முழுமையறிவும் கென் வில்பரும்

பலவருடங்களுக்கு முன்னர்  சி.பி.ஸ்நோ எழுதிய கட்டுரை ஒன்றை நான் மொழியாக்கம் செய்தேன். அதில் அவர் அறிவியலையும், கலைகளையும் ஏதேனும் ஒருவகையில் இணைப்பதைப்பற்றிப் பேசியிருந்தார். அந்த எண்ணம் என் மனதை அப்போது வெகுவாக ஆட்கொண்டு பலகாலம் கூடவே வந்திருக்கிறது.

அறிவியல் தர்க்கத்தை அடிப்படை அலகாகக் கொண்டது. கலைகள் கற்பனையை அடிப்படை அலகாகக் கொண்டவை. அவை உலகையும் வாழ்க்கையையும் தங்கள் நோக்கில் காண்கின்றன. அவ்விரு நோக்குகளும் தங்கள் அளவில் வளர்ந்து பல எல்லைகளைத் தொட்டிருக்கின்றன. இந்த நூற்றாண்டில் மானுட அறிவு  துறைகள் சார்ந்து பிரிந்து அதி நுண்மைகளை நோக்கி வெகுவாகச் சென்றுவிட்டிருக்கிறது. ஒரு துறையின் அதி நுண்ணிய உண்மைகளை தொட்டு அறியும் வல்லமை கொண்ட ஒருவர் பிறிதொரு துறையின் அடிப்படைகளையே அறியமுடியாமல் இருக்கும் நிலை  உருவாயிற்று. இதன்மூலம் மானுட அறிவானது பயன்கருதி ஒரு புள்ளியில் தொகுக்கப்பட முடியாத நிலை உருவாகி விட்டிருக்கிறது என்கிறார் ஸ்நோ. இந்த காலகட்டத்தின் ஆகப்பெரிய அறிவார்ந்த நெருக்கடி இதுவே என்கிறார்.

உண்மை இன்று பலவாக பிரிந்து கிடக்கிறது. நிரூபணவாத உண்மை, நுண்கோட்பாட்டு உண்மை, நடைமுறை அனுபவ உண்மை என உண்மைகள் ஒவ்வொரு தளத்திலும் பிரிந்து சிதறி நமக்குக் கிடைக்கின்றன. மரபீனி அறிவியலாளர் ஒருவரிடம் அதன் அறம் பற்றி இன்று பேச முடியாது, அறவியலைப்பற்றியும் அதன் வரலாற்று பாத்திரம் பற்றியும் அவரால் புரிந்துகொள்ள முடியாது. நவீனக் கலை என்பது அதர்க்க நிலையையும் அருவ வெளிப்பாடுகளையும்  மேலும் மேலும் தேடிச்செல்வதன் வழியாக தன் புறவயத்தன்மையை இழந்து அறிவியலுடன் உரையாடுவதையே நிறுத்தி விட்டிருக்கிறது. விளைவாக நவீன மனிதன் அவனுக்குப் பயன்படாத  அறிவுகளின் பெருஞ்சுமையுடன் வாழும்படி செய்யப்பட்டிருக்கிறான்.

ஆழ்ந்த அவநம்பிக்கையுடன் இச்சிக்கலை பேசிய பின்நவீனத்துவம் இதை உலகமெங்கும் உள்ள சிந்தனையாளர்களுக்கு முன் உள்ள முக்கியமான வினாவாக ஆக்கியது. பின்நவீனத்துவத்தின் அறிவியல் நிராகரிப்பு [ இதை அது நிரூபணவாத எதிர்ப்பு என்றது] உருவாக்கிய அதிர்ச்சி மூலமே இச்சிக்கலை சிந்தனைத்துறை அழுத்தமாகப் புரிந்துகொண்டது. ஆனால் அதற்கு முன்னரே தத்துவத்துறையில் இச்சிக்கலை உணர்ந்துகொண்டிருந்தார்கள். மானுட அறிவு அனைத்தையும் தொகுக்கவும் மதிப்பிடவும்கூடிய ஒரு மையமான துறை பற்றிய தேடல் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே உருவாயிற்று.

ஆழ்ந்த நம்பிக்கையுடன் செய்யப்பட்ட இம்முயற்சியின் தொடக்கப்புள்ளிகளாக விட்ஜென்ஸ்டீன், பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் இருவரையுமே சொல்லவேண்டும். இருவருக்கும் உரிய பொதுத்தளம் இருவரும் மானுட அறிவு அனைத்தையுமே மொழி என்ற அமைப்புக்குள் நிகழ்பவையாக சுருக்க முடியும் என்று எண்ணினார்கள் என்பதே.  அதாவது ‘வாழ்க்கை ஒரு கனவு’ என்ற சொற்றொடரும் e=mc2 என்ற சூத்திரமும் மொழிக்குள் நிகழும் இரு நிகழ்வுகள் என்று பார்த்து ஆராயலாம். இவ்விருவருக்குள்ளும் ஆழமான வேறுபாடு உள்ளது. விட்ஜென்ஸ்டீன் மொழியின் அகவய இயக்கத்தை கவனித்தார். ரஸ்ஸல் மொழி என்ற புறக்கட்டுமானத்தை கருத்தில் கொண்டார்.

