காந்தியும் காமமும் – 3

காந்தி அகிம்சையையும் பிரம்மசரியத்தையும் இணைத்தே எப்போதும் புரிந்துகொண்டிருந்தார். இந்தப்புரிதலை அவரிடம் உருவாக்கியவர் கவி ராய்சந்த் என்று அழைக்கப்பட்ட ஸ்ரீமத் ராஜ் சந்திரா. லண்டனில் கல்விகற்று இந்தியா திரும்பிய இளம் காந்தி மும்பையில் வழக்கறிஞராக வேரூன்ற முடியுமா என்று முயன்று கொண்டிருந்த காலகட்டம் அது. டாக்டர் பிரஜ் ஜீவன் தாஸ் மேத்தாவால் காந்தி ராய் சந்திராவுக்கு அறிமுகம் செய்துவைக்கப்படுகிறார்.

சமண அறிஞரும் பின்னர் ஞானியாக அறியப்பட்டவருமான ராஜ் சந்திர மேத்தா ராஜ்காட்டில் பிறந்தவர். காந்திக்கு ராய்சந்த் எழுதிய ஆன்மீக விவாதக் கடிதங்கள் புகழ்பெற்றவை. சிறுவயதிலேயே சமணச் சிந்தனைகளில் ஆழமான ஈடுபாடு ஏற்பட்டது. விரிவாக கற்று துறவு மனநிலையில் இருந்தாலும் இல்லறத்திலேயே நீடித்தார். ராய்சந்த்  தன் 34 ஆவது வயதில் மரணமடைந்தார்.

ராய்சந்த்

ராய்சந்த் ஒரு நகைவணிகர். அரிய கற்களை மதிப்பிடுவதில் பெரும் நிபுணர். தினமும் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வணிகம் செய்துகொண்டிருந்தவர். ஆனால் அவர் அசாதாரணமான ஆன்மீக ஆற்றலுடன் இருப்பதை காந்தி அவதானிக்கிறார். அவர் ஒரு சதாவதானி. காந்தி அவரை கடுமையாக பரிசோதனை செய்கிறார். ராய்சந்த் கேள்விப்பட்டே இருக்காத பல்வேறு கவிதைகளையும் சட்டவாக்கியங்களையும் காந்தி சொல்ல ராய்சந்த் அவற்றை அப்படியே திருப்பிச் செல்கிறார்.

அவர்களின் உரையாடல் மெல்ல ஆன்மீகமாக திரும்பியது. ராய்சந்த் சமண மதத்தின் அடிப்படைக் கருத்துக்களில் ஆழமான ஈடுபாடு கொண்டவர். அவரிடமிருந்து காந்தி தன் முதல் ஞானத்திறவுகோலைப் பெற்றுக்கொண்டார். ஏற்கனவே காந்தி லண்டனில் ஈடுபாடு கொண்டிருந்த சைவ உணவு, இயற்கை சிகிழ்ச்சை போன்றவற்றுடன் ராய்சந்திராவின் கருத்துக்களும் கச்சிதமாகப் பொருந்திக்கொண்டன.

‘பல்வேறு மதத்தலைவர்களைச் சந்தித்துச் சலித்து போயிருந்தேன். மதம் சம்பந்தமான விவாதங்களில் நான் முழுமையாகவே ஆர்வமிழந்திருந்தேன். ஆனால் ராய்சந்திராவின் பேச்சு என்னை வசீகரித்தது. ராய்சந்திரா அளவுக்கு எவருமே என்னை கவர்ந்ததில்லை. அவரது சொற்கள் நேராக எனக்குள் புகுந்தன’ என்று காந்தி குறிப்பிடுகிறார். காந்தியைக் கடைசிவரை தொடர்ந்து வந்த கருத்துக்கள் ராய்சந்திரா உருவாக்கியவையே.

அகிம்சை என்பது கொல்லாமை என்பதல்ல என்று ராய்சந்திரா காந்திக்குச் சொன்னார். அகிம்சை என்பது சத்தியம், பிரம்மச்சரியம் இரண்டில் இருந்தும் பிரிக்கமுடியாதது. ஆசைகளை வெல்லாமல் அகிம்சையை அடைய முடியாது. காரணம் எல்லா ஹிம்சைகளும் ஆசைகளின் விளைவுகளே. அனைத்து ஆசைகளுக்கும் சாரமாக இருக்கும் ஆசை காமம்தான். காமத்தைக் கட்டுப்படுத்துபவன் பிற ஆசைகளை எளிதில் வெல்ல முடியும். ஆசைகளை வென்றவன் அகிம்சையை அடைகிறான். அகிம்சையே சத்தியத்திற்கான ஒரே பாதை.

தன் வாழ்நாள் முழுக்க காந்தி பிரம்மசரியம்-அகிம்சை- சத்தியம் மூன்றும் ஒன்றே என்று சொல்லிவந்தார். அகிம்சை வழியிலான தேசப்போராட்டத்தை முன்னின்று நடத்துபவர்கள் பிரம்மசரியம் பயின்றாகவேண்டும் என வாதிட்டார். அவரது பாலியல் சோதனைகளைப் பற்றிய விவாதங்கள் எழுந்த போது அந்தச் சோதனைகளை சத்தியத்திற்காகவே செய்கிறேன் என்று அவர் சொன்னார். சத்தியத்திற்காக எந்த எதிர்ப்புவந்தாலும் எதிர்கொள்வேன் என்று உறுதியாக அறிவித்தார்.

