முறையீடு, அழைப்பு: கடிதங்கள்

ஐயா,
தங்களது “இரு அழைப்புகள்” கட்டுரை படித்தேன்.
இரண்டு கடிதங்கள் பேசுவது ஆன்மிகம். ஆனாலும், இரண்டிலும் ஒரு மிரட்டல் ” பல பிறவிகள்” அல்லது “உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதாளம்வரை தாழ்த்துவதற்கான தேவ வல்லமை” இருக்கிறது.
எனக்கு என்னவோ மனித மனம் தன்னை, தன்னுடைய ஆளுமையை தக்க வைத்து கொள்ள அனைத்தையும் உபயோகபடுத்துகிறது என்று தோன்றுகிறது. விருப்பு வெறுப்பின்றி, திருத்தும் முயற்சி அன்றி பார்க்கும் மனது வர, நாம் எடுக்கும் முயற்சிதான் ஆன்மிகம் என்று தோன்றுகிறது.

அன்புடன்
ராமகிருஷ்ணன்

அன்புள்ள ராமகிருஷ்ணன்

நம்பிக்கை அல்லது விசுவாசம் என்பது ஒரு முட்டுச்சந்து. அதன்பின் முன்னால்செல்ல இடமில்லை. ஆகவே ஒன்று அங்கே நின்று நான் நம்புகிறேன் நான் நம்புகிறேன் என தனக்குத்தானே சொல்லிக்கொள்ளலாம். அல்லது திரும்பிவந்து நீயும் நம்புடா நாயே என்று பிறர் மேல் பாயலாம்.

பெரும்பாலானவ்ர்களின் பாதை இரண்டாமதுதான். எந்த நம்பிக்கையாக இருந்தாலும்

ஜெ

அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு,

தங்கள் இணைய தளத்தின் தீவிர ரசிகன் நான். தங்கள் பதிவுகளை தவறாமல் படித்து வருகிறேன். பல சமயம் எழுத வேண்டும் என்று எண்ணினாலும் எதோ காரணத்தால் எழுதாமலே விட்டு விடுகிறேன் – ஓரிரு சமயங்கள் தவிர.

சமீபத்தில் தாங்கள் எழுதிய முறையீடு என்ற பதிவே இக்கடிதத்தை எழுத தூண்டியது. அந்த பதிவு, நம்மால் புரிந்து கொள்ள முடியாத ஆனால் நம்முடன் தொடர்பு கண்ட பிரபஞ்ச விதிகளை பற்றி பேசுவதாகவே நான் வாசித்தேன். ஆனால் தங்களுக்கு வந்த வாசகர் கடிதங்கள் அவர்கள் வேறு கோணத்தில் வாசித்திருபதை காட்டுகிறது.

எனக்கு சற்று குழப்பமாக இருக்கிறது. இப்படி கேட்பது சரியில்லை தான் – எனினும் கேட்டு விடுகிறேன். அந்த பதிவின் சாரம் என்ன? படிப்பவனிடம் என்ன விதமான சிந்தனைகளை தூண்டினால் படைப்பாளியாக தங்களுக்கு நிறைவு ஏற்படும்? இந்த கேள்வி அசட்டுத்தனமானது; நிராகரிப்புக்கு மட்டுமே தகுதியானது என்று தாங்கள் எண்ணினால் புரிந்து கொள்வேன்.
ராஜேந்திரன்

அன்புள்ள ராஜேந்திரன்,

அந்தப்பதிவு இலக்கியத்தன்மை கொண்டது.

இலக்கியத்தன்மை என்றால் மொழி மூலம் வாசகனில் உணர்ச்சிகளையும் உள்ளுணர்வுகலையும் உருவாக்குவது. கருத்துக்கள் அந்த உணர்ச்சிகளைச் சார்ந்தும் உள்ளுணர்வுகளைச் சார்ந்தும் வாசகனே உருவாக்கிக் கொள்வது. ‘இலக்கியப்படைப்புகல் திட்டவட்டமான கருத்துக்களைச் சொல்வதில்லை, மாறாக திட்டவட்டமான கருத்துக்களை நாமே உருவாக்கிக்கொள்ள உதவும் அனுபவங்களை அளிக்கின்றன்றன’ என்று டி எஸ் எலியட் சொல்கிறார்.

