அன்புள்ள திரு.ஜெயமோகன் அவர்களுக்கு..
நலம் அறிய விருப்பம் சார் … இன்று “லங்கா தகனம்” குறு நாவலை வாசித்தேன்.இது கண்டிப்பாக ஒரு அறையில் உட்கார்ந்து எழுதிய ஒரு புனைவாக இருக்க முடியாது, எண்பது சதம் அனுபவம் சார்ந்த கதை என்றே நினைகிறேன்.அச்சன்மடத்தில் (பெயர் வேண்டுமானால் புனைவாக இருக்கலாம்) ஒரு குறிப்பிட காலம் தங்கி அங்கு இருந்த கலைஞர்களின் அனுபவங்களை நுணுனர்வாக உணர்ந்தவரால் மட்டுமே இதை எழுதமுடியும்.
உங்கள் கதைகளை படிக்கும்போது குறிப்பட்ட சிலர் அவர்கள் கதாபத்திரங்கள் அல்ல உண்மையில் எங்கோ இருகிறார்கள் என்றே நினைதது கொள்வேன். இதில் வரும் அனந்தன் ஆசானும் அம்மாதிரியான ஒரு ஆளுமை.அனைத்து நாட்டரியல் அர்பணிப்பான கலைஞர்கள் தற்காலத்தில் அடைந்து வரும் வறுமை , அவமானம் கொண்டுள்ள ஒரு பிரதிநிதி யாக ஆசான் எனக்கு தெரிகிறார்.
“நான் வாளியில் நாயி சோறுடன் வெளிய வர ஆசான் இலையை நீட்டினார். சற்றுக் கூசிபோய்,”ஆசானே இது நாயிசோறு” என்றேன்.
ஆசான் சிரித்தபடி “ஓகோ” என்றார்.
நான் அவரை தாண்டிசென்ற பிறகு திரும்பி பார்த்தேன். எட்டி எட்டி உள்ளே பார்த்து கொண்டு இருந்தார் ”
— மேற்கொண்டு தொடர முடியாமல் செய்து விட்ட கண நேர சம்பவம் இது ..
தன்னை இங்கு ஒருவன் உணமையிலேயே மதிக்கிறேன் என்பதை உணர்ந்த ஆசான் ராமன் குட்டியிடம் அடவு ஆடும் முன்பு வாங்கும் சத்தியம் கலங்க வைத்து விட்டது.
பூரணத்துவம் பற்றி கலைஞர்கள் பேசுவதாக வரும் உரையாடல் பகுதி காதில் கேட்டு எழுத்தில் கொண்டு வந்தமாதிரி இருந்தது.
நீங்கள் ஒரு கட்டுரை நூலில் ஒரு குட்டி கதை குறிப்பிட்டு இருப்பீர்கள் , “சிறையில் அடைபட்ட ஒரு ஓவியன் சிறையில் வானம் வரைந்து அதிலிருந்து தப்பித்து விடுதலை யாவது மாதிரி ..” ஆசானும் இதில் அடைவது அந்த நிலையை தான் ..
—
Regards
dineshnallasivam
அன்புள்ள தினேஷ்
நீங்கள் தொடர்ந்து கதைகளை வாசித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. என் மனதை என்றும் கவர்ந்த விஷயங்களில் ஒன்று கலையின் கணத்தில் கலைஞன் கொள்ளும் விஸ்வரூபம். ஒருமுறை தோல்பாவைக்கூத்து ஒன்றை பார்த்தேன். அந்தக் கலைஞர் அந்த தருணத்தில் வெளிப்படுத்திய ஞானமும் நகைச்சுவை உணர்ச்சியும் அவரை பத்து மனிதர்களுக்குச் சமானமாக்கின. ஆனால் மறுநாள் காலையில் தலையில் நார்ப்பெட்டியுடன் ஊர்த்தெருவில் நெல் கேட்டு சென்றபோது பிச்சைக்காரராகவே இருந்தார்
கலை மனிதனை தேவனாக்குகிறது. கலையை மதிக்கத்தெரியாத சமூகம் தேவனை பிச்சைக்காரனாக ஆக்கிவிடும்
ஜெ
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு..,
நலம் அறிய ஆவல் சார் ; நேற்று “டார்த்தீனியம் ” குறு நாவலை வாசித்தேன் இது மிக வீரியமாக என்னை ஆக்கிரமிக்க போகிறது என்ற பயம் தெரியாமல் ; மிக இயல்பாக உரையாடல் கதைபோக்குடன் ஆரம்பித்த கதை ; நகைச்சுவை உணர்வு உள்ள அப்பா , அதற்கு டொபிக் ஆக வரும் அவரது மனைவி, அவரது பொய் கோபம் , ஒரு நல்ல கம்பானியன் ஆன அவரது பையன் ,நாய் , பசுமாடு ,கன்னுக்குட்டி ;; அவர்களது உரையாடல்களை வைத்து ஒஹ் !! இப்படியே அழகாக நல்ல பொறமை படுகின்ற குடும்பம் பற்றிய கதையாகும் என்று நினைதது கொண்டு வாசித்தேன்
சரி! ஏதோ செடி ஓன்று வருகிறது என்று கண்டு கொள்ளாமல் தொடர்ந்தேன்;;முதல் மற்றும் இரண்டு பகுதிகளில் ;; ஆனால் மாமரம் பட்டு போறது , கனகு, மக்ருணி இரண்டும் இறந்தவுடன் கதைபோக்கு சட சடவென வேறு தளம் நோக்கி போகிறது .அடுத்து அடுத்து டார்த்தீனியம் மூலமாக வரும் சம்பவங்கள் மாடுகளின் இறப்பின் சமயம் கருப்பனின் ஊளை ,ராஜுவின் அப்பா வின் பிறழ்வு அம்மா எதையுமே கவனமற்று சமையல் கூடமே கதி என்று முடங்கி கிடப்பது
ஒரு கிர்ர் .. என்ற ஒலியுடனே தான் தொடர முடிந்தது .அதனை தொடந்து சூழலை விவரிக்கும் விதம் …
“எங்கள் வீட்டுக்கு யாருமே வராமல் போனார்கள்,சிறு கூட்டம் எப்பொதும் வேடிக்கை பார்த்தது .நானே யாரிடம் பேசினாலும் அவர்கள் இயல்பு மறந்து விறைப்புடன் பதில் சொல்லிவிட்டு நகர்ந்தனர் ,முதுகுக்கு பின்னால் பேசிக்கொண்டனர் ,எங்கள் வீட்டு செடி மரம் எல்லாம் பட்டு போய் விட்டது “..,சூனியமான காட்சியாக உருவெடுத்து கொண்டே போகிறது ..