ஆனால் காந்தி தன் வாழ்க்கையின் கடைசிக்காலகட்டத்தில் வங்காள தாந்திரீகர்களால் ஈர்க்கப்பட்டிருக்கலாம் என்று படுகிறது. அவரது சுயசரிதையிலேயே அவர் சந்தித்த சில தாந்த்ரீகர்களைப்பற்றிய சிறிய குறிப்புகள் உள்ளன. கத்ரின் டிட்ரிக் அவரது ‘காந்தி அரசியல் மற்றும் ஆன்மீக வாழ்க்கை’ [ Gandhi: a political and spiritual life By Kathryn Tidrick] என்ற நூலில் காந்தியின் தாந்திரீகச் செயல்பாடுகளை அறிந்திருக்கக் கூடியவர்கள் என சுவாமி ஆனந்த் மற்றும் கேதார்நாத் ஆகியோரை குறிப்பிடுகிறார். ஆனால் அவர்களைப்பற்றி அதிகம் விஷயம் தெரியவில்லை. தாந்த்ரீகரான போலே பாபாவுடனும் காந்திக்கு நெருக்கம் இருந்தது. அவருடன் தன் மகன் ராமதாஸை இமயமலைப்பயணத்துக்கு காந்தி அனுப்பினார். காந்தியின் இந்த முகம் அதிகம் வெளியே தெரியாத ஒன்று.

தாந்த்ரீகம் காந்தியின் மேலைப்பாணி சிந்தனைக்கு நியாயமாகப் பார்த்தால் ஏற்புடையதாக இருந்திருக்காது. அவரது சமண, கிறித்தவ தத்துவ அடிப்படைகளுக்கும் அதற்கும் ஆழமான முரண்பாடே உண்டு.  தாந்த்ரீக வழிகளில் நம்பிக்கை கொண்டிருந்த பிரம்மஞான சங்கம் போன்றவற்றுக்கு முற்றாக எதிரானவராகவே காந்தி இருந்திருக்கிறார். ஆனால் நாம் காந்தியைப் போன்ற விசித்திரமான கிறுக்கரைப் பற்றி எதையும் சொல்லிவிட முடியாது.

 

இங்கே தாந்த்ரீகம் என்றால் என்ன என்பதைப்பற்றி எளிமையான விளக்கம். தாந்த்ரீகம் இந்திய மண்ணின் தொன்மையான பழங்குடி வழிபாட்டு முறைகளில் இருந்து உருவாகி வந்த ஒரு மரபு. பின்னர் தத்துவத்துடனும் பெருமதங்களுடனும் இணைந்து பல திசைகளில் வளர்ச்சிகண்டது. உலகமெங்கும் பழங்குடிகளில் தாந்த்ரீகம் போன்ற ஏதேனும் ஒரு  முறை இருப்பதை காணலாம். தந்திரீகம் என்ற சொல் மிகமிகப் பொதுப்படையானது. ஞானத்தை அடைய விரும்பும் ஒருவன் சடங்குகள் மூலம் சுயமேம்பாடு செய்துகொள்ளும் எல்லா வழிமுறைகளையும் ஒட்டுமொத்தமாக தாந்த்ரீகம் என்கிறோம்.

நவீன அறிவியலின் மொழியில் குறைந்தபட்சமாக இதை இவ்வாறு வரையறை செய்யலாம். ‘குறியீடுகள் மற்றும் குறியீட்டுச் செயல்பாடுகள் மூலம் ஆழ்மனத்தை பயிற்றுவித்து அதன் வல்லமையைப் பெருக்கிக் கொள்வதே தாந்த்ரீகம்’. ஆழ்மனம் குறியீடுகளை எளிதில் உள்வாங்கி பலவகைகளில் பெருக்கிக் கொள்ளக்கூடியது. குறியீடுகள் ஆழ்மனத்துடன் நேரடியாக உரையாடக் கூடியவை. ஆகவே தேவையான குறியீடுகளைக் கொண்டு ஆழ்மனத்தை விரும்பியபடி கட்டுப்படுத்த முடியும் என்று தொல்மக்கள் கண்டுகொண்டார்கள். அவர்களின் தெய்வ உருவங்களும் பலவகையான பூசைச்சடங்குகளும் இதற்காக அனுபவங்கள் மூலம்  தன்னிச்சையாக  உருவாகி வந்தவையே.

அந்த வழிமுறையை தத்துவார்த்தமான தெளிவுடன் மேலும் திட்டவட்டமான நோக்கங்களுடன் செய்வதே தாந்த்ரீகம். தாந்த்ரீகம் குறியீட்டுச் செயல்பாடுகளை கூர்ந்து கவனித்து மேம்படுத்தியபடியே வருகிறது. மேலும் மேலும் அதை விரிவாக்கம் செய்கிறது. காலப்போக்கில் அது ஒரு தனி மரபாக உருவம் கொண்டது. அதர்வ வேதத்திலேயே தாந்த்ரீகத்தின் தத்துவார்த்தமான தொடக்கம் இன்று நமக்குக் கிடைக்கிறது. சைவம், வைணவம் சாக்தம் போன்ற பெருமதங்களில் தாந்த்ரீகத்தில் ஊடுவலால் தனியான கிளைகள் உருவெடுத்தன. பௌத்தம் தாந்த்ரீகத்துடன் உரையாடி வஜ்ராயன பௌத்தம் என்ற கிளையை உருவாக்கியது. கீழைநாடுகளில் பரவிய பௌத்தம்  வஜ்ராயனத்தில் இருந்து விரிந்ததே.

