காந்தி இளம்பெண்களுடன் படுத்து செய்த சோதனைகளைப்பற்றி இப்போது வாசிக்கும்பழக்கமுள்ள அனைவருமே ஏதேனும் ஒரு கருத்தை வைத்திருப்பார்கள். பெரும்பாலும் அவை அந்தரங்க மனப்பதிவுகளாகவே இருக்கும், ஆய்வுகளாக அல்ல. காரணம் அந்த விஷயத்துக்குள் சென்று விரிவாக ஆராய்வதற்கான தத்துவப்பின்புலம் இந்தியாவில் எழுத்தாளர்கள் நடுவே மிகச்சிலருக்கே இருக்கிறது.
காந்தி மேற்கொண்ட முறை ‘ஸஹஸயனம்’ என்று தாந்த்ரீக மரபில் குறிப்பிடப்படுவதே என்று நித்ய சைதன்ய யதி சொன்னார். அது வைணவ தாந்த்ரீகத்தில் உள்ள ஒரு வழிமுறை. கண்ணன் கோபிகைகளுடன் செய்தது அது என்று அதைச் சொல்கிறார்கள். புலன்களை வெல்லும்பொருட்டு புலன்களையே மயக்குவது என்று அதைச் சொல்லலாம்.
அதைப்பற்றி ஒரு கதை உண்டு. கங்கையில் படகுத்துறை அருகே வியாசர் நின்றிருக்கும்போது கண்ணன் வந்து “நித்ய இந்த்ரியநிக்ரகி [நிரந்தர புலன் ஒறுப்பாளன்] வந்திருக்கிறேன் வழிவிடு”’ என்றார். கங்கை வழிவிட்டது. சற்றுமுன்னர்தான் கோபியருடன் கிரீடையில் கண்ணனை அவர் கண்டிருந்தார். ஆச்சரியம் கொண்டு விசாரித்த அவரிடம் கண்ணன் ”ஆத்மா ஈடுபடாத போது புலன்கள் எதையும் அறிவதில்லை. புலன்கள் என்பவை ஆத்மாவின் வாசல்கள் மட்டுமே” என்றார்.
இந்த வழக்கம் பௌத்த தாந்த்ரீக மரபிலும் இருந்திருக்கிறது . ஜென் மரபிலும் உண்டு. யசுநாரி கவபத்தாவின் ஒரு நாவல் [The House of the Sleeping Beauties Yasunari Kawabata.] இந்த வழக்கம் ஜப்பானிய ஜென் பௌத்தத்தில் இருந்து எப்படி ஒரு சிகிழ்ச்சைமுறையாக மாறியது என்பதன் சான்றாகும். அந்நாவலில் வயோதிகர்கள் இளம் பெண்களுடன் படுக்க வைக்கப்படுகிறார்கள். அது அவர்களின் உயிர்ச்சக்தியை அதிகரிக்கும் என்பது மருத்துவ நம்பிக்கை. அந்தப்பெண்கள் கட்டணத்துக்கு வருபவர்கள். அவர்கள் தூக்கமருந்து உண்டு தூங்கிக்கொண்டிருப்பார்கள்.
தட்சிண மார்க்க தந்திரீகத்தின் வழிமுறைகள் இருவகை. சாதனா, உபாசனா என்று இவை பொதுவாகச் சொல்லப்படுகின்றன. உபாசனா விபாசனா என்றும் சொல்லப்படுவதுண்டு. குறியீட்டுச் சடங்குகளில் ஈடுபடுவதை சாதனா என்று சொல்லலாம். சாதனா என்ற சொல்லுக்கு பயிற்சி என்று பொருள். விபாஸனா என்றால் எப்படி உள்ளதோ அப்படி அறிதல் என்று பொருள். இதில் பலவகையான சடங்குகள் உள்ளன.
உபாசனையே பொதுவாக தட்சிணமார்க்கத்தின் வழிமுறையாக இருக்கிறது. அதற்கு அருகே அமர்தல், இணையாக அமர்தல் [உப + ஆசனம்] என்று சொற்பொருள். வழிபடு தெய்வத்திற்கு சமானமாக அமர்தல் என்று சொல்லலாம். அது ஒரு பாவனை மட்டுமே. ‘·பாவம்’ என்று அதைச் சொல்கிறார்கள். அந்த பாவனைநிலை என்பது பக்தியுடன் மிக நெருக்கமானதாகையால் தாந்த்ரீகத்தில் தட்சிண மார்க்கம் பக்தியுடன் பெரும்பாலும் கலந்தே இருக்கிறது. தட்சிண மார்க்கத்தின் பாவனைநிலைகளை பக்தி எளிதில் கடன் வாங்கிக்கொண்டிருக்கிறது.
காந்தியை தன்னுடைய ஒட்டுமொத்த எழுத்தில் மிக அதிகமாக எழுதிய தலைப்புகள் மூன்று என்கிறார் அந்தோனி பெரெல். முறையே பிரம்மசரியம், தீண்டாமை, கிராம சுயராஜ்யத்திட்டங்கள். இவையே காந்திக்கு எப்போதுமே மேலும் மேலும் சவால்களை அளித்திருக்கின்றன. முதலிடம் பிரம்மசரியச் சோதனைகளுக்கே.
