ஜான் ஆபிரகாம்:ஒரு கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்

மலையாளப்படங்களைப் பற்றிய உங்கள் பட்டியலில்[ மலையாள சினிமா ஒரு பட்டியல்  ]ஜான் ஆபிரஹாமின் எந்தப்படமும் இல்லையே. விடுபட்டுவிட்டதாக தோன்றவில்லை. ஏனென்றால் மிக அபூர்வமான பல கலைப்படங்கள் அதில் விடுபடாமல் சொல்லப்பட்டிருக்கின்றன. உங்களுக்கு விமரிசன பூர்வமான கருத்து ஏதும் உள்ளதா?

சிவராஜ்

அன்புள்ள சிவராஜ்

ஜான் ஆபிரஹாமை எனக்கு நேரடியாக தெரியும். கய்யூர் என்றநூரில் நடந்த இடதுசாரி கலகத்தைப்பற்றி நிரஞ்சனா எழுதிய சிரஸ்மரண என்ற நாவலை படமாக்க வேண்டும் என்ற ஆவலுடன் அவர் எண்பத்தைந்து -ஆறுகளில் காஸர்கோட்டுக்கு  வந்து கொண்டிருந்தார். அப்போது நான் அங்கே வேலைப்பார்த்தேன். வேணுகோபால் காஸர்கோடு என்ற பிரபல கன்னடக் கவிஞரின் இல்லத்தில் வைத்து ஜானை நான் முதலில் சந்தித்தேன். அப்போது அவர் குடித்துவிட்டு வந்து கவிஞர் வீட்டு திண்ணையில் அமர்ந்திருந்தார். கூடவே அவரைப்போலவே மேனோன் என்ற ஆளும் இருந்தார். நான் தமிழ் எழுத்தாளர் என்றதும் ஜான் என்னிடம் சுந்தர ராமசாமியைப்பற்றி கேட்டார். நான் அவரை மிக நன்றாக தெரியும் என்று சொன்னதும் என்னிடம் மிகவும் நெருங்கிவிட்டார். இருவரும் நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தோம். முற்றிய குடிகாரர்கள் பொதுவாக குடித்தால் சாதாரணமாக இருப்பார்கள்.ஜான் அந்த ரகம்.

ஜான் பலவகையிலும் விஷயமறிந்த மனிதர். சினிமா மற்றும் சினிமா இசை பற்றிய அவரது ஞானம் மிகமிக அபூர்வமானது. உலகசினிமாவை ஒரு கட்டத்தில் மிகுந்த மோகத்துடன் அவர் பார்த்திருக்கிறார். இலக்கியவாசிப்பு ஏமாற்றமளிக்கக் கூடியது. எழுபதுகளின் மலையாள இலக்கியம் அன்றி வேறெதுவும் அவருக்குத்தெரியாது. ஜானின் ரசனை மிக மிக கற்பனாவாத நெகிழ்ச்சி கொண்டது. மலையாள ‘பைங்கிளி’ எழுத்தாளரான முட்டத்து வர்க்கி பெரும் கலைஞர் என்று சொல்லியிருக்கிறார். அவரது ரசனையும் குழப்பமானது. ரே ஒரு முட்டாள் என்று சொல்லி அதே சூட்டில் பீம்சிங் படங்களை சிலாகித்தார் ஒருமுறை. ஏராளமான இலக்கிய, சினிமா, அரசியல் நண்பர்கள் உண்டு. அவர் ஒரு நிரந்தர சஞ்சாரி என்பதனால் உருவானது இந்த உறவு. அசலான நகைச்சுவை உணர்வு உடையவர். அந்த நகைச்சுவைதுணுக்குகள் மூலமே அவர் பிற்பாடு புகழ்பெற்றார்

