அன்புள்ள ஜெயமோகன்,
தெளிவான நேரடியான கேள்வி, உங்கள் அரசியல் என்ன? நீங்கள் அரசியலில் இடதுசாரியா வலதுசாரியா? வலதுசாரி என்கிறார்கள் சிலர். குழப்பவாதி என்கிறார்கள் சிலர். உங்களுக்கு சாதியவாதி என்றும் மதவெறியர் என்றும் முத்திரை உண்டு தெரியுமல்லவா? உங்களுக்கு இந்துத்துவ அமைப்புகளுடன் தொடர்பு உண்டா? நீங்கள் அரசியலைப்பற்றி அதிகமாக எழுதியதில்லை. ஆகவேதான் இந்தக் கேள்வி. இதற்கு தத்துவச்சிக்கல்கள் ஏதும் இல்லாமல் தெளிவான நேரடியான பதிலைச் சொல்ல முடியுமா?
செல்வராஜ் செல்லமுத்து
அன்புள்ள செல்வராஜ்,
என்ன பிரச்சினை என்றால் என்னால் நீங்கள் எதிர்பார்க்கும் ஒற்றை வரியாலான தெளிவான பதிலைச் சொல்ல முடியாது என்பதுதான்.சிக்கல் வருவதே அங்கேதான். ஒற்றைவரியாக மட்டுமே ஒன்றைப்புரிந்துகொள்ள முடியும் என்பவர்களே நம்மில் அதிகம். ஆகவே என்னதான் தத்துவ விளக்கம் சொன்னாலும் அவற்றையெல்லாம் ஒற்றைவரியாக ஆக்கிக்கொண்டே இருப்பார்கள் அவர்கள்
அரசியல் பற்றி மட்டும் அல்ல, நீங்கள் மதம் குறித்து கேட்டிருந்தாலும் என் பதில் கிட்டத்தட்ட இப்படித்தான். உங்கள் கேள்விக்கு நான் என்னை இடதுசாரி என்று சொன்னேன் என்று வைத்துக்கொள்ளுங்கள், உடனே நீங்கள் அதை எதிர்த்து வாதிடுவீர்கள். ‘நீதானே இப்படிச் சொன்னாய்’ என்பீர்கள்.
சரி என்று நான் என்னை வலதுசாரி என்று சொன்னால் அதையும் நீங்கள் என் கூற்றுக்களை வைத்து மறுக்க முடியும். நீங்கள்போடும் எந்த முத்திரையையும் நான் ஏற்க முடியாது என்பதே உண்மை. வேண்டுமென்றால் குழப்பவாதி என்று சொல்லலாம். ஆனால் நான் எவரையும் குழப்புவதில்லை. என்னளவில் தெளிவாகவே இருக்கிறேன். அப்படியென்றால் நான் யார்?
இதே கேள்விகளை நீங்கள் ஜெயகாந்தன் மீதும் போட்டுப்பார்க்கலாம். அவர் இடதுசாரியா வலதுசாரியா? அப்படியே பின்னால் நகர்ந்து புதுமைப்பித்தனுக்குச் செல்லலாம். அவர் யார்? அப்படியே பாரதி. இவர்கள் அனைவருமே இடதுசாரிகளாலும் வலதுசாரிகளாலும் சொந்தம் கொண்டாடப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே மதவாதி என்றும் சாதியவாதி என்றும் எவரேனும் சிலரால் முத்திரை குத்தப்பட்டிருக்கிறார்கள்.
நான் மிக அந்தரங்கமான ஆணவத்துடன் உணரும் ஒன்றுண்டு, நான் இவர்களில் ஒருவன். இவர்களின் மரபை இவர்கள் அளவுக்கே வீரியத்துடன் இவர்களை விடவும் படைப்பூக்கத்துடன் முன்னெடுத்துச் செல்லும் படைப்பாளி. இவர்கள் யாரோ அதுவே நான்.
நண்பரே, இந்தியாவில் இப்போது நூறுகோடிப்பேர் இருக்கக்கூடும் என்று ஒரு கணக்கு. இதில் அதிகபட்சம் ஐந்துகோடிப்பேருக்குத்தான் ஏதேனும் ஒரு திட்டவட்டமான அரசியல் தரப்பு இருக்கும். மிச்சபேருக்கு இந்த நாட்டு ஜனநாயகம் மீது நம்பிக்கை இருக்கும். வாக்களிப்பார்கள். ஆனால் அவர்களுக்கென்று தீர்மானமான அரசியல் நிலைபாடோ தெளிவான கொள்கைகளோ இருக்காது. அவர்களே இந்திய அரசியலைத் தீர்மானிக்கிறார்கள். அவர்களில் ஒருவன் மட்டுமே நான்.
ஓர் எழுத்தாளன் அந்தச் சமூகத்தின் வெளியே எழமுடியாத குரல்களின் ஒலியாக ஒலிக்கும்போதே அவனது வரலாற்றுப் பணியைச் செய்தவனாகிறான். அச்சமூகத்தின் ஒட்டுமொத்தமான குரலே அவன். ஏதேனும் ஒரு பிரிவின் ஒரு தரப்பின் குரல் மட்டுமல்ல. அவன் அனிச்சையாகவே தன்னைச்சூழ்ந்திருக்கும் உண்மையின் பிரதிநிதியாக செயல்படுகிறான்.
ஆகவே நான் சிறு வயதிலேயே, என்னை ஓர் எழுத்தாளன், எழுத்தாளன் மட்டுமே, என உணர்ந்த நாள் முதலே பிரக்ஞைபூர்வமாக ஓர் அரசியல் நிலைபாடு எடுப்பதைத் தவிர்த்து வருகிறேன். ஒரு சாமானிய இந்திய வாசகர் வாசிப்பதற்கு மேல் விரிவான அரசியல் தகவல்களையும் அரசியல் அலசல்களையும் வாசிப்பதும் இல்லை. அரசியல் விஷயங்களில் பெரும்பாலும் கருத்துச் சொல்வதில்லை.
அரசியல் உச்சம் கொள்ளும் தேர்தல்காலங்களில் நான் கூடுமானவரை மௌனமாகவே இருப்பேன். ஒரு சந்தர்ப்பத்திலும் அரசியல் தரப்பு எடுப்பதில்லை. தன்னிச்சையாக சார்புநிலைகள் உருவாகும் என்பதை மறுக்க முடியாது, ஆனால் சார்புநிலைகள் உருவாகக் கூடாது என நானே என்னைக் கட்டுப்படுத்திக்கொள்வேன்.