ஓர் அனுபவம் என்னில் உருவாக்கிய உணர்ச்சிகளையும் எழுச்சிகளையும் மொழியில் பின் தொடர்ந்திருக்கிறேன். அவ்வளவுதான். இதே அனுபவம் உங்களுக்கு ஏற்பட்டிருந்தால் என்ன நினைத்திருப்பீர்கள், எந்த வகையான கருத்துக்களுக்கு வந்திருப்பீர்கள்? இங்கு அனுபவம் உங்களுக்கு ஓர் ஆசிரியன் வழியாக இலக்கியம் வழியாக வந்து சேர்கிறது. இதுவும் உண்மையான அனுபவம் போன்றதே. இன்னு செறிவாக்கம் செய்யப்பட்டது அவ்வளவுதான்

இதற்கு மேல் இன்ன விளைவை இன்ன கருத்தை ஓர் எழுத்து உருவாக்க வேண்டும் என்று ஆசிரியன் எண்ண முடியாது. எண்ணினாலும் அது சாத்தியமும் கிடையாது. வாசகன் மனம் பலவகைபப்ட்டது. எல்லையற்ற சாத்தியங்கள் கொண்டது

ஜெ

அதிகம் கூட்டம் இல்லாத கூடத்தில் பேசிக்கொண்டு நின்றபோது அசோகமித்திரன் வருவதாக ஹரன் பிரசன்னா சொன்னார். நான் முன்னால்சென்று வணங்கினேன். மதுமிதாவுடன் பேசிக்கொண்டிருந்தவர் என்னை நோக்கி திரும்பி ?” என்று ஆச்சரியப்பட்டு அவரது இளமைக்கால ஆதர்சமான எர்ரால் ·ப்ளின் வாள்சண்டை போடுவது போல கைகாட்டி,”சண்டையெல்லாம் நன்னா போடுறேளா?” என்றார். ஆமா சார்என்று புன்னகைசெய்தேன்.

இணையதளத்தில் இன்றைய கடிதங்களைப் பார்த்த பின்னர் அசோகமித்திரன் சொன்னது தான் ஞாபகம் வந்தது :-)

மற்றவர்களின் கருத்துக்களை – அவை எத்தனை கொடூரமானதாக இருந்தாலும் – காது கொடுத்து கேட்டு, அவர்களை மதித்து, பதில் சொல்வதில் உங்களுக்கு இருக்கும் ஈடுபாடு மேல் எனக்கு பெருமதிப்பு உண்டு. ஆனால் சில வேலைகளில் அது “திண்ணை” ஜனநாயகமாக மாறிவிடக்கூடிய அபாயமும் உண்டு. மாற்றுக் கருத்துகள் என்பது வேறு. ஒருவித அடிப்படைப் புரிதலும் இன்றி மட்டையடி அடித்து, பின்னர் அருள்வாக்கும் ஆசிர்வாதமும் அளிக்கும் இவ்வகை கடிதங்கள் வேறு. இவ்வகை கடிதங்களுக்கு பதில் போடாதீர்கள். அப்படியே போட்டாலும் அதை இணையதளத்தில் பிரசூரிக்காதீர்கள் என்பது என் வேண்டுகோள். படித்து முடித்த பின் மனஉளைச்சல் தான் மிஞ்சுகிறது.

