சுவரில் முட்டி நிற்கும் மலையாள சினிமா.

நேற்று ஒரு மலையாளப்படம் பார்த்தேன். என் மனைவிக்கு தரமான மலையாளப்படம் என்றால் ஒரு மோகம். அப்படியே பிள்ளைகளுக்கும் தொற்றிக் கொண்டுவிட்டதனால் வீடெங்கும் மலையாளப்படங்கள். பிள்ளைகளும் மனைவியும் படம்பார்த்தே மலையாளம் பேசக் கற்றுக் கொண்டுவிட்டார்கள்.[ நான் மலையாளம் மறக்காமல் பார்த்துக்கொண்டேன்]

ஆனால் இந்தப்படம்…என்ன சொல்வது? பேரரசு ஒருகோடி ரூபாய் செலவுக்குள் ஒரு படமெடுத்தால் எப்படி இருக்கும்,அந்தவகை. அண்ணன்-தம்பி என்று படத்தின் பெயர். மம்மூட்டி இரட்டைவேடம். கோபிகா ஒரு ஜோடி. லட்சுமி ராய் இன்னொரு ஜோடி. படத்தைப்பற்றியோ கதையைப்பற்றியோ சொல்லப்போவதில்லை. மம்மூட்டி தோன்றும் முதல் காட்சியைப்பற்றி மட்டும் சொல்கிறேன். ஒரு எளியமனிதரை பொள்ளாச்சி சந்தையில் ரவுடிகள் போட்டு அடிக்கிறார்கள். அப்போது மம்மூட்டி லாரியில் வந்து இறங்குகிறார். ஒருவன் பறந்து வந்து லாரியில் விழ லாரிமேல் லோடு ஏற்றப்பட்டிருந்த பூக்கூடை அப்படியே கவிழ்ந்து ஸ்லோ மோஷனில் பூ அவர்மீது கொட்டுகிறது. விளங்குமா நாடு?

இரட்டை வேடத்தில் மம்மூட்டி. இரண்டுக்குமே சவால்கள். இரண்டுபேரும் மாறி மாறி டூப்புடன் ‘ஓவர்லாப்’ தவறுவது நன்றாகவே தெரியும்படிப் போடும்  சண்டைகள். குத்துப்பாட்டு. குட்டி ஆசாமிகள் ஹீரோவை புகழ்ந்து பேசும் ‘பஞ்ச்’ வசனங்கள். மேற்கொண்டு என்ன நடந்தது என்று தெரியவில்லை. தியேட்டரை விட்டு நானும் மனைவியும் தப்பி ஓடிவந்துவிட்டோம்.

வந்த சூட்டில் மலையாளசினிமாவில் எனக்குத்தெரிந்த நாலைந்து முக்கியமானவர்களைக் கூப்பிட்டு என் மனக்குமுறலைக் கொட்டினேன். அவர்கள் சொன்னதைக் கேட்டபோது கோபம் பரிதாபமாக மாறியது. முக்கியமான வினியோகஸ்தர், நாற்பது வருடமாக இந்த துறையில் இருப்பவர், புலம்பித்தள்ளிவிட்டார். சென்ற ஐந்தாறு வருடங்களாகவே மலையாள சினிமாவுக்கு அடிமேல் அடி. எந்தத் தொழில் துறையிலும் இத்தனை தொடர் தோல்விகளும் நஷ்டங்களும் தாங்கக் கூடியவை அல்ல. மலையாள சினிமா என்ற ஒன்று இன்னும் இருப்பதே சினிமா ஊடகத்தில் உள்ள ‘கிளாமர்’ காரணமாகத்தான்.