நான் அரசியல் விவாதங்களைக் கவனிப்பதுடன் சரி. ஆனால் என்னுடைய அரசியல் கவனிப்பு போகிறபோக்கில் நிகழக்கூடிய ஒன்றல்ல. மிகச்சிறிய கிராமத்துத் டீக்கடைகளுக்குச் சென்று மௌனமாக அமர்ந்து கவனிப்பவன் நான். பெரும்பாலும் என்னை எவரும் பொருட்படுத்துவதில்லை. தமிழகத்தின் மூலைமுடுக்குகளுக்கெல்லாம் பயணம்செய்து கவனித்துக்கொண்டிருக்கிறேன். தமிழகத்தில் பிரச்சினைகள் உருவான பல ஊர்களுக்கு [ உதாரணம் கொடியங்குளம் ] நானே நேரில் சென்றிருக்கிறேன். என்னுடைய நேரடியான மனப்பதிவுகள் எந்த அலசல்களை விடவும் முக்கியமானவை என்பதே என் எண்ணம்.
அத்துடன் மதிக்கப்படும் ஓர் எழுத்தாளனாக என்னுடைய தனிப்பட்ட தொடர்புகள் எந்த மூத்த இதழாளருக்கும் நிகரானவை. ஒரு விஷயத்தின் மத்திய உளவுத்துறை கருத்து என்ன என்பதை நான் ஒரே மணிநேரத்தில் அறிந்துகொள்ள முடியும். அரசியலில், இதழியலில் உச்ச தளங்களில் என் மீது ஆழமான மதிப்புள்ளவர்கள் உண்டு. அவர்களிடம் நானே மனம் விட்டுப் பேசமுடியும். உதாரணமாக, ஒருமுறை ஒரு முக்கியமான விஷயத்தை டெல்லியில் இருந்த மூப்பனார் அவர்களிடமே தொலைபேசியில் நேரிடையாகக் கேட்டிருக்கிறேன். [பூராத்தையும் சொன்னா பேசாம சன்னியாசம் வாங்கிக்குவீங்க தம்பி..] ஒருபோதும் எதையும் தனிப்பட்டமுறையில் பயன்படுத்திக்கொள்ள மாட்டேன் என்று அவர்களுக்குத் தெரியும்.
ஆகவே என்னுடைய அரசியல் புரிதல் என்பது ஓர் எழுத்தாளனுக்குரியது. அது எனக்கு படைப்புகளில் சமூக உண்மைகளை வெளிக்கொணர்வதற்கு மட்டுமே உதவ வேண்டும் என்று எண்ணுகிறேன். ஓர் அரசியல் விமரிசகனாக ஒருபோதும் எழுத்தாளன் செயல்படக்கூடாது. அப்படிச் செயல்பட்டானென்றால் அது சார்ந்த விவாதங்களிலேயே அவனது ஆற்றல் முழுக்க வீணாகிப்போகும். எனவே பொதுவாக பேசப்படும் எந்த தளங்களைச் சார்ந்தும் எந்த அரசியல் கருத்தையும் நான் சொல்வதில்லை. பரவலாக நடக்கும் சர்ச்சைகளில் அவை சூடாக இருக்கும்போது கருத்துச் சொல்வதுமில்லை.
காரணம் இந்தச் சூடான சர்ச்சைகள் பலவும் இதழ்களில் வெளிவரும் பிரசுரங்களை நம்பிச்செய்யப்படுபவை. இதழ்களில் வரும் அரசியல் விவாதங்கள் எத்தனை மேலோட்டமானவை என்பது தொழிற்சங்கம் சினிமா, அரசியல்,காவல்துறை போல ஏதேனும் ஒரு தளத்தில் உள்ளே செயல்பட்டுக்கொண்டு அத்தளம் சார்ந்த செய்திகள் இதழ்களில் எப்படி வெளிவருகின்றன என்று கவனித்தவர்களுக்குத் தெரியும்.
உண்மையின் ஒரு விசித்திரமான திரிபுவடிவே ஊடகங்களில் வெளிவரும். செய்தியில் எது பரபரப்பாகும், எது பொதுவாகக் கவனிக்கிறவர்களுக்குப் புரியும், எது அப்போது நடந்து கொண்டிருக்கும் பிற நிகழ்ச்சிகளுடன் இணைந்துகொள்ளும் என்று மட்டுமே இதழாளர் பார்ப்பார்கள். ஒருபோதும் உண்மையைத் தேடி ஆழமாகச் செல்லும் பொறுமையைக் காட்டமாட்டார்கள். அதனால் அவர்களுக்கு தொழில்முறையில் எந்த இலாபமும் இல்லை.
மேலும் அவர்களுக்கு சிலவருடங்களிலேயே செய்திகள் மீதிருக்கும் ஆரம்பகட்ட பரபரப்பு விலகி ஒருவித சலிப்பு வந்துவிட்டிருக்கும். செய்தியாளர்கள் அவர்களுக்கென ஒரு சட்டகம் வைத்திருப்பார்கள். இப்படித்தான் இந்த விஷயம் என அவர்கள் ஏற்கனவே வகுத்திருப்பார்கள். அதை இயந்திரத்தனமாகச் செய்திக்குள் போட்டு வெளிப்படுத்துவார்கள். அந்த சட்டகம் பலசமயம் அந்த இதழுக்குரியதாக இருக்கும். சிலசமயம் அந்த இதழாளருக்கு உரியதாக இருக்கும்.
அத்துடன் பலசமயம் செய்தியாளர்கள் உண்மை தெரிந்தாலும் எழுதமாட்டார்கள். அவை உருவாக்கும் சிக்கல்களை அவர்களால் தொடர்ந்துசென்று சந்திக்க முடியாது. ஒரு செய்தி அச்செய்தியுடன் முடிந்துவிட்டு அடுத்த செய்திக்குச் செல்லவேண்டுமென்றே நினைப்பார்கள். பெரும்பாலான மூத்த செய்தியாளர்களிடம் நாம் அறியாத ஒரு இணை வரலாறு இருக்கும். குடிமேஜைக்கு முன்னால் வைத்து மட்டுமே பேசப்பட்டு, காற்றிலேயே உலவும் வரலாறு அது. அச்சு வரலாறு எந்த அளவுக்குப் பொய் என அதைக்கேட்டால் அறியலாம்.
