மலையாள சினிமா கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

 தங்கள் சுவரில் முட்டி நிற்கும் மலையாள சினிமா. கட்டுரை படித்தேன். மலையாள சினிமா குறித்த, என்னுடைய சமீபகால ஆதங்கத்தை பிரதிபலித்தது. எனக்கு நல்ல சினிமா மீது, ஒரு ஆர்வம் வந்ததே, மலையாள சினிமாக்களைப் பார்த்துதான். அந்த மலையாள சினிமா உலகத்தின் சமீப கால வீழ்ச்சியை, உங்களைப் போலவே நானும், வருத்தத்துடன் கவனித்து வருகிறேன். சமீபத்தில் பார்த்த ப்ளெஸ்ஸியின் கல்கத்தா நியூஸ் கூட ஏமாற்றத்தையே அளித்தது.

 மலையாள சினிமா குறித்த தங்களுடைய கட்டுரையில், பிரச்சனை, பிரச்சனைக்கு காரணங்கள், தீர்வு என்று எல்லாவற்றையும் நன்றாகவே அலசியிருக்கிறீர்கள். கிட்டத்தட்ட கடந்த 10 ஆண்டுகளாகவே இந்த நிலைமைதான் என்று நினைக்கிறேன். 2000ல் ஒரு முறை பாலக்காடு வந்திருந்தேன். தியேட்டர்களை சுற்றியபோது, அப்போதே விஜய் படத்துக்கு அங்கு இருந்த கும்பலைப் பார்த்து ஆச்சர்யப்பட்டேன். மலையாளச் சேனல் நிகழ்ச்சிகளில், பாதிக்கு பாதி பேர் தமிழ் பாடலைத்தான் பாடுகிறார்கள். தமிழ் பாடல்களுக்கு நடனம் ஆடுவார்கள். பார்க்கும்போது, நமது தமிழ் படங்களுக்கு, அங்கு அவ்வளவு அங்கீகாரமா என்று சந்தோஷமாக இருக்கும். ஆனால் அதற்கு பலிகடாவானது, நல்ல மலையாள சினிமாக்கள்தான் என்று உங்கள் கட்டுரை மூலமாக தெரிய வரும்போது, வருத்தமாக இருக்கிறது.   தகழியையும், எம்டியையும், நமக்கு அளித்துவிட்டு, பதிலுக்கு அவர்கள் நம்மிடமிருந்து  ஸ்வீகரித்துக்கொண்ட விஷயங்களைப் பார்க்கும்போது, நவீன மலையாள இளைய தலைமுறையின் ரசனைகள் கவலையளிப்பதாகவே இருக்கிறது.

எம்டியின் சுக்ருதம், ஓப்போள், சிபிமலயலின் தனி ஆவர்த்தணம், சதயம், மோகனின் பச்சே, மேக மல்ஹார், பத்மராஜனின் கரையிலா காட்டுப்போலே(பெயர் சரியா?), போன்ற படங்கள் எல்லாம் உங்கள் கட்டுரையைப் படித்தபோது ஞாபகத்திற்கு வந்தது. இனி அது போன்ற படங்கள் எல்லாம் வெறும்; ஞாபகங்கள் மட்டும்தானா?
அன்புடன்
ஜி. ஆர். சுரேந்தர்நாத்.
சென்னை-28.

