தசாவதாரம்

அன்புள்ள ஜெயமோகன்,

தசாவதாரம் பார்த்தீர்களா? அதில் காட்டப்படும் சைவ வைணவச் சண்டைகள் உண்மையிலேயே நடந்தவைதானா? அந்தப்படம் வைணவர்களை இழிவுபடுத்துவதாகச் சொல்லி வழக்கு தொடர்ந்தார்க்கள். உண்மையில் அது சைவர்களை அல்லவா இழிவுசெய்கிறது? இது பற்றிய இணைய எழுத்துக்களைப் படித்தீர்களா?

குருநாதன்

அன்புள்ள குருநாதன்,

நான்குநாள் முன்பு நானும் மனைவியுமாகச் சென்று தசாவதாரம் பார்த்தோம். இன்று குழந்தைகளுடன் மீண்டும் சென்றேன். உற்சாகமாக பார்க்கவேண்டிய பொழுதுபோக்குப் படம். குழந்தைகளுடன் சென்றால் இன்னும் மகிழ்ச்சி. திரைப்படங்கள் வந்ததுமே இணையத்தில் அவற்றை நாராகக் கிழிப்பவர்கள் எழுதுவது எனக்குப் பெரும்பாலும் புரிவதில்லை. எனக்கு சினிமாஞானம் மிகக் குறைவு.

தசாவதாரம் படத்தில் மிகையான ஒப்பனைகள் முகபாவனைகளை வெளிப்படுத்த தடையாக உள்ளன என்பதுமட்டுமே நான் கண்ட குறை. ஆனால் ·ப்ளெட்சர் கதாபாத்திரத்தில் அதை நுண்ணிய உடல்மொழி மூலம் கமலஹாசன் சமன்செய்திருக்கிறார் என்று எனக்குப் பட்டது. என்னுடைய குழந்தைகள் படத்தை மிக உற்சாகமாக ரசித்தார்கள். அங்கே குழந்தைகளின் கூட்டமே அதிகம். அவர்களுக்கு மிகவும் பிடித்திருப்பதைக் கண்டேன். என் குழந்தைகள் தொடர்ந்து உலகப்புகழ்பெற்ற படங்களை– குறிப்பாக முக்கியமான கலைப்படங்களை- மிகவிரும்பி பலமுறை பார்க்கும் ரசனை கொண்டவர்கள். ஆனால் அவர்களுக்கு இதை ரசிப்பதில் தடையேதும் இல்லை, காரணம் இது கேளிக்கைபடம் என அவர்கள் அறிவார்கள். எ பியூட்டி ·புல் மைண்ட், அல்லது டு லிவ் போன்ற படங்களுடன் அல்ல இவற்றை ஒப்பிடவேண்டியது என அவரக்ளுக்கு தெரிந்திருக்கிறது.

இவ்வகையான கேளிக்கைப் படங்களுக்கு உரிய இரு இலக்கணங்களும் தெளிவாகவே பொருந்தி வருகின்றன. ஒன்று எல்லா காட்சிகளும் கண்ணை அகற்றிப் பார்ப்பதற்குரிய பிரம்மாண்டத்துடனும் வேகத்துடனும் இருப்பது. இரண்டு, படம் தொடங்கியதுமே உள்ளே இழுத்துக்கொண்டு நம்மை விட்டுவிடாமல் முன்னால் கொண்டுசென்றபடியே இருப்பது.

சாகஸக்கதைகளுக்கு எப்போதும் எங்கும் ஒரே அமைப்புதான். அவை நம்முள் உள்ள சிறுவனைத் தொட்டு அவனுடன் உரையாடுகின்றன. சாகஸக்கதைகள் ஆதிகாலத்தில் புராணங்களின் வடிவில் இருந்தன.அவையெ நவீன படக்கதைகள், சிறுவர்கதைகள் ஆகியவற்றின் வேர்த்தளம். உதாரணமாக பெரும்பாலான நவீன சாகஸக்கதைகளை அப்படியே பீமனைப்பற்றிய  புராணக்கதைகளுடன் பொருத்திவிடமுடியும்.

அவற்றுக்குச் சில அடிப்படை விதிகளை வாசகனாக நான் கண்டிருக்கிறேன்.

