தாந்த்ரீகமும் மேலைநாடுகளும்:கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்,

காந்தி காமம் – எனும் தொடர் படித்தேன் அருமையாக உள்ளது. இது தொடர்புடைய சில எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். மேற்கின் தாந்தீரிக முறைகள் அவற்றின் பரிணாம வளர்ச்சி ஆகியவை குறித்து இது வரை சரியான ஆராய்ச்சி எதுவுமே செய்யப்படவில்லை. இந்தியா ஒரு காலனியாதிக்க சக்தியாக மேற்குக்கு சென்றிருந்ததென வைத்துக்கொள்வோம். ஒரு இந்திய  ஆராய்ச்சியாளன் ஐரோப்பாவின் மத நம்பிக்கைகளை எப்படி புரிந்து கொள்வான் என சிந்திக்க முயன்றிருக்கிறேன். அதில் உருவாகும் மேற்கின் ஆன்மிகம் குறித்த பார்வை விசித்திரமாக இருக்கிறது.

 

பல கிறிஸ்தவ-பாகனிய விவரணங்களில் ஒருவரையொருவர் பாலியல் சடங்குகளை நடத்தியதாகக் குற்றம் சாட்டுகின்றனர். தொடக்கம் முதல் மத்திய காலத்தின் இறுதிவரை மைய கத்தோலிக்க சபையும் பிராந்திய பிரபுக்களும் தங்களை இறைவாக்கினர் அல்லது ஏசு கிறிஸ்து என அறிவித்தவர்களையும் அவர்களை பின்பற்றியவர்களையும் கொன்று கொண்டே இருந்திருக்கிறார்கள். பல சர்ச்சுகளில் நிறுவன கிறிஸ்தவ ஆராதனைக்கு பிறகு தாந்திரீக சடங்குகள் செய்யப்பட்டுள்ளன.

 

ஐரோப்பாவின் மத்திய காலகட்டத்தில் நிலவி வந்த ஒரு பிரபல வதந்திக்கதை: ஒரு உள்ளூர் பணக்கார வியாபாரியின் மனைவி ஒரு குறிப்பிட்ட சர்ச்சுக்கு செல்வதற்கு அதீத ஆர்வம் காட்டினாள். ஆனால் இந்த சர்ச் அவர்களுடைய பங்கு சர்ச் அல்ல. எனவே கணவன் அவளை அறியாமல் அவளை பின் தொடர்ந்தான். அனைவரும் சூழ்ந்திருக்க ஒரு பெண் தனியாக அழைத்து வரப்பட்டு ஆராதனை பீடத்துக்கு கொண்டு வரப்பட்டாள். அந்த சர்ச்சின் துறவி அவள் மீது படர்ந்து “நாம் அனைவரும் இறைவனுடன் இணைவோமாக” என கூறி இயங்க ஆரம்பித்தார். அடுத்து அங்கிருந்த ஒவ்வொருவரும் ஒரு துணையைத் தேர்ந்தெடுத்து புனித உடலுறவு கொள்ள ஆரம்பித்தனர். இந்த களேபரத்தில் கணவன் மனைவியின் கை மோதிரத்தை எடுத்துக்கொண்டு கிளம்பி சென்றுவிட்டான். பிறகு வீட்டுக்கு வந்த மனைவியிடம் மோதிரம் குறித்து விசாரித்தான்  இதனைத் தொடர்ந்து புனித விசாரணையாளர்களுக்கு சொல்லி அனுப்பினான். அந்த சர்ச்சைச் சார்ந்த அனைவரும் கிறிஸ்தவ பாரம்பரியப்படி அவர்கள் இரத்தம் பூமியில் சிந்தாதப்படிக்கு கழுமுனைகளில் எரித்துக் கொல்லப்பட்டார்கள்.

 

இக்கதை பொய்யாக இருக்கக் கூடும் ஆனால் இப்படி ஒரு கதை அங்கு உலவ வேண்டிய சூழல் அமைந்திருந்தது என்பதுதான் இக்கதை காட்டும் விஷயம். பொதுவாக கிறிஸ்தவ மத வரலாறுகளில் கிறிஸ்தவத்தின் இந்த பரிமாணங்கள் பேசப்படுவதே இல்லை. ஆனால் ஐரோப்பிய வரலாற்றாசிரியர்கள் பிற விஷயங்களைக் குறித்து எழுதும் போது இந்த விஷயங்கள் கோடி காட்டப்படுகின்றன. உதாரணமாக ஜோகேன் நோஹ்ல்ஸ் (Johanne Nohls) எழுதிய The Black Death: A Chronicle of the Plague நூலில் பிரான்ஸிலும் ஜெர்மனியிலும் நிலவி வந்த பாலியல்-ஆன்மிக குழுக்களை பெரும் பிளேக்கினால் ஏற்பட்ட ஒழுக்க நிலை சிதைவுகளாகக் காட்டுகிறார். ஆனால் இந்த மரபினர் ஒரு குழுவாகவே இயங்கிவந்தனர். Brethern of the free mind என அவர்கள் தங்களை அழைத்துக்கொண்டனர்.

