ஜெ,
காமம் என வந்துவிட்டாலே நம்மால் தெளிவாக உரையாடவும் சிந்திக்கவும் இயலாமல் போய்விடுகிறதோ என சந்தேகிக்கிறேன். காந்தியும் காமமும் கட்டுரைகள் பல தரப்புகளையும் தொட்டுச் செல்கின்றன. கிறீத்துவம் சமணத்தில் துவங்கியபோது ஒரு கோணத்தில் பயணித்த கட்டுரை விக்டோரியன் ஒழுக்கவியலுக்குள் புகுந்து பின்னர் தாந்திரீக மரபிலும், ஞானிகளின் கிறுக்குத்தனத்திலும் வந்து நிற்கும்போது மிகுந்த கவனத்துடனேயே இதை அணுகியிருக்கிறீர்களோ எனத் தோன்றுகிறது.
காந்தியின் காம சோதனைகளை கிறுக்குத்தனம் என்றும், நடைமுறைக்கப்பாற்பட்டதென்றும் சொல்ல நாம் விக்டோரியன் ஒழுக்கவியலுக்குள் செல்ல அவசியமே இல்லை என நினைக்கிறேன். ஒருவர் தன் பேத்தியுடன் இயல்பாக நிர்வாணமாகப் படுத்திருப்பதை நம் சமூகம் 1946ல் மட்டுமல்ல அதற்கும் யுகங்களுக்கும் முன்பே அனுமதித்திருக்காது என்றே நம்புகிறேன். தாந்த்ரீக மரபுகள் சிலரால் பின்பற்றப்பட்டிருந்தாலும் அவை இந்திய பொது வாழ்க்கையில் ஒன்றிப்போய்விடவில்லை. இன்னொன்று கட்டுப்பாடற்ற பாலியலை அனுமதிக்கும் சமூகங்களில் பெண்களின் நிலை மிகவும் கவலைக்குரியதாகவே இருந்திருக்கிறது. அந்த முறைக்குள் அந்தப் பெண் விருப்பப்பட்டே இருந்தால் கூட. தற்போதைய சட்டங்களில் மைனர் பெண்களின் சம்மதத்தோடேயே ஒருவர் உறவுகொண்டாலும் அது வன்புணர்வுக் குற்றமாகக் கருதப்படுவது இந்த அடிப்படைகளில்தான்.
விக்டோரிய ஒழுக்கவியல் காமத்தை ஒடுக்கிவைத்த வெறும் வறட்டு ஒழுக்கவியல் அல்ல அது இன்று நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் நவீன உலகத்தின் பல அடிப்படைகளை உருவாக்கியது. அது இன்றைய சமூகங்களில் இயல்பாகவே ஏற்றுக்கொள்ளப்படுகிரது. இந்தியாவிலும் அது அவ்வாறே இயல்பாகவே ஏற்றுக்கொ ள்ளப்பட்டிருக்கும் என நம்புகிரேன். அல்லது நம் இந்திய மரபிலும் அத்தகைய ஒழுக்க விதிகள் இருந்திருக்கும். அவற்றின் அடிப்படைகளிலும் காந்தியின் காம பரிசோதனைகள் நிராகரிக்கப்பட்டிருக்கலாம். திருமணத்திற்கப்பாற்பட்ட காம நடவடிக்கைகளை நம் இலக்கியங்கள் ‘கள்ள ஒழுக்கங்கங்கள்’ என்ருதான் குறிப்பிடுகின்றன. ‘கற்பு’ நம் மரபின் பிரிக்க முடியாத ஒழுக்கக் கூறில்லையா?
“காந்தி கிறித்தவத்தில் இருந்து தன் புலனடக்கமுறைகளை எடுத்துக்கொண்டார். குற்றவுணர்ச்சியையே புலனடக்கத்துக்கான முக்கியமான கருவியாக அவர்கள் நினைக்கிறார்கள்”
கிறீத்துவத்தில் புலன் ஒடுக்கம் இருக்கிறது , ஆனால் புலனடக்க ‘முறை’ என்று ஒன்றிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. குற்ற உணர்ச்சியை ஏற்படுத்துவதென்பது ஒரு முறையாகுமா? அது விதிகளை மீறும்போது தாமாகவே வந்துவிடுகிறது. மேலும் புலனடக்கத்தை மீறும்போது மட்டுமே குற்ற உணர்ச்சி ஏற்படுவதில்லை. ஆக அது ஒரு புலனட்டக்க ‘முறை’ அல்ல.