அ. எளிமையான பிரம்மாண்டமான கற்பனை. நிகழ்ச்சிகளும் சரி ,சிக்கலும் சரி, தீர்வுகளும் சரி ஒரே சமயம் வானளாவ உயர்ந்தவையாக இருக்கும்போதே குழந்தைகள் புரிந்துகொள்ளும் அளவுக்கு எளிமையாகவும் இருக்கும்.

ஆ. நன்மை தீமை என்ர போரில் நன்மையின் இறுதி வெற்றி. நன்மை தீமையை கதாநாயகன் எதிர்நாயகன் என்று பிரித்துக் கொள்கிறார்கள். கதாநாயகன் அளவுக்கே எதிர்நாயகனும் எளிதில் வெல்லம்முடியாதவனாக இருப்பான்.

இ. இயற்கை மீறிய செயல்கள். சாகஸத்துடன் நம்பகத்தன்மை என்பதை இணைக்கவே முடியாது. ஏனென்றால் நம் மனம் கற்பனைசெய்யும் சாகஸம் என்பது எப்போதும் சாத்தியத்தின் எல்லையைக் கடந்தது. நம்மை வியப்புறச் செய்யும் சாகஸம் அந்த எல்லையையும் மிஞ்சும்.

இவ்வியல்புகள் ஒத்துசேரும் ஒரு சாகஸக்கதை குழந்தைகளையும் பெரியவர்களுக்குள் உள்ள குழந்தை மனதையும் கவர்கிறது. இக்கதைகளைக் காண அதற்கான மனத்தயாரிப்புடன் மட்டுமே நாம் செல்கிறோம். அப்போது நம் தர்க்கபுத்தியை, லௌகீக அறிவை சற்றே ஒத்தி வைக்கிறோம், அவை குழந்தைகளுக்கு உரியவை அல்ல. ஆகவே அந்நிலையில் ஒருபோதும் கடுமையான கருத்துக்களைச் சொல்லக் கூடாது. ஒருசமூகம் தன் குழந்தைகளுக்குச் சாதாரணமாகச் சொல்லிவரும் மத நல்லிணக்கம், சாதிபேதமின்மை, மனிதாபிமானம் போன்ற எளிய, அழியாத நீதிகளை மட்டுமே சொல்லி கதையை முடிப்பதே விவேகம்.

தசாவதாரம் அப்படி எடுக்கப்பட்ட ஒரு நல்ல பொழுதுபோக்குச் சாகஸத் திரைப்படம் என்றே நான் எண்ணுகிறேன். அதன் வரைகலைக் காட்சிகள் வழக்கமாக தமிழ்படங்களில் காணக்கிடைக்காத தொழில்நுட்பத் தேர்ச்சியுடன் துல்லியமாக உருவாக்கப்பட்டுள்ளன. அந்த தளத்தில் தமிழில் இதுவே உச்சம். கமலஹாசன் நடித்த பத்துவேடங்களில் நுட்பமான நடிப்புமும் ஒப்பனையும் கைகூடிய வேடம் நாயுடுதான். தெலுங்கு  ரெட்டி, நாயிடுக்களுக்கு உரிய சம்ஸ்கிருத அழுத்தம் கொண்ட உச்சரிப்பு, மூக்குஇழுப்புகள், முகவாயைத் தூக்கும் விதம் அனைத்துமே கச்சிதம். கமலஹாசனின் கற்பனைக்கும் அவதானத் திறனுக்கும் சான்று அந்த வேடம்.

இரண்டாமிடம் தொடக்கத்தில் வரும் வைணவர் வேடம். மகன் ‘சொல்லிடுங்கோ அப்பா’ என்று சொல்லும்போது கமலஹாசன் கண்களில் கொண்டுவரும் சிறிய சலனம் என்னை மிகவும் பாதித்தது. எங்களூர் பூவராகன் வேடம் சிறிது. அத்தகைய தனி வட்டாரவழக்கு சற்றே நகைச்சுவை கலக்கும்போதுபோதுதான் சோபிக்கும். அதற்கான வாய்ப்பு இல்லை. ஆனால் நன்றாகவே உச்சரிப்பும் கூற்றுமுறையும் இருந்தது. அக்கதாபாத்திரத்தில் அவரது உடல்மொழி நான் பார்த்த பலரை நினைவூட்டியது. அதேபோல பாட்டி. ஒப்பனை காரணமாக ஆரம்பத்தில் எழும் ஒரு சிறு விலகலும் படிப்படியாக இல்லாமலாகி கடைசியில் மகனின் புகைப்படத்துடன் அவர் வேனுக்குள்  உட்கார்ந்திருக்கும்போதிருந்த பேதைத்தனமான பதைப்பு மனதைப் பாதித்தது.