மற்றபடி, ’முறையீடு” சமீபத்தில் நீங்கள் எழுதிய உக்கிரமான கட்டுரைகளில் ஒன்று. எத்தனையோ இரவுகளில் இருட்டு சூழ்ந்த பரிபூரணத்தனிமையில் நீ இதே போன்று உள்ளுக்குள் சென்று ஒலித்த கதறல்களாலும் கேவல்களாலும் அழுததில்லையா என்ன?”, என்ற வரி வார்னிஷ் வீரபத்ரபிள்ளையின் கதறலாகவே எனக்கு கேட்டது. அருணாச்சலமும், ஜெயமோகனும் எப்படியோ தப்பிவிட்டார்கள்.

பின்னர் இரு கவிதைகளின் அனைத்து வரிகளும் திடீரென நினைவுக்குள் வந்தது.. ஒன்று, மனுஷ்யபுத்திரன் எழுதிய ‘கடவுளுடன் பிரார்த்தித்தல்’.. அதிலும், குறிப்பாக

நீ கைவிடப்படும்போதுதான்
உன் பிரியத்தின் கனல் எரியத் தொடங்குகிறது
பிரியமற்றுக் குளிர்ந்த ஒவ்வொரு கரத்தையும்
அந்தக் கனல் வெதுவெதுப்பாக்குகிறது


கைவிடப்படுதல் துக்கமல்ல
ஓரு நீண்ட கனவு தரும் களைப்பு

என்ற வரிகள். மற்றொன்று விஷ்ணுபுரத்தில் வரும் உக்கிரமான வரிகள்..

ஆயிரம் காகத் திரையை
செவ்வலகால் கிழித்து வந்து
என் முன் அமர்ந்து நொடுக்கும்
இவ்வெண் பறவையின் முன்
செயலற்று அமர்ந்திருக்கிறேன்.

எண்ணங்கள் மீது
கவிகிறது வெண்மை.
சஞ்சலங்கள் மீது
கவிகிறது வெண்மை.
இருத்தல் மீது
கவிகிறது முடிவற்ற வெண்மை..

இவ்விரு கவிதைகள் பேசும் தனிமையும், கைவிடப்படுதலும் தான் எத்தனை வித்தியாசமானவை. ஆனாலும், எத்தனை நெருக்கமானவை! அஜிதன் சென்று சேரும் செயலற்ற தனிமைக்கும், வீரபத்ர பிள்ளை அடையும் தனிமைக்கும் உள்ள வித்தியாசம் தான் என்ன? ஒன்றும் புரியவில்லை.. புரிந்தாலும், பயனெதுவும் இல்லை..

காலியான வானத்தின் கீழே மண்ணில் எல்லாமே தங்களை தங்கள் பொறுப்பில் வைத்திருக்க நேர்கிற பேரவலத்தை தாங்கமுடியாமல் உடைகின்ற என் நரம்புகள்.

சுடுகாட்டு சித்தனும், சீடனும் புழுதி படர்ந்த விஷ்ணுபுர வீதகளில் நடனமாடிச் செல்லும் காட்சியே ஞாபகம் வருகிறது..

ஆனால் தங்களை தங்கள் பொறுப்பில் வைத்து, மண்ணில் நன்கு அழுத்தி கால் ஊன்றி நிற்கும் குட்டப்பனுக்கும், ஸோர்பாவுக்கும் இவ்வகை அவலங்கள் இல்லையோ? இம்சைகள் அனைத்தும் கிரிதரன்களுக்கும், சங்கர்சணன்களுக்கும் தானோ?.. என்ன செய்வார்கள் அவர்கள்… ஒன்றும் புரியவில்லை…பேரவலம்தான். வேறென்ன சொல்ல.

-அர்விந்த்

அன்புள்ள அரவிந்த்

காந்தி எழுத்துக்கள் இன்று கிட்டத்தட்ட எழுபதாயிரம் பக்கங்கள் வரை வரும். மனிதர் எழுதிக்கொண்டே இருந்திருக்கிறார். கடிதங்கள் மூலம் இந்தியாவிடமே உரையாடியிருக்கிறார். அத்தனை பக்கங்கள் வழியாக காந்தி என்னதான் உரையாடினார், யாரிடம்?