கிறீத்துவ இறைப்பணியாளர்களுக்கு கிறீத்துவம் சொல்லும் புலனடக்கம் இயேசுவையும் இறை பணியையும் முன்வைத்ததே. ஒரு அதி உன்னத சேவையை செய்ய முனைபவன் அதில் முழு கவனத்தையும் செயல்படுத்த வேண்டும் என்பதன் அடிப்படையில் அது உருவாகியது. இதையே காந்தியும் ஏற்றுக்கொண்டிருக்கலாம். ஏன் திருப்பணியாளர்கள் ‘ உலகக்’ கவலைகளிலிருந்து விடுபட்டு இறை பணியில் ஈடுபடுவது அவசியம் என்பதை புனித பால் முதன் முதலில் குறிப்பிடுகிறார் (1 கொரிந்தியர் 7:7 – 8 , 32 – 35). இதுதான் கிறீத்துவ பணியாளர்கள் பிரம்மச்சரியம் ஏற்பதன் அடிப்படை.
“காமத்தை ஆதிபாவம் என்று விலக்கும் கிறித்தவம் அதை சாத்தானின் ஆயுதம் என்கிறது.”
முதலில் ஆதி பாவம் என்பதே காமம்தான் என கிறீத்துவம் நம்பவில்லை. ஆதிபாவத்தின் விளைவாக மனிதன் காமம் எனும் ‘சக்தியின் ‘ வயப்பட்டான் என ஒரு சிந்தனை இருந்தது. ஆதி பாவம் ஒரு உடல் ரீதியான பாவம் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட நம்பிக்கை எனலாம். அது காமம்தான் என நம்பிக்கை இல்லை. குறிப்பாக புனித அகஸ்டினின் இறையியல் இதைச் சொல்கிறது.
அகஸ்டின் ஆன்மாவையும் உடலையும் இருவேறாகப் பார்க்கிறார். ஆன்மாவும் உடலும் இணைந்து செயல்படும்போது அது பாவம் இல்லை. ஆனால் ஆன்மாவுக்கு எதிரான, வெறும் உடலை மகிழ்விக்கும் செயல்களையே பாவம் என வரயறுக்கிறார் அகஸ்டின். விலக்கப்பட்ட கனியை ‘உண்பது’ என்பது ஆன்மாவுக்கு எதிரான உடல் இச்சையைத் தேடிய நிகழ்வாக அகஸ்டின் கருதுகிறார். இன்றைய கிறீத்துவத்தின் பல அடிப்படை இறையியல் கோட்பாடுகளை உருவாக்கியவர் அகஸ்டின் என்பது குறிப்பிடத் தக்கது. ஆன்மாவின் இசைவோடு செய்யப்படுகிற காமம் தவறானதல்ல எனும் ‘வாதத்தை’ அகஸ்டின் முன்வைத்தார். அகஸ்டினின் காலத்தில் (4ஆம் நூற்றாண்டு) இதுபோன்ற விவாதங்கள் பல தரப்பிலிருந்தும் கிறீத்துவத்திற்குள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. சொல்லப்போனால் இன்றுவரை அவை தொடர்கின்றன.
கிறீத்துவம் காமத்தை எங்கே அங்கீகரிக்கிறதென்றால், திருமணத்தின் வழியாக. திருமணத்தின் வழியாக மட்டும். ஒரு ஆணும் பெண்ணுக்குமிடையேயான திருமணத்திற்குள்ளால் மட்டும். இதையும் புனித அகஸ்டினே வரையறுத்திருக்கிறார். அவர் திருமணத்தின் ஆசீர்வாதங்களாக மூன்றைச் சொல்கிறார். ஒன்று “மக்கட் பேறு, பரஸ்பர நம்பிக்கை, பிரிக்கமுடியாத ஒன்றிப்பு. திருமணத்தில் இணைய விரும்புபவனுக்கு இந்தக் கொடைகள் வழங்கப்படுவதாக”
இதில் மக்கட்பேறு என்பது காமம் இல்லாமல் சாத்தியமில்லை. மக்கட் பேறு என்பது கடவுளால் மனிதனுக்கு வழங்கப்பட்ட கொடை மட்டுமல்ல கட்டளையுமாகும். பலுகிப் பெருகி இந்த பூமியின் பரப்பை நிரப்புங்கள் என்பது மனிதனைப் படைத்த உடனேயே கடவுள் அளித்த கட்டளையும் , வாக்குறுதியும்.