**

அன்புள்ள ஜெயமோகன்,

மலையாள சினிமா பற்றிய உங்கள் கட்டுரை என் மனதை மிகவும் பாதித்தது. மலையாள சினிமாபார்த்தே என் ரசனையை வளர்த்துக் கொண்டவன் நான். சமீபத்தில் பார்த்தபல மலையாளப்படங்கள் எனக்கு ரொம்ப ஏமாற்றமாக இருந்தன. மலையாள சினிமாவின் ஆத்மாவே கறைப்பட்டு போய்விட்டது என்ற எண்ணம் எனக்கும் வந்தது. இதற்கு பல காரணங்களை நீங்கள் சொல்லலாம். ஆனால் சிதிக்-லால் என்ற இரு இயக்குநர்கள் இதற்கு முக்கியமான காரணம் என்று நான் சொல்வேன். மடத்தனமான திரைக்கதைகள். அவசர அவசரமான டைரக்ஷன் கொண்ட படங்கள்.  மலையாள சினிமாவை சீரழித்ததே இவர்கள்தான் என்று சொல்வேன். இவர்களுடைய ஒரு படம்கூட உருப்படி இல்லை. தென்காசிப்பட்டணம் போன்ற படங்களெல்லாம் சீப்பான தமிழ் சினிமா தரத்தில் உள்ளவை. அதேபோல திலீப் என்ற நடிகன். வெறும் மிமிகிரி திறமை மட்டுமே உள்ள நடிகர். மம்மூட்டியும் மோகன்லாலும் நடித்த காலத்தில் இவரது படங்கள் வந்து ஓடின என்பது எத்தனை கேவலம். உங்கள் குரு லோகித்தாஸின் படங்களை சமீபத்தில் பார்த்தேன்.அவருக்கும் சொல்வதற்கு கதை இல்லை. சக்கரமுத்து, நைவேத்யம் போன்ற படங்கள் எலலமே 20 வருடம் பழைய கதைகள் பழைய டைரக்ஷன். கஸ்தூரிமான் கூட அப்படிப்பட்ட படம்தான். அந்தமாதிரி காலேஜ் இப்போது எங்கே இருக்கிறது? மலையாள சினிமா செத்துவிட்டது. இனிமேல் அது உயிர்கொண்டுவந்தால் ஆச்சரியம்தான். திலீபின் குஞ்ஞிகூனன்[ தமிழில் பேரழகன்] சாந்துபொட்டு போன்ற படங்களை நல்ல படம் என்று சிலர் சொன்னார்கள். அவையெல்லாமே சீப் டேஸ்டுகான படங்கள்தான். மலையாளத்தில் நல்லபடங்கள் சில வந்தன. அவையெல்லாம் ஓடவில்லை. கமல் இயக்கிய ராப்பகல் அபப்டிப்பட்ட ஒரு நல்ல படம். ஓடிய படங்கள் என்றால் அச்சுவிண்டே அம்ம . அது ஒரு பழைய பாலசந்தர் படம் போல இருந்தது.

சுரேஷ்

*

அன்புள்ளஜெயமோகன்

மலையாள சினிமா குறித்த கட்டுரை நன்றாக  இருந்தது. மலையாள சினிமா சமீப காலமாக அழிந்துகொண்டிருக்கிறது என்பது நிஜம்தான். மோகன்லால் படத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டு துபாயில் குடியேறப்போகிறார் என்றும் செய்தி வந்தது. முக்கியமான காரணம் இளைஞர்கள் இல்லை என்பதுதான். அதாவது மம்மூட்டி மோகன்லால் நெடுமுடிவேணு எல்லாருக்குமே வயதாகிவிட்டது. திலீப் கூட மாமா போல இருக்கிறார். பிருவிவிராஜும் மாமாபோலத்தான் இருக்கிறார். அவரது பாடிலாங்வேஜும் நடையும் மிகவும் மெதுவாக இருக்கின்றன. தூங்கிக் கொண்டே நடப்பது போல இருக்கிறார். பழைய படங்களில் சோமன் சுகுமாரன் முதலியவர்கள் அபப்டித்தான் நடப்பார்கள். அதெல்லாம் இப்போதுள்ளவர்களுக்கு பிடிக்காது.  உதாரணமாக இப்போது சாக்லேட் என்று ஒருபடம் வந்தது. நல்ல கதை. ஒரு பையன் மிகவும் அட்டூழியம் செய்கிறான் என்று சொல்லி அவனைக் கொன்டுபோய் பெண்கள் கல்லூரியிலே சேர்க்கிறார்கள். அவன் மட்டும்தான் அந்தக்கல்லூரியிலே ஒரே ஆண். அந்த படம் தோல்வி. ஒரே காரணம் அதிலே பிருதிவிராஜ் நடித்ததுதான். பங்கியடித்தது போல இருந்தார். அந்தப்படத்தில் தமிழில் உள்ள சிறுவயது நடிகள்ர்கள் நடித்திருந்தால் படம் நூறுநாள் ஓடுவது உறுதி. இப்போதுகூட அதை சிம்பு அல்லது தனுஷ் அல்லது ஆரியாவை வைத்துஎ டுத்து அங்கே வெளியிட்டால் ஓடும். அங்கே நன்றாக நடிக்கக் கூடிய பாட்டு பாடி ஆடக்கூடிய உற்சாகமான இளம் நடிகர்கள் இல்லை. நீங்கள் சொன்னதுபோல தொப்பை இல்லாத நடிகனே கிடையாது. எப்படி இளைஞர்கள் படம் பார்க்க வருவார்கள்?

