பழசிராஜா கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நலமா? நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களுக்கு எழுதுகிறேன். ஆனால் தினந்தோறும் உங்கள் இணையப் பதிவுகளைப் படிப்பதால் மனதளவில் உரையாடியபடியேதான் இருந்திருக்கிறேன். காந்தி பற்றிய தொடர் கட்டுரைகளைப் படித்துக்கொண்டிருந்தபோது பலமுறை உங்களுக்குக் கடிதம் எழுத ஆரம்பித்து ஒவ்வொரு முறையும் இரண்டாவது வரியோடு நிறுத்தியிருக்கிறேன். ‘பிடித்திருக்கிறது.. நன்றாக இருக்கிறது.. பயனுள்ளதாக இருக்கிறது’ என்கிற சம்பிரதாய வரிகளுக்குமேல் பெரிதாக நான் ஒன்றும் சொல்லிவிடப்போவதில்லை என்பதாலேயே எழுதவில்லை. வரலாற்றுக் காந்தியிலிருந்து நிகழ்காலத்துக்கும் எதிர்காலத்துக்குமான ஒரு புதிய காந்தியை செதுக்கி எடுக்கும் ஒரு பெரும் பணியைச் செய்துகொண்டிருக்கிறீர்கள். தமிழ்ச் சமூகம் உங்களுக்குக் கடமைப்பட்டிருக்கிறது. காந்தியும் காமமும் கட்டுரைகளை நான் இன்னமும் படிக்க ஆரம்பிக்கவில்லை.

இப்போது இந்தக் கடிதம் எழுதக் காரணம் நான் இன்று பழசிராஜா படத்தைப் பார்த்தேன். படம் எனக்குப் பிடித்திருந்தது. குறிப்பாக ஒளிப்பதிவும் இசையும் உங்கள் மொழியாக்கமும். பொதுவாக டப்பிங் படங்களுக்கு மொழிமாற்றம் செய்யும் சிலர் போகிறபோக்கில் அர்த்தம் புரிந்தும் புரியாமலும் தமிழே ஒழுங்காகத் தெரியாமலும் வார்த்தைகளை இட்டுக்கட்டி நிரப்பிவிடுவது உண்டு. அதைவிடக் கொடுமையாக தமிழ் வெகுஜன ரசிகர்களுக்கு இப்படிச் சொன்னால்தான் பிடிக்கும், புரியும் என்று அதிபுத்திசாலித்தனமாக மூலத்தில் இல்லாததையெல்லாம் பேசவைத்துவிடுவதும் உண்டு. நல்லவேளையாக உங்களைப் பயன்படுத்திக் கொண்டதால் பழசிராஜா உயிர்ச்சேதமில்லாமல் தமிழ் நாட்டுக்குள் நுழைந்துவிட்டார். உதட்டசைவிற்குப் பொருந்தும்படியும் அதேசமயம் அர்த்தம் மாறாமலும் அதோடு இயல்பான தமிழ் உரையாடல் போலத் தோன்றும்படியும் வார்த்தைகளைப் பொறுக்கியெடுப்பது ஒரு சவால்தான். உங்களுக்கு இந்தப் படத்தில் ஏற்பட்ட அனுபவம் பற்றி எழுதுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

திரைக்கதையில் எனக்குக் குறையாகத் தெரிந்த சிலவிஷயங்கள், படத்தின் நீளம் குறைக்கப்பட்டதால் ஏற்பட்ட குளறுபடிகள்தான் என்று என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

எந்தவொரு படத்தைப் பற்றியும் விரிவாக விமர்சிக்கும் பழக்கம் எனக்கு இல்லை. காரணம் நான் ஒரு மிகச் சுமாரான சினிமா விமர்சகன். சினிமாவைப் பயிலும் மாணவனாக மட்டுமே என்னால் எந்தப் படத்தையும் பார்க்க முடியும். கறாரான அளவுகோல்களோடு மேலே இருந்தபடி சினிமாவைப் பார்க்க என்னால் முடிந்ததே இல்லை. அதனால் பழசிராஜாவைப் பற்றிப் பெரிதாக விமர்சிக்க என்னிடம் ஏதுமில்லை. ஆனால் படத்தை நான் ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்த அதேசமயம் உள்ளுக்குள் ஒரு நெருடல் எழுந்தபடியே இருந்தது. படம் முடிந்தபோது இயக்குனர் ஹரிஹரனிடம் அதுமட்டுமே ஒரே குறையாக எனக்குத் தோன்றியது. பிறகு இந்தப் படத்தை நான் எடுத்திருந்தால் எப்படி எடுத்திருப்பேன் என்று யோசித்தபோது பளிச்சென்று என்னிடமும் அதே குறை இருப்பதைக் கண்டுகொண்டேன். ஒரு பிரம்மாண்டமான வரலாற்றுப்படம் என்று யோசிக்கிறபோதே ஹாலிவுட்டில் மிகச் சிறப்பாக எடுக்கப்பட்ட சில படங்களின் சில காட்சிகள்தான் கண்முன் வந்து நிற்கும். அதேபோல் ஒருமுறையாவது செய்துவிடவேண்டும் என்று உந்துதல் வரும். ஆனால் அப்படி நகல் எடுக்கும் முயற்சிகளுக்கு எந்தப் பெருமையையும் சிறப்பையும் காலம் வழங்காது என்பதும் தெரியும். ஆனாலும் அந்த உந்துதலைத் தவிர்க்க முடியாது. பழசிராஜா படம் நெடுகிலும் வரும் ஏராளமான கேமரா கோணங்களும், படச்சட்டங்களும், கேமரா மற்றும் நடிகர்களின் அசைவுகளும் அப்படியே சில ஹாலிவுட் படங்களை நினைவூட்டுவதாக இருந்தது. ஒரு இந்திய இயக்குனரின் தனித்தன்மையோடு இல்லை.