அவர் தன்னிடம்தான் உரையாடியிருக்கிறார். அத்தனை தூரம் ஒருவரால் அவரிடம் மட்டுமே உரையாடிக்கொள்ள முடியும். நாமெல்லாரும் கணம்தோறும் அதைச் செய்துகொண்டிருக்கிறோம் அல்லவா?

தன்னை தன் முன் இருக்கும் வரலாறாக, தேசமாக ஆக்கிக்கொண்டு அதனுடன் தன் நம்பிக்கைகளை, ஐயங்களை, கோட்பாடுகளை விளக்கிக்கொண்டே இருந்தார் காந்தி.

இந்தக் கடிதங்கள் பலவும் எனக்குள் இருக்கும் ஐயங்களை நோக்கி விரல் நீட்டுகின்றன என்று எனக்கு படும். என்னிடம் தெளிவான பதில் உள்ளதா என நானே பார்க்கிறேன். பலசமயம் கேட்கப்பட்ட பின்னரே பதிலைக் கண்டுகொள்கிறேன்.

*

விஷ்ணுபுரத்தில் சித்தன் சீடனிடம் சொல்கிறார்’காசியபா சீடா, மண்மீதன்றி எதன் மீதும் நிற்க வேண்டாம். வான் கீழன்றி எதன் கீழும் நிற்கவேண்டாம்’ என

மிகக் கடுமையான சோதனை அது. அவ்வப்போது ஆழமான ஐயங்களால் வேட்டையாடப்படுவது. மனத்தளர்ச்சி அளிப்பது. பாதுகாப்பற்றவனாக கைவிடப்பட்டவனாக உணரச்செய்வது. கவித்துவம் அற்ற குரூரம் கொண்ட ஒன்று

ஆயினும் அதுவே உண்மைக்கு நெருக்கமானது

ஜெ

அன்புள்ள ஜெ

இந்த இணைப்பை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். நீங்கள் ,ராமகிருஷ்ணன், சாரு மூவரும் நாய்களைப்பற்றி எழுதியிருந்ததை ஒருவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்

http://www.saravanakumaran.com/2009/11/blog-post_15.html

சிவம்

அன்புள்ள சிவம்
நான் நாயைப்பற்றியும் எழுதவில்லை, என்னைப்பற்றியும் எழுதவில்லை. நான் எழுதியிருப்பதே வேறு

ஜெ

ஆசானே,

தேராபந்த் என்று ஒரு சமணப்பிரிவு இருக்கிறதாம். அதில் முக்கியக்குறிக்கோளே மற்றவர் வாழ்கையில் தலையிடாமல் இருக்கவேண்டும் என்பதுதானாம். உதாரணமாக ஒருவர் ஒரு பிளாட்பாரத்தில் உயிருக்கு இழுத்துக்கொண்டு தண்ணீர் தண்ணீர் என்று அனத்தினாலும் நம்மிடம் நல்ல நீர் இருந்தாலும், அவருக்குத் தரக்கூடாதாம். அவ்வாறு தவிப்பவர் அவருடைய கர்மக்கணக்கை தீர்த்துக்கொண்டிருக்கிறாராம். அவருக்கு நாம் இப்போது உதவினால் பின்னர் அவர் இதே வழியில் மற்றொரு நாள் தன் கர்மத்தை கழிக்க நேரிடுமாம். ஒரு இரண்டு மணிநேரம் இப்படியே அனத்திக்கொண்டிருந்தால் கர்மம் கழிந்துவிடுமாம். மொத்தமாக.
மேலும், தண்ணீரில் ஒருவர் அடித்துச்செல்லப்படுகிறார், காப்பாற்றுங்கள் என்று கத்துகிறார் என்றால், அவரை நாம் காப்பாற்றக்கூடாதாம். ஏனெனில், அவரது கர்மக் கணக்கு அப்படிக் கழிகிறதாம். அவரைக் காப்பாற்றி, பின் அவரது வாழ்கையில் அவர் செய்யும் பாவங்களில் நமக்கும் பங்கு உண்டாம். எனவே காப்பாற்றாமல் நம்வழியில் போய்க்கொண்டே இருக்கவேண்டுமாம்.
நல்லவேளை நீங்கள் உங்கள் அபிமான சமண மனதை இந்நிகழ்ச்சியின்போது இயக்கவில்லை. அந்நாய்க்கு தயிர்சாதம் கிடைக்காமலே போயிருக்கும். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலார் மனதை இயக்கிவிட்டீர்கள். நாய்க்கு தயிர்சாதம் லபித்தது.

