வெளியே செல்லும் வழி– 2

110854

ரோமின் மாபெரும் தேவாலயங்களினூடாக, அதிகார அடுக்குகளில் இருக்கும் வல்லமை மிக்க மனிதர்களின் வழியாக போன்·ப்ரே மானுவேல் இருவரும் கடந்து செல்கிறார்கள். அவிசுவாசம் தேங்கிய ஆத்மாக்கள் அவநம்பிக்கை நிறைந்த மனங்கள். ஒவ்வொரு இடத்திலும் அவர்களின் ஆத்மாவின் கோட்டைகளை தகர்க்கும் சொற்களை சொல்கிறான் மானுவேல்.

ரோமில் தங்கியிருக்கும் போது ஒருநாள் மானுவேல் காணாமலாகிறான். பின்னர் அவன் திரும்பும்போது மனப்பதைப்புடன் போன்·ப்ரே கேட்டார், ”எங்கே போனாய் குழந்தை? எங்கெல்லாம் தேடுவது?” ”நான் இந்த ரோமிலேயே விசித்திரமான ஓர் இடத்துச் சென்றிருந்தேன். அசிங்கமான இடம்.” ”எந்த இடம்?” என்றார் போன்·ப்ரே. ”புனித பீட்டர் தேவாலயம். அந்த மாபெரும் கேளிக்கை அரங்கை தவறுதலாக அவர்கள் தேவாலயம் என்று சொல்கிறார்கள்.”

போன்·ப்ரே அதிர்ச்சியடைந்து ”என்ன சொல்கிறாய்?” என்று கூவினார். ”ஆம். என் பிதாவின் தேவாலயத்தை னவர்கள் ஒரு வணிகத்தலமாக மாற்றிவிட்டார்கள். அங்கே அவர்கள் அவர் பெயரால் எதையெதையோ கூவி விற்கிறார்கள். நான் அந்த இடத்துக்கு வெளியே மனவலியுடன் நின்றிருந்தேன்”

அந்த முகத்தில் தெரிந்த தாங்கொணாத வலி கண்டு போன்·ப்ரே மனம் பதைத்தார். சட்டென்று தானறியாத ஒரு வேகத்தில் அவர் அவனருகே மண்டியிட்டார். ”குழந்தை உன் குரலில் உள்ள துயரம் என் நெஞ்சை உருக்குகிறதே…நீ யார்? எப்படி இந்தச் சொற்கள் உன் நெஞ்சில் எழுகின்றன…?”

”என் சொற்கள் உங்களுக்கு அச்சமூட்டுகின்றன. ஏனென்றால் அவை உண்மை” என்றான் மானுவேல். ”நான் உங்களுக்கு இந்த வாழ்க்கையில் சுமையாக ஆகலாம். அதை நீங்கள் சொன்னால் அக்கணமே நான் உங்களை விட்டு சென்றுவிடுவேன்…” போன்·ப்ரே கூவினார் ”…இல்லை…நீ ஒருபோதும் எனக்குச் சுமையாக ஆவதில்லை. நீ அருகிலிருக்கும்போது என் ஆத்மா உணரும் பேரின்பத்தை நான் எப்படிச் சொல்வேன்? நீ என் ஆத்மாவின் சிறகு அல்லவா?”

அன்ஜெலா தன் மகத்தான ஓவியத்தை நாள்கணக்காக இரவு பகலாக வரைந்துகொண்டிருந்தாள். அவள் அதன் வழியாக இன்னொன்றாக மாறிக் கோண்டிருப்பதுபோல அவள் காதலன் ·ப்ளோரியனுக்குப் பட்டது. அந்த ஓவியத்தை அவன் பார்க்க விரும்பினான். ஆனால் அவள் அதை அவனுக்கும் காட்டவிரும்பவில்லை. போன்·ப்ரேயிடம் பேசிக் கொண்டிருக்கும்போது அவள் மனநிறைவுடன் சொன்னாள், இன்னும் சிலநாட்களில் ஓவியம் முடிந்துவிடும் என்று. அதன் மூலம் அவள் தன் வாழ்க்கையின் உச்சமான உண்மை ஒன்றைக் கண்டடைந்துவிட்டாள் என்றாள். ·ப்ளோரியன் மனதுக்குள் இனம் புரியாத பதற்றம் பரவியது.