1932-க்குப்பின்னர் காந்தியின் கடிதங்களில் உள்ள கவனத்திற்குரிய விஷயங்கள் இரண்டு. ஒன்று அவர் தன்னை பெண்மை கொண்டவராக, தாயாக எண்ண ஆரம்பித்துவிட்டிருந்தார். பல கடிதங்களில் அவர் அவ்வாறு தன்னைச் சொல்லிக்கொள்கிறார். பெண்மையை அடைவதும் தாயாக இருப்பதும்தான் தன்னுடைய ஆன்மீக முதிர்ச்சி என்று எண்ணுக்கிறார். பெண் என்பவள் ‘தாக்குவதில் பலவீனமானவள். சகிப்பதில் எல்லையற்ற வல்லமை கொண்டவள்’ என்கிறார் காந்தி. அதுவே அகிம்சையை பயிற்சிசெய்ய உகந்த நிலை என்கிறார். தான் மெல்லமெல்ல பெண்மை கொண்டு அரைப்பெண்ணாக ஆகிவிட்டிருப்பதாக ஒரு கடிதத்தில் எழுதுகிறார். காந்தி
அதேபோல இக்காலகட்டத்தில் காந்தி கோரரூபம் கொண்ட அன்னை, சக்திவடிவமான அன்னை என்ற இரு கருத்துக்களையும் தன்னுடைய கடிதங்களில் பயன்படுத்துகிறார். அந்த கருத்துரு அவரில் இருப்பதை காந்தி வெளிப்படுத்த விரும்பவில்லை என்றே சொல்லவேண்டும். ஆனால் அவரை அறியாமலேயே அது அவரது சில வரிகளில் வந்தது. காந்தி மேலைநவீனத்துவ மனநிலை கொண்டவர் என்பதனால்தான் அவ்வரிகள் விலகி மேலெழுந்து தெரிகின்றன. உதாரணமாக முதன்முதலாக வானொலியில் பேசும்போது அதை ‘மகாசக்தியின் லீலை’ என்கிறார் காந்தி.
அணைக்கும் அன்னை, கொல்லும் அன்னை என்ற இரு கருத்துருவங்களுமே தாந்த்ரீகத்துடன் நேரடியாகத் தொடர்புள்ளவை. காமத்தை வெல்வதற்கான இருவகை வழிமுறைகள். அதேசமயம் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. ஆத்மாவில் உள்ள தன் ஆண்தன்மையை இழப்பதென்பது ஆணுக்கு ஒரு மாபெரும் விடுதலை. தாக்கும்தன்மையும் ஆதிக்கத்தன்மையும் கொண்ட தன்னுடைய காமத்தில் இருந்து அவன் விடுதலை ஆகிறான். ஆணுக்கே உரித்தான வன்முறைக்கூறுகளை வெல்கிறான்.
தாய்மை என்பது அணைத்துக் கொள்ளக்கூடியதாகவும் ஆறுதலளிக்கக் கூடியதாகவும் இருக்கிறது. கருணை கொண்டதாகவும் விரியக் கூடியதாகவும் இருக்கிறது. தாய்மை ஒரு மனநிலையாக ஆகும்போது அது மொத்த உலகையும் தழுவி விரிய முடியும். மானுடத்தின் ஆன்மீக நிலைகளில் தாய்மையே ஆகச்சிறந்த உச்சம் என்று சொல்லலாம். அதை நோக்கிய நகர்வை தாந்த்ரீகம் பல்வேறு பயிற்சிகள் மூலம் உருவாக்க எண்ணுகிறது.
தாய்மை பாவனைக்கான தொடக்கமாகவே நாயகி பாவனையை விபாசனைமுறை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. தன் ஆளுமையை முழுமையாகவே இழந்து நாயகனாக எண்ணும் கருத்துருவுடன் பரிபூரண சமர்ப்பணத்தை உருவாக்கிக் கொள்ளுதலே நாயகி பாவனை. காதலாகி கசிந்துருகி மனத்தின் அத்தனை நுண்ணிய உணர்ச்சிகளும் வெளிப்பட்டு அந்த உன்னதத்தில் திளைத்தல் என அதைச் சொல்லலாம். அந்த நிலையின் அடுத்த வளர்ச்சி நிலையே தாய்மைபாவனையாகும்.
நம்மாழ்வாரின் பாடல்களில் இவ்விரு பாவனைகளும் பேரழகுடன் வெளிப்பட்டிருப்பதைக் காணலாம். பாரதியிலும் நாம் அதைக் காண்கிறோம். இந்த விபாசனை முறை என்பது இந்தியாவிலிருந்து மேலைநாடுகளுக்குச் சென்றிருக்கலாம். பைபிள் பழைய ஏற்பாட்டில் சாலமோன் பாடல்களில் விபாசனை முறைக்கான முன்னுதாரணங்கள் உள்ளன. அவை மத்திய ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் கிறித்தவத்துக்குள் என்றும் நீடித்தன.