ஜானை நான் மூன்றுமுறை ‘எதிர்கொண்டிருக்கிறேன்’. அவர் காஸர்கோட்டுக்கு வந்தால் ஒரு ஆட்டோ ரிக்ஷா பிடித்து ஏதேனும் நண்பர் வீட்டுக்குச் செல்வார். அவர் தப்பித்துக்கொண்டால் அடுத்த நண்பர் வீடு. கடைசியில் அவரை ஆட்டோக்கூலி கொடுத்து மீட்கும் நண்பர் இருநூறு முநூறு  ரூபாய்வரை பணம் கொடுக்க வேண்டியிருக்கும். ஜானுடன் வரும் நண்பர்கள் மிகமிக ஆபாசமான மனிதர்கள். ஜானை அவர்கள் தங்களுக்கு சாராயம் ஈட்டித்தரும் ஒரு உயிராக மட்டுமே கண்டார்கள். ஜான் என்னை அப்படி தேடிவது பெருங்கடன்காரராக ஆக்கினார். என்னிடம் பணம் வாங்கி குடித்து என் அறைக்குள் சிறுநீர் கழித்தார். ஒரு கட்டத்தில் நான் அவரைத் தவிர்க்க ஆரம்பித்தேன், பிறரைப்போலவே. இதைத்தவிர அவரைப்பற்றி நினைவுகளாக அதிகம் சொல்வதற்கு இல்லை.

அக்காலத்தில் ஜானின் படங்களை நான் பார்த்தேன். எனக்கு மிக ஏமாற்றமாக இருந்தது. ஆனால் நான் தொடர்ந்து படங்கள் பார்த்துவந்த ‘காஸர்கோடு ·பிலிம் சொசைட்டி’ ஒரு பெரிய அமைப்பு. அதன் செயலர் முரளிதரன் உலகசினிமா நிபுணர். அவர்கள் ஜானின் படங்கள் பெரிய கலைப்படைப்புகள் என்றார்கள். நானும் எனக்குப் புரியவில்லைபோலும் என எண்ணிக் கொண்டேன். ஆனால் நான் ரசித்த பர்க்மான், ·பெலினி, கொதார்த் படங்களுடன் ஒப்பிட்டால் இவை சற்றும் அழகுணர்வுடனோ ஊடகப்புரிதலுடனோ எடுக்கப்படவில்லை என்றே உள்ளூர எண்ணினேன்.

ஜானை அறிந்த பின் இந்த எண்ணம் எனக்கு உறுதிப்பட்டது. ஜான் அடிப்படையில் கலை மனம் கொண்டவர்தான். ஆனால் அவரால் சினிமா என்ற கலைச்சாதனத்தைக் கையாள முடியாது. அவரது பிரச்சினையே இதுதான். இன்று ஜான் ஒரு பெரும் கலகக்காரர் என்றும் அவரது வாழ்க்கை ஒரு கலகச் செய்தி என்றும், அக்கலகத்தன்மை காரணமாக அவர் சினிமா எடுக்க நம் அமைப்பு இடம் கொடுக்கவில்லை என்றும், அதனால்தான் அவர் போதையில் அழிந்தார் என்றும் அப்பட்டமான மோசடிக்கதை ஒன்று புனையப்பட்டு அதுவே மெல்லமெல்ல வரலாறாக ஆகியும் விட்டிருக்கிறது. அதை அவரது நண்பர்களே செய்தார்கள், தங்களை ஒருவகை ‘உப கலகக்காரர்களாக’ புனைந்துகொள்ளும் பொருட்டே இதைச் செய்தார்கள். நம்மில் பலர் விக்ரகங்களை விரும்புகிறோம். ஒரு மாதிரியை காட்டினால்போதும் நாமே புதிய விக்ரஹங்களை உருவாக்கிக் கொள்வோம். இன்று நாம் அறியும் ஜான் அப்படி இதழாளர்களாலும் போலி அறிவுஜீவிகளாலும் உருவாக்க்கப்பட்ட ஒரு உள்ளீடற்ற விக்ரகம்.