*
இனி உங்கள் முக்கியமான கேள்விக்கு வருகிறேன். உங்கள் கேள்விக்குப் பதில் இதுதான்.ஆம். சைவ- வைணவ மோதல், சைவ -சமண மோதல் இரண்டும் தமிழ்ப் பண்பாட்டின் இரு உண்மை நிகழ்வுகள். அவற்றுக்கான ஆதாரம் உள்ளது. விரிவான வரலாற்றுப் பின்னணியில் வைத்தே அதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

பொதுவாக எல்லா நாகரீங்களிலும் மதவெறிக்காலம் ஒன்று இருப்பதை அவதானிக்கலாம். மிகக் கடுமையான மதப்போர்கள் நடக்கும் காலகட்டமாக அது இருக்கும். ஐரோப்பிய வரலாற்றில்  மத்திய காலகட்டம் இத்தகையது. அதிபிரம்மாண்டமான மானுட அழிவுகள் அக்காலகட்டத்தில் நடந்தன. மத்திய ஆசியாவில் இஸ்லாமின் தோற்றம் முதல் இன்றுவரைக்கும் கூட மதவெறிக்காலம் முடிவுக்குவரவில்லை. ரத்தம் உலரவேயில்லை.

இதை இவ்வாறு புரிந்துகொள்ளலாம். பழங்குடிப்பண்பாடே எல்லா சமூகங்களிலும் முதலில் இருக்கிறது. பின்னர் அதில் இருந்து மதங்கள் உருவாகி வருகின்றன. மதங்களின் வேர்கள் பழங்குடிக் கலாச்சாரத்தில் பரவியிருக்கும். பழங்குடி சார்ந்த இனக்குழு மரபுகளில் இருந்து மத அமைப்புகளுக்கு சமூக அதிகாரம் கைமாற்றம்செய்யப்பட்ட ஒரு காலம் இது என்று புரிந்துகொள்ளலாம். இது எல்லா வரலாற்று மாற்றங்களையும்போல மிகமெல்ல படிப்படியாக நடைபெறுகிறது. பழங்குடி நம்பிக்கைகளும்  சடங்குமுறைகளும் தத்துவம் மூலம் தொகுக்கப்பட்டு பெருமதமாக ஆக்கப்படுகின்றன. இனக்குழுச் சமூகங்கள் அந்த நம்பிக்கைக் கட்டமைக்குள் அடுக்கப்பட்டு மதத்தின் சமூகம்
சார்ந்த அமைப்பு உருவாக்கப்படுகிறது.

இவ்வாறு பெருமதங்கள் உருவாகும்போது அவற்றுக்கு இடையே கடுமையான அதிகார மோதலும் நிகழ்கிறது. கருத்து மோதல் முதன்மையாக நிகழ்கிறது. அமைப்புகளைக் கைப்பற்றுவதற்கான நேரடியான வன்முறைமோதல் அடுத்தபடியாக நிகழ்கிறது. தமிழகத்தில் வந்த முதல் பெருமதம் புரோகிதமதம் அல்லது வேதமதம். அடுத்து சமணம். அடுத்து பௌத்தம். அவை இங்குள்ள பழங்குடி மரபுகளை உள்ளிழுத்துக் கொண்டன. தொகுத்துக் கொண்டன.

இவற்றுக்கு இடையே மிகக்கடுமையான கருத்து மோதல்கள் நிகழ்ந்ததை நாம் காண்கிறோம். குறிப்பாக நீலகேசி முதலிய காப்பியங்கள் அதற்கான நேரடி ஆவணங்கள். கிண்டல்செய்வது போன்ற தளங்களுக்கும் அந்த விவாதம் நகர்ந்துள்ளது. ஆனால் அவை நேரடி மோதலாக மாறவில்லை என்பதையும் வன்முறை சற்றும் இருக்கவில்லை என்பதையும் நாம் நமது காப்பியங்கள் மூலமே அறிகிறோம்.  மூன்றுபெருமதங்களும் அருகருகே இயல்பாக புழங்கிய காட்சியை சிலப்பதிகாரமும் மணிமேகலையும் காட்டுகின்றன. மதவெறி கருத்துதளத்தில் மட்டுமே நிறுத்தப்பட்டிருந்தது என்பதை அன்றைய பிற உலகச்சூழலை வைத்துப் பார்த்தால் மகத்தான மானுட சாதனை என்றே சொல்லவேண்டும். ஐரோப்பா குருதியால் நனைந்து கிடந்த காலங்கள் அவை.

