அள்ளியள்ளிப்பெருகுவது…

அம்மா ஒரு ‘விதுஷி’ ஆனதனால் அவளிடம் இலக்கியம் புராணம் என்று எதையாவது பேசுவதற்கு பலர் வருவார்கள். தொண்ணூறு கடந்த மூத்தாசாரி ஒருவர் மாதம் ஒருமுறை வருவார். நல்ல ஆரோக்கியம்தான். ஆனால் அவர் பாட்டுக்கு காலைமுதல் மத்தியான்னம் வரை நடந்து வந்துகொண்டே இருப்பார். வந்துசேர்ந்ததும் திண்ணையில் அமர்ந்து பெரிய கும்பா நிறைய சூடு கருப்பட்டிக்காப்பி குடித்துவிட்டு ஒரு தூக்கம். அதன் பின் கண்களில் பீளையுடன் எழுந்து பிரமித்துப்போய் கொஞ்ச நேரம் அமர்ந்திருப்பார்.

அரைமணிநேரம் கழித்து மண்டை மீண்டதும் மீண்டும் காபி. ஏதாவது எளிய உணவு. பெரும்பாலும் இட்லி, தொட்டுக்கொள்ள எதுவுமே இல்லாமல். ‘பலகாரத்துக்கு என்னத்துக்கு வெஞ்சணம்? இட்டேல்லி ராஜபோசனமாக்குமே’ ஆறிப்போய் தோல்தடித்த இடியானாலும் சிலாக்கியம். அதன்பின்னர் சாஸ்திர விவாதம். அம்மா அவ்வப்போது வாசித்த நாவல்களைப் பற்றி பேசுவார். ஆசாரிக்கு எல்லாமே புராணம்தான். ஆகவே புனிதமான முகபாவனையுடன் பக்திசிரத்தையாகக் கேட்பார்.

புதிய ‘தெராஸு’ கட்டிடங்கள் குறித்து ஆசாரிக்கு அருவருப்பு. ஊரிலேயே இருந்த இன்னொரு வீட்டுக்கு ஒருமுறை ஆசாரியை ஏதோ ஸ்தானம் பார்க்க கூப்பிட்டார்கள். ”ஏக்கணம் கெட்ட வீடு. அதைப்பாத்தா கண்ணுல பட்டி மூத்திரம் விட்டது மாதிரில்லா இருக்கு’ என்று போக மறுத்துவிட்டார். அது நவீன கான்கிரீட் வீடு

நான் கேட்டேன் ‘அதுதான் நல்லா இருக்கு அப்பச்சி. வீடு நல்லா பளபளான்னுட்டுல்ல இருக்கு” மூத்தாசாரி அதிருப்தியுடன் கையை அசைத்தார். ”ஓ ஒந்நு போணும் அப்பியே…அங்கிண வெட்டத்துக்கு ஒரு அருள் இல்லல்லா?”

வெளிச்சத்திற்கு அருள் உள்ள வீடு என ஆசாரி எதைச் சொன்னார் என வெகுகாலம் கழித்து பத்மநாபபுரம் அரண்மனையின் அத்தாணி மண்டபத்தைப் பார்த்தபோது உணர்ந்தேன். அதிக வெளிச்சம் உள்ளே வராமல் அழிகள் போட்டு கட்டுப்படுத்தியிருந்தார்கள். கண்ணுக்குக் குளிர்ச்சியான அரை இருளில் எங்கு தேவையோ அங்கு மட்டும் மிதமான வெளிச்சம் விழுந்தது. சன்னல்கதவுகளை திறந்து வைத்தால் அவை எழுதுமேஜையாகும். அந்தமேஜைமேல் ஜன்னல் ஒளி விழும். நேரடியாக வெளிச்சம் உள்ளே வராது. அது பலவகைகளில் சிதறடிக்கப்பட்டே விரியும்.

அத்தாணிமண்டபத்தில் ஒவ்வொன்றும் அபூர்வமான முப்பரிமாணத்துடன் தெரிவதுபோலிருக்கும். தேவையில்லாத ஒளி சிதறிக்கிடந்து கண்களில் உறுத்தாது. இருட்டுக்கும் ஓர் அழகுண்டு என அங்கேதான் அறியலாம். பின்னர் இந்தியா முழுக்க கோயில்களில் இருட்டும் ஒளியும் முயங்கும் அற்புதமான காட்சிகளைக் கண்டிருக்கிறேன். நமது கோயில்களின் சிறப்பே அவற்றின் கட்டுப்படுத்தப்பட்ட ஒளிதான்.

நேர்மாறானவை நமது இன்றைய அலுவலகக் கட்டிடங்கள். மதியவெயில் பரவிய மைதானம் போல அவை வெறிச்சிட்டுக் கிடக்கின்றன. அவை உருவாக்கும் சூனிய உணர்வை அந்த அலுவலகங்களின் மனநிலையுடன் பிணைத்துக்கொள்கிறோம். இன்று நம் கலையறிவில்லா அரசு நமது ஆலயங்களின் அழகை கீழ்த்தரமான பெயிண்ட் அடித்து சூறையாடிக்கொண்டிருக்கிறது. அவற்றின் ஒளியமைப்பே தாறுமாறாகிக் கொண்டிருக்கிறது. மணல்வீச்சு முறை மூலம் நமது மாபெரும் கலைப்பொக்கிஷங்கள் சிதைக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.

அதைத்தட்டிக்கேட்க இங்கே எந்த அமைப்பும் இல்லை. ஒரு சிறு எதிர்ப்புக்குரல்கூட எழவில்லை. எம்.எஃப் ஹுசேய்ன் சரஸ்வதியை அவமானப்படுத்திவிட்டார் என ஒரு சர்வதேச ரகளையைச் செய்பவர்களுக்கு பல்லாயிரம் தேவர்களும் தேவியரும் மூர்க்கமாகச் சிதைக்கப்படுவதைப்பற்றி எந்தக் கவலையும் இல்லை.

சொல்வனம் இதழில் சேதுபதி அருணாசலம் நிழல் நந்தி என்ற கட்டுரையில் [http://solvanam.com/?p=4070] நம் கோயில்களின் ஒளியமைப்பையும் அவற்றை புகைப்படம் எடுப்பதன் சவால்களையும் பற்றி நல்ல கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். கோயிலின் புகைப்படங்கள் வேறு ஒரு கலைதானே ஒழிய சிற்பங்களும் கட்டிட அமைப்புகளும் உருவாக்கும் அனுபவத்தை அவை அளிப்பதில்லை என்பதே என் அனுபவம்.

ஏனென்றால் செவ்வியல் [கிளாசிக்] அனுபவம் என்பது ஓர் ஒட்டுமொத்தம். துளிகள் தோறும் நுட்பங்கள் அழகுகள் இருக்கும். ஆனால் அவை ஒட்டுமொத்தமாக வந்து நம் முன் நிற்கும். அந்த இணைப்பே செவ்வியல்கலை. காவியங்களுக்கும் அதுதான் இயல்பு. புகைப்படம் கோயிலை துண்டுகளாகவே காட்டமுடியும். ஒட்டுமொத்தம் அளிக்கும் கிளாஸிக் அனுபவத்தை அளிக்கமுடிவதில்லை

http://solvanam.com/?p=4070

முந்தைய கட்டுரைபெரிய கட்டுரைகளைப்பற்றி-கடிதங்கள்
அடுத்த கட்டுரைசமநிலையின் வழி