அன்புள்ள ஜெ,
நான் எழுதும் இந்த விஷயங்களை நீங்கள் எப்படிப்புரிந்துகொள்வீர்கள் என்று தெரியவில்லை.நான் சிறுவயதிலேயே ஒரு நோயாளி என்பதை அறிவீர்கள். என்னுடைய ஈரல் பழுதடைந்தது. அதைச் சரிசெய்ய முடியாது என்று டாக்டர்கள் சொல்லிவிட்டிருகிறார்கள். ஆனால் என் குடும்பத்தாரின் நம்பிக்கை காரணமாக நான் சில அறுவைசிகிழ்ச்சைகளைச் செய்துகொண்டேன். அவற்றால் எனக்கு கடுமையான வலியும் தனிமையும்தான் ஏற்பட்டது. இப்போது சாதாரண இயற்கை உணவு சிகிழ்ச்சை செய்கிறேன். பிரச்சினைகள் இருந்தாலும் வலியும் கஷ்டமும் கிடையாது.
நோய் கொண்டிருப்பது என்பது ஒரு சாதாரணமான மற்ற மக்களிடமிருந்து நம்மைபிரித்துவிடுகிறது. நமக்கு வெளியுலகமே இல்லை. நான் அதிகபட்சம் வீட்டுக்கு முன்னால் உள்ள திண்ணைவரைத்தான் சென்று அமர்ந்திருப்பேன். தெருவில்செல்லும் மக்களைப் பார்த்துக்கொண்டிருப்பேன். எனக்கு துக்கமும் கிடையாது, மகிழ்ச்சியும் கிடையாது. மனம் உறைந்துவிட்டது போல இருக்கும். சிலசமயங்களில் எந்தச் சிந்தனையும் இருக்காது. சிலசமயங்களில் தீவிரமாகச் சிந்தனைசெய்தது போல் இருக்கும். என்ன சிந்தித்தேன் என எனக்கே தெரியாமலும் இருக்கும்.
எனக்கு என்ன கேள்வி என்றால் மனிதர்கள் உயிர்வாழ ஒரு நோக்கம் இருக்கிறது. என்னைப்போன்ற நோயாளிகள் உயிர்வாழ்வதற்கு என்ன நோக்கம் இருக்கிறது என்பதுதான். நான் இருந்தாலும் செத்துப்போனாலும் ஒன்றுதான் என்று நினைத்துக்கொள்வேன். சிலசமயம் எனக்கு ஆழமான மன அழுத்தம் ஏற்பட்டு கைகால்கள் எல்லாம் இறுகிவிடும். பற்களைக் கெட்டியாகக் கடித்துக்கொள்வேன். இரண்டு மூன்று மணிநேரம்கூட அந்த இறுக்கம் நீடிக்கும். அதன்பின்னர் சிலசமயம் என் கன்ணில் இருந்து கன்ணீர் கொட்டும். அரைமணிநேரம் அழுதுவிட்டால் அப்படியே தூங்கிவிடுவேன். சிலசமயம் பாடல்களைக் கேட்பேன்.
நான் ஓர் எழுத்தாளன் என்பதை நீங்கள் அறிவீர்கள். சிலகதைகள் பாஷாபோஷினியிலும் கலாகௌமுதியிலும் பிரசுரமாகியிருக்கின்றன. ஏராளமாக வாசித்துக்கொண்டிருந்தேன். ‘நெடும்பாதையோரம்’ வாசித்து கடிதங்கள் எழுதிக்கொண்டிருந்த நாட்களில் எனக்கு வாசிப்பதில் உற்சாகம் இருந்தது. இப்போது வாசிக்கவே தோன்றுவதில்லை. செய்தித்தாள்களைக்கூட வாசிப்பதில்லை. உங்களுடைய ‘எந்நிரிக்கிலும்..’ என்ற புகழ்பெற்ற கட்டுரையை நான்குமுறை வாசிக்க ஆரம்பித்து முதல் பத்திகூடத் தாண்டாமல் விட்டுவிட்டேன். எழுதுவதைப்பற்றி நினைக்கவே முடியவில்லை. நாலைந்து கதைகளை எழுத முயற்சி செய்தேன். ஒரிரு பத்தி எழுதுவதற்குள் சோர்வும் சலிப்பும் வந்துவிடுகிறது.