என்ன நடக்கிறது? மலையாள சினிமாவின் பரப்பு மிகவும் குறைவு. அதன் முதல்திரையிடலே 60 பிரதிகள்தான். மலைப்பகுதிகளில் இரண்டாம் ஆட்டத்துக்கு கூட்டம் இருக்காது. மழைக்காலத்தில் இரவுக்காட்சிகளே கூட்டம் சேராமல் ஓடும். கேரளத்தில் பெரும் பகுதி மழை ஓயாது பெய்யும் மலைக்கிராமங்கள். மேலும் கேரளத்தில் வளைகுடா பணத்தால் நடுத்தர வற்கம் பெருகியபடியே வருகிறது. இவர்கள் பொதுவாக திரையரங்குகளுக்கு வந்து படம் பார்ப்பதில்லை. வீட்டில் ஹோம் தியேட்டர் இருக்கும். ஆகவே படத்தின் ஒட்டு மொத்த வசூல் சாத்தியக்கூறு மிகமிக குறைவானதே.ஆகவே மிகக் குறைவான பட்ஜெட்டில்தான் மலையாளத்தில் படம் எடுத்தாக வேண்டும்.

மலையாள சினிமாவின் வலிமையே இந்த சிறிய அளவுதான் என்று சொல்ல வேண்டும்.ஆர்ப்பாட்டமான காட்சியமைப்புகள் மலையாள சினிமாவுக்குக் கட்டுப்படி ஆகாது. திரைக்கதை, நடிப்பு ஆகிய இரண்டை மட்டுமே நம்பி மலையாள சினிமா இயங்கியாகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது இதனால்தான்.  ஆகவேதான் மலையாளத்தில் தொடர்ச்சியாக ஏராளமான நல்ல திரைக்கதைகள் எழுதப்பட்டன. நுட்பமான பல நடிகர்கள் உருவாகி வந்தார்கள். மலையாள சினிமாவின் சாதனைகள் இந்த தளத்திலேயே. இந்திய சினிமாவில் மலையாள சினிமாவின் முக்கிய இடம் இவ்வாறு உருவாகி வந்ததேயாகும்.

அதாவது பட்ஜெட் காரணமாகவே மலையாள சினிமா யதார்த்ததில் நின்றது என்று சொல்ல வேண்டும். கடுமையான தணிக்கை உள்ள நாடுகளில் வணிக சினிமா இல்லாமல் போய் அதன் விளைவாக நல்ல சினிமா வளர்வதுபோல என்று இதைச் சொல்லலாம். மலையாள வணிக சினிமா எப்போதும் இருப்பதுதான்.  மலையாளத்தில் மூன்றுவகை படங்கள் உண்டு. மிகத்தரமான படங்கள். நடுவாந்தர படங்கள். தரைமட்ட வணிகப் படங்கள். மூன்றாம் வகைப் படங்களில் நசீர், ஜெயன், சோமன், மம்மூட்டி, மோகன்லால் அனைவருமே நடித்திருக்கிறார்கள். ஆனால் அங்கே அதிகமாக கவனிக்கப்படும் வெற்றிப் படங்கள் எப்போதுமே நடுவாந்தரப் படங்கள்தான். அங்குள்ள வெறும் மசாலா படங்கள் தரமற்ற ரசிகர்களுக்காக மிகக் குறைவான முதலீட்டில் எடுக்கப்பட்டு ஒருவாரம் ஓடினால் போதும் என்ற எதிர்பார்ப்புடன் வெளியிடப்படுபவை. அதாவது அங்குள்ள வணிகப்படம் நல்ல படங்களுக்கு போட்டியே அல்ல.

இந்தப்போக்கு எண்பதுகள் வரை வலுவாகவே நீடித்தது. எண்பதுகள் மலையாளப் படத்தின் பொற்காலம். எம்.டி.வாசுதேவன் நாயர், லோகித் தாஸ், பி.பத்மராஜன், ஸ்ரீனிவாசன், டெனிஸ் ஜோச·ப், டி.தாமோதரன், கலூர் டென்னிஸ், ஜான் பால் போன்ற தரமான திரைக்கதை ஆசிரியர்கள் எழுதிய படங்கள் தொடர்ந்து வெளிவந்து வெற்றிபெற்றன. பாலன்.கெ.நாயர், திலகன், மம்மூட்டி, மோகன்லால், பரத் கோபி, நெடுமுடி வேணு,டி.ஜி.ரவி, பாபு நம்பூதிரி ,  ஒடுவில் உண்ணி கிருஷ்ணன், ஜகதி ஸ்ரீகுமார்,முரளி போன்று மலையாள திரையுலகின் எக்காலத்திலும் சிறந்த நடிகர்கள் வந்தார்கள். ஐ.வி.சசி,பரதன்,ஜோஷி,கெ.ஜி.ஜார்ஜ்,சிபி மலையில்,மோகன், சத்யன் அந்திக்காடு,பாலசந்திர மேனன், கமல்  என சிறந்த இயக்குநர்கள் தொடர்ந்து படங்களை அளித்தார்கள். வசூலிலும் மம்மூட்டி, மோகன்லால் படங்கள் சாதனை புரிந்தன.