வி கணேசன்

*

அன்புள்ள ஜெயமோகன்

மலையாள சினிமாக்கள் ஓட்டாததற்கு பல காரணங்களை சொல்லியிருக்கிறீர்கள். காரணங்கள் என்று எனக்கு சில விசயங்கள் தோன்றுகின்றன. ஒன்று மலையாளிகளுக்கு எபோதுமே வேறு பண்பாடுகளில் போய் வாழ்வதில் ஆர்வம் உண்டு. அதைப்பற்றி தெரிந்துகொள்ள விரும்புவார்க்ள். அபப்டிபபட்ட நாவல்களும் படங்களும் ஓடும். நிறைய மலையாள படஙக்ளில் கதாநாயகன் சென்னைக்கோ பம்பாய்க்கோ அல்லது தென்காசிக்கோ பொள்ளாச்சிக்கோ பழனிக்கோ வந்து இங்கே உள்ள பிரச்சினைகளை சந்தித்து செட்டில் ஆவதைப்பற்றி கதை இருக்கும். அந்த ஆர்வம் காரணமாகத்தான் மலையாளிகள் தமிழ் படங்களை பார்க்கிறார்கள்.

இன்னும் ஒரு விசயம் மலையாளத்தில் இப்போது கிராமங்கள் இல்லை.[நாட்டின்புறங்கள்] எல்லாமே ஒரே மாதிரியான புறநகர்கள் போல இருக்கின்றன. எல்லாமே கான்கிரீட் வீடுகளா இருக்கின்றன. ஆகவே பலவகையான கதைகளை சொல்ல முடியவில்லை. கத பறயும்போள் போன்ற சினிமாக்களில் வரக்கூடிய கிராமம் எல்லாம் 30 வருஷம் முன்பு உள்ள கிராமங்கள். சீனிவாசன் சின்ன வயசில் கண்ட கிராமங்கள். இப்போது அப்படிபப்ட்ட கிராமங்கள் அனேகமாக மலைகளில்தான் சில இடங்களில் இருக்கலாம். ஆகவே மலையாள இளைய தலைமுறையினருக்கு இந்தமாதிரி கதைகள் அதிக ஆர்வம் ஏற்படுத்துவது இல்லை. அவர்களுக்கு நல்ல உண்மையான அர்பன் கதைகள் தேவை. அதை எழுத அங்கே இப்போது ஆளில்லை. இதுதான் உண்மை

ரமேஷ்
பாலக்காடு

 சுவரில் முட்டி நிற்கும் மலையாள சினிமா.

முந்தைய கட்டுரைமலேசியா மறுபக்கம்
அடுத்த கட்டுரைபள்ளிகொண்டபுரம்:நீலபத்மநாபன் கடிதம்