சுனாமிப் பேரழிவும் பேரழிவு அரசியலும்: அனுபவக் குறிப்புகள்

சுனாமி தாக்கிய இரண்டாவதுநாள் நான் மனம் சரியில்லாத நிலையில் ஒருநாள்முழுக்க அர்த்தமில்லாமல் சுற்றிக் கொண்டு சாப்பிடாமல் இருந்தேன். என்னைச் சந்திக்க வந்து சென்ற கேரளநண்பர்கள் என்ன ஆனார்கள் என்ற ஐயம். அவர்கள் முட்டம் செல்லவில்லை, போலீஸ் தடுத்துவிட்டமையால் நேராக திருவனந்தபுரம் சென்று விட்டார்கள், நன்றாக இருக்கிறார்கள் என்ற தகவல் மூன்றுநாட்கள் கழித்துதான் கூப்பிட்டுச் சொன்னார்கள். எனக்கு குழப்பம் ஏற்படுத்தியதை அவர்கள் பதற்றத்தில் மறந்துவிட்டார்கள்.

*

மூன்றாம்நாள்முதல் அனேகமாக தினமும் நான் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்பு தொடர்பான பணிகளுக்கானச் சென்றேன். என்ன செய்தேன் என்பதை பதிவுசெய்ய விரும்பவில்லை, எழுதும் வலிமை எனக்கிருப்பதனால் நான் செய்தவை பதிவாகி பல்லாயிரம் பேரின் உழைப்பும் அர்ப்பணிப்பும் பதிவாகாது போய்விடுவது நியாயமல்ல. நான் செய்தது ஒப்பீட்டளவில் மிகக் குறைவும்கூட . பொருட்களை கணக்குவைத்து கொண்டுசேர்ப்பது வண்டிகளின் வழிகாட்டியாக கூடப்போவது போல மிக மேலோட்டமானது .

*

நான் சென்ற பகுதிகள் தக்கலை வட்டாரத்தைச்சேர்ந்த கடலோரப்பகுதிகள். முட்டம் கடியபட்டினம், அழீக்கல், குளச்சல் . அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதிகளும் இவையே.

நான்செல்லும்போது பிணம் தேடும்வேலைகள் மும்முரமாக நடந்துகொண்டிருந்தன. கத்தோலிக்க சர்ச்சின் பாதிரியார்கள் தலைமையில் மீனவ இளைஞர்களே முதன்மையாக களத்தில் இருந்தார்கள். கூடவே சீருடை அணிந்த ஆர் எஸ் எஸ் தொண்டர்கள். சேவாபாரதியின் பாட்ஜ் அணிந்த ஆர் எஸ் எஸ் காரர்கள். குளச்சல்பகுதியில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத் தொண்டர்கள். அப்போது பார்த்த பிணங்களெல்லாம் அதிகமாக சேதமடையாமல் ஈரமாக உயிருடனிருப்பதுபோலத்தான் இருந்தன. இந்த மும்மதக் கூட்டணி மிகுந்த ஒற்றுமையுடன் வேலைசெய்வதைக் கண்டேன். என்னுடன் வந்த அதிகாரி ‘பதினைந்து நாள் இந்த ஒற்றுமை நீடிக்குமா ‘ என்று கிண்டலாகக் கேட்டார்.

*

சேதம் கடற்கரையின் அமைப்பை ஒட்டியது. உதாரணமான மேல முட்டத்தில் அதிக சிக்கல் இல்லை. அது உயரமான இடம். கீழ முட்டம் அலைகளில் அடிவாங்கியது. முட்டம் முதல் குளச்சல் வரையிலான பகுதிகளின் அமைப்பு பொதுவாகவே மனித வாழ்க்கைக்கு உகந்தது அல்ல. கடல். கடற்கரையை ஒட்டி குடியிருப்பு. அதன் பிறகு முந்நூறுவருடம் முன்பு வெட்டப்பட்ட ஏவிஎம் [அனந்த விக்டோரியா மெமோரியல்] கால்வாய். அது முன்பு திருவனந்த்புரத்துக்கு தோணிகளில் நெல் கொண்டுசெல்லும் வழியாக இருந்தது. 100 வருடம் முன்பே தூர்ந்து போய் பெரிய சேற்றுக்குழியாக உள்ளது. அதன் பிறகு கடற்கரையோரச் சாலை. அதன் பிறகு அடர்ந்த தென்னந்தோப்புகள். அதற்குள் தேங்காய்மட்டையை ஊறப்போடும் சதுப்புக் குழிகள் .

சுனாமி கடலோரக்குடியிருப்புகளை மனிதர்களுடன் அள்ளி அப்படியே சுருட்டி சதுப்புக்குழிகளில் செருகிவிட்டது. 700 க்கும் அதிகமான சடலங்களை இக்குழிகளிலிருந்தே எடுத்தார்கள்.

நான்காம்நாள்தான் சேற்றிலிருந்து சடலங்கள் எடுக்கப்பட்டன. சடலம் காலில் கயிற்றைக் கட்டி அப்படியே இழுத்து எடுத்து கரையில் கூட்டி போட்டிருப்பதை ஒரு கணம் பார்த்தேன். மனித சடலங்களுக்கு ஒரு மரியாதையை நாம் எப்போதுமே அளிப்போம். இங்கே எதுவுமே இல்லை. தலைமாடு கால்மாடாக தாறுமாறாகக் கிடந்தன. ஆண் பெண் கலந்து. அரை நிர்வாணமாக. ஊதி உப்பி தோல் உரிந்து . குறிப்பாக குண்டான பெண்களின் மேல்தொடைகளும் ஆண்களின் தொப்பைகளும் நம்பமுடியாதபடி பெரிதாக ஊதியிருப்பது அசப்புப் பார்வைக்கு துணுக்குறச்செய்வது.

மனம் குமையவைப்பவை குழந்தை உடல்கள். நாம் கொஞ்சி முத்தமிட்டு மகிழ்ந்த குண்டுக்கால் கைகள் குட்டித்தொப்பைகள் .அவற்றைப் பார்ப்பது ஒரு தகப்பனின் நரகம்.

*

மீட்புப் பணியில் மிகத்தீவிரமாக இருந்த பையன்கள் பலர் 20க்குள் வயதுள்ளவர்கள். பல த மு மு க பையன்களை சிறுவர்கள் என்றே சொல்லலாம். கைகளில் பாலிதீன் கவர்களை சுற்றிக்கட்டிக் கொண்டு அழுகிசொட்டும் உடல்களை துணிப்பொட்டலங்களில் கம்பில் துக்கிச்சென்றார்கள். இம்மாதிரி கடுமையாக வேலைசெய்யும்போது சீக்கிரத்தில் துக்கம் பின்னுக்குபோய் வேலை ஆட்கொள்கிறது. அவர்கள் சாதாரணமாக இருந்தார்கள்.

