ஸ்ரீவில்லிப்புத்தூருக்குள் நுழைவதற்குள் மடவார் வளாகம் என்று ஓர் ஆலயம் கண்ணில்படும். சிவன் கோயில். அதற்கு நேர் முன்னால் ஒரு பிரம்மாண்டமான குளம். அதற்கப்பால் மேலும் பெரிய ஓர் ஏரி. காரை நிறுத்திவிட்டு அந்த ஏரிக்கரையில் ஏறி நின்று பார்த்தபோது மடவார் வளாகத்து ராயகோபுரத்தின் பிம்பம் குளத்துநீரில் தெரிந்ததைக் கண்டு வியந்து நின்றுவிட்டேன். கோபுரத்தின் காலடியில் அது கலைந்து போட்ட சேலை போல கிடந்தது. மெல்ல அலைகளில் நெளிந்தாடிக்கொண்டிருந்தது. நடனமிடும் கோபுரம். அதன் நூற்றுக்கணக்கான சுதைச் சிற்பங்கள். சிகரவளைவுகள். தெய்வங்களும் பூதங்களும் புன்னகையுடன் கூட்டு நடனமிட்டார்கள். தகழியில் முகம்பார்க்கும் பெண் போல கோபுரம் குனிந்து தன் முகத்தைப் பார்த்து பிரமித்து நின்றது.
பின்னர் ஓர் உரையாடலில் நண்பர் ஒருவர் கேட்டார், நாவலுக்கும் நவீன நாவலுக்கும் என்ன வேறுபாடு என்று. நான் சொன்னேன், அந்தக் கோபுரத்திற்கும் நீர்பிம்பத்திற்கும் உள்ள வேறுபாடுதான் என. புதிய நாவல் பழைய நாவல்களின் நடனம் மட்டுமே. தல்ஸ்தோயின் ‘போரும் அமைதியும்’ இல்லையேல் கப்ரியேல் கர்ஸியா மார்க்யூஸின் ‘நூறாண்டுக்காலத் தனிமை’ இல்லை. மண்ணில் ஊன்றிய அடித்தளத்தின் மீது நிலைகொள்ளாமல் தன்னைப்பற்றி தானே காணும் கனவில் ஊன்றி நிற்கிறது புதிய நாவல்.
அப்படியென்றால் காவியம்? காவியங்களின் இன்றைய வடிவமல்லவா நாவல் என்பது? ஆம், காவியம் அந்த மடவார்வளாகத்து கோபுரத்திற்குப் பின்னால் எழுந்து நிற்கும் மேற்கு மலைகளைப் போன்றது. வடிவமற்ற வடிவமும், நீலம் கவிந்த காலாதீத மௌனமும் கொண்டு ஓங்கி நிற்பது. அதன் காலடியில் பற்பல கோபுரங்களுடன் வீடுகளுடன் நகரம் விழுந்துகிடக்கிறது. நகரின் மீது காலையில் நீண்டு வரும் அதன் நிழல் மாலையில் சுருங்கி அதற்குள் சென்று மறைகிறது. தன் வற்றாத நீரூற்றுகளால் அது நகரத்துக்கு அமுதூட்டுகிறது. நகரம் மீது அதன் முச்சு எப்போதும் ஓடுகிறது. தூங்கும் நகரத்தின் மீது மெல்லிய பெருமூச்சின் நீராவி பரக்க அது கனிவுடன் குனிந்து பார்த்து அமர்ந்திருக்கிறது.
எல்லா கோபுரங்களும் மலைகளை நோக்கி மனிதன் செய்த யத்தனங்களே. ஒவ்வொரு ஊரிலும் உள்ள கோபுரங்களுக்கு அந்த ஊரின் மலைகளுடன் ஆழமான காட்சியுறவிருக்கிறது. பாறைகள் அடர்ந்த தென்னக மலைகளே தட்சிணபாணி கோபுரங்களாயின. சுண்ணப்பாறையடுக்குகள் கொண்ட மேற்கத்திய மலைகள் நாகரபாணியாயின. காற்றில் அரித்த பாலைவன மலைகள் மசூதிகளின் கும்மட்டங்களாயின. பனியுருகி வழியும் மலைகளை நோக்கி ஊசிக்கோபுரங்கள் எழுந்துவந்தன.