உதாரணத்துக்கு, ஹாலிவுட்டில் ஏராளமான போர்க்களக் காட்சிகள், டூயல் சண்டைக் காட்சிகள் இருந்தபோதும் அகிரா குரசோவா போரையும் டூயலயும் எடுத்தபோது அவை ஜப்பானுக்கே உரிய தனித்தன்மைகளோடு இருந்தன. உலகமே அவரைக் கொண்டாடியது. நம் நாட்டு சேகர் கபூர் ‘பாண்டிட் குயின்’ (பூலான் தேவி) படமெடுத்தபோது, அதே போன்ற கதையம்சம் உள்ள ஏராளமான மேற்கத்தியப் படங்கள் இருந்தன. ஆனால் சேகர் கபூர் முழுக்க முழுக்க தனித்துவமான ஒரு படத்தையே எடுத்தார். அதனாலேயே அவருக்கு எலிசபெத் என்னும் பிரிட்டிஷ் படத்தின் மூன்று பாகங்களையும் இயக்கும் வாய்ப்புக் கிடைத்தது. எலிசபெத் படம் மற்ற மேற்கத்திய அரச குடும்ப வரலாற்றூப் படங்களைவிட முற்றிலும் மாறுபட்டுத் தனியாகத் தோற்றமளிப்பதற்கு சேகர் கபூரின் இயக்கமே காரணம்.

ஒரு வகையில் பழசிராஜா எடுக்கப்பட்டதும் நல்லதுக்கே. இனிமேல் வரலாற்றுப் படம் இயக்குபவர்கள் மேற்கத்திய படங்களின் பாதிப்பை உதறிவிட்டு இந்தியத் தனித்தன்மை ஒன்றை உருவாக்க முயற்சித்தால் நன்றாகவே இருக்கும்.

இப்படிச் சொன்னதால் பழசிராஜா படத்தை நான் ரசிக்கவில்லை என்று அர்த்தமல்ல, நெடுநாளைக்குப்பின் என்னை நானே ஒரு சிறுவனாக உணர்ந்து, ஒரு பிரம்மாண்டமான சாகஸங்கள் நிறைந்த கனவுலகுக்குள் நுழைந்து வந்த அனுபவத்தையே பெற்றேன். மீண்டும் ஒருமுறை படத்தைப் பார்க்கவேண்டுமென்று நினைத்திருக்கிறேன்.

சார்லஸ்.

இயக்குநர்

அன்புள்ள சார்லஸ்

திரைக்கதையில் சில தாவல்கள் உள்ளன. அது சுருக்கியதனால் வந்தது. சில விஷயங்கள் கேரளத்துக்கு மட்டுமே உரியவை. உதாரணமாக முஸ்லீம்களுடன் பழசிக்கு இருந்த பிரச்சினை. அவற்றையெல்லாம் விளக்க எம்.டி முயலவில்லை. அது வரலாற்றின் பகுதி என்று அப்படியே விட்டு விட்டார்.

