பசும்பொன்,கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்,

வணக்கம், தங்களின் பசும்பொன் தொடர்பான கட்டுரைகளையும், கடிதங்களையும்
வாசித்தேன். உங்களின் தெளிவான அணுகுமுறை பிடித்திருந்தது, சாதிய
விசயங்களில் கருத்து சொல்வதென்பது தமிழகத்தில் மிகச் சவாலான விசயம்.
எளிதில் பற்றிக் கொள்ளக்கூடிய ஒரு வஸ்து அது. அதனாலேயே தமிழகத்தில் பல
ஆளுமைகளும் சாதியை தொடுவதில்லை, அரைகுறைகள் சிலர் அதை தொட்டு மேலும்
கேலிகூத்தாகவோ வன்முறை விளையாட்டாகவோ ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள்.
அதைப்பற்றி வெளிப்படையாக பேச, விவாதிக்க பயந்தோ அல்லது நாணி விலகியோ
என்னைப் போன்றவர்கள் சாதிய அசட்டுத்தனங்களையும் அநாகரிகங்களையும்
வளர்த்துக்கொண்டிருக்கிறோம். நீங்கள்கூட ஒரு அசாத்திய முன்னெச்சரிக்கை
உணர்வுடன் கட்டுரை எழுதியிருப்பதாக எண்ணுகிறேன்.

பல நேரங்களில் நானும் ஏன் இந்த மக்கள் இப்படியிருக்கிறார்கள் என
யோசித்ததுண்டு, தனிப்பட்ட முறையில் பலர் நல்லவர்களாக இருந்தும் ஒரு
குழுவாக செயல்படும் போது அவர்கள் ஒழுங்கின்றி கட்டுப்படித்த
முடியாதவர்களாக இருக்கின்றார்கள். உறுதியான தலைமையோ, வழிகாட்டுதல்களோ
இல்லை என்பதே காரணம். குட்டி குட்டி தாதாக்கள் எல்லாம் எளிதில்
உணர்சிவசப்படும் இளைஞர்களை கூட்டிக்கொண்டு கூட்டங்கள் போட்டு தங்களது
அடியாள் பலத்தை சாதிய பலமாக்கி காட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதனால்
அந்த சாதி மக்களின் மீது சமூகத்தின் பார்வை தவறாக அமைகிறது. என்னைப்
போன்ற சிலர் அந்த சாதிய அடையாளங்களை வலிந்து திணிக்கப்பட்ட விசயமாக கருதி
வெறுக்க வேண்டியிருக்கிறது. எல்லா சாதியிலும் நல்லவர்கள், கெட்டவர்கள்
இருப்பது போல இந்த சாதியிலும் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு தனது
சாதியின் பெயர் (சமுதாயத்தின் பார்வையால் உருவான) அவர்களின் செயல்களுக்கு
ஒரு போதையூட்டும் அடையாளமாகிறது. சிந்தித்து செயல்பட நேரமில்லாத,
பொறுமையில்லாத, விரும்பாத மக்கள் குறிப்பாக இளைஞர்கள்
பிற்போக்குவாதிகளின் கைப்பாவையாகிறார்கள். நல்ல தலைமை இல்லை. நன்கு
கற்றறிந்தவர்கள் அந்த மக்களுக்கு எதுவும் செய்யாமல் சாதிய அடையாளங்களை
வெறுத்துவிடுகின்றனர். அந்த மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய
நினைப்பவர்கள் சில சுயநலவாத பிற்போக்குவாதிகளின் பிடியில்
சிக்கிக்கொள்கின்றனர். இந்த இடத்தில் சாதிப்பற்று சாதிவெறியாக
மாற்றப்படுகிறது. அதை உணர்ந்து கொள்ள அவர்களுக்கு வாய்ப்பு எப்போது
ஏற்படும்? விரிவான விவாதங்களில்தான் சரியான புரிதல் ஏற்படுமென்று
நினைக்கிறேன். நமது சமூகம் விவாதத்தை புறக்கணிப்பதாகவே நான் உணர்கிறேன்.

இன்னும் விரிவான விவாதங்களை உங்கள் கட்டுரையெடுத்துச் செல்ல
வேண்டுமென்பதே எனது விருப்பம்.

//”பல தனிப்பட்ட கடிதங்களையும் அக்காலகட்ட பல வெறுப்பூட்டும்
துண்டுப்பிரசுரங்களையும் நான் மறைந்த தாணுலிங்கநாடார் அவர்களின் சொந்த
சேகரிப்பில் 1981ல் அவரது கோரிக்கைப்படி அவரது காகிதங்களை நான்
சீராக்கியபோது வாசித்திருக்கிறேன்.  தெரிந்தே அந்த வரலாற்றுக்குள் இன்று
நான் செல்லவிரும்பவில்லை.”//

//”முதுகுளத்தூர் நிகழ்ச்சி குறித்தெல்லாம் விரிவாகவே எழுதவேண்டும்”//

உங்கள் எழுத்தின் மீது நம்பிக்கை வைத்து இவற்றையெல்லாம் நீங்கள்
எழுதவேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

நான் சொல்ல வந்ததை முழுமையாக, சரியாக சொல்லிவிட்டேனா என்று தெரியவில்லை,
முதல் கடிதமென்பதால் நிறைய தடுமாற்றங்கள் இருக்குமென்று நினைக்கிறேன்.
மன்னிக்கவும்.. தவறிருந்தால் சுட்டிக்காட்டவும்..

மாணவன்,
கணேஷ்.


அன்புள்ள கணேஷ்
வரலாற்றின் ஒரு காலகட்டத்தில் சரியான தலைமை அமைவது மிகச்சிரந்த வாய்ப்பு. அது அடிக்கடி நிகழ்வதில்லை. அவ்வகையில்பார்த்தால் பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர்களுக்கு ஒரு நல்லூழ். அது அம்மக்களுக்கு தலித்துக்கள் மீதிருந்த விரோதத்தை அழிக்கவும் அவர்களுக்கு உலகியல் சார்ந்த இலக்குகளை வளர்க்கவும் பேருதவி புரிந்திருக்கிறது. அப்படி ஒரு தலைமை தேவர்களுக்கு அமையட்டும் என ஆசைப்ப்படுவோம்

நான் ஒரு விஷயத்தை எழுதும்போது அதனால் என்ன பயன் என்றே சிந்திக்கிறேன். என்னை ஒரு குறிப்பிட்டவிதமாக காட்டும்பொருட்டு எழுதுவதில்லை. குற்றம்சாட்டியோ தூண்டிவிட்டோ எழுதுவதனால் என்ன பயன்?

இன்றைய சந்தர்ப்பத்தில் நின்று நோக்கும்போதுதான் வாழ்நாளெல்லாம் சம்ரசம் சமாதானம் என்று பேசிய தலைவர்களின் அருமை நமக்குப் புரிகிறது. அவர்கள் வாராது வந்த மாமணிகள் என்று.
ஜெ

முந்தைய கட்டுரைகாந்தியின் பிள்ளைகள் – 1
அடுத்த கட்டுரைபழசிராஜா கடிதங்கள்