அன்றிரவு அனைவரும் சென்ற பின் மானுவேல் கையில் ஒரு விளக்குடன் மெல்ல நடந்து அன்ஜெலாவின் கலையறைக்குள் வந்தான். அந்த மூடப்பட்ட ஓவியம் முன் விளக்குடன் ஏறிட்டு நோக்கி சற்றுநேரம் நின்றான். அவன் முகம் விளக்கொளியில் இளம்புன்னகையுடன் சுடர்விட்டது. பின் அவன் அப்படியே பின்வாங்கி நடந்து மறைந்தான்.

அன்ஜெலாயிடம் அந்த ஓவியத்தைப்பற்றி போன்·ப்ரே பேச விரும்பினார். அவளுடைய முந்தைய ஓவியத்தை அவர் கண்டிருந்தார். அவள் அதைப்போன்ற ஒன்றை, பாவத்தின் சித்திரத்தைத்தான் வரைந்திருக்கிறாளா என்ன? ஆனால் அவள் அதை முதலில் ·ப்ளோரியனுக்கு மட்டுமே முதலில் காட்ட விரும்பினாள். ”·ப்ளோரியன்தான் முதல்…எப்போதும் எதிலும்…”காதல் கொண்ட பெண்களுக்கே உரிய போதையுடன் அவள் சொன்னாள். ”கடவுள்?” என்றார் போன்·ப்ரே. ”கடவுளுக்குப் பிறகு எனக்கு அவர்தான்” என்றாள் அன்ஜெலா.

அபேயை சபைநீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் முழுமைபெறும்போது அந்தச் செய்திவந்தது, அவரது மகனிடமிருந்து. அவர் அமைதியாக உயிர் நீத்தார் என்று. ஆனாலும் அவரை சபை நீக்கம் செய்யவேண்டுமென திருச்சபை அதிகரிகள் விரும்பினார்கள்.

திருச்சபையின் தூதர் ரூவன் நகருக்கு நேரில் சென்று ·பேபியனைப் பார்த்தார்கள். அவன் அம்மா கண்ணீருடன் சொன்னாள். ”தயவுசெய்து இனியும் எங்களை தொந்தரவுசெய்ய வேண்டாம். நாங்கள் வேண்டிய அளவுக்கு அனுபவித்துவிட்டோம்… எங்களை மோசடிக்காரர்கள் என்கிறார்கள். அந்த வயோதிகருடன் சேர்ந்துகொண்டு நாங்கள் சதி செய்கிறோம் என்கிறார்கள்” பின்னர் அந்த குடும்பமே எங்கிருக்கிறது என்று தெரியாமல் மறைந்துவிட்டது.

கடைசியில் போப்பாண்டவரிடமிருந்தே போன்·ப்ரேக்கு நேரடி சந்திப்புக்கு அழைப்பு வந்தது. மானுவேலையும் அழைத்துவரவேண்டும் என்று. அவன் ஏதேனும் சொல்லிவிடுவானோ என்று போன்·ப்ரே அஞ்சினார். ”குழந்தை நாம் காணப்போவது யாரை என்று அறிவாயா?” என்றார். ”ஆம் அறிவேன். கிறிஸ்து இறந்து பல ஆண்டுகளுக்குப் பின் அவரது மாணவரான பீட்டர் என்பவரால் உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பை நிர்வாகம் செய்யும் மனிதர் அவர். பீட்டர் என்பவர் கிறிஸ்து வாழ்ந்த காலத்திலேயே அவரை ஒவ்வொரு சொல்லையும் பொதுமக்கள் முன் மும்முறை நிராகரித்தவர்..நான் அப்படித்தான் கேள்விப்பட்டேன்…”

போன்·ப்ரே பீதியுடன் ”குழந்தை இவற்றை நீ தயவுசெய்து அவர் முன் சொல்லக்கூடாது…எனக்காக” போன்·ப்ரே மன்றாடினார். ”அவர்கள் என்னைப் பார்க்கத்தானே சொல்லியனுப்பினார்கள்? நான் நானாகத்தானே இருக்கவேண்டும்? நான் என் பிதா என்னிடம் எதைச் சொல்லச் சொல்கிறாரோ அவற்றைச் சொல்லுவேன்…” போன்·ப்ரே உடல் ஓர் உலுக்கு உலுக்கியது. அவனை தன்னால் கட்டுப்படுத்த முடியாதென அவர் அப்போது முழுமையாக உணர்ந்தார். அவன் அச்சமற்றவன். தடைகள் அற்றவன்.