தாந்த்ரீகம் எப்போதுமே அனைவருக்கும் உரிய ஒன்றாக இருந்ததில்லை. அது சாதகனுக்கு [பயில்பவனுக்கு] மட்டுமே உரியது. மெய்மையை தன்னுள் இருந்து அடைவதற்காக அனைத்தையும் தியாகம் செய்ய தயாராக இருப்பவனுக்குரியது தாந்த்ரீகம். அந்த தேடலின் பொருட்டு அது எதைவேண்டுமானாலும் செய்யலாம். பாவபுண்ணியங்கள்,  ஒழுக்கம்  அறம், கருணை போன்றவற்றையெல்லாம் அது தாண்டலாம் என்று சொல்லப்பட்டது. சைவத்தில் காளாமுகர், காபாலிகர்கள், அகோரிகள் போன்ற ஏராளமான பிரிவுகள் உண்டு.

தாந்த்ரீகம்  ஓவியம், கட்டிடம், சிற்பம் போன்ற கலைகளில் பெரும் பங்களிப்பாற்றிய மரபாகும். நம்முடைய கோயில்சிற்பங்களில் பெரும்பாலானவை தாந்த்ரீகத்தால் உருவாக்கப்பட்ட குறியீட்டுருவங்களே. நமது கோயில்கட்டிட அமைப்பிலும் தாந்த்ரீகத்தின் பெரும்பாதிப்பு உண்டு. நமது வழிபாட்டுச்சடங்குகளும் தாந்த்ரீகத்தை ஒட்டி உருவானவைதான். ஸ்ரீசக்ரம், மேரு என நாம் வழிபடும் பல சின்னங்கள் முழுக்க முழுக்க தாந்த்ரீக மரபால் உருவாக்கப்பட்டவை.

பத்தாம் நூற்றாண்டு முதல் தாந்திரீகம் சைவத்திலும் வைணவத்திலும் முக்கியத்துவம் இழந்ததற்கு பக்திமார்க்கமே காரணம். பக்தி மார்க்கம் எளியவர்களுக்காக மதத்தை கொண்டுசென்ற இயக்கம். மதத்தை அது கலைகளாக இலக்கியமாக மாற்றியது. கொண்டாட்டங்களாகவும், திருவிழாக்களாகவும், பண்டிகைகளாகவும் ஆக்கியது. தத்துவங்களை எளிய புராண வடிவங்களாக ஆக்கியது.  ஆகவே அது முழுக்க முழுக்க தாந்த்ரீகத்தை நிராகரித்தது. பல இடங்களில் தாந்த்ரீகர்கள் பக்திமார்க்கத்தின் முன்னோடி ஞானிகளால் துரத்தியடிக்கப்பட்டிருக்கிறார்கள்.

பக்தி இயக்கம் தாந்த்ரீகச் சடங்குகளை அவற்றின் செயல்முறைப் பொருளை மாற்றியமைத்து பூசைச்சடங்குகளாக ஆக்கியது. இப்போது நாம் செய்யும் பூசைச் சடங்குகளில் கணிசமானவை தாந்த்ரீக மூலம் கொண்டவை. உதாரணமாக தேங்காய் உடைப்பது, வெற்றிலைபாக்கு படைப்பது, செந்தூரம் களபம் போன்றவற்றை  சமர்ப்பிப்பது போன்றவற்றைச் சொல்லலாம்.

ஆனால் சாக்த மதத்தில் மட்டும் தாந்த்ரீகம் அப்படியே நீடித்தது. சாக்தம் பக்தி இயக்கத்தால் அதிகம் பாதிக்கப்படாத மதம். சாக்தம் வலுவாக வேரூன்றிய இடங்கள் வங்கமும் கேரளமும் ஓரளவுக்கு ஒரிஸாவும். அங்கே உள்ள ஆலயங்கள் தாந்த்ரீக முறைப்படியே இன்றும் வழிபாடு செய்யப்படுகின்றன. தாந்த்ரீகம் இன்று மெல்ல மெல்ல அதன் நேரடித்தன்மையை இழந்து ஒருவகை  சடங்காக ஆகிவிட்டாலும்கூட இந்தியாவில் எப்போதும் அதன் இடம் இருந்துகொண்டே தான் இருக்கிறது.

தாந்த்ரீகத்தின் அறிதல்முறையை கச்சிதமான சொற்களில் ஓஷோ ‘அறிதல்மூலம் கடந்துசெல்லல்’ என்று சொல்கிறார். அறிதலே ஒன்றை வெல்வதற்கான வழி.  ஒன்றை தவிர்ப்பதன்மூலம் நாம் அதைப்பற்றி அறியாமல் இருக்கிறோம். அறியாமை அச்சத்தை உருவாக்குகிறது. நாம் அஞ்சும் விஷயங்களுக்கு நாம் அடிமை. அறிந்த விஷயங்களுக்கு நாம் அதிபர்கள்.