என் அம்மா பக்தியில் மூழ்கி இருக்கிறாள். எனக்கு பக்தியே வரவில்லை. அம்மா பைபிளை எப்போதும் என் தலைமாட்டிலேயே வைக்கிறாள். பைபிளை எடுத்து படிக்கும்படிச் சொல்லிக்கொண்டே இருக்கிறாள். எனக்கு சிலசமயம் பைபிளைப் பார்த்தால் எரிச்சல் வருகிறது. சிலசமயம் அது அம்மாவை ஞாபகப்படுத்துவதனால் இரவுகளில் துணையாக இருக்கிறது. என்னைச் சூழ்ந்து அமர்ந்து ஜெபம் செய்ய வரக்கூடியவர்கள்தான் எனக்கு மிகப்பெரிய துன்பமாக இருக்கிறார்கள். அவர்களை தவிர்த்துவிடும்படி அம்மாவிடம் கெஞ்சினேன்.இப்போது அவர்கள் வருவதில்லை. அம்மா மட்டும் ஜெபக்கூட்டங்களுக்குச் சென்று வருகிறாள்.
மொத்தத்தில் நான் முற்றத்தில் நிற்கும் தென்னைமரம் போல சும்மா இருக்கிறேன். சிலசமயம் இரவுகளில் கண்விழித்து எழும்போது தற்கொலைசெய்துகொண்டால் என்ன என்று நினைப்பேன். வெளியே எங்காவது போய் சடலம் கிடைக்காமல் தற்கொலைசெய்துகொள்ள வேண்டும் என்று கற்பனைசெய்வேன். மனம் இளகியிருக்கும்போது தற்கொலையைப் பற்றி யோசிப்பது அபாரமான மனக்கிளர்ச்சியை அளிக்கிறது. அப்படி யோசித்து யோசித்து ஒரு அரைமணி நேரம் அழுதுவிட்டால் ஆழமான நிம்மதி வந்துவிடுகிறது. அதுதான் இப்போது எனக்கு ஒரே இன்பமாக இருக்கிறது. அத்துடன் சுய இன்பம்செய்வதும் எனக்கு ஆறுதலாக இருக்கிறது.
இந்த நீளமான கடிதத்தை நான் பலநாட்களாக கொஞ்சம் கொஞ்சமாக எழுதிக்கொண்டிருக்கிறேன். இதை எழுதும்போதுகூட இந்த கடிதத்தை நீங்கள் வாசிக்கும்போது நான் இல்லாமலாகியிருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டேன்.
ஜே.
[தமிழாக்கம்]
அன்புள்ள ஜே,
உங்கள் கடிதம். இக்கடிதத்தை நான் பிரசுரிக்கிறேன். ஏனென்றால் இதே விஷயத்தை நான் ஒரு நண்பரிடம் நேரிலும் ஒருவரிடம் ·போனிலும் சொல்லும் சந்தர்ப்பம் இந்த மாதமே வாய்த்தது.
நோயில் இருப்பதை நான் கற்பனைமூலமே புரிந்துகொள்ள முடியும். என் சிறுவயதில் நோயில் இருந்திருக்கிறேன். பத்து வயதுக்குப் பின்னர் நோய் என்னை வாட்டிய நினைவு இல்லை. அந்த மனநிலையைக் கூர்ந்து அவதானிக்க வாய்ப்பு அமையவில்லை என்றே சொல்லவேண்டும். ஆகவே நான் ஒன்றும் தத்துவப்படுத்த முயலவில்லை. உபதேசம்செய்யவும் முன்வரவில்லை. நான் என்ன நினைக்கிறேன் என்பது உங்களுக்கு எவ்வகையிலோ உதவியாக இருக்கிறது என நினைக்கிறேன்,ஆகவேதான் இத்தனை சிரமப்பட்டு நீங்கள் எழுதுகிறீர்கள். அதனால் சில கருத்துக்களைச் சொல்கிறேன்.