தொண்ணூறுகள் மலையாள சினிமாவின் சோதனைக் காலம். சட்டென்று நடுத்தர வற்கம் திரையரங்குகளுக்கு வருவது நின்றது. இது நடுத்தரப் படங்களை கடுமையாக பாதித்தது. கெ.ஜி.ஜார்ஜ், பரதன், மோகன், பாலசந்திரமேனன் போன்ற பல இயக்குநர்கள் தொடர் தோல்விகளுக்குப் பின் மெல்ல பின்வாங்கினார்கள். இந்த நெருக்கடியை மலையாள சினிமா இரு உத்திகள் மூலம் எதிர்கொண்டது. மோகன்லாலும் மம்மூட்டியும் ‘அடிதடி அதிமானுடர்களாக’  சித்தரிக்கப்பட்ட  ‘ஆக்ஷன்’ படங்கள் வெளியிட்டு அடித்தட்டு மக்களை மேலும் அதிகமாக திரையரங்குகளுக்கு கொண்டுவந்தார்கள். நகரங்களில் உள்ள திரையரங்குகளை நவீனப்படுத்தி நடுத்தர வற்கத்தை திரையரங்குக்குக் கொண்டுவந்தார்கள்.

ஆனால் இரண்டாயிரத்தில் இருந்து மீண்டும் நெருக்கடி முற்றியது. நகரத்து உயர்தர திரையரங்குகளை தமிழ் இந்தி ஆங்கில படங்கள் கைப்பற்றிக் கொண்டன. டிவிடியில் பார்த்தால் சுவைக்காத ‘மெகா’ படங்களுக்கே ரசிகர்கள் வந்தார்கள். மெல்லமெல்ல கிராமத்து திரையரங்குகளையும் தமிழ்ப்படங்கள் கையகப்படுத்தின.மம்மூட்டி மோகன்லாலின் ‘மஸில்’ படங்களுக்கு பழகிய ரசிகர்கள் அடுத்தகட்ட ரசனைக்கு இறங்கிச் சென்றார்கள். அவர்களுக்கு நவீன படமாக்கல் உத்திகள் தேவைப்பட்டன. ஆகவே இன்று கேரளத்தில் தமிழ்ப்படங்களே மிக விரும்ப்ப படுகின்றன. கேரளம் முழுக்க தமிழ் வணிகப்படங்கள் வெற்றிகரமாக ஓடுகின்றன.

‘அன்னியன்’ கேரளத்தில் நூற்றியைம்பது அரங்குகளில் வெளியாகி ஒரு உச்சகட்ட மலையாள வெற்றிப்படத்தைவிட நான்குமடங்கு வசூல் செய்தது. மணிசித்ரதாழ் வசூல் செய்ததைவிட சந்திரமுகி பலமடங்கு அதிக வசூல் செய்ததாகச் சொல்லப்படுகிறது. சிவாஜி, பில்லா எல்லாமே பெரும் வெற்றிகள். இப்போது ‘தசாவதாரம்’ அங்கே ஒரு பெரும் அறுவடையை செய்கிறது. இங்கே தோல்வியடைந்த ‘குருவி’ போன்ற படங்கள் கூட மலையாளத்தில் வெற்றிப்படங்களே.