அப்படியானால் கணவனும் மனைவியும் குழந்தை பேறுக்கன்றி வெறும் இன்பத்துக்காக உடலுறவு கொள்ளக் கூடாதா? எனும் கேள்வி எழுகிறது. அதற்கான பதில் மூன்றாவது கொடையான ‘நிரந்தர ஒன்றிப்பில்’ உள்ளது. ஆணும் பெண்ணும் நிரந்தர இணைப்பில் நிலைக்க அவர்களுக்குள் அந்தரங்க காம உறவு தேவைப்படுவதை, அது நிரதர ஒன்றிப்பின் அடையாளமாகவும் கருவியாகவும் திகழ்வதை திருச்சபை ஏற்றுக்கொள்கிறது. இதை திருமணத்துக்கு முன்பான வகுப்பில் கத்தோலிக்க இளைஞர்களுக்கும் இளைஞிகளுக்கும் பாடமாக சொல்லித் தருகிறார்கள்.
கிறீத்துவம் குருத்குவத்தையும் திருமணத்தையும் ஒரே தட்டில் வைத்துதான் பார்க்கிறது. இரண்டுமே அருட்சாதனங்களாகவே ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இதில் ஒன்றைவிட இன்னொன்று உயர்ந்ததல்ல.
மிகத் தெளிவாக கிரீத்துவம் ‘முறையான’, திருமணத்துக்குட்பட்ட காமத்துக்கு எதிரானதல்ல என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. மேலும் திருச்சபை திருப்பணியாலர்களுக்கு பிரம்மச்சர்யத்தை பரிந்துரைப்பது அவர்களின் பணியின் முக்கியத்துவம் கருதியேயன்றி காமத்தின் இழிவால் அல்ல. கத்தோலிக்க திருச்சபைக்குள் சில கிளைகளில் குருக்கள் திருமணம் செய்ய அனுமதி உள்ளது. அண்மையில் சர்ச்சைக்குள்ளாகிய வத்திக்கானின் அறிவிப்பில் ஆங்கிலிக்கன் திருச்சபையிலிருந்து வந்து கத்தோலிக்கத்தில் இணைபவர்களுக்கு அவர்கள் வழக்கப்படியே திருமணத்துடனான குருத்துவம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அகஸ்டினின் இறையியல் மற்ற பிற தத்துவங்காளையும் இறையியலைப் போலவே பலவிதமான உரையாடல்களையும் சாதகமான பாதகமான விவாதங்களையும் உருவாக்கியுள்ளது. ஆனால் நான் விளக்கியிருப்பது பரவலான கிறீத்துவ நம்பிக்கை என கருதுகிறேன்.
என் தனிப்பட்ட அனுபவத்தில் காமத்தை ஒரு மாபெரும் சக்தியாகக் காண்கிறேன். அது இந்த பிரபஞ்சத்தை இயக்கும் சக்திகளில் ஒன்று என்பதில் சந்தேகமே இல்லை. காமத்தை ஒடுக்குவது ஒரு மகத்தான தியாகமாக தென்படலாம் ஆனால் அது இயற்கைக்கு, அதன் சக்திகளுக்கு எதிரான ஒரு மாபெரும் போர். அதனாலேயே அது மாபெரும் தியாகமாகவும் கருதப்படலாம். ஒருவகையில் தன் குறிக்கோளை அடைய விடாமல் தடுக்கும் தடையாகவே காமம் வந்து முடியலாம். தன் வாழ்நாள் முழுவதுமே ஒருவர் அதனோடு சண்டை போட்டுக்கொண்டே செலவழித்துவிடலாம். நான் அந்த முயற்சியில் ஈடுபட்டு தோற்றுப்போயிருக்கிறேன். அதுவும் அந்த இளம் வயதில் . ஆனால் அது சிறந்த அனுபவமாக அமைந்தது என்பதில் சந்தேகமேயில்லை.
