அன்புள்ள ஸ்ரீ ஜெயமோகன்,
அந்த தெருநாயைப்பற்றிய உங்கள் உருக்கமான பதிவுக்காக உங்களை ஆசீர்வதிக்கிறேன். மிகச்சிலரே மனிதரல்லாத உலகத்தைப்பற்றி கவலைப்படுகிறார்கள். அவர்களுக்கு அவர்களின் சுயமைய உலகின் அன்றாடச்செயல்பாடுகளுக்கு அப்பாலுள்ளது அந்த உலகம்
நான் கடந்த 12 வருடங்களாக அடையாறு பெசண்ட் நகர் பகுதியில் தெருநாய்களை பராமரித்து வருகிறேன். நான் அவற்றுக்கு இரண்டுவேளை உணவு அளிக்கிறேன். வருடத்துக்கு ஒருமுறை தடுப்புமருந்தும் செலுத்துகிறேன். அவற்றின் எல்லாவகையான மருத்துவத்தையும் கவனித்துக்கொள்கிறேன். மிருகங்களுடன் நெருக்கமாகப் பணிசெய்பவள் என்ற வகையில் நீங்கள் ஒரு சிறிய விஷயத்தை உங்கள் இணையதளம் மூலம் செய்யமுடியும் என்று சொல்ல விரும்புகிறேன்
ஒரு மிருகத்தை துயரநிலையிலோ காயம்பட்ட நிலையிலோ விபத்து நடந்தபின்னரோ காணநேர்ந்தால் ப்ளூகிராஸ் இயக்கத்தை 2235 4959 மற்றும் 22300666. எண்களில் அழைத்து தகவல்தெரிவிக்கலாம். அவர்களுக்கு உங்கள் தொலைபேசி எண்ணையும் சரியான தபால் விலாசத்தையும் தெரிவிக்கவும். அது எவ்வகையிலும் உங்களுக்குப் பொறுப்பு ஆகாது என்று உறுதி அளிக்கிறேன். உடனே புளூகிராஸ் ஆப்ம்புலன்ஸ் அனுப்பி அந்த துயரப்படும் மிருகத்தை எடுத்துச்செல்லும்
இந்த உதவியைச் செய்ய முடியாதவர்கள் அந்த மிருகத்திடம் மென்மையாகவும் கருணையுடனும் பேசலாம். அது அந்த மிருகத்தை அமைதிப்படுத்தும். ஆம்புலன்ஸ் ஏதேனும் காரணத்தால் தாமதமாகியதென்றால் அந்த மிருகத்தை ஒரு சாக்கால் அல்லது பெரிய துணியால் மூடி ஒரு ஆட்டோவில் போட்டு வேளச்சேரி அருகே பூடுக்கோயில் என்ற இடத்தில் உள்ள புளூகிராஸ் நிறுவனத்துக்குக் கொண்டு செல்லல்லாம்.
இக்குறிப்பை எழுதியவருக்கு நான் நன்றியுடையவனாக இருப்பேன். வீடற்ற இம்மிருகங்களின் கொடூரமான வாழ்க்கையைப்பற்றிய விழிப்புணர்ச்சியை இது உருவாக்கும் என்று நினைக்கிறேன். வாசகர்களிடம் அவர்கள் உருவாக்கியிருக்கும் உலகை சற்றே திரும்பிப் பார்க்குமாறு கோருகிறேன். வேகமாக ஓடும் வாகனங்கள், கான்கிரீட் கட்டிடக்காடுகள், பிளாஸ்டிக்குகள், உணவற்ற குப்பைத்தொட்டிகள், கருணையற்ற அரசு நிர்வாகம்…
சென்னைதான் 1995ல் தெருநாய்களை கொல்வதற்கு தடைவிதித்த முதல் மாநகரம் என்று தெரியுமா? நாய்களுக்கான கருத்தடை திட்டமும் முதலில் இங்கேதான் வந்தது. அதன் வழியாக ரேபீஸ் இல்லாத முதல் நகரம் என்ற பெருமையும் இதற்கு வந்தது.