ரோமாபுரி கிறித்தவம் உருவான பின்னர் ஞானவாதக் கிறித்தவ மரபுகளுக்குள் விபாசனை முறை நீடித்ததைக் காண்கிறோம். அவர்கள் உபவாசம் தனிமை போன்ற உக்கிரமான விரதங்களுடன் இவற்றையும் இணைத்துக் கொண்டார்கள். புனித ஜான் [John of the Cross] போன்றவர்கள் வழியாக நாயகி பாவனை போன்ற உபாசனை முறைகள் மெல்ல கத்தோலிக்கத்திற்குள்ளும் நுழைந்தன. ஆரம்பத்தில் கத்தோலிக்கத்திருச்சபை மிகக்கடுமையாகவே ஞானவாதிகளை கையாண்ட்து. ஆனால் அந்த பாவனைகளுக்கு பக்திமார்க்கத்தில் உள்ள வலுவான முக்கியத்துவம் அவற்றை மெல்ல மெல்ல நிறுவியது.
இந்தியாவில் எப்போதுமே இந்த பாவனைகள் ஆழமாக ஊடுருவியிருந்தன. குணங்குடி மஸ்தான் சாயபு போன்ற சூஃபிகள், வீரமாமுனிவர் போன்ற கிறித்தவ ஞானிகளில் இந்த முறையை நாம் காண்கிறோம். ராமகிருஷ்ண பரமஹம்சர் விபாசனைமூலம் உடலளவிலேயே பெண்ணாக ஆனார் என்கிறார்கள். அவருக்கு முலைகள் வளர்ந்தன என்று வரலாற்றாசிரியர்கள் எழுதுகிறார்கள். ராமலிங்க வள்ளலாரின் பாடல்களில் ஒரு பெரும்பகுதி விபாசனை சார்ந்தது. பலபாடல்களின் உணர்வுநிலைகள் இன்னும்கூட முழுமையாக வாசிக்கப்படவில்லை.
கோரமான அன்னையும் காம ஒடுக்குதலுக்கான ஒரு கருத்துருவமே. தண்டிக்கும் வல்லமையும் கருணையும் கொண்ட அந்த அன்னைமுன் சிசுவாக தன்னை ஒப்படைத்தல் அங்கே உபாசனை முறையாக உள்ளது. இது தன்னகங்கார அழிவுக்கும் அதன்மூலம் காம ஒறுத்தலுக்கும் வழி வகுக்கிறது. அன்னையாகவும் மகவாகவும் ஒரேசமயம் தன்னை உருவகிக்கும்போது உருவாகும் முரணியக்கம், அல்லது யின்-யாங், ஒரு முழுமையை உருவாக்குகிறது
காந்தி யோக முறைகளில் ஆர்வம் கொண்ட இறுதிக்காலகட்டத்தில்தான் காந்தி பெண்களுடன் சேர்ந்து படுப்பது போன்றவற்றில் ஈடுபடுகிறார். அதற்கு கஸ்தூர்பாவின் அனுமதியை அவர் வாங்கவும் செய்திருக்கிறார். அவரது வளர்ந்த மகனாகிய தேவதாஸ் காந்தியும் கூடவே ஆசிரமங்களில் இருக்கிறார். உண்மையில் காந்தி ஏதேனும் தாந்த்ரீக முறைகளில் ஈடுபட்டாரா, இல்லை தாந்த்ரீக முறைகளை தன் சொந்த கற்பனைக்கு ஏற்ப மாற்றியமைத்து ஏதேனும் பழகிப்பார்த்தாரா என்பதை இப்போது சொல்ல முடிவதில்லை. இரண்டாவதே உண்மையாக இருக்க முடியும் என்றே பொதுவாக உளவியலாளர் கருதுகிறார்கள்.
ஜமாலன் எழுதிய ‘புராதன தாயாக இருக்க விரும்பிய நவீனத் தந்தை’ என்ற கட்டுரை இந்த விஷயத்தை மேலைநாட்டு புதிய உடலரசியல் கோட்பாடுகளைக்கொண்டு ஆராய முயலக்கூடிய ஒரு முக்கியமான முயற்சி. காந்தியின் முக்கியமான முரண்பாட்டை ஜமாலனின் கச்சிதமான, அழகிய தலைப்பே சுட்டிக்காட்டுகிறது. அவர் தாய்மையை அடைய முயன்றார். ஆனால் அவரது மனம் மேலைநாட்டு நவீனச்சிந்தனைகளின் தர்க்கத்தால் வடிவமைக்கப்பட்ட ஒன்று. இதுவே காந்தியின் சிக்கல்.
இன்றைய நோக்கில் காந்தியின் பிரம்மசரியப் பயிற்சிகளை எப்படி மதிப்பிடுவது? ஒரு சாதாரண மனிதனின் நோக்கில் இதில் ஒவ்வாத ஒன்று உள்ளது என்பது உண்மை. இந்திய சமூகத்தின் நவீன மனம் என்பது பக்தி இயக்கத்தாலும் அதன் பின் மேலைக்கல்வியால் அளிக்கப்பட்ட விக்டோரிய ஒழுக்க நெறிகளாலும் ஆனது. இரண்டுமே தாந்த்ரீக செயல்பாடுகளை முழுமையாக நிராகரிக்கக்கூடியவை. ஆகவே சராசரி இந்திய மனம் இச்செயல்களை ஏற்கவேயில்லை என்றால் அது இயல்பானதே.
