிதை.

மொழி இரண்டு வகையில் தொடர்புறுத்துகிறது. இன்னசொல்லுக்கு இன்ன பொருள் என்ற பொதுப்புரிதல் வழியாக அது தொடர்புறுத்தலை நிகழ்த்துகிறது. கண் என்றால் ஓர் உறுப்பைக்குறிக்கும் என சொல்பவரும் கேட்பவரும் அறிவர். அப்படித்தான் நாம் பேசிக்கொள்கிறோம். ஆனால் கூடவே அந்தத் திட்டவட்டத்தன்மையை கலைத்துக்கொண்டும் நாம் தொடர்புறுத்துகிறோம். நகக்கண் என்கிறோம். அகக்கண் என்கிறோம். உறுதியாகச் சொல்லமுடிபவற்றுக்கு அப்பாலுள்ள ஒன்றைச்சொல்வதற்காக உறுதியை அகற்றி சொல்லமுயல்கிறோம்.

இந்த இரண்டாவது செயல்பாடு பொதுவாக இன்றும் பழங்குடிகளிடம் அதிகம். மரத்தில் ஆயிரம் கண் என்று அவர்கள் சொல்வது பழங்களைக் குறிக்கிறது. நாகரீகமடையும்தோறும் நாம் இந்த பொருள்மயக்கத்தை முழுமையாகவே தவிர்க்கமுயல்கிறோம். சட்டம் வணிகம் அரசியல் அறிவியல் போன்றவற்றில் பொருள்மயக்குக்கே இடமில்லை.

அவ்வகையில் பார்த்தால் நாகரீகத்தின் உள்ளே உறையும் பழங்குடித்தன்மைதான் கவிதை. ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரின் நவநாகரீக புழக்கத்தின் நடுவே அங்குள்ள ஆதிவாசி ஒருவர் தன் மாபெரும் குழல்வாத்தியத்தை இசைப்பதுபோல நம் நாகரீக வாழ்க்கையின் நடுவே ஒலிக்கிறது கவிதை.

 

இப்படிச் சொல்கிறேன். ஏற்கனவே இருக்கக்கூடிய அர்த்தங்கள் வழியாக பேசுவதல்ல கவிதை. புதிய அர்த்தங்களை உருவாக்கிக்கொண்டே இருக்கக்கூடியது. மொழி ஒரு கட்டுமானமாக ஆகி உறைந்துகொண்டே இருக்கிறது. மறுபக்கம் அதன் ஒரு பக்கம் உயிர்த்துடிப்புடன் வளர்ந்துகொண்டே இருக்கிறது. பறம்பிக்குளத்தில் ஒரு மரக் குடிலில் ஒருமுறை தங்கினேன். அதன் ஒரு கால் முருக்கமரத்தால் ஆனது. அது முளைத்து கிளைவிரித்து பூத்து நின்றது. அது மட்டும் வளர்ந்துகொண்டிருந்தது. அதுதான் மொழியில் கவிதையின் இடம்.

பழங்குடிப்பாடல்களில் இயல்பாகவே எப்போதும் கவிதை உள்ளது. கையில் உள்ள சொற்களைக்கொண்டு சொல்லமுடியாதவற்றைச் சொல்ல அவர்கள் முயல்கிறார்கள். எங்களூரின் பழங்குடிப்பாடல்

ஆனைகேறா மலையில் ஆடு கேறா மலையில்
ஆயிரம் காந்தாரி பூத்திறங்கி

என்கிறது. யானை ஏறாத மலையாக வரையாடும் ஏறாத மலையாக தெரிவது வானம். அதில் ஆயிரம் சிவந்த காந்தாரி மலர்களாக விண்மீன்கள். இது ஒரு அதீதக் கற்பனை அல்ல. உட்கார்ந்து கண்ட கனவும் அல்ல. எங்களூரின் மேற்கு மலையை கண்ணால் பார்க்கும் குழந்தைகூட இந்த அனுபவத்தை அடையும். நீலநிற அடுக்குகளாக மலைகள். மேலே கருநீல மேக அடுக்குகளும் மலைகள் போலவே தோன்றும். அந்த மலையுச்சியில் ஏறும் ஆடும் ஆனையும் அடுத்த மலையின் மேகப்பாறைகளுக்கு கீழேதான் நிற்க முடியும்!

அங்கிருந்து ஆரம்பிக்கிறது கவிதை. செவ்வியல் கவிதை அந்தப்பழங்குடிக் கவிதைக்கு மிக அருகே நிற்கக்கூடியது. அது கண்ணுக்கும் காதுக்கும் மிக அண்மையானது. கற்பனைக்குப்பதில் நேரடி அனுபவத்தில் உருவாகக்கூடியது. நம் சங்கப்பாடல்கள் அத்தகையவை. அவை ஒருபக்கம் பழங்குடிப்பாடல்களின் உடனடி அனுபவத்தளம் கொண்டவை. புலன் சார்ந்தவை, மறுபக்கம் தேர்ந்த மொழிநுட்பத்துடன் துல்லியமாகச் சொல்லப்பட்டவை.

எரிமருள் வேங்கை இருந்த தோகை
இழையணி மடந்தையின் தோன்றும் நாட

என்று கபிலர் ஐங்குறுநூறில் பாடுகிறார். வேங்கைமரம் நெருப்பு போல பூத்திருக்கும் அனுபவத்தை நான் உண்மையிலேயே அறிந்திருக்கிறேன் . வேங்கை பூக்கும் காலம் இளவேனில். காட்டில் அப்போது காட்டுத்தீ உண்மையான அபாயம். பேச்சிப்பாறைக் காட்டில் பசுமைக்கு அப்பால் நெருப்பைக்கண்டு நான் கைகாட்டி கூவினேன். என் மாடு மேய்க்கும் துணைவர்கள் அது வேங்கை என்று சொல்லி சிரித்தனர். அந்த அனுபவத்தையே கபிலரும் அடைந்திருக்கக்கூடும்.

அதை ‘எரிமருள் வேங்கை’ என சொற்குவிதலாகச் சொல்லி முடிக்க முடிந்தமையால்தான் அவர் கவிஞர். பழங்குடிப்பாடகர்களில் இருந்து கவிஞன் பிறக்கும் தருணம் அது. அவன் சொல்லை தன்னிச்சையாகக் கையாள்பவன் அல்ல. தன் அகத்தைச் சொல்லும்பொருட்டு சொல்பயில்பவன்.