“எப்ராய் டாக்டர் இது மாதிரி செடி ஒன்றும் தரவில்லை அவரது வடிவில் வேறு ஏதாவது ..” வேர்த்து விட்டது
.”ரயிலின் தடக்.. தடக் … ஓயாத தாளம் அல்ல அது என் நரம்பின் வலி “,ராஜு அம்மாவின் மரணம் பற்றிய விவரிப்பு , “கண்களுக்கு பின்னால் தெரிந்த கன்னம்கரிய மனித உருவம் ,இலைகளின் கருமைக்குள் அமிழ்ந்தது அதனை தொடர்ந்து ரோமம் இல்லாத நாய் – ராஜுவின் அப்பாவை கற்பனை செய்து பார்க்கும்போது நிஜமாகவே “பஹ் பஹ்” என்று தான் இருந்தது .ராஜு வின் உடலில் ஏற்படும் மாற்றம் செக் அப் செய்யும் டாக்டர் சொல்வது எல்லாம் இன்னும் இன்னும் நடுக்கத்தை அதிகபடுதுவது. அதிலிருந்து மீள ஒரு சராசரி செக்ஸ்சை மருந்தாக பயன்படுத்துவது பயங்கரத்தின் இடையிலும் நான் ரசித்த ஓன்று.
இருபது வருடம் கழித்து மீண்டும் ஊருக்கு அவன் வரும் போது எதிர்கொள்ளும் நிகழ்வுகள் , அந்த வீட்டை பற்றி குறிப்பிடும் போது “கருநாகம் கோழிமுட்டையை குடித்து விட்டு அதன் ஓட்டை சுற்றி நெரிப்பது போன்ற ” டார்த்தீனியம் தின் அந்த வீட்டை இறுக்கி ஆக்கிரமிப்பு போதும், ” அதன் கிளைகளை சுற்றி கொத்து கொத்தாக விதைகள்” போதும் இதுக்கு மேலயும் தொடர வேண்டாம் என்று சொல்வதற்கு முன்பு முடிந்து விட்டது
தொடர்ச்சியாக இரண்டு முறை படித்துவிட்டு எழுதுகிறேன் தொடரும் என்று நினைகிறேன்.. இன்னும் கொஞ்ச நாளைக்கு வேறு எந்த கதையையும் வாசிக்க முடியாமல் செய்து விட்டது டார்த்தீனியம் .உங்கள் “படைப்பு ஊக்கத்தின் தற்செயல்” எவ்வளவு முயன்றாலும் இந்த மாதிரி ஒரு மிக அச்சமூட்டும் ஒரு புனைவை எதிர்காலத்தில் எழுதி விட முடியாது .
ஒரு சந்தேகம் சார் ..,ஒரு மனிதன் உடம்பில் முழுக்க ரத்தத்தை எடுத்து விட்டு வேறு ரத்தத்தை செலுத்தி அவனை உயிர் பிழைக்க வைக்க முடியுமா?.அந்த பழைய ரத்தத்தின், எச்சத்தின் ஒட்டுதல் சிறிதும் இல்லாமல் செய்து விட முடியுமா என்ன ?
Regards
Dineshnallasivam
அன்புள்ள தினேஷ்
டார்த்தீனியம் ஒரு மிகுபுனைவு மட்டுமே. அதில் அறிவியல் அம்சம் இல்லை.
பொதுவாக கதைகள் எழுத்தாளனின் வாழ்க்கையுடன் நேரடியாக சம்பந்தபப்டுவதில்லை. சுற்றிவளைத்தே அவனுடன் சம்பந்தப்படும். அவன் அதற்குள் ஒளிந்திருப்பான். டார்த்தீனியத்தில் என் கதை இல்லை. ஆனால் நான் இருக்கிறேன்
ஜெ
அன்புள்ள ஜெயமோகன் ,
வணக்கம்.
சங்கச் சித்திரங்கள் குறித்த எனது கருத்துக்களை எனது பதிவில் இட்டுள்ளேன். உங்கள் பார்வைக்கும்.
http://jeyakumar-srinivasan.blogspot.com/2009/11/blog-post_18.html
நன்றி.
ஜெயக்குமார்