பத்தாம்நூற்றாண்டுக்குப் பிறகு அழுந்திக்கிடந்த வைதீக மதம் புத்தெழுச்சி அடைந்ததையே நாம் பக்தி இயக்கம் என்கிறோம். இதன் நாற்றங்கால் தமிழகமே என்று சொல்லலாம். இந்து ஞானமரபுக்குள் வரும் ஆறு மதங்களில் சைவமும் வைணவமும் தனிப்பெரும் மதங்களாக வளர்ந்தன. கௌமாரமும் காணபத்யமும் சாக்தமும் சைவத்தில் இணைந்தன. சௌரம் வைணவத்தில் கலந்தது. சிவன் விஷ்ணு என்ற இரு மைய இறை உருவகங்களுடன் பிரம்மம் என்ற கருதுகோள் இணைக்கப்பட்டு இம்மதங்களின் தத்துவ அடிப்படை விரிவாக்கம் செய்யப்பட்டது. பிரம்மம் என்பது அனைத்து வழிபாடுகளையும் இறையுருவகங்களையும் தன்னில் இணைக்கும் வல்லமை கொண்ட ஒரு மகத்தான மையக்கருத்து ஆகும்.

பக்தி இயக்கத்தில் சைவ வைணவப் பெருமதங்கள் நாட்டார்தெய்வங்களையும் வழிபாட்டுமுறைகளையும் தன்னுள் இழுத்துக் கொண்டன. ஆகவே அவற்றின் மக்கள் பங்கேற்பு விரிவடைந்தது. அவை ஆலயங்கள் போன்ற பெரும் அமைப்புகளை உருவாக்கி வேரூன்றின.  இந்த காலகட்டத்தில்தான் தமிழ் வரலாற்றில் நாம் பேரரசுகள் உருவாவதையும் காண்கிறோம். குறிப்பாக சோழப்பேரரசு. தமிழ்ப்பண்பாட்டில் மத மோதல் நேரடியாக நிகழ ஆரம்பித்ததும் இக்காலகட்டத்திலேயே.

முதலில் சைவமும் சமணமும் கடுமையாக முரண்பட்டு மோதியதை நாம் காண்கிறோம். திருஞானசம்பந்தர் பாடல்களில் மதக்காழ்ப்பு நேரடியாகவே வெளிப்படுகிறது. அதே சமயக் காழ்ப்பை நாம் திருமங்கை மன்னரின் வைணவப் பாசுரங்களிலும் காணலாம். ஆனால் இக்காலகட்டத்தில் நடந்த மோதல்கள் எத்தகையவை என்பதை இன்று நாம் தெளிவாக கூற முடிவதில்லை.  நேரடி வன்முறை ஓரளவு நடந்திருக்கும் என்பதை மறுக்க முடியாது. ஆனால் கண்டிப்பாக ரத்தம்பெருகிய நேரடிப்போர்கள் நிகழவில்லை என்றே சொல்லவேண்டும்.

நமக்குக் கிடைப்பவை புராணங்களும் இலக்கியச் செய்திகளுமே. அவற்றை நடுநிலையில் நின்று ஆராயும் வரலாற்றாய்வுமுறை நம்மிடம் இல்லை. நமது அரசியல் காழ்ப்புகளையே ஆய்வுகளாக ஆக்கும் நோக்கே இங்கு மிகுந்திருந்தது. ஆரம்பகால ஆங்கிலேய வரலாற்றாசிரியர்கள் இந்த மதமோதல்களை மிகைப்படுத்த முயன்றார்கள். அதற்குக் காரணம் ஒன்று அவர்கள் அறிந்த ஐரோப்பிய மதமோதல்கள். இன்னொன்று அவர்களுடைய பிரித்தாளும் உள்நோக்கம்.  நம் மார்க்ஸிய வரலாற்றாய்வாளர்களும் திராவிட வரலாற்றாய்வாளார்களும் தங்கள் அரசியல் உள்நோக்கங்களையும் காழ்ப்புகளையும் வரலாற்றில் ஏற்றி இன்று அடிப்படைகளையே ஆரம்பத்தில் இருந்து மீண்டும் விவாதித்து உருவாக்கிக் கொண்டுவரவேண்டிய நிலைக்கு வரலாற்றாய்வை தள்ளிவிட்டிருக்கிறார்கள்.