மனிதர்கள் தங்கள் இதயங்களை புறாக்கள் அணில்கள் சிட்டுக்குருவிகள் பூனைகள் பசுக்கள் ஓணான்கள் மற்றும் பூச்சிகளை நோக்கி திறக்க முடிந்தால் அவர்களின் மனதிலும் சிந்தனையிலும் மாற்றத்தைக் காண்பார்கள். அவர்கள் மிருகங்கள் மற்றும் உயிர்களின் பசி நோய் வீடில்லாமை போன்ற துயரங்களையும் மனிதர்களின் கொடுமைகளுக்கு ஆளாகவேண்டியிருக்கும் நிலைமையையும் உணர்வார்கள்.
இதை எழுதியவருக்கு ஆசிகள்.
ராதா ராஜன்
[ஆமாம், நீங்கள் பிராமணச் சிந்தனை கொண்டவர் என்று குற்றம்சாட்டிய அதே பெண்மணிதான். நான் ஒரு பிராமணர். பிராமணராகவே வளர்க்கப்பட்டேன். எனக்கு பாரம்பரியமாக அளிக்கப்பட்ட அடையாளத்தை துறக்கும் உரிமை எனக்கு இல்லை. என்னுடைய பெற்றோரை என் சாதியை என் மொழியை என் கிராமத்தை என் மதத்தை விட எனக்கு உரிமை இல்லை. ஆனால் இந்தச் சண்டையை இன்னொரு நாள் வைத்துக்கொள்வோம். கைவிடப்பட்ட மிருகங்களுக்காக நான் செய்யும் பணிகள் என் அரசியல் பணிகளுக்கு சமானமானவை]
அன்புள்ள ராதா ராஜன் அவர்களுக்கு,
உங்கள் கடிதத்தில் தெரியும் உண்மையான உயிர்க்கருணை மனநிறைவை அளிக்கிறது.
என்னுடைய கட்டுரை உயிர்க்கருணையைக் குறித்தது அல்ல. இயற்கையுடன் பிரிக்கமுடியாதபடி உள்ள வன்முறையையும் அழிவையும் குறித்தது.
பிராமணச் சிந்தனையுடன் நீங்கள் இருப்பது உங்கள் சொந்த விருப்பம். நாட்டில் எத்தனையோ பேர் அப்படித்தான் இருக்கிறார்கள். ஆனால் அது உயர்வு மனப்பான்மையாக ஆகி பிறரை இழிவு படுத்தும் தன்மை கொள்ளும்போது அநீதியாக ஆகிறது. அதைச்செய்பவருக்கு வேறு எந்த நீதியைப்பற்றியும் பேசும் தகுதி இல்லாமலாகிவிடுகிறது.
மனிதர்களில் பிறப்பால் பேதம் பார்க்கும் ஒருவரின் தார்மீகத்தகுதியும் ஆன்மீகத் தகுதியும் மிகக்கீழ்நிலையில் உள்ளவை.
உதாரணமாக இக்கடிதத்தில் நீங்கள் ஆசி அளிக்கிறீர்கள். உங்கள் சாதியை மனதில்கொண்டு என்றால் அந்த ஆசியை நீங்களே வைத்துக்கொள்ளவும். தன்னை விட தகுதியில் தாழ்ந்த ஒருவருடைய ஆசியை பெற்றுக்கொள்ளக்கூடாது என்பது மரபு
ஜெ
2 comments
vks
May 3, 2010 at 12:54 am (UTC 5.5) Link to this comment
இறுதி வரிகளைப் பாரதி படித்திருந்தால் அந்த மகா கவியின் ஆசீர்வாதம் மழையாக பொழிந்திருக்கும்.
tamilsabari
July 23, 2010 at 10:09 am (UTC 5.5) Link to this comment
//மனிதர்களில் பிறப்பால் பேதம் பார்க்கும் ஒருவரின் தார்மீகத்தகுதியும் ஆன்மீகத் தகுதியும் மிகக்கீழ்நிலையில் உள்ளவை.//
சரிதான் ஐயா. நன்றி