நான் நாராயணகுருவின் வழி வந்தவன். நாராயணகுரு அவரது வாழ்க்கையின் தொடக்கக் காலகட்டத்தில் தாத்ரீகர்களுடன் உறவில் இருந்திருக்கிறார். பின்னர் அதை விலக்கி தூய அத்வைதம் நோக்கி வந்தார். யோகம் கூட அவருக்கு பதஞ்சலியின் தூய யோகம்தான். பிற்காலத்தில் தாந்த்ரீகர்களால் உருவாக்கப்பட்ட குறியீட்டுச் செயல்பாடுகளினால் ஆன யோகமுறை அல்ல. நாராயணகுருவின் மரபில் தாந்த்ரீகம் முற்றாகவே விலக்கப்படுகிறது. ஆகவே எனக்கும் அந்த ஒவ்வாமை உள்ளது.
அதேசமயம் நித்ய சைதன்ய யதி எந்நிலையிலும் தாந்த்ரீகத்தின் இருப்பை நிராகரித்தவர் அல்ல. பல ஆயிரம் ஆண்டுகளாக இந்த மண்ணில் தாந்த்ரீகம் இருந்துகொண்டிருக்கிறது. நாளையும் இருக்கும். அது நீடிப்பதற்கான ஒரே மண் இதுவே. ஆகவே இங்கு அதற்கான இடம் இருந்தாகவேண்டும் என்றார் நித்யா. இங்கே அவற்றுக்கு இடமில்லை என்றால் உலகில் எங்குமே இடமிருக்காது. மானுடத்தின் புதிய சாத்தியங்கள், ஆன்மீகத்தின் புதிய எல்லைகளைப் பற்றி அப்படியென்றால் எந்த ஆய்வுமே இல்லாமல் போய்விடும் என்றார்.
உதாரணமாக, தலைச்சேரியை மையமாக்கிய ஒரு சர்வதேச தாந்த்ரீக அமைப்பு உண்டு. சித்தாசிரமம் என்று அதற்குப் பெயர். அவர்கள் ஒரு தனிச் சமூகம். அதற்குள் ஆண்களும் பெண்களும் மணம்செய்துகொள்ளாமல் வாழ்கிறார்கள். தங்கள் வளைப்புக்குள் அவர்கள் உடைகள் அணிவதில்லை. ஆண் பெண் குழந்தைகள் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டு எந்த உறவுத்தொடர்ச்சியும் இல்லாமல் வாழ்வதனால் அண்ணனும் தங்கையும், ஏன் தாயும் மகனும் கூட உறவுகொள்ள வாய்ப்பிருக்கிறது.
எண்பதுகள் முதலே கேரள மார்க்சியக் கம்யூனிஸ்டுக் கட்சி சித்தாசிரமம் மீது வன்முறைத் தாக்குதல்களை தொடுத்து வருகிறது. 1994-ல் நடந்த வன்முறைத் தாக்குதலைப் பற்றிப்பேசும்போது நித்யா இதைப்பற்றிச் சொன்னார். சித்தாசிரமத்தை ஒரு புதிய வகை வாழ்க்கைக்கான மானுடப்பரிசோதனை நிலையம் எனலாம். அவர்களின் சோதனைகள் பொதுமக்கள் வாழ்க்கையை பாதிக்காத வரை அவை அனுமதிக்கப்பட்டே ஆகவேண்டும், அதுவே ஜனநாயகம் என்றார்.
பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட ஒழுக்கவியலே உண்மையான ஒழுக்கவியல், பிறிதெல்லாம் ஒழிக்கப்படவேண்டியவை என்று நம்பும் மனநிலை ·பாசிசம். மார்க்ஸியம் மேலைநாட்டில் இதேபோன்ற கூட்டுவாழ்க்கை குழுமியங்களாகவே ஆரம்பித்தது. ஆகவேதான் அதற்கு கம்யூன்கள் என்று பெயர். இஸ்லாமும் கத்தோலிக்க மதமும் ஒரு சராசரி ஒழுக்கவியலை வைத்து பிற அனைத்தையும் ஒடுக்க முயல்கின்றன. அது போல கம்யூனிஸ்டுகளும் நடந்துகொள்கிறார்கள் என்பது நம் சமூகத்தின் சிந்தனைச் சீரழிவையே காட்டுகின்றது என்றார் நித்யா.
சராசரியை கொண்டு மீறல்களை ஒடுக்கும் சமூகம் ·பாஸிஸ சமூகம். மீறல்களுக்கு எந்நிலையிலும் வாய்ப்பளிக்கும் சமூகமே உண்மையான ஜனநாயக சமூகம். இந்தியா பல நூற்றாண்டுகளாக, விதிவிலக்கான தருணங்களைத் தவிர்த்தால், அப்படித்தான் இருந்துள்ளது. பல்வேறு நம்பிக்கைகளும் மதங்களும் சமூகக்குழுக்களும் இணைந்து வாழ்ந்த பூமி இது. ஆகவே பல்வேறு பரிசோதனைகள் நடந்த இடம்.
சிறந்த உதாரணம் சிலப்பதிகாரம் தான். எல்லா மதங்களும் ஒன்றுடன் ஒன்று உரையாடி வாழும் ஒரு சூழலை அதில் காண்கிறோம். மக்கள் எல்லாவற்றையுமே சமமாகக் காண்கிறார்கள். கோவலன் சிவன் விஷ்ணு புத்தர் ஆலயங்களை வணங்குகிறான். ஆனால் அவன் சமணன். போகும் வழியில் சித்தாசிரமம் போல காமவரிப்பாடல் பாடி வாழும் பிராமணர்களின் ஒதுக்கப்பட்ட கிராமத்திலும் சிலநாள் இருக்கிறான். அதுவே இந்திய நாகரீகம்.
