கவிதை,கென்வில்பர்-இரு கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்

‘மொத்த மொழியியலாலும் ஒரு கவிதையை முழுக்க வாசித்துவிடமுடியாது’ உங்கள் வரி. முழுமையறிவும் கென் வில்பரும் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று எனக்குப்புரியவில்லை. கவிதையை வாசிப்பதற்கு மொழியியல்போன்ற அறிவுத்துறைகள் உதவாது என்கிறீர்களா?

truetechman

அன்புள்ள நண்பருக்கு

இரு நாட்டுப்புறக் கதைகள். இரண்டையும் ஏ.கே.ராமானுஜம் கவிதையாக எழுதியிருக்கிறார்.

முதல்கதை. மங்கோலியாவில் ஒரு மன்னன் இருந்தான். அவன் வேட்டைக்குப் போகும்போது ஒரு பறவையின் பாடலைக் கேட்டான். அந்த பாடல் அவனுக்கு வேண்டும்போலிருந்தது. அந்தப்பாடலுக்காக அந்தப் பறவை அவனுக்கு தேவையாயிற்று. அந்தப்பறவைக்காக அது இருந்த மரம் தேவையாயிற்று. அந்த மரத்துக்காக அது நின்ற மண். அந்த மண்ணுக்காக அந்தக் காடு. அந்தக் காட்டுக்காக அந்த நாடு. அந்த நாட்டுக்காக அங்குள்ள மக்கள் அவர்களுடைய உடைமைகள். அவர்களுக்காக அவர்களின் மொழியும்  அவர்களின் பல்லாயிரம் கால வரலாறும் தேவைப்பட்டது. ஆகவே அவன் தன் ரதகஜதுரக பதாதிகளுடன் படைகொண்டுசென்றான். திரும்பிவரவேயில்லை

கவிதையை அறிவுபூர்வமாக விளக்க வேண்டும் என்றால் அந்த அருவ அனுபவத்தில் தொடங்கி அது நின்றிருக்கும் மொத்தப் பண்பாட்டையும் வரலாற்றையும் பேசி முடிக்கவேண்டும். அப்போதும் மிச்சமிருக்கும்

இன்னொரு கதை. அங்குலப்புழு சுண்டி சுண்டி தெறித்து காட்டை அளந்துகொண்டிருப்பதைக் கண்டன பிற மிருகங்கள். எங்களையும் அளந்து சொல்லு என்று கேட்டன. அது எருமையின் கொம்பையும் யானையின் துதிக்கையையும் ஒட்டகச்சிவிங்கியின் கழுத்தையும் அளந்து சொல்லியது. கலைமானின் சிக்கலான கொம்புகளையும் நரிவாலின் முடிகளையும்கூட அளந்து சொன்னது. ‘சரி என் பாட்டையும் கொஞ்சம் அளந்து சொல்’ என்றது குயில். குயில் பாட அங்குலப்புழு அளக்க ஆரம்பித்தது. குதித்து வளைந்து நெளிந்து இழுபட்டு சுருங்கி அது கடைசியில் இறந்தே போயிற்று.

கவிதையை தர்க்கத்தால் மதிப்பிட்டுவிட முடியாது. கவிதைக்கு புறவய வாசிப்பே இல்லை. கவிதையின் மீதான வாசிப்பும் அருவமான தளத்திலேயே நிகழ்கிறது. நல்ல கவிதை விமரிசனம் என்பது அருவமான தளத்தில் வாசித்து மதிப்பிட்டதை தர்க்கபூர்வமாகப் பகிர்ந்துகொள்ள முனைவது மட்டுமே.   