ஜான் பூனாவில் படிக்கும்போதே குடிக்க ஆரம்பித்தார். அப்போதே குடிநோயாளியாக ஆகிவிட்டிருந்தார். அதற்கு அவரது குணஇயல்பு முக்கியமான காரணம். அவரே என்னிடம் சொன்னதன்படி அவரது இளமைக்காலம் மிகவும் பரிதாபகரமானது. கிறித்தவ வெறி கொண்ட குடும்பத்தில் பிறந்த ஜான் வலுக்கட்டாயமாக மதத்துக்குள் பிடித்து அமிழ்த்தப்பட்டவர். இளமையில் கடும் அடக்குமுறையில் வளர்ந்தவர். பலவகை சித்திரவதைகளுக்கு ஆளானவர். ‘குடைக்கம்பி தெரியுமா குடைக்கம்பி? அதை சிவக்க பழுக்கவைத்து அதன் மேல் என் கையை வைத்து அந்தக்கைமேல் அப்பா தன் கையை வைத்து அழுத்திக் கொள்வார். அஞ்சு திருக்காயங்களுடன் ஏசுகிறிஸ்துவை கண்முன் காண்பேன் அப்போது…” என்றார் ஜான். தினசரிப் பிரார்த்தனை செய்ய ஒருநாள் விட்டுபோனமைக்கான தண்டனை இது.பின்னர் அவர் இன்னும் மதவேகம் கொண்ட தாத்தாவுடன் தங்கி படித்தார்

இதன் விளைவாக இருக்கலாம் ஜான் இருவகை குணங்களின் விசித்திரக் கலவையாக வளார்ந்தார். ஒரு ஜான் மிக அடக்கமானவர். பவ்யமானவர். லேசான திக்கலுடன் மென்மையாக பேசுபவர். வெட்கம் நிறைந்தவர். பைபிள் வாக்கியங்களை அடிக்கடிச் சொல்லுவார். நல்ல நகைச்சுவை உணர்வுகொண்டவர். இன்னொரு ஜான் குடியின் ஒரு கட்டத்தில் வெளிப்படுபவர். வன்முறையே உருவானவர். கட்டற்றவர். கெட்டவார்த்தைகளால் பேசுபவர். எதன்மேலும் எவர் மேலும் மரியாதை அற்றவர். அனைத்து விதிகளையும் நெறிகளையும் மீறிச்செல்லும் ஆங்காரமே உருவானவர்.

இருஜானுமே வேடங்கள்தான். பூனாவுக்கு சென்ற மெலிந்த, திக்குவாயனான, ஆங்கிலம்பேசத்தெரியாத, கிராமியத்தன்மை மிக்க  ஜான் இரண்டாவது ஜானாக தன்னை உருமாற்றிக் கொள்வதன் வழியாக அங்கே அவருக்கிருந்த தாழ்வுணர்வை வென்றார் என நான் ஊகிக்கிறேன். பெரும்பாலான கேடிகள் கோழைத்தனத்தை மறைக்க வன்முறையில் ஈடுபடுவதுபோல. சினிமாக்காரரான ஜான் குடிகாரனானது வழியாக  இளமைக்காலம் முதல் அவரில் உருவாகியிருந்த, அவர் வெறுத்த தன்னியல்புகளை மீறிச்சென்றார். தாழ்வுணர்ச்சியின் சுமையால் கூன்விழுந்த கிராமத்துக் கிறித்தவன் ஆர்ப்பாட்டமான, ஆபாசமான குடிகாரர் ஆனார்.

சினிமா என்ற ஊடகத்துக்கு சற்றும் உதவாத குணநலன்கள் இவை. சினிமா என்பது ஒரு கூட்டுக்கலை. அதில் ஈடுபடுவர்கள் அனைவருமே கலைஞர்கள்தான். எல்லா கலைஞர்களுமே கட்டற்றவர்களே. ஆனால் அந்தக்கலையின் தளத்தில் அவர்கள் ஒன்றாக வேண்டும். அவர்களுக்கு இடையே நட்பும் புரிதலும் உருவாக வேண்டும். அவர்கள் சேர்ந்து பணியாற்ற அவசியமான அடிப்படை ஒழுங்கு அனைவரிடமும் இருந்தாக வேண்டும். ஒருவர் உள்ளம் இன்னொருவருக்குப் புரிய வேண்டும்.