நானாஜி தேஷ்முக்
ஊடகங்கள் காட்டும் செய்திகள் போல உண்மை இருக்காது என அறிந்த அறிவுஜீவிகள் தங்கள் கற்பனையால் ஊகங்களை நிகழ்த்துகிறார்கள். வரலாற்றில் மாபெரும் சதிகளையும் எதிர்ச்சதிகளையும் கண்டுபிடிக்கிறார்கள். அவர்களின் கற்பனையில் அரசியல் என்பதே மாபெரும் சதுரங்க விற்பன்னர்களின் அதிநுட்பமான காய்நகர்த்தல்தான்.
கொஞ்சம் விஷயமறிந்த ஒருவர் இவை இந்த தளத்தில் ஒருபோதும் நிகழ்வதில்லை என அறிந்திருப்பார். உண்மையில் மிகப்பெரிய அரசியல்நிகழ்வுகள் கூட மிகமிகச் சாதாரணமாக, சின்னச் சின்ன விஷயங்கள் சார்ந்து அதன்போக்கில் நடைபெற்று முடிகின்றன. கடந்த இருபதாண்டுகளாக நான் கவனித்த மிகப்பெரிய அரசியல் நிகழ்வுகள் அனைத்துமே சம்பந்தப்பட்டவர்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் தங்கள் பாட்டுக்கு இருக்க, முழுக்க முழுக்கத் தற்செயலாக நடந்து முடிந்தவை. புத்திசாலி அரசியல்வாதி என்பவர் அந்த நிகழ்வுகளில் இருந்து தன் இருப்பை பாதுகாத்துக்கொண்டு லாபம் அடைந்து வெளிவரும் சமயோசிதபுத்தி கொண்டவர் மட்டுமே.
நம்முடைய அரசியல் தலைமைகளில், அதிகாரத்தலைமைகளில் இருப்பவர்கள் வரலாற்றின் ஓட்டத்தை எந்தவகையிலும் கட்டுப்படுத்த முடியாத எளிய மனிதர்கள் என்பது உள்ளே செல்லச் செல்ல தெரியும்.அவர்களில் மிகச்சிலர் தவிர பிறருக்கு எந்த வகையான பொதுநல நோக்கமும் கிடையாது.தங்கள்நலன்,தங்கள் குழுநலன் நாடுபவர்கள் சிலர். அந்ததந்த தருணங்களை எப்படியாவது தாண்டிச்சென்றால் போதும் என நினைப்பவர்கள் மிச்சபேர்.
பெரும்பாலான விஷயங்கள் அந்த விஷயங்களில் சம்பந்தப்பட்ட பொருளியல் சக்திகளின் பூசல் ,பேரம், சமரசம் மூலமே நடைபெறுகின்றன. இந்திய அரசியலில் இன்று பெருமுதலாளிகளின் தரப்பு மட்டுமே உள்ளது. தரப்புகள் என்பது அவர்கள் நடுவே உள்ளவை மட்டுமே. மக்கள்நலன் என்பது மேடைகளில், அச்சில் மட்டுமே ஒலிக்கக்கூடிய ஒன்று. பெரும்பாலான பொது விஷயங்கள், நீதிமன்ற வழக்குகள்கூட, எப்படி தீர்மானிக்கப்படுகின்றன என்பதைக் கேட்டால் இந்த நாட்டில் நாமெல்லாம் ஒரு கருணை காரணமாக மட்டுமே வாழ அனுமதிக்கப்பட்டிருக்கிறோம் என்று தோன்றக்கூடும்.
இந்திய அரசியல், நிர்வாகம்,நீதி மூன்றுமே பெரும்பாலும் ஊழலால் மட்டுமே இயங்கிக்கொண்டிருப்பவை. கடந்த இருபதாண்டுகளில் ஒன்றின் உள்ளே புகுந்து சென்று பார்த்தால் அப்பட்டமான தனிநலன்கள் மட்டுமே செயல்பட்டுக்கொண்டிருப்பதைப் பார்க்க முடியும். அந்த யதார்த்தத்துக்கும் வெளியே பேசப்படும் அரசியலுக்கும் எந்தவகையான தொடர்பும் இல்லை. வெளியே நாளிதழ்செய்திகளை அலசி ஆராய்ந்து சூடாக விவாதிக்கும் அறிவுஜீவிகள் மிகவும் பரிதாபத்துக்குரியவர்கள் மட்டுமே.
அரசியல் விவாதங்களில் இறங்கினால் இச்செய்திவிவாதங்களில் ஒரு குரலாக ஒலிப்பது மட்டுமே நாம் செய்யக்கூடியதாக இருக்கும். நாம் என்ன சொன்னாலும் அதை ஒரு தரப்பு மறுக்கும். நம்மை அவதூறு செய்யும். நாம் அதற்கு பதில் சொல்ல வேண்டும். பதிலுக்குப் பதில் சொல்ல வேண்டும். ஒருபோதும் உண்மை வெளிவரப்போவதில்லை. எழுத்தாளன் அதைச் செய்தால் அதன்பின் அவன் இலக்கியமே எழுத முடியாது.
உள்நிகழ்வுகளை, உச்சகட்ட தளங்களை அறியும் வாய்ப்புள்ள ஒருவன் காணும் அரசியலே வேறு. அந்த அரசியலை அவன் எழுத ஆரம்பித்தால் அதை நிரூபிப்பதற்கே வாழ்நாள் முழுக்க பாடுபடவேண்டும். அதனால் எந்தப் பயனும் இல்லை. அந்த தரிசனத்தை அவன் தன் வரலாற்றுப்பார்வையாக ஆக்கிக்கொண்டான் என்றால் அதுவே அவனுக்கு வலுவான ஆயுதமாகும். அவ்வளவுதான் செய்ய முடியும்.
இந்த இடத்துக்கு நான் மிக ஆரம்பநாட்களிலேயே வந்து சேர்ந்துவிட்டிருக்கிறேன் என்பதே என் இன்றைய அரசியலை தீர்மானிக்கிறது. பள்ளிநாட்களில் நான் மார்க்ஸியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் ஆதரவாளன். எங்களூரில் அன்றிருந்த பெரிய அரசியலியக்கம் அதுவே. மேலும் அதன் பெருந்தலைவரான மறைந்த ஜெ.ஹேமச்சந்திரன் என் நெருக்கமான உறவினர். நெருக்கடிநிலைக்கு எதிராக கட்சி மேற்கொண்ட போராட்டங்களில் எந்த விபரமும் தெரியாமல் நானும் பிற பையன்களைப்போல பங்கெடுத்திருக்கிறேன்.