ஆனால் சமீப காலமாக இந்தியாவில் சராசரியினரின் குரல் ஜனநாயகத்தின் பேரால் சிறப்புவிழுமியங்களுக்கு எதிராக எழுப்பப் படுகிறது. எண்பதுகளில் வங்கத்தின் ஆனந்தமார்க்கிகள் வங்க அரசாலும் கட்சியாலும் வன்முறை மூலம் ஒடுக்கப்பட்டனர். ஓஷோவின் ஆசிரமங்கள் அவதூறுக்கு உள்ளாகி கிட்டத்தட்ட செயலிழக்கச் செய்யப்பட்டன. தமிழகத்தில் மெய்வழிச்சாலை தமிழக அரசால் ஒடுக்கப்பட்டது. இவை எதிலுமே எந்தவகையான குற்றங்களும் கண்டுபிடிக்கப்படவில்லை.
ஆனாலும் இவற்றை குற்றகரமான குழுமியங்கள் என்று அரசும், அரசியல்கட்சிகளும், ஊடகங்களும் சித்தரித்தன. இவற்றின் ஒதுங்கிய தன்மை, அசாதாரணத்தன்மை காரணமாகவே சாதாரண மக்கள் இவற்றை எளிதில் வெறுக்க ஆரம்பித்துவிடுவார்கள். இவற்றை பற்றி எந்த வகையான கதைகளையும் கட்டிவிட்டால் மக்கள் நம்புவார்கள். நாம் ஜனநாயகத்தின் பெயரால், மக்களின் பெயரால், மத்தியகால மதவெறி அரசுகளின் மனநிலையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம்.
பொதுச்சமூகத்தின் மீது மோதாத கிறுக்குத்தனங்களுக்கு இடம் கொடுக்கும் சமூகமே ஆரோக்கியமான சமூகம். அங்கேதான் தனிமனித அறிவுத்தேடலுக்கும் ஆன்மீகத்தேடலுக்கும் கலை வெளிப்பாட்டுக்கும் இடம் இருக்க முடியும். அதுதான் தன்னைத்தானே மறுபரிசீலனை செய்துகொள்ளவும் தன்னை புதிய வழிகளில் செலுத்திக்கொள்ளவும் முயன்றுகொண்டிருக்கும் சமூகம்.
இந்தியா எத்தனையோ நூற்றாண்டுகளாக அப்படித்தான் இருந்துகொண்டிருக்கிறது. ஏனென்றால் இங்கே உள்ள மையமதங்களான இந்து, சமண, பௌத்த மதங்கள் கூட்டான சராசரியான ஆன்மீகத்தை முன்வைப்பவை அல்ல. அனைவருக்கும் ஒரே வழியைக் காட்டக்கூடியவை அல்ல. ஒவ்வொருவரும் தன் ஆன்மீக ஈடேற்றத்தை தன் சொந்த வழியில் தானே தேடிச்செல்ல வலியுறுத்துபவை அவை. ஆகவேதான் மாபெரும் ஆலயங்களின் மூலச்சிலையாக சிவலிங்கத்தை வைத்து வழிபடும் சைவமதம் லிங்கம் மீது ஏறி அமர்ந்து தியானம்செய்யும் அகோரியையும் தனக்குள் அனுமதிக்கிறது. பிணத்தை சிவனுக்கு படைப்பவனும் சைவன்தான் என்கிறது.
இந்த மாபெரும் பன்மைத்தன்மையை எதன் பொருட்டேனும் இந்தியாவும், இந்து-பௌத்த-சமண மதங்களும் இழக்குமென்றால் இந்தியா அழிந்துவிட்டதென்றே பொருள். இந்தியா கத்தோலிக்க அல்லது இஸ்லாமிய அல்லது கம்யூனிச அரசுமையச் சமூகங்களைப்போல சீராக வெட்டி ஒதுக்கப்பட்ட ஒரு சமூகமாக ஆகும் என்றால் அதன்பின் இது இந்தியாவே அல்ல.
நவீனக் கல்வி கற்ற இந்திய மனம் இன்று அதன் பண்பாட்டு வேர்களில் இருந்து வெகுவாக துண்டிக்கப்பட்டு விட்டிருக்கிறது. அது பள்ளியில் கற்ற ஒழுக்கவியலையே அது ஒரே வாழ்க்கைமுறையாக எண்ணுகிறது. ஞானத்தேடலின் பல்வேறு வழிகளை அதனால் புரிந்துகொள்ள முடிவதில்லை. ஆகவேதான் திகம்பரச் சமணர்மேல் கல்லெறிதல் போன்ற காட்டுமிராண்டித்தனங்கள் இங்கே நிகழ்கின்றன. ஒரு சுதந்திரச் செயல்பாட்டை அமெரிக்கவகை தாராளவாதத்தால் விளக்கினால் மட்டுமே நம்மால் ஏற்க முடிகிறது. ஒரு தாந்த்ரீகக்குழுவை வெறுத்து ஒதுக்கும் நம் நவீன அறிவுஜீவிகள் ஒரு நிர்வாணசிகிழ்ச்சை நிலையத்தை சாதாரணமாக ஏற்றுக்கொள்வார்கள்.
