கண்ணதாசன்

அன்புள்ள ஜெ,

நலம். நலந்தானா?

கவிஞர் கண்ணதாசன் குறித்த உங்கள் பார்வையை அறிய ஆவலாக உள்ளேன். ஒரு கவிஞராக, எழுத்தாளராக, பாடலாசிரியராக, பேச்சாளராக, தத்துவ மாணவராக, அரசியல்வாதியாக அவரை எப்படி பார்க்கிறீர்கள் என்று. அவரது பாடல் வரிகள் ஓரிரு தலைமுறைகளையே கட்டிப்போட்ட, அமைதி தந்த , ஆறுதலளித்த, ஆவேசம்கொள்ளச்செய்த ஒரு இயல்பாகவே இருந்திருப்பதாக நினைக்கிறேன். மேலும் அவரது தமிழ் மொழியின் மீதான ஆளுமை என்னைப்போன்றவர்களை மிகவும் வியக்க வைக்கிறது.

அவரை சந்தர்பங்களின் அரசன் என்று சொல்லலாமா?.

ராம்.

அன்புள்ள ராம்,

கவிஞர்களைப்பற்றிய எந்த ஒரு மதிபீட்டையும் விரிவான விமரிசன ஆய்வுகள் வழியாகவே முன்வைக்க வேண்டும். சுருக்கமான அபிபிராயங்கள் தவறான விவாதங்களையே உருவாக்கும். ஏதேனும் ஒரு தருணத்தில் கண்ணதாசனைப்பற்றி விரிவாக எழுதும் உத்தேசம் உண்டு.

ஒரு கவிதையை மதிப்பிடுவதற்கான அளவுகோல்கள் என்ன? உலகம் முழுக்க வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு கவிதைக்கோட்பாடுகள் உருவாகியிருக்கின்றன. அனைத்தையும் எளிமையாகச் சுருக்கிப்பார்த்தோமென்றால் அடிப்படையில் மூன்று பொது அளவுகோல்களை  முன்வைக்கலாம். 1. வடிவம் [ Form ] 2. தரிசனம் [Vision]  3.புதுமை. [Novelty]

ஒரு கவிதையை நாம் ரசிக்கும்போது பெரும்பாலும் அதன் வடிவத்தையே ரசிக்கிறோம். ‘எப்டிச் சொல்றான் பாரு கவிஞன்’ என வியக்கும்போது கவிதை சொல்லப்பட்டிருக்கும் முறையே நம்மைக் கவர்ந்திருப்பது தெரிகிறது. அதேவரிகளை வேறுவகையில் சொல்லியிருந்தால் அதை கவிதை என்றே சொல்லியிருக்க மாட்டோம். அந்த அமைப்பு அல்லது வெளிப்பாட்டையே வடிவம் என்கிறோம்.

வடிவம் என்பது மொழிவெளிப்பாட்டின் ஒரு முறை. மொழியில் உருவாக்கப்படும் ஒரு கட்டமைப்பு. அந்த வடிவத்தில் உள்ள துல்லியமே நம் கவிதையனுபவத்தை தீர்மானிக்கிறது. பலவரிகளில் சொல்லவேண்டியதை சுருக்கமாகச் சொல்லி, அல்லது வேறொன்றைச் சொல்லி குறிப்புணர்த்தி, அல்லது சொல்லவேண்டியதை மௌனமாக்கி நம் கற்பனைமூலம் அங்கே செல்லவைத்து கவிதை தன் கவிதை அனுபவத்தை நிகழ்த்துகிறது.

எது நல்ல வடிவம் என்றால் எது சிறப்பாக அதன் விளைவை நிகழ்த்துகிறதோ அது தான். எது நல்ல சிறகு என்றால் எது நன்றாகப் பறக்கச்செய்கிறதோ அது. அழகான கவிதை என்றால் என்ன, அழகாகச் சொல்லப்பட்ட கவிதை. அழகான வடிவம் கொண்ட கவிதை. கவிதையின் அழகியல் என்பது முழுக்க முழுக்க வடிவம் சார்ந்ததே.