*

இப்பணியில் முனிசிப்பல் தோட்டிகளின் வேலை மகத்தானது. கடுமையாக அர்ப்பணிப்பு உணர்வுடன் அவர்கள் உழைப்பதைக் கண்டேன். ஆனால் அவர்கள் மற்றவர்களைப்போலன்றி எந்தவிதமான பாதுகாப்பு முறைகளும் இல்லாமல் வெறும்கை வெறும் கால்களுடன் வேலைசெய்தார்கள்.

*

நான் முகாம்களுக்குப் போனபோதுதான் ஆட்கள் வர ஆரம்பித்திருந்தனர். மரணத்தால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் ஒரு வகை, அஞ்சி ஓடிவந்தவர்கள் இன்னொருவகை. இரண்டாம் வகையினர் புகார்செய்து சளசளவென்று பேசிக் கொண்டிருந்தவர்கள் . எல்லாரையும் அப்பெண்கள் சரமாரியாகத் திட்டினார்கள்.

*

பல அதிகாரிகள் பொறுப்பே இல்லாமல் நிலைமை புரியாமல் இருந்தார்கள்.நான் கேட்கவே ஒரு அதிகாரி மீனவ மக்கள் அவரை மதிக்கவில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தார்.. அதிகாரிகள் ஊருக்கு வந்தால் ஆட்கள் வந்துமரியாதையுடன் சூழ்ந்து உபசரிப்பது போல எவரும் செய்யவில்லை என்று அவருக்கு மனக்குறை. பிரச்சினை என்னவென்றால் அதிகாரிகள் வேறுவழி இல்லாமல் கடற்கரைக்கு வந்தார்கள். தாழ்ந்தநிலை ஊழியர்கள் வரவில்லை. அதிகாரிகளுக்கு வேலை ஏவிமட்டுமே பழக்கம். பல இடங்களில் இவர்கள் தன்னார்வக் குழு ஆட்களை அதட்டி அதிகாரத்தொனியில்பேசி அவர்களால் அவமானப்படுத்தப் பட்டிருக்கிறார்கள்.

*

கன்யாகுமரி அருகே ஒரு மருத்துவமுகாமுக்குப் பொறுப்பாக அனுப்பபட்டிருந்த எட்டுபேர்கொண்ட மருத்துவக்குழு நேராக அந்த வாகனங்களை எடுத்துக் கொண்டு கன்யாகுமரிக்கு சுற்றுலாபோல சென்றுவிட்டார்கள். ஒரு பெண் டாக்டரும் உண்டு. அமைச்சர் தளவாய் சுந்தரம் அவர்களை தேடிப் பிடித்தபோது கன்யாகுமரியில் மதில் மீது அமர்ந்து பேசி சிரித்துக் கொண்டு இருந்தார்களாம். அமைச்சர் தளவாய் சுந்தரம் சஸ்பெண்ட் செய்தார். இது சுனாமி நடந்த மூன்றாம் நாள் — செவ்வாய் அன்று நடந்தது. எல்லா முகாம்களிலும் அடிபட்டவர்கள் குவிந்து கிடக்கும்போது. இதுதான் சாதாரண அரசு ஊழியர்களின் மனநிலை. அந்த ஊழியர்களை ஒன்றுமே செய்ய முடியாது. இந்த டாக்டர்களை அவர்கள் சார்ந்துள்ள தொழிற்சங்கம் கண்டிப்பாக பாதுகாக்கும். நியாயமான சங்கம் என்றால் அவர்களை அதுவும் சேர்ந்து கண்டிக்கவேண்டும். இந்தியாவில் அப்படி இதுவரை நடந்ததே இல்லை.

*

வருவாய்துறையில் ஊழியர்போதவில்லை. வேறு அரசு துறை ஊழியர்களை கட்டாயப்படுத்தி நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடுத்தக் கூடாது என்று எதிர்ப்புதெரிவிக்கப்பட்டது என்று தெரியவந்தது.

*

அரசு தரப்பிலிருந்து மிகப்பெரிய தவறு பஸ்களை நிறுத்தியது. சுனாமி அடித்த ஞாயிற்றுக்கிழமை ஏராளமான மக்கள் டிக்கெட் எடுக்காமல் பஸ்களில் எறி தப்பி ஓடினார்கள். அவர்கள் வழக்கப்படி ஆத்திரத்தில் சில பஸ்கள் மேல் தாக்கியதாகவும் சொன்னார்கள். உடனே நேசமணி போக்குவரத்து நிர்வாகம் எல்லா கடலோர பஸ்களையும் ரத்துசெய்துவிட்டது. செவ்வாய்கிழமைவரை எதுவும் ஓடவில்லை. அது உருவாக்கிய சிக்கல் சாதாரணமல்ல. ஆட்கள் வெளியேறுவது மிகமிக கஷ்டமாகப்போயிற்று எல்லா வண்டிகளையும் ஆட்கள் கைகாட்டி கெஞ்சிக் கொண்டிருந்தார்கள். இம்முடிவை யார் எடுத்தது என்று தெரியவில்லை.

*

வியாழன், வெள்ளிக்கிழமையன்று சேற்றிலிருந்து மட்கிய சடலங்களை எடுத்தார்கள். கிழிந்த உடல்கள். கடுமையான நாற்றம். அப்போது பொக்லைன் இயந்திரங்கள் வந்து ஏவிஎம் கனாலை அள்ள ஆரம்பித்தனர். இன்னமும் அள்ளிக் கொண்டிருக்கிறார்கள். ஒரே சேற்றுமலை. அந்த கனாலுக்குள் ஏராளமான வீட்டுச்சாமான்கள். எவர்சில்வர் அண்டாக்கள் நிறைய. அப்பகுதி மக்களுக்கு குடிநீர் பிரச்சினை உண்டு. வீட்டுக்குள் தண்ணீர் பிடித்துவைக்கும் பாத்திரங்கள் அவை .அவை சப்பி கிடப்பதைப்பார்த்தால் அலையின் வேகம் தெரியும். இப்போதுகூட பல பீரோக்கள் அதில் கிடக்கின்றன.

*

வீடுகள் போரில் குண்டுபோட்டதுபோல இடிந்து கிடக்கின்றன. படகுத்துண்டுகள் இரு கிமீ தூரம்கூடதாண்டிவந்து கிடக்கின்றன. கான்கிரீட் கூரைகளும் சுவர்களும் உடைத்து வீசப்பட்டுள்ளன.