அடுத்தகட்டம் அந்தக் காட்சியை வாழ்க்கையாக விரித்துக்கொள்வது. தீ என பூத்த வேங்கையில் அமர்ந்த மயில்கள் நகைகளை அணிந்த பெண்களைப் போல தோன்றுகின்றன என இன்னொரு காட்சியில் அதை இணைக்கிறார் அவர். அக்காட்சியை வாழ்க்கைச் சித்திரம் ஒன்றுக்கு அருகே கொண்டுவருகிறார். அத்தகைய நாட்டைச்சேர்ந்தவனாகிய நீ அன்று என் தோழியின் கூந்தலில் மலர்சூட்டினாயே என்ற தோழிக்கூற்று அந்த காட்சிக்கு மேலதிகப்பொருளை அளிக்கிறது.

அது தீ போல தோன்றும், ஆனால் மலர்தான். அதைப்போல அந்த ஆண் நெருப்புதான். ஆனால் மலர் நெருப்பு. அவள் அதில் ஏறி அமர்ந்த மயில். இந்தப்பொருளேற்றம் நிகழ்ந்ததுமே ஒன்று உருவாகிறது. அதை நாம் படிமம் -. பொயட்டிக் இமேஜ் என்கிறோம். ஆனைகேறாமலை என்பது வெறும் காட்சி. எரிமருள் வேங்கை என்பது அர்த்தம் ஏற்றப்பட்ட காட்சி. ஆகவே இது படிமம். படிமம் உருவானதுமே கவிதை பிறந்துவிட்டது.

செவ்விலக்கியம் என்பது ஒரு மொழி இலக்கியத்தின் அடித்தளம். மண்ணுக்கு அடியில் உள்ள விதையும் வேரும் நிறைந்த பரப்பு போல. அதிலிருந்து முளைத்தெழுகின்றன இலக்கியத்தின் அனைத்துக்கிளைகளும்.

இவ்வாறு கவிதை உருவாகி வரும் பரிணாமத்தை நாம் நம் வரலாற்றில் காணலாம். சங்ககாலச் செவ்வியல் கவிதையில் ஒவ்வொன்றாக வந்துசேர்கிறது. முக்கியமாக பெருமதங்களின் சிந்தனைகள். சமணம், பௌத்தம், இந்து மதங்களின் சிந்தனைகள் தமிழ்க்கவிதைகளை அடுத்த கட்டத்துக்கு கொண்டுசெல்கின்றன. வாழ்க்கையின் உணர்ச்சிநிலைகளையும் இயற்கை அளிக்கும் மெய்ஞானத்தையும் இணைத்து தங்கள் கவித்தரிசனத்தை முன்வைத்த சங்கக்கவிதைகளில் பெருமதங்கள் இரு அம்சத்தை சேர்க்கின்றன. ஒன்று பொதுஅறம் அல்லது பேரறம் பற்றிய தரிசனம். இரண்டு ஒட்டுமொத்த பிரபஞ்சம் பற்றிய தரிசனம். இவ்விரண்டையும் அன்றாட வாழக்கையில் இணைக்கும்போது உருவாகும் தரிசனமே ஊழ் என்பதாகும்.

சங்கக்கவிதைக்கும் சிலப்பதிகாரத்துக்கும் இடையேயான வேறுபாடு இதுதான். சங்கக்கவிதை மானுட உறவுகளை, மோதல்களை, மரணத்தை பாடும்போது அவற்றுக்கு இப்பிரபஞ்சத்தில் என்ன இடம் என்ற வினாவை காப்பியங்கள் எழுப்பிக்கொள்கின்றன. சிலம்பின் செய்தியே ‘அரைசியல் பிழைத்தோர்க்கு கூற்றாகும் அறம்’ பற்றித்தான் இல்லையா? சங்ககாலக் கவிதைகளின் இறுதிப்பகுதியில் தென்படத்தொடங்கும் இந்த பிரபஞ்ச தரிசனம் காப்பியகாலகட்டத்தில் மிக வலுவாக நிறுவப்பட்டுவிட்டது. ’நீர்வழிப்படூஉம் புணைபோல’ வாழ்க்கை என்ற தரிசனம் அது. மனிதனை பிரபஞ்சவெளிக்கும் காலப்பெருக்குக்கும் முன் நிறுத்தி மதிப்பிடும் நோக்கும்.

திருவள்ளுவர்- ஜைனர்களின் சித்தரிப்பு

இந்தக் கட்டத்தில் கவிதை என்பது மேலும் விரிவாகிறது. ஒரு பிரபஞ்ச தரிசனத்தை முன்வைப்பதும் கவிதையே என்றாகிறது. உயர்ந்த, முழுமையான ஒரு கருத்தை சரியான சொற்களில் வெளிப்படுத்துவதும் கவிதையே என கவிதையின் அடையாளம் விரிவடைகிறது.

கற்றதனால் ஆய பயன் என்கொல் வாலறிவன்
நற்றாள் தொழார் எனின்

என்ற வரி அவ்வாறுதான் கவிதையாகிறது. நம் நீதிநூல்களில் கவித்துவம் என்பது தரிசனத்தின் கவித்துவமே.

ஊருணி நீர் நிறைந்தற்றே உலகவாம்
பேரறிவாளன் திரு

என்ற வரியில் ஒரு அழகிய படிமம் உள்ளது. ஆனால் படிமமே இல்லாத கூற்றுகளும் கவிதைகளே என ஆனது இக்காலகட்டத்தில்தான்.

இவற்றை கவிதையாக்கும் அம்சம் எது? ஒரு படிமத்தை நம் அகம் விரிவாக்கிக்கொள்கிறது. அது ஒரு விதை. அதை நாம் முளைக்கவைத்து நமக்கான காடாக ஆக்கிக்கொள்கிறோம் . அதைப்போல இவ்வரிகளும் நம்முள் விரிவுகொள்ள முடியும். அவ்விரிவு கவிதைக்குரிய தனிமொழியில் நிகழ்கிறது. ஆகவேதான் இது கவிதை.

