சமநிலையின் வழி

ஒரு சிறிய அறைக்குள் டீ சாப்பிட்டுக்கோண்டிருந்தேன். ஏழெட்டுபேர் கும்பலாக வந்து சமூஸா டீ சாப்பிட்டார்கள். அவர்கள் ஏற்கனவே பேசிக்கொண்டிருந்தவற்றின் தொடர்ச்சியாக பேசிக்கோண்டிருந்ததில் பிரபாகரன் என்ற சத்தம் கேட்கவே கவனிக்க ஆரம்பித்தேன். இருவர் மிக ஆவேசமாக ‘பிரபாகரன் சாகலை. அவர் எப்டிடா சாவார்? திருப்பி வருவார். வந்து இந்த தேவ்டியாப்பசங்களை அடிபின்னுவார்.பாத்துட்டே இரு” என்றார்கள். ஐயம் தெரிவித்திருக்கக்கூடிய இன்னொருவன் பேசாமல் டீயை உறிஞ்சினான்

 அதன்பின்னர் ராஜபக்ஷேக்கு வசை. கருணாநிதிக்கு மேலும் வசை. புரட்சி அறைகூவல்கள். கொந்தளிப்புகள். துரோகிகளுக்கு எச்சரிக்கைகள். அந்த கும்பல் மொத்தமே தமிநாட்டு மின்சார வாரிய ஊழியர்கள். தினசரி போனஸ், பஞ்சப்படி, சம்பளக்கமிஷன் பற்றி பேசுவதற்கு மாறுதலாக இப்படிப் பேசுகிறார்கள். ஓர் அதிகாரி ஒரு சிறிய மெமோ கொடுத்தால் போதும் இந்த ஒட்டுமொத்தக் கும்பலே பதறிவிடும் என தொழிற்சங்க அனுபவம் காட்டியிருக்கிறது.

 இப்படித்தான் நாம் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறோம். எந்த ஒரு விஷயத்திலும் மிக ஆவேசமான வாய்வேகம். அத்துடன் அப்படியே நின்றுவிட்டு சுயநலம் சார்ந்த சாதாரண வாழ்க்கை. தமிழில் எழுதப்பட்ட, பேசப்பட்ட சொற்களை வைத்துப்பார்த்தால் தமிழ்நாடு எரிந்துகொண்டிருக்க வேண்டும். ஆனால் இங்கே கற்பாறைபோலிருக்கின்றது குடிமையுணர்வு என்பது. மிகச்சிறிய நீதியுணர்ச்சி அல்லது பொதுச்சமூக உணர்ச்சிகூட இங்கே செயல்படுவதில்லை

 நம்முடைய இந்த இயல்பை யார் மேடைகளில் பிரதிபலிக்கிறார்களோ அவர்களை நாம் ரசிக்கிறோம். ஈழம் குறித்து மட்டுமல்ல எந்த விஷயம் குறித்தும் மேடையில் நாடகம் போடும் ஆட்களையே நாம் விரும்கிறோம். விடுதலைப்புலிகளின் மிகப்பெரிய பிழை என்றால் இந்த நடிகர்களை நம்பியதுதான்.இன்று இத்தனைக்கும் பிறகுகூட தினமணி போன்ற நாளிதழ்கள்கூட அபத்தமான உணர்ச்சிக்கொந்தளிப்பு நாடகம் போடுவதிலேயே குறியாக உள்ளன. காரணம் இந்த கொந்தளிப்புகளுக்கும் நம் வாழ்க்கைக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. கொந்தளிப்பவர்கள் எவரும் கொஞ்சம்கூட நோகவோ இழக்கவோ போவதில்லை.

 ஆனால் யதார்த்தத்தை எதிர்கொண்டாகவேண்டிய இடங்களில் எப்படியோ ஒரு நிதானம் வந்துவிடுகிறது. சிறந்த உதாரணம், மலேசிய சிங்கப்பூர் எழுத்துக்களை தாங்கி வரும் வல்லினம் இதழில் நான் வாசித்த இரு கட்டுரைகள். சிங்கப்பூரில் நான் சந்தித்த கவிஞரும் இதழாளருமான லதா சமீபத்தில இலங்கைப்பயணத்துக்குப் பின் எழுதியிருக்கும் கட்டுரை. ம.நவீன் எழுதியிருக்கும் கட்டுரை. இரண்டுமே எந்தவிதமான பொய்யுணர்ச்சிகளும் இல்லாமல் உண்மைகளைப் பேசுகின்றன. உண்மைகள் வருத்தமும் கசப்பும் அளிப்பவையாகவே உள்ளன. ஆனாலும் அவை சமநிலையுடன் நேர்மையாக எழுதப்பட்டிருக்கின்றன

 http://www.vallinam.com.my/issue11/index.html

முந்தைய கட்டுரைஅள்ளியள்ளிப்பெருகுவது…
அடுத்த கட்டுரைகாமமும் கிறித்தவமும், ஒரு கடிதம்