காந்தியின் பிள்ளைகள் கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

வணக்கம்

காந்தி பற்றி தாங்கள் எழுதுவதைப் படித்து வருகிறேன்.  எழுத்தில் வேகம் இருக்கிறது.  காந்தியின் குழந்தைகள் கட்டுரையில் இரண்டு விசயங்களைக் குறிப்பிடவேண்டும்.

1. காந்தி சம்பந்தப்பட்ட இயக்கம் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் அல்ல.  அங்குள்ள இந்தியர்களால் ஆரம்பிக்கப்பட்ட நேட்டால் இந்தியன் காங்கிரஸ்.  காந்தி அதனுடைய செயலாளர்.  நேட்டால் இந்தியன் காங்கிரஸ் சார்பாகவே அவர் 1896 ஆம் ஆண்டு இந்தியா திரும்பி வந்தார்.

2. காந்தியின் இரண்டு குழந்தைகள் இந்தியாவிலும் இரண்டு குழந்தைகள் தென் ஆப்பிரிக்காவிலும் பிறந்தார்கள்.  1893 ஆம் ஆண்டு காந்தி தென்னாப்பிரிக்கா செல்கிறார்.

தொடர்ந்து இது போல் எழுதவேண்டும் என்பதே என்னுடைய ஆவல்.

A.ANNAMALAI
Director, Gandhi Study Centre
Thakkar Bapa Vidyalaya Campus
58 Venkatanarayana Road
T.Nagar, Chennnai 600 017
Tamilnadu, India
Ph:044-24340607 / 9444183198
visit us at : www.gandhistudycentre.org

அன்புள்ள அண்ணாமலை அவர்களுக்கு

தங்கள் கடிதத்துக்கு நன்றி. பல இடங்களில் ஆப்ரிக்க இந்திய காங்கிரஸ்  என்றே எழுதியிருக்கிறேன். இந்த பிழை கவனப்பிழை, திருத்திக்கொள்கிறேன். கட்டுரைகளை வாசித்து கருத்துச் சொன்னதற்காக மகிழ்கிறேன். இந்தக் கட்டுரைகள் நூலாகவிருக்கின்றன. வேறு பிழைகள் இருப்பின் தெரிவிக்கவும்.

ஜெ

அன்புள்ள ஜெயமோகன்,

மணிலால் காந்தி பற்றிய பதிவு அருமை. மணிலாலின் ஆளுமை வியக்க வைக்கிறது. இதற்கு முன் ஹரிதாஸ் பற்றி மட்டுமே ஓரளவு தெரியும். சமீபத்தில் வந்த Gandhi My Father என்ற திரைப்படமும் ஹரிதாஸ் பற்றி அறிய உதவியது. ராமதாஸ், தேவதாஸ் பற்றிய குறிப்புகளையும் சீக்கிரமே எழுதுங்கள்.

சிறு வயதில் கே.ஏ. அப்பாசின் இன்குலாப் என்ற புத்தகம் படித்திருக்கிறேன். உப்பு சத்யாகிரகத்தை பற்றி மில்லரும், அவருக்கு உதவியாக கதாநாயகனும் கண்டு எழுதும் பகுதிகள்தான் அந்த நாவலின் உச்சம் என்று சொல்ல வேண்டும். அதைப் பற்றி நான் எழுதிய ஒரு சிறு குறிப்பு இங்கே. http://koottanchoru.wordpress.com/2009/06/11/கே-ஏ-அப்பாசின்-இன்குலாப்/

நீங்கள் சுதந்திரப் போராட்ட நாவல்களைப் பற்றியும் எப்போதாவது எழுத வேண்டும்!

அன்புடன்
ஆர்வி

 

அன்புள்ள ஆர்வி

சுதந்திரப்போராட்ட நாவல்கள் இந்திய மொழிகளில் குவிந்துகிடக்கின்றன. ஒப்புநோக்க தமிழில்தான் குறைவு. எழுதுவது ஒரு பெரும் பணி. பார்ப்போம்