அவர்கள் உலகின் மிகப்பெரிய அரண்மனையை அடைந்தார்கள். கார்டினல் தன் அதிகாரபூர்வ சரிகை அங்கியையும் தொப்பியையும் அணிந்திருந்தார். அவர் அருகே ஒரு மெல்லிய காற்று போல மானுவேல் வந்தான். ஒருகணம் அவருக்கு அவன் மட்டுமே அந்த மாளிகைக்குள் நுழைவதுபோன்ற பிரமை எழுந்தது. மோரெட்டி அவர்களை உள்ளே அழைத்துச் செல்லும்போது சொன்னார் ”இன்றே அந்த சபைநிராகரிபபளனாகிய அபேயின் வழக்கை முடித்துவிட போப்பாண்டவர் விரும்புகிறார்”

”அவரது வழக்கு முடிந்துவிட்டது. அவர் இப்போது இல்லை”என்றார் போன்·ப்ரே. ”அப்படியா? அது ஒருவேளை அவரது நாத்திகனாகிய மகன் அளித்த பொய்ச் செய்தியாக இருக்கலாமோ?” என்றார் மோரெட்டி. ”நாம் அவரை இறந்தவராக கருதினால் எப்படியானாலும் அந்த வழக்கு முடிந்துவிட்டதே”. மோரெட்டியால் ஆத்திரத்தை அடக்க இயலவில்லை. அவரது சடலத்தை அல்லது புதைகுழியை சபைநீக்கம்செய்யவேண்டும் என்று கொதித்தார்.

”அவனை நீங்கள் மன்னித்தது தவறு…” என்றார் மோரெட்டி. ”அவன் செய்த பாவங்கள் கொடூரமானவை. அவன் திருச்சபையை இழிவுபடுத்தினான்”. ”பாவிகளை மன்னிப்பது தவறா என்ன?” என்றான் மானுவேல். ”கேள்விகள் கேட்கும் வயது இன்னும் உனக்கு ஆகவில்லை. இந்த அரண்மனையின் வாசலுக்குள் உன்னைப்போன்ற சிறுவர்களை விடுவதில்லை…” என்றார் மோரெட்டி. ”நீங்கள் மனம் திரும்பி குழந்தைகளைப்போல ஆகாவிட்டால் விண்ணுலகுக்குள் நுழைவதில்லை’ என்றல்லவா ஏசு சொன்னார்?”என்றான் மானுவேல்

சினமடைந்த மோரெட்டி சீறினார் ”இதெல்லாம் நீங்கள் கற்பித்ததுதானா? கேட்கப்படாத இடங்களில் விவிலியத்தை மேற்கோள் காட்டும் இந்த அசட்டுத்துணிச்சல்?”. ”நான் அவனுக்கு ஏதும் கற்பிப்பதில்லை. அவன் எங்கிருந்து கற்றான் என்றே நான் அறியவில்லை…” என்றார் போன்·ப்ரே பதற்றமாக. ”இல்லை. இதற்கு ஒருவகை மனப்பழக்கம் தேவை. இப்படி பைபிளை சொல்வதற்கு. எந்த உரையாடலில் அது சொல்லப்பட்டது எப்படி அதை விளக்குவது என்ற இறையியல் ஞானமே இல்லாமல் வெறுமே பைபிளைச் சொல்லிக் கொண்டிருப்பது…”

”புரிகிறது. அச்சொற்களை கிறிஸ்துவின் சொற்களாகச் சொல்ல கூடாது. இப்போது அவை இறையியலின் முடிவில்லாத விவாதங்களின் சொற்றொடர்கள் மட்டுமே. இல்லையா?” என்றான் மானுவேல்.