ஜானிடம் சுத்தமாக இல்லாதது அந்த ஒழுங்கும் ஒத்துப்போகும் இயல்பும்தான். எந்தவகையிலும் பிறர் அவரிடம் சேர்ந்து எதையுமே செய்ய முடியாது. அவருடைய தொடர்புறுத்தும் தன்மை பரிதாபகரமானது. தன்னுடைய ஒரு கதையை அவர் சொன்னால் சம்பந்தமே இல்லாமல்வேறு பலரின் பத்து கதைகளை திட்டுவார். எங்கெங்கோ செல்வார். அவர் என்ன நினைக்கிறார் என்பதை புரிந்துகொள்ளவே முடியாது. பிறரது நேரம், மனநிலை எதுவும் அவருக்கு பொருட்டே அல்ல. ஒரு பஸ்நிலையத்தில் நம்மிடம் ‘இதோ வருகிறேன்’ என்று சொல்லி அவர் சென்றால் அப்படியே ஒருவருடம் காணாமலாகிவிடக்கூடும். ஆகவே அவரால் சினிமா என்ற கூட்டுக்கலையை உருவாக்கவே முடியவில்லை.

இந்த இயல்புகளுடன் இருந்தும்கூட ஜானுக்கு உடனே முதல் சினிமா கிடைத்தது. காரணம் பாலுமகேந்திரா போன்ற பூனா மாணவர்கள் மலையாள சினிமாவை பிடிக்குள் வைத்திருந்த பொற்காலம் அது. ‘வித்யார்த்திகளே இதிலே இதிலே’ மது போன்ற நடிகர். ராமச்சந்திரபாபு போன்ற ஒளிப்பதிவாளர் .அந்த படத்தை ஜான் எடுத்த விதம் பற்றி ஜான் இருக்கும்போதே ஒருவர் சொன்னார். ஒரு பத்தாம் வகுப்பு மாணவர் அதை விட நல்ல படத்தை எடுத்துவிடமுடியும். நடிகனிடம் கதாபாத்திரத்தைச் சொல்லி புரியவைக்க அவரால் முடியவில்லை. எவரிடமும் எதையும் தெரிவிக்க முடியவில்லை. அனைத்தையும்விட அவரிடம் திரைக்கதையே இருக்கவில்லை. அவ்வப்போது தோன்றியதை எடுப்பார். அனைத்தையும்விட முக்கியமான விஷயம் படப்பிடிப்பின் நடுவே காணாமல் போய்விடுவார். அந்த படம் கேவலமாக தோற்றது. அந்த படத்தைப்பற்றி ஜானே அவமானத்துடன் சொல்வார். ஆனால் இன்று அதையும் ஒரு கிளாசிக் என்று சொல்கிறார்கள் சிலர்.

ஜான் எடுத்த படங்களில் எல்லாமே எழுபது சதவீதத்துக்கும் மேலாக அந்த ஒளிப்பதிவாளர் தன் விருப்ப்பபடி எடுத்ததுதான் என்பதே உண்மை. அதிலும் முதல்படத்தை படமாக ஆக்கியதே ஒளிப்பதிவாளர் ராமச்சந்திரபாபுதான். இருந்தும் ஜானுக்கு மீண்டும் மீண்டும் தயாரிப்பாளர் அமைந்தனர். காரணம் அன்று கறுப்புவெள்ளை மலையாளப்படம் எடுக்க மிகக்குறைவான செலவுதான். ஒரு படம்கூட குறைந்தபட்ச வசூலை அளிக்காவிட்டாலும் பி.ஏ.பக்கர் போன்றவர்கள் கடைசி வரை படம் எடுத்தார்கள். மலையாளத்தில் எந்த இயக்குநருக்கும் தொண்ணூறுகள் அவரை தயாரிப்பாளர் அமையாது போனதில்லை.