ஒரு மொழி தன் செவ்வியலாகக் கொள்ளும் காவியங்களுக்கும் அதில் உருவாகும் நாவல்களுக்கும் உள்ள பொதுவான ஒற்றுமை நுண் நோக்கில் ஆச்சரியபப்டச்செய்வது. திரு கெ.சுப்ரமணியம் அவர்களின் மொழியாக்கத்தில் [விடியல் பதிப்பகம்] வெளிவந்திருக்கும் மகாகவி தாந்தேயின் விண்ணோர் பாட்டு [ டிவைன் காமெடி ] நூலை படித்துக்கொண்டிருந்தபோது நாம் வாசித்திருக்கும் பெரும்பாலான ஐரோப்பிய பெருநாவல்களுக்கு இந்த காவியத்தில் இருந்து ஒரு நீள்கோட்டை வரைந்துவிடமுடியும் என்ற எண்ணம் ஏற்பட்டது.
வீரம் மூலமும் தியாகம் மூலமும் நரகத்திற்கும் சொற்கத்துக்கும் செல்லும் நாயகனின் பயணங்களைத்தானே அத்தனை நாவலாசிரியர்களும் சொல்லியிருக்கிறார்கள்? தல்ஸ்தோயின் நகல்வடிவமான பியரியின் பயணங்களை எண்ணிப்பார்க்கிறேன். உயர்குடிவாழ்க்கையின் களியாட்டங்கள் முதலில். அதன் பின் கிராமிய வாழ்க்கையும் ஆன்மீகநூல்களும். அதன்பின்னர் நெப்போலியனின் படைகளிடம் கைதியாகி ஒரு நீண்ட நரகப்பயணம். உயிர்த்தெழுதலில் நெஹ்லுயுடோவின் சைபீரியப்பயணம். தஸ்தயேவ்ஸ்கியின் ரஸ்கால்நிகா·பின் சைபீரியப்பயணம். மீண்டும் மீண்டும் நாம் ஐரோப்பிய நாவல்களில் இந்த ஆழ்படிமத்தின் விரிவாக்கத்தைத்தானே கண்டுகொண்டிருக்கிறோம்?
மார்ஷல் புரூஸ்டின் ‘இறந்தகாலத்தை நிவைல் மீட்டுதல்’ கூட வேறு ஒரு தளத்தில் அத்தகைய சொர்க்க-நரக பயனம்தான். அகத்துக்குள் செல்லும் யாத்திரை அது. குழந்தைப்பருவத்தின் இழந்த சொற்கம். இளமையின் கண்டடையப்பட்ட குதூகலமான நரகம். தாந்தேயின்பயணம் ஏழு அடுக்குகள் கொண்டது. நினைவுகளின் ஏழு அடுக்குகள் வழியாகச் செல்லும் மார்ஷல் புரூஸ்தின் நாவலும் அற்புதமாக அந்தப்பயணத்திற்குச் சமானமான ஒன்றையே காட்டுகிறது.
நவீன நாவல் இந்தபேரிலக்கியங்களில் இருந்து எப்படி முளைத்தெழுகிறது? இன்றையநாவலுக்கு செவ்வியல் வெகுதூரத்தில் உள்ளது. அதன்முன் பேரிலக்கியங்களாக உள்ளவை முந்தையதலைமுறையின் ஆசிரியர்கள் உருவாக்கிய படைப்புகளே. ஒவ்வொரு மொழியும் அவர்கள்தாண்டிச்செல்லவேண்டிய உச்சங்களை தன் அடுத்த தலைமுறைக்குமுன் வைக்கிறது. ஆங்கிலநாவலுக்கு ஜேம்ஸ்ஜாய்ஸின் யுலிஸஸ்.. ருஷ்யநாவலுக்கு தல்ஸ்தோயின் போரும் அமைதியும். அமெரிக்கநாவலுக்கு ஹெர்மன் மெல்வில்லின் வெள்ளைமலை. பிரெஞ்சுநாவலுக்கு மார்ஷல் புரூஸ்தின் இறந்தகாலத்தை நிவைல் மீட்டுதல்’ ஜெற்மனிய நாவலுக்கு தாமஸ் மன்னின் ‘மந்திரமலை’ ஸ்பானிஷ் நாவலுக்கு செர்வானிஸின் ‘டான்குயிஜாட்’
வங்கநாவல் தாராசங்கர்பானர்ஜியின் ‘ஆரோக்கியநிகேதனம்’. இந்திநாவல் பிரேம்சந்தின் ‘கோதான்’. கன்னட நாவல் சிவராமகாரந்தின் ‘மண்ணும் மனிதரும்’. உருதுநாவல் குர் அதுல் ஐன் ஹைதரின் ‘அக்னிநதி’. தமிழ்நாவல் தி.ஜானகிராமனின் ‘மோகமுள்’. புதியநாவலாசிரியன் அந்த பெரும்படைப்புகள் வழியாகவே தன் ஆளுமையை உருவாக்கிக் கொண்டிருப்பான். அவற்றின் வழியாகவே தன் மொழியையும் படிமங்களையும் கண்டடைந்திருப்பான். அவற்றைத் தாண்டிச்செல்லாமல் அவனால் புதிதாக எதையும் உருவாக்க முடியாது.