ஆனால் அறிவதற்காக அனுபவங்களில் மூழ்குபவர்கள் அவ்வனுபவங்களை அறிவதில்லை, அவர்கள் அனுபவங்களுக்குள் இருக்கிறார்கள். ஆகவே விலக்கம் கூடிய அனுபவமே அறிதலாக ஆக முடியும். அது அறிவதற்காக மட்டுமே ஒன்றை அனுபவித்தல். அதாவது காமத்தை பரிபூரணமான புலனடக்கம் வழியாக அறிய முயல்தல். அந்நிலையில் அறிதல் என்பது குறியீட்டனுபவம் ஆக மாறிவிடுகிறது. எனவே தாந்த்ரீகம் குறியீடுகளை விரித்தெடுக்கிறது.

தாந்த்ரீகத்தில் இரு பெரும் பிரிவுகள் உண்டு. வாமமார்க்கம் [இடது வழி] , தட்சிண மார்க்கம் [வலதுவழி] வாம மார்க்கம் என்பது நேரடியான நிலையில் குறியீடுகளை கையாள்வது. ஐந்து மகாரங்கள் அதன் சடங்குகளின் இன்றியமையாதவை எனப்படுகின்றன. மது, மாமிசம், மாவு, மந்திரம், மைதுனம் [உடலுறவு] வாம மார்க்கம் மனிதனை அவனது பலவீனங்களை நேருக்கு நேராகப்பார்த்து வாளால் வெட்டச்செய்கிறது. ஆகவே வாம மார்க்கம் என்பது உதிரம் தோய்ந்த வாள் எனப்படுகிறது.

தட்சிண மார்க்கம் என்பது குறியீடுகளை மேலும் உன்னதப்படுத்தி நுண்ணிய நிலையில் பயன்படுத்துவது.  வாமமார்க்கம் உதிரபலியை செய்கிறது.  தட்சிண மார்க்கம் அதற்கு பறங்கிக்காயும் செந்தூரமுமே போதும் என நினைக்கிறது. தட்சிண மார்க்கத்தின் குறியீடுகளும் ஆசாரங்களும் மேலும் கவித்துவமானவை, மென்மையானவை. தட்சிணமார்க்கம் பொன்னாலான வாள் என்று சொல்லப்படுகிறது. வாம மார்க்கம் அந்தப்பெயர் சுட்டுவதுபோலவே இந்தியாவின் இடது பகுதியான வங்கத்தில் பிரபலமானதாக இருந்தது. தட்சிணம் அப்பெயர் சுட்டுவதுபோல தென்னிந்தியாவில்.

காந்தியின் காமம் சார்ந்த சோதனைகளை பின்னர் ஆராயும் பேராசிரியர் நிக் கீர் அவரது  ‘அகிம்சை என்னும் விழுமியம், கௌதமர் முதல் காந்திவரை’   [ The Virtue of Non-Violence: from Gautama to Gandhi Nick Gier] என்ற நூலில் காந்தி தட்சிண மார்க்கத்தைச் சேர்ந்த ஏதேனும் சில சடங்குகளை தனக்கேற்ற முறையில் மாற்றிக்கொண்டிருக்க வேண்டும் என்று கருதுகிறார்.

உண்மையில் தாந்த்ரீகச் சடங்குகளுக்கு நியதமான நூல்களோ வகுக்கப்பட்ட முறைகளோ இல்லை. அவை அந்தந்த குருகுல முறைமைப்படி அவ்வப்போது உருவாக்கப்படுபவையே. இந்தியாவெங்கும் பல்லாயிரம் வகையான தாந்த்ரீகப் பயிற்சிகள் உள்ளன. தாந்த்ரீகர்கள் ரகசியம் பேணுபவர்கள் ஆதலால் அவை வெளிப்படுத்தப்படுவதும் இல்லை. தாந்த்ரீகம் குறித்து எழுதிய ஆர்தர் ஆவலோன் முதல் அகேகானந்தபாரதி வரையிலான மேலைநாட்டு ஆய்வாளர்கள் அவர்களிடம் பேசத்தயாராக இருந்த சில இரண்டாம் தர தாந்த்ரீகர்களை அடிப்படையாகக் கொண்டே அதை விவரித்திருக்கிறார்கள்.

காந்தி  1936 வாக்கில் பெண்களை தன்னுடன் படுக்க வைக்க ஆரம்பித்தார். சிலசமயம் தன் இரு பக்கங்களிலும் அவர் பெண்களை படுக்க வைத்தார். அந்தப்பெண்கள் அவரது ஆசிரமத்தில் இருந்த இளம்பெண்கள். கிட்டத்தட்ட பத்து வருடம் காந்தி இதைச் செய்திருக்கிறார். ஆரம்பத்தில் இது அவரது இயற்கை சிகிழ்ச்சைமுறையின் பகுதி என்று சொல்லப்பட்டது. பின்னர் அவர் அதைப்பற்றிய சலசலப்பு எழுந்தபோது தன்னுடைய பிரம்மசரியத்தை சோதனை செய்துகொள்வதற்காக அவற்றைச் செய்தார் என்று விளக்கப்பட்டது. ஆனால் காந்தி தெளிவாக அதை விளக்கவில்லை. ஆகவே இன்றும் அது ஒரு மர்மமாகவும் பலவகையான ஊகங்கள், அவதூறுகள், வசைகளுக்குக் காரணமாகவும் நீடிக்கிறது.

