காந்திக்கும் ஹரிலாலும் கொண்ட உறவு என்பது மிக சிக்கலானதற்குக் காரணம் காந்தியின் தார்மீகச் சுமைதான். அவர் எந்நிலையிலும் முன்னுதாரணமாக இருந்தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். அந்த அழுத்தம்ன் ஹரிலாலுக்கும் இருந்தது. ஒரு எதிரி பெரியவராக இருந்தால் நாமும் பெரியவராக மாறிவிடுகிறோம் அல்லவா? காரணம் அந்த விவகாரமே பெரிதாக ஆகிவிடுகிறது. ஹரிலால் ஒரு சிறந்த உதாரணம், மனித மனம் என்பது எபொபோதும் எதிரும்புதிருமாகவே இயங்க முடியும். மனித மனத்தின் சாத்தியங்களில் மீறலும் நிராகரிப்பும் இருந்தே தீரும். மனித மேன்மை அதை நிராகரிக்கும் ஒரு தரப்பை கண்டடைந்தே தீரும்
காந்தி ஹரிலால் உறவுடன் பெரிதும் ஒப்பிட்டு வாசிக்கத்தக்க நாவல் அனந்தமூர்த்தியின் சம்ஸ்காரா. அதில் பிராணேஸச்சாரியார் அவரை முழுமையாக நிராகரிக்கும் நாரணப்பாவால்தான் தன்னை கண்டடைகிறார். முழுமை பெறுகிறார்
ஜெ
பைபிளைப் பற்றி எழுதி இருந்தீர்கள். பதினைந்து பதினாறு வயதில் பைபிளைப்
படித்தேன். எனக்கு பழைய ஏற்பாடு சுலபமாக படிக்க முடிந்தது. அது
தொன்மங்களின், இதிகாசங்களின் தொகுப்பு இல்லையா? புதிய ஏற்பாடோ போர்
அடித்தது. சாகசக் கதைகள் எதுவும் இல்லையே! புதிய ஏற்பாட்டில் என்னை
மிகவும் கவர்ந்தது ஜெஹோவாவின் மாற்றம்தான். பழைய ஏற்பாடு முழுவதிலும்
பால், தங்கக் கன்றுக்குட்டி, இந்த மாதிரி “சில்லறை” தெய்வங்களை யூதர்கள்
வழிபடுகிறார்களா என்பதைத் தவிர வேறு கவலை இல்லாத ஜெஹோவா, தன மேன்மையை
காண்பிக்க எகிப்தியர்களின் குழந்தைகளை எந்த தயக்கமும் இல்லாமல் சம்ஹாரம்
செய்யும் ஜெஹோவா ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்டு என்று
சொல்ல ஆரம்பித்துவிடுகிறார்! தான் என்ற அகங்காரம் நிறைந்த கடவுள்,
ஏறக்குறைய சுடலைமாடன் மாதிரி எனக்கு படையல் வைங்கடா இல்லாட்டி நடக்கறதே
வேறு என்று உறுமும் ஜெஹோவா, எந்த காரணமும் இல்லாமல் கேய்னின் படையலை
நிராகரித்து, அவனுக்கு பொறாமையை உண்டாக்கி எபெலை கொல்ல வைக்கும் ஜெஹோவா,
மனிதர்களிடம் அன்பை ஏசுவின் மூலம் போதிக்கிறார்! அந்த வயதில் இந்த
மாற்றமே என்னை மிகவும் கவர்ந்த விஷயம். இன்றும் வரலாறு, தொன்மம்,
இதிகாசம் என்ற முறையில் பைபிள், சாலமன், டேவிட், நோவா, மோசஸ், ஏசு,
அபோஸ்தளர்கள் எல்லாரின் கதையும் என்னை கவர்கிறது. Sermon on the mount
போன்றவை கொஞ்சம் கூட நினைவில்லை. மீண்டும் ஒரு முறை புதிய ஏற்பாட்டை
படித்துப் பார்க்க வேண்டும். (பைபிளின் தமிழும் ஆங்கிலமும் கூட
பிடித்திருந்தது.)