நான் தல்ஸ்தோயை நினைக்கும் போதெல்லாம் என் மனதில் வரும் சித்திரம் இதுதான், கண்கள்மீது கையை வைத்து தூரத்து தொடுவானைப்பார்த்து நிற்கும் நரைத்த தாடிகொண்ட கிழவர். தன் முதுமையின் அத்தனை விவேகத்தாலும் எதிர்காலம் குறித்த ஒரு கனவை உருவாக்கிக் கொண்டவர். அவரது கண்கள் அந்தக்கனவில் இரு வைரங்கள் போல எரிந்துகொண்டிருப்பதை என்னால் காணமுடிகிறது.
பழைய நாவல்கள் பெரும் இலட்சியக்கனவுகள் கொண்டவை. எதிர்காலத்தை உற்றுநோக்குபவை. எதிர்காலம் நம்பிக்கையில் ஊன்றியது. இலட்சியவாதம் கலந்த நம்பிக்கை என்பது இரும்பால் ஆன அடித்தளம் கொண்டது. அதன்மீது எழுப்பப்படும் கோபுரங்கள் என்றும் அசையாத உறுதிகொண்டவை. நிரந்தரமானவை.
பழைய வேடிக்கைக் கதை. புதிதாக குச்சிஐஸ் வந்த காலகட்டம். சந்தைக்குப்போன பாட்டி பேரப்பிள்ளைகளுக்காக இரண்டு குச்சிஐஸ் வாங்கி மடியில்கட்டிக்கொண்டு திரும்பினாள். வீட்டுக்குச் சென்று பார்த்தபோது இருகுச்சிகளும் மடியில் ஒரு குளிரும் மட்டுமே இருந்தன. முந்தைய நவீனத்துவ யுகத்தால் நமக்களிக்கப்பட்ட இலட்சியவாதத்தின் சில்லிப்பு மட்டுமே நம்முடைய கையில் இன்று எஞ்சியுள்ளது. அதன் வெறும் முதுகெலும்பும்.
இந்த வெறுமையில் இருந்தே நாம் எழுத ஆரம்பிக்கிறோம். இந்த முதுகெலும்பில் இருந்து முலைததும்பும் ஒரு பாலுட்டியை அல்லது சீறி எழும் ஒரு ஊனுண்ணியை உருவாக்கிக் கொள்ளமுடியுமா என்று பார்க்கிறோம். ஆகவேதான் நாம் நாவல்களை மீண்டும் எழுதுகிறோம்.
கல்யாண சௌகந்திக மலர் தேடிச் சென்ற பீமனின் பாதைக்குக் குறுக்காக கிடந்தது கிழ வானரம். சென்ற யுகத்தின் மாபெரும் உருவம். அதன் வாலை அசைக்ககூட முடியவில்லை பீமனால். நம் ஒவ்வொரு மொழியிலும் குறுக்கே கிடக்கிறது நம் பேரிலக்கியவாதிகளின் வால்
நாம் அவர்களால் உருவாக்கப்பட்டவர்கள். அவர்களின் மொழியால் சிந்தனையால் நம்மை கட்டமைத்துக்கொண்டவர்கள். நாம்ந் அம்மை உடைத்து மறு ஆக்கம் செய்யும்போது அவர்களை உடைத்து வார்க்கிரோம். கஜுராஹோவின் ஆலயங்களைப் பார்க்கும் போது அவற்றின் அஸ்திவாரங்களில் சிற்பங்களின் உடைந்த உருவங்கள் கன்னாபின்னாவென்று தெரிவதைக் காணலாம். அவை வேறு எங்கோ இருந்த ஆலயங்களை உடைத்துக் கொண்டுவந்து கட்டியவை. அதைப்போல உள்ளன இன்றைய ஆக்கங்கள்.