கற்றதனால் என்ன பயன் கடவுளைத்தொழாவிட்டால் என்றால் அது கவிதை அல்ல. அதிலுள்ள வாலறிவன் என்ற சொல்லே அதை கவிதையாக்குகிறது. அறிவுக்கு அறிவானவன், முதன்மை அறிவைக்கொண்டவன், அறிவேயானவன் வாலறிவன். அந்த அறிவை அறியாவிட்டால் பிற அறிவுகளால் என்ன பயன்? அதுவே அந்தக் கவிதையின் தரிசனம். அவ்வாறு விரிவடைவது பொதுமொழியில் நிகழவில்லை, கவிதையின் தனிமொழியில் நிகழ்கிறது. அந்தத் தனிமொழியை அறியாதவர்கள் கடவுளை கும்பிடாதவன் கற்றுபயனில்லை என்ற எளிய பொருளையே எடுப்பார்கள். அவர்களுக்கு அது நீதி, கவிதை அல்ல.

ஊருணியின் நீர் அந்த ஊருக்குள் பெய்யும் மழை. அந்த ஊரின் ஊற்று. அந்த ஊருணி நிறைவது மழையாலும் ஊற்றாலும். ஆகவே அது ஊருக்குச் சொந்தமானது. அவ்வாறுதான் செல்வனின் செல்வமும். அவனுடையது அல்ல அது. வானமும் மண்ணும் அவனுக்கு அளித்தது அது. ஆகவே அது ஊருக்கு உதவவேண்டும். அந்த ஞானமே பேரறிவு. அப்பேரறிவை உடையவனின் திருவே ஊருணி போல உலகாக்குவது. இந்த வாசிப்பை கவிதையின் தனிமொழி அடைந்தவனே செய்வான். அவனே கவிதைவாசகன். அவனுக்கே இது கவிதை.

மூன்றாவது வளர்ச்சிக்காலகட்டம் செவ்வியலின் முதிர்வுநிலை எனலாம். செவ்வியலின் உச்சம் என்பது இலக்கியம் வழியாக அது அடையும் உச்சப்புள்ளிதான். கவிதைகள் பலநூற்றாண்டுகளாக எழுதப்பட்டுவிட்டன. மெல்லமெல்ல கவிதைக்குரிய தனிமொழி வலுவாகவே நிலைபெற்றுவிட்டது. அந்தத் தனிமொழிக்கு இலக்கணங்களும் வகுக்கப்பட்டுவிட்டன. அதை கவிதை அழகியல் எனலாம். அதன் பின்னர் அந்த அழகியலை நுண்மைப்படுத்தும் ஒரு போக்கு ஆரம்பமாகிறது. கவிதையைக் கற்று அக்கல்வியைக்கொண்டு மேலும் மேலும் நுட்பமாக ஆக்கிக்கொண்டே செல்லும் போக்கு அது. அதுவே அவ்வழகியலின் சிகரத்தைச் சென்று தொடுகிறது. ஆங்கிலத்தில் இம்ப்ரவைசேஷன் என்று சொல்கிறார்கள். எந்தக்கலையும் அதன் அழகியல் முழுமையாக உருவானதும் நுண்மையாக்கத்தில் இறங்கும். ஏழு எட்டாம் நூற்றாண்டில், காப்பியகாலகட்டம் முடிந்தபின் தமிழில் கவிதையழகியல் முழுமை பெற்றுவிட்டது. அதன்பின் நிகழ்ந்தது நுண்மையாக்கம். அந்த நுண்மையாக்கத்தின் உச்சம் கம்பராமாயணம்.

கம்பராமாயணம் அனைத்தையும் செய்துபார்க்கிறது. படிமங்களின் கடல் அது. அறக்கூற்றுகளின் உச்சம் அது. நாடகீயத்தருணங்களின் களஞ்சியம். இங்கே கவிதை அடுத்த கட்டத்தை அடைகிறது. ஓர் உணர்ச்சி மொழியை நேரடியாகவே சந்தித்தால் அது மேலான கவிதை என்றாகிவிடுகிறது. கம்பராமாயணத்தில் அத்தகைய பல்லாயிரம் கவித்தருணங்கள்

இன்று இறந்தன நாளை இறந்தன
என்று திறம் தரும் தன்மை இதால் எனைக்
கொன்று இறந்தபின் கூடுதியோ குழை
சென்று இறங்கி மறம்தரும் செங்கணாய்

என்று ராவணன் சீதையிடம் கேட்கிறான். இன்று இறந்தன நாளை இறந்தன என்றவரியை நான் அர்த்தமே இல்லாமல் அரற்றிக்கொண்டிருந்த நாட்கள் உண்டு. அந்தவரியில் உள்ள உணர்ச்சிகரமான ஒலியிசைவு அதை பெரும் கவிதையாக்குகிறது. சொல்லச்சொல்ல அந்த உணர்ச்சி நாவிலும் நெஞ்சிலும் நிறைகிறது அதுவே அதன் கவித்துவம்.

அந்த உணர்ச்சிகரம் பக்தியுகக் கவிதைகளில் அடுத்தகட்டத்தை அடைந்தது. ஆண்டாளும் நம்மாழ்வாரும் மாணிக்கவாசகரும் எழுதிய பாடல்கள் அவற்றின் உணர்ச்சிகரத்தாலேயே மாபெரும் கவிதைகளாயின.

எறும்பிடை நாங்கூழ் என்ன புலனால் அரிப்புண்டு அலந்த
வெறும் தமியோனை விடுதி கண்டாய்!

என மாணிக்கவாசகர் பாடுகிறார். அழகிய படிமம் ஒன்று இதிலுள்ளது. எறும்புகள் நான்குபக்கமும் கடித்து இழுக்க துடிக்கும் மண்புழு போன்று புலன்களால் தன் ஆன்மா அரிப்புறுவதை சொல்கிறார். நினைக்க நினைக்க விரியும் படிமம். மண்புழு கண்ணற்றது. கைகளும் கால்களும் அற்றது.உள்ளுணர்வால் இயங்குவது. அதைச்சூழ்ந்து எறும்புகள் கவ்வி இழுக்கின்றன.