நாம் நம்முடைய மரபின் பின்னணியில் வைத்து தாந்த்ரீகம் போன்றவற்றை புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. அவை நம்முடைய பாரம்பரியத்தின் தவிர்க்க இயலாத பகுதிகள். அவை உண்மையில் என்ன என்று நமக்கு தெரியாது. அவற்றைப்புரிந்துகொள்ள அவற்றுக்குள் செல்வதொன்றே வழியாகும். ஆனால் அது எல்லாருக்கும் சாத்தியப்படாது. அவை உண்மையில் பயனுள்ளவையா, அவை ஏன் நீடிக்கின்றன எதுவுமே நம் பொதுப்புத்திக்கு எட்டுவதில்லை. ஆகவே அவை நம் பொதுச்சமூகத்திற்கு நேரடியான தீங்கு விளைவிக்காதவரை நம் சமூகத்தில் அவை இருந்தாகவேண்டும்.
இல்லையேல் நமக்கு ஏற்படும் இழப்புகள் சாதாரணமானவை அல்ல. நம் மரபின் பெரும் ஆளுமைகள் பலருக்கும் தாந்த்ரீகத்தின் பின்புலம் இருந்திருக்கிறது. ராமகிருஷ்ண பரமஹம்சர் அவரது இளம்வயதில் பிராம்மணி என்ற பெண்குருவின் உபதேசப்படி தாந்த்ரீக சாதனைகளைச் செய்திருக்கிறார். அரவிந்தர் இறுதிவரை தாந்த்ரீகச் செயல்பாடுகளில் இருந்தார். நாராயணகுருவும், வள்ளலாரும் அதில் ஈடுபட்டு வெளியே வந்திருக்கிறார்கள். பாரதியும் மு.தளையசிங்கமும் அதில் ஆர்வம் கொண்டிருந்தார்கள்.
இந்தியாவில் மட்டுமல்ல மேலைநாடுகளில்கூட மேதைகளில் ஒருசாரார் அங்குள்ள தாந்த்ரீகச் செயல்பாடுகளில் ஈடுபட்டவர்களே. லியனோடாவின்ஸி, மொசார்த், நியூட்டன், வால்டேர், ரூஸோ… அவர்களை ஒதுக்கி ஒருவர் சிந்திக்கப்புகுந்தால் மானுட சிந்தனையின் பாதிப்பங்கை தூக்கிவீசிவிட வேண்டியிருக்கும்.
குமரி மாவட்டம் தாந்த்ரீகத்தின் நிலம். இன்றும் இங்குள்ள ஆலயங்களில் தாந்த்ரீக மரபு பூசனையே உள்ளது. தாந்த்ரீகச் சடங்குகள் சிலவற்றை நான் கண்டிருக்கிறேன். பலரிடம் பேசியிருக்கிறேன். ஒருவரிடம் கிட்டத்தட்ட உபதேசம் பெறும் நிலைவரை சென்றிருக்கிறேன். ஆனாலும் இன்றுவரை அதன் பயன் குறித்து எந்தவிதமான நம்பிக்கையும் எனக்கு வரவில்லை. அதன் சடங்குகளுக்கு பின்னால் உள்ள மனநிலையைப்பற்றிய புரிதலும் உருவாகவில்லை. ஆனால் அந்த வழி நான் அறியாத ஒன்று என்ற அளவில் அதை விட்டு விலகிச்செல்வேனே ஒழிய வெறுக்கவோ நிராகரிக்கவோ மாட்டேன்.
நேரு காந்தியைப்பற்றிச் சொல்லும்போது ‘காந்தியால் உச்சநிலைகளுக்குச் சென்று மட்டுமே சிந்திக்க முடியும். காமத்திலானாலும் இறைத்தன்மையினாலாலும்’ என்று சொல்கிறார். அது பொதுவாகவே அசாதாரணமான மேதைகள் ஞானிகளின் இயல்பு. அவர்களின் வழி நாம் முன்பறியாதது. ஆகவே அவர்களை நம்மால் புரிந்துகொள்ள முடிவதில்லை. ஆகவேதான் அவர்களை நாம் சிலுவையில் ஏற்றுகிறோம்.
மேதைகள் உங்களுக்குத் தேவை என்றால் அவர்களின் கிறுக்குத்தனங்களை நீங்கள் ஒத்துக்கொண்டே ஆகவேண்டும். தமிழகத்தில் பாதிப்பேர் அவரை தந்தையின் இடத்தில் வைத்திருக்க, நிர்வாணமுகாமுக்குச் சென்று நிர்வாணமாக படம் எடுத்து அதைப்பிரசுரிக்கவும் செய்த ஈவேராவின் மனநிலையும் அப்படிப்பட்டதே. அதை தெருத்தெருவாக சுவரொட்டி அடித்து ஒட்டினாலும் அவர் கவலைப்படமாட்டார், தி.கவினர்தான் அதிர்ச்சி அடைந்துவிடுவார்கள். மாதகணக்கில் குளிக்காமல் இருந்ததுடன் குளிப்பது தேவையும் இல்லை என்று வாதிட்டவர் ஈவேரா.
