தசாவதாரம்:இருகடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்

தசாவதாரம் பற்றிய உங்கள் கட்டுரை/கடிதத்தைக் கண்டேன். மேலோட்டமான ஒரு நல்லெண்ணப் பார்வையை அளித்து எழுதப்பட்ட ஒரு கட்டுரை அது. அந்தப் படம் முழுக்க முழுக்க ஒரு வைணவ அடிபப்டைவாத நோக்கு கொண்ட படம் என்பதே உண்மை. கமல் அவரது மேலோட்டமான நாத்திகவாதம், நோகாத கிண்டல் ஆகியவற்றின் மூலம் தனது வைணவவாதத்தை மூடிவைத்திருக்கிறார் என்றுதான் நான் நினைக்கிறேன். இதில் அவரது புத்திசாலித்தனம், தர்மசங்கடம் இரண்டுமே தெரிகின்றன.

ஒரு சினிமாவை அதில் என்ன சொல்லபப்ட்டிருக்கிறது என்றல்ல என்ன காட்டப்பட்டிருக்கிறது என்பதை வைத்தே மதிப்பிடவேண்டும். தசாவதாரம் படத்தில் பெருமாள் எப்படிக் காட்டப்பட்டிருக்கிறார் என்று மட்டும் பார்த்தால் போதும். குறிப்பாக இடைவேளைக்காட்சி. காவேரியில் விழும் பெருமாள்சிலை நேர் குத்தாக கிட்டத்தட்ட ஒரு பிரதிஷ்டை போல விழுகிறது. அதன் பின்னணியில் உணர்ச்சிகரமான இசை அதை அடிக்கோடிடுகிறது. படம் முழுக்க பெருமாள் இவ்வாறு புனிதமாகவும் உணர்ச்சிகரமான காட்சிகளுடனும்தான் காட்டப்பட்டிருக்கிறார்.

இந்தப்பின்னணியில் நாம் முதல்பகுதி காட்சிகளைப் பார்க்கவேண்டும். சைவர்த்துறவிகள் அகோரிகள் போலவும் காபாலிகர்கள் போலவும் காட்டப்பட்டிருக்கிறார்கள். கிருமிகண்டசோழன் மட்டுமல்ல அவனுடன் வரும் சைவர்களும் கழுவில் தொங்கும் வைணவ அர்ச்சகரை கல்லால் அடிக்கிறார்கள், எந்த இரக்கமும் இல்லாமல்.

பன்னிரண்டாம் நூற்றாண்டில் பிரிந்த தம்பதியை [மறுபிறவி?] பெருமாள் அவரே பொங்கிவந்து காப்பாற்றுகிறார். மனித முயற்சிகள் கைமீறிப்போன கணத்தில் பெருமாள் விசுவரூபம் கொண்டு வருகிறார். அழிக்கும் சக்தியாக பெருமாள் வருவதும் வைணவ மரபுக்கு ஏற்றதுதானே?

இங்கே கமலஹாசனின் மூளை முரண்படுகிறது. அதைத்தான் கோவிந்த் கேட்கிறான். இங்கே இபப்டி மனிதர்கள் கிருமியை கண்டுபிடிப்பான் என்று பல லட்சம் வருடங்களுக்கு முன்னரே பெருமாள் கண்டத்தட்டுகளை சரியாக அடுக்காமல் விட்டுவிட்டாரா? அதற்கான பதிலை முதலிலேயே சொல்லியபடித்தான் படமே தொடங்குகிறது. கேயாஸ் தியரி. பட்டாம்பூச்சி சிறகடித்தபடியே உள்ளது. பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துமெ ஒன்றுடன் ஒன்று இணைந்துள்ளன.  கேயாஸ் தியரியை பெருமாளின் லீலைக்கான நவீனகால விளக்கமாகச் சொல்லி படத்தை முடிக்கிறார்.

இதில் அடிபடுவதென்னவோ சைவர்கள்தான்.

சிவ. குருநாதன்

[என்பெயர் குருநாதன் அல்ல சிவ.குருநாதன்]
[தமிழாக்கம்]

**
அன்புள்ள ஜெயமோகன்,

தசாவதாரம் பற்றிய உங்கள் கட்டுரை தெளிவாக இருந்தது. மத மோதல் இங்கே எப்போதுமே பெருமளவிலால வன்முறை நோக்கிச் சென்றதில்லை. அதற்கான காரணங்கள் என்ன என்று ஆராயலாம். இங்குள்ள மதங்கள் மேலைநாட்டு மதங்கள் போல பெரிய நிறுவனங்கள் அல்ல என்பது காரணமாக இருக்கலாம். இங்குள்ள மக்கள் பலவகைப்பட்ட நம்பிக்கைகளை ஒரேசமயம் கொண்டிருக்கும் பயிற்சி கொண்டவர்கள் என்பது காரணமாக இருக்கலாம். அனைத்துக்கும் மேலாக இங்குள்ள மதங்கள் எவையும் ஒரேதெய்வ வழிபாட்டுக் கொள்கை கொண்டவை அல்ல என்பது காரணமாக இருக்கலாம். பலதெய்வக் கோட்பாடு இயல்பாகவே சமயப்பொறுமையைக் கொண்டுவந்துவிடுகிறது.

சமணம் கொலைமூலம் அழிக்கப்பட்டது என்று சொல்பவர்களை எண்ணி வருத்தம் கொள்கிறேன். இத்தகைய ஆய்வுகளை எல்லாம் ஒரு pan indian view இல்லாமல் செய்வது முட்டாள்தனம். இந்தியாவில் எங்காவது சமணத்துக்கும் பௌத்தத்துக்கும் எதிரான பெரும் வன்முறைகள் நடந்தது பதிவாகி உள்ளதா? முக்கியமான வன்முறை மூலம் எந்த மதமாவது அழியுமா? இதையெல்லாம் யோசிக்க வேண்டும். நம்முடைய எழுத்தாளர்கள் பலர் அன்னியர் எழுதியதெல்லாமே உண்மை என்று நம்பும் மனப்பிராந்தி கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பது துரதிருஷ்டவசமானது

ஸ்ரீனிவாசன்

 தசாவதாரம்
 

முந்தைய கட்டுரைதசாவதாரம்
அடுத்த கட்டுரைஒரு குட்டிக்கதை