நான் கல்லூரி இரண்டாமாண்டு படிக்கையில் ஆர்.எஸ்.எஸ் தொடர்பு உருவாகியது. மிகச்சாதாரணமான அன்றாடப்பிரச்சினையில் இருந்து அது ஆரம்பமாகியது. எங்களூர் திருவரம்பு மகாதேவர் ஆலயம் சுற்றிலும் கிறித்தவக்குடியிருப்புகள் நடுவே பதினைந்து இந்து வீடுகள் சூழ இருந்தது. நாங்கள் கோயிலை மையமாக்கி ஒரு இளைஞர்கும்பல் இருந்தோம். சும்மா பிரேம் நஸீர் ,ஜெயபாரதி, தக்ழி,பஷீர் என்றுபேசிக்கொள்வோம். கோயில்செயல்பாடுகள் எங்களை தொகுத்துக்கொள்ள உதவின. அவற்றில் மதம் ஏதும் இல்லை. கோயிலில்தான் பொது இடம் இருந்தது. கோயில் பேரைச்சொன்னால்தான் ஊரில் பைசா கிடைக்கும். பணம் சேர்த்து சிறிய கலைநிகழ்ச்சிகள் நடத்துவோம்.
ஆனால் ஊரில் கிறித்தவர்கள் ஒரு கட்டுப்பாடு போட்டிருந்தார்கள். கிறித்தவப் பகுதிகளில் ஒலி கேட்குமளவுக்கு கோயில்மணி அடிப்பதோ ஒலிப்பெருக்கி வைப்பதோ கூடாது. ‘சாத்தானின்’ சத்தம் அவர்களின் மதவழிபாட்டுக்குத் தடையாக இருக்கிறது என்றார்கள். ஆனால் கோயிலின் தூணிலேயே கிறித்தவ விழாக்களுக்கான ஒலிப்பெருக்கிகளைக் கட்டுவார்கள். இன்று இது நம்பமுடியாததாக இருக்கலாம். ஆனால் சீர்திருத்தக் கிறித்தவர்களின் [CSI] அப்பட்டமான மதவெறியை நேரில் அனுபவித்தவர்கள் இதை எளிதில் உணர்வார்கள். முப்பதுவருடம் முன்பு குமரிமாவட்டத்தின் கல்குளம் விளவங்கோடு பகுதியில் பல ஊர்களில் இப்பிரச்சினை இருந்தது.
இவ்வாறு மதவெறியுடன் செயல்பட்டவர்கள் ஓர் ஊரில் அதிகபட்சம் ஒரு ஐம்பதுபேர்தான். அவர்களே ஊரில் பணபலம் மிக்கவர்கள். மற்றபடி ஊரில்பெரும்பாலான கிறித்தவர்களுக்கு எந்தவிதமான மதவெறியோ காழ்ப்போ கிடையாது. வயிற்றுப்பாட்டுக்கு அலையும் எளிய மக்கள். ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்ந்தாகவேண்டியவர்கள். கோயிலில் நாடகம் போட்டால் அவர்களே வீட்டில் இருந்து பாயைச்சுருட்டிக்கொண்டு வந்து உட்கார்வார்கள்.
நாங்கள் ஒருமுறை ஒரு கதாபிரசங்கத்துக்கு ஒலிப்பெருக்கி ஏற்பாடு செய்தோம். ஜி.விவேகானந்தனின் ‘கள்ளு’ என்ற நாவலின் கதாப்பிரசங்க வடிவம். நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தபோது தேவாலயத்தில் மணி அடித்து ஆட்களைக்கூட்டிக்கொண்டு திரண்டு வந்த கிறித்தவர்கள் எங்கள் நிகழ்ச்சியை நிறுத்தினார்கள். நான் உட்பட சம்பந்தப்பட்ட இளைஞர்களுக்கு எல்லாம் அடி கிடைத்தது. மேடை பிய்த்து வீசப்பட்டது. அந்த நிகழ்ச்சிக்குப் பின் ஊரின் பெரிய மனிதர்கள் கூடி சமரசம்பேசியபோது தேவாலயத்தின் பாதிரியார் சாத்தானின் சத்தமே வெளியே கேட்கக்கூடாது என்று ஆணையிட்டார். பெரியவர்கள் அதற்கு ஒத்துக்கொண்டார்கள். நாங்கள் இளைஞர்களுக்குத்தான் ரத்தம் கொதித்தது.
முக்கியமான விஷயம், அடிபட்டவர்களில் இந்துநாடார்கள் இருந்தார்கள் என்பதே. அன்றுவரை இல்லாத ஒரு புதியவிஷயம் அது. ஆகவே நாங்கள் ஆற்றுக்கு மறுகரையில் வலுவான இந்துநாடார் மையமாக விளங்கிய கிருஷ்ணன் கோயிலை நடத்திவந்த செல்லன் நாடாரைச் சென்று பார்த்தோம். அவர் எங்களுக்கு ஆதரவளித்தார். அவரே அவரது ஆட்களுடன் வந்து நின்று கோயிலில் விழாவை கொட்டும்குரவையுமாக நடத்தினார். அவர் உறுதியான ஆர்.எஸ்.எஸ்.காரர். அபாரமான ஒழுக்கமும் நேர்மையும் கொண்ட தீ போன்ற மனிதர். அவரது ஆளுமையின் கவற்சியால் நாங்களெல்லாருமே ஆர்.எஸ்.எஸ்ஸில் இ¨ணைந்தோம். அவர் நடத்திவந்த ஷாகாவுக்குச் செல்ல ஆரம்பித்தோம். பின்னர் நாங்களே ஒன்றை ஆரம்பித்தோம்.