 

பிரான்ஸின் பழைய கதீட்ரல்களில் பாலுணர்வைத்தூண்டும் சிற்பங்கள் உள்ளன. ஆல்பே கதீட்ரலில் ஓரினச்சேர்க்கையை காட்டும் ஓவியங்கள் உள்ளன. ஆனால் இந்த குழுக்கள் அனைத்தும் புனித விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வேட்டையாடி ஒழித்துக்கட்டப்பட்டன. ஆனால் இந்த மரபும் இயக்கங்களும் தொடர்ந்து இருந்திருக்கின்றன. 16 ஆம் நூற்றாண்டு ஜெர்மனியில் க்ளாஸ் லுட்விக் என்பவர் தன்னை இறைமகனாக அறிவித்தார். அவர் தோற்றுவித்த திருச்சபையில் பெண்ணே இயேசுவின் இரத்தமான சடங்கு திராட்சை ரசம். ஆணே இயேசுவின் உடல். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் ஆணும் பெண்ணும் செய்யும் கலவியால் உருவாகும் குழந்தைகள் புனிதக்குழந்தைகள். காம இச்சை என்பது பரிசுத்த ஆவியின் மற்றொரு தளத்தில் இயங்குவதன் வெளிப்பாடே. இந்த குழு இரத்த சகோதரர்கள் அல்லது புனிதக்குழுமம் (Chriesterung) எனும் பெயரில் இரகசியமாகவே இயங்கி வந்தது. (இன்றைக்கு கூட இது அதிகம் பேசப்படுவதில்லை. வேண்டுமெனில் கூகிள் இட்டுப்பாருங்கள். ஏறக்குறைய எதுவுமே கிடைப்பதில்லை. குறைந்த பட்சம் எனக்கு கிடைக்கவில்லை. கூகிள் நூல்களில் ஒரே ஒரு நூலில் ஒரு வாசகம் உள்ளது. அதுவும் preview இல்லாமல்.) ஆனால் விஷயம் விரைவில் வெளிவந்த போது லுட்விக் தப்பிவிட்டார். குழுமத்தினரில் பலர் கொல்லப்பட்டனர்.

 

புரோட்டஸ்டண்ட் தூயவாத கிறிஸ்தவம் ஐரோப்பாவில் மையம் கொள்ள ஆரம்பித்த போதும் இந்த “வாமாச்சார” கிறிஸ்தவம் அழிந்துவிடவில்லை. ஜான் மாத்திஸன் (Jan Matthyson) என்பவரின் பிரிவில் இயங்கிய அனாபாப்டிஸ்ட் குழுவினரில் தினசரி பாலியல் சடங்குகளும் அதனைத் தொடர்ந்த ஞான காட்சிகளும் நடந்து வந்தன. விரைவில் அனாபாப்டிஸ்ட்கள் ஒரு அரசியல் சக்தியாகவும் மாற ஆரம்பித்தனர். மாத்திஸனுக்கு பிறகு ஜான் ஆ·ப் லைடன் (John of Leyden) என்கிறவர் அனாபாப்படிஸ்ட்களின் தலைவரானார். இந்த ஆள் ஒரு தையல்காரர். பொதுவாகவே இந்த இயக்கங்களிலெல்லாம் கிறிஸ்தவ சமுதாயத்தின் ஏழடுக்கு படிக்கட்டுக்களில் இறுதி நிலைகளில் இருந்தவர்களே தலைவர்களாக உருவெடுத்தார்கள்.

