இணையத்தின் உலகுக்கு நான் 1998 வாக்கில் என் நண்பர் பெங்களூர் மகாலிங்கம் அவர்கள் மூலம் இழுத்து வரப்பட்டேன். அவர் அப்போது மைசூரில் தொலைபேசித்துறையில் கணிப்பொறிப்பயிற்சியாளராக பணியாற்றி வந்தார். இணையத்தின் சாத்தியங்களை அவர் எனக்குச் சொன்னார், நான் நம்பவில்லை. ஆனால் நான் அப்போது எழுத ஆரம்பித்திருந்த பின் தொடரும் நிழலின் குரல் நாவலுக்கு ருஷ்ய கம்யூனிச வரலாற்றைப்பற்றி நிறைய தகவல்கள் தேவைப்பட்டன. அவற்றை நான் இணையம் மூலம் பெற்றுக்கோண்டேன்
சிலவருடங்கள் கழித்து 2000 த்தில் அமெரிக்க வாசகர் ஒருவரின் உதவியால் நான் ஒரு கணிப்பொறி வாங்கினேன். அப்போது அது என் பணவசதிக்கு அப்பாற்பட்ட ஆடம்பரம். நண்பர் நீலகண்டன் அரவிந்தன் வந்து என்னை தமிழ் தட்டச்சுக்குப் படிப்பித்தார். அவர்தான் முரசு அஞ்சல் என்ற சேவையை எனக்கு அறிமுகம் செய்தார். அன்று முதல் இன்றுவரை நான் எழுதுவது முரசு அஞ்சல் எழுத்துருவில்தான்.
நான் பேசும் வேகத்தில் தட்டச்சுசெய்பவன். ஒருமணிநேரத்தில் இரண்டாயிரம் சொற்கள் வரை. அது தட்டச்சில் ஒரு சாதனை என்கிறார்கள். கணிப்பொறியில் தட்டச்சிட ஆரம்பித்தபின்னர் என் எழுதும் முறை மாறிவிட்டது. முதல்விஷயம் எழுதும் அளவை மனம் கணக்கிட்டபடியே இருக்கிறது. சொற்கணக்கு வரிக்கணக்கு. பத்தி அளவுகள் சீராக அமைகின்றன. ஒரு பத்தி என்பது ஒரு கருத்து என்பதனால் கட்டுரைகளின் அமைப்பு சமவிகிதம் கொண்டதாக ஆகியது
மேலும் எழுதுவதை மாற்றுவது செம்பிரதி எடுப்பது ஆகியவற்றில் அதிக நேரம் வீணாவது தடுக்கப்பட்டது.நான் எழுதும் பக்கங்கள் சீராக இருக்கவேண்டும் என விரும்புகிறவன். பிழைகளை நான் வெட்டுவதில்லை. முன்பெல்லாம் நான் எழுதும் காகிதப் பக்கங்களில் பிழைகள் மேல் காகிதத்தைவெட்டி ஒட்டுவேன். கணிப்பொறி சீரான எழுத்துப்பக்கங்களை அளித்து என் படைப்பூக்கத்தை தக்கவைக்க உதவுகிறது.
இப்போது பலவகையான எழுத்துருக்கள் வந்திருப்பதாகச் சொல்கிறார்கள். பலவற்றை நானே சோதித்துப் பார்த்துவிட்டேன். முரசு தான் எனக்கு வசதியாக இருக்கிறது. அத்துடன் முரசு எழுத்துருவை பிற இதழ்கள் பதிப்பகங்களின் எழுத்துருக்களுக்கு எளிதில் மாற்றிக்கொள்ளலாம். முரசு எழுத்துருவை உருவாக்கிய முத்து நெடுமாறன் குழுவினருக்கு நான் கடமைப்பட்டவன்.
இணையத்தில் எனக்கு முதலில் அறிமுகமான தளம் திண்ணை. அதில் நான் தொடர்ந்து பலவருடங்கள் எழுதியிருக்கிறேன். எனக்கு இணையவெளியில் ஒரு வாசகர் வட்டம் உருவாக திண்ணை ஒரு காரணம். அதன் ஆசிரியர்கள் கோ.ராஜராம், துக்காராம் ஆகியோர் என் நன்றிக்குரியவர்கள்.