எறும்புகள் மண்புழுவை இழுப்பதை பார்த்திருக்கிறீர்களா? ஒவ்வொரு எறும்பும் ஒவ்வொரு திசைக்கு இழுக்கும். ஒட்டுமொத்தமாக மண்புழு ஒரு திசை நோக்கிச் செல்லும். அவை இணைந்து இழுப்பதில்லை. அதைப்போன்றே புலன்களும். அவை இணைந்து நம்மை செலுத்துவதில்லை. அவை ஒவ்வொரு திசைக்கும் நம்மை பிய்த்துச்செல்லமுயல்கின்றன.

இந்த விரிவாக்கம் ஒரு கவிதை வாசகனால் மட்டுமே செய்யக்கூடியது. அந்த விரிவாக்கம் செய்யும் திறன் அவன் தமிழில் ஈராயிரமாண்டுகாலமாக மெல்லமெல்ல உருவாகி வந்திருக்கும் கவிதை என்னும் தனிமொழியை அறிந்ததனால் நிகழ்வது. அதைத்தான் கவிதையுணர்வு என்கிறோம்.

மெல்லமெல்ல வளரும் இந்தத் தனிமொழியின் வளர்ச்சியில் கடைசிகட்டம் என சிற்றிலக்கியங்களைச் சொல்லலாம். இக்காலகட்டத்தின் தனித்தன்மை என்பது இதில் மதம் சார்ந்த மெய்ஞானமும் மதம் சார்ந்த படிமங்களும் நிலைபெற்று கவிதைக்குள் வந்து நிறைந்தன என்பதே.

பெருந்தேன் இறைக்கும் நறைக்கூந்தர்
பிடியே வருக முழுஞானப்
பெருக்கே வருக பிறை மௌலி
பெம்மான் முக்கண் சுடர்க்கிடு நல்
விருந்தே வருக!

குமர குருபரரின் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் பாடலை வாசிக்கையில் முக்கண் பெருமான் தன் மூன்றாவது விழியால் பார்த்து ரசிக்கும் அழகுவிருந்து என மீனாட்சியை சொல்கிறார் என அறிபவனே கவிதைவாசகன். முக்கண் திறந்து அவர் தேவியை எரித்தார் என்ற கதையுடன் அவ்வரி இணையவேண்டும். இங்கே கவிதைவாசகன் மதக்குறியீடுகளையும் அறிந்தவனாகிறான். கவிதையின் தனிமொழிக்குள் மதத்தின் குறியீட்டு மொழியும் இணைகிறது.

இவ்வாறு நம் மரபின் கவிதை என்னும் தனிமொழி வளர்ந்து வந்துள்ளது. இயற்கையை அறியும் பழங்குடியின் தூயபிரக்ஞையாக அது இருந்தது. மொழியின் நுட்பமும் வாழ்க்கைதரிசனமும் அதில் கலந்தபோது சங்கச்செவ்வியலாகியது. பெருமதங்களின் பிரபஞ்ச தரிசனத்துடன் முயங்கி காப்பியகாலமாகியது. அறதரிசனங்கள் அதில் கலந்தன. நாடகீய உணர்ச்சிகள் வந்து இணைந்தன, பக்தியின் உணர்ச்சிப்பெருக்கு நிகழ்ந்தது. மதக்குறியீடுகள் கலந்தன. இவையனைத்தும் கலந்து உருவான ஒரு முழுமையான தனிமொழியாக அது நவீனகாலத்தில் நம்மை வந்தடைந்தது.

பதினெட்டாம் நூற்றாண்டில் ஒரு பெரும் மாற்றம் உலகசிந்தனையில் நிகழ்ந்தது. ஐரோப்பா தன் காலனியாதிக்கம் மூலம் உலகை ஒன்றாக இணைக்கத் தொடங்கியது. உலக இலக்கியங்கள் பிறமொழிகளில் மொழியாக்கம் பெறத்தொடங்கின. ஐரோப்பிய மொழிகளான ஆங்கிலம் பிரெஞ்சு ஜெர்மன் ஸ்பானிஷ் மொழிகளில் உலகின் அனைத்து இலக்கியங்களும் வந்துசேர்ந்தன.முதல்முறையாக உலக இலக்கியம் என்ற ஒரு மன உருவகம் உருவானது. ஜெர்மானியப்பெருங்கவிஞரான கதே அச்சொல்லாட்சியை உருவாக்கினார் என்கிறார்கள்.

உலக இலக்கியம் என ஒன்று மெல்லமெல்ல திரண்டு உருவானபின் அது ஐரோப்பிய மொழிகள் வழியாக உலகமெங்கும் உள்ள இலக்கியங்களுக்குச் சென்று சேர்ந்தது. அந்த உலக இலக்கியம் பற்றிய பிரக்ஞையே நவீன இலக்கியத்தை உருவாக்கியது. சாதாரணமாக மேடைகளில் சில பேச்சாளர்கள் கத்துவதை நீங்கள் கேட்டிருக்கலாம். நவீன இலக்கியம் நவீன இலக்கியம் என்கிறீர்களே அது என்னய்யா நவீன இலக்கியம்? எல்லா இலக்கியமும் அந்தந்த காலகட்டத்துக்கு நவீன இலக்கியம்தான் என்றெல்லாம். அந்தப் பாமர வினாவுக்கான பதில் இதுதான். பதினெட்டாம் நூற்றாண்டுவரை ஒரு மொழியின் பெருங்கவிஞன் கூட அம்மொழியும் பண்பாடும் உருவாக்கும் இலக்கியப்பிரக்ஞையை மட்டுமே கொண்டிருந்தான். அவன் மரபான கவிஞன். ஒரு கவிஞனுக்கு உலக இலக்கியம் என்ற அந்த ஒட்டுமொத்தம் பற்றிய ஒரு புரிதல் இருக்குமென்றால், அதன் நீட்சியாக அவன் எழுத முற்படுவான் என்றால் அவன் நவீனக்கவிஞன்.

பாரதி நமது முதல் நவீனக்கவிஞன். அவனுக்கு ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு வழியாக உலக இலக்கியமென்றால் என்ன என்று தெரியும். அதன் நீட்சியாகவே அவன் எழுதினான். அவன் கபிலர் கம்பன் முதலான கவிஞர்களின் வழித்தோன்றல். ஷெல்லியின் வழித்தோன்றலும்கூடத்தான். இதுதான் நவீனக்கவிஞனின் இலக்கணம். எவனுக்கு உலக இலக்கியத்தின் பின்புலம் உள்ளதோ அவனே நவீனக் கவிஞன்.