இரு உதாரணங்கள். மதுரையில் எண்ணாயிரம் சமணர்களை கழுவில் ஏற்றியதாகச் சொல்லப்படும் புராணம். மதுரை அருகே ஒரு ஊரைக்காட்டி இங்குதான் எண்ணாயிரம் சமணர்கள் கழுவில் ஏற்றப்பட்டார்கள் என்று சொல்வதுண்டு. அந்த சாம்பலும் எலும்புகளும் அங்கே கிடப்பதைப் பார்த்துவிட்டு வந்ததாக்க கூட பலர் எழுதியிருக்கிறார்கள். ஆயிரம் வருடம் கழித்து! கடந்த முப்பதாண்டுகளில் படிப்படியாக தமிழ்நாட்டுச் சமணர்கள் கொன்றே அழிக்கப்பட்டதாகவும், சமண ஆலயங்கள் இடித்தே இல்லாமலாக்கப்பட்டதாகவும் எந்த விவாதமும் இல்லாமல், எந்த ஆதாரமும் அளிக்கப்படாமல் ‘நிறுவ’ப்பட்டுவிட்டிருக்கிறது. ‘தீராநதி’ அல்லது ‘புதியபார்வை’ யை படித்தால் நாலைந்து இதழ்களுக்கு ஒருமுறை ஒருவர் இந்த ‘வரலாற்று உண்மை’யை சொல்வதைக் காணலாம். இதை மறுப்பவர் இந்துவெறியர் என்பதே அவர்களின் ஒரே வாத உத்தியாக இருக்கும்.

புராணம் பொய்யாக இருக்காது என்பதே என் எண்ணம். அது ஒருவகை வரலாறு. கண்டிப்பாக சைவ சமண மதப்போர் உக்கிரமாகவே நிகழ்ந்திருக்கும். சமணர்கள் கழுவில் ஏறியிருப்பார்கள். ஆனால் அது பிடித்து கழுவில் ஏற்றி அழித்தொழிக்கும் ஐரோப்பிய அல்லது அரேபிய மதப்போர் அல்ல. அது ஒரு மரபு. மதங்களுக்குள் பொதுவிவாதம் நிகழ்வது என்பது மீண்டும் மீண்டும் நம் மரபில் குறிப்பிடப்பட்டுள்ளது. மதவிவாதத்தில் தோற்றவர் கழுவிலேறுவதைப் பற்றியும் நாம் காண்கிறோம். எண்ணாயிரம் என்ற சொல் எண்ணிக்கையைக் குறிக்காது எண்ணாயிரம் நாலாயிரம் போன்ற குலப்பெயர்கள் நமது வணிகர்கள் மற்றும் வேளாளர்கள் [பொதுவாக வைசியர்கள்] நடுவே உண்டு என்ற தகவலைக் கூட நமது ஆய்வாளர்கள் பொருட்படுத்தியதில்லை

சரி, ஒருபேச்சுக்காக அத்தகைய விவாதமே மோசடியானது என்று வைத்துக் கொண்டாலும்கூட ஒரு உண்மை நிலைநிற்கிறது. தமிழகமெங்கும் அதன்பின் பலநூறு வருடம் சமணரும் சமணக்கோயில்களும் எந்தவிதமான சிக்கல்களும் இல்லாமல் இருந்திருக்கின்றன. மதுரையைச் சுற்றியுள்ள சமண வழிபாட்டுதலங்கள் தொடர்ந்து இயல்பாகவே இயங்கியிருக்கின்றன. உளுந்தூர்பேட்டையில் அப்பாண்டநாதர் கோயில் இன்றும் நல்ல நிலையில் இருக்கத்தான் செய்கிறது. சமணர்களின் எண்ணிக்கை குறையக் குறைய கோயில்கள் கைவிடப்பட்டு பல நூறு வருடங்களில் பராமரிப்பில்லாமல் மெல்ல மெல்லத்தான் அழிந்திருக்கின்றன. திருநெல்வேலி ஸ்டேட் மானுவல் எழுதிய எச்.ஆர்.பேட்ஸ் வள்ளியூரைச் சுற்றி அப்படி கைவிடப்பட்டு கிடந்த பல சமண ஆலயங்களைப் பற்றிச் சொல்கிறார். பல ஆலயங்கள் பின்னர் இந்து ஆலயங்களாக ஆகியிருமிருக்கலாம். பல ஆலயங்களில் இரு மதவழிபாடும் ஒரேசமயம் நிகழ்ந்திருக்கிறது.