*
அன்புள்ள ஜெயமோகன்

எப்படி இருக்கிறீர்கள். குடும்பத்தினர் நலமா? அஜிதன் சைதன்யாவை நான் கேட்டதாகச் சொல்லவும்

உங்கள் இணையதளத்தில் மேலைச்சிந்தனையில் உள்ள இன்றைய போக்குகள் கவனப்படுத்தப்பட்டிருப்பதைக் கண்டு மகிழ்ச்சி. உங்கள் குறிப்பில் மாதவாச்சாரியரின் பெயர் விடுபட்டிருப்பதைக் கண்டு ஆச்சரியம் கொண்டேன். [மாதவாச்சாரியாரின் சர்வ தர்சன சம்கிரஹம்] அவர் இந்திய சிந்தனையை அறிவார்ந்த முறையில் ஒருங்கிணைத்தார் என்று படுகிறது

இன்றைய நவீனசிந்தனைகள் [கல்வித்துறை வசதிக்காக] சிந்தனைகளை கூறுகளாக பிரிப்பதிலும் பயன்நோக்கம் கொண்ட முறைமைகளை உருவாக்குவதிலும் ஈடுபட்டிருக்கின்றன. கென் வில்பர் முன்வைக்கும் மெமிஸ் [Memes] கோட்பாட்டை கவனித்தால் நீங்கள் எளிமையாக அவரை நிராகரித்துவிடுவீர்கள். [மனித இனங்களை பிரித்து அடையாளபப்டுத்த பலவகை நிறங்களை பயன்படுத்தும் முறை]. கென் வில்பரும் அறிவை அடுக்குமுறையாக ஆக்கும் வழிமுறையையே நாடுகிறார். மெமிஸ் வரைபடத்தில் நாம் எங்கு பொருத்தப்படுவோம் என்று நோக்கும்போதே நாம் நிராகரிப்பை ஆரம்பித்துவிடுவோம். மேலைச்சிந்தனை விஷயங்களை தொகுத்துக்கொள்ளும் வழிமுறைக்குச் சிறந்த உதாரணம் அது.

கென் வில்பர் முன்வைப்பது முழுமறுப்புவாதத்துக்கு எதிரான ஐரோப்பிய சிந்தனை மரபு ஒன்றை என்று சொல்லலாம். உதாரணமாக அவர் மனிதகுலத்துக்கு ஜார்ஜ் புஷ் கூட ஒரு பங்களிப்பை ஆறுகிறார் என்று சொல்கிறார்[ எனக்கு அதை உள்வாங்கிக்கொள்ளவே முடியவில்லை] அவர் யோகா நூலுக்கு எழுதிய ஒரு முன்னுரை [லியான் லிட்டில் எழுதிய நூல் என நினைக்கிறேன்] எனக்குப் பிடித்திருந்தது. ஆனால் கென் வில்பர் இந்திய சிந்தனை பற்றி எழுதிய பகுதிகள் ஏமாற்றமளிப்பவை. அவர் நிறைய படித்தவர் என்பது உண்மை. சிந்தனை ஒருங்கிணைவு பற்றிய அவரது முயற்சிகள் பெரிதும் கிறித்தவ தொனி கொண்டவை.இன்று ஏராளமான புதிய சிந்தனையாளர்கள் கென் வில்பரைப் பின்பற்றி செல்கிறார்கள். ஜெராட் டைமண்ட்[ Gerard Diamond] எழுதிய Guns. Germs and Steel ஒரு நல்ல உதாரணம்.

இந்தியச்சூழலில் அறிவை இணைத்து நோக்கும் முயற்சிகள் எப்போதும் உள்ளன. மிகச்சாதாரணமான தளத்தில்கூட நாம் அவற்றைக் காணலாம். உதாரணமாக 1950களில் பி.ஏ. ஆனர்ஸ் பாடத்திட்டத்தில் கலைகளையும் அறிவியலையும் இணைத்து பாடமாக வைத்திருந்தார்கள்.. அறிவில் உள்ள கறாரான துறைப்பிரிவினை எல்லாம் பிற்பாடு வந்ததே. எனக்கென்னவோ ‘அனைத்தையும் பற்றிய கோட்பாடு’ என்பதே [Theory of Ecerything] ஒருவகை அதிகபிரசங்கித்தனம் என்று படுகிறது

அன்புடன்

இளங்கோ கல்லானை

கென் வில்பர்:இருகடிதங்கள்

முந்தைய கட்டுரைமலையாள சினிமா ஒரு பட்டியல்
அடுத்த கட்டுரைஜான் ஆபிரகாம்:ஒரு கடிதம்