ஆனால் ஒரு கவிதையை நாம் மகத்தானது என்று சொல்லவேண்டுமென்றால் அது  அழகானதாக இருந்தால் மட்டும் போதாது. ஆழமும் இருக்க வேண்டும் என்கிறோம். அது நம் வாழ்க்கையுடன் சம்பந்தப்படவேண்டும். நம் அனுபவங்களை விளக்க வேண்டும். நாம் அறிந்தவற்றை மேலும் விரிவாக்க வேண்டும். நமக்குத்தெரியாதவற்றைச் சொல்ல வேண்டும். நாம் உள்வாங்கிய அனைத்தையும் புத்தொளியில் தொகுத்துக்காட்டவேண்டும். இதையே கவிதையின் தரிசனம் என்கிறோம்.

கவிதையின் தரிசனம் ஓர் அறிவியல் சூத்திரம் போல நிரூபிக்கப்பட்ட உண்மையாக இருக்க வேண்டும் என்பதில்லை. அது விரிவான தர்க்கத்துடன் முன்வைக்கப்படவேண்டுமென்பதில்லை.  அதை கவிஞன் சொல்லும்போதே நாம் அதனுடன் இணைந்துகொள்கிறோம். ஆம் ஆம் என்று அதை ஏற்று நம் அகம் முழங்குகிறது. கவித்துவ தரிசனம் என்பது ஒரு மின்னல் மட்டுமே. அந்த மின்னலில் அது உலகை முழுக்கக் காட்டித்தருகிறது.

சிறந்த கவிதையின் தரிசனம் அதன் வடிவத்தை தீர்மானிக்கிறது. அதன் வடிவம் அந்த தரிசனத்தை உருவாக்குவதற்காக மட்டுமே பிறந்தது போலிருக்கிறது. அவற்றைப் பிரிக்கவே முடியாமல் ஒன்றாகவே நாம் எந்நிலையிலும் உணர்கிறோம்.

மூன்றாவதாக அந்தக் கவிதை நாம் அதுவரை வாசித்த கவிதைகளில் இருந்து சற்றேனும் புதிய அனுபவமாக இருக்கவேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். கம்பன் தமிழின் மகத்தான கவிதைகளை எழுதிவிட்டான். அதன் பின்னரும் நாம் ஒரு கவிஞனிடம் என்ன எதிர்பார்க்கிறோம்? புதுமையை. நேற்று இல்லாதிருந்த ஒன்றை. அடுத்த கட்ட நகர்வை.

இன்றைய ஒரு நல்ல கவிதை இந்த அளவுகோல்களால்தான் இயக்பாகவே அளவிடப்படுகிறது. உண்மையில் ஒரு நல்ல வாசகன் இந்த மூன்று அளவுகோல்களையும் குறித்து அறிந்திருக்காமல் இருக்கலாம். ஆனால் எப்படி கவிதையை அவன் மதிப்பிடுகிறான் என்று பார்த்தால் தெரியும் இவைமூன்றும் அவனில் செயல்பட்டுக்கொண்டிருப்பது.

கண்ணதாசன் இருபதாம் நூற்றாண்டின் பெரும்புகழ்பெற்ற தமிழ்க் கவிஞர். பாரதிக்குப் பின்னர் அவரே தமிழில் மிக அதிகமாக ரசிக்கப்பட்ட, விரும்பப்பட்ட, கவிஞர். அதற்குப்பின்னர் இன்றும் எந்தக் கவிஞரும் அவர் அளவுக்குப் புகழ்பெறவில்லை என்பதே உண்மை. கண்ணதாசனில் ஒரு கவிஞராக ஓங்கி நிற்கும் சாதக அம்சங்கள் என்னென்ன?

ஒன்று, அவரது அபாரமான மொழித்தேர்ச்சி. தமிழின் செய்யுள் வடிவம் மிகவும் சிக்கலான ஒன்று. முக்கியமான கவிஞர்களின் கவிதைகள்கூட தளைதட்டுவதைக் காணலாம். அதை நான் எப்போதும் பொருட்படுத்த மாட்டேன். ஆனால் வடிவத்திற்குள் கவிதையை நிறுத்தவேண்டும் என்று மொழியை ஒடித்தும் நீட்டியும் இழுத்தும் நெளித்தும் செய்யும் வித்தைகள் என் நரம்புகளை பதறச் செய்கின்றன. சூட்கேஸ¤க்குள் பிணத்தை அடைப்பதுபோல தளைக்குள் சொற்றொடர்களை வளைத்து வைத்தவை பல கவிதைகள்.