ஜான் தயாரிப்பாளர்களை வதைப்பார். பணத்தை வாங்கி குடித்துக்கொண்டே இருப்பார். மாதக்கணக்கில். சில வருடங்களுக்குப் பின்னரே அவர்களுக்கு இந்த ஆசாமி படமெடுக்கப்போவதில்லை என்று புரியும். சிலநாள் அலைந்தால் அடுத்த இரை அகப்படும். இப்படித்தான் ஜான் வாழ்ந்தார். ‘சிரஸ்மரண’வை அவர் எடுக்கவேயில்லை. லெனின் ராஜேந்திரன் அதை ‘மீனமாசத்திலே சூரியன்’ என்ற பேரில் படமாக  எடுத்தார். தமிழில் இந்த நாவல் ‘நினைவுகள் அழிவதில்லை’ என்றபேரில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

கடைசியில் ஜான் இடதுசாரி தீவிரவாத பாவனைகொண்ட சிலர் கைகளில் சென்றுசேர்ந்தார். அவர்களுக்கு ஒரு தெரிந்த முகம் தேவைப்பட்டது. அப்படி உருவானதே ஒடேஸா என்ற அமைப்பு. மக்களிடம் பணம்பெற்று படம் எடுப்பது என்ற கொள்கை கொண்டவர்கள். ஊர் ஊராக அவர்கள் வசூலித்த பணம்  அப்போதே சாராயத்தில் செலவாகும். கும்பளா என்ற ஊரில் அவர்கள் திரட்டிய பணத்தை அங்கேயே குடித்துவிட்டு சண்டை போட்டதை நானே கண்டேன். அவ்வப்போது அவர்களில் ஒருவன் சொல்வதுபோல ஏதாவது எடுப்பார்கள். அப்படி உருவான சினிமாதான் ‘அம்ம அறியான்’ அது ஒரு லத்தீனமேரிக்க படத்தை தழுவி உருவாக்கப்பட்டது. காமாசோமாவென எடுக்கப்பட்டதானால் அதை எவரும் கண்டுபிடிக்கமுடியவில்லை.

ஜானின் எல்லா படங்களுமே அப்படிப்பார்த்தால் தழுவல்கள்தான். ஒரு புதிய படத்தை பார்த்தால் அவர் ஏற்கனவெ சொல்லிவந்த கருவை உடனே அதற்கேற்ப மாற்றிக் கொள்வார் ஜான். ஆச்சரியமாக இருக்கும்.சம்பந்தமே இல்லாமல் தாவி விடுவார். பர்க்மானின் வைல்ட் ஸ்டிறாபரிஸ் என்ற படத்தைப்போல நிரஞ்சனாவின் நாவலை எடுப்பதைப்பற்றிச் சொன்னார். வைல்ட் ஸ்டிராபரீஸ் படத்தில்ஒரு வயதானவரும் அவரது உறவுப்பெண்ணும் ஒரு பழைய காரில் சென்றுகொண்டே இருக்கிறார்கள். ஜான் நிரஞ்சனாவின் கதையை இரு வயோதிக தம்பதியினர் மாட்டு வண்டியில் செல்வதுபோல ஆக்கினார். கொடுமை!

கலைப்படைப்பு என்பது கவனமில்லாமலோ போகிறபோக்கிலோ உருவாக்கபடும் ஒன்று அல்ல. நாம் சாதாரணமாக அணுகும் எந்த கலைப்படைப்பின் பின்னாலும் கலைஞனின் ஈடிணையற்ற அர்ப்பணிப்பும் தியாகமும் உள்ளது. ஒரு கலைப்படைப்பில் செய்யப்பட்டுள்ள உழைப்பு– வெறும் உடல் உழைப்பாக மட்டுமே பார்த்தால் கூட– வேறு எந்த தொழிலிலும் உள்ள உழைப்பை விட பலமடங்கு அதிகமானது. எந்தக் கலைஞனும் கச்சிதம்,முழுமை என்ற இலட்சியத்தால் ஆள்கொள்ளப்பட்டவனாகவே இருப்பான். சிறு சிறு மேம்படுத்தல்களுக்காக அவன் ரத்தம் சிந்துவான். ஒருபோதும் திருப்தி அடையமாட்டான். அவனுள் இருக்கும் ஒரு இலட்சியக் கலைப்படைப்பை வெளியே உள்ள ஊடகத்தில் நிகழ்த்த அவர் சலியாமல் போராடியாடியே இருப்பான்.