*

ஞாயிற்றுக்கிழமை மதுரையிலிருந்து நண்பர் சண்முகசுந்தரம் பொருட்களுடன் வந்தார். அவற்றை ஒப்படைத்தோம். அப்பகுதிகளுக்குப் போனபோது வீடு உடையாதவர்கள் மீண்டுவந்திருப்பதைக் கண்டோம். ஏவிஎம் கனால் தூர்வாரப்பட்டு முடியவில்லை. ஆனாலும் பிணம் அழுகிய நாற்றம் கடுமையாக அங்கே உள்ளது

*

இச்சம்பவத்தில் மனதைப்பாதித்தவை தமிழக அரசியல் சமூகச்சீரழிவுகள் வெளிப்பட்ட விதம். முக்கியமாக இரு திராவிடக்கட்சிகளும் நடந்துகொண்ட முறை.

அரசு இயந்திரம் வழக்கம்போல மிகமிக மெத்தனமாகவே இருந்தது. அதை இயங்கச்செய்ய அரசியல்வாதிகள் நேரடியாக களத்தில் இறங்கவேண்டும். பாண்டிச்சேரியில் முதல்வர் ரங்கசாமி வேட்டியை மடித்துக்காட்டிக் கொண்டு களத்தில் இருந்தார். கேரளத்தில் உம்மன்சாண்டி முழுநேரமும் கடற்கரையில் தனியாக அலைந்தார். அப்படி திடார் விசிட் இருந்தால் அதிகாரிகள் அஞ்சுவார்கள்., வேலை செய்வார்கள். ஒழுங்காக வேலைசெய்யாத ஆலப்புழை கலக்டரை ஸ்தலத்திலேயே சஸ்பெண்ட் செய்தார் உம்மன் சாண்டி. கேரளத்திலும் பாண்டிச்சேரியிலும் வேலைகள் சிறப்பாக நடந்தன

தமிழ்நாட்டில் ஜெயலலிதா அரசிபோல ரதகஜ துரக பதாதிகளுடன் இறங்கி முன்னரே வகுக்கப்பட்ட பாதையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரை கண்டு பேசி வாக்குறுதிவழங்கிவிட்டு அரண்மனைக்கு மீண்டார் . நாகர் கோவிலில் அவர் வருவதற்காக அசிசி வளாகத்தில் செயற்கையாக மருத்துவமுகாம்களை உருவாக்கி அவர் போனதுமே கலைத்துவிட்டார்கள் என்று பிஷப் லியோன் தர்மராஜ் வெளிப்படையாகவே டிவியில் குற்றம்சாட்டினார். அமைச்சர் தளவாய்சுந்தரம், எம்பி பெல்லார்மின் ஆகியோர் மிகவும் அர்ப்பணிப்புடன் இருந்ததாகச் சொன்னார்கள். நான் இருமுறை அவர்களை பாதிக்கப்பட்ட இடங்களில் பார்த்தேன்.

*

சன் டிவி மீண்டும் மீண்டும் ஒருவாரமாக அரசு செயலிழந்துவிட்டது என்று சொல்லிக்கொண்டே இருக்கிறது. எளிமையான கேள்வி சன் டிவி நாளெல்லாம் காட்டும் மத்திய அமைச்சர்கள் ‘பார்வையிட்டதை ‘ தவிர இதுவரை செய்தது என்ன என்பது. இன்னும்கூட உரியமுறையில் மத்திய அரசு உதவிகளை அறிவிக்கவில்லை. முறையாக ‘இது தேசியப்பேரழிவு ‘ என்ற அறிவிப்பும் அதற்கான நிதியும் வரவில்லை.

இந்த விஷயத்தில் சன் டிவியின் நோக்கமே இதை அதிமுகவுக்கு எதிராக திருப்புவது மட்டும்தானா என்ற எண்ணம் ஏற்படுகிறது. விளம்பரங்களை செய்திகள் நடுவே அள்ளித் திணிப்பது புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் என சன் டிவி அப்படியே சுனாமியைக் கொண்டாடுகிறது. இது சுனாமி வாரம் என்று ஒரு நண்பர் சொன்னார்

*

இந்த விஷயத்தில் மனதை மிக மிக பாதித்த விஷயம் மீட்புக்கு உடனே களமிறங்கியவர்கள் மூன்றுமத அமைப்புகளைச்சேர்ந்தவர்கள் என்பது. சாதாரண மாநாட்டுக்குக் கூட நான்குலட்சம் பேரைக்கூட்டும் திமுக ஏன் சில நூறு தொண்டர்களைக் கூட அனுப்ப முடியவில்லை ? மதிமுகவின் களநடைபோடும் சீருடைத் தொண்டர்கள் எங்கே ? எந்த அரசியல் கட்சியும் வியாழன்வரை என் கண்ணுக்குப் படவில்லை. ரஜினி ரசிகர்கள், விஜயகாந்ந்த் ரசிகர்கள், அஜித் விஜய் ரசிகர்கள் எவரும் இல்லை . தமிழ்நாடு முழுக்க இதுதான் நிலைமை என்றுதான் என் நண்பர்கள் அனைவருமே சொன்னார்கள். செய்தித்தாள்களும் ஜூனியர் விகடன் போன்ற இதழ்களும் அதையே பதிவுசெய்தன. இப்போது நிறைய வாசகர்கடிதங்களும் இதை குறிப்பிடுகின்றன . மாறாக அமிர்தானந்தமயி , ஜக்கி வாசுதேவ், ரவிசங்கர் தொண்டர்கள் களத்தில் இருந்தார்கள். ஏன் அரசியலால் மக்களை தூண்ட முடியவில்லை ? ஏன் மதம் அதை செய்ய முடிகிறது ?

*

சன் டிவி தமிழக அரசை குறை சொன்னதே, திமுக தலைவர்கள் தங்கள் தொண்டர்கள் ஒருலட்சம் பேருடன் களமிறங்கியிருந்தால் அது எவ்வளவு பெரிய இமேஜ்ஐ உருவாக்கியிருக்கும்! கோடிக்கணக்கான ரூபாய் செலவில் நடத்தும் நூறு மாநாடுகளுக்கு அது சமம் அல்லவா ? வை. கோபால்சாமி செய்திருக்கலாமே ? அவருக்கு சீருடைப்படை உண்டே ? அடுத்த தேர்தலுக்குக் கூட அது பெரிய உதவியாக இருக்குமே. ஏன் செய்யவில்லை ? சன் டிவி தொண்டு நிறுவனங்கள் களத்தில் உள்ளன என்று பொதுவாக சொல்லியபடியே இருந்தது. அவையெல்லாம் மத நிறுவனங்கள் என்று சொல்லவில்லை.