 

(மேல்தட்டுக்களில் கலக கோஷங்களை எழுப்பிவந்த மார்ட்டின் லூத்தர் போன்றவர்கள் இந்த அடித்தட்டு மக்களின் கலகங்களை எப்போதுமே மறுதலித்தனர். உதாரணமாக மார்ட்டின் லூத்தரின் கலகக்குரலால் கவரப்பட்ட தாமஸ் மண்ட்ஸெர் லூத்தரின் அதிகாரவர்க்க மோகத்தால் மனமுடைந்தார். நிகோலஸ் ஸ்டோர்ச் என்கிற நெசவாளரை தன் குருவாக ஏற்றார். லூத்தரை வெளிப்பாடுகள் முன்னறிவிக்கும் பாபி¢லோனிய வேசை என வசை பாடினார். தன்னை இறைவாக்கினராக அறிவித்து ஒரு விவசாயிகள் கிளர்ச்சியை அவர் முன்னடத்தினார். பீரங்கிக் குண்டுகளை என் ஆடைகளால் பிடித்து உங்களுக்கு அதிசயங்களை நடத்திக் காட்டுவேன் என்று சொன்ன மண்ட்ஸெரின் வார்த்தைகளை நம்பி தங்கள் எதிர் நின்ற அரசப் படைகளை நோக்கி நடந்தனர் விவசாயிகள். வானத்தில் அப்போது வானவில் தோன்றியது. அதனை தெய்வீக அடையாளமாகக் கொண்ட அந்த விவசாயிகள் படைகளை நோக்கி நகர பீரங்கிக் குண்டுகள் அவர்கள் மீது விழுந்தன. ஒரே நாளில் இளம் லூத்தர படையதிகாரியான பிலிப் 6000 விவசாயிகளைப் படுகொலை செய்தார். பொதுவாக இந்தியர்களுக்கு வரலாற்றுணர்வு இல்லை என்கிறார்கள். இப்படி ஒரு நிகழ்ச்சி இந்தியாவில் நடந்திருந்தால், அது நாட்டுப்பாடலாகவும் ஐதீகமாகவும் அங்கு கொல்லப்பட்டவர்களுக்கு ஒரு கோவிலாகவும் அவர்கள் வழிபாட்டுக்குரிய காவல்தெய்வங்களாகவும் அந்த நினைவு அழியாமல் காக்கப்பட்டிருக்கும். ஆனால் இத்தகைய நினைவுகளே சுத்தமாக கிறிஸ்தவ வரலாற்றில் அழிக்கப்பட்டுவிட்டதை பாருங்கள். இந்தியர்களின் பாரமப்ரியமான வரலாற்றுணர்வு மேற்கின் நிறுவனப்பட்ட வரலாற்றுணர்வை விட ஆழமானது குவித்தன்மையற்றதும் மனிதத்தன்மை கொண்டதுமாகவே எனக்கு தோன்றுகிறது)

 

 சரி அனாப்பாப்டிஸ்டுகளுக்கு வரலாம். ஜான் ஆ·ப் லைடென் தன்னை “வார்த்தை மனுவுருவானதாகவே” அறிவித்துக்கொண்டார். அவருடன் படுக்கையில் படுத்து புனிதக்குழந்தைகளை பெற பெண்கள் போட்டி போட்டார்கள். அதே நேரத்தில் அவர்கள் வாழ்ந்த நகரம் முற்றுகையிடப்பட்டது. அனாப்பாப்டிஸ்ட்கள் போரிட்டார்கள். நகரம் வீழ்ந்த போது அவர்கள் மிகக் கொடூரமாக கொல்லப்பட்டனர். நிர்வாணமாக நகரங்களில் பெரிய எடைகளை சுமந்தபடி நடத்திச் செல்லப்பட்டனர். பிஷப்புக்கு நகரத்தின் மீதடைந்த இராணுவ வெற்றியைக் காட்டிலும் முக்கியமான ஒரு விஷயம் இருந்தது. அவர் ஜான் ஆ·ப் லைடென்னுடன் ஒரு பொதுவிவாதத்தில் ஈடுபட்டார். ஆனால் ஜானின் வாதங்களுக்கு பிஷப் பதிலளிக்க முடியவில்லை. விவாதத்தில் தோற்கடிக்க முடியாத ஜானை அவமானப்படுத்தி அதையே ஒரு உதாரணமாக்க சபை முற்பட்டது. பொதுவில் நிறுத்தப்பட்ட ஜான் ஆ·ப் லைடென்னின் சதைகள் பிஷப்பின் முன்னிலையில் பழுக்கக் காய்ச்சிய இரும்பு ஆயுதங்களால் பிடுங்கி எடுக்கப்பட்டது. ஆனால் ஜான் எவ்வித வேதனை முனங்கலையும் காட்டவில்லை. தன்னை சித்திரவதை செய்யாமல் கொன்றுவிடும்படி கூறினார். பிஷப் புன்முறுவலுடன் ஜானின் நாக்கை தனியாக வெட்டிவிடும் படி சொன்னார். இறுதியாக உயிருடன் அவரது இருதயம் பழுக்கக் காய்ச்சிய கத்தியால் கீறி வெளியில் எடுக்கப்பட்டது.