என்றாவது குரானையும் படித்துப் பார்க்க வேண்டும்.
ஆர்வி
அன்புள்ள ஆர்வி
பைபிள்கள் மூன்று உண்டு. யூத பைபிள். கத்தோலிக்க பைபிள். சீர்திருத்த பைபிள். கத்தோலிக்க பைபிளில் பிதா தண்டிக்கும் தன்மை கொண்ட கொடூரமான அன்பு கொண்டவர். கத்தோலிக்க பைபிளில் அவர் கருணை கொண்டவர் .இந்த மாற்றம் ஏசுவால் நிகழ்ந்தது. கத்தோலிக்க மரபில் கடவுளுக்கு பெண் தன்மையும் உண்டு. சீர்திருத்த பைபிள் மேரி இல்லாத பைபிள். ஆகவேதான் என்னால் சீர்திருத்த கிறிஸ்தவத்தை ஏற்க முடிவதில்லை
ஜெ
ஜான் பால் ‘உடலின் இறையியல்’ எனும் தொகுப்பொன்றை எழுதியுள்ளார் அதில் திருமணத்தில் உடலுறவின் அவசியம் குறித்தும் இயற்கை கருத்தடை முறை குறித்தும் விரிவாக விவாதித்துள்ளார். இதில் உடலுறவின் முக்கிய பயன்கலாக இரண்டைக் கூறிப்பிடுகிறார். ஒன்று மக்கட்பேறு, இரண்டு ஆண் பெண்ணுக்குடையேயான அன்பின் வெளிப்பாடு. இவை இரண்டும் இணைந்த உடலுறவு மட்டுமே அங்கீகரிக்கப்பட்டது. செயற்கை கருத்தடை சாதனங்களை பயன்படுத்துவது மக்கட்பேறை தவிர்த்த உடலுறவானதால் அதை கடவுளின் திட்டத்துக்கு எதிரான செயலாக வரையறுக்கிறது திருச்சபை. கடவுளின் ‘படைத்தல்’ திட்டத்துக்கு கீழ்படிந்த உடலுற்வே அங்கீகரிக்கப்பட்ட உடலுறவு.
இயற்கை கருத்தடை என்பது திருச்சபையால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகும். அதாவது பெண் கருத்தரிக்க ஏதுவான நாட்களில் ஆண் பெண் உறவு கொள்வதை தவிர்ப்பது.
‘உடலின் இறையியல்’ கீழுள்ள சுட்டியில் முழுதாக வாசிக்க கிடைக்கிறது. அவர் பக்கம் பக்கமாகச் சொல்லிச் செல்லும் விளக்கங்களை ஒற்றை வரியில் சுருக்கிவிட்டிருக்கிறீர்கள். அது முழுமையான பார்வையாயில்லை. http://www.ewtn.com/library/PAPALDOC/JP2TBIND.HTM – GENERAL AUDIENCES: JOHN PAUL II’S THEOLOGY OF THE BODY
வெறும் உடல் இன்பத்தை மட்டும் தேடும் உடலுறவு நியாயமற்றது ஆனால் தன் திருமண பந்தத்தை நிலைநிறுத்தும் பொருட்டு இறைவனின் படைத்தல் திட்டத்துக்கு கீழ்படிந்து உடலுறவு கொண்டால் அங்கே நிகழ்வது வெறும் உடல் இன்பத்துக்கான உடலுறவல்ல. அது மகத்தான செயலாகிறது. கணவனும் உறவு கொள்வதை கிட்டத்தட்ட கூடி ஜெபம் செய்வதைப் போன்றதொரு நிகழ்வாக திருச்சபை குறிப்பிடுகிறது. அது ஒரு ஆன்மிக நிகழ்வாக சித்தரிக்கப்படுகிறது. உடலின் வழி ஆன்மாவையும் இறைவனையும் உணரும் நிகழ்வாக ஜான் பால் அதை குறிப்பிடுகிறார். உடலுறவின் இலக்கு உடல் இன்பம் மட்டும் அல்ல அது தூய மனித அன்பின், இறை அன்பின் வெளிப்பாடு.