ஏறத்தாழ இக்காலகட்டத்தில் தர்க்கத்தை நுண்மையாக ஆக்கி அறிவியலுக்கும் உள்ளுணர்வுசார்ந்த அறிதல்களுக்கும் பொதுவானதாக ஆக்குவதைப்பற்றிய சிந்தனைகளை கார்ல் பாப்பர் போன்றவர்கள் மேற்கொண்டிருந்தார்கள்.

அதன்பின் இந்த தளம் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து மானுட ஞானம் அனைத்தையுமே குறிகளாகப் பார்க்க முடியும் என்ற நோக்கு வலுப்பெற்றது. மொழியே குறிகளினால் ஆன கட்டமைப்புதான் என்ற பிரக்ஞை. நவீன மொழியியல் , குறியியல் ஆகியவற்றில் உருவான உற்சாகம் உடனே மானுட ஞானம் அனைத்தையும் தொகுக்கும் ஒரு பொதுத்தளம் உருவாகிவிட்டதென்ற பரவசத்தை உலகமெங்கும் கல்வித்துறையில் உருவாக்கியது. தமிழகத்திலும் அது எதிரொலித்தது. தமிழவன், நாகார்ச்சுனன் ஆகியோர் எண்பதுகளில் அந்த அலையை இங்கே உருவாக்கினார்கள்.

எப்போதும்போல அகவய அறிதல்களில் நம்பிக்கை கொண்டவர்கள் இவற்றை ஆழ்ந்த ஐயத்துடன் மட்டுமே நோக்கி வந்தார்கள். ஓட்டுமொத்த குறியியலையும் கொண்டு ஒரு எளிமையான கவிதையை விளக்கிவிட முடியாது என்ற உண்மை அவர்கள் முன்பு இருந்தது. இம்முயற்சிகளின் முக்கியமான சிக்கல் என்னவென்றால் இவர்கள் அனைவருமே அகவய அறிதல்களை கொண்டுவந்து சேர்க்கும் ஒரு புறவய தளத்துக்காகவே தேடினார்கள். மொழிப்பரப்பு, குறியீடுகளின் பரப்பு என. ஆனால் அவர்கள் எத்தனை விளக்கினாலும் அவ்விளக்கங்களுக்கு அப்பாற்பட்ட ஒன்றாகவே மனிதனின் அகவய அறிதல் நின்றுகொண்டிருந்தது.

மானுட ஞானம் அனைத்தையும் ஒன்றாகத் தொகுக்கும் புள்ளியாக நரம்பியல் இக்காலகட்டத்தில் உருவெடுத்து இப்போதும் புகழுடன் இருந்துகொண்டிருக்கிறது. பிற தத்துவ அறிஞர்களால் நரம்பியல் குறைத்தல்வாதம் என்று சொல்லப்படும் இந்நோக்கை ரிச்சர்ட் ரீஸ்டாக் போன்றவர்களிடம் எளிமைபப்டுத்தப்பட்ட வடிவிலும் ராமச்ச்நதிரன், ஆலிவர் சாக்ஸ் போன்றவர்களிடம் மருத்துவத்தர்க்கபூர்வமாகவும் காண்கிறோம்.

அறிவியலுக்கும், கற்பனை உள்ளுணர்வு போன்ற அகவயமான அறிதல்களுக்கும் நடுவே உள்ள நெடுந்தொலைவை இணைக்கும் முதிராஅறிவியல்கள் [சூடோ சயன்ஸ்] இக்காலகட்டத்தில் பொங்கி வந்தன. ஃப்ரிஜோஃப் காப்ரா, காலின் வில்சன் ,லயால் வாட்சன் போன்று பலர் உருவாகி உலகப்புகழ்பெற்ற நூல்களை எழுதினார்கள். ஒருகட்டத்தில் நானே இத்தகைய பல நூல்களை மிகுந்த ஆர்வத்துடன் படித்தேன்.  ‘புரோக்காவின் மூளை’ என்ற தன் நூலில் கார்ல் சகன் அறிவியலில் உள்ள எந்த இடைவெளி இம்மாதிரி முதிரா அறிவியலை உருவாக்குகிறது என்று விளக்கியிருக்கிறார்.