பாரதியின் பல கவிதைகளில் தளைதட்டுவதைக் காணலாம்.பல கவிதைகளில் மிக எளிய ஒரு விஷயம் எதுகைக்காகவும் மோனைக்காகவும் நெளிக்கப்பட்டு இழுக்கப்பட்டிருப்பதைக் காணலாம். ஆனால் கண்ணதாசனின் கவிதைகளில் எங்கும் வடிவம் அவருக்கொரு சிக்கலாக இருந்ததே தெரிவதில்லை. தேனை ஊற்றுவது போல சத்தமில்லாத ஒழுக்காக கவிதை நிகழ்கிறது. பல தமிழ்க்கவிதைகளில் மொழி நகரப்பேருந்தில் நெரிசலில் பயணிக்கும் அழகி போலிருக்கின்றது. கண்ணதாசனின் கவிதையில் அது பொற்தேரில் பயணம் செய்கிறது.

கண்ணதாசனின் மொழியழகு பாரதி உட்பட எந்த சமகாலக் கவிஞனுக்கும் சாத்தியப்படவில்லை. அவரை அவ்வகையில் நான் குமரகுருபரரிடம் மட்டுமே ஒப்பிடுவேன். அலுக்காத நலுங்காத துல்லிய மொழி. சொல்குறைவோ சொல்மிகையோ இல்லாத மொழி. வைரப்படிகம் போல எல்லா பட்டைகளும் ஒளிவிடும் அழகிய சொற்கள்.

தமிழுக்கு என்று ஓர் ஒலியழகு உண்டு. நூற்றாண்டுகளாக கவிதையெனும் பேராறு ஓடி ஓடி முத்தாக மாறிவிட்ட கூழாங்கற்கள் போன்றவை தமிழ்ச் சொற்கள். சிலப்பதிகாரத்தை விட சீவகசிந்தாமணியின் மொழி அழகு. சிந்தாமணியை விட கம்பன் அழகு. கம்பனைவிட ஆண்டாள் அழகு. ஆண்டாளை விட மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழ் அழகு.

சரிகைக்குள் செந்நூல் போல தமிழுக்குள் ஓர் இசை ஓடுகிறது. அந்த அக இசை சுருதிபிசகாமல் ஒலிக்கும்போதே நாம் தமிழின் பேரழகை முழுதுணர்கிறோம். ஒரு கவிஞனின் அகத்தில் அந்த இசை ஒலித்துக்கொண்டிருந்தால் மட்டுமே அவன் கவிதையில் அது இருக்கும். பாரதியின் மிகப்பெரிய வல்லமை என்பது அவன் மொழியில் அந்த இசை இருந்தது என்பது. பாரதிதாசனில் ஒருபோதும் கைகூடாது போனது அது.

ஆனால் கண்ணதாசனில் வசனத்தில் கூட  அந்த இசை ஒலித்தது. வெண்கலம் மணியாக ஆகவேண்டியதில்லை. தாழாகவோ கலமாகவோ இருந்தாலும் அதில் இசை இருப்பதை நம் அகம் அறியும். அதுதான் தமிழ்ச் சொற்களின் இயல்பு. அந்த அக இசையின் அழகை நாம் கண்ணதாசனின் பாடல்களில் மீண்டும் மீண்டும் காண்கிறோம்.

கம்பனையும் ஆண்டாளையும் அறிந்த மனம் கண்ணதாசனின் வரிகளை தேன் என ரசிக்காமலிருக்காது. அது உருவாக்கும் மயக்கம் தேன் தன் இன்மையாலேயே கள்ளானது போல. சங்குக்குள் எப்போதுமிருக்கும் கடலோசை போல அவரது சொற்களில் தமிழ் என்ற பேரமைப்பின் நாதம் இருந்தது. கண்ணதாசனின் எந்தக்கவிதையும் வடிவக்குறை கொண்டதல்ல. அவை நம் கோயிற்சிற்பங்கள் போல. கால்நகமும் முழுமையாக அமைந்த சிலைகள்.