உண்மையில் கலைச்செயல்பாடு என்பது Obsession Neurosis போன்ற மனச்சிக்கலின் எல்லையில் நிற்கிறது. ஒரு ஓவியத்தில் அல்லது நாவலில் நாள் ஒன்றுக்கு பதினெட்டு மணிநேரத்தைச் செலவிடும் கலைஞர்களை இப்படித்தான் புரிந்துகொள்ள முடியும். பெரும் கலகக்காரர்கள் என்று நாம் அறிந்த கலைஞர்கள், உதாரணம் தஸ்தயேவ்ஸ்கி அல்லது வான்கா இப்படித்தான் இருந்துள்ளார்கள். அவர்களை நாம் அவர்களின் அழியாத கலை வழியாகவே அறிகிறோம். அக்கலை அவர்களின் ஆழ்மனத்தில் இருந்த ஒரு வடிவம். எந்த அருவமான கலைக்குப் பின்னாலும் திட்டவட்டமான ஒரு மன எழுச்சி உண்டு.

ஜானின் சினிமாக்கள் அனைத்துமே எந்தவிதமான பொறுப்பும் பிரக்ஞையும் இல்லாமல் கண்டபடி எடுக்கப்பட்டு கண்டபடி தொகுக்கப்பட்டவை. அவற்றுக்கு கலைரீதியாக எவ்வித மதிப்பும் இல்லை. இன்றைய ஜான் உண்மையில் அவரை பல்வேறு நிழலொளி தளங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வழியாகவும் இதழாளர்களின் குறிப்புகள் வழியாகவும் உருவாக்கப்பட்ட ஒரு விருப்பப் பிம்பம் மட்டுமே. உண்மையான ஜானுக்கு அதற்கும் சம்பந்தமே இல்லை. குறிப்பாக ஜான் சற்றும் கலகக்காரர் அல்ல. அவர் அழுத்தமான மரபுவாதி, பலசமயங்களில் பழமைவாதியும்கூட. அவரது கலகம் என்பது தொண்ணூறு சத குடிகாரர்களையும்போல கவன ஈர்ப்புக்காகவும், தன்னை ஒரு குறிப்பிட்ட வகையில் காட்டிக் கொள்வதற்காகவும், அபூர்வமாக ஒரு சுயவதைத்தன்மையுடனும் செய்யப்படும்  நாடகம் மட்டுமே. 

ஜானின் படங்களை வைத்து அவரை நாம் மதிப்பிடலாம். போலி அறிவுஜீவிகள் அவரைப்பற்றி உருவாக்கும் பிம்பங்களை வைத்து அல்ல. இந்தப்போலிகளுக்கு  எந்தக் கலைப்படைப்¨ப்பம் ரசிக்கவும் மதிப்பிடவும் சக்தி கிடையாது. பிறர் போட்டுவிட்டுப்போவதை பொறுக்கி சட்டைப்பைக்குள் வைத்துக்கொள்ள மட்டுமே அறிந்தவர்கள். மற்ற எந்த மொழியைவிடவும் கேரளத்தில் போலிப்புரட்சியாளர்கள் போலி கலகக்காரர்கள் அதிகம். இன்றைய ஜான் அவர்களின் பதாகை ஒரு நல்ல கலைப்படைப்பை ரசித்த எவருமே ஜான் ஒரு கலைப்படைப்பை உருவாக்கினார் என்று சொல்ல மாட்டார்கள்.

மலையாள சினிமா ஒரு பட்டியல்

மலையாள சினிமா கடிதங்கள்

சுவரில் முட்டி நிற்கும் மலையாள சினிமா.

தமிழ் சினிமா: தொழில்நோக்கு தேவை

முந்தைய கட்டுரைகவிதை,கென்வில்பர்-இரு கடிதங்கள்
அடுத்த கட்டுரைஜான் ஆபிரகாம்:மீண்டும் ஒரு கடிதம்