—
Regards,
Cyril Alex
http://www.cyrilalex.com
சிறில் அலெக்ஸ்
அன்புள்ள சிறில்,
முதலில் விக்டோரிய அணுகுமுறைக்கும் இந்தியாவில் இருந்த பொது ஒழுக்க நெறிக்கும் இடையே உள்ள வேறுபாட்டைச் சொல்லிவிடுகிறேன். இந்தியாவில் பொது ஒழுக்க நெறி என்பது இங்கிருந்த ஏராளமான பழங்குடிப்பண்பாடுகளில் இருந்து கிளைத்தது. ஆகவே அது சாதிக்கு ஒன்றாகவும் பிராந்தியத்திற்கு ஒன்றாகவும் இருந்தது. பின்னர் இந்தியாவின் ஆன்மீக- வழிபாட்டு நம்பிக்கைகளை இணைத்த வைதிக மதம் அவற்றுக்கு ஒரு பொதுத்தன்மையை உருவாக்கியது. அவ்வாறாக இந்தியசமூகம் என்ற உருவம் திரண்டுவர ஆரம்பித்தது. இவ்வாறுதான் இந்து தர்ம சாஸ்திரங்கள் உருவாயின. தர்மசாஸ்திரங்கள் நூற்றுக்கணக்கில் உருவாயின. பின் அவை ஒன்றுடன் ஒன்று உரையாடி அவற்றுக்கிடையே பொது நெறிகள் கண்டடையப்பட்டன.
பின்னர் பௌத்த, சமண மதங்கள் உருவாகி வந்தன. அவை இந்தியாவெங்கும் சீரான அற நெறிகளை உருவாக்கின. இந்தியாவிலுள்ள முக்கியமான நீதிநூல்கள் பௌத்த,சமண மதப்பின்புலம் கொண்டவை. வைதீக நெறிகள் அரசாங்கம் வழியாகவும் ஆலயம் வழியாகவும் நிறுவப்பட்டபோது இவை கல்விச்சாலைகள் வழியாக நிறுவப்பட்டன. இன்று நாம் இந்தியாவில் காணும் ஒழுக்க நெறிகள் என்பவை இவ்வாறாக படிப்படியாக திரண்டு வந்தவையே . தர்ம சாஸ்திரங்களின் பரிணாமத்தை பி.வி.காணே அவரது புகழ்பெற்ற நூலில் விரிவாகபேசியிருக்கிறார்.
இந்த ஒழுக்க நெறிகளுக்கும் விக்டோரிய நெறிகளுக்கும் இடையே என்ன வேறுபாடு? விக்டோரிய ஒழுக்க நெறி முழுமுற்றான ஒழுக்க விதிகளை உருவாக்கியது. அதில் காமம் இடக்கரடக்கலாகவே இருக்க வேண்டும் என்றால் எந்நிலையிலும் அது அப்படித்தான். ஆனால் இந்திய ஒழுக்க நெறி அப்படிபப்ட்டதல்ல. சாமானியம் – விசேஷம் [நடைமுறை, சிறப்புத்தளம்] என அது தன்னை இரண்டாகப் பிரித்துக்கொண்டது. சாமானியதளத்தில், அன்றாட தளத்தில் ஒன்று ஒழுக்கக் கேடாக, தடைசெய்யப்பட்டதாக இருக்கலாம். ஆனால் விசேஷ தளத்தில் அதற்கு சமூக அனுமதி உண்டு. கறாரான ஒழுக்கநெறி புழங்கிய சமூகங்களில் தாந்த்ரீகம் அனுமதிக்கப்பட்டது இவ்வாறுதான். கோயிலில் நிர்வாணச்சிலைகள் அங்கீகரிக்கப்பட்டது இவ்வாறுதான். காவியங்களில் காமம் அனுமதிக்கப்பட்டதும் இவ்வாறுதான்.