காந்தியின் இந்த சோதனைகளைப்பற்றி காந்திய ஆய்வாலாரான பிக்கு பரேக் அவரது ‘காலனியாதிக்கம் மரபு சீர்திருத்தம் -காந்தியச் சொல்லாடலைப்பற்றிய ஆய்வு [Bhikhu Parikh, Colonialism, Tradition, and Reform: An Analysis of Gandhi’s Political Discourse] என்ற நூலில் ஆராய்கிறார். இந்நூலின் சிலபகுதிகளை நாகார்ஜுனன் மொழியாக்கம் செய்திருக்கிறார். 

1946-ல் டிசம்பர் இருபதாம் தேதி முதல் காந்தியும் உறவில் அவரது பேத்தியான மனுவும் ஒரே படுக்கையில் நிர்வாணமாக உறங்க ஆரம்பித்தார்கள் என்கிறார் பிக்குபரேக். காந்தி மனுவிடம் இந்த விஷயத்தை அவளே தன் தந்தைக்கு கடிதமெழுதி தெரிவிக்க ஆணையிட்டார். மேலும் மனு என்ன நினைக்கிறாள் என்பதை ஒவ்வொரு நாளும் ஒரு நோட்டுபுத்தகத்தில் எழுதி காந்தியிடம் காட்டி கையெழுத்து பெறவேண்டும் என்றார்

இங்கே தெரியும் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் காந்தியுடன் மனு தான் என்ன செய்யப்போகிறோம் என்று தெரிந்து மிக வெளிப்படையாகவே அந்தச் சோதனைகளில் ஈடுபடுகிறார் என்பதே. மனுவை அல்லது பிற பெண்களை காந்தி ‘பயன்படுத்திக்’ கொண்டார் என்று சொல்வதில் எந்தப்பொருளும் இல்லை. அவர்கள் எவரும் தங்கள் வாழ்க்கையில் பிற்காலத்தில் ‘உளச்சிக்கல்களுக்கு’ ஆளாகவும் இல்லை. அவர்களுடைய வாழ்க்கை ஆன்மீகமாக நிறைவுகொண்டதாகவே இருந்தது.

இந்தப்பரிசோதனை தொடங்கிய மூன்று வாரங்களில், 1947 ஆண்டு ஜனவரி எட்டாம் தேதி காந்தி கிருஷ்ணதாஜ் தஞி என்ற நண்பருக்கு எழுதிய கடிதத்தில் இதைப்பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். ‘இது கடுமையான சோதனை ஆனால் அதிகமான பயனுள்ளது’ என்று காந்தி குறிப்பிட்டார்.

காந்தியின் பரிசோதனைகள் அதுவரை அதிகமும் வெளியே தெரியாமல் இருந்தன. இந்தக் காலகட்டத்தில் அவை பெரும் சர்ச்சைக்குள்ளாகி காந்தியைப் பின்பற்றியவர்களால் கடுமையாக விமரிசிக்கப்பட்டன. நேரு பட்டேல் உட்பட அனைவருக்கும் இந்த சோதனைகள் குறித்து ஆழமான மனத்தாங்கல் இருந்தது என்று பிக்கு பரேக் குறிப்பிடுகிறார்.   

காந்தியின் இந்தச் செயலைப்பற்றி சில விஷயங்களை நாம் கவனிக்கவேண்டும். ஒன்று, காந்தி இதை ரகசியமாகச் செய்யவில்லை. மிகமிக வெளிப்படையாக செய்தார். ஆசிரமத்தில் அவர் பெண்களுடன் படுக்கும் இடம் கதவுகள் இல்லாதது. எவரும் உள்ளே செல்லத்தக்கது. இரண்டு, காந்தியின் உடன் படுத்த வயது வந்த பெண்கள் ஆசாரமானவர்கள். எவருமே அதை எந்தவகையிலும் பிழையாக உணரவில்லை. சொல்லப்போனால் பின்னர் இது ஒரு வம்பாக ஆனபோது அவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள்.

அந்தப்பெண்களின் மனநிலையை அவர் கருத்தில் கொள்ளவில்லை என்று இன்று சிலர், பெண்ணியர்கள் குறிப்பாக, சொல்கிறார்கள். ஆனால் உண்மையில் அப்பெண்கள் அதை மிக இயல்பான ஒரு செயலாகவே குறிப்பிடுகிறார்கள். காந்தியுடன் படுத்தவரான சுசீலா நய்யார் ‘அக்காலத்தில் எல்லாம் அதை ஓர் இயற்கைச் சிகிழ்ச்சை என்றே பாபு சொன்னார். அவரது முதுகின்மீது நாங்கள் படுத்துக்கொள்வோம். பாப்பு உடனே தூங்கிவிடுவார். அன்றும் இன்றும் இதில் என்ன பிழை இருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை” என்று சொன்னார்.