பாரதி நவீனக் கவிஞன். ஆனால் அவரது சமகாலத்தில் வாழ்ந்த மாம்பழக்கவிசிங்கராயர் நவீனக் கவிஞர் அல்ல. அவர் மரபுக்கவிஞர். பாரதிதாசன் நவீனக்கவிஞர் அல்ல. வேழவேந்தனும் முடியரசனும் சுரதாவும் நவீனக்கவிஞர்கள் அல்ல. அவர்கள் மரபார்ந்த கவிஞர்கள். அவர்களுக்கு உலக இலக்கியப்போக்குகள் தெரியாது. அவர்கள் கற்ற மரபின் வழி நின்று அவர்கள் எழுதினார்கள். இன்றும்கூட அந்தப்பிரிவினை உண்டு. இங்கு இருப்பவர்களிலேயே நவீனக்கவிஞர்கள் உண்டு, பழைய கவிஞர்களும் உண்டு. உங்களுக்கு இன்றைய உலகளாவிய கவிதைப்போக்கு தெரியுமா? உலக இலக்கியத்தின் தளத்தில் நின்று எழுதுகிறீர்களா? அப்படியென்றால் நீங்கள் நவீனக்கவிஞர்.

பாரதிக்குப்பின் நவீனக்கவிதை ந,பிச்சமூர்த்தி வழியாக தமிழில் புதுக்கவிதை என்ற பேரில் உருவாகியது. அது வசனத்தில் எழுதப்பட்டது . இசையற்ற மரபான இலக்கணம் அற்ற கவிதை. க.நா.சு அதை புதுக்கவிதை என்று அழைத்தார் அந்த மரபே இன்றும் தமிழ் நவீனக்கவிதைப் போக்காக தொடர்கிறது.

நவீனக்கவிதையின் இயல்பு என்ன? இப்படிச் சுருக்கமாகச் சொல்கிறேனே. ஒன்று அது நம் மரபு இதுகாறும் திரட்டி எடுத்துள்ள கவிதை என்ற தனிமொழியை மேலும் முன்னெடுக்கிறது. அதாவது அது நேற்று அடைந்தவற்றை திரும்பவும் நிகழ்த்தவில்லை. அதை வளர்த்து மேலே கொண்டுசெல்ல முயல்கிறது.

சங்ககாலம் முதல் தமிழ்க்கவிதை சொல்வதல்ல, குறிப்புணர்த்தலே கவிதை என்று நம்பிவந்தது. கவிதை என்பது மறைபொருள் என வகுத்தது. இறைச்சி என்றும் அணிகள் என்றும் பெயரிட்டது. அதை அறிய கொண்டுகூட்டிப்பொருள் கொள்ளுதல் போன்ற பல வழிகளை உருவாக்கியது. அவ்வாறு சொல்லப்படாத அர்த்தங்களை சொல்மூலம் உருவாக்குவதே கவிதையின் தனிமொழி.

நவீனக்கவிதை அந்தத் தனிமொழியை முன்னெடுக்கிறது. நவீனக்கவிதை புரியவில்லை என்று சொல்லும் தமிழாசிரியர்களிடம் நான் மரபுக்கவிதை மட்டும் புரிகிறதா என்று கேட்பேன். மரபுக்கவிதை அவர்களுக்குப் புரியவில்லை, அதன் பொழிப்புரையைத்தான் அவர்கள் அறிவார்கள். புறநாநூறோ திருக்குறளோ ஒருவருக்கு உரையில்லாமல் புரியும் என்றால் புதுக்கவிதையும் புரியும். ஏனென்றால் அவர் தமிழ்க்கவிதை என்ற தனிமொழிக்குள் இருக்கிறார். பொழிப்புரைதான் புரியும் என்றால் அவருக்கு நவீனக்கவிதை புரியாது.

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்று அதன்
குத்தொக்க கூர்த்த இடத்து

இந்தக்குறள் ஒருவனுக்குப் புரிகிறதா? பொழிப்புரை தெரிந்துவைத்திருப்பார். கொக்கு மீனுக்காக காத்திருப்பது போல சரியான தருணத்துக்காக பொறுமையுடன் காத்திருக்கவேண்டும் என்று அர்த்தம் தெரிந்து வைத்திருப்பதை நான் சொல்லவில்லை. இதில் உள்ள இரு சொற்கள் முக்கியமனாவை. கூம்பும் பருவம். கூர்த்த இடத்து. என்ன பொருள் அதற்கு? ஒரு செயலின் விளைவுகள் முனைகொள்ளும் காலகட்டத்தை கூம்பும்பருவம் என்கிறார். கதிர் கூம்பும் பருவம் காய்க்குலைகள் கூம்பும் பருவம். அது முனைகூர்ந்த கட்டத்தை கூர்த்த இடத்து என்கிறார். இந்த வார்த்தையை எவரும் சொல்லாமல் ஒருவன் அவனே அறிந்தான் என்றால் அவன் கவிதை வாசகன். அவனுக்கு புதுக்கவிதை தினத்தந்தி வாசிப்பதுபோல புரியும்.

தமிழ் நவீனக்கவிதை இவ்வாறு மரபான கவிதைமொழியை முன்னெடுக்கையில் அதற்கு உலக இலக்கியத்தின் அழகியலையும் துணைகொள்கிறது. கம்பன் நம் கவிதையைத் தீர்மானிப்பதுபோல எலியட்டும் எஸ்ராபவுண்டும் தீர்மானிக்கிறார்கள். இதுவே வேறுபாடு.

நவீனக்கவிதையின் பல முகங்களை நாம் விரிவாகவே பேசலாம். எஸ்ராபவுண்டை முன்னுதாரணமாகக் கொண்டு க.நா.சு இங்கே படிமவியலை முதன்மையான கவிதையழகியலாக முன்வைத்தார். முடிந்தவரை சுருக்கமாகச் சொல்லுதல், முடிந்தவரை குறிப்பால் உணர்த்துதல், எளிய நேரடி மொழியில் எழுதுதல், உணர்ச்சிகளை நேரடியாக வெளிப்படுத்தாமலிருத்தல் ஆகிய தன்மைகளை க.நா.சு தமிழ் நவீனக்கவிதைக்கு அளித்தார்.