”கிறிஸ்துவின் சொற்கள் அவரது மாணவர்களால் முன்வைக்கப்பட்டவைதானே” மோரெட்டி கேட்டார். ”ஆம். ஆனால் அவர் திருச்சபையை உருவாக்கவில்லை. அவர் எண்ணியது ஓர் உலகளாவிய சகோதரத்துவத்தை உருவாக்க மட்டுமே. அவர் பன்னிரு மாணவர்களை மட்டும் நம்பினார். அவர்கள் அனைவருமே அவரது நெருக்கடி நேரத்தில் அவரை முற்றிலும் கைவிட்டார்கள். பின்னர் அவர் உயிர்த்தெழுந்தாரென அறிந்தபோது அந்த அற்புதத்தின் நிழலில் நின்று அவரது சொற்களைச் சொல்ல ஆரம்பித்தார்கள். தங்கள் சொற்களையும் சேர்த்துக் கொண்டார்கள்….’

மோரெட்டி கூவினார் ”இந்தச் சிறுவனை ஏதோ தீய ஆவி பீடித்திருக்கிறது!” ஆனால் கார்டினல் போன்·ப்ரே அமைதியாக அந்தக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்தார்.

அவர்கள் போப்பாண்டவரின் மாபெரும் வரவேற்பறைக்குள் நுழைந்தார்கள். முதுமையால் ஒரு மெழுகுச்சிலைபோல ஆகிவிட்டிருந்த போப்பாண்டவர் சக்கரவர்த்திகளே வியக்கும் ரத்தினங்கள் பதித்த பொற்சிம்மாசனத்தில் தளர்ந்து ஒடுங்கி அமர்ந்திருந்தார். உலகையே ஆண்ட வைரக்கிரீடம் அவரது நெற்றிக்குமேல் ஒளிவிட்டது. அவரது பதற்றம் கொண்ட பழுத்த கண்கள் தடுமாறிவந்து மானுவேலைக் கண்டன. ஒருகணம் அவை வியந்தன. பின் பீதியும் குழப்பமுமாக அவனையே நோக்கின. அவனை விட்டு கண்களை நீக்கவே அவரால் இயலவில்லை.

”அபேயின் சபைமறுப்பைப் பற்றி உங்களிடம் கேட்க விரும்புகிறேன்…”என்றார் போப்பாண்டவர் தளர்ந்த குரலில். ”பிதாவே நான் ஒரு உண்மை கிறித்தவனிடம் என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ அதை மட்டுமே செய்தேன்…”என்றார் போன்·ப்ரே. ”தன் பாவங்களை அறிக்கையிட்டு மன்னிப்பு கோரிய அம்மனிதரை நான் மன்னித்தேன்.. அவருக்கு தண்டனை தர இனி இறைவனால் மட்டுமே முடியும்…அவர் இறந்துவிட்டார்.”

போப்பாண்டவர் நடுங்கும் குரலில் ஆத்திரத்துடன் ”…இறந்துவிட்டாரா?” என்றார். ”அவர் கடும் தண்டனைகளில் இருந்து தப்பிவிட்டார். ஆனால் மேலுலகில் அவருக்கு இன்னும் தண்டனை காத்திருக்கிறது…” அவரது கண்கள் மீண்டும் மானுவேலை நோக்கி திரும்பின. ”இந்தச் சிறுவன்…”

அதுவரை பின்னால் நின்றிருந்த மானுவேல் முன்னால் நகர்ந்து ”நான் இங்கிருக்கிறேன்…” என்றான். போப்பாண்டவர் திடுக்கிட்டார். மோரெட்டி முன்னால் நகர்ந்தார்.” உங்கள் சிறுவனுக்கு நீங்கள் மரியாதைகளைக் கற்றுத் தருவதில்லையா? புனித தந்தையின் முன் எப்படி மண்டியிடுவதென அவன் அறியமாட்டானா என்ன?”