அதாவது விதிவிலக்குகளுக்கு, மீறல்களுக்கு ஓர் இடம்விட்டுத்தான் இந்திய நடைமுறை ஒழுக்கம் இருந்திருக்கிறது. மீறல்கள் என்பவை ஒரு சமூகத்தின் தீவிரமான சில தளங்களில் நடைபெறுகின்றன என்றும் அவற்றை தடைசெய்யமுடியாது என்றும் இந்திய ஒழுக்க மரபு கருதியது. இந்தியாவில் பல இடங்களில் தாந்த்ரீகர்களிடமிருந்து ஆலயங்கள் பக்திமார்க்கத்தினரால் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. ஆனால் இந்தியாவில் எங்குமே தாந்த்ரீக மார்க்கிகள் தடைசெய்யப்பட்டு ஒழிக்கப்பட்டதில்லை. ஒருவேளை உதிரிச்சம்பவங்கள் சில இருக்கலாம். அதைத்தான் சிலப்பதிகாரம் முதல் நான் உதாரணம் காட்டியிருக்கிறேன். இப்போதுதான் இந்துத்துவர்கள் விக்டோரிய ஒழுக்க நெறிகளுடன் கிளம்பியிருக்கிறார்கள்.
விக்டோரிய ஒழுக்கவியல் தரப்படுத்தப்பட்ட ஒழுக்கநெறிக்கு எதிரான அனைத்தையுமே முற்றிலும் பிழையானதாகக் கண்டது. சமூக விலக்கு மூலம் அதை ஒடுக்க முயன்றது, அழிக்க முயன்றது. பிரிட்டனின் நிலத்தில் இருந்த எல்லா பாகன் சடங்குகளும் கோயில்களும் சிலைகளும் நூல்களும் மிச்சமே இல்லாமல் அழிக்கப்பட்டன. கிறித்தவ மரபில் கத்தோலிக்கர்களே அந்த அழிவுகளைச் செய்திருக்கிறார்கள் என்பது வரலாறு. ஆனால் கத்தோலிக்கமதம் அதன் பிரம்மாண்டம் காரணமாகவே பல்வேறு மீறல்களை அங்கீகரிக்கவும் சுவீகரிக்கவும் செய்தது. ஆனால் பிரிட்டனின் சீர்திருத்தக் கிறித்தவத்தின் அதி தூய்மைவாதம் கத்தோலிக்கம் அனுமதித்த விதிவிலக்குகளையே தடைசெய்யும் அளவுக்குச் சென்றது. கத்தோலிக்க தேவாலயத்துச் செரூபிக் சிலைகளையே அது உடைத்தது.
விக்டோரிய ஒழுக்கவியல்தான் டி.எச்.லாரன்ஸை சிறைக்கனுப்பியது. ஜேம்ஸ் ஜாய்ஸை பகிஷ்கரித்தது. ஐரோப்பாவின் கலை வளர்ச்சிக்கே அது எதிரானதாக ஆனபோது நூற்றாண்டுக்காலம் அதற்கு எதிராக மாபெரும் சிந்தனையாளர்களும் கலைஞர்களும் போராடியிருக்கிறார்கள்
மெல்ல மெல்ல அது பின்வாங்கி இன்று சில தூய்மைவாதக் குழுக்களுக்குள் ஒலிப்பதாக உள்ளது. அதன் பங்களிப்பை விட அதன் அழிவுகளே அதிகம் என்றே நான் நினைக்கிறேன். அதற்கு டி.எச்.லாரன்ஸ் முதல் ரஸ்ஸல் வரை நான் நூற்றுக்கணக்கான பிரிட்டிஷ் சிந்தனையாளார்களை மேற்கோள் காட்ட முடியும். அது பிரிட்டனின் பண்பாட்டில் இருந்த பன்மைத்தன்மையை முற்றாகவே அழித்தது என்பதே வரலாறு காட்டுவது.