நடுத்தர படங்களுக்கான ரசிகர்கள் மேலும் மேலும் குறைந்து அனேகமாக இல்லை என்ற நிலை. நடுத்தர படங்களின் ஆசிரியர்களான எம்.டி.வாசுதேவன்நாயர், லோகித் தாஸ் போன்றவர்கள் கடுமையான தோல்விகளுக்குப் பின் ஒதுங்கி விட்டார்கள். மம்மூட்டி மோகன்லால் போன்றவர்கள் அவ்வப்போது சில சராசரி வெற்றிகளுடன் தொடர் தோல்விகளை அளிக்கிறார்கள்.  திலீப் தோல்வியை மட்டுமே அளிக்கிறார். ஜெயராம் அரங்கிலேயே இல்லை. பிருத்விராஜ் உருவாகவே இல்லை. ஒருபோதும் தோல்வியடையாத ஸ்ரீனிவாசன் படங்கள் கூட தோல்வி அடைகின்றன. மிகக் குறைவான பட்ஜெட்டில் எடுப்பதனால் எப்போதும் நஷ்டத்தை தவிர்த்துவிடும் சத்யன் அந்திக்காட்டின் படங்களிலும் கணிசமானவை கவிழ்கின்றன. இதுவே இன்றைய நிலை.

இதற்கு என்ன செய்யலாம் என்று பல கோணங்களில் முயற்சி செய்கிறார்கள்.  சில விஷயங்கள் தெளிவாகவே கண்ணுக்குத் தெரிகின்றன.ஒன்று கேரளத்து இளையதலைமுறை மலையாளப் படங்களை தவிர்க்கின்றது. அவர்களின் ரசனை தமிழ் ‘ஹைடெக்’ படங்களிலேயே இருக்கிறது. அவர்களை இங்கே இழுக்க செய்யப்படும் முயற்சியே ‘அண்ணன் -தம்பி’ போன்ற படங்கள். அதாவது தமிழ்ப் படங்களையே மலையாளத்தில் எடுப்பது.

ஆனால் இத்தைய தமிழ்படங்கள் மலையாளப்படங்களைவிட மூன்று நான்கு மடங்கு பொருட்செலவில் எடுக்கப்படுகின்றன. பாடல்களும் சண்டைகளும் பல வாரங்கள் படப்பதிவு செய்யப்படுகின்றன. அவற்றில் மிக அதிகமாக ஊதியம்பெறும் நிபுணர்கள் பணியாற்றுகிறார்கள். எடுத்த படங்கள் லட்சக்கணக்கான ரூபாய் செலவில் டி.ஐ[ டிஜிட்டல் இம்ப்ரூவிங்] செய்யப்பட்டு சிறந்த வண்ண அமைப்புக்குக் கொண்டு வரப்படுகின்றன. சந்தையில் சண்டை போடுவதும் குத்துப்பாட்டும் அல்ல தமிழ் சினிமா, அந்த தொழில்நுட்ப தேர்ச்சிதான். அதை மலையாளப்படம் கனவுகூட காணமுடியாது. முப்பது நாள் படப்பிடிப்பு ,பத்துநாள் பின்தயாரிப்பு வேலைகள் என்று எடுத்தால்தான் மலையாளத்தில் கட்டுப்படியாகும் . இரண்டுநாளில் பாட்டும் ஒருநாளில் சண்டையும் உள்ளூர் ஆட்களை வைத்துக்கொண்டு எடுத்தால் அந்த லட்சணத்தில்தான் இருக்கும். குமட்டும்படியாக.

இன்னொரு வகை முயற்சி துணிந்து பொருள் செலவிட்டு இளைஞர்களை கவரும்படி அவர்களுக்கான கதைகளை எடுத்துப் பார்ப்பது. கமல் எடுத்த ‘கோல்’ அபப்டிப்பட்ட ஒரு முயற்சி. பெரும் தோல்வி. இளைஞர்களுக்கு அது அவர்களின் படமாக தெரியவில்லை. அப்படியானால் என்னதான் செய்வதென்று அறியாமல் உட்கார்ந்திருக்கிறார்கள். சினிமா மோகத்தால் படமெடுக்க வரும் புதியவர்களை நம்பியே பலரும் ஏதாவது செய்துகொண்டிருக்கிறார்கள். படம் ஊற்றிக் கொண்டதும் அவர்கள் மறைய அடுத்த கும்பல் வளைகுடாவிலிருந்து பணத்துடன் வருகிறது.