”நான் எந்த மனிதர் முன்னும் மண்டியிடுவதில்லை…” என்றான் மானுவேல். ”மண்ணில் எவரையுமே பிதாவென்று சொல்லாதிருங்கள். ஏனென்றால் உங்கள் பிதா சொர்க்கத்தில் இருக்கிறார்’ என்றல்லவா விவிலியம் சொல்கிறது? ”அவன் போப்பாண்டவரின் காலடிகளை நெருங்கிச் சென்றான் ”உங்களை நான் புனித தந்தையே என்று அழைக்க வேண்டுமா என்ன? நீங்கள் புனிதரா? நீங்கள் தந்தையா? ஏனென்றால் மண்ணில் எவருமே புனிதருமல்ல தந்தையுமல்ல…”

போப்பாண்டவர் தன் சிம்மாசனத்தின் கைகளை இறுகப்பற்றினார். அவரது உதடுகள் துடித்தன. தலை நடுங்கியது ”உன் பெற்றோர் யார்?”என்றார். ”அது எனது ரகசியம். அதை கார்டினல் கூட அறியமாட்டார்” என்றான் மானுவேல். ”போன்·ப்ரேயின் குற்றத்துக்கு இதுவே சான்று” என்றார் போப்பாண்டவர். ”இந்தப்பையன் ரூவனில் நடந்ததாகச் சொல்லப்படும் அற்புதத்துக்குச் சான்று அல்லவா? அதை அவனறிவானா?” ”ஆம், அறிவேன்…”என்றபடி மானுவேல் முன்னகர்ந்தான். ”அங்கே நடந்தது அற்புதம் அல்ல”

”ஆ! இவனே சொல்கிறான். அற்புதமல்ல!” என்று போப்பாண்டவர் கூவினார். ”ஆமாம். அற்புதமல்ல. அதுவும் இயற்கையின் அழியாத விதிதான். அதும் ஓர் அன்றாடச் செயல்பாடுதான். அன்பு அனைத்தையும் நிகழ்த்தும். கேளுங்கள் தரப்படும் என அதை விவிலயம் சொல்கிறது…” என்றான் மானுவேல்.

”இந்தச் சிறுவன் நம்மை ஏளனம் செய்கிறன்” என்று போப்பாண்டவர் உறுமினார். ”அவன் தன் எஜமானனைக் காப்பாற்ற எண்ணுகிறான். அவனுக்கு என் அதிகாரத்தைப்பற்றித் தெரியவில்லை!”

”உங்கள் அதிகாரம் என்ன?” என்று கேட்டபடி மானுவேல் நெருங்கிச் சென்றான். ”நீங்களும் நம்பவில்லையா? பிரார்த்தனையின் வல்லமையைப்பற்றி உங்களுக்கும் ஐயம்தானா? நீங்கள் பிரார்த்தனை செய்வதுண்டா? அந்தரங்கமான முழுநம்பிக்கையுடன் ஒருமுறையாவது விண்ணைநோக்கி நீங்கள் கையேந்தியதுண்டா? கடுகளவேனும் நம்பிக்கை இருந்தால் நீங்கள் மலைகளையே விலகைச்செல்ல வைக்கமுடியுமே…கண்ணீருடன் ஒரு ஆத்மா பிரார்த்தனை செய்தபோது ஓர் ஏழைச்சிறுவன் குணமடைந்ததில் என்ன அற்புதம் இருக்கக் கூடும்? ”

அந்தச்சிறுவனின் முன் எப்போதும் அடையும் மனப்பிரமையை அடைந்தவர்களாக மோரெட்டியும் பிறரும் பிரமித்து நின்றார்கள். கார்டினல் போன்·ப்ரே கண்ணீருடன் அமர்ந்து பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தார். அந்தத்தருணம் ஒரு நாடகக் காட்சி போலிருந்தது. சிம்மாசனத்திலிருந்த முதியவர் உயிரற்று உதிரமற்று வெளுத்த ஒரு எகிப்திய மம்மி போலிருந்தார். அவர் முன் பொன்னொளிரும் தலைமுடியும் நீலச்சுடர்விழிகளுமாக நின்ற சிறுவன் அந்தச் சவப்பெட்டிமீது வந்திறங்கிய வானத்து தேவன் போலிருந்தான். உயரத்துச் சாளரம் வழியாக வந்த வெயில்கற்றை சிறுவனின் தலையை தொட்டு அதை தழல்போல எரியச் செய்தது.