ஆனால் கண்ணதாசனின் கவிதைகள் ஒருபோதும் மகத்தான தரிசனங்களின் ஒளியில் சுடர்பெற்றதில்லை. தரிசனம் என்பது ஒரு கருத்து அல்ல. கவிமனம் பொங்கி உச்சமடைந்து முழுவாழ்க்கையையும் ஒரே வீச்சில் கண்டு சொல்லும் எதுவுமே தரிசனமே

தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்

தருமம் மறுபடியும் வெல்லும் என்ற

மருமத்தை நம்மாலே உலகம் கற்பும் இன்று

கட்டுண்டோம் பொறுத்திருப்போம் காலம் மாறும்!

என்பது எளிய கருத்தே. ஆனால் காலாதீதமான உணர்வெழுச்சி. அத்தகைய மகத்தான தருணம் ஒன்று கண்ணதாசன் கவிதையில் நமக்குக் கிடைக்காது. கனிந்த விவேகத்தின் குரல் அதில் ஒலிக்கும். நடைமுறை ஞானத்தின் உச்சம் வெளிப்படும். பேரிலக்கியங்கள் சொல்லும் எண்ணங்கள் எளிமையாக வந்து அமர்ந்திருக்கும். ஆனால் கவிநெஞ்சம் ஒரு செம்பருந்தாக ஏறி மலைமுகடின் பொன்னொளியில் அமர்ந்திருக்கும் மகத்துவம் நிகழ்வதில்லை.

கண்ணதாசன் நம் பெரும் கவிமரபின்  எதிரொலிகளினாலேயே நம்மைக் கவர்கிறார். அவரது அபூர்வமான எல்லா வரிகளுக்கும் பின்னால் சித்தர்களோ பக்தர்களோ இருப்பார்கள். நம் மூதாதையர் ஆவேசித்தெழுந்து பேசும் நம் குலப்பாடகர் அவர்.மிகமிகப் பழமைமையானவர். அவரில் நாம் கபிலனையும் பத்ரகிரியையும் கேட்கிறோம்.

அதுவே கண்ணதாசன் கவிதைகளின் ஆகப்பெரிய குறை. அவரது கவிதைகளில் எங்கும் புதுமை என்பதே இல்லை. பாரதியை விடவும் முந்தைய காலத்தில் இருக்கிறது கண்ணதாசனின் கவிதை. நவீனகாலத்தைய கவிதை தாண்டிவந்த தூரங்களை, எடுத்துக்கொண்ட அறைகூவல்களை, கண்ணதாசன் கவனிக்கவில்லை.

அழகுக்காக மட்டுமே அளிக்கப்படும் அடைமொழிகளை நவீன கவிதை தவிர்த்து நூறாண்டு தாண்டியபின் எழுதிய கண்ணதாசனின் கவிதைகளில் சாதாரணமாக நாம் அவற்றைக் காணலாம். வெறும் வருணனைகளை தவிர்த்து வருணிப்பதன் வழியாக சூழலை படிமங்களாக ஆக்கும் சவாலை கவிதை எதிர்கொண்டு அரைநூற்றாண்டு தாண்டியபின்னரும் கண்ணதாசன் சலிப்பின்றி வருணிக்கிறார். கவிதை உவமைகள் உருவகங்கள் போன்ற அணிகளை எல்லாம் படிமங்களாக ஆக்கிக்கொண்ட பின்னரும் கண்ணதாசன் அணிகளையே சார்ந்திருக்கிறார்.

ஆகவேதான் கண்ணதாசனை நம் நீண்ட மகத்தான மரபின் நினைவுகளை மீட்டிய சமகாலக் கவிஞன் என்ற அளவில் மதிக்கிறேன். ரசிக்கிறேன். ஆனால் புத்தம்புதிய கவியனுபவங்களை உருவாக்கிய பிரமிளும் தேவதேவனுமே எனக்கு சமகாலத்தைய கவிஞர்கள் ஆகிறார்கள்.

மறுபிரசுரம்/ முதற்பிரசுரம் 2009 நவம்பர் 30

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 57
அடுத்த கட்டுரைகாலம் – ஜெயமோகன் சிறப்பிதழ்