என்னிடம் பேசிய நண்பர் சொன்னது இது. மலையாளத்தில் உள்ள நடிகர்கள் இயக்குநர்கள் எழுத்தாளர்கள் அனைவருக்குமே வயதாகிவிட்டது. பெரும்பாலானவர்கள் கால்நூற்றாண்டுக்காலமாக திரையுலகில் இருக்கிறார்கள். முப்பதுநாற்பது படம்செய்துவிட்டார்கள். இனி அவர்களிடம் புதிதாக எதிர்பார்க்க முடியாது. தமிழில் புதியவர்கள் வந்தபடியே இருக்கிறார்கள். தமிழ் சினிமாவின் முகம் ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை முழுமையாகவே மாறிவிடுகிறது. கேரளத்தில் அப்படி இல்லை. மலையாள சினிமாவில் ஒல்லியான இளம்நடிகரே இல்லை. எல்லாருமே வயதாகி குண்டாக தொப்பையுடன் தான் இருக்கிறார்கள்.

புதியவர்கள் உள்ளே நுழையவே முடியாது.அதற்கு தடையாக இருப்பது அங்குள்ள சிண்டிகேட்டுகள்தான். நடிகர்கள்,தயாரிபபளர், இயக்குநர் என ஒருகுழு ஒருவருக்கொருவர் நட்புடன் தொடர்ந்து செயல்படுகிறார்கள். அப்படி ஒரு ஐந்து குழு இருக்கிறது மலையாளத்தில். அவர்களை விட்டு விட்டு வேறு படமுயற்சிகளைச் செய்ய எவருக்கும் அமைப்பு பலமும் இல்லை. திராணியும் இல்லை.  சென்ற சில வருடங்களில் கவனிக்கப்பட்ட ஒரே புதிய வருகை ‘காழ்ச்ச’ ‘தன்மாத்ர’ போன்ற படங்களை எடுத்த பிளெசி. இருபது வருடம் சினிமாவில் இருந்தபின் நாற்பத்தைந்து வயதில்தான் அவரது முதல் படத்தை அவர் அடைந்தார்.

இக்காரணத்தால் மலையாளப் படங்களின் கூறுமுறையும் காட்சியமைப்பும் மிகமிகப் பழகிப்போனவையாக உள்ளன. நவீன படங்களை தொடர்ந்து பார்க்கும் தலைமுறைக்கு அவை மிகவும் சலிப்பூட்டுகின்றன. ஒரு உதாரணம் நான் பார்த்த இந்தப்படம், அண்ணன் தம்பி. பல காட்சிகளில் இரு நிமிடத்துக்கும் மேலாக காமிரா அசையாமல் நிற்கிறது. நடிகர்கள்தான் அங்குமிங்கும் அலைந்து வசனம்பேசுகிறார்கள். தமிழில் பருத்தி வீரன் போன்ற படங்களில் ஒரு சிறு காட்சியில்கூட இருபதுக்கும் மேற்பட்ட படத்துளிகள்[ஷாட்] உள்ளன என்று சொல்கிறார்கள். மன்மதன் படத்தில் ‘என்னாசை மைதிலியே’ என்ற பாடலில் மட்டும் 300 படத்துளிகள். சினிமா மொழி அப்படி மாறிவிட்டிருக்கிறது.

இதே போல  மலையாளப்படங்களில்  பெரும்பாலான காட்சிகளில் ஒரு நிரந்தரமான ‘டெம்ப்ளேட்’ இருக்கிறது. ஒரு ஒட்டுமொத்த காட்சி, அதன் பின் தனித்தனி அருகாமைக் காட்சிகளிலும் நடு அளவுக் காட்சிகளிலும் வசனங்கள், மீண்டும் ஒரு ஒட்டுமொத்தக் காட்சி. அதேபோல ஒளியமைப்பு எப்போதுமே ஒட்டுமொத்த பொது வெளிச்சம்தான். தமிழ் படங்களில் சுவர்களிள் வழிந்தும் பொருட்களில் பிரதிபலித்தும் ஒளி பரவியிருக்கச் செய்ய ஒளிப்பதிவாளர்கள் எடுத்துக் கொள்ளும் கடும் உழைப்பும் கவனமும் அங்கே சற்றும் இல்லை. ஒருநாளைக்கு எட்டு காட்சிகளை எடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்து மலையாள சினிமா உருவாக்கிக் கொண்ட வழி முறை இது.