”நீங்கள் என்னை அழைத்தீர்கள், அதனால் நான் வந்தேன்” என்றான் மானுவேல். ”சொல்லுங்கள் நீங்கள் இங்கே என்ன செய்கிறீர்கள்? இந்த அரண்மனையில் எல்லா வாசல்களையும் சாத்திவிட்டு தன்னந்தனிமையில் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்? வெளியே ஒரு முழு உலகமே ஆறுதலுக்காகக் காத்து நிற்கிறதே. உங்கள் காலடியில் கோடானுகொட்டி செல்வங்கள் பயன்படாமல் குவிந்து கிடக்கையில் வெளியே லட்சோபலட்சம் ஏழைகள், பசித்தவர்கள், போராடுபவர்கள், செத்துக்கொண்டிருப்பவர்கள் உங்கள் கையருகே தங்களுக்கு உதவாத கடவுளைச் சபித்தபடி வாழ்கிறார்களே. சகமனிதர் அபாயத்திலிருக்கையில் பாதுகாப்பாக ஒளிந்து கொண்டிருக்கிறீர்களா என்ன? சக்கரவர்த்திகள் தங்கள் பொற்சிம்மாசனங்களில் அமர்ந்து தங்கள் தீயசெயல்களுக்கான தண்டனையை எதிர்நோக்கி நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிவீர்களா?. இன்று ஒவ்வொரு கணமும் இவ்வுலகின் இதயத்துடிப்பு ஒவ்வொன்றும் தாளமுடியாத வலியால் ஆனதாக இருப்பதை அறிவீர்களா? அறிந்தபின்னும் ஆறுதலுக்கு கைநீட்டாமல் இங்கே அமர்ந்திருக்கிறீர்கள் நீங்கள்… எத்தனை பரிதாபகரமானது…” அவன் குரல் முழங்கியது ”என்னுடன் வெளியே வருவீர்களா?”

போப்பாண்டவரின் ஆட்கள் அவர்களின் உறைநிலையிலிருந்து மீண்டு மானுவேலைநோக்கி நகர முயல அவர் கைநீட்டி அவர்களை தடுத்தார். தன் முன் விளக்கவொண்ணா பேரெழிலுடன் நின்ற அச்சிறுவனின் முகத்தையே அவர் வெறித்து நோக்கினார். ”உன்னுடன் வெளியே வருவதா? உன்னுடனா?” அவரது குரல் கிசுகிசுப்பாக ஒலித்தது.