ஜெ

அன்புள்ள ஜெயமோகன்,
எவ்வளவு அற்புதமாக எழுதியிருக்கிறீர்கள்! மஹாத்மாவை முழுமையாகப் புரிந்துகொண்ட ஒருவர்தான் இப்படி எழுத முடியும்.
“என் நெஞ்சில் வாளைப் பாய்ச்சி விட்டான்” என்று பல அப்பாக்கள் தன் மகன்களைப் பற்றிக்  கூறியதாகப் படித்ததுண்டு.  ஆனால் “காந்தியின் ஆத்மாவில் இறங்கிய கட்டாரி போன்றவர் ஹரிலால்” .  என்று யாரும் எழுதியதாக நான் படித்ததில்லை. உண்மை இதயத்திலிருந்து வரும்போது சுட்டெரித்துவிடும்.  அப்படித்தான் தோன்றுகிறது எனக்கு.
அன்புடன்
கிருஷ்ணமூர்த்தி

அன்புள்ள கிருஷ்ணமூர்த்தி

இக்கட்டுரைகளில் உள்ள தகவல்கள் பெரும்பாலும் சாதாரணமாக எங்கும் கிடைப்பவையே. என்னுடைய பங்களிப்பு என்பது முதலில் மொழி. இரண்டு, காந்தியை நான் சமகாலம் சார்ந்து புரிந்துகொண்டிருக்கும் விதம், அதன் தருக்கமுறை.

ஆனால் மொழிதான் ஒரு எழுத்தாளனின் சிறந்த பங்களிப்பாக இருக்க முடியும் இல்லையா?

ஜெ

உயர்திரு ஜெ மோ சார்,

வணக்கம்.

காந்தி குறித்த எந்த வாசிப்பும் எனக்கு இல்லை. தங்களுடைய இணைய தளத்தில் தாங்கள் காந்தி பற்றி எழுதிவரும் கட்டுரைகளே எனது காந்தி பற்றிய முதல் வாசிப்பு ஆகும். காந்தி குறித்து தாங்கள் எழுதும் எழுத்து அனைத்துமே இதுவரை எனக்கு தர்க்கப்பூர்வமாக ஏற்புடையதாகவே இருந்தது வந்தது.

ஆனால் ஹரிலால்  விசயத்தில் காந்தி   மீது எந்தபிழையும் இல்லாததை போன்ற ஒரு தோற்றத்தையே காந்தியின் பிள்ளைகள் -1 என்ற கட்டுரை எனக்கு ஏற்படுத்து கிறது.   ஹரிலால் பிறந்தது முதல் அவரின் பதின்ம வயத்து வரை காந்தியின் பார்வையில் வளரவில்லை என்று தெரிய வருகிறது. ஒரு மனிதனின் பண்பியல் தொகுப்பு இக்காலகட்டத்தில் தானே உருவாகிறது.அப்படி தங்கள் குழந்தைகளின் பண்பியல் தொகுப்பை நன்றாக உருவாக்கித்தருவது பெற்றோரின் கடமை அல்லவா?அப்படி ஹரிலாலை தங்களின் பக்கத்திலேயே அல்லவா காந்தி வைத்திருந்திருக்கவேண்டும்.அல்லது பொது வாழ்க்கைக்காகவா காந்தி ஆரம்பத்தில் ஹரிலாலை பிரிந்து இருந்தார்? லவ்கீக     வாழ்க்கைக்காக அல்லவா பிரிந்து இருந்தார். அது காந்தியின் தவறுதானே. மீண்டு காந்தி ஹரிலாலை திருத்த மேற்கொண்ட முயற்சி தும்பை விட்டு விட்டு வாலைபிடிப்பது போலதானே. இன்னும் மற்ற பிள்ளைகளைப்பற்றி தெரியவில்லை அவர்களைப்பற்றியும் வாசிக்க ஆவலாக உள்ளேன்.

நான் ஏதாவது தவறுதலாக எழுதியிருந்தால் மன்னிக்கவேண்டுகிறேன்

பணிவுடன்

பெருமாள்

கரூர்

 

அன்புள்ள பெருமாள்

காந்தியை அல்லது வேறு யாரையும் பாதுகாக்கும் பொறுப்பு எனக்கு இல்லை. அதுபோன்ற அகங்காரமும் இல்லை. நான் எழுதுவது காந்தியை புரிந்துகொள்ளும் முயற்சி மட்டுமே.