பின்குறிப்பு: நீங்கள் சொல்லியிருப்பது போல நான் கிறீத்துவ இறையியலில் தேர்ச்சி பெற்றவன் அல்ல. நான் மிக ஆரம்பகட்டத்திலேயே செமினேரியை விட்டு வெளியேறி விட்டேன். அந்தனி டி மெலோ என்னை மிகவும் கவர்ந்த ஆன்மிக குருவானார். அவரைப்போலவே அமைப்புக்கப்பாற்பட்ட கிரீத்துவையே நான் மிகவும் விரும்புகிறேன். ஆனால் அந்த கிறீத்துவை இரண்டாயிரமான்டுகள் தான்டியும் எனக்கு கொண்டு வந்து சேர்க்க அந்த அமைப்பு தேவைப்படுகிறது. அமைப்பு என்றாலே அதன் வளையும் தன்மை குறைந்துவிடுகிறது. கூட அதிகாரமும் சேர்ந்து விட்டால் சர்வாதிகாரமாகவேகூட மாறிவிடுகிறது. கத்தோலிக்கத்தின் தற்போதைய ஜனநாயக வடிவத்தின் மீது எனக்கு நம்பிக்கை உண்டு.
மனிதனை விலங்கு நிலையிலிருந்து மேம்படுத்தி அவனை சுமூக சமூக வாழ்வுக்கு ஏற்றவனாக மாற்றும் எந்த வழியும் நல்ல மார்க்கமே என உறுதியாக நம்புகிறேன். கூட ஒரு ‘ஆமென்’ சேத்துக்கலாமா? :)
சிறில் அலெக்ஸ்
உங்களுடன் சேர்ந்து ஆமென் சொல்வதில் மகிழ்ச்சிதான்
ஆம்,அவ்வாறே ஆகுக
ஜெ
அன்புள்ள ஜெ
ஒரு ஆச்சரியமூட்டும் தகவலை வாசித்தேன். பிரிட்டிஷ் பண்பாட்டில் கிபி இரண்டாம் நூற்ராண்டுமுதலே தாந்த்ரிக்க அம்சம் இருந்து வந்துள்ளது. பிரிட்டிஷ் நீதிபதியான ஜான் வுட்ரோஃப் இதை அங்கீகரித்து குறிப்பிட்டிருக்கிறார். வங்காள தாந்த்ரீக முறைகளைப்பற்றிக் குறிப்பிடும் வுட்ரோஃப் தாந்த்ரீகம் அனுமதிக்கப்படவேண்டும் என்றும் அது சமூகத்துக்கு முக்கியமானது என்றும் ஓய்வுபெற்றபின் தானும்கூட தாந்த்ரீகத்தை பரிசீலிக்கப்போவதாகவும் சொல்கிறார்
வுட்ரோஃபின் பார்வைகளும் பின்னனியும் ஆச்சரியமூட்டுபவை. இந்தியப்பண்பாட்டை புரிந்துகொள்ள முயல்பவராகவும் தன்னுடைய பாகன் வேர்களைப்பற்றிய கவனம் கொன்டவராகவும் இருந்தார். மிஷனரிகளுக்கு எதிரானவரும்கூட
இளங்கோ கல்லானை
அன்புள்ள இளங்கோ
பதினெட்டாம் நூற்றாண்டில் ப்ல ஆங்கிலேயர் திறந்த மனத்துடன் இந்தியாவையும் தாந்த்ரீகத்தையும் அறிய முயன்றிருக்கிறார்கள். நம்மூர் போலிகள் உள்ளே புகுந்து இன்றைய அவநம்பிக்கைகளையும் பதத நம்பிக்கைகளையும் உருவாக்கி விட்டார்கள்
ஜெ
அன்புள்ள ஜெயமோகன்,
