அன்பின் ஜெ..
லட்சினின் கடிதத்தை இன்று படித்தேன்.
அவர் சொல்லியிருக்கும் ஒரு கோணம் முக்கியமானது. எனது மிக நெருங்கிய நண்பர் சில ஆண்டுகளுக்கு முன்பு, என்னிடம் கேட்டது, “ஒரு வெளிநாட்டு நிதி வாங்க அனுமதி பெற்ற ஒரு தன்னார்வ நிறுவனம் இருந்தால் சொல்லு – விலைக்கு வாங்கி விடலாம்”
இதில் இருக்கும் பல தில்லுமுல்லுகளைப் பலப் பல நண்பர்கள் சொல்லி அறிந்திருக்கிறேன். நண்பர் லட்சினின் அனுபவம் அதை மேலும் உறுதி செய்கிறது.
ஆனால், எனது கல்வி நிறுவனம் மற்றும் அனுபவம் மூலமாக நான் அறிந்திருக்கும் தன்னார்வ நிறுவனங்கள் வேறு மாதிரி உள்ளன. அவை நிச்சயம் எண்ணிக்கையில் குறைவாகத் தான் உள்ளன என நினைக்கிறேன். ஆனால், அவை ஆற்றும் பங்கு மிக முக்கியம்.
இத்துறையின் நடு செண்டரில், தனி மனிதர்களோ / சிறு குழுவோ சேர்ந்து நடத்தும், activist NGOக்கள் உண்டு – அருணா ராயின் BKSS, பங்கர் ராயின் barefoot college, கேஜ்ரிவாலின் vipaasna, நண்பர் அருணின் திருவண்ணாமலையின் மருதம் பள்ளி, சேலத்தில் தன்னந்தனியராக இயங்கி வரும் கோட்டி பியூஷ் மானுஷ், பெரியவர் நம்மாழ்வாரின் வானகம்.. இவர்களின் அர்ப்பணிப்போடு கூடிய பங்களிப்பின் மகத்துவத்தை நாம் அறிந்திருக்கிறோம்.
அடுத்த தளத்தில் முழுக்க முழுக்க நிறுவன அமைப்பாகி விட்ட தன்னார்வ நிறுவனங்கள் உண்டு – சில எடுத்துக் காட்டுகள் – Myrada (myrada.org) Dhan Foundation (www.dhan.org) sewa (www.sewa.org), tirbhuavn das foundation (http://www.amuldairy.com/index.php/csr-initiatives/tribhuvandas-foundation), south indian federation of fishermen societies (siffs.org), worth trust (www.worthtrust.org.in), accord (www.adivasi.net) சரியாகப் பட்டியலிட்டால், ஒரு மாநிலத்துக்கு 5-10 தேறும் என்பது என் கணிப்பு. இவற்றில் சில நேரடியாகவோ, மறைமுகமாகவோ (Action Aid, ford foundation போன்ற நிறுவனங்களின்) அந்நிய நிதி பெறுபவையும் கூட.
சமூகப் பொருளாதார சட்டங்கள் மற்றும் விழுமியங்களையும் மாற்றியமைப்பதில் இவர்களின் பங்கு மிகப் பெரிது. இதில் sewa வின் ஈலா பட், அருணா ராய் போன்ற்வர்களை நாம் positive activists என்று அழைக்கலாம். தேவைப்படும் கணங்களில், மக்களாட்சி தரும் வாய்ப்புக்களைப் பயன்படுத்தி, நாட்டின் சட்ட திட்டங்களை உருவாக்கவும், மாற்றியமைக்கவும் பாடுபடுகிறார்கள். இந்த அரசின் சமூக நலத்திட்டங்களான NREGA, RTI, RTE போன்ற திட்டங்களை உருவாக்க, இவர்களில் சிலர், பிரதமரின் National Advisory Council ல் பங்காற்றினர்.
அன்னிய நிதியை வாங்கிக் கொண்ட அவர்களின் அஜெண்டாவுக்காக உழைக்கும் நபர்கள் உண்டு. அவர்களைப் பற்றி மிக அதிகமாக நம் தளத்தில் நாம் பேசியிருக்கிறோம்.
1930ல், பால் ப்ரண்டன் என்னும் வெளிநாட்டுப் பத்திரிக்கையாளர் இந்தியா வந்தார். அவருக்கு இந்தியாவில், உண்மையான ஞானிகளைத் தேடிக் கண்டு பிடிக்க வேண்டும் என்ற வேட்கை. இந்தியாவெங்கும் சுற்றி வந்து, ஒரே ஒருவரைத் தான் அவரால் கண்டு பிடிக்க முடிந்தது.
ஒரு விழுமியத்தில் உண்மையாகவே ஈடுபட்டு, அதற்காக தம் வாழ்க்கையையே தியாகம் செய்யும் மாமனிதர்கள் உண்டு. அவர்களில் ஒன்றிருவர் செய்யும் ஒரு காரியம் கூட சமூகத்தை மாற்றியமைக்க வல்லது. அவர்களைச் சுற்றிப் பதர்கள் மூடியிருப்பதும் இயல்பே.
ஒரு பார்வையில், இப்பதர்கள் செய்யும் ஊழல்களைப் படிக்கும் போது, மனம் சோர்வடைந்து விடுகிறது. பஸ் நிலையத்தில், திருடர்களின் படங்கள் மாட்டியிருக்கும். திருட்டும் நடக்கும். அதைப் பார்த்து, ஜாக்கிரதையாக இருந்து கொள்வது அவசியம். ஆனால், பஸ் நிலையம் முழுதுமே திருடர்கள் என்று அச்சம் கொள்வது, சமூக மாற்றம் என்னும் பெருங்கடலின் உள் நீரோட்டங்களை அறியாமல் செய்து விடும் எனக் கருதுகிறேன்.
நீங்கள் முன்பு ஒரு முறை சொன்னது போல், வெண்முரசு எழுதி இளைப்பாறிக் கொள்ள ( Emoji ), முடிந்தால் நவ காந்தியர்களைப் பற்றி ஒரு தொடர் எழுத வேண்டிக் கொள்கிறேன்.
பாலா