முற்றத்து தென்னைபோல் நீங்கள் இருந்திருந்தால் எத்தனை நல்லதாக இருக்கும். அது சும்மா நிற்கவில்லை. மண்ணுக்குக் கீழே அதன் வேர்கள் ஒவ்வொரு கணமும் பரவி விரிந்து பூமியை உறிஞ்சிக் கொண்டிருக்கின்றன. ஓலைகள் காற்றை உண்டுகொண்டிருக்கின்றன. உயிர்வாழ்வதற்கான துடிப்பே உயிரின் சாராம்சமான வலிமை. உயிருக்கு இன்பம் என்று சொல்லப்படும் எல்லா விஷயங்களும் உயிர்வாழ்தல் மூலம் கிடைப்பவையே. நல்ல உணவு, நல்ல காற்று, நல்ல நிறங்கள் , சிறந்த காமம்…
நீங்கள் உங்கள் உடலைப்பற்றியே எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள். உடலை மனதுக்குள் கொண்டு சென்று வளர்த்துக்கொண்டு ஒரு குறியீடாக ஆக்கிக் கொண்டிருக்கிறீர்கள். இது மிகவும் செயற்கையான நிலை. மிருகங்கள் இதேபோல நோயுற்றால் அவை என்ன செய்யும்? அவற்றின் நோய் உடலில் மட்டுமே இருக்கும். மனதுக்கு அதனுடன் தொடர்பிருக்காது. கடைசிக்கணம் வரை வாழ்வதற்காக அவை முயன்றபடியே இருக்கும். மனிதர்களின் உடல்நோய்தான் மனதின் ஆடியில் பல்லாயிரம் மடங்காக பிரதிபலிக்கிறது.
நீங்கள் தற்கொலை செய்ய விரும்புகிறீர்கள் அல்லவா? தற்கொலை செய்துகொள்ளுங்கள் என நான் எழுதினால் தற்கொலை செய்துகொள்வீர்களா என்ன? அது அத்தனை எளிதல்ல. நான் என்னுடைய அக்கா கணவரின் அப்பாவை சிலநாள் நோய்ப்பணிவிடை செய்திருக்கிறேன். அவருக்கு வயிற்றிலே புற்றுநோய். நான்கு அறுவைசிகிழ்ச்சைகளுக்குப் பின்னர் வயிற்றில் இருபெரும் ஓட்டைகள் விழுந்துவிட்டன. டாக்டர்கள் வீட்டுக்குக் கொண்டுசெல்லச் சொல்லிவிட்டார்கள்
தினமும் மருத்துவத்தாதி வந்து அவரது உடலில் சீழ்பிடித்த பகுதியில் பஞ்சு நுழைத்து கட்டி அப்படியே படுக்கையில் மடித்து படுக்கவைத்துச் செல்வாள். அவர் வலிதாளாமல் கதறும் ஒலி சாலையெல்லாம் கேட்கும். வலுவான வலிநிவாரணிகள் தூக்கமருந்துகள் செலுத்தப்படும். அவை அரை மணிநேரம்கூட தாங்காது. தூய வலி மட்டுமே ஒலிக்கும் அலறல். தொண்டைகட்டிக்கொண்டால் மட்டுமே அது கொஞ்சம் நிலைக்கும். கடுமையான சீழ்நாற்றம் வெகுதூரம் வீசும்.
‘என்னை கொன்று விடுங்கள்…எனக்கு கொஞ்சம் விஷம் கொடுங்கள்…’ என்ற மன்றாட்டுதான் அவர் வாயில் சொற்களாக ஒலிக்கும். அதுவே நியாயம் என்றும் நான் எண்ணிக்கொள்வேன். நானே அவருக்கு விஷம் வாங்கி அளிப்பதைப்பற்றி நினைத்துக்கொள்வேன். அது மிக எளிது. பெட்டியில் இருக்கும் எல்லா மாத்திரைகளையும் ஒட்டுமொத்தமாகக் கொடுத்துவிட்டால் போதும் இருமுறை நான் எழுந்து பெட்டியைதிறந்துவிட்டிருக்கிறேன். என்னால் கடைசிக்கணத்தின் அழுத்தத்தை தாண்ட முடியவில்லை.