*

இடதுசாரி அமைப்புகள் மிக மிகப் பிந்தி நிதிவசூல் என்ற அளவில் பணிகளை செய்ய ஆரம்பித்துள்ளன. அவை முக்கியமே. இடதுசாரிகள் அதை ஓரளவு செய்யவும் முடியும். அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. இடதுசாரி கட்சிகளின் அடிபப்டைக் கட்டுமானம் தொழிற்சங்கம் சார்ந்தது. தொழிற்சங்க ஈடுபாடு உடையவன் என்ற முறையில் அரசு ஊழியர்கள் போன்றவர்களை ‘motivate ‘ செய்ய இயலாது என நான் உறுதியாக அறிவேன்.தலைவர்கள் ஆத்மார்த்தமாக செயல்படுவார்கள் அவ்வளவுதான், டி மணி பெல்லார்மின் போல. தொழிற்சங்கங்கள் அவற்றில் உள்ள வெள்ளைக்காலர் மனிதர்களை பிணம்தூக்க சொல்ல முடியாது .

*

நான் கண்டது இருக்கட்டும். சுனாமி தாக்கிய சிலநாட்களில் வந்த செய்திகளை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு பார்க்கலாம். கத்தோலிக்கர்களை தவிர்த்தால் ஆர் எஸ் எஸ் , முஸ்லீம் முன்னேற்றக் கழகம் ஆகியவை முக்கியமாக களத்தில் இருந்தன. அவர்கள்தான் உயிரைப் பணயம்வைத்து பிணம் தூக்கியவர்கள். அது தினத்தந்தி , தினமலர் , இந்து போன்ற நாளிதழ்களில் பதிவாகியுள்ளது. பெரும்பாலான பொதுவான புகைப்படங்களிலேயே சீருடை அணிந்த ஆர் எஸ் எஸ்காரர்களையும் தொப்பி அணிந்த த .மு. மு.க காரர்களையும் காணலாம். [எங்குமே முதல் மூன்று நான்கு நாள் தெளஹீத் பேரவையைக் காணவில்லை. அதாவது அவர்களது பிரிவினைக்குப் பின் தொண்டர்கள் த மு முகவிடமே உள்ளனர். அவ்வமைப்பில் பிளவு என்பது ஊடக உருவாக்கமே]

ஆனால் சிலநாட்களில் செய்திகள் வடிகட்டப்பட ஆரம்பித்தன. ஆர். எஸ். எஸ், த .மு. மு. க பெயர்கள் முற்றாக தவிர்க்கப்பட்டது. தொண்டு நிறுவனங்கள் என்றே எல்லாரும் பொதுவாகச் சொன்னார்கள். நகரப்பக்கத்தில் உள்ளூர் நிருபர் தற்செயலாக இவர்களைப்பற்றி ரிப்போர்ட் செய்கிறார். முக்கிய பக்கங்களில் அதன் ஆசிரியர்கள் வெட்டி விடுகிறார்கள். [ இப்போதும் சேவாபாரதி களத்தில் முகாம்களுடன் தீவிரமாக உள்ளது. ]

காரணம் நம் இதழ்களின் ஆசிரியப்பொறுப்பில் இடதுசாரிகள் அதிகம்பேர் இருப்பதே. உதாரணமாக வியாழனன்று நான் குளச்சலில் இருந்து அலுவலகம் போனேன் .சங்கு என்ற இதழ் வந்திருந்தது. அதன் அட்டையில் ஞாநியின் ஒரு மேற்கோள். எந்த மத அமைப்பும் எவருக்கும் எந்த நன்மையும் செய்ய முடியாது என்று அவருக்கு மகாஉறுதி இருப்பதாக சொல்லியிருந்தார் . நான் கோபத்துடன் சிரித்துவிட்டேன். இவர் தினமணி ஆசிரியராக இருந்தால் இப்போதுள்ள செய்திகள் எப்படி வடிகட்டப்பட்டிருக்கும் திரிக்கபப்ட்டிருக்கும் என ஊகிக்கலாம். தகவல்களை இவர்கள் விரும்பியபடி செய்திகளாகச் சமைப்பார்கள் ,அவ்வளவுதான்.

இந்த அனுபவம் எனக்குக் காட்டியது ஒன்றையே. நாம் வாசிக்கும் செய்தி கள உண்மைகளுக்கு தொடர்பே இல்லாத சிலரால் மேஜைமீது வைத்து அவர்களின் நோக்கங்களுக்கு ஏற்ப உருவாக்கபடுவது. இந்தக் கடலோர மக்களுக்கு இன்று கத்தோலிக்கச் சர்ச் அப்பாவின் இடத்தில் இருக்கிறது. அரசியல்வாதிகளை — அவர்கள் முற்போக்கினராக இருந்தாலும்– அவர்கள் நம்பியிருந்தால் நடுத்தெருதான் .

ஞாநி அவரது இந்த மெய்ஞானத்தை எப்படி அடைந்தார் ? ஒரு மூத்த சிந்தனையாளன் தன் பத்துவரியை அப்படியே பிரசுரிக்கமுடியாத ஊடகச்சூழல் இங்கு உள்ளது. [பார்க்க காலச்சுவடு]அது இதுபோன்ற மேஜைஞானிகளால் கட்டுப்படுத்தப் படுகிறது. மிக மிக அபாயகரமானது இது

இம்மாதிரி விஷயங்களை இணையத்தில் ஓயாது வாய்ச்சண்டைபோடும் நமது முற்போக்காளர் எப்படிப் பார்ப்பார்கள் என்ன சொல்வார்கள் என்று தெரியும். ஆனாலும் இதைச் சொல்லியாக வேண்டியிருக்கிறது.

*

நம் அரசியல்வாதிகள் களத்துக்கு வருவதை இருமுறை கண்டேன். ஏராளமான கார்கள் சூழ மன்னர்கள் போல வந்து இறங்கி சிலரிடம் மிக தோரணையான விசாரணையை செய்கிறார்கள். கூடவே டிவி குழு. மொத்தமே கட்சிக்காரர்கள் ஏற்பாடு செய்யும் நாடகம். அமைச்சர் ஒருவர் வருவதற்கு முன் அதற்கேற்ப ஆட்களை த்யார் செய்வதை, கூட்டம் கூடி நிற்பதை நானே கண்டேன். இதில் சோகம் என்னவென்றால் வருகிற ஒவ்வொருவரும் கலெக்டர் வலதுபக்கமும் எஸ்பி இடதுபக்கமும் நிற்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் முக்கியத்துவம் போய்விடும் என்றும் நினைக்கிறார்கள். மக்கள் மத்தியில் வைத்து கலெக்டரிடம் சில கேள்விகள் கேட்டு சில கட்டளைகள் போட்டுவிட்டு அபப்டியே போவார்கள். திமுக மந்திரிகள் ஒருபடிமேலேபோய் அதிகாரிகளை மக்கள்முன்வைத்து திட்டி வசைபாடினார்கள்.அதை டிவியில் காட்டினார்கள்.