நீங்கள் சொன்னதை பலரும் சொன்னார்கள். காட்சிகளை புதியதாக அமைப்பதற்கு இன்னும் விரிவான ஆலோசனையும் நிதியும் தேவைப்படுமோ என்னவோ

ஜெ

அன்புள்ள ஜெயமோகன் சார்,

பழசி ராஜா படம் பார்த்தேன். ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி. நல்ல படங்களில் எங்கள் ஜெ பணியாற்றுவது குறித்து மிகமகிழ்ச்சி. பொதுவாகவே வரலாற்றுப்படம் இப்போதுள்ள ரசிகர்களிடையே ஒரு நல்ல ஈர்ப்பைத்தரும் என்பது என் கருத்து. அன்றைய காலங்களின் வாழ்க்கைமுறை, பழக்கவழக்கங்கள், நம்பிக்கை என பலவிஷயங்களை அறிந்துகொள்ளும்  ஆர்வம் நிச்சயம் நம்மிடம் உள்ளது. பழசிராஜா அக்காலக்கட்டத்தை அப்படியே கண்முன் நிறுத்துவதாக நம்புகிறேன். பழசி மற்றும்  மற்ற ராஜாக்களின் அரண்மணை, அவர்கள் வாழும் பகுதி, அவர்களின் அதிகாரம், மக்கள் அவர்களின் மேல் கொண்ட மதிப்பு என படம் முழுக்க அவர்கள் காட்டும் சித்திரம் யதார்த்தமான மலை நாட்டை பதிவு செய்கிறது. கம்பெனிக்காரர்கள் மலைவாசிகளிடம் வாங்கும் சத்தியம், அம்மக்களின் சத்தியம் மற்றும் வாழ்க்கைமுறை மீதான சித்திரத்தை தெளிவாக காண்பிக்கிறது. படத்தின் சுவாரசியம் அதன் நீளத்தை அறிந்து கொள்ளச் செய்யவில்லை. இசைஞானியை தவிர இப்படத்திற்க்கு வேறு யார் இசைக்க முடியும்? தங்களின் பங்களிப்பு மிகவும் நேர்த்தியாக உள்ளது. பழசியின் இறுதிகாட்சி வசனங்கள் நிலைபெறக்கூடியவை. அதிக கைத்தட்டல்களை பெற்றன. முதல் முறை ஆர்வமாக பார்த்ததால் குறையென ஏதும்படவில்லை. மீண்டும் பார்த்தால் ஏதேனும் தெரியலாம். அப்படி தெரிய வாய்ப்பிருக்காது என எண்ணுகிறேன். சரத்குமார் தன் பாத்திரத்தை சரியாக செய்துகொடுத்துள்ளார். மம்முட்டியின் நடை உடை பாவனை, பேசும் தொனி என அனைத்தும் தம்புரானுக்கு உரியதே….


Best Regards
Dhanasekaran A

அன்புள்ள தனசேகர்

நன்றி.

பொதுவாக பழசிராஜாவைப்பற்றி சில குறைகள் சொல்லப்பட்டாலும் பரவலாக ரசிக்கப்படுகிறது, நினைத்த அளவுக்கு வசூலாகிவிடும் என்பதே பேச்சாக இருக்கிறது

பழசிராஜாவின் அமைப்பு சில சிக்கல்கள் கோட்னது. 1. வரலாற்றை வரலாறாகவே எடுக்க எடுத்துக்கொன்ட முயற்சி. வரலாறு எப்போதுமே சீரான கதையாக இருப்பதில்லை. துன்டுபட்ட நிகழ்ச்சிகளாகவே இருக்கும்.  வரலாற்றின் பல நிகழ்ச்சிகளை நியாயப்படுத்தவோ நாடகப்படுத்தவோ எம்.டி முயலவில்லை. உதாரணமாக தலைக்கல் சந்து கொல்லப்பட்டதுமே பழங்குடிகள் பழசியை கைவிட்டு விலகிச்சென்றுவிடுகிறார்கள். இது உண்மையில் நடந்தது. அப்படியே படத்திலும் உள்ளது. அன்றைய அரண்மனை, அன்றைய கோட்டைகள், அன்றைய உடைகள் மிகை இல்லாமல் அப்படியே காட்டப்படுகின்றன. இது வெறும் படமாகப் பார்த்தால் சுவாரசியத்தை குறைக்கும்

2. படம் மலையாளப்படமாகவே எடுக்கப்பட்டுள்ளது.பல விஷயங்கள் ரசிகர்களுக்கு புரியும் என்ற நம்பிக்கையில் சுட்டிக்காட்டிச் செல்லப்படுகின்றன. உதாரணமாக மருமக்கள்தாய முறைப்படி பழசியின் மாமாதான் முன்பிருந்த மன்னர் என்பதை எம்.டி விளக்குவதே இல்லை.

ஆனால் அதையும் மீறி படம் ரசிக்கப்படுகிறது, காரணம் அதன் ஆக்ஷன் காட்சிகள்தான் என்கிறார்கள்

ஜெ

முந்தைய கட்டுரைபசும்பொன்,கடிதம்
அடுத்த கட்டுரைஈரோட்டில் கல்பற்றா நாராயணன்