நள்ளிரவில் நாம் வீடு திரும்புகிறோம். நம்முடைய குளிர்சாதனப்பெட்டி ரீங்கரித்துக்கொண்டிருக்கிறது. அதைத்திறந்து சமைத்துக் குளிரவைத்த உணவை மீண்டும் எடுத்துச் சமைத்து உண்கிறோம். நமக்களிக்கப்பட்ட அனைத்தையும் நாம் மீண்டும் எழுதிக்கொண்டிருக்கிறோம் இல்லையா? நாம் எழுதுவதெல்லாம் நம்முடைய முன்னோர் எழுதிய நாவல்களின் மறுவடிவங்களை அல்லவா? நம்முடைய கையில் அவர்கள் தங்கல் கியூப் விளையாட்டுச் சதுரத்தின் நிறங்களை கலைத்து தந்துவிட்டுச் சென்றுவிட்டார்கள். நாம் அதை மீண்டும் அமைக்க பல்லாயிரம் பல லட்சம் சாத்தியக்கூறுகள் வழியாகச் செல்கிறோம். முடிவில்லாத வண்ணக்கலவைகளை உருவாக்குகிறோம் அல்லவா?
கிஷ் ஜென் சீன வம்சாவளியினரான அமெரிக்க எழுத்தாளர். இயற்பெயர் லிலியன் ஜென். அவரது பெர்த்மேட்ஸ் என்ற சிறுகதையை நினைவுகூர்கிறேன். ஒரு அமெரிக்க நகரத்தில் வாழும் சீன வம்சாவளியினனான 38 வயதான ஆர்ட் வூவின் கதை அது. ஒரு ‘டைனோசர்’ தொழில்துறையில் வேலை. எப்போதும் பயணம்.செல்லுமிடங்களில் ஆகக்கடைசியான தரமுள்ள ஓட்டலை ஏற்பாடுசெய்யும் பயண அமைப்பாளனிடம் அதைவிட மலிந்த அறை கிடைக்காதா என்று கேட்கும் வாழ்க்கை. கையில் கனக்கும் ஒரு பை.
ஆர்ட் வூ ஒரு தர்மசத்திரத்தில் தங்கி தன்னுடைய வியாபார வேலைச்செய்ய முயல்கிறான். வாழ்க்கையைக் ‘அணுகிக் கவனிப்பவன்’ என்று தன்னைப்பற்றி நினைத்துக்கொள்கிறான். தனக்கென சில பார்வைகள் உண்டு என்று நம்புகிறான். அந்தப்பார்வையில் முக்கியமானது எதற்குமே எதிர்வினையாற்றாமல் இருப்பது. எதையுமே உள்ளே வாங்கிக்கொள்ளாமல் இருப்பது. எப்படியாவது வாழ்க்கையின் ஒரு சந்தர்ப்பத்தைக் கடந்துசென்றுவிடுவது. அவ்வளவுதான்
ஆர்ட் வூ தன் மனைவி லிசாவை விவாகரத்துசெய்திருக்கிறான். காரணம் அவளால் அவனது ‘அணுகுமுறை’யை சகித்துக்கொள்ளவே முடியவில்லை. அவள் மீண்டும் மீண்டும் கருத்தரித்து கரு கலையும்போது அதை உணர்ச்சியில்லாமல் அணுகுகிறான் ஆர்ட் வூ. கடைசியாக அவளது நான்காவது கருவில் வளரும் குழந்தைக்கு மிக அபூர்வமான ஒரு பிறவிக்குறைபாடு இருக்கிறது என டாக்டர் சொல்கிறார். அதன் எலும்புகளில் சுண்ணச்சத்து இல்லை. ஆகவே அவை மிக மென்மையாக தொட்டாலே ஒடிந்துவிடுவதுபோல இருக்கிறது. அக்குழந்தை பிறந்தால் அதை மெல்ல தூக்கினாலே எலும்புகள் உடைந்துவிடும். அந்த அதிர்ச்சியை நிதானமாக அணுகும் ஆர்ட் வூவை லிசா பக்கத்திலேயே வரக்கூடாது என்று சொல்லிவிடுகிறாள்.