 

 காந்தி, மீராபென்

இதைப்பற்றி எழுதிய மேலை ஆய்வாளரான நிக் கீர் காந்தியின் ஆசிரமத்தில் இருந்த பெண்கள் காந்தியிடம்தான் எந்தவகையான பாலியல் சங்கடமும் இல்லாத இயல்பான உறவை அடைந்ததாகச் சொல்லியிருப்பதை பதிவுசெய்திருக்கிறார். மனு காந்தியுடன் படுக்கும்போது அவரை தன் அம்மாவாக உணர்ந்ததாகச் சொன்னார், கவனிக்கவேண்டியது அப்பாவாக அல்ல என்பதே. அவரிடமிருந்து எவ்வகையான பாலியல் செயல்பாடும் சலனமும் அவர்களின் கவனத்துக்கு வரவில்லை. ஆகவே அவரே ஒருமுறை தனக்கு இரண்டுமுறை பாலியல் எழுச்சி ஏற்பட்டதாகச் சொன்னபோது மனு சற்று குழப்பம் அடைந்தார். ஆனால் கடைசிவரை அவருக்கு காந்தி அன்னையாகவே இருந்தார்.

இங்கே இன்னொன்றும் கவனிக்க வேண்டும். இந்த பாலியல் சோதனைகளைத் தொடங்கும்போது காந்திக்கு அறுபது வயது. மிகமிகக் கடுமையான உண்ணாவிரங்கள் மூலம் அவர் தன் உடலை ஒடுக்கிக் கொண்டிருந்தார். இரண்டுமுறை அவர் மரணத்தின் விளிம்புவரைச் சென்ற உண்ணாவிரதங்களைச் செய்திருக்கிறார். மௌனவிரதங்கள் இருந்தார். அவரது உடல் மெலிந்து உலர்ந்து அவர் நாம் இன்று நினைவில் பேணும் உருவத்தை அடைந்தது. ஆனால் அபாரமான உடல்பலமும் சுறுசுறுப்பும் கொண்டவராகவும் இருந்தார். குறைவாகவே தூங்கினார். பிரார்த்தனைக் கூட்டங்களுக்கு மேலாக தினமும் ஒருமணிநேரம் வரை தியானம் செய்தார்.

இக்காலகட்டத்தில் உணவிலும் சுயமருத்துவத்திலும் பலவகையான சோதனைகளைச் செய்தார். அவற்றில் பல கிறுக்குத்தனமானவை என்றே எனக்குப் படுகிறது. ஒன்று தினமும் எனிமா கொடுத்துக் கொள்ளுதல், அதிலும் உப்புநீரால்.  அது மிகமிகத் தவறான ஒரு செயல்பாடு. மலக்குடலைச் செயலிழக்கச்செய்வது. இன்னொன்று சிறுநீரை காலையில் வெறும் வயிற்றில் குடித்தல். அதுவும் அபத்தம். சிறுநீர் மருத்துவம் என்று ஒன்றைப்பற்றி சொல்கிறார்கள். ஆனால் அதன்படிக்கூட உண்ணாவிரதம் இருந்து சிறுநீரில் யூரியா அதிகரித்த நிலையில் அதை குடிப்பது மடத்தனமானது. ஒவ்வொரு நாளும் தன் மலத்தை அவதானித்து குறிப்புகள் எடுத்து வைத்தார். அவர்  அவரது பாணியில் தன் உடலை வைத்து எதையோ செய்துகொண்டிருந்தார். என்ன செய்தார் என்று அவருக்கே வெளிச்சம்.

காந்தியின் பாலியல் சோதனைகள் காங்கிரசுக்குள் எப்போதும் விவாதத்திற்குரியனவாக இருந்தன. அவர் அவற்றைப் பொருட்படுத்தவில்லை. 1946-ல் அவரது வாழ்வின் இறுதிக்காலத்தில் அவர் வங்கத்தில் நவகாளி யாத்திரை மேற்கொண்டபோது அவருக்கு வங்கமொழிபெயர்ப்பாளராக வந்த  நிர்மல்குமார் போஸ் என்பவர் காந்தி பெண்களுடன் படுப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் அதை காந்தியிடமே நேரில் கேட்டபோது காந்தி சொன்ன பதில் அவருக்கு திருப்தி அளிக்கவில்லை.

1953-ல் போஸ் காந்தியின் இந்தப் பரிசோதனைகளைப் பற்றி காந்தியுடன் எனது நாட்கள் என்ற நூலை எழுதிவெளியிட்டார் [ Nirmal Kumar Bose in My Days with Gandhi] அது பரபரப்பை உருவாக்கியது. இச்சோதனைகள் பரவலாக மக்கள்முன் சென்றது இக்காலத்திலேயே. இந்தியாவில் இந்நூலின் பரபரப்பு விரைவில் அடங்கினாலும் மேலைநாடுகளில் இது பரவலான கவனத்தைப்பெற்றது. அதேபோல காந்தியின் தனிச்செயலாளாராக இருந்த ஆர்.பி.பரசுராமும் காந்தி வெளிப்படையாகவே மனுவுடன் படுப்பதைக் கண்டு ராஜினாமா செய்தார். அவரது பேட்டிகளும் சர்ச்சைக்குள்ளாயின.