இந்தியாவில் விக்டோரிய ஒழுக்கவியல் கல்வி மூலம் புகட்டப்பட்டபோது இந்தியாவின் பன்மைத்தன்மையை மறுக்கும் போக்கு இங்கும் உருவாகியது. ஜெயதேவரின் அஷ்டபதியும் மீராபஜனும் ஆபாசம் என்று சொல்பவர்கள் உருவானார்கள். கஜுராகோ சிற்பங்களை களிமண் வைத்து மூட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. சங்க இலக்கியங்கள் எல்லாம் ஆபாசக்குப்பை என்று புதுமைப்பித்தன் சொல்லியிருக்கிறார். கம்பன் ஆபாச இலக்கியம் என்றார் சி.என்.அண்ணாத்துரை. அதாவது நடைமுறை ஒழுக்கநெறியையே அனைத்துக்கும் உரியதாகச் சொல்லும் ஒரு மனநிலை இங்கே பரவியது. நம்முடைய கல்வியாளர்களில் அது மிக வலுவாக இருந்தது. காந்தியின் சோதனைகளை சாமானிய மனம் கொண்டவர்கள் தாங்களும் செய்வார்களா என்றால் செய்யமாட்டார்கள். ஆனால் அதை அருவருப்பூட்டும் ஆபாசமான ஒரு செயல்பாடாக எண்ண மாட்டார்கள். அவர்கள் ராமகிருஷ்ணரையோ அரவிந்தரையோ அப்படி எண்ணவுமில்லை. விக்டோரிய ஒழுக்கவியல் கொண்ட கல்வியாளர்களே அதைச் செய்தார்கள்.
கத்தோலிக்க அமைப்புக்குள் காமம் எவ்வாறு அணுகப்பட்டது என்பதை நான் வாசித்தறிந்ததை ஒட்டியே எழுதினேன். குறிப்பாக ரஸ்ஸல் விரிவாக எழுதியிருக்கிறார். காமம் சார்ந்த கத்தோலிக்கமதத்தின் கருத்துக்கள் பரிணாமம் அடைந்து வந்ததை ஹாவ்லக் எல்லிஸ் எழுதியிருக்கிறார். கத்தோலிக்க மதத்தில் ஒருகட்டத்தில் பாலின்பம் என்பது கூடுமானவரை தவிர்க்கப்படவேண்டிய பாவம் என்ற கருத்து அதிகாரபூர்வமாகவே இருந்திருக்கிறது. குழந்தைகளுக்காக அன்றி இன்பத்திற்காக உடலுறவு கொள்வது பாவம் என்றே நெடுங்காலம் கத்தோலிக்க மதம் சொன்னது. அந்த அடிப்படையிலேயே மிஷனரி பொசிஷன் என்று சொல்லப்படும் ஆண் மேலிருந்து உறவுகொள்ளும் முறை மட்டுமே கிறித்தவர்களுக்கு சிபாரிசு செய்யப்பட்டது. ஏன் மறைந்த போப்பாண்டவர் ஜான்பால் இன்பத்திற்காக உடலுறவு கொள்வது பிழை என்பதனாலேயே கருத்தடையை அங்கீகரிக்க மறுப்பதாகச் சொல்லியிருக்கிறார். நினைவிலிருந்து சொல்கிறேன். விவரங்களை நான் திரட்டிவிடமுடியும்.
ஏசுவை மணமகனாகவும் தன்னை மணமகளாகவும் முன்வைத்த ஸ்பெயினின் புனித ஜான் ஆ·ப் கிராஸ் போன்றவர்கள் கத்தோலிக்க சபையால் சிறையிடப்பட்டு வதைக்கப்பட்டு பின் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆனால் மெல்ல மெல்ல கிறித்தவமதம் அவர்களையும் உள் வாங்கவேண்டியிருந்தது. கத்தோலிக்க மதத்தில் உறுதியான தூய்மைவாத கருத்து இல்லாமலிருந்திருக்கலாம். நெகிழ்தன்மையுடன் பலவற்றை அது உள்ளிழுத்திருக்கலாம். ஆனால் அதன் நீண்ட ஆயிரமாண்டு வரலாற்றில் காமம் ஒரு பாவம் என்ற கருத்துதான் முக்கியமான மையக்கருத்தாக இருந்திருக்கிறது. அது மெல்லமெல்ல பிற கருத்துக்களால் பின்னகர்த்தப்பட்டிருக்கிறது.
இவ்விஷயங்களை ஒரு பொது வாசகனின் புரிதலை ஒட்டியே சொல்கிறேன். இத்தளத்தில் முறையான கல்வி கொண்டவர் என்ற நிலையில் நீங்கள் திருத்தலாம்
ஜெ