இப்போது மலையாளப்படங்களைப் பார்க்கும்போது அவை துணுக்குறச் செய்யும் அளவுக்கு பழைமையானவையாகத் தெரிகின்றன. மலையாளபப்டங்களில் ஊறி வளர்ந்த எனக்கே இப்படி இருக்கும்போது புதிய இளைஞர்கள் எப்படி உணர்வார்கள் என்பதை உணர முடிகிறது.

இவ்விஷயத்தில் இன்னும்  நுண்மையான ஒரு அரசியல் தளமும் உள்ளது. மலையாள கதாநாயக உருவகம் என்பது அங்கே நடந்த அரசியல் இயக்கங்களில் இருந்து உருவாகி வந்தது. துணிச்சலும் முரட்டுத்தனமும் நல்லியல்பும் கலந்த கதாநாயகர்கள். வேட்டியை மடித்துக்கட்டி காதில் பீடி வைத்து திமிராக நடப்பவர்கள்.  நெஞ்சில் கனல் எரியும் மனிதர்கள். சத்யன், மது போன்றவர்கள் வழியாக உருவாகி வந்த அந்த நாயக உருவகத்தை தகழி, உறூப், தோப்பில் பாஸி, டி தமோதரன் போன்ற முன்னாள் கம்யூனிஸ்டுகள் உருவாக்கினார்ர்கள்.

இன்றைய கேரள இளைய தலைமுறை அரசியல்மேல் அவநம்பிக்கை கொண்ட, நுகர்வு பண்பாட்டில் ஊறிய ஒன்று. இடதுசாரி அரசியல் கொண்ட தோல்வியில் இருந்து உருவாகிறது இந்த அம்சம். இன்று இளைஞர்கள் கொண்டாட விரும்புகிறார்கள். நகரங்களில் மட்டுமல்ல சிறிய பட்டணங்களில் கூட பப்புகளில் கூடும் இளைஞர் கும்பல் இதையே காட்டுகிறது.  ஆனால் அங்கே இன்னும் அதே பழைய கதாநாய்க உருவகங்களையே புதிய மொந்தைகளில் பரிமாறிக் கொண்டிருக்கிறார்கள்.

மலையாள சினிமா என்ன ஆகும்? இந்தப்பக்கம் புதிய புதிய உலகச்சந்தைகளை வென்று தமிழ் சினிமா பெரும் வணிக சாம்ராஜ்யமாக ஆகிக் கொண்டிருக்கிறது. கோடிகள் புரள்கின்றன. சினிமாவில் பணம் என்பது தொழில்நுட்பம். தொழில்நுட்பம் என்பது பணம். ஹாலிவுட் சினிமா ஐரோப்பிய சினிமாவை சாப்பிட்டது போல கோலிவுட் சினிமா மலையாள சினிமாவை இல்லாமல் செய்துவிடலாம். அவ்வப்போது வரும் சில ஆர்ட் படங்களாக மலையாள சினிமா சுருங்கி விடலாம்.

அல்லது சட்டென்று புதிய கருக்களும் புதிய கூறுமுறையுமாக புதிய தலைமுறை பொங்கி வரலாம். இது நடக்கவேண்டுமென்பதே விருப்பம்.

தசாவதாரம்

தசாவதாரம்:இருகடிதங்கள்

வெயிலுக்கு விருது

தமிழ் சினிமா: தொழில்நோக்கு தேவை

கனவுகள் சிதையும் காலம் – பாலாஜி சக்திவேலின் ‘கல்லூரி’
 

முந்தைய கட்டுரைதசாவதாரம் வைணவம்:ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைஇரு படைப்பாளிகள்