இந்த இலக்கணம் ஏன் வருகிறது என்றால் உணர்ச்சிகளை நேரடியாக வெளிப்படுத்தும் இசைத்தன்மை கொண்ட கவிதையே நமக்கு அதற்குமுன் இருந்தது என்பதுதான். நவீனக்கவிதையின் இயல்பு என்பது முந்தைய பக்திக்கவிதைக்கு நேர் மாறானதாக இருந்தது. அது நேரடியாக நம் அறிவை, கற்பனையை, நுண்ணுணர்வை நோக்கி பேசியது. உணர்ச்சிகளை தவிர்த்தது. அதாவது கவிதையை சங்க இலக்கியப்பாடல்களின் நிதானமான உணர்ச்சிவெளிப்பாட்டுத்தன்மை நோக்கி கொண்டு சென்றது.

பிரமிள்

அந்த அழகியல் உருவானதுமே அதில் எது விடுபடுகிறதோ அதைச் சேர்க்கும் கவிஞன் உருவாகிவிட்டான். தமிழ்நவீனக் கவிதையில் பிரமிளின் வரவு அத்தகையது.

வழிதொறும் நிழல்வலைக்கண்ணிகள்
திசைதடுமாற்றும் ஓராயிரம் வடுக்கள்

என்னும் பிரமிளின் வரிகளை நான் பித்துப்பிடித்தவன் போல சொல்லி அலைந்ததுண்டு. என் தந்தையும் தாயும் இறந்த நாட்கள். மனம் நிலைகொள்ளாமல் பேருந்துகளில் இருந்து பேருந்துகளில் ஏறி நான் அலைந்த நாட்கள். வழிதொறும் நிழல்வலைக்கண்ணிகள் என்னை திசைதடுமாற்றிய நாட்கள். இந்த வரி என்ன சொல்கிறது? பெரிய கருத்து ஏதும் இல்லை. ஒரு படிமம். அது மொழியில் தன்னிச்சையாக நிகழும் பேரழகு அவ்வளவுதான்.

பிரமிளின் கவிதைமரபையே தமிழ்க்கவிதையில் எனக்கு உவப்பானது என்பேன். அது சிந்தனையின் தர்க்கம் மூலம் முன்னகராமல் உணர்ச்சிகரத்தை, தியானநிலையை நம்புவது. அதன் முக்கியமான வளர்ச்சிப்புள்ளியான தேவதேவனின்

ஓட்டுகூரையெங்கும்
ஒளியும் நிழலும் உதிர் சருகுகளும்
உள் அறைகளெங்கும்
சிரிப்பும் அழுகையும் மரணங்களும்.

என்றவரி எனக்கு கவிதை மட்டும் அல்ல. வாழ்க்கையின் சாரமே கவிதையாகக் கனிந்துவரும் ஒரு தருணமும் கூட. காடு தேனாகும் ஒரு பரிணாமம், மேலிருந்து அந்த வீட்டைப் பார்க்கும் சின்னஞ்சிறிய பறவை அறியும் மானுடவாழ்க்கை. ஒளி நிழல் சருகு. அவ்வளவுதான். உள்ளே அது சிரிப்பு அழுகை மரணமாக நமக்கு பொருள்படுகிறது.

ஆனால் சுகுமாரனின்

எளிமையானது உன் அன்பு
நடு ஆற்றில் அள்ளிய தண்ணீர் போல

போன்ற ஒரு கவிதையின் எளிமையான ரத்தினச்சுருக்கமும் எனக்கு ஏற்புடையதேயாகும். ஈராயிரம் வருடத்தமிழ்க்கவிதை மரபு என்னென்னவோ அரிய பொருட்களை அன்புக்கு உவமையாக்கும்போது மிகமிக எளிமையான ஒன்றை, எளிமையின் மகத்துவத்தை சுட்டும் அழகிய படிமம் அது. நடுஆற்றில்தான் அன்பு தூயது. ஓரங்களில் அது கசடு கலக்கும். அது ஓடிக்கொண்டிருக்கையில் மட்டுமே தூயது – என நான் அதை விரிவாக்கம் செய்தபடியே செல்வேன்.

நவீனக்கவிதையை இருபதாண்டுகாலமாக தொடர்ந்து வாசிக்கும் எனக்கு அது தமிழின் ஈராயிரம் வருடமரபில் மிகமிகப் பொருத்தமாக இணைந்திருப்பதகவே தோன்றுகிறது. கபிலருக்கும் தேவதேவனுக்கும் நடுவே பெரிய அழகியல் வேறுபாடு ஏதும் இல்லை என்று தோன்றுகிறது. அவ்வையார் சாப்பிட்ட வழுதுணங்காய் வாட்டும் நான் என் வீட்டில் சாப்பிடும் கத்தரிக்காய் பொரியலும் ஒன்றே. எண்ணையும் கடுகும் கொஞ்சம் சேர்ந்திருக்கலாம். அவ்வளவுதான்.

சு வில்வரத்தினம்

இத்தனை படிமங்களும் உருவகங்களும் அணிகளும் உருவானபின்னரும்கூட நவீனக்கவிதை மிகநேரடியாக சொல்லும் சொல்லின் வல்லமையை தக்கவைத்துக்கொண்டிருக்கிறது என்பதையே நான் அதன் தனிச்சிறப்பாக எண்ணுகிறேன்.