உங்களின், சிறில் அலெக்ஸ்-ன் கடிதங்கள் சிந்திக்கத்தூண்டும் விதத்தில் வாசிக்க உவப்பாக இருந்தன. நன்றி. நீங்கள் இந்திய ஒழுக்கமரபில் காணப்படும் “சாமானிய தளம்—விசேஷ தளம்” என்று குறிப்பிடுபவை முக்கியமானவை என்று நினைக்கிறேன். மக்கள் குழுமங்கள், சாதிகள், ஒழுக்கமரபுகள் போன்றவைகள் குறித்து படிநிலைத்தன்மையில், அதே நேரத்தில் மிகவும் கெட்டிக்காத வகையில், நம்மிடையே இயங்கும் கருத்துருவாக்கங்கள் பற்றி கருப்பு-வெள்ளை முறையில், அல்லது “மேற்கத்திய” சிந்தனாமுறைகளை அப்படியே பயன்படுத்தி விவாதிக்கமுடியாது என்றே நானும் நினைக்கிறேன். உங்கள் கடிதங்கள் சம்பந்தமாக சிலவற்றைச் சொல்ல விரும்புகிறேன். (என் புரிதலில் தவறு இருந்தால் சிறில் அலெக்ஸ் அவர்களோ நீங்களோ சுட்டிக்காட்டலாம்). இந்திய மரபுகளுக்கும் மைய நீரோட்டக் கிறித்துவத்துக்குமான ஒரு முக்கியமான வேறுபாடு: மைய நீரோட்டக் கிறித்துவத்தில் காமம் மனிதர்களுக்கானதாக மட்டும் காட்டப்படுகிறது. ஆனால், இந்தியக் கடவுள்கள், குறிப்பாக ’இந்துக்’ கடவுள்கள் காமவட்டத்துக்கு வெளியே தள்ளிவைக்கப்படுவதில்லை. எத்தனை காமவயப்பட்ட கடவுளர் கதைகளை நாம் கேட்டிருக்கிறோம் அல்லது வாசித்திருக்கிறோம்.
மைய நீரோட்டக் கிறித்துவத்தில் மனிதர்களுக்கானதாக மட்டும் காமம் வைக்கப்படும்போது, இரண்டு விஷயங்கள் முன்னெடுக்கப்படுகின்றன: ஒன்று, நிலையாது அழியும் உடலால் மனிதன் கடவுளிடமிருந்து வித்தியாசப்படுவதால், இந்த வித்தியாசத்தைப் பயன்படுத்தி மனிதவுடல் கொள்ளும் உத்வேகமாக காமம் கட்டமைக்கப்படுகிறது. இந்தக் கருத்து retrospective ஆக முதல் வீழ்ச்சியைச் சொல்லும் விலக்கப்பட்ட கனியை மனிதன் உண்ட தொன்மக்கதையில் பொருத்தப்படுகிறது. ஆதாமும் ஏவாளும் விலக்கப்பட்ட கனியை உண்ணுதல், (சிறில் அலெக்ஸ் சொல்லுகிறபடி) ஆன்மாவுக்கு எதிரான உடல் இச்சை சார்ந்த செயலாகப் பார்க்கப்படுவது இப்படித்தான் என்று நினைக்கிறேன். இங்கே ஆன்மா-உடல் முரணில், ஆன்மாவின் பக்கம் கடவுளும், காம இச்சைக்குப் பாத்திரமான (vessel என்கிற அர்த்தத்திலும் இதைச்சொல்லுகிறேன்) உடல் கொண்டவனாக மனிதனும் வைக்கப்படுகிறார்கள். இரண்டாவதாக, காம இச்சைகள் இப்படி குறிப்பாக மனித உடல் சார்ந்ததாக மட்டுமே பார்க்கப்படும்போது, மேலிருந்து, அதாவது கடவுளிடமிருந்து அல்லது கடவுளை பிரதிநிதித்துவப்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் மதகுருமார்களிடமிருந்து, மனிதகுலத்துக்கான ஒருமித்த ஒழுக்கவிதிகள் வந்துசேரும் இடமாக ‘இயல்பாகவே’ மனித உடல் ஆக்கப்பட்டுவிடுகிறது.