இக்காலகட்டத்தில் குமரிமாவட்டத்தில் காப்புக்காடு என்ற ஊரில் அம்மாவின் சொந்தக்காரர் வீட்டுக்குச் செல்லும்போது நெற்றியில் விபூதியுடன் ஒரு கிறித்தவத் தெருவில் வழிதவறி நுழைந்துவிட்டேன். என்னை பிடித்து அடித்து இழுத்துச்சென்று உள்ளூர் சர்ச்சில் வைத்தார்கள். பாதிரியார் வந்து அவரே என்னை அடித்து என் விதைப்பையில் உதைத்தார். பலவருடக்காலம் எனக்கு பெரும் வலியைக் கொடுத்த உள்காயமாக அது இருந்தது.
எனக்கு கிறித்தவ மதம் மீது உக்கிரமான வெறுப்பு உருவாகியது இக்காலகட்டத்திலேயே. என் மனத்தில் இளமையிலேயே குடியேறிய கிறிஸ்துவின் ஒளிமிக்க சித்திரமே அதனால் கறைப்பட்டது. அதிலிருந்து என்னை மீட்டது நான் என் கல்லூரி நண்பனுடன் கடியபட்டினம் கடற்கரைக்குச் சென்று அவர்களுடன் சிலநாள் தங்கியபோதுதான். அவனுடைய எளிமையான அம்மாவே எனக்கு கிறிஸ்துவை மீட்டளித்தார்கள். பல நிழல் கோணங்களில் அவர்கள் என் ஆக்கங்களில் வந்திருக்கிறார்கள். ஓர் உதாரணம், பின் தொடரும் நிழலின் குரலில் வரும் கெ.கெ.எம்மின் மனைவி. என் அகத்தில் இருந்த கிறிஸ்துவை நான் அப்போதுதான் மீட்டுக்கொண்டேன்.
கல்லூரி வாழ்வின் கடைசி நாட்களில் என் உயிர்நண்பன் ராதாகிருஷ்ணனின் தற்கொலையும் அதன் விளைவாக நான் மனச்சிக்கல் கொண்டவனாக ஆனதும் என்னை மாற்றியமைத்தது. நான் ஊரைவிட்டு ஓடினேன். துறவியாக பலதிசைகளில் அலைந்தேன். மீண்டு வந்தபின்னர் ஆர்.எஸ்.எஸ் ஊழியராக இணைந்தேன். குறுகிய காலம் அவ்வியக்கத்தில் பணியாற்றியிருக்கிறேன். இன்று அதைப்பற்றி விரிவாகச் சொல்ல முடியாது. அவ்வியக்கத்தின் உச்சதளங்களில் தொடர்புடையவனாக இருந்தேன் என்றும் கிட்டத்தட்ட மூன்று வருடம் அவர்களின் அதிகாரபூர்வ இதழ் விஜயபாரதத்தை ‘ஜெயன்’ என்றபேரில் நடத்தினேன் என்றும் என்னால் சொல்ல முடியும். சிலநூல்களும் எழுதினேன்.
நான் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் நீடித்திருந்தால் இன்று அதன் முக்கியமான பொறுப்புகளில் இருந்திருக்கக் கூடும். ஆனால் நான் அதில் இருந்து விலகினேன். ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் நான் சந்தித்த பெரும்பாலானவர்கள் எனக்கு மிகமிகப் பிரியத்திற்குரியவர்களாக இருந்தார்கள். அசாதாரணமான நேர்மையும் அர்ப்பணிப்பும் கொண்ட மனிதர்கள். அவர்கள் எவரிடமும் எந்தவகையான தனிப்பட்ட முரண்பாடும் எனக்கு வரவில்லை. இன்றும் தனிப்பட்ட நெருக்கமே உள்ளது. நான் முழுக்க முழுக்க கொள்கை சார்ந்த முரண்பாட்டினாலேயே வெளியேறினேன்.
வெளியே பிரச்சாரம்செய்யப்படுவதுபோல ஆர்.எஸ்.எஸ் ஒன்றும் ஒற்றைப்படையான மதவெறி அமைப்பு அல்ல. பிற எந்த பெரும் இயக்கங்களைப்போலவே அதிலும் முரண்பட்டு இயங்கும் உள்ளோட்டங்கள் உண்டு. அர்ப்பணிப்புள்ள காந்தியவாதிகள் அதற்குள் உண்டு. பிற எந்த சமூகசேவை அமைப்பை விடவும் அவர்கள் வழிநடத்திய சேவை அமைப்புகள் மாபெரும் பணி புரிந்திருக்கின்றன. நாத்திகர்களும் உண்டு. ஏன் இடதுசாரிக் கொள்கைகள் கொண்டவர்களும் உண்டு. உறுதியான சாதியவாதிகள், மதவெறியர்கள், பழமைவாதிகளும் உண்டு. பொதுவான ஓர் கருத்தியலே அவர்களை ஒரே அமைப்புக்குள் வைத்திருக்கிறது.
எண்பதுகளில் நான் நானாஜி தேஷ்முக்கைச் சந்தித்திருக்கிறேன். அதற்குப்பின் சிலமாதங்கள் கழித்து வேறு ஒரு கூட்டத்தில் சுந்தர்லால் பஹ¤குணாவைச் சந்தித்தேன். இருவரும் ஒரே காந்தியக் கருத்தியல் கொண்டவர்களாக எனக்குப்பட்டார்கள். நானாஜி தேஷ்முக் பின்னர் உயர்மட்ட அரசியல் சலித்து ஆர்.எஸ்.எஸ் பணிகளில் இருந்து விலகி காந்திய கிராமநிர்மாணசேவைக்குச் சென்று அரும்சாதனைகளை ஆற்றியிருக்கிறார். அப்படி வெளியேறாமலேயே பிரமிக்கத்தக்க பணிகளைச் செய்தவர்களையும் நான் அறிவேன். அறியப்படாமலேயே சென்றுவிடும் மனிதர்கள் அவர்கள்.
நான் தேர்ந்தெடுக்க இரு வழிமுறைகள் இருந்தன. ஒன்று நானாஜிதேஷ்முக் போன்றவர்களின் வழி. இன்னொன்று அதிகார அரசியலின் வழி. இரண்டுமே எனக்கு உகக்கவில்லை. நான் இயல்பிலேயே எதிர்மறையான விஷயங்கள் மீது ஈடுபாடு கொள்பவன் அல்ல. எந்த மதத்தையும், எந்த மனிதக்குழுவையும் வெறுக்க என்னால் இயலாது. அது எழுத்தாளனின் வழி அல்ல. அப்படி வெறுக்க ஆரம்பிப்பவன் அவனது ஆன்மீகத்தை இழந்து க்லையை கைவிட்டுவிடநேரும். நான் என்றுமே என்னை எழுத்தாளன் என்றே உணர்ந்தவன். என் இலக்கியச்சாதனைகள் நான் வெறுப்பை சுமந்தலையாமல் இருக்க முடிவெடுத்தமையால் கைவந்தவை .ஆகவே நான் விலகிச்சென்றேன்.