வலி என்ற துர்தேவதை முன் நான் உபாசகனாக அமர்ந்திருந்தேன். இரவுகளில் அவர் முன் அமர்ந்து தூங்கிவழியும்போது வலியை என் கனவுகளில் கேட்பேன். மலைகள் மரங்கள் சுவர்கள் எல்லாமே வலியால் கூப்பாடு போடும். ஒருநாள் இரவில் அவர் என்னை எழுப்பினார். முகம் மலர்ந்திருந்தது ”குமாரகோயில் முருகனுக்கு ஒரு வெள்ளி ஆள்ரூபம் செய்து சார்த்தினால் போதும், எல்லாம் சரியாகிவிடும். நோய் குணமாகி பழையதுபோல நடமாடமுடியும். எனக்கு ஒரு கனவு வந்தது…”என்று சிரித்துக்கொண்டே சொன்னார்.
நான் வெலவெலத்துப்போனேன். மனித மனத்தின் ஆழத்தில் உயிர்வாழ்வதற்கான ஆசை ஒருபோதும் அற்றுப்போவதில்லை. உயிருக்கு உடலுடன் உள்ள உறவு என்பது மனிதனை மீறிய ஒரு மகத்துவத்தின் தடையம். சிலசமயம் மனிதர்கள் தற்கொலை செய்துகொள்வது உயிரை வெறுத்து அல்ல. வீம்பினால். வாழ்வதைவிட சாவதன் மூலம் மேலும் வலுவாக ‘இருக்க’ முடியும் என்று எண்ணும்போதே மனிதர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். வாழ்வாசையே தற்கொலையின் ஆதாரமான உணர்ச்சி. முற்றிலும் கைவிடப்பட்டவர்கள் தற்கொலை செய்துகொள்வதில்லை.
அப்படியானால் உங்கள் மனம் ஏன் அதையே எண்ணிக்கொண்டிருக்கிறது? துன்பத்திலும், கழிவிரக்கத்திலும் இன்பம் காணும் ஒரு மனநிலையை நீங்கள் அடைந்திருப்பதனால்தான். அது மிகச்செயற்கையான ஒரு மனநிலை. அனேகமாக மனிதன் மட்டுமே உணரும் ஒருநிலை. அது பலநூற்றாண்டுப் பண்பாடு மூலம் அவன் வளர்த்துக்கொண்ட ஒன்றாக இருக்கலாம். உங்கள் உடலின் நோய் போல மனதின் நோய் அது.
உடல் மனத்தின் செயல்பாடுகளை தீர்மானிக்கிறது. ஒரு சிறிய அஜீரணம் போதும் நாம் உலகைப்பற்றி எதிர்மறையான கோட்பாடுகளை உருவாக்கிக் கொள்ள. அதேபோல மனம் உடலை தீர்மானிக்கிறது. விரக்தியும் சோர்வும் நம் உடலை மேலும் சோர்வடையச் செய்கின்றன. இந்த விஷ வட்டமே நோயின் மிகப்பெரிய சிக்கல் என்று தன் கடைசிக்காலத்து உடற்செயலிழப்பு குறித்து ஆராய்ந்து எழுதிய நித்யா விளக்கியிருக்கிறார்.
மனிதனால் தன் உடலில் இருந்து உள்ளத்தை கற்பனைமூலம் பிரித்துக்கொள்ள முடியும் என்ற அபாரமான நல்வாய்ப்பைப் பற்றி நித்யா சொல்கிறார். நான் என தன் உடலை விலக்கி யோசிக்க அவனால் முடியும் என்பதே அவனுக்கு எல்லையில்லாத வாய்ப்புகளை வழங்குகிறது. அவனுடைய உடல் வாழாத வாழ்க்கைகளை அவன் மனம் வாழ முடியும். அவன் மனதால் மண்ணில் உலவமுடியும், வானில் பறக்க முடியும்.