ஆனால் அவனது மேலாள் அவனை உச்ச்கட்ட இனவெறியுடன் வசைபாடுவதை வூ அதேபோலத்தான் எதிர்கொள்கிறான். அவனுடைய இளைய அதிகாரியான பில்லி ஷோர் அவனை வேலையில் வென்று துடிப்புடன் முன்செல்வதையும் அப்படியே அவன் பார்க்கிறான். அவனுக்கு வேலைபோய்விடும் தகவல் சத்திரத்தில் இருக்கும்போது கிடக்கிறது. அதிலும் அவன் ஈடுபாடு கொள்வதில்லை. ஆனால் அவன் அந்ததர்மசத்திரத்தில் சந்திக்கும் ஒரு கருணை அவனை இளகச் செய்கிறது. தன்னுடைய பாதுகாப்புக்கவசத்துக்கு அடியில் அவன் யாருமறியாமல் உருகுகிறான்.
ஆர்ட் வூவின் வாழ்க்கையில் ஒருநாள்தான் அந்தக்கதை. ஆனால் என்னை மிகவும் கவர்ந்ததும் இப்போதும் நினைவில் நிற்பதும் அந்த மையப்படிமம். எலும்புகள் உடையும் குழந்தை. வெண்ணையாலான எலும்புகள் கொண்ட ஒரு சமூகமே உருவானது போல கற்பனைசெய்துகொண்டேன். அவர்கள் மென்மையான புழுக்களைப்போல் இருப்பார்கள். அவர்கள் நடக்கமாட்டார்கள், நெளிவார்கள். அவர்கள் வாழும் இல்லங்களும் எலும்புகளை இழந்து மென்மையானவையாக ஆகிவிடும். அவையும் வெண்ணைபோலக் குழையும். நிழல்போல நடனமிடும்.
எலும்புகள் இல்லாமலான ஒரு காலகட்டத்தின் இலக்கியம் நாம் எழுதுவது. ஆகவேதான் இது நெளிந்தாடுகிறது. மல்லார்மேயின் ஒரு சிறுகதையில் ஒரு வரி. எலும்புகள் மட்டும் இல்லாமல் இருந்தால் இன்னும் சிறப்பாக மனிதர்கள் உடலுறவு கொள்ளமுடிந்திருக்கும். ஆமாம், இப்போது மனிதனுக்குச் சிறப்பாகச் சாத்தியமாவது அதுதான் போல. முயங்கிப்பின்னி நெளிந்து கொண்டிருக்கும் மனித உடல்களினால் ஆனது நமது சமகாலக் கலையின் காட்சிப்படிமம். திரைகளில் சொற்களில்….
இன்றைய நாவல் நேற்றைய நாவலின் உருகி வழியும் வடிவம் என்று சுருக்கமாகச் சொல்லலாம். நேற்றைய நாவலின் மையமழிந்த பிரதி. நேற்றைய நாவலை வைத்துக் கொண்டு ஆடும் ஒரு விளையாட்டு. புனைவு அல்ல, புனைவாடல். சமீபகாலத்த்த் தமிழ்நாவல்கள் அனைத்துமே சீரான புனைவை உருவாக்குவதற்குப் பதில் புனைவைக் கலைத்து விளையாடவே செய்கின்றன என்பதை நினைத்துக்கொள்கிறேன்.
இப்போது ராபர்ட்டோ பொலானோவின் 2666 நாவலை வாசித்துக்கொண்டிருக்கிறேன். இந்த நாவலை எப்படி உள்வாங்கிக்கொள்வது என்பதற்கு ஒவ்வொருவரும் அவரவருக்கான வழிகளை தேடிக்கொள்ளவேண்டும். என்னுடைய வாசிப்பில் இது ஒரு விசித்திரமான புராணம். புனர்ஜன்மங்கள் மூலம் சிக்கலாக்கப்பட்ட ஒன்று.