ஆர்.எஸ்.எஸ்சில் இருந்தபோது ஒருமுறை ஓர் உள்ளறை விவாதத்தை நான் கேட்க நேர்ந்தது. அதில் பங்குகொண்டவர்கள் பின்னாளில் இந்த தேசத்தை ஆண்டிருக்கிறார்கள். மிக முக்கியமான அந்த விவாதத்தில் பேச்சு இடதுசாரி தீவிர இயக்கங்களுக்கு செல்லும் நிதியாதாரம் பற்றி திரும்பியது . அத்தனைபேருக்கும் எல்லாமே தெரியும் என்பது போல சாதாரணமாக அந்த உரையாடல் நடந்தது. நான் தீவிர இடதுசாரிகளை ஏற்காதவனானாலும் அவர்கள் நேர்மையான போராளிகள் என நம்பிக்கொண்டிருந்தவன். சொந்தவாழ்க்கையை அவ்வியக்கங்களில் அழித்த பலரை நானே அறிவேன். ஆகவே எனக்கு பிடரியில் படார் படாரென அடி விழுவதுபோல் இருந்தது. பெரிசுகளுக்கு மரியாதையாக ஓரமாக நின்றிருந்தவன் கால் தளர்ந்து அப்படியே சுவரில் சாய்ந்து அமர்ந்துவிட்டேன்.
இடதுசாரி தீவிர இயக்கங்கள் அனைத்துக்குமே இந்தியப் பெருமுதலாளிகளின் நிதி சென்று கொண்டிருப்பதை அப்போதுதான் அறிந்தேன். இந்துத்துவ அமைப்புகளைப் பொறுத்தவரை அவர்கள் நிதி பெறுவதில் ரகசியமேதும் இல்லை. அவர்களின் அரசியலும் பொருளியலும் வலதுசாரித்தன்மை கொண்டவைதான். ஆனால் அதே முதலாளிகள் இடதுசாரி தீவிரக் குழுக்களுக்கும் நிதி வழங்கினார்கள். பெரும்பாலும் இரு பெரும் கம்யூனிஸ்டுக்கட்சிகளின் செயல்பாடுகளை குழப்புவதும் முடக்குவதுமே நோக்கம். அதே நோக்கத்துக்காக பல்வேறு சேவை நிறுவனங்கள் மூலம் அமெரிக்கப் பணம் வந்து கொண்டிருந்தது. இந்திய உளவுத்துறையின் பணமும் சென்றது!
கியூபாவில் இருந்து ஒரு குழு வந்து இந்திய நக்சலைட் இயக்கங்களை இணைக்க முயல்கிறது, அதற்காக பெரும்பணம் பட்டுவாடா ஆகிக்கொண்டிருக்கிறது என்று சொல்லி சிரித்தார்கள். விளைவாக சிலநாட்களிலேயே தீவிர இடதுசாரிக் கட்சிகள் உடையும் என்று சொன்னார் ஒருவர். உண்மையிலேயே ஆறுமாதங்களுக்குள் எம்.எல் கட்சிகள் பட் பட் என உடைந்தன! அதற்கு என்னென்ன தத்துவ விவாதங்கள் கோட்பாடுகள்….தேசியம் ,உபதேசியம், சுய நிர்ணயம்…
பத்து வருடங்களுக்கு பின்னர் நான் மனுஷ்யபுத்திரனை அவரது துவரங்குறிச்சி வீட்டில் சந்தித்து பேசிக்கொண்டிருந்தேன். அவரது உறைவிடமாக இருந்தது ஒரு பழைய அறையில் உயரமான கட்டில். அதிலேயே வாசிப்பு, தூக்கம், நண்பர் சந்திப்பு. அந்தரங்கமாக பேசியவர் அவர் ஆவேசமாக நம்பி பத்துவருடம் தீவிரமாக உழைத்து பின் ஏமாற்றம் கொண்ட இடதுசாரி தீவிரக்குழு ஒன்றைப்பற்றிச் சொன்னார். எல்லா நிதிகளையும் பெற்றுக்கோண்டிருந்த அமைப்பு அது! நான் சிரித்துக்கொண்டே அமர்ந்திருந்தேன்.
வலதுசாரி அரசியலில் இருந்து மீண்டும் இடதுசாரி அரசியலுக்குத் தாவினேன். தொலைபேசித்துறையில் வேலை கிடைத்தபின் இடதுசாரி கம்யூனில் தங்கியிருந்தேன். உற்சாகமான இலக்கிய விவாதங்கள், அரசியல் வகுப்புகள், நட்புகள். அரசியலின் உச்சநிலைகள் தெரியும் என்பதனாலேயே என்னால் அடித்தளத்தில் பொருந்திக்கொள்ள முடியவில்லை. ஆனால் மெல்லமெல்ல தொழிற்சங்க அரசியலுக்குள் நுழைந்தேன். அரசியலில் எனக்கு நம்பிக்கை இல்லாமலாகியிருந்தாலும் தொழிற்சங்க அரசியல் கண்கூடாகவே சில நல்ல பங்களிப்பு கொண்டது என்பதே என் எண்ணம். அது இல்லாவிட்டால் நிலப்பிரபுத்துவ மதிப்புகள் கொண்ட இந்தியாவில் சுயமரியாதையுடன் வேலைபார்க்க முடியாது. இன்றுகூட தொழிற்சங்கம் இல்லாத துறைகளில் ஆண்டான் அடிமை உறவுதான் நிலவுகிறது.
