தசாவதாரம் வைணவம்:ஒரு கடிதம்

                           அன்புள்ள ஜெயமோகனுக்கு எனது வணக்கம்.

உங்கள் ‘தசாவதாரம்“; படம்பற்றிய கட்டுரை நன்று.சைவ சமண முரண்பாடுகள் பற்றிய அலசலும் நன்று.ஆனால் படத்தில் வரும் கோவிந்தராஜர் சிலையை சோழமன்னன் கடலில் வீசுவது வரலதற்றில் நிகழாத ஒன்று போல எவ்வித ஆதாரமின்றி மறுக்கிறீர்கள்.பத்து வருடங்களிற்கு முன்பு நான்படித்த ‘சாதி மாத ஆராய்ச்சி” என்னும் நூலில் புத்தூர் அக்ரகாரம் ஷஸ்ரீவைஷ்ணவ சுதர்சனம்| கிருஷ்ணசுவாமி அய்யங்கார் இவ்வரலாற்றை தெளிவாக விபரித்துள்ளார்.அதோடு தொடர்புபட்ட ஒரு வழக்கு நீதி மன்றத்தில் அப்புத்தகம் வந்தகாலம்வரை இருந்தது.

அத்தோடல்லாமல் இன்று வரை பெருமாளுக்கு சிதம்பரத்தில் ப்ரமேற்சவமோ கொடிஸ்த்தம்ப பிரதிஷ்டையோ கிடையாது.அதற்கும் ஒரு தடையுத்தரவு வழக்கு நிலுவையில் உண்டு.இதையும் புத்தூர் சுவாமிகளிடம் கேட்டறியலாம்.

மற்றப்படி படத்தில் சிறந்த காட்சியே அந்த வரலாறுதான்.படம் முளுவதும் அக்கதையாகவே இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.தமிழில் வரலற்றுப் படங்கள் வந்து நீண்டகாலமாகிறது.

 ‘டா வின்சி கோட்” வந்தபோது எதிர்ப்புக்கள் எல்லாம் இந்தியா சிறிலங்காவில்தான்.ரோமில் கூட எதிர்ப்பில்லை.புத்தகம் பத்து லட்சம் பிரதிகள் விற்றும் இன்றுவரை சந்iயுன்டு.கமல் போன்ற சிறந்த நடிகர்கள் உள்ள காலத்தில் ‘ட்ரோய்” ‘க்கிளடியேற்றர்” படங்களை ஒத்த தமிழரின் வரலாற்று நிகழ்வுகள் படமாகுமா?
ஜெசன்

Jason Iyer <[email protected]

அன்பு நண்பருக்கு

உங்கள் கடிதம்கண்டேன். பன்னிரண்டாம் நூற்றாண்டில் விஷ்ணு சிலையை கடலில்போட்டதற்கான சான்றாதாரம் எங்கே உள்ளது என்று எனக்கு தெரியவில்லை. ஸ்ரீரங்கம் கோயில் பதிவுகள் எவையும் அத்தனை தொன்மையானவையல்ல. பிற பதிவுகளும் இல்லை என்றே நான் நினைக்கிறேன்.மிதை பல வரலாற்றாசிரியர்களும் எழுதியிருக்கிறார்கள். சொல்லப்போனால் அக்காலகட்டம் பற்றி நமக்கு கிடைக்கும் ஆதாரங்களே மிகமிக குறைவானவை. நிபந்தங்கள் பற்றிய கல்வெட்டுகளில் இருந்து ஊகித்தெடுக்கும் வரலாறே சோழர்கள் வரலாறாக ஸ்ரீனிவாச சாஸ்திரி முதல் கெ.கெ.பிள்ளை வரை எழுதப்பட்டுள்ளது. சோழர்கால அமைதியின்மைகள் கலகங்கள் பற்றி விரிவாக எழுதியிருக்கும் கெ.கெ.பிள்ளை இதனைப்பற்றி எதுவும் சொல்லவில்லை

ஆனால் சைவ வைணவப் பூசல்கள் , வழிபாட்டு வழக்குகள் சிறு எல்லைக்குள் எப்போதும் இருந்துகொண்டுதான் உள்ளன. சிதம்பரம் வழக்கு நான் அறிந்ததே. திருக்கணங்குடி வழக்கு இப்போதும் நடக்கிறது என்றார்கள்.

சைவ வைணவப்பூசல் நாயக்கர் காலகட்டத்துக்குப் பின் அதிகமும் பூசகர்களுக்கு இடையேயான கலகமாகவே நிற்கிறது என்றே நான் நினைக்கிறேன்

*

ஸ்ரீவைஷ்ணவ சுதர்சனம் இதழ் உண்மையில் நாயக்கர் காலத்துக்கு முந்தைய மனநிலையில், எட்டு நூற்றாண்டு பழமையில் உறைந்து நின்றுவிட்ட ஒன்று. அதில் உள்ள மதக்காழ்ப்பும் குறுகலும் இன்றைய வாசகனுக்கு கசப்பையே ஊட்டு. பலகாலமாக அதன் வாசகனாக இருந்திருக்கிறேன். அதன் நோக்குகள் ஆராய்ச்சிபூர்வமானவையாகவோ சமநிலை கொண்டவையாகவோ இருப்பதில்லை. ஒருபக்க சார்பானவை. அபப்டி இருபப்தையே நியாயமானதென வாதாடும் இதழ் அது

*

நான் அறிந்தவரை கத்தோலிக்க திருச்சபை டா வின்ஸி கோட் ஒரு இறைநிந்தை நூல் என்று சொல்லி தடைசெய்திருக்கிறது. அந்நாவலைப்பற்றிய ஒரு  ஆவணப்படத்துக்கு கத்தோலிக்க திருச்சபைன் கீழ் வரும் ஆலயங்களை அளிக்கக் கூடாது என்று ஆணையும் இட்டிருக்கிறது.
ஜெயமோகன்

தசாவதாரம்:இருகடிதங்கள்

தசாவதாரம்

முந்தைய கட்டுரைமுழுமையறிவும் கென் வில்பரும்
அடுத்த கட்டுரைசுவரில் முட்டி நிற்கும் மலையாள சினிமா.