பகற்கனவுகள் போல மனிதனுக்கு வழங்கப்பட்ட ஆசி ஏதும் இல்லை. கடந்த முப்பதாயிரம் வருடங்களில் மனிதன் உருவாக்கிக் கொண்ட ஆகப்பெரிய விஷயமே பகற்கனவு என்றுதான் சொல்ல வேண்டும். மண்ணில் வாழும் மனிதர்களின் அகங்களில் எல்லாம் அவர்கள் வாழும் வாழ்க்கையைவிட பலநூறு மடங்கு பெரிய பகற்கனவுகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. மண்ணில் வாழப்படும் வாழ்க்கையை விட பலநூறுமடங்கு பெரிய அகவாழ்க்கை நடந்துகொண்டிருக்கிறது.
மனிதனின் கலைகள், இலக்கியம், தத்துவம் எல்லாமே இந்த பகற்கனவை பொதுவாக ஆக்கிக்கொள்வதற்கான, பகிர்ந்துகொள்வதற்கான முயற்சிகள் மட்டும்தானே? முற்றத்து தென்னைமரம் சும்மா தான் நிற்கிறது. அதன் வேர்களின் உயிர்த்துடிப்பு மண்ணுக்குள் நிகழ்கிறது. உடல் சோந்தால் கூட வாழ்ந்துவிடலாம், பகற்கனவுகள் சோர்ந்தால் வாழமுடியாது. இங்கே வாழும் மனிதர்கள் அனைவருமே அவர்களின் இன்பங்களை அவர்களின் பகற்கனவுகளில்தான் அடைகிறார்கள். மனிதர்களின் அழகுணர்வு,சாகசஉணர்வு, உணர்வுநெகிழ்ச்சி ஆகிய மூன்றுமே மிகப்பிரம்மாண்டமானவை. அவர்களைச் சுற்றியுள்ள வாழ்க்கை அதற்குப் போதாது. பகற்கனவுகள் மூலமே அவற்றை நிறைவுசெய்ய முடியும்.
ஆகவேதான் வாசியுங்கள், இசை கேளுங்கள் என்று சொல்கிறேன். வாசிக்க முடியவில்லை என்றால் எதை வாசிக்க முடியுமோ அதை வாசியுங்கள். விஷ்ணுபுரம் நாவலுக்குப் பின் ஒரு வெறுமையை நான் உணர்ந்தபோது ஆங்கில சாகச நாவல்கள் என்னை ஆட்கொண்டு துடிப்பாக வைத்திருக்க உதவின. ஒருவேளை உங்களுக்கு அம்புலி மாமா கனவுகளை விரிக்கக் கூடியதாக இருக்கலாம். ஒருவேளை பயங்கரப்பேய்க்கதைகள் தேவைப்படலாம்…
இப்போது உங்களுக்கு தேவை மதம் அல்ல. எந்த மதமாக இருந்தாலும். நம்முடைய மதங்கள் இவ்வுலகை துறந்து அவ்வுலகில் நிறைவு காண்பதைப்பற்றி பேசுகின்றன. இப்போது உங்களுக்கு தேவை இவ்வுலகின் மயக்கும் வசீகரம், வாழ்க்கையை வாழச்செய்யும் ஈர்ப்பு.ஏவாளுக்குக் கிடைத்த அந்த ஞானப்பழம். ஆம், ஏசுவை விடுங்கள், இப்போது கொஞ்சம் சாத்தானிடம் வாருங்கள்.
சமீபத்தில் புகழ்பெற்ற ஓரு தமிழ் எழுத்தாளர் இதற்கிணையான நோயின் சோர்வைப்பற்றிச் சொன்னார். நான் சொன்னேன்.”நீ ஒரு நல்ல தீவிரமான பாலுறவு நாவலை எழுதலாம்” என்று. அவருக்கு ஆச்சரியம். ”என் கதைகளில் இப்போதே கொஞ்சம் இருக்கிறதே” என்றார். ”அதுவல்ல நான் சொல்வது. நீ எழுதியவற்றில் உள்ளது அக ஆராய்ச்சி, மானுட அவஸ்தைகளின் பதிவு, வாழ்க்கையின் நுட்பங்கள்.நான் சொல்வது வாழ்க்கையின் கொண்டாட்டமாகவே ஆகும் உக்கிரமான பாலுறவு எழுத்தை. உன் கட்டற்ற கற்பனை செல்லும் தூரம் வரைச் செல்லும் ஆக்கம். அதை நீ பதிப்பிக்கக்கூட வேண்டியதில்லை. அதை எழுதினாலே போதும் உன் நோய் தீர்ந்து போகும்”
வேறு ஒன்றும் இல்லை. வாழும் இச்சை கொள்ளும்படி உடலுக்கு மனதால் ஆணையிடுதல்தான் அது. அதன் மூலம் ஒவ்வொரு நாளும் ஆவேசமான புத்துணர்ச்சியுடன் பிறந்து எழமுடியும். இந்த மண்ணில் வாழ்க்கை என ஓடிக்கொண்டிருக்கும் அடிப்படையான உயிர்த்துடிப்புகளுடன் இணைந்துகொள்ள முடியும். காமம் என்பது உடலுக்குள் உறையும் கட்டற்ற மாபெரும் ஆற்றல். அந்தப்பூதத்தை மூடி திறந்து வெளியே விடுவதையே சொன்னேன்.