இன்றும் இந்தியாவில் தங்கள் குழந்தைகளை பணி நிமித்தம் தொழில் நிமித்தம் பிரிந்துவாழவேண்டிய கட்டாயத்தில் உள்ள தந்தையர் பலகோடி இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் குற்றவாளிகள் என்று சொல்ல முடியுமா என்ன? சென்ற நூற்றாண்டில் கடல்கடந்துசெல்வதென்பது கிட்டத்தட்ட தொடர்பற்றுப் போவது. ஆனால் அப்படிச் சென்ற பல லட்சம்பேர் தமிழ்நாட்டிலும் இருந்தார்கள். வாழ்க்கை அப்படித்தான் செல்கிறது

ஜெ

அன்புள்ள ஜெயமோகனுக்கு
மணிலால் முஸ்லீம் பெண்ணை முத்தமிட்டதற்காக காந்தி இரு நாட்கள் உண்ணாவிரதம் இருந்ததை படித்த போது பட்டென்று சிரிப்பு வந்தது. என் விழுமியங்கள் மற்றும் எதிர்பார்ப்புகளை காந்தி மீது நான் ஏற்றிப் பார்ப்பதில்லை தான். ஆனாலும் இந்த முரண்பாடு பற்றி கேட்க வேண்டும்:

”மணிலால் தென்னாப்ரிக்காவைச் சேர்ந்த ·பாத்திமா கூல் என்ற இஸ்லாமியப்பெண்ணை மணம் புரிய விரும்பியதை காந்தி ஏற்கவில்லை. மணிலால் இந்திய, இந்துமுறைப்படி வளர்க்கப்பட்டவர் என்பதனால் அது சிக்கலையே உருவாக்கும் என காந்தி எச்சரித்தார். பின்னர் வேறுபல இந்து முஸ்லீம் மணங்களை அங்கீகரித்த காந்தி மணிலாலை ஒரு போராளியாக மட்டுமே கண்டமையால்தான் இந்த தடையை விதித்தார்.”

அப்படி சிக்கல் உண்டென்றால் (தவளை மனிதர்களுக்கும் எப்போதும் அது உண் டு) அடுத்தவர்களுக்கு ஏற்பட்டால் பரவாயில்லையா? அல்லது தன் மகனைப் போல் பிறரை வலியுறுத்த வேண்டாம் என்று நினைத்தாரா? காந்தி அப்படி தயங்குபவர் அல்ல எனத் தோன்றுகிறது. என்ன நினைக்கிறீர்கள்?

Gandhi: A Political and Spiritual Life (Viva Books Pvt Ltd) என்ற நூலில் காதரீன் டிட்ரிக் மற்றொரு காரணம் சொல்கிறார். மணிலால் இஸ்லாமிய பெண்ணை மணந்தால் அது இந்தியாவில் இந்து-இஸ்லாம் உறவை பாதிக்கலாம்.  Indian Opinion இதழின் ஆசிரியக் குழுவில் அவரை நீக்க வேண்டி வரலாம். மணிலால் இந்தியாவுக்கு திரும்ப முடியாமலே போகலாம். தேவ்தாஸ் ராஜகோபாலாச்சாரியின் மகளை காதலித்து மணமுடிக்க விழைய ஆச்சாரியும் காந்தியும் பூணூல் குறுக்கே வருகிறதே என்று வன்மையாக தடுக்கிறார்கள். ஆனாலும் ஆறு வருடங்களுக்குப் பின் சாதிப் பிடி தளர மணமுடிக்கிறார்கள். காந்தி சாதி மதத்தை நம்பினாலும் இல்லை என்றாலும் அது பொருட்டல்ல. சாதி மதம் பெண்ணியம் போன்ற வாதக்கூண்டுகளில் காந்தியை நிறுத்துவதில் பலன் இல்லை. வரலாற்றின் ஒழுக்கில்ல அவரை நிறுத்தி விலகலுடன் கவனிப்பதே அறிதலின் சுவாரஸ்யம்.
Regards
R.Abilash
http://thiruttusavi.blogspot.com/

 

அன்புள்ள அபிலாஷ்

இந்த விஷயங்களை தெளிவாகவே எழுதிவிட்டேன். பெரும்பாலும் இத்தகைய விஷயங்களில் நாம் நம்முடைய முன்முடிவுகளை மாற்ற விரும்புவதில்லை.

காந்தி அவரது ஆரம்பநாட்களில் சாதி மத மரபுகளை மீறக்கூடாது என எண்ணுபவராக இருந்தார். அவரது கருத்தில் மெல்ல மெல்லத்தான் மாற்றம் வந்தது.