நிற்க.

உங்கள் “முறையீடு” படித்தேன். ஒரு சாதாரண மனிதனால் மிகச்சுலபமாக கடந்துபோய்விடமுடிகிற ஒரு காட்சி ஒருவருக்கு எப்படிப்பட்ட உணர்வை தரமுடியும் என்பதை உங்களால் எழுதமுடிந்திருக்கிறது. ஊதும் சங்கை ஊதிவைப்போம் விடியும்போது விடியட்டும் என்பதுபோலத்தானே இந்த முறையீடுகளும். கருணை எனும் ஒன்றைவைத்து ஒரு பிரபஞ்சத்தையே உருவாக்கிவிடலாம். லோகி நிச்சயம் இதை சொல்லியிருப்பார். பிரபஞ்சத்தை இயக்கும் அந்தக் கருணை உங்களிலும் நிரம்பி வழிவது மகிழ்ச்சியே.

-ராம்


அன்புள்ள ராம்,

சில சமயங்களில் சில விஷயங்களில் நம் மனம் தீவிரமான சிலவற்றை அடையாளம் கண்டுகொள்கிறது. அதைத்தான் அகத்தூண்டல் இன்ஸ்பிரேஷன் என்கிறோம்

முன்பு நடந்த ஒரு நிகழ்ச்சியை தகழி அவரது சுயசரிதையில் சொல்லியிருக்கிறார். ஒரு வறியபிச்சைக்காரனுக்கு மூன்றுகாசுகள் பிச்சையிட்ட தோழரைப்பார்த்து மூத்த தோழர் சொன்னாராம். அந்தப்பிச்சைமூலம் நீங்கள் அவன் பிச்சைக்காரனாகவே இருக்க வழியமைக்கிறீர்கள். அதன் மூலம் அவன் கோபத்தை ஆற்றி புரட்சியை தள்ளிப்போடுகிறீர்கள்’ என

கோட்பாடுகளை எப்படி வேண்டுமானாலும் ஆக்கலாம். கருணையற்றதாக ஆக்குவது மிகமிக எளிது

ஜெ

தெருநாயும் பிராமணியமும்- தலைப்பைப் படித்துவிட்டு கண்ணில் நீர் வர சிரித்தேன். இருந்தாலும் குசும்பு கொஞ்சம் அதிகம் தான் உங்களுக்கு. உங்கள் பதில் இன்னும்…!!

ராம்னாட் க்ருஷ்ணன் என்று ஒரு பாடகர். அவர் யாரேனும் நெற்றியில் நாமம் போட்டுவந்தால் “நீங்கள் ஐயங்காரா?” என்று கேட்பார். அவர் ஆமாம் என்று சொன்னவுடன் இவரது பதில் “ஓ.அப்படியா? நாங்கல்லாம் ப்ராமனாள்..” என்பார். . :))

மீண்டும் மீண்டும் சிரிப்பு. அதேதான்.. அதேதான்.. இப்படியே இன்னும் கொஞ்ச தூரம்தான்…போனால் வந்துவிடும். என்ன காமெடி தலைவா இது. சும்மா தலையெல்லாம் சுத்துது. முதல் கடிதம் படித்ததும் கொஞ்சம் தலை சூடானது. இரண்டாவது கடிதம் படித்ததும் மொத்தம் வடிந்துவிட்டது. எல்லாமே அப்படித்தானோ?