ஆனால் நம் நிர்வாக முறையில் கலெக்டர் என்பவர் மிக முக்கியமான அதிகாரி. எல்லா ஃபைலும் அவரால்தான் கையெழுத்து போடப்படவேண்டும். அவர் இல்லாமல் வேலைகள் அப்படியே நிற்கும். ஒரு வி ஐ பி வந்து போனால் உடனே அடுத்த விஐபி வந்தார் . கலெக்டர் இப்படி மாட்டிக் கொள்வதைப்பற்றி பலரும் திட்டிவருத்தப்பட்டார்கள். ரெவினியூ அதிகாரிகள் பிணங்களை பதிவுசெய்ய என்ன அடையாளம் கேட்க வேண்டும் என்று குழப்பம். அதை கலெக்டர் கூடிப்பேசி உத்தரவாக இறக்க வேண்டும். கலெக்டர் வி ஐ பிகக்ளை உபசரித்தபடி அலைந்தார். மூன்றாம்நாள்தான் உத்தரவு போடப்பட்டதாக சொன்னார் ஒருவர் . மீட்புப்பணிக்கு எட்டு வேன் நிற்க மந்திரி கூட பந்தாவுக்கு எண்பது வேன் போயிற்று. போலீஸ், ரெவினியூ அதிகாரிகள் என்று நிர்வாகமே அரசியல்வாதிகளுக்கு காவல் நின்றது. அரசு செயலிழந்ததற்கு பாதி காரணம் இதுதன. இங்கே திமுக அதிமுக இரண்டுமே ஆளும் கட்சி .இதுதான் சிக்கலே. மீட்புப்பணி செய்த பலர் கெட்டவார்த்தை சொல்லி திட்டியதைக் கேட்டேன்

*

நிவாரணப்பணி என்பது கூட நம் மக்களின் அற்பத்தனத்தைக் காட்டுவதாக இருந்தது. இதையும் பதிவுசெய்தாக வேண்டும். சம்பவம் நடந்த மறுநாளே ஆட்கள் வீடுவீடாகப்போய் பழைய துணிகள் வசூல் செய்தார்கள். வீட்டுபெண்கள் பாத்திரக்காரன்கூட எடுக்காத துணிகளையே அதிகமும் போட்டிருக்கிறார்கள். கிழிசல்கள் அழுக்குக் கந்தைகள். வாங்கியவர்கள் எடுத்துச் சொல்லியிருக்கவேண்டும். அல்லது அவற்றை தரம் பிரித்து மடித்திருக்க வேண்டும். எல்லாவற்றையும் சேர்த்து கட்டி கொண்டுபோய் முகாம்களில் தள்ளிவிட்டார்கள். சிலசமயம் மாவு அல்லது உரம் வைத்த சாக்குகளில் கட்டி . அவற்றை சீந்த ஆளில்லை. சிலநாட்களிலேயே தமிழகம் முழுக்க இருந்து கந்தல்கள் கடற்கரைப்பக்கமாக குவிந்து விட்டன. எச். எல் .பி பள்ளியில் ரெட் கிராஸ் முகாமில் மலைமலையாக இந்த குப்பைகள்.

இவற்றை என்னசெய்வதென்பது பெரிய சிக்கல். சண்முக சுந்தரம் நான் சொன்னபோது நம்ப மறுத்தார். கூட்டிச்சென்று காட்டினேன். கிழிந்த கந்தல்கள்தான் பெரும்பகுதி. ‘என்ன சார் இப்படி செய்திருக்கிறார்கள் ‘என்று புலம்பிக்கொண்டே இருந்தார். இன்று ஒரு வேட்டி 30 ரூபாய். ஒரு சட்டை 60 ரூபாய். பிச்சைக்காரன்கூட கந்தலை வாங்கமாட்டான். அவை இன்று மறுசுழற்சிக்காகவே வாங்கப்படுகின்றன. எல்லாருக்கும் இது தெரியும். இருந்தும் போடுகிறார்கள். மீனவர்கள் மிகவும் தன்மானம் உள்ளவர்கள். அவர்கள் இவை தங்களை அவமானப்படுத்துவதாகவே நினைக்கிறார்கள். நாம் ஒருவருக்கு ஒன்றை அளிக்கையில் அது அவர் மீதான மதிப்பை இம்மிகூட குறைக்காமல் இருப்பதே நல்லது. பழைய துணிகள் அப்படி அல்ல.

கடைசியில் முகாம் ஆட்கள் சொல்லி தினமலரில் பெரிய செய்தியை போட்டார்கள். பழையதுணியை கொடுக்காதீர்கள் அவை சூழல் பிரச்சினையாக உள்ளன என்று. ஆனால் ஞாயிற்றுக்கிழமைகூட [ 3-1-05] ஒரு லாரி கந்தல்துணிகள் வந்து இறக்க ஆளில்லாமல் எஸ் எல் பி – ரெட்கிராஸ் வாசலில் நிற்பதைக் கண்டேன்.

*

அதேபோல சாப்பாடு. முகாம்களுக்கு உதவ விரும்புபவர்கள் முகாமுக்கு போய் அல்லது ஃபோன் செய்து அவர்களுக்கு என்ன தேவை என்று விசாரித்து அதைக் கொடுக்கவேண்டும். இங்கே போர்வைகள் பாய்கள் தேவைப்பட்டன. ஒருகட்டத்தில் பல்பொடி பிரஷ் கூட தேவைப்பட்டது என்று முகாமிலிருந்த நீலகண்டன் அரவிந்தன் சொன்னார். [ அமுல் நிறுவனம் பதப்படுத்திய பால் சில லாரிகள் அனுப்பியிருந்ததைப் பார்த்தேன். அதுமிக உதவிகரமானது] ஆனால் பல ஆட்கள் இஷ்டத்துக்கு எதையாவது சமைத்து எங்காவது கொண்டுபோய் கொடுத்தார்கள். ஒரு முகாமில் எல்லாரும் சாப்பிட்டபிறகு புளிசாதப் பொட்டலம் கொண்டுவருவது அபத்தம். அவை வீணாக குவிந்து கிடக்கும். குளச்சல் முகாமில் அப்படி வீணான சோறு நிறைய கிடந்தது. ஒருவரிடம் கேட்டேன் , அவர்களுக்கு வேண்டியதைக் கேட்டு அதைக் கொடுக்கலாமே என்று. இல்லை அன்னதானம் செய்தால்தான் புண்ணியம். அவர்கள் சாப்பிட்டுவிட்டு வாழ்த்துவதை நாம் காதால் கேட்கவேண்டும் என்றார். மதத்தின் இன்னொரு முகம் இது

*

பாதிக்கப்பட்ட மக்கள் ஒருவகை குழப்ப மனநிலையில் இருக்கிறார்கள். உட்காரவைத்து ஓசிச்சோறு போடுவது அவர்களுக்கு கஷ்டமாக உள்ளது. வள்ளமும் வலையும் கொடுங்கள் நாங்களே மீன்பிடித்துக் கொள்கிறோம் என்கிறார்கள். அது அவ்வளவு எளிதல்ல என்றும் புரிவது இல்லை. இதை மோசமாக ஆக்கியது சன் டிவியின் பிரச்சாரம் . அரசு செயலிழந்துவிட்டது என்று கேட்டுக் கேட்டு மக்கள் மூன்றாம் நாளே எங்கே வீடுகட்டிக் கொடுக்கவில்லை என்று கலாட்டா செய்தார்களாம். பெரும்பாலானவர்களுக்கு முற்றிய குடிப்பழக்கம். மன அழுத்தம் வேறு. ஆகவே குடிக்காமல் தூங்க முடியவில்லை. ஆனால் காசு இல்லை. காசுகொடு துணிவேண்டாம் என்று பலர் கலாட்டா செய்தார்களாம். குடித்தால் உடனே சண்டை ,அடிதடி. கலெக்டர் 31-12-04 அன்று கடலோர பார்களை எல்லாம் மூடிவிட உத்தரவிட்டிருக்கிறார்.

