பள்ளிகொண்டபுரம்:நீலபத்மநாபன் கடிதம்

NEELA PADMANABHAN, – B.sc,B.sc(Engg),FIE
Fiction writer,Poet&Essayist,
Nilakant, 39/1870, Kuriathi Bypass Road,
Manacaud P.O, Thiruvananthapuram-695009
Ph:0471-2476060
Mailto; [email protected]
Web site: www.neelapadmanabhan.com 14 ஜூன் 2008

அன்புடையீர், வணக்கம்.

“தினகரன்” பத்திரிகையில் (நாகர்கோவில், வியாழன், ஜூன் 12, 2008- பக்கம் 8) ” இன்று முதல் படப்பிடிப்பில்” என்ற தலைப்பின் கீழ் “பள்ளிகொண்டபுரம்” என்று வெளிவந்திருக்கும் விளம்பரம் பார்த்து விட்டு இக்கடிதம் எழுதுகிறேன்.

பள்ளிகொண்ட புரம் என்ற தமிழ் நாவலின் மூல ஆசிரியர் நான். இந்நாவல் முதல் பதிப்பாக டிசம்பர் 1970-ல் வாசகர் வட்டம், சென்னை (புக் வென்சர்-BOOK VENTURE ) என்ற நிறுவனத்தினரால் எண்-14, தணிகாசலம் செட்டி ரோடு, தியாகராய நகர், சென்னை-600017 என்ற முகவரியில் வெளியிடப்பட்டது. பிறகு, இரண்டாம் பதிப்பு ஏப்ரல் 1985லும், மூன்றாம் பதிப்பு டிசம்பர் 2000-த்திலும் மணிவாசகர் பதிப்பகத்தினரால் (31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை-600108) வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு Pallikondapuram-The City Where God Sleeps 1982-ல் முதல் பதிப்பாக The Christian Literature Society (Post Box 501, Park Town, Madras-600003) நிறுவனத்தராலும், இரண்டாவது பதிப்பு 2007-ல் Indian Writing (New Horizon(P)Ltd, 33/15, Eldams Road, Chennai-600018) நிறுவனத்தினரால் Where The Lord Sleeps என்ற தலைப்பிலும் வௌளியிடப்பட்டிருக்கிறது.

தவிர, டில்லி, National Book Trust, India (A5,Green Park, New Delhi-110001) இந்நாவலை ஆதான் பிரதான் திட்டத்தில் தேர்ந்தெடுத்து அனைத்திந்திய மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறது.

பார்க்க Agreement for Aadan Pradan dated 2 July, 1973 with National Book Trust). இதன்படி இந்தி, மலையாளம்(1982-லும், 1998-லும் இரண்டு பதிப்புகள்), உர்து, பஞ்சாபி, மராட்டி, குஜராத்தி, ஆஸாமீஸ், தெலுங்கு, ஒரியா, கன்னட, வங்க மொழிகளில் ஏற்கெனவே வந்துவிட்டன.

ரஷ்ய மொழியில் டாக்டர் (திருமதி) லூபா பைச்சினா Gorod Spyashchego Bogo என்ற தலைப்பில் மொழி பெயர்த்திருக்கிறார்.

மேலும் இந்நாவல் பல்வேறான ஆய்வு மாணவர்கள் எம் பில்(M.Phil), பி.எச்.டி (P.hd) பட்டங்களுக்கா தமிழ் நாட்டிலும் வெளி மாநிலங்களிலும் உள்ள பல்வேறு பல்கலைக்கழங்களில் (தமிழ், ஆங்கில மொழிகளில்) ஆய்வு செய்து பட்டங்கள் எடுத்திருக்கிறார்கள்.

இவை தவிர, இந்நாவல் வெளிவந்த காலத்திலிருந்து ஏராளம் மதிப்புரைகள், விமர்சனங்கள் தமிழ், ஆங்கில, மலையாள மொழிகளில் வெளியாகி பரவலான கவனிப்புக்கு உள்ளாகியிருக்கிறது.

இவ்வாறு கடந்த 38 ஆண்டு காலத்திற்கும் மேலாக பரவலாக இந்தியா முழுதும் தெரியப்பட்டிருக்கும் இந்நாவலின் தலைப்பை என் அறிவோ சம்மதமோ இன்றி படப்பிடிப்புக்கு எடுத்துக்கொண்டிருப்பது தார்மீக ரீதியாகவும், சட்டப்படியாகவும் குற்றகரமான செயல். சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக இந்த முயற்சியிலிருந்து பின்வாங்கிவிட்டு அச்செய்தியை பத்திரிகைகள் மூலமாக தெரிவிக்கும்படி வேண்டிக் கொள்கிறேன். இதில் அவர்கள் தவறினால் இதனால் வரும் கஷ்ட நஷ்டங்களுக் கெல்லாம் அவர்களே பொறுப்பு என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவண்

நீல பத்மநாபன்

அறக்கோபமே என் எழுத்து-நீலபத்மநாபன்

நீல பத்மநாபனின் நாவல்கள் சாதாரணத்துவத்தின் கலை

***

முந்தைய கட்டுரைமலையாள சினிமா கடிதங்கள்
அடுத்த கட்டுரைகென் வில்பர்:இருகடிதங்கள்