ஆனால் காந்தி அதற்குள் கொல்லப்பட்டிருந்தார். அவரது கடைசிக்காலமும் மரணமும் ஒரு தீர்க்கதரிசியின் இடத்தை அவருக்களித்தன மதப்பிரிவினையால் ஒருவரோடொருவர் குரோதம் கொண்டு மோதி அழிந்து கொண்டிருந்த மக்கள்நடுவே அன்பின், அகிம்சையின் விண்ணப்பத்துடன் காந்தி தெருத்தெருவாக அலைந்தார். அவரது வாழ்க்கையின் துயரம் மிக்க தருணங்கள் அவை. மனிதனின் நல்லியல்புகளைப் பற்றிய தன்னுடைய நம்பிக்கைகள் கண்ணெதிரே சிதைவதை காந்தி கண்டார். ஆனாலும் அவர் மனிதனின் ஆன்மாவை நம்பினார். அகிம்சையில் இருந்த நம்பிக்கையை விட மறுத்தார்.

அதைவிட அவரை அதுவரை மகாத்மா என கொண்டாடிய  மக்களே அவரை இகழ்ந்தார்கள், வெறுத்தார்கள். தான் ஒரு இந்து ஆன ஒரே காரணத்தால் இந்துக்கள் முஸ்லீம்களைக் கொல்லும் இடத்தில் வந்து உயிரைப் பணயம் வைத்து அதைத்தடுப்பதே தன் கடமை என அவர் நம்பினார். ஆனால் பழிவாங்கும் வெறி கொந்தளித்துக் கொண்டிருந்த இந்துக்கள் அவரை மதத்துரோகி என்றார்கள். ‘முஸ்லீம்கள் பலமடங்கு மக்களைக் கொல்கிறார்கள், கற்பழிக்கிறார்கள், அங்கே சென்று அவர்களிடம் உங்கள் அகிம்சையை உபதேசியுங்கள்’ என்றார்கள். முஸ்லீம்களோ அவரை ஒரு கா·பிர் என்று மட்டுமே எண்ணினார்கள். 

ஆபா காந்தி

அக்காலத்தில் தினம் நூறுபேராவது காந்தியிடம் செத்து ஒழியுங்கள் என்று சொன்னார்கள். அவரை நேசித்தவர்கள்கூட அவர் அரசியலை விட்டுவிட்டு சன்னியாசம் போகவேண்டும் என்றார்கள். மனம் உடைந்த நிலையில் காந்தி இருந்தார். இறந்து போவதே மேல் என்ற எண்ணம் அவருக்கு வலிமையாகவே உருவாகியிருந்தது. அதை சொல்லவும் செய்தார். ஆனால் தன் அகச்சான்று எதைச் சொன்னதோ அதைத்தான் அவர் செய்தார்.

ஆச்சரியமாக அந்த நிலையிலும் அவரது சுய சமர்ப்பணம் வேலைசெய்தது. அந்தக்கால வரலாற்றாசிரியர்கள் இதழாளர்கள் அனைவருமே பெருவியப்புடன் அதைப் பதிவுசெய்தார்கள். சென்ற இடங்களில் எல்லாம் அமைதியை உருவாக்க அவரால் முடிந்தது. ஒவ்வொருநாளும் பல்லாயிரம்பேர் அவருக்காக வன்முறையை கைவிட்டார்கள். சகோதரத்துவ உறுதி எடுத்துக்கொண்டார்கள். அவரை மிகக்கடுமையாக விமரிசித்த வெள்ளையர் ஆதரவு இதழ்கள்கூட அதை ‘காந்தி மேஜிக்’ என்று எழுதின.

பற்பல உண்ணாவிரதங்கள் மூலம் உடல்நலம் மிக நலிந்து நடக்கமுடியாத நிலையில் இருந்தார் காந்தி. தன்னுடன் துணைக்கு எவரையுமே கூட்டிச்செல்லாமல் தன் பேத்தி வயதான மனுவுடன் கொலையும் கலவரமும்  ஒவ்வொரு நாளும் நடந்துகொண்டிருந்த நவகாளியில் பயணம் செய்தார். அவரை நம்பிச்சென்ற மனு எவ்வித அச்சமும் அடையவில்லை, தன் அன்னையுடன் இருப்பதாகவே உணர்ந்தார். அப்போது காந்திக்கு 77 வயது. அனைத்து வகையிலும் கனிந்த கிழம். இந்த நாட்களில்தான்  நிர்மல் குமார் போஸ் காந்தி மனுவுடன் சேர்ந்து வெளிப்படையாகப் படுப்பதைப் பார்க்கிறார்.

அந்தக் காட்சி நிர்மல் குமார் போஸ் மனதில் அத்தனை பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பதுதான் உண்மையில் சிந்திக்க வேண்டிய விஷயம். அவரது மனம் எதிர்மறை ஒழுக்கவியலால் மூடப்பட்டிருக்க வேண்டும் என்றே நான் நினைக்கிறேன். அது ஒரு விக்டோரிய ஒழுக்கவியல் அடிப்படைவாதம் அன்றி வேறல்ல. இன்றும் இந்தியாவில் பெரும்பாலானவர்களின் மனத்தை ஆள்வது அந்த இருண்ட ஒழுக்கவியலே.