காந்தி அவர் நம்பிய அனைவருக்குமே பிரம்மசரியம் தேச சேவைக்காக அர்ப்பணிப்பு போன்ற நிபந்தனைகளை விதிப்பவராகவே இருந்தார். அவர்கள் எந்த அளவுக்குக் கடைப்பிடித்தார்கள் என்பது வேறுவிஷயம். அதைப்பற்றி அவர் ராமதாஸுக்கு எழுதிய கடிதத்தில் சொல்வதைப் பார்க்கலாம்

ராஜாஜி தேவதாஸுக்குக் குறுக்கே நின்றார் என்பதெல்லாம் கற்பனை. தேவதாஸ் ராஜாஜியின் விருப்பத்திற்குரியவராக நெடுங்காலம் முன்னரே இருந்திருக்கிறார். ராஜாஜி எப்போதுமே லட்சுமியின் திருமணத்துக்கு குறுக்கே நிற்கவில்லை. காந்தியும் குறுக்கே நிற்கவில்லை. மாறாக நிபந்தனைதான் விதிக்கிறார். அது வெறும் காமம் அல்ல என அவர்களை நிரூபிக்கச் சொல்கிறார். அனைத்தையும் விட மேலாக அப்போது லட்சுமி மிக இளம்வயதானவர். என் அக்ட்டுரையிலேயே அது சொல்லப்பட்டிருக்கிறது.

அந்த நிபந்தனையை எல்லாருக்குமே காந்தி விதித்திருக்கிறார். நம்மூர் ஜெகன்னாதந்கிருஷ்ணம்மாள் தம்பதிகளுக்கு வரை

ஜெ

அன்புள்ள ஜெயமோகன் சார்,

இரண்டு விஷயங்கள் பற்றி உங்கள் கருத்தை அறிய ஆவலாக உள்ளேன்.

1. காந்தி மை ஃபாதர் (Gandhi My Father) என்ற படத்தில் ஹரிலாலின் நிம்மதியற்ற வாழ்க்கைக்கு காந்தியின் larger than life பிம்பமே காரணம் என்று விளக்குவதாக உள்ளது. நீங்கள் எழுதியது போல் காந்தி ஒரு “மோசமான தந்தை” என்றே சொல்கிறது.
அது Harilal Gandhi: A life என்ற நாவலின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படம். நாவலை எழுதியவர் சந்துலால் பாகுபாய் தலால் என்பவர். அதைப்பற்றி உங்கள் கருத்து.

2. பிற மொழி நாவல்கள், குறிப்பாக கன்னட மொழி நாவல்கள் படித்ததுண்டா ?
அதில் “ஆவரணா” என்ற நாவல் வெளிவந்த 5 மாதத்தில் 10 மறுபதிப்பு பதிக்கப்பட்டு ரெக்கார்டு பிரேக் செய்ததாம். அதை  எழுதியவர் எஸ்.எல். பைரப்பா என்பவர். அதைப்பற்றி உங்கள் கருத்து.

நன்றி,
ஷங்கர்.

அன்புள்ள ஷங்கர்

கரிலால் காந்தி குறித்த திரைப்படம் நான் பார்க்கவில்லை. நீங்கள் சொன்னபின் இணையத்தில் பார்த்தேன். அது ஃபெரோஸ் அப்பாஸ் கான் என்பரால் எடுக்கப்பட்ட படம். அவரே எழுதிய காந்தி காந்திக்கு எதிராக என்ற நாடகத்தின் திரைவடிவம். அதற்கு பாகுபாய் தலாலின் நூலின் தரவுகள் எடுத்தாளப்பட்டுள்ளன

காந்தியை ஒரு குறிப்பிட்ட கோணத்தில் சித்தரிப்பதற்கு என்ன நோக்கம் உள்ளது, அது காந்தியைப்பற்றிய தகவல்களுடன் பொருந்துகிறதா என்பதே கேள்வி. மற்றபடி காந்தி ஒரு வரலாறு இன்று.

எஸ்.எல்.ஃபைரப்பாவைப்பற்றி இந்த இணையதளத்தில் நிறைய எழுதியிருக்கிறேன். கன்னடத்தின் முதன்மையான படைபபளி அவர். தமிழில் அவரது இருநாவல்கள் கிடைக்கின்றன

1. ஒரு குடும்பம் சிதைகிறது

2 பருவம் [ பாவண்ணன் தமிழாக்கம்]

ஜெ

முந்தைய கட்டுரைமேகமலை
அடுத்த கட்டுரைஒரு வலைப்பதிவு