காமம் ‘இந்துக்’ கடவுள்களைப் பொறுத்தவரை பலசமயம் அவர்கள் கொண்டிருக்கிற குணாம்சமே. இருவகைப் புரிதல்களுக்கு இக்கருத்தில் இடம் உண்டு. காமத்தை கடவுளின் “லீலை” என்று விளங்கிக்கொள்ளலாம். அப்போது, சாமானிய மனிதர்களின் ஒழுக்கம் இடம், குழு சார்ந்து மரபுகளால் வரையறைக்குள் கொண்டுவரப்படுகிறது. அதே நேரத்தில், கடவுளோடு அடையாளப்படுத்திக்கொண்டு, தன்னைக் கடவுளாகவே பார்க்கும் தாந்திரீக மரபுகளில், சாமானிய ஒழுக்கத்தின் சொல்லாடல்களிலிருந்து தப்பித்து காமம் வேறு வெளிப்பாடுகளையும் கண்டடைய முடிகிறது. இப்படியான வெளிப்பாடுகளுக்கு சாத்தியம் இருந்திருப்பதாலேயே (தாந்திரீகத்தை எத்தனைபேர் எக்காரணம் கொண்டு பயன்படுத்தினர், பயன்படுத்த முடிந்தது என்பதைத் தாண்டியும்), இந்திய, குறிப்பாக ’இந்து’ மரபுகளில் ஒழுக்கவிதிகள் கறாராக ஒருமித்து ஒருங்கிணைக்கப்பட்டதாக உருவாகவில்லை என நினைக்கிறேன்.
அன்புடன்
பெருந்தேவி
அன்புள்ள பெருந்தேவி,
நலமா?
இந்து மரபில் கடவுள் அல்லது பிரபஞ்சம் புரிந்துகொள்ளப்படும் விதத்தை இவ்வாறு விளக்கலாம். அது ஒருவகை ‘புரஜக்ஷன்’. தரிசனம் என்ற விளக்கின் முன்னால் மனிதவாழ்க்கைஎ ந்ற ஃபிலிம் வைக்கப்படுகிறது. அதன் விரிவாக்கமே இறையுருய்வகங்களாக பிரபஞ்சமாக இருக்கிறது. ஆகவே இங்குள்ள காம குரோத மோகங்கள் எல்லாமே பிரபஞ்ச விதிகளே. அவற்றை புரிந்துகொள்ளுதல் பிரபஞ்சத்தைப் புரிந்துகொள்ளுதலே
பிற்கால மதங்கலில், குறிப்பாக சமணத்துக்குப் பின்னர், அது அப்படி அல்ல. இங்குள்ள ஏதும் இல்லாத அதி தூய ஓர் இறைமை, ஒரு பிரபஞ்ச உருவகம் அவர்களால் உருவாக்கப்பட்டது. அதனடிபப்டையில் அதன் பிரதிநிதிகளாக நின்றவர்கள் ஒழுக்கமுறைகளை உருவாக்கினர். இந்து ஒழுக்க முறைகளுக்கும் அதற்கும் பெரிய வேறுபாடுகள் இதனால்தான் காணப்படுகின்றன. இந்து ஒழுக்க முறைமைகளை நாம் ஐரோப்பிய பாகன் வழிபாட்டுமுறைகளுடன் தான் ஒப்பிடவேண்டும்
ஒழுக்கமுறைமைகள் மதங்களால் சீரமைக்கப்படுகின்றனவே ஒழிய உருவாக்கப்படுவதில்லை. அவை நடைமுறைத்தேவைகளில் ரிஉந்தே உருவாகின்றன
ஜெ