*

பொதுவாக சேவை என்பது எவ்வளவு சிரமம் என்பதும் தெரிந்தது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு எப்போதுமே அதிருப்தி கோபம். நன்றி என்றெல்லாம் எதிர்பார்ப்புக்கள் உள்ளவர்களுக்கு மனச்சோர்வு. பலர் அப்படி என்னிடம் சொன்னார்கள்.

*

நாகர்கோவில் தனியார் டாக்டர்களில் தொழிலை விட்டுவிட்டு வந்து உதவியவர்கள் மிக மிகக் குறைவு என்று சொன்னார்கள். முதல் திங்கள்கிழமை குளச்சல் ஆஸ்பத்திரியில் மிகச்சில மருத்துவப்பணியாளர்களே இருந்தார்கள். செவ்வாய்கிழமை திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி, கொல்லம் அமிர்தா மிஷன் டாக்டர்கள் நிறைய வந்திருந்தார்கள்.

*

இங்கே போஸ்டர் புயல் ஆரம்பித்துவிட்டது. தமிழனின் சுரணையின்மையின் தடையம். கேரள ஆட்கள் காறித்துப்புகிறார்கள். வைரமுத்து தன் ஆபாசக்கவிதை மூலம் ஆரம்பித்துவைத்தது. ‘கடலே உனக்கு இதயம் இல்லையா ‘ ‘சுனாமியே நீ மரணத்தின் பினாமி ‘ என்றெல்லாம் இஷ்டத்துக்கு அச்சடித்து தங்கள் பேரைப்போட்டு ஒட்டிக் கொண்டே இருக்கிறார்கள். மதுரையில்பலகோடி ரூபாய் இதில் செலவிடப்பட்டிருக்கும் என்றார் நண்பர். தமிழகமெங்கும் இதுதான். இதில் போர் வேறு . ‘ கடல்கொண்ட கிறித்தவ பரவர் மக்களுக்கு அஞ்சலி – கிறித்தவ பரவர் மக்கள் கூட்டுறவு சங்கம் ‘ என்று ஒரு போஸ்டர். அருகே ‘கடல்கொண்ட உயிர்களுக்கு அஞ்சலி ‘என்று கோட்டார் திமுகவின் போஸ்டர்.

*

மாதா அமிர்தானந்தமயி 100 கோடி ரூபாய் அளவில் மறுநிர்மாண பணிகள் செய்யப்போவதாக செய்தி. 500 குடும்பங்களை ராமகிருஷ்ண மடம் தத்தெடுக்கும் என்றும் செய்தி. அரசு வேலைகளைவிட இவை சிறப்பாக அமையும் என்பதை நான் பலமுறை கண்டிருக்கிரேன். இவற்றில் ஒரு ‘புரஃபஷனல் ‘ தன்மை இருக்கும். அரசு அமைக்குள் இருப்பவன் என்ற முறையில் அதிகாரிகளை நம்பிச்செய்யப்படும் எந்த வேலையும் உருப்படாது என்பதே என் அனுமானம். நினைத்தாலும் செய்யமுடியாது. மேலும் அமிதானந்தமயி அவரே ஒரு மீனவர் என்றமுறையில் மேலும் அக்கறை காட்டலாம். கேரளத்தில் இடிந்த எல்லா வீடுகளையும் அவர்களே கட்டப்போவதாக செய்தி. நல்ல விஷயம். சத்ய சாயிபாபா நிறுவனம், ஜக்கி வாசுதேவ் ஆசிரமம் போன்ற அமைப்புகளே இங்கும் முக்கியபணிகளைச் செய்யப்போகின்றன. அவர்களால் முடியும். காரணம் அவர்களின் மத அடிப்படை. மதம் பல்லாயிரம் வருட ஆழம் கொண்டது. அதன் பாவ புண்ணிய உருவகங்கள் மனித மனதில் ஆழ்மாக வேரூன்றியவை . அமிர்தா கேட்டார் என்று எனக்குத்தெரிந்த ஒரு பேராசிரியர் ஒரு லட்சம் நன்கொடை கொடுத்தார், பெயரை வெளியே சொல்லவும் இல்லை. எந்த அரசியல் தலைவர் வந்து சொன்னாலும், காந்தியே சொன்னாலும் அவர் கொடுக்கமாட்டார் என்று நான் அறிவேன்.

*

‘இது ஏசு கொடுத்த தண்டனை , மனம் திரும்பி பெந்தேகொஸ்தே சபைக்கு வாருங்கள் ‘ என்று சொல்லி துண்டுபிரசுரம் அளித்தார்கள் சிலர். நான் பிளீச்சிங் பெளடர் லாரியில் மூச்சுதிணறி போய்க்கொண்டிருந்தபோது கைகாட்டி வண்டியை நிறுத்தி கொடுத்தார்கள். அலை அடித்த மறுநாளே சுடச்சுட அச்சடித்திருக்கிறார்கள். அவர்கள் சேவை ஏதும் செய்யமாட்டார்கள். தங்களுக்கே கூட நோய்வந்தால் மருந்தும் சாப்பிடமாட்டார்கள். எல்லாம் ஏசுவின் சித்தம் என்பவர்கள்.

இதேபோன்ற நிறைய மதப்பிரச்சார பிரசுரங்கள் கையில்கிடைத்தன . இணையத்தில்கூட ஒரு முஸ்லீம் அப்படி எழுதியிருப்பதாக மெயில்மூலம் கேள்விப்பட்டேன்.