இருந்தாலும் ஒரு கேள்வி. விசுவாசித்தல் என்பது நம்பிக்கையல்லவே? நம்பிக்கைகள் மாற்றிக்கொள்ளலாம். விசுவாசம் என்பது கேள்விகளற்ற, மாறாத நம்பிக்கை என்று சொல்லலாமா? நம்பிக்கைகள் தேவையில்லையென்றாலும் சிலவிஷயங்களை விசுவாசித்தல் என்பது தவறல்ல என்றே தோன்றுகிறது.

தெரியவில்லை.
-ராம்

*********

அன்புள்ள திரு. ஜெயமோகன்,

தங்கள் ‘இரு அழைப்புகள்’ கடிதங்கள் படித்து சிரித்தேன். நானும் (ரவூசுக்கு?) இதை தட்டச்சு செய்கிறேன்.

இந்தக்கட்டுரை மிருகத்தின் துயரத்தைப் பற்றியதா அல்லது உங்கள் வாழ்க்கை மற்றும் உங்கள் இன்றியமையாத தனிமையைப்பற்றியதா? உங்கள்

சொந்தமனத்தில் உள்ள சூனியத்தைப்பற்றியா?

உங்கள் கட்டுரையில் நாயின் ஓலத்தையும், தான் அறிந்த உலகம் பொய் என்று உணரும் மனிதனின் ஓலத்தையும் வைத்து அதன் மூலம் தெய்வீகத்தை நீங்கள் அணுகி இருப்பதில் அழகை கண்டேன். இருவரின் நிலைகளை விவரிக்கும் வரிகளில் ஒரு தேடலின் உக்கிரததை கண்டேன். அது உங்கள் ஆன்மீக தேடலா என்று எல்லாம் எனக்கு தெரியாது. அவரவர் அகம் அவரவர்ுக்கே வெளிச்சம்.

புனிதமான விஷயங்க¨ளைப்பற்றி உங்களிடம் ஒரு அ-ஹிந்து அணுகுமுறை உள்ளது. ஆகவே தான் உங்களுக்கு இந்த துயரம். வெறுமையும் அதன் துயரமும் ஒரு மனிதனின் சுய தேடுததலில் ஒரு கட்டம் ஆகாதா ?

தனி மனிதனின் மனத்தில் சமூகத்தால் விதைக்கப்பட்ட எண்ணங்களை நேர்மையுடன் களைந்தால் வருவதே சூனியம் தானே. இதில் என்ன அ-ஹிந்துவை கண்டு விட்டார்கள்? அதெல்லாம் பேசாமல் தான் எனது மதத்தை நான் பேண வேண்டுமோ ?

லோக், நீட்சே, ஹோப்ஸ், புரூதோன், டெகார்த்தே விடுங்கள். நான் கொண்டுள்ள உலகத்தின் சூனியத்தை எனக்கு காட்ட அந்த மேலை நாட்டு மேதைகள் வேண்டுமோ? எனது மரபை கொடை அளித்த என் மூதாதையர் போதாதா ?

ஆதி சங்கரர், நீ எனப்படுவது என்ன என்று உணர்ந்தால் ‘வேதமும் இல்லை…உறவினர் இல்லை… ‘ என்று ஏன் சூனியம் பற்றி பாட வேண்டும்? பஜ கோவிந்தததில், ‘உற்றார் உறவினர் எல்லாம் நீ பணம் சம்பாதிக்கும் வரை தான்’ என்று என் பாட வேண்டும்?

இதெல்லாம் ‘கடவுள் அற்ற இதயம்’, ‘எதையும் மதிக்க தெரியாதது’ என்று ஒதுக்கி வைக்க வேண்டாமா ? பிறகேன் ஒலி பெருக்கி கொண்டு தினமும் காலை இந்த செய்தியை MSS குரலில் பாட விடுகிறார்கள்?