புடமிட்ட பொன்னாக

பூமிப்பிறையாக
என் அம்மை
ஒற்றியெடுத்த
நெற்றிமண் அழகே
வழிவழி நினதடி தொழுதவர்
உழுதவர் விதைத்தவர்
வியர்த்தவர்க்கெல்லாம்
நிறைமணி தந்தவளே
உனக்கு பல்லாண்டு பல்லாண்டு

என்னும் சு வில்வரத்தினம் கவிதையின் எளிய நேரடித்தன்மை ஒருவகையில் காலம் கடந்தது. தாய்நிலத்தை தாயின்நெற்றியில் ஒட்டிய மண் துளியாகக் காணும் அந்த மனநிலையை நான் பகிர்ந்துகொள்ளும்போதே இது கவிதையாகிறது. ஈராயிரம் வருடங்களாக நாம் உருவாக்கித் திரட்டி எடுத்து முன்கொண்டுசெல்லும் அந்தத் தனிமொழியே அவ்வுணர்வை எனக்கு கொண்டுவந்து சேர்க்கிறது. என்றும் கவிதை ஒருசமூகத்தின் அழகுணர்வின் வளர்ந்துசெல்லும் கடைசி நுனி. அறவுணர்வின் வளர்ந்து செல்லும் கடைசி நுனி. அந்த நுனியைத்தான் எப்போதும் மாடுமேயும். கடந்துசெல்பவர்கள் ஒடிப்பார்கள். ஆனாலும் விடாப்பிடியாக அது வளரும். வளரவில்லை என்றால் அந்தக்கொடி வளர முடியாது.

தேவதேவனின் இந்தக்கவிதையை நான் மிகுந்த மனநெகிழ்வுடன் நினைவுகூர்கிறேன்.

யாரோ என்று எப்படிச் சொல்வேன்?

குப்பைத்தொட்டியோரம்
குடித்துவிட்டு விழுந்துகிடப்போனை

வீடற்று நாடற்று
வேறெந்தப் பாதுகாப்புமற்று
புழுதி படிந்த நடைபாதையில்
பூட்டு தொங்கும் கடை ஒட்டிப்
படுத்துத் துயில்வோனை?

கவிதையின் தரப்பு என்ன, அது யார் அருகே நின்று பேசவிழைகிறது என்பதற்கு பிறிதொரு சான்று தேவை இல்லை. இசை எழுதிய ஒரு கவிதை

ஒரு பைத்தியம்

கேரிபேக்கில் டீ வாங்கிக் கொண்டு போவதைப் பார்த்தேன்
பைத்தியத்திற்கு இன்னமும் டீ குடிக்க வேண்டியிருக்கிறது.
இந்த இருபத்திநான்காம்தேதி இரவை
நான்
பைத்தியத்தின் டீ என்பேன்.
தெய்வமே !
இந்த டீ
சூடாறாதிருக்கட்டும்..
சுவை குன்றாதிருக்கட்டும்..

கவிதையின் பிரார்த்தனை எங்கே ஒலிக்கிறது என்று பாருங்கள். எனக்கு முக்தி, எனக்கு மோட்சம் என கூவிய தமிழ்க்கவிதையின் இன்றைய பரிணாமம் இது. எத்தனை மகத்தான ஒரு வளர்ச்சி

இந்த நீதியுணர்ச்சியுடன் கவிதை எங்கே நிற்க முடியும்? நீங்கள் கும்பிடும் கோயில்களில் அது சடங்குகள் செய்யுமா என்ன? நீங்கள் சாப்பிடும் விருந்துகளில் அது வந்தமருமா என்ன? உங்கள் நீதிக்கூடங்களில் உங்கள் பொதுமைதானங்களில் அதற்கு இடமுண்டா என்ன? அது தன்னை பகிஷ்காரம் செய்துகொண்டிருக்கிறது. அது தன்னை அன்னியனாக உணர்கிறது. கவிதை தன் பெருங்கருணையாலேயே வன்முறை கொண்டதாகிறது. கவிதை தன் நீதியுணர்ச்சியினாலேயே அன்னியமானதாக ஆகிறது. உங்கள் அரசும் உங்கள் ஒழுக்கமும் கவிதைக்கு சிறைச்சாலையையோ மனநோய் விடுதியையோதான் அளிக்கும்.

பொய்யாகச் சொல்லவில்லை நண்பர்களே. தேவதேவனை மனநலம் குன்றியவர் என்று அவரது ஒட்டுமொத்த சூழலும் சொல்வதை நான் கேட்டிருக்கிறேன். 1999-இல் அவருக்கு நான் திருநெல்வேலியில் ஒரு விழா எடுத்தேன். அவருக்கு எடுக்கப்பட்ட முதல் விழா. சொந்தச்செலவில் அதைசெய்தேன். அதற்கு வந்திருந்த அவரது பள்ளி ஆசிரியர் இருவர் என்னை வந்து சந்தித்து ‘நிஜம்மாவே இவரு கவிஞரா சார்? இவருக்கு மெண்டல் பிராப்ளம் இருக்கு சார். நீங்க என்னமோ தப்பா நினைச்சுட்டீங்க’ என்றார்கள். அவர்களால் நம்பவே முடியவில்லை. ஏன் தேவதேவனை மனநிலை பிறழ்ந்தவர் என்றார்கள்? ‘அவரு சின்னப்புள்ளைங்ககூட சேர்ந்து வெளையாடுறார் சார்’ என்றார் ஒருவர். ‘மரம் மட்டையெல்லாம் நின்னு பாக்கிறார் சார்’ என்றார் இன்னொருவர். அவர் ஒட்டகப்பறவை வளர்ப்புக்கு பணம் கட்டி மொத்தச் சொத்தையும் இழந்தால் அவரை அப்படிச் சொல்லமாட்டார்கள். அவர்களெல்லாம் நிதானமானவர்கள், ஒரு பூவை ரசிப்பவர் பைத்தியக்காரர். இந்தப்பாமரர் நடுவே அன்னியமாகி நிற்கிறது கவிதை.
.

தேவதேவன்

தருமிக்கும் நக்கீரன்களுக்கும் வருகிறேன். திகைத்து நிற்கும் தருமிகளும் புரிந்துகொள்ளாமல் குழம்பி நிற்கும் நக்கீரர்களும் நமக்கு இருபக்கமும் எப்போதும் இருக்கிறார்கள். அவர்களுக்கு கவிதை என்னும் தனிமொழி புரிவதே இல்லை. புரியாத எதையும் அவர்கள் அஞ்சுகிறார்கள். என் மகள் சிறுமியாக இருக்கையில் ஒரு மிருகத்தை தொலைக்காட்சியில் பார்த்தாள். ஏதோ தென்னமெரிக்க மிருகம். பாத்தியா ஆனை என்றாள். அதற்கு தும்பிக்கை இருந்தது. ஆனால் பின்பக்கம் காட்டியபோது அது யானை இல்லை. பாத்தியா பண்ணி பண்ணி என்றாள். ஆனால் கொஞ்சம் கவனித்தால் அது பன்றியும் இல்லை. ‘இது இது இது ரொம்ப கெட்டது’ என்று சொல்லிவிட்டாள். புரியாத ஒன்று, குழம்பச்செய்யும் ஒன்று கெட்டதுதானே?