காந்தியின் பாலியல் பரிசோதனைகள் அல்லது பிரம்மசரியப் பயிற்சிகள் அவர் சில தட்சிணமார்க்க வழிமுறைகளை ஒட்டி தனக்குத்தானே உருவாக்கிக் கொண்டவை. அனேகமாக அவை அவருக்கு பெரிய பயன் ஏதும் அளிக்கவில்லை என்றே படுகிறது. காந்திக்கு நெருக்கமானவராக இருந்த தட்சிண மார்க்கியான ரைஹானா தயாப்ஜி [Raihana Tyabji] இதைப்பற்றி விரிவாகவே சொல்லியிருக்கிறார். காந்தி வாம, தட்சிண மார்க்கங்களை மனம்போனபோக்கில் கலந்தார் என்றும், அவரது முயற்சிகளுக்கு பெரிய பயன் ஏதும் விளையவில்லை என்றும் அதை அவர் எடுத்துரைத்தபோதும் காந்தி கவனிக்கவில்லை என்றும் சொல்கிறார் தயாப்ஜி .
தயாப்ஜி அவரது கோபிகைகளின் மனம் [The heart of a Gopi. Raihana Tyabji] நூலில் காந்தி பரிசீலித்த எல்லா தட்சிண மார்க்கங்களைப்பற்றியும் விரிவாகவே பேசுகிறார். காந்தி எந்த அளவுக்கு இவற்றை எடுத்துக்கொண்டார் என்ற தகவல்கள் இல்லாத நிலையில் ஊகங்களை நிகழ்த்துவதில் பொருளேதும் இல்லை. அவர் மிக நெடுங்காலப் பண்பாட்டுப்பின்புலம் உள்ள ஒரு மரபுக்குள் நுழைந்தார், ஆனால் அவருக்கு உரிய குரு என எவரும் இருக்கவில்லை. குரு இல்லாமல் எந்த ஒரு அகவயப்பரிசோதனைகளைச் செய்வதும் ஆபத்தானது. வரைபடம் இல்லாமல் பாலைவனத்தில் பயணம் கிளம்புவது போன்றது. காந்தி தன்னுடைய தர்க்கம், நுண்ணுணர்வு ஆகியவற்றை மட்டுமே நம்பி அதில் ஈடுபட்டார். அதுவே அவரது முதல் பிழை
இரண்டாவது பிழை முதல் பிழையின் விளைவே. இந்தியாவின் தட்சிண மார்க்கம் சார்ந்த ஒரு குரு அவருக்கு இருந்திருந்தால் அவர் பொதுவாழ்க்கையின் நடுவில் இருந்து கொண்டு வெளிப்படையாக அந்தப் பயிற்சிகளைச் செய்ய ஒத்துக்கொண்டிருக்கமாட்டார். இந்தியாவின் ஈராயிரம் வருட மரபில் அப்படி ஓர் வழக்கம் இல்லை. தாந்த்ரீகம் எப்போதுமே ரகசியமானது. அதன் ரகசியத்துக்குக் காரணம் அதன் பலபகுதிகள் தர்க்கபூர்வமாக பிறருக்குச் சொல்லி நியாயப்படுத்தப்பட முடியாதவை என்பதே. மேலும் சகயோகினிகள் அல்லாதவர்களிடம் தட்சிணமார்க்கம் எந்த விதமான சோதனைகளையும் அனுமதிப்பதில்லை. காந்தியின் சோதனைகளின் தோல்வி அவர் பலரின் எதிர்ப்புகளை எதிர்கொள்ளும் நிலைக்குச் சென்றார் என்பதிலேயே உள்ளது
ஆனால் காந்தி அவருக்கே உரித்தான மூர்க்கமான பிடிவாதத்துடன் இருந்தார். ஏ.வி.தாக்கருக்கு இந்த விஷயம் சார்ந்து எழுதிய கடிதத்தில் காந்தி சொன்னார் ‘இது ஒரு சோதனை அல்ல, இது என் வேள்வியின் பிரிக்கமுடியாத பகுதி. ஒரு பரிசோதனையைக் கைவிடலாம், ஒரு கடமையை கைவிடமுடியுமா என்ன?’ தாக்கர் அவர் மனுவுடன் படுப்பது போன்ற செயல்களைச் சொல்லி சமகாலத்தில் அன்னியமாவார் என்று எழுதியதற்கு காந்தி பதில் சொன்னார் ‘நான் நீங்கள் உத்தேசிக்கும் விதத்தில் நவீனமானவன் அல்ல. நான் நீங்கள் கற்பனைசெய்பவன் போலவே பழமையானவன். வாழ்நாளின் கடைசி வரை அப்படித்தான் இருக்கவும் செய்வேன்’ .
பிறிதொரு சந்தர்ப்பத்தில் காந்தி எழுதினார் ‘சத்தியத்தை நோக்கிச் செல்வதற்காக நான் ஆயிரம் பெண்களுடன் படுத்துறங்கவும் தயாராக இருப்பேன்’ பிடிவாதமாக அவர் சொன்னார் ‘மொத்த உலகமே என்னை நிராகரித்தாலும் சரி, எனக்கு எது உண்மையோ அதில் நான் உறுதியாகவே இருப்பேன்’ தன் பேத்தி மனுவுடன் படுத்து உறங்கும்போது அவள் தந்தை ஜெய்சுக்லால் காந்திக்கே அதை கடிதமெழுதி தெரிவிக்கச் சொல்கிறார் காந்தி.