சமீபகாலம் வரை இடதுசாரித் தொழிற்சங்கப் பொறுப்புகளில் இருந்து சங்க வேலைகளில் பங்கெடுத்திருக்கிறேன். வேலைச்சுமை காரணமாகவே ஒதுங்கிக்கொண்டேன். ஆனாலும் நான் சாதாரண ஊழியனல்ல. ஓர் ஊழியன் அறியமுடியாத உயர்மட்ட விஷயங்கள் எனக்குத்தெரிய வரும். 1988ல் புகழ்பெற்ற வங்கி ஊழியர் போராட்டத்தின்போது நான் டெல்லியில் சில இதழியல் நண்பர்களுடன் இருந்தேன். இந்தியன் கா·பி ஹவுஸில் இருக்கும்போது அங்கே அந்தப்போராட்டத்தின் உள்பேரங்களை கேட்டுக்கொண்டிருந்தேன். முற்றிலும் வேறு வகையான வரலாறு அது. எந்த வங்கி ஊழியருக்கும் அவரது தலைவிதி எந்த அளவுக்கு அபத்தமாக, அற்பத்தனமாக தீர்மானிக்கப்பட்டது என ஊகிக்க முடிந்திருக்காது.
அரசியலை வெளியே தெரியும் கோஷங்களை வைத்துப் புரிந்துகொள்ளாமலிருப்பதற்கான பயிற்சி எனக்கிருக்கிறது. முக்கியமான கேரள இதழாளர்களுடனான சந்திப்புகள் மூலம் என்னுடைய அரசியல் நோக்கு உருவாகி வந்தது.மிக ஆழமான மனக்குழப்பத்தில் இருந்த நாட்கள் அவை. பல இதழாளர்கள் மோசமான அவநம்பிக்கையாளர்கள். கேலியே அவர்களின் ஒரே வெளிப்பாட்டுமுறை.
மறுபக்கம் நான் கேரள சிந்தனையாளர்களான ஆனந்த், ஓ.வி.விஜயன் இருவரையும் வாசித்துக்கொண்டிருந்தேன். அவர்களும் டெல்லியை மையமாக்கியவர்கள். அவர்களும் உள்ளதிகார ஓட்டத்தை அடுத்து அறிந்தவர்கள். ஆனால் ஆழமான நம்பிக்கையுடன் அவர்கள் எழுதிக்கொண்டிருந்தார்கள். இருவருமே முன்னாள் இடதுசாரிகள். பின்னர் காந்தியவாதிகளானார்கள். ‘நவகாந்தியர்’ என்று சொல்லலாம். சமரசமே இல்லாத அரசியல் விமரிசகர்களாக, கோட்பாட்டாளர்களாக எழுதிக்கொண்டிருந்தார்கள். அவர்களை இயக்கும் நம்பிக்கை என்ன?
அந்நாட்களில்தான் பி.கெ.பாலகிருஷ்ணனைச் சந்தித்தேன். இதழாளர்,வரலாற்றாசிரியர்,நாவலாசிரியர். அவருடன் உரையாடியபோது ஒருநாள் ஒரு திறப்பு போல ஒரு கருத்தை அடைந்தேன். நான் காண்பதெல்லாம் கண்ணுக்குத்தெரியும் அதிகாரத்தரப்புகளை மட்டுமே. கண்ணுக்குத்தெரியாத அதிகாரத் தரப்பு ஒன்று உண்டு. அது சமூகத்தின் கோடானுகோடி மக்கள்தான். அவர்களின் விருப்பங்களும் கனவுகளும் அடங்கியது அது. பேரமேஜைகளில் அதுவும் வந்து உட்கார்ந்திருக்கிறது.
எந்த அதிகாரபேரத்திலும் வலுவான ஒரு தரப்பு மக்களின்இச்சை தான். அதை கொஞ்சம் ஒத்திப்போடலாம், கொஞ்சம் திசை திருப்பலாம், கொஞ்சம் ஏமாற்றலாம். ஆனால் அதை தாண்டிச்செல்வது முடியாது. நெருங்கி அமர்ந்து வரலாற்றைப் பார்த்தால் அக்காலத்திய சுரண்டல்வாதிகளின் அதிகாரம் மட்டுமே செயல்படுவதாகத் தோன்றும். ஆனால் ஒரு இருபதாண்டுக்கால வரலாற்றை எடுத்துப்பார்த்தால் ஒட்டுமொத்தமாக அது மக்களின் இச்சை என்ற பெரும் விசையால் தூக்கிச்செல்லப்படுவதையே காண்கிறோம்.
ஆனந்த்
பின்னர் 1988ல் நான் ஆனந்தை டெல்லியில் அவரது இல்லத்தில் சந்தித்தேன். என்னுடைய முதிராத மனநிலையில் ஐயங்களை கேட்டுக்கொண்டே இருந்தேன். பொறுமையாகப் பதிலளித்தவர் சிரித்தபடி ‘மக்கள் என்பது கடவுள் போல. நாம் பிரார்த்தனைசெய்வதையும் உபாசனைசெய்வதையும் அது கேட்கிறது என நாம் நம்பித்தான் ஆகவேண்டும்’
அந்தவரியுடன் என்னிடம் மூத்த ஆர்.எஸ்.எஸ் சேவகர் சொன்ன ஒரே வரியும் இணைந்துகொண்டது. அவரிடம் அந்தரங்கமாகப் பேசிக்கோண்டிருந்தேன். மகாராஷ்டிரத்தில் ஒரு மலைப்பகுதியில் எளிய மக்களிடையே ஒரு பெரும் சேவையாற்றிய முதியவர் அவர். அரசியலின் சோர்வூட்டும் உயர்மட்ட செயல்கள் குறித்துப் பேச்சு வந்தபோது அவர் சொன்னார் ”ஆற்றிலே மரக்கட்டைகள் போகின்றன என்றுதான் குழந்தை நினைக்கும். ஆறுதான் ஓடுகிறது. அதைப்போலத்தான். இந்த மேல்மட்ட விஷயங்கள் எனக்குப் பிடிபடுவதில்லை. எனக்குத்தெரிந்த வட்டத்திற்குள் நான் மக்களிடையே ஒரு விழிப்புணர்வை உருவாக்க முடிகிறது. அவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை அது உருவாக்குவதை கண்கூடாகப் பார்க்கிறேன். இந்தச் செயல்களெல்லாம் ஒன்றாகத் திரண்டு பெருவெள்ளமாகும் என நம்புகிறேன். பெரு வெள்ளம் என்பதே இவ்வாறு துளிகள் இணைந்து உருவாவதுதான்” கீதையை மேற்கோள் காட்டி புன்னகைசெய்தார் அவர்.