அறிவியல் கண்டுபிடிப்புகளிலேயே உள்ளுணர்வால் மட்டும் தீர்மானிக்கப்படும் ஒரு இடம் உள்ளது என்கிறார் சகன். சராசரி அறிவியலாளர்களுக்கு இந்த இடம் இல்லை. அவர்கள் படிப்படியாகவே மேலே செல்வார்கள். ஆனால் பெரும் அறிவியலாளர்கள் உள்ளுணர்வின் மூலம், விளக்க முடியாத வகையில் சட்டென்று தாவி ஒரு இடத்தைச் சென்று அடைந்துவிடுகிறார்கள். இது அறிவியலிலேயே ஒரு மர்மமான இடமாக உள்ளது. தர்க்கமும் உள்ளுணர்வும் முயங்கும் ஒரு புள்ளி இது.  இந்த அம்சமே முதிரா அறிவியலை உருவாக்குகிறது. அறிவியலின் புறவய தர்க்கமுறையை தன் கற்பனைக்கு ஏற்ப வளைக்க முயல்வதன் விளைவு தான் முதிரா அறிவியல். இது அறிவியலும் உள்ளுணர்வும் இணையும் புள்ளியை கண்டடைந்துவிட்டதான பிரமையையும் பரபரப்பையும் எளிய வாசகர்களிடம் ஏற்படுத்துகிறது.

பிரிஜோ காப்ராவின் தாவோ ஆஃப் ஃபிஸிக்ஸ் வந்த காலத்தில் போர்ட்லண்ட் பல்கலையில் இருந்த நித்ய சைதன்ய யதி அந்நூலை நேரிலேயே காப்ராவுடன் விவாதித்து கடுமையாக நிராகரித்திருக்கிறார்.  முக்கியமான கடிதங்களும் எழுதியிருக்கிறார். இருவகை அறிதல்கள் நடுவே பொருந்தாத ஓர் இணைப்பை அவர் செயற்கையாக உருவாக்குகிறார் என்று நித்யா சொன்னார். இணைப்பு சாத்தியம்தான் என்றும், ஹென்றிபெர்க்ஸன் முதல்  நடராஜகுருவரை தத்துவஞானிகளுக்கு அப்படி ஒரு பெரும் கனவு இருந்தது என்றும், ஆனால் அது இத்தனை எளிய சமன்பாடுகளால் நிகழாது என்றும் நித்யா சொன்னார்.

உள்ளுணர்வின் அறிதல்களை, கலையிலக்கியங்களையும் தியானத்தையும் முற்றாக நிராகரிக்கும் அறிவியலாளர் உண்டு. அதிகமும் இவர்கள் தொழில்நுட்ப நிபுணர்கள். ஐன்ஸ்டீன் அப்படி நிராகரித்தவர் அல்ல. கணிசமான அறிவியலாளர்கள் நிராகரித்தது இல்லை.

தன்னுடைய புகழ்பெற்ற நூலான ‘காண்டாக்ட்’ ல் இந்த அம்சத்தை கார்ல் சகன் குறிப்பிட்டிருக்கிறார். கதாநாயகி நட்சத்திரங்களை அடைந்து பிரபஞ்ச எஜமானர்களாக திகழும் முன்னேறிய உயிர்களை சந்திக்கிறாள். தனக்கென தோற்றம் ஏதும் இல்லாமல் தூய பிரக்ஞையாக அவர்கள் இருந்த போதிலும் அவள் விரும்பிய வடிவில் அவளிடம் பேசவருகிறார்கள் அவர்கள். [தேவர்கள்!!] அவர்களுக்கு மனிதர்களின் எந்த அறிவியல் கண்டுபிடிப்பிலும் ஆர்வமில்லை. அவளுடைய கனவுகளைப் பற்றி மட்டுமே அவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.

இத்தளத்தில் நிகழ்ந்து வரும் இந்த தீவிரமான தேடலை ஒருகட்டத்துக்குப் பின் நான் தொடர்வதை நிறுத்திவிட்டேன். கொற்றவைக்கான வாசிப்பும் அதன் பின் அசோகவனத்துக்கான வாசிப்பும் ஒரு காரணம். மேலும் இந்த ஆய்வுகளின் தீவிரம் மிகக் கடுமையான உழைப்பை வாசகர்களிடம் கோரி நிற்பது. அதை அளிப்பது இலக்கியவாதிக்கு சாத்தியமானதல்ல.

http://kuranguththavam.blogspot.com/   என்ற இணைய தளத்தில் அரவிந்த் மானுட அறிவுகளின் முழுமைசார்ந்த இணைவுக்காக முயலும் அறிஞரான கென் வில்பரை விரிவாகவே அறிமுகம் செய்து ஒருகட்டுரையை எழுதியிருக்கிறார். தமிழில் இத்துறை சார்ந்த கலைச்சொற்கள் குறைவு என்பதும் இவற்றைப் பேசுவதற்கான முறைமையும் விவாத அமைப்பும் இன்னும் உருவாகி வரவில்லை என்பதும் இக்கட்டுரையில் பல வகையான குறைபாடுகளை உருவாக்கியுள்ளன என்றாலும் இத்தகைய கட்டுரைகள் தமிழில் எழுதப்படுவது என்பது மிக முக்கியமானதாகவே படுகிறது.

அறிவியல் ஆன்மீகம் மதம்: கென் வில்பரை முன்வைத்து!

முந்தைய கட்டுரையாழ்நிலத்துப்பாணன் -3
அடுத்த கட்டுரைதசாவதாரம் வைணவம்:ஒரு கடிதம்