அந்த  மனநிலையில் நின்றுதான் நிர்மல்குமார் போஸ் தன் நூலை எழுதியிருக்கிறார். அந்நூலைப்பற்றிச் சொல்லும்போது சுசீலா நய்யார் நிர்மல்குமார் போசின் மனம் ‘அழுக்கு பிடித்தது’ என்கிறார். உண்மை, அறியாமை என்ற அழுக்கு. ஆகவேதான் அந்த நவகாளி யாத்திரையின் மாபெரும் சோகநாடகத்தைவிட [ இயேசு கல்வாரியில் சிலுவைநோக்கிச் சென்ற பயணத்துக்கு நிகரானது அது] அந்த காட்சி நிர்மல்குமார் போஸுக்கு முக்கியமாகப் பட்டிருக்கிறது.

இத்தனைக்கும் நிர்மல்குமார் போஸுக்கு காந்தியின் நோக்கங்கள் குறித்த எந்தவிதமான ஐயமும் இருக்கவில்லை. அவர் ”காந்தியின் தரப்பில் ஒழுக்கமீறல் என்று எதுவுமே இருக்கவில்லை. பிரக்ஞ்ஞை பூர்வமாக தன்னை ஒரு பெண்ணாக, அன்னையாக ஆக்கிக்கொண்டு காமத்தை கடந்துவிட அவர் முயன்றார். அவர்கள் ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் அந்தக்கோணத்திலேயே தன்னுடன் படுக்கவைத்தார்” என்கிறார் போஸ்.

பின்னர் வேத் மேத்தா அவரது ‘காந்தியும் அவரது சுவிசேஷகர்களும்’ என்ற நூலில் [Mahatma Gandhi and His Apostles – Ved Mehta] காந்தியின் இந்தச் சோதனைகளைப்பற்றி நக்கலாக எழுதினார்.  நிரத் சௌதுரி, வேத் மேத்தா, வி.எஸ்.நைபால்  போன்ற ஆங்கில எழுத்தாளர்கள் ஆங்கிலேயர்களாக மாறி தங்களை ‘நாகரீக’ப்படுத்திக்கொள்ள முயன்றவர்கள். இந்தியா அவர்களுக்கு கிண்டலுக்குரிய ஓர் இருண்ட கண்டம் மட்டுமே. அவர்கள் வாசகர்கள் அவர்களிடம் எதிர்பார்த்ததும் அந்த கிண்டலை. வேத் மேத்தாவின் இடுங்கிய மனத்தால் இத்தகைய நுட்பமான விஷயத்தை கையாளமுடியாது. அவரது அடித்தளமில்லாத இலக்கிய உலகம் இவ்விஷயத்தை தாங்கவும் தாங்காது.

காந்தியின் இந்தச் சோதனைகளை எவ்வாறு புரிந்துகொள்வது? இன்றைய வாசகன் அவனுடைய நவீன ஒழுக்கவியலை காந்தியின் இச்செயல்கள் கடுமையாகச் சீண்டுவதையே உணர்வான். நானும் மிக இளம் வயதில் அவ்வாறு சீண்டப்பட்டிருக்கிறேன். ஆனால் அதைக்குறித்து மிக விரிவாக விவாதிக்க உகந்த ஆசிரியர்கள் எனக்கு அமைந்தார்கள். மெல்ல மெல்ல ஒரு தெளிவை நோக்கி நான் செல்ல முடிந்தது. அது அனைவருக்கும் சாத்தியமல்ல.

மேலும் நமக்கு சமகாலத்து மேலோட்டமான பக்திமரபு புனிதர்களைப்பற்றிய ஒருவகையான மனப்பிம்பத்தை உருவாக்கி அளித்துள்ளது. அவர்கள் புனிதர்களாக ஆனவர்கள் அல்ல, புனிதர்களாகவே  அவதரித்தவர்கள் என்று நாம் நம்புகிறோம். மிகச்சாதாரணமான சாமியார்களைப்பற்றி அல்லது மடாதிபதிகளைப்பற்றி எழுதும்போதுகூட நாம் அவர்களின் அவதார மகிமையைப் பற்றியே எழுதுகிறோம். ஆன்மீகமான தத்தளிப்பு, தேடல் போன்றவை நமக்கு தெரிவிக்கப்படவே இல்லை. நாம் அவர்களில் ஒரு புனிதராக காந்தியையும் புரிந்து வைத்திருக்கிறோம். நமக்கு இந்த தகவல்கள் ஆழமான அதிர்ச்சியையே அளிக்கும்.

எளிய மனப்பிம்பங்களைத்தாண்டி உண்மையை உணரும் மனநிலையுடன் அணுகவேண்டிய ஒரு தளம் இது. காந்தியை நிராகரிப்பதென்றால் எளிதில் இங்கே நிராகரித்துவிடலாம். புரிந்துகொள்வதென்றால் மேலே செல்லவேண்டும்.

[மேலும்]

நாகார்ஜுனன் இணையப்பக்கம்

ராய்சந்த் வரலாறு

 

காந்தியும் காமமும் – 1

முந்தைய கட்டுரைதெருநாயும் பிராமணியமும்:ஒருகடிதம்
அடுத்த கட்டுரைமுறையீடு,கடிதங்கள்