ஆனால் இணைய விவாதங்களில் நான் மனக்கசப்புகளையே அதிகம் சந்தித்தேன். இணையம் ஒரு சுதந்திர வெளி. நமக்கு சுதந்திரத்தை எப்படி பயன்படுத்துவதென தெரியாது. திண்ணை விவாதங்களிலும் ·பாரம் ஹப் என்ற தளத்தின் விவாதங்களிலும் நான் நேர்மையாகக் கலந்துகொண்ட நாட்களில் பலர் புனைபெயரில் வந்து என்னை வசைபாடினார்கள். என் கருத்துக்கள் திரிக்கப்பட்டன. மீண்டும் மீண்டும் நான் சொல்லியவற்றையே விளக்கிச் சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானேன்
இணைய வெளியில் ஒருவகையான மனப்பிறழ்வு அளவுக்குச் சென்று பிறரை வசைபாடும் மனிதர்கள் அதிகம் உலவுகிறார்கள். இவர்களுக்கு கருத்துக்கள் எவையும் முக்கியமில்லை. எதையாவது ஒன்றை தங்கள் தரப்பாக வகுத்துக்கொண்டு வசையை கொட்டவேண்டியதுதான் இலக்கு. இணையம் அவர்களுக்கு ஓர் இடத்தை அளிக்கிறது. அவர்கள் ஒளிந்து கொள்ள வாய்ப்பும் அளிக்கிறது. தங்கள் ஆழ்மனதில் உள்ள காழ்ப்புகளை எல்லாம் இணையத்தில் கொட்டுகிறார்கள்.
பொதுவாக இணையவசைகளின் பாணியை கவனித்தால் ஒன்று புரியும். எந்தவகையிலும் பொருட்படுத்தத்தக்க எதையுமே எழுதும் திராணி இல்லாதவர்கள்தான் அதிகமும் தீவிரமான விமரிசனங்களில் ஈடுபடுகிறார்கள். குறிப்பிடத்தக்க விஷயங்களை எழுதிப் புகழ்பெற்றவர்கள்தான் இவர்களின் இலக்கு. இது ஒருவகை ஆற்றாமையின், தாழ்வுணர்ச்சியின் வெளிப்பாடு மட்டுமே. ஆனால் இத்தகைய மனச்சிக்கல்கள் இணையம் அளிக்கும் அற்புதமான விவாத வாய்ப்பை பயன்படுத்தமுடியாமல் செய்கின்றன.
இணையத்தில் பிறரை கீழ்த்தரமாக வசைபாடுவது, அவர்களின் அந்தரங்கங்களை தோண்டி எடுத்து திரித்து வெளியிடுவது, எழுதவரும் பெண்களை அவமதிப்பது என்பது ஓர் இயக்கமாகவே நெடுநாள் நடைபெற்றது. இன்றும் பெண்கள் இணைய வெளிக்கு வர அச்சப்படும் நிலை உருவாகியது. இவையெல்லாம் பெரியார் பெயரால்,தமிழியத்தின் பெயரால் சிலரால் செய்யப்பட்டன. பெரியாரியம் பேசும் கணிசமானவர்கள் இவற்றை ஆதரிக்கவும் செய்திருக்கிறார்கள். அவை தங்களை திருப்பித்தாக்கியபின்னர்தான் அவர்கள் விபரீதத்தை உணர்ந்தார்கள்.
அவ்வகையில் இணையம் தமிழ்ச்சூழலில் கருத்துப்பரிமாற்றத்துக்கான சாத்தியங்களை இல்லாமலாக்கி நம் பொதுவெளியை சீரழித்தது என்றே சொல்ல வேண்டும். இன்றும் தமிழில் இணையத்தில் ஒரு பொது உரையாடல் சாத்தியம் என நான் நம்பவில்லை.இணையத்தில் தமிழில் வரும் எதையுமே நான் நம்புவதில்லை. இந்நிலைக்கு முன்னோடி இணையப்பதிவாளர்கள்தான் பொறுப்பு.
இன்று இணையத்தில் தமிழில் நமக்கு வாசிக்கக் கிடைப்பவற்றில் தொண்ணூறு விழுக்காடு குப்பையே. ஒன்று அவதூறுகளும் வசைகளும் கலந்த விஷமயமான குப்பைகள். அல்லது எந்தவிதமான பொருளும் இல்லாமல் போகிறபோக்கில் எதையாவது எழுதித்தள்ளும் சருகுக் குப்பைகள். எந்த ஒரு தலைப்பிலும் இணையத்தில் தமிழில் தேடினால் ஒன்று அல்லது இரண்டு பதிவுகளே பொருட்படுத்தக்கூடியவையாக இருக்கும். பெரும்பாலானவை அரட்டையோ வசையோ ஆகவே இருக்கும். சந்தேகமிருந்தால் தேடிப்பாருங்கள்.
தமிழ்ச்சமூகத்தின் குப்பைக்கூடையாக இணையத்தை ஆக்கியவர்கள் படித்த , பதவிகளில் இருக்கும் உயர்நடுத்தர வற்கத்தினரே என்பது நாம் வெட்கி தலைகுனியவேண்டிய விஷயம். இன்று ஒருவர் தமிழ் இணையத்தை மட்டும் பலவருடங்கள் வாசித்தார் என்றால் அவர் எந்தவகையான பொது அறிவும் இலக்கிய அறிவும் இல்லாத பாமரராகவே இருப்பார். தமிழில் உள்ள பல மூத்த வலைப்பதிவர்களின் வலைப்பூக்களை பார்த்தால் இது தெரியும், ஒரு பொதுப்புத்தி கொண்ட வாசகன் மதிக்கும் ஒரே ஒரு பதிவுகூட இல்லாமல் பல வருடங்களாக அவை செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன! இத்தனை வருடங்கள் அவர் குமுதம் போன்ற ஒரு வணிக அச்சிதழை வாசித்தால்கூட அடுத்தகட்டத்தை நோக்கி நகர முடியும்.