*

பார்வதிபுரம் அக்ரஹாரத்தைச் சேர்ந்த ஒருவருடன் பஸ்சில் பேசினேன். ‘ ‘ என்னிக்கு பெரியவாளை கைது செய்தாங்களோ அன்னிக்கே இதெல்லாம் நடக்கும்னு ஆயிடுத்து. நடக்கக் கூடாதுண்ணு அப்டி பிராத்தனை பண்னேன். நடந்துடுத்து. என்ன சொல்றது போங்கோ ‘ ‘ என்றார் . ‘ இந்தோனேசியா இலங்கையெல்லாம் என்ன தப்பு செஞ்சாங்க ? ‘ ‘ என்றேன். ‘ ‘ பெரியவா லோககுருவாக்கும் . நல்லவேளை ஆசியாவோட அடி நின்னுடுத்து ‘ ‘ என்றார். நக்கல் செய்கிறாரா என்று கண்ணையே பார்த்தேன். நம்பித்தான் சொல்கிறார். மதம் உருவாக்கும் மூடத்தனம்! ஆனால் இந்த மனநிலைதான் அமிர்தானந்தமயி கேட்டதும் நூறுகோடி ரூபாயைக் குவிக்கவும் வைக்கிறது. இதை புரிந்துகொள்வது எளிய வாய்ப்பாடுகளுக்குள் அடங்கும் செயல் அல்ல.

*

இன்று [4-1-05 ] அன்று பரவிய வதந்தி. ஆர் எஸ் எஸ் காரர்கள் ஏதோ வெடிகுண்டு காம்புக்குத்தான் கடற்கரைக்கு வந்தார்கள், அலைகளில் 80 ஆர் எஸ் எஸ் காரர்கள் செத்துப்போய்விட்டார்கள், அவர்களின் பிணங்களைமட்டுமே ஆர் எஸ் எஸ் காரர்கள் தூக்கினார்கள், அந்த படங்கள்தான் பத்திரிகைகளில் வந்தது என்று . ஏறத்தாழ எல்லா கிறிஸ்தவர்களும் இதை மிகவேகமாக நம்பி படுவேகமாகப் பரப்பினார்கள். நிதானமாக சிந்திப்பவரான வேத சகாய குமாரே என்னிடம் ஃபோன் செய்து ஆணித்தரமாக இது உறுதியான செய்தி என்றார். அப்படி ஏகப்பட்ட பிணங்களை செய்தியாளர்களுக்கே தெரியாமல் மறைக்க முடியுமா என்றுகூட யோசிக்கவில்லை. வருத்தமாக இருந்தது.

இதேபோல த மு மு க வினர் முஸ்லிம் பிணங்களை மட்டுமே தூக்கினார்கள் என்று ஏராளமான வதந்திகள். இதற்கு நான் கண்ணால் கண்டதே எதிரான சாட்சி. அவர்கள் கிறித்தவ பிணங்களையே அதிகமும் சுமந்தனர். சர்ச்சுகளுக்குள் கூட கொண்டுசென்றனர்.

ஆர் எஸ் எஸ் , த மு மு க போன்ற அமைப்பினரின் அமைப்பின் உலகப்பார்வை எனக்கு ஏற்புடையதல்ல. இருந்தும் இதை பதிவுசெய்தாகவேண்டியுள்ளது. இவ்வமைப்புகளின் கொள்கைகளைப்பற்றிய விவாதமோ எதிர்ப்போ உருவாக்கப்படுவதற்குப் பதிலாக அவற்றை பேய் பிசாசு என்று பிரச்சாரம்செய்யும்போக்கு உருவாக்கப்படுகிறது. குறிப்பாக கிறிஸ்தவ அடிப்படைவாதிகள். அதற்கு இம்மாதிரி தருணங்களில் சிக்கல் வருகிறது. அதை இப்படி எதிர்கொள்கிறார்கள். இதை ஒரு பொது நியாய உணர்வில் சுட்டிக்காட்டுபவர்கள்கூட மதவெறியர்களாக சுட்டிக்காட்டப்படுவார்கள் என்று எனக்கும் தெரியும்.

*

ஆர் .வெங்கடேஷ் என்பவர் ‘அன்புடன் ‘ என்ற பத்தியில் எழுதியிருந்த குறிப்பு பலரை வருத்தம் கொள்ளச்செய்திருந்தது. எனக்கும் சிலர் அதை எடுத்து அனுப்பி அப்படி வருந்தி எழுதினார்கள். அது இயல்பான நடுத்தரவர்க மனப்பதிவுதான் என்றே நான் நினைக்கிறேன். அவர்கள் தங்கள் குடும்பவட்டத்துக்கு வெளியே சிந்திப்பதேயில்லை. சென்னையில் உள்ள பலர் ஃபோனில் இதேபோல பேசியதைக் கேட்டேன். ‘ நல்ல வேளை எங்க வீட்டுப்பக்கம் இல்லை ‘ என்று சொல்லாதவர்கள் குறைவு. எது ‘நல்ல வேளை ‘ ?

நான் பிராமணவிரோதி இல்லை என்பதை சொல்லவேண்டியதில்லை. உண்மையான மனப்பதிவைச் சொல்கிறேன். பிராமணர்கள் பெரும்பாலும் இப்படித்தான் இருக்கிறார்கள். சேவைக்காக ஒரு பிராமணராவது நேரடியாகக் களமிறங்கினார் என்று இன்றுவரை நான் காணவோ கேட்கவோ இல்லை. பல நூற்றாண்டுகளாக தனித்துவாழ்ந்த அக்ரஹார வாழ்க்கை அவர்களுக்கு உருவாக்கியிருக்கும் மன அமைப்பு அது. அதைத் தாண்டியவர்கள் மிக மிகக் குறைவே. இயல்பான சாதிசமூக மனதைத் தாண்டுவது மிகவும் சிரமம்.

*

இந்த அழிவிலும் சி எஸ் ஐ [சர்ச் ஆஃப் சவுத் இண்டியா. குமரிமாவட்டத்தில் அது நாடார்களின் சபை] பரதவர்களினாலான கத்தோலிக்க சபையுடன் ஒரு உரசல் போக்கையே மேற்கொண்டது என்ற தகவல்கள் பல கிடைத்தன. சி எஸ் ஐ காரர்களே கோபமாகச் சொன்னார்கள்.நெய்யூர் ஆஸ்பத்திரி டாக்டர் ஆம்புலன்ஸ்களை விட டிரைவர் இல்லை என்று சாக்கு சொன்னாராம். பல கடலோர சி எஸ் ஐ சர்ச்சுகளை மூடி விட்டார்கள் என்று தகவல்

என் குடியிருப்புப் பகுதியில் கிறிஸ்துமஸ் புத்தாண்டுக்காக போட்ட வண்ணமய அலங்காரங்களை கத்தோலிக்கர்கள் எடுத்துவிட்டார்கள். சி எஸ் ஐ காரர்கள் எடுக்கவில்லை. புத்தாண்டு கொண்டாட்டமும் நடந்தது. நள்ளிரவில் வெடியொலிகளைக் கேட்டேன்.