காமம் நெருப்புபோல. அது அடுப்புக்குள், தீபத்தில் தான் இருந்தாகவேண்டும். ஆனால் நீங்கள் குளிர்ந்து போயிருக்கிறீர்கள். வீட்டுக்கூரையை எரித்தாவது வெம்மை பெறுவது நல்லது. அது உருவாக்கும் அபாரமான உயிராற்றல் உங்களின் சில்லிட்ட அகத்தில் எத்தனை புத்துணர்ச்சியை உருவாக்குகிறது என்று பார்ப்பீர்கள்
அதிலிருந்து மேலே செல்ல முடிந்தால் நீங்கள் உயர மேலும் இடமிருக்கிறது. சாலமோனும் , புனித ஜானும் சென்ற தூரங்கள். அருணகிரிநாதரும் ஜெயதேவரும் சென்ற தூரங்கள்.
இந்து ஞானமரபின்படி எல்லா ஆற்றலும் ஒன்றே. காமமும் வன்முறையும் ஞானமும் மோனமும் எல்லாம் ஒரே ஆற்றலின் வெளிப்பாடுகளே. ஒன்றில் இருந்து இன்னொன்றுக்குச் செல்ல முடியும். ஒன்றை இன்னொன்றாக ஆக்கிக்கொள்ளவும் முடியும்.
இந்து யோக முறையில் காமம் மூலாதார சக்தி– முதல் ஆற்றல்- என்று சொல்லப்படுகிறது. அங்கிருந்துதான் பிற அனைத்து ஆற்றல்களும் தொடங்கப்படவேண்டும்.அதுவே பிற அனைத்தையும் பற்றவைக்கும் முதல் பொறியாக இருக்க முடியும்.
கொஞ்சம் சுற்றிலும் பாருங்கள். எத்தனை பிரம்மாண்டமான ஆற்றல் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. எத்தனைகோடி மரங்கள், எத்தனை கோடி விலங்குகள் பறவைகள், எத்தனை கோடானுகோடி பூச்சிகள், புழுக்கள் …எவ்வளவு முடிவிலா ஆற்றல்! சிறகுகளாக அசைகிற, கால்களாக தாவுகிற, உடல்களாக நெளிகிற, இலைகளாக ஒளிர்கிற உயிராற்றல்…
அந்த ஆற்றல் நம்முள்ளும் ஊறட்டும். அந்த ஆற்றலின் ஒரு முகமே காமம். அது எளியதோர் தொடக்கமாக அமையும். அருவருப்புகள் இல்லாமல் ஒழுக்கத்தடைகள் இல்லாமல் அந்தரங்கமாக அந்த பேராற்றலின் வெம்மையை உணருங்கள். அதற்கு உங்கள் சொற்களும் கற்பனையும் உதவட்டும்.
தமிழில் ஆற்றல் என்ற சொல் உண்டு. சக்தி என்ற சொல்லுக்கு ஆற்றல் என்ற சொல் உன்னதமான விளக்கம். ஆற்றல் என்பது ஒரு தொழிற்பெயர். ஆற்றும்தொழிலே அது. செயல் வடிவே சக்தி. உங்கள் சொற்களில் சக்தி எழுக.
அன்புடன்
ஜெ
மறுபிரசுரம்/ முதற்பிரசுரம் 2009