ஆகவேதான் கவிதையை சாமானியன் அஞ்சுகிறான். கவிதையைப்பற்றி சும்மா ஒரு டீக்கடையில் பேசிப்பாருங்கள், பக்கத்தில் இருப்பவர்கள் கொஞ்சம் பீதியடைவதை கவனிக்கலாம். எனக்குத்தெரியாத ஒன்று இது, ஆகவே அபாயமானது என்ற எண்ணம் சாமானியர்களிடம் உள்ளது. சாமானியர்களுக்காக நடத்தப்படும் அரசிடம் உள்ளது. அரசின் அதிகாரிகளிடம் உள்ளது.

நண்பர்களே இந்தியாவில் 1970-களில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டபோது முதலில் ஒடுக்கப்பட்டவர்கள் கவிஞர்களே. அவர்கள் என்னதான் பேசுகிறார்கள் என்று போலீஸ்காரர்களுக்குப் புரியவில்லை. ஆகவே பேசாதே என்றார்கள். பேசாதே என்ற இந்தக்குரல் கவிஞனை நோக்கி எத்தனை தலைமுறையாகச் சொல்லப்படுகிறது! ஆச்சரியமாக இருக்கிறது.

திருத்தக்கதேவர் பழுக்கக் காய்ச்சிய இரும்புப்பதுமையைத் தழுவி தன் உள்ளத்தூய்மையை நிரூபிக்கும்படி கோரப்பட்டார். கம்பன் அம்பு எய்து கொல்லப்பட்டார்

‘மன்னவனும் நீயோ வளநாடும் உன்னதோ
உன்னை நம்பியோ தமிழ்செய்தேன் என்னை
ஏற்றுக்கொள்ளாத வேந்துண்டோ உண்டோ
குரங்கேற்றுக்கொள்ளாத கொம்பு’

என அவர் பாடினார் என்று தமிழ்நாவலர் சரிதை சொல்கிறது. பிற்காலக் கதையாக இருக்கலாம். அந்தக்கவிதைமொழி கம்பன் காலத்தையது அல்ல. ஆனால் கவிஞன் ஒருவகை அரசின்மைவாதி, கலகக்காரன் என்ற தமிழ்ப் பிரக்ஞையை அக்கதையில் நாம் காண்கிறோம். ‘நாமார்க்கும் குடியல்லோம்’ என்றார் நாவுக்கரசர். நான் எந்த அரசனுக்கும் குடிமகன் அல்ல என்ற அந்த அறைகூவல் கவிஞன் ஆன்மாவின் குரல்.

கவிதையை சாமானியர்கள் தங்கள் சாமானிய ஒழுக்கநெறிகளில் கட்டிப்போட முயல்கிறார்கள். பண்டிதர்கள் இலக்கணத்தில் கட்டிப்போட முயல்கிறார்கள். தருமிகளையும் நக்கீரர்களையும் மீறித்தான் அது என்றும் முன்னகர்கிறது. மீறாவிட்டால் முன்னகர முடியாது. ‘காமம் செப்பாது கண்டது மொழிய’ வேண்டும் என அதற்கு இறைவனின் ஆணை உள்ளது. அதை அது மீறவே முடியாது.

ஒரு ஜப்பானியக் கவிதை. நான் என் பெருங்காதலுடன் ஒரு ரோஜாவை உனக்கு அளிக்கிறேன் அந்த ரோஜா உன் காதலற்ற கைகளைத் தீண்டியது நெருப்பாக மாறி உன் மாளிகையை எரிக்கட்டும் என்று அந்த வரி விரியும். கவிதை மலர்தான். ஆனால் அது எங்கோ ஒரு புள்ளியில் அனலாக ஆகிறது. எரிக்கத்தொடங்குகிறது.

இசை

நான் கவிதையை வாசிப்பது அது உருவாக்கியபடியே செல்லும் அந்த தனிமொழிக்காகவே. அது என்னை என் பண்பாட்டின் சொல்லப்படாத இடங்களை நோக்கி கொண்டுசெல்கிறது. என் வாழ்க்கையை மிகமிக நுட்பமாக புரிந்துகொள்ளச் செய்கிறது. என் சூழலை மொழியாக மாற்றிக்கொள்ள உதவுகிறது. என் ஆழ்மனமும் கனவும் மேலும் ஆழம் கொள்ளச்செய்கிறது. என் மொழியை கனமொழியாக ஆக்குகிறது.

அத்துடன் என் நீதியுணர்வை நோக்கி அது பேசுகிறது. அன்றாடவாழ்க்கையால் அறிவார்ந்த வெற்றுத்தர்க்கத்தால் மழுங்கடிக்கப்படாத நீதிஉணர்ச்சியை எனக்களிக்கிறது.

நான் கவிஞர்களை வழிபடுகிறேன். ஆனால் என்னை நோக்கி தன் கல்வியை முன்வைப்பவனை தர்க்கத்தை முன்வைப்பவனை நான் கவிஞன் என்று என்ணுவதில்லை. தன் கனவுக்குள், தன் ஆழ்மனதுக்குள் என்னை கொண்டுசெல்பவனே என் கவிஞன். அது ஒரு கருந்துளை. அதன் வழியாக அவன் என்னை பெருவெளிக்குள் கொண்டுசெல்கிறான்.

பண்பாட்டையும் மொழியையும் வாழ்வையும் அதன் நுண்ணிய தளங்களில் அறிந்துகொள்ள விழைபவர்களுக்கானது கவிதை. அது அனல். மலரும் கூட. ஆம், எரிமருள் வேங்கை!

[மலேசியாவில் பறை வெளியீட்டு விழாவில் பேசியதன் முதல்வடிவம்]

 மறுபிரசுரம்  /முதற்பிரசுரம்  May 6, 2014

முந்தைய கட்டுரைசோபியா -கடிதம்
அடுத்த கட்டுரைவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 34