தமிழ் இணைய உலகின் இந்த இழிநிலையை மாற்ற என்ன செய்யமுடியும் என்றுதான் இப்போது கவனிக்க வேண்டும். நமக்குப்பிடிக்காதவர்களை தாக்குகிறார் என்ற ஒரே காரணத்துக்காக அவதூறுகள் செய்பவரையும், வசைபாடுபவரையும் நாம் அங்கீகரித்து ஆதரித்தோம் என்றால் தமிழுக்கு ஒரு பெரும் கெடுதலை அளிக்கிறோம் என்று நாம் உணர்ந்தாக வேண்டும்.
இந்த எதிர்மறை அம்சங்களைத் தாண்டி நான் இணையத்தை என் கருத்துச் செயல்பாடுகளுக்காகவும் இலக்கியச்செயல்பாடுகளுக்காகவும் சாதகமாகப் பயன்படுத்த இயலும் என்றே எண்ணியிருக்கிறேன். 2003 ல் நான் நண்பர்கள் உதவியுடன் மருதம் என்ற இணைய இதழை ஆரம்பித்தேன். நிதிப்பற்றாக்குறையால் அது நின்றது. சென்ற இரண்டு வருடங்களாக என் இணையதளம் வந்துகொண்டிருக்கிறது. [www.jeyamohan.in]
என் இணையதளம் வெளிவர ஆரம்பித்தபின்னர் எனக்கு கிடைத்த வாசக கவனம் இருமடங்காக ஆகியிருக்கிறது என்று சொல்லலாம். தினம் பல்லாயிரம்பேர் இதை வாசிக்கிறார்கள். எதிர்வினையாற்றுகிறார்கள். அவர்களுடன் நான் தொடர்ந்து உரையாடி என்னை புதுப்பித்துக் கொண்டிருக்கிறேன். என் நண்பர் சிறில் அலெக்ஸ் இந்த இணையதளத்தை நடத்துகிறார்.
இணையத்தில் இன்று செய்யவேண்டிய பணிகள் பல உள்ளன என்று எனக்குப் படுகிறது.
1. அபிதான சிந்தாமணி போன்ற புராதனமான கலைக்களஞ்சியங்களை இணையத்தில் ஏற்றவேண்டும். அவை அகர வரிசைப்படி முழுமையான உள் இணைப்புகளுடன் அமைந்திருக்க வேண்டும்.
2. பெரியசாமி தூரன் உருவாக்கிய ‘தமிழ் கலைக்களஞ்சியம்’ இணையத்தில் ஏற்றப்படவேண்டும்
3. தமிழ் இலக்கிய, தத்துவக் கலைச்சொற்களுக்காக ஒரு இணையதளம் வேண்டும். அது விக்கிபீடியா போல ஒரு திறந்த அமைப்பாக இருக்கலாம். யாரும் சொற்களை இணைக்கலாம். ஒரு பொதுவான மேற்பார்வை மட்டும் போதும். ஆனால் அதற்கு ஒரு ‘டெம்ப்ளேட்’ தேவை. அ. கலைச்சொல். ஆ. அதன் ஆங்கிலச் சொல். இ. அதன் பொருள். ஈ. ஏதேனும் நூலில் இருந்து ஒரு மேற்கோள் ஆகியவை அளிக்கப்பட வேண்டும். அதில் தேடும் வசதி தேவை. ஆங்கிலச்சொல்லை கொடுத்தால் அதற்கான தமிழ்ச் சொற்களும் தமிழ்ச்சொல்லைக் கொடுத்தால் ஆங்கிலச் சொல்லும் தெரியவேண்டும்.
4. தமிழகக் கல்வெட்டுகளை புகைப்படமாகவும் தமிழிலும் ஆங்கிலத்திலும் உள்ளடக்க விவரங்களுடனும் இணையத்தில் ஏற்றவேண்டும்.
5. தமிழக சைவ வைணவ ஆலயங்களைப்பற்றிய ஒரு நல்ல இணையதளம் தேவை. இவற்றையும் விக்கி போலவே திறந்த நிலையில் உருவாக்கலாம். தானாகவே அவை வளரும் வண்ணம்.
இவை எதிர்காலத்தில் நிகழலாம். நிகழவேண்டும்.
மறுபிரசுரம்/ முதற்பிரசுரம் 2009 ட்சம்பர்