ஐரோப்பிய இலக்கியத்திற்கு கோதிக் மரபு என்ற ஒரு காலகட்டம் உண்டு. மனிதமனத்தின் அச்சங்களின் கீழ்மைகளின் வெளிப்பாடாக அமைந்த இலக்கியங்கள் அவை. கோதிக்காலகட்டம் என்பது கிறித்தவ மேலாதிக்கத்தால் வரலாறு முழுமையாகவே மறைக்கப்பட்ட காலகட்டம். வரலாற்றின் வன்முறைகள் அநீதிகள் துயரங்கள் புனிதவரலாறு என்ற பளபளப்பான திரையால் மூடப்பட்டன. அந்த புதைக்கப்பட்ட வரலாறு மானுடக் கற்பனையின் விபரீதமான எல்லா சாத்தியக்கூறுகளையும் பயன்படுத்திக்கொண்டு கதைகளாக தொன்மங்களாக விசித்திரமான படிமங்களாக முளைத்தெழுந்து வந்தது.
கோதிக் காலகட்டம் ஐரோப்பியக் கற்பனையை எப்போதுமே அதிரச்செய்கிறது. மந்திரச்சடங்குகள் ரசவாதிகள், விசித்திரமான நிலவெளிகள், கைவிடப்பட்ட மண்கோட்டைகள், மரணமில்லாத கரிய நினைவுகள், நிலா நடுங்கும் குளிர்ந்த இரவுகள். நாம் குறைந்தபட்சம் ஒரு கோதிக் நாவலையாவது படித்திருப்போம். பிராம் ஸ்டாக்கரின் டிராக்குலா..
பலகாலமாக கோதிக் நாவல்கள் மேல் ஆர்வம் கொண்டு வாசித்து வந்தவன் நான். எம்.ஆர்.ஜேம்ஸ், மேரிகொரெல்லி, ஆர்தர் மேச்சன், ராபர்ட் ஹிக்கின்ஸ்,இ.எ·ப் பென்சன் என எத்தனை ஆசிரியர்கள்… பிரபஞ்சம் மர்மமானது என்ற ஒற்றைவரியில் இருந்து ஆரம்பிக்கிறது அவர்களின் இலக்கியம். விசித்திரமான மர்மங்கள் வழியாகச் செல்லும் அந்தப்புனைவுமுறையே ஒரு மாபெரும் மர்மம்தானே என்ற எண்ணத்தில் இருந்து பிறந்த நாவல் 2666 என்று படுகிறது. எழுதப்பட்ட கண்டெடுக்கப்பட்ட பல்வேறு பிரதிகளின் பித்துப்பிடிக்கச்செய்யும் சூதாட்டமாக இருக்கிறது இந்தப்பெரிய நாவல். ஆம், மொத்த கோதிக் இலக்கியக் காலகட்டமும் நீர்நிழல்வெளியாக நெளிந்தாடுகிறது இதில்.
ஜேக்கப்பின் இந்தச் சிறிய நாவல் ‘மரங்களுக்கிடையில் ஒரு மொனாஸ்டிரி’ ஓர் ஆரம்ப முயற்சி. இது இன்றைய நவநாவலை அடைய முயல்கிறது. எழுதப்பட்ட நாவல்கள் வழியாக ஒரு நாவலை உருவாக்குகிறது இது.
ஓ.வி.விஜயனின் ‘கஸாக்கின் இதிகாசம்’ என்ற நாவல் மலையாள இலக்கியத்தின் வழியில் கிடக்கும் தூக்கமுடியாத வால். ஜேக்கப்பின் தலைமுறையைச் சேர்ந்த எந்த ஒரு வாசகனும் இந்த நாவலை வாசித்துக்கொண்டுதான் உள்ளே நுழைந்திருப்பார்கள். அந்த நாவலின் மொழி வழியாகவே சிந்திக்க ஆரம்பித்திருப்பார்கள். மரங்களுக்கிடையே ஒரு மொனாஸ்டிரி உண்மையில் கஸாக்கின் இதிகாசத்தின் ஒரு நீர் நிழல்.