பல சி எஸ் ஐ கிறித்தவர்கள் இது கடவுள் கொடுத்த தண்டனை என்று சொல்வதையும் மீனவர்கள் திமிராக நல்ல உணவும் புத்தாடையும் கேட்கிறார்கள் என்று கிண்டல் செய்வதையும் கேட்டேன். இப்பேச்சு இப்போது வலுவாக உள்ளது. நாங்கள் ஞாயிற்றுகிழமை [3-1-05] அன்று குளச்சலில் அழிவைக் கண்டுவிட்டு திரும்பி வேதசகாயகுமாரின் அக்காவின் பெட்ரோல் பங்கில் நிற்கையில் அங்கிருந்த ஊழியர் அப்படி உரக்கப்பேசி சிரித்தார். நண்பர்களுக்கு மிகவும் மனக்கஷ்டமாக இருந்தது

*

இன்று பத்தாம் நாள் ஏறத்தாழ சாமானிய வாழ்க்கை திரும்பியிருப்பதை சற்றுமுன் போனபோது பார்த்தேன். சேற்றுநாற்றமும் கடற்குப்பைகளும் குடலைப்புரட்டும் நெடி. அது அம்மக்களுக்கு பழகிவிட்டிருக்கிறது.

*

நமது நாளிதழ்கள் செய்தி வெளியிடும் விதம் பொறுப்பின்மையின் உச்சம். மாலைமுரசு , மாலைமலர் போன்ற இதழ்களில் பெரும்பாலும் தினமும் ‘ இதோ வருகிறது சுனாமி ‘ என்ற தலைப்புச்செய்திதான். நேற்றுகூட ‘பூகம்ப அபாயம் ‘ என்று செய்தி. கடலோரத்தில் நிற்கையில் அதைப்படித்தால் இவர்களைப்பற்றி நன்கு அறிந்த நமக்கே மனம் பதைக்கும். இப்போதுதான் ஆட்கள் கடலோரமாகச்செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். இப்போது பொறுப்பற்று வரும் இத்தகைய செய்திகள் மிகவும் தொந்தரவு அளிப்பவை. மேலும் நாளை உண்மையிலேயே சுனாமி எச்சரிகை இருந்தால்கூட அவை அலட்சியம்செய்யப்படும்

*

வெறுப்பை உருவாக்கிய இன்னொரு அம்சம் இப்போது ‘ஆறுதல் கூற ‘ வரும் சிதம்பரம் ,கார்திக் சிதம்பரம், முக ஸ்டாலின் ஆகியோருக்கு கட்சிக்காரர்கள் ‘வருங்கால முதல்வரே தமிழகத்தின் எதிர்காலமே ‘என்றெல்லாம் சொல்லி வெளியிடும் பத்திரிகை விளம்பரங்களும் சுவரொட்டிகளும். அவை பல்லாயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ளவை. அப்பணம் நிவாரணத்துக்கு அளிக்கப்படலாகாதா என்ற கேள்வி போகட்டும, இது அநாகரீகமாக உள்ளது.

அதேபோல இங்கே வடக்கன்குளம் எஸ் ஏ ராஜா போன்ற ‘கல்வித்தந்தைகள் ‘ , மற்றும் பல்வேறு விளம்பரப்பிரியர்களான தொழிலதிபர்கள் சில்லறை உதவிகள் செய்ய அவர்களின் விசுவாசிகள் வாழ்த்தி பல்லாயிரம் ரூபாய் செலவில் பத்திரிகை விளம்பரம் செய்கிறார்கள். சிறுமையைக் கண்டு கண்டு மரத்துவிட்டது. தமிழ்நாட்டுக்கு வெளியே இம்மாதிரி அற்பத்தனங்கள் இத்தனை அப்பட்டமாக வெளியாகுமா தெரியவில்லை

*

என் உடல் எதற்கும் ஒத்துழைக்கவில்லை. எட்டுவருடங்களாக எனக்கு கழுத்தெலும்புத்தேய்வு சிக்கல் உண்டு. வண்டியில் உடைந்த சாலைகளில் போனால் காட்சிகள் இரண்டாக தெரிகின்றன. கடுமையான கழுத்து வலி ,தலைவலி ,குமட்டல். பிளீச்சிங் பவுடர் சுவாசித்து நான்குநாட்களாக மூச்சு அழற்சி. நான் பாதிக்கப்பட்ட இடங்களில் தங்கவில்லை . எங்கும் தண்ணீர்கூட குடிக்கவில்லை. ஆனால் டென்ஷன் ஆகும்போது நகம்கடிக்கும் பழக்கம் உண்டு. அதன்வழியாக தொற்று ஏற்பட்டு கடுமையான வயிற்றுப்போக்கு. மொத்தத்தில் என் பங்களிப்பு வெட்கக் கேடானது. பிறருக்கு பாரமாக ஆகாமல் இருக்கவேண்டுமென வேண்டிக்கொண்டேன் . இருபது வருடம் முன்பு இதேபோன்ற ஒரு தருணத்தில் இரவுபகல் மறந்து உழைத்திருக்கிறேன்.. என் காலம் முடிந்துவிட்டது என்று தெரிகிறது.

*

நிதி உதவிசெய்பவர்களுக்கு. களத்தில் கண்டவற்றின் அடிப்படையில் சொல்கிறேன் இதை. அரசு நிதிக்கு கொடுக்கப்படும் பணம் அதிமுகவின் தேர்தல் நிதிதான். இப்போதே நிதியிதவிக்கு கமிஷன்பேச்சுகள் காதில் விழுகின்றன. அதிகாரிகளில் பலர் நிவாரணப் பொருட்களில் நிறைய சாப்பிட்டிருக்கிறார்கள் . இன்று [ 4-1-05 ] நிவாரண நிதி முறைகேடுகளை விசாரிக்க மத்திய உளவுப்படை குமரி மாவட்டத்துக்கு வந்துள்ளதாக செய்தித்தாள்ச் செய்தி. மத்திய நிதி வந்தால் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடக்கும். கடலோரத் தோப்புகள் அரசியல்வாதிகள், தொழிலதிபர்களுக்கு உரியவை.அங்கே மீனவக்குடியேற்றங்கள் வராமல் தடுக்க பெரிய அளவில் லாபி தொடங்கிவிட்டதாக தகவல். அதிலும் பணம் விளையாடும்.

ஆகவே நிதி உதவியை ஏற்கனவே இம்மாதிரி பணிகளை தாங்களே செய்துவரும் தனியார் நிறுவனங்களுக்கு மட்டுமே அளிக்கவேண்டும்.

பழைய பதிவு . பதிவுகள் இணையதளத்தில் :

http://www.geotamil.com/pathivukal/jeyamohan_tsunami.html

முந்தைய கட்டுரைசாகித்ய அகாதமி விருதுகள் – தமிழன்பனும் சகரியாவும்
அடுத்த கட்டுரைசுனாமி : மீட்சியின் இதிகாசம்