 

 அனாபாப்டிஸ்ட்கள் தங்களை ஒரு சட்டரீதியான கிறிஸ்தவ சமயமாக ஏற்கவேண்டுமென பல அரசுகளிடம் கேட்டுக்கொண்டனர். ஆனால் ஒவ்வொரு ஐரோப்பிய அரசும் அந்த கோரிக்கைகளை நிராகரித்தது. அமெரிக்காவிலும் மர்மோன்களின் பாலியல் கோட்பாடுகள் மைய கிறிஸ்தவத்திலிருந்து மாறுபட்டவையாக இருந்தன. ஆனால் ஒரு முக்கியமான குழுமம் ஒனிடா (Oneida) எனும் இறைக்குழுவாகும். கிறிஸ்துவின் புதிய அரசு வரும் போது பழைய மண உறவுகள் என்னவாகும் எனும் கேள்விக்கு பதில் இந்த குழுவின் அடிப்படையாக அமைந்தது. ஜான் ஹம்ப்ரே நோயஸ் என்பவரால் உருவாக்கப்பட்ட இந்தக் குழு இயேசுவின் இரண்டாவது வருகை நிகழ்ந்துவிட்டதென்றும் நாம் இந்த இறையரசில் இருப்பதால் மண உறவுகளின் தன்மையே மாறுபட்டுவிட்டதென்றும் கருதியது. “ஆட்டுக்குட்டியானவரின் திருமணத்தில் எல்லா பதார்த்தங்களும் அனைவருக்கும் இலவசமே” என கூறிய இவர்கள் ஒரு தனி சமூகமாக வாழ ஆரம்பித்தனர். Coitus reservatus போன்ற விஷயங்களை பாலியல் தொடர்பான உளவியல் பிரச்சனைகளை ஏறக்குறைய பிற்கால உளவியலின் அறிவியல் நேர்த்தியுடன் இவர்கள் அணுகியதாக தெரிகிறது. உதாரணமாக பாலியல் சக்தியை கட்டுப்படுத்தாமல் ஆன்மிக வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும்; பாலியல் போட்டிகளை இல்லாமல் ஆக்குவதன் மூலம் உலகியல் விஷயங்களில் போட்டிகளை தவிர்க்கலாம் ஆக்ரோஷ மோதல்கள் இல்லாமல் ஆக்கலாம் என்றெல்லாம் அவர்கள் கருதியிருக்கிறார்கள். மிக முக்கியமான முன்னகர்வுகள் இவை.

ஆனால் மேற்கத்திய பாலியல் சார்ந்த ஆன்மிகக் குழுக்களிலெல்லாம் ஒரு விஷயம் அதனை இந்திய சகபாடிகளிலிருந்து பிரித்துக் காட்டுகிறது. இந்தக் குழுக்களிலெல்லாம் ஒரு தலைமகன் தன்னை இறைவாக்கினராக அறிவித்துக் கொண்டார். அவருக்கு தன்னை ஒரு பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக பார்க்கும் பார்வை இருக்கவே இல்லை. ஒவ்வொருவரும் பைபிளிலிருந்து புதிதாக தங்கள் பாதையை கட்டமைத்தனர். அதில் வரலாற்றுப் பாவனை அதீதமாக இருந்தது. தன்னை இறைத்தூதராகவும் தான் வாழும் நாட்களை உலக இறுதி நாட்களாகவும் மிகுதியானவர்கள் (அனைவரும் அல்ல) நம்பினார்கள். பிறகு இதனை அவர்கள் தங்கள் இயற்கைக்கு ஏற்ற மார்க்கம் என நினைக்கவேயில்லை. இதுவே பொதுவான ஒரே வழி என்றும் பிறரெல்லாம் தவறாக செல்வதாகவும் கருதினர்.

 