பின்னர் அண்டோனியோ கிராம்ஷியை வாசித்து இந்த அறிதலுக்கான கோட்பாட்டு அடிப்படைகளை கற்றுக்கொண்டேன். அதிகாரம் என்பது அதைக் கையாளும் சிலரிடம் இல்லை. அதற்கு அடியில் தீர்மானிக்கும் வல்லமையாக உள்ளது குடிமைச்சமூகம். அவர்களின் அகத்தில் உறையும் கருத்தியலே அதிகாரமாக ஆகிறது. அந்தக் கருத்தியல் நோக்கியே எல்லாவகையான அறிவுச்செயல்பாடுகளும் செய்யப்படுகின்றன. எல்லா கருத்துச்செயல்பாடுகளுக்கும் அந்த அடித்தளத்தை தீர்மானிப்பதில் ஒரு பங்கு உண்டு. எதுவுமே வீணல்ல.
நான் காந்தியை அறிமுகம்செய்துகோண்டது எம்.கோவிந்தன்,பி.கெ.பாலகிருஷ்ணன் வழியாக. காந்தியத்தின் நவீனகால சாத்தியங்களைப் புரிந்துகொண்டது ஆனந்த், ஓ.வி.விஜயன் வழியாக. என்னுடைய அரசியலென்பது காந்திய அரசியலே. அதிகாரத்தை நம்பாமல் மக்களின் உள்ளே செயல்படும் கருத்தியலின் ஆற்றலை நம்பிச் செயல்படுவதே காந்தியம்.
ஓ.வி.விஜயனும், ஆனந்தும் படைப்பிலக்கியவாதிகள். அரசியல் ஆய்வாளர்களோ அரசியல் விற்பன்னர்களோ அல்ல. அரசியலை எழுத்தாளனின் தார்மீகத்துடனும் உள்ளுணர்வுடனும் அணுகியவர்கள் அவர்கள். அந்த தார்மீகத்துக்கும் உள்ளுணர்வுக்கும் எப்போதுமே ஒரு முக்கியமான இடம் உண்டு. தன் காலகட்டத்துக் கருத்தியல் கட்டுமானம் நோக்கி ஓயாமல் உரையாடியவர்கள் அவர்கள். அதில் தங்கள் பங்களிப்பை ஆற்றியவர்கள்.
இது ஒன்றே வழி. நேர்மையான அரசியல்செயல்பாடு என்றால் குடிமைச்சமூகத்தின் கருத்தியலை நோக்கி ஓயாது உரையாடுவதுதான். சிலசமயம் விளைவே இல்லாமலிருக்கலாம். எந்தச் சலனமும் கண்ணுக்குத் தென்படாமலிருக்கலாம். சலிப்பும் விரக்தியும் ஏற்படக்கூடும். ஆனாலும் வேறு வழியே இல்லை.
ஆகவே நான் என்னை இவ்வாறு வகுத்துக்கொண்டேன். நான் வலதுசாரியோ இடதுசாரியோ அல்ல. என் அரசியல் என் இலக்கியத்தை தீர்மானிக்கக் கூடாது, என் இலக்கியமே அரசியலை தீர்மானிக்கவேண்டும். எந்த உள்ளுணர்வால் நான் என் ஆக்கங்களை எழுதுகிறேனோ அந்த உள்ளுணர்வால் நான் அரசியலையும் அணுகவேண்டும். சாமானியர்களுடனும், உச்ச மையங்களுடனும் எல்லாம் எனக்குத் தொடர்பு இருக்கவேண்டும்.
நான் என்ன எழுதுகிறேன் என்பதற்கான விளக்கம் ஒருகதையை நான் ஏன் எழுதுகிறேன் என்பதைப்போலவே இருக்கவேண்டும். அந்தந்தக் கணங்களில் எதை எழுதத் தோன்றுகிறதோ அது. எனக்கு ஏதேனும் சொல்வதற்கிருந்தால் சொல்ல வேண்டும். சொல்ல தருணம் என்று எண்ணினால் சொல்ல வேண்டும். சொல்ல வேண்டியதில்லை என்றால் சொல்லாமலிருக்க வேண்டும். அந்தச் சுதந்திரத்தை எந்நிலையிலும் தக்கவைத்துக்கொள்ள வேண்டும்.
ஒருபோதும் தொடர்ச்சியான, தர்க்கபூர்வமான ஒரு கோட்பாட்டை அல்லது நிலைபாட்டை உருவாக்க முயலக்கூடாது. எந்நிலையிலும் எந்த முத்திரைக்கும் அஞ்சி எல்லாரும் சொல்லும் அரசியல்சரிகளைச் சொல்பவனாக ஆகிவிடக்கூடாது. புறக்கணிப்போ வசையோ எதுவானாலும் அதுவும் ஒரு இயல்பான விளைவே என ஏற்றுக்கொள்ளவேண்டும். மனசாட்சியின் குரலாக, ஒரு வெறும் சாட்சியின் தரப்பாக மட்டுமே என் அரசியல் ஒலிக்க வேண்டும். அது முரண்பாடுகள் கொண்டதாக, வெறும் மனப்பதிவாக, சல்லிசாக இருந்தாலும் பரவாயில்லை.
அப்படி ஒரு குரலுக்கு கோட்பாட்டாளர்களுடன் விவாதிக்கும் திராணி இருக்காது. அதற்கு கொள்கைகளின் சாராம்சமும் இருக்காது. ஆனால் அதற்கு ஒரு பங்களிப்பு உண்டு. கோட்பாட்டாளர்கள் விளக்காத பலவற்றை அது எளிமையாகச் சொல்லிவிட முடியும். அந்தக் குரலுடன் பலசமயம் எளிய வாசகர்கள் அடையாளம் கண்டுகொள்ளக்கூடும். பலசமயம் அது எவருமே சொல்லாமல் விட்டுவிட்ட சிலவற்றைச் சொல்லக்கூடும். அதன் விமரிசனத்துக்கு ஆளாகும் எல்லா தரப்பும் அதை எதிர்க்கும். முத்திரை குத்தும். அவதூறு செய்யும். ஏளனம் செய்யும் அதுவே அன்றாட அரசியலின் வழி. ஆனாலும் அது ஒலித்துக் கொண்டேதான் இருக்கும், காரணம் அதற்கு வேறு வழி இல்லை.
என் அரசியல் என்ன என்று கேட்டீர்கள் என்றால் நான் ‘எழுத்தாளனின் அரசியல்’ என்பேன்.
ஜெ
மறுபிரசுரம் முதற்பிரசுரம் நவம்பர் 2009