ஒரு குட்டிக்கதை

அன்புள்ள ஜெயமோகன்

சாரு ஆன்லைன் என்ற இணையதளத்தில் சாரு நிவேதிதா என்பவர் உங்களை மோசமாக தாக்கி எழுதிக் கொண்டே இருக்கிறாரே. ஏன்?

சரவணன்

*

அன்புள்ள சரவணன்,

அடாடா, இணையத்திலும் இப்படி பால் வடியும் வாசகர்களா? மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்கள் பிள்ளைமனம் மகிழ ஒரு குட்டிக்கதை சொல்லட்டுமா?

ஒரே ஒரு காட்டிலே ஒரே ஒரு யானை இருந்ததாம். பெரீய யானை. அந்த யானை தும்பிக்கையும் தந்தமுமாக ‘அங்கிட்டும் இங்கிட்டும்’ அலைந்து கொண்டிருப்பதை அந்த காட்டிலே இருக்கும் ஒரு பூரான் பார்த்ததாம். யானை பிளிறியபோது காடு முழுக்க அது கேட்டதாம். பூரான் ‘அய்யோ நான் என்றைக்கு அந்த மாதிரி காடுமுழுக்க கேட்கிறமாதிரி கத்தப்போகிறேன்’ என்று நினைத்ததாம். சரி இந்த யானையை கடித்து வைப்போம். அது கத்தும். அந்தக் கத்தலை கேட்பவர்கள் ஏன் கத்துகிறது என்று கேட்பார்கள். அப்போது நம்மைப்பற்றி நாலுபேருக்கு தெரியும் என்று நினைத்ததாம்.

அந்தப் பக்கமாக யானை வந்தபோது பூரான் நறுக் என்று கடித்ததாம். யானைத்தோல் கூடாரத்தோல் தானே? யானைக்கு வலிக்கவில்லை. கொஞ்சம் அரிப்புதான் எடுத்தது. சொறிந்துகொண்டு சோலியைப் பார்க்கப் போயிற்றாம்

ஆனால் பூரான் விடவில்லை. தேடிப்போய் மீண்டும் கடித்ததாம். பூரான் கடிக்கக் கடிக்க யானைக்கு அந்த சொறியும் சுகம் ரொம்பப் பிடித்துப் போய்விட்டதாம். அதனாலே யானைக்கு பொழுது போகாதபோது அதுவே பூரானிடம் வந்து காலைக் காட்டி கடிவாங்கி சொறிந்து மகிழ ஆரம்பித்ததாம். பூரானுக்கும் சந்தோஷம் இம்மாம்பெரிய யானையே நம்மளை தேடிவருதே என்று. யானைக்கு காலில் கடிபடுவது அலுத்துப்போய் முதுகிலும் தும்பிக்கையிலும் எல்லாம் பூரானை பிடித்துவிட்டு கடிவாங்கும் வழக்கம் ஏற்பட்டதாம்

அப்டியே கொஞ்சநாள் போயிற்றாம். ஒருநாள் யானையிடம் அதன் ·ப்ரெண்ட்ஸ் கேட்டாங்களாம்.  ‘அதென்ன கையிலே வைச்சிருக்கீங்க?’ன்னு .யானை சொல்லிச்சாம்’இதுவா? இது ஒரு பூரான். காது குடையறதுக்கு வச்சிருக்கேன்..சும்மா உள்ள விட்டு குடைஞ்சா ஜிர்ரின்னு இருக்கும்’னு.

கதையோட நீதி, ‘சிறுதுரும்பும் காதுகுடைய உதவும்.’

 உயிர்மை இந்த இதழில்…

கடிதங்கள்

ஜூவியின் பதினாறாம் பக்கம்.

சாரு

ஜே.ஜே.சிலகுறிப்புகள்,சாரு நிவேதிதா– இருகடிதங்கள்

முந்தைய கட்டுரைதசாவதாரம்:இருகடிதங்கள்
அடுத்த கட்டுரைஎஸ்.ராமகிருஷ்ணனுக்கு சி.கெ.கெ.விருது