”ஆமாம், என்னுடன் வெளியே வாருங்கள்…”என்றான் மானுவேல் ”…வெளியே வந்து செயிண்ட் பீட்டரின் தேவாலய மாபெரும் வாசலில் முடமானவர்களும் கண்ணிழந்தவர்களும் கைவிடப்பட்டவர்களும் குவிந்துகிடப்பதைப் பாருங்கள். அவர்களைத் தொட்டு அவர்களுக்காக ஜெபித்து அவர்களை குணப்படுத்துங்கள். உங்களால் முடியும். உங்களால் முடிந்தாகவேண்டும். நீங்கள் அதற்கு முயலவேண்டும். பசித்தவர்களின் மெலிந்த கரங்களில் பணம் போடுங்கள். துயரத்தால் இருண்ட உலகத்தின் மூலைகளுக்கு என்னுடன் வாருங்கள். அவர்களுக்கு ஆசியளியுங்கள். மன்னர்களின் அவைகளுக்கு சாமானியனாக வந்து நில்லுங்கள் என்னுடன். கிரீடங்களுக்குக் கீழே புருவங்கள் அச்சத்தாலும் கவலைகளாலும் நெளிவதைக் காணுங்கள். வெல்வெட் பட்டு உடைகளுக்குள் இதயங்கள் உடைந்து நொறுங்கியிருப்பதைக் காணுங்கள். உங்கள் பணி ஆறுதல் அளிப்பதே, கண்டிப்பதும் தண்டிப்பதுமல்ல. சிம்மாசனம் உங்களுக்குத் தேவையில்லை. பேரரசுகள் உங்களுக்கு வேண்டாம். இவ்வுலகின் அதிகாரங்கள் எதுவுமே தேவையில்லை. கிறிஸ்துவின் பணியாளர்களுடன் இணைந்து எளியவர்களில் எளியவர்களுடன் இணைந்து வாழ்வதே போதும் உங்களுக்கு. ஆர்ப்பாட்டம் தேவையில்லை. பொதுப்பிராத்தனைக் கூட்டங்கள் வேண்டியதில்லை. திருவிழாக்கள் தேவையில்லை. உங்கள் உளத்தூய்மையை மட்டுமே நீங்கள் அணிந்திருந்தால் போதும்! அப்போது உங்களை ஆண்டவன் இன்னும் நேசிப்பான். அப்போது இந்த கடும் போர்க்களத்தில் அஞ்சாமல் நீங்கள் முன்னேற முடியும். கொலைக்குப் பதிலாக சகோதரத்துவத்தை முன்னெடுக்க முடியும். வெளியே செல்லுங்கள். முன்னேற்றங்களை வரவேற்று நில்லுங்கள். அறிவியலை கையிலெடுங்கள். அறிவை ஊக்கப்படுத்துங்கள். ஏனென்றால் அவையெல்லாமே ஆண்டவனின் பரிசுகள். ஆண்டவனின் எல்லா கொடைகளுமே புனிதமானவை. கிறிஸ்து வாழ்ந்தபடி வாழுங்கள். நேரடியாகவும் வெளிப்படையாகவும் இதயத்திலிருந்து மக்களிடம் பேசுங்கள். அவர்களை நேசியுங்கள். அவர்களிடம் இரக்கம் காட்டுங்கள். அவர்களின் சுகதுக்கங்களில் பங்கு கொள்ளுங்கள். அவர்களின் குழந்தைகளை ஆசீர்வாதம் செய்யுங்கள். நீங்கள் உங்களை நிராகரித்துக் கொள்ளுங்கள். நீங்கள் உங்களைச் சிறையிட்டுக்கொண்டு வாழும் இந்த குளிர்ந்துறைந்த ஆலயத்தை ஏழைகளின் சரணாலயமாக மாற்றுங்கள்” மானுவேல் சொன்னான் ”என்னுடன்வெளியே வாருங்கள்!”

”என்னுடன் வெளியே வந்து செத்துக்கொண்டிருக்கும் முதியவர்களுக்கு உங்கள் கரங்களால் சேவை செய்யுங்கள். அப்போது நீங்கள் இளமை பெறுவீர்கள். இந்த நகைகள் பட்டுகள் அரண்மனைகள் புனித பீட்டரின் ஆலயம் அனைத்தையும் கைவிட்டுவிடுங்கள். அனைத்தையும் அவை தேவைப்படும் ஏழைகளுக்கு அளித்துவிடுங்கள். உங்களுக்கு அவை தேவையில்லை. உங்களுக்குத் தேவைப்படுவதெல்லாம் இவ்வுலகத்தையே தழுவி விரியும் பெரும் கருணை மட்டுமே. உலகின் ஒரு பகுதி மீது மட்டும் அல்ல. உலக மக்களின் ஒரு சாரார் மீது மட்டுமல்ல. அனைவர் மீதும். உங்களை வெறுப்பவர் மீதும். உங்களை நிராகரிப்பவர் மீதும். நீங்கள் கிறிஸ்துவின் செய்தியை உலகுக்கு அளிப்பவரென்றால் சிலுவையன்றி எதனாலும் பாதுகாக்கப்படாதவராக வெளியே இறங்குங்கள். நோயாளிகளை குணப்படுத்துங்கள், தொழுநோயாளிகளை சுத்தம் செய்யுங்கள் செத்தவர்களை எழுப்புங்கள் பேய்களை துரத்துங்கள். உங்கள் பையில் ஒரு துளியேனும் தங்கமோ வெள்ளியோ செம்போ இருக்கலாகாது. உங்கள் இருப்பாலேயே உலகுக்குச் சொல்லுங

முந்தைய கட்டுரைகாடு – ஒழுக்கத்துக்கு அப்பால்…
அடுத்த கட்டுரைவெளியே செல்லும் வழி – 1