ஒரு கீழை மரபை மேலைநாட்டு முறையில் பரிசோதனை செய்ய முயன்றார் காந்தி. ஒரு நல்ல குரு அவருக்கு அமைந்திருந்தால் அவருக்குள் இருந்த விக்டோரிய ஒழுக்கவியலை கெல்லி வெளியே எறிந்தபின்னர்தான் யோக சாதனைகளை ஆரம்பித்திருப்பார். காந்தியின் மனம் ஆராய்ச்சி நோக்கு கொண்டது. எதையும் புறவயமாக அணுகக்கூடியது. ஆகவே ஆழ்மனத்துக்கு இறங்கிச் செல்லுதல் என்பது அவருக்கு எளிய விஷயமல்ல. இந்தியக் குருமரபு அவரை நடைமுறைவாதத்தின் இரும்புச் சட்டகம் விட்டு வெளியே வருவதற்காக நீண்ட குறியிட்டுத்தியானங்களில் ஈடுபடுத்திய பின்னரே யோகத்திற்குள் அனுமதிக்கும் என நான் எண்ணுகிறேன்.
காந்தியின் அபாரமான தன்னம்பிக்கையே அவர் அறியாத ஓரு பகுதிக்குள் அவரை துணிந்து புக வைத்தது. அதன் மூலம் அவர் அடைந்தது அவருடனிருந்த எளிய மனங்களை குழப்பியது மட்டுமே. காந்தியின் பிரம்மசரிய அல்லது யோகப் பயிற்சிகளை அவரது சொந்தக் கிறுக்குத்தனத்தில் ஒருபகுதி என்றே நினைக்கிறேன். அதையும் கணக்கில் கொண்டே அவரைப்பற்றி நான் சிந்திப்பேன். அதேசமயம் அதைவைத்து அவரை நிராகரிப்பதோ, வெறுப்பை உருவாக்கிக்கொள்வதோ, ஏளனம்செய்வதோ சிறுமைத்தனம் என்றே எண்ணுகிறேன்.
ஒப்புநோக்க அதிர்ச்சி அம்சம் குறைவு என்றாலும் காந்தியின் சுயசிகிழ்ச்சைமுறையும் அவரது அந்தரங்கமான கிறுக்குத்தனமே. அதனால் யாரும் சாகாத காரணத்தால் அது நம்மால் கடந்து செல்லப்படுகிறது. காந்தி தனக்கே உரிய மருத்துவக் கோட்பாடுகளை ஆராய்ந்ததில் பிழையில்லை. ஆனால் அந்தத்தளங்களில் அவர் அதுவரை நடந்த எந்த வளர்ச்சியையும் கற்றுக்கொண்டு முன்னே செல்லவில்லை. ஆயுர்வேதம் போன்ற விரிவான ஒரு மருத்துவமுறை இருந்த நாட்டில் அதைப்பற்றி எந்த அறிதலும் இல்லாமல் காந்தி ஐரோப்பிய கத்துக்குட்டி இயற்கை மருத்துவர்களின் சில நூல்களில் இருந்து மட்டுமே தொடங்கி முன்னே சென்றார்.
அவரது கிராமசுயராஜ்ய கனவிலும் ஓரளவு அவருடைய கிறுக்குத்தனம் உள்ளது. அந்தக் கிறுக்கு அம்சம் மட்டுமே நேருவின் கண்ணில் பட்டது. ஆனால் அந்தக் கிறுக்குத்தனத்தால்தான் காந்தி அவரது காலகட்டத்தின் எல்லைகளை மீறிச்சென்றார். அவரது சமகாலத்தைய எந்த ஒரு அரசியல் ஞானியாலும் காணமுடியாத அரசியல் பொருளியல் சாத்தியக்கூறுகளை கண்டு சொன்னார். அவரது கருத்துக்களில் உள்ள கிறுக்குத்தனங்களை விட்டுவிட்டு அந்த தரிசனங்களின் அடிப்படையில் மேலே சிந்தனைசெய்ய முடியும் என்றால் கிராம சுயராஜ்யம் என்ற கருத்துரு சென்ற இரு நூற்றாண்டுகளின் மாபெரும் அரசியல், பொருளியல் தரிசனங்களில் ஒன்றுதான்.
காந்தியை அவரது அனைத்துக் கிறுக்குத்தனங்களுடன் நான் ஏற்கிறேன். இப்படித்தான் ஞானிகளும் மேதைகளும் நமக்கு வரலாற்றால் அளிக்கப்படுகிறார்கள் என்பதனால் நமக்கு வேறு வழி இல்லை
இணைப்புகள்
ஜமாலன் கட்டுரை
http://jamalantamil.blogspot.com/2008/04/blog-post_10.html
பிரேம் கட்டுரை
http://tamilbodypolitics.blogspot.com/2007/11/blog-post.html
காலச்சுவடு மலர்
http://www.kalachuvadu.com/issue-97.htm
காந்தியும் காமமும் – 1