பாவ உணர்ச்சி மண்டிய சமகாலத்தில் இருந்து உடைந்து விழுந்தவனாக ரவி கஸாக்குக்கு வந்திறங்குகிறான். காவி வேட்டியுடன் தனிமை நிறைந்த மனத்துடன். ஆனால் ரவியின் பிரக்ஞை கூர்மையாக இருக்கிறது. அங்கதமும் கற்பனைகளுமாக அது கசாக்கை மிக எளிதில் தன்வயப்படுத்திக்கொள்கிறது. ரவி கஸாக்கில் தேடுவது தன்னை நிகழ்த்திக்கொள்வதற்கான ஓர் இடத்தை. காலத்தில் பொருட்கள் பயணம்செய்வதன் தடையமாக தூசியைக் காணும் அவனது தரிசன மனம் காலாதீதமாக நின்றுகொண்டிருக்கும் செதலி மலையை நோக்கி மீண்டும் மீண்டும் எழுகிறது
மரங்களுக்கிடையே ஒரு மொனாஸ்டிரியின் அதுல் அர்த்தமில்லாத உழைப்பும் சலிப்பும் மண்டிய சமகாலத்தில் இருந்து உடைந்து விழுந்தவனாக மொனாஸ்டிரிக்கு வருகிறான். ரவியிடம் இருக்கும் கூர்மையும் அங்கதமும் அவனிடம் இல்லை. சலிப்பும் சோர்வும் மட்டுமே. அவன் பார்வையில் விரிவது மலைகள் காவல் நிற்கும் உயிர்த்துடிப்பான ஒரு கிராமம் அல்ல. மாறாக காலியான அறைகளுக்குள் வெறுமை நிறைந்த ஒரு மடாலயம்.
அது சென்றுபோன ஒரு காலகட்டத்தின் அடையாளம். மெல்லமெல்ல வணிகமயமாக்கப்பட்டு அடையாளம் இழக்கிறது அது. எந்த உலகில் இருந்து அதுல் தப்பி வந்தானோ அந்த உலகை நோக்கி அதுவும் சென்றுகொண்டிருக்கிறது. கடலில் இருந்து தப்ப தெப்பம் ஒன்றை அள்ளிப்பற்றியவன் தெப்பமும் கடலில் மூழ்குவதைப் பார்ப்பதுபோல அதுல் மொனாஸ்டிரியின் அழிவை பார்த்து நிற்கிறான்.
ரவி செதலியையும் கஸாக்கையும் விட்டு விட்டு மீண்டும் தன் தேடலுடன் வெளியே செல்லும்போது தன் மாயக்கற்பனையில் பெய்யும் பெருமழையில் கரையும் மொனாஸ்டிரியை நோக்கி பரிதவித்துக் கூச்சலிடும் அதுலில் இந்நாவல் முடிகிறது. முற்றிலும் புதிய ஒருகாலகட்டத்தின் பதற்றத்தை அது பதிவுசெய்கிறது.
ஜேக்கப்பின் நாவல் ஒரு நாவலாக ஆகவில்லை என்றே சொல்வேன். அது நாவலுக்கான ஆசை மட்டுமே. இன்றைய நாவல் நவினத்துவ நாவலைப்போல குறுகலான சிறிய கட்டமைப்பு கொண்டதல்ல. அது கோபுரத்தின் நிழல். ஆனாலும் கோபுரம்தான். அத்தனை சிற்ப நுட்பங்களுடனும் அத்தனை கலையழகுகளுடனும்தான் அது நெளிந்தாடுகிறது.
சென்ற செவ்வியல் காலத்து மாபெரும் நாவல்களைப்போலவே அகன்றது இன்றைய நாவல். செவ்வியல் நாவல்களைக் கலைக்களஞ்சியங்கல் எனலாம் என்றால் இவற்றை கலைக்கப்பட்ட கலைக்களஞ்சியங்கள் எனலாம். செவ்வியல் நாவல்களின் அத்தனை உழைப்பையும் அத்தனை கலைத்தியானத்தையும் இந்நாவல்களும் கோருகின்றன. எளிய சுயமைய அணுகுமுறைமூலம் இன்றைய நாவலை அடைந்துவிடமுடியாது.
அந்தச்சவாலை ஜேகப் அடுத்த நாவலில் சந்திப்பாரென நம்புகிறேன்
நன்றி
[25-11-2009 அன்று திருவனந்தபுரத்தில் ஜேக்கப் ஆப்ரஹாமின் நாவலை வெலியிட்டு ஆற்றிய உரை]
மறுபிரசுரம்