இந்த குறைபாடுகள் எதுவுமே இந்திய மார்க்கங்களில் இல்லை. இறுதியாக இவர்கள் சரியோ தவறோ கிறிஸ்தவத்தின் ஒரு அங்கம்தான். ஆனால் கிறிஸ்தவ வரலாறு இவர்களை சங்கடத்துடன் பார்க்கிறது. இந்த மரபு ஒதுக்கியும் மறக்கடிக்கவும்படுகிறது. யோக-தாந்திரீக உளவியல் அறிந்தனொருவர் இந்த குழுக்களின் வரலாற்றை படித்து ஒரு கிறிஸ்தவ வரலாற்றை சமைத்தால் அப்போது இவர்களுக்கு நியாயம் கிடைக்கலாம். ( இதில் ப்ளாவட்ஸ்கி, குர்ட்ஜீப் குறித்து நான் பேசவில்லை என கவனித்திருப்பீர்கள். குர்ட்ஜீப், ரசவாதம் ஆகியவை தொடர்புடைய மற்றொரு பெரும் ஆன்மிக இயக்கமும் மேற்கத்திய பாரம்பரியத்தில் மறைந்தோடுகிற ஒரு நதியாக இருந்து வந்திருக்கிறது. காலின் வில்ஸன் தமது புகழ்பெற்ற Occult எனும் நூலில் இந்த இயக்க ஆளுமைகளூடாக வெளிப்படும் ஒரு தன்மையை அறிய முயற்சி செய்திருக்கிறார். ஒரு முக்கியமான ஆரம்பம் என்ற போதிலும் யோகமும் தாந்திரீகமும் இந்திய சிந்தனை மரபும் அறிந்த ஒருவரால் இந்த விஷயங்களை இன்னும் தெளிவாகவும் முழுமையாகவும் அணுக முடியும்.)

 

இதிலுள்ள வேதனையான முரண்நகை என்னவென்றால் ஐரோப்பாவின் ஆன்மிக வரலாற்றின் முழுமையை அறியும் கருவிகள் இந்தியாவிடம் உள்ளன. ஆனால் அத்தகைய கருவிகள் ஏதுமில்லாமல் தனது பாரம்பரியத்தையே மூடி முக்காடு போடும் மேற்கின் மானுடவியலாளர்களும் இறையியலாளர்களும் தங்களிடம் இருக்கும் அரைகுறை உபகரணங்களால் இந்திய ஆன்மிகத்தை மதிப்பிட்டு நூல்கள் ஆராய்ச்சிகள் என செய்து குவிக்கிறார்கள். நம்மவர்கள் அவர்களையே பிரதி எடுக்கிறார்கள்.

அரவிந்தன் நீலகண்டன்

  • Jan Matthyson, The Black Death: A Chronicle of the Plague
  • Colin Wilson and Damon Wilson, World Famous Cults and Fanatics
  • Colin Wilson, The Occult
  • Victor Hawley, Robert S. Fogarty, Special love/special sex: an Oneida Community diary

 

 

அன்புள்ள அரவிந்தன்,

எளிமையாகப்பார்த்தால் தாந்த்ரீகம் என்பது பழங்குடிச்சடங்குகளுடன் கொஞ்சம் தத்துவமும் கலந்து உருவாக்கப்படுவதுதான். பழங்குடிச்சடங்குகளுக்கு ஒரு தன்னிச்சையான தன்மை உண்டு. தனக்குள் உள்ள ஓர் உணர்வெழுச்சியை, அல்லது அக அறிதலை, புறவயமான பொருளாக  உருவகபப்டுத்திக்கொள்ள முடியும் என  அவன் கண்டடைகிறான். அந்தப் பொருளை தியானிப்பதன் மூலம் அந்த  உணர்வெழுச்சியை அல்லது அறிதலை மீண்டும் அடைய முடியும் என உணர்கிறான். அவ்வாறாகவே சடங்குகள் உருவாகின்றன.  அச்சடங்குகளில் இருந்து தத்துவார்த்தமாக விரிவாக்கம்செய்யப்பட்ட சிலவே தாந்த்ரீகமாக ஆகின்றன. ஏதோ ஒருவகையில் உலகம் முழுக்க தாந்திரீகம் இருக்கும். தாந்த்ரீகம் என்பதே குறியீடுகளினாலான இணைமதம் என்று சொல்லலாம்.

நடுக்காலத்து அறவியலும் ஒழுக்கவியலும் இந்தவகை சடங்குகளுக்கு எதிரான உணர்வுகளை உருவாக்கி சமநிலையான ஆய்வுகள் நிகழாதுசெய்துவிட்டன. ஆனால் நிகழ்காலத்தில் மனிதனுக்கு அத்தகைய சடங்குகள் தேவையாகின்றன. இப்போது ஹிப்பிகள் போன்ற புறச்சமூகக் குழுக்கள் பலவகையான புதுச்சடங்குகளை அவர்களே உருவாக்குவதைப் பார்க்கையில் இது ஏதோ ஒருவகையில் மனிதர்களுக்கு முக்கியம்தானா என்ற எண்ணம் ஏற்படுகிறது

ஜெ

முந்தைய கட்டுரைகாமமும் கிறித்தவமும், ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைசாதியை வைத்துக்கொண்டு என்ன செய்வது?