——————-

என் போன அஞ்சலில் இருந்த இந்த பத்தியை கீழுள்ள வாறு சொல்ல விரும்புகிறேன் – ——————-

“ஆதி சங்கரரின் வரிகளில் சொல்லப்படும் உலகத்தின் வெறுமையை எல்லாம் ‘கடவுள் அற்ற இதயம்’, ‘எதையும் மதிக்க தெரியாதது’ என்று ஒதுக்கி வைக்க வேண்டாமா ? பிறகேன் ஒலி பெருக்கி கொண்டு தினமும் காலை இந்த செய்தியை ம்ஶ்ஸ் குரலில் பாட விடுகிறார்கள்?”

இதெல்லாம் ‘கடவுள் அற்ற இதயம்’, ‘எதையும் மதிக்க தெரியாதது’ என்று ஒதுக்கி வைக்க வேண்டாமா ? பிறகேன் ஒலி பெருக்கி கொண்டு தினமும் காலை இந்த செய்தியை MSS குரலில் பாட விடுகிறார்கள்?

இந்த மாதிரி கேள்விகள் எழாத மனத்தில் தான் ‘நறுமணம்’ கமழுமோ?

அந்த பாதிரியார் கடிதம் (அதை பற்றி எழுதா விட்டால் வேறு பட்டம் சூட்டி விடுவார்கள்!). திவ்வியமான அருளை அள்ளி பூசித்த பாதிரியார் ஏன் நம்மை பாதாளம் வரை தாள்த்ததும் எண்ணம் கொண்டுள்ளார் என்றும் புரிய வில்லை. பக்தி என்னுள் வந்தால் முதலில் அவர் மந்தைக்காக பிரார்த்தனை செய்வேன். ஏசு என்நல்ஆயன். ஊரில் பல பேருக்கு deputy-ஆயன் ஆவதில் உள்ள ஆர்வம் சகிக்க வில்லை.

பக்தியின் போர்வையில் இந்த இரு கடிதங்களில் நிறைந்திருந்தது வன்மம்.

சிரிப்புடன், கோகுல்

அன்புள்ள கோகுல்

விஜய் தொலைக்காட்சியிலே ஒரு அம்மையார் வந்து சொன்னார் .’’ஞானம் மனுஷாளுக்கு தேவையே இல்லே. அதெல்லாம் ஞானிகளுக்கு போரும். மனுஷா எந்த புஸ்தகத்தையும் வாஷிக்க வேண்டியதில்லை. வாஷித்தாலும் ஷாதாரண மனுஷாளுக்கு அதெல்லாம் ஒண்ணுமே புரியப்போறதில்லே. சொல்லப்போனா அவா பகவத்கீதையைக்கூட பாராயணம் பண்ணவேண்டியதில்லை. பேஷாம நாராயணான்னு அவன் காலடியிலே அப்டியே ஷாஷ்டாங்கமா விழுந்துட்டா போரும். எல்லாம் அவன் பாத்துக்குவான்…அவ்ளவுதான் வைஷ்ணவம்ங்கிறது’’

ரத்தினச் சுருக்கம்! நம் ஆட்களுக்கு இந்த உபன்னியாசம் ரொம்பவே பிடிக்கும். காலையில் நாராயணா என்று சொன்னபின் வேறு வேலைக்கு போகலாம் பாருங்கள். எல்லாவற்றையும் எளிமைப்படுத்திக் கொண்டபின்னரே மூர்க்கமான நம்பிக்கை சாத்தியம்.

ஜெ

முந்தைய கட்டுரைபண்டைய இந்தியாவில் பஞ்சம் இருந்ததா?
அடுத்த கட்டுரைபெரிய கட்டுரைகளைப்பற்றி-கடிதங்கள்