சமணப்பெண்டிரை கற்பழிக்க நாயன்மார்கள் தூண்டினர் என்று ஒரு ‘ஆராய்ச்சி’  இன்னொரு உதாரணம். ‘அமண் சமணர் கற்பழிக்க திருவுளமே’ என்ற வரியில் இருந்து எழுந்த நச்சுக்கற்பனை. கற்பழிப்பு என்ற சொல்லாட்ச்¢ தமிழில் எப்போதுவந்தது என்ற அறிதல் இல்லை. கற்பு என்றால் கற்றல் என்ற சொல்லில் இருந்து வந்த கல்விநிலை என்று பொருள்படும் சொல் என்ற ஞானம் இல்லை. [எஸ்.ராமச்சந்திரன் எழுதிய ‘கற்பழிக்கத் தூண்டிய கவிதை’ என்ற கட்டுரையில் இதை மிக விரிவாக விளக்கியிருக்கிறார்]

திண்டிவனம் அருகே மேல்சித்தமூரில் இப்போதும் சமணர்களின் தென்னக தலைமை மடம் உள்ளது. பல்லவர் முதல் நாயக்கர் வரை ஆண்டகாலத்தில் அவர்கள் ஜைனக்காஞ்சியில்தான் இருந்தார்கள். நவாப் ஆட்சிக்காலத்தில்தான் மேல்சித்தமூருக்கு மடம் மாற்றப்பட்டது. பிரம்மாண்டமான அழகிய கோயில் இங்கு உள்ளது. எந்தச் சிதைவும் இன்றி. எல்லா மன்னர்களும் நிவந்தம் அளித்திருக்கிறார்கள். திருவிழாக்கள் நடந்திருக்கின்றன. பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை சமணர்கள் நிறைந்து வாழ்ந்தது இந்த ஊர். இப்போது சமணர் எண்ணிக்கை மிக்க குறைவு. வீடுகள் கைவிடபப்ட்ட வெறும் தெருக்கள்.

நான் அங்கே மடத்துக்குச் சென்று மடாதிபதியிடம் உரையாடியிருக்கிறேன். சமணர் எண்ணிக்கை குறைவது அவர்கள் இந்துக்களாக மாறுவதனாலும் திருமணம் முதலிய சடங்குகளுக்காக அவர்கள் ஊர் விட்டு போவதனாலும்தான் என்றார். தொண்டைமண்டல முதலியார்கள் அனைவருமே சமணர்களாக இருந்து சில நூற்றாண்டுகளுக்குள் மாறிச் சென்றவர்கள் என்று சொன்ன அவர் கழுவேற்ற ஐதீகத்தை கடுமையாக மறுத்தார். அது சைவர்கள் தங்கள் வெற்றிக்காக உருவாக்கிய கதைமட்டுமே என்றார்.

காரணம் அச்சம்பவம் குறித்து தோற்றவர்கள் தரப்பில் ஒரு ஆவணம் கூட இல்லை. இத்தனைக்கும் கல்வியை அடிப்படையாக்க கொண்ட சமணம் விரிவான ஆவணப்பதிவை வழக்கமாக்க கொண்டது. சமணத்தின் வரலாறு அதன் தென்னகத் தலைநகர்களான சிரவணபெலகொளா, மற்றும் முடுபத்ரே மடங்களில் தெளிவாகவே பேணப்படுகிறது என்றார். சமணரைக் கொன்றழித்த கதைகளை எழுதும் எவருக்குமே  அதற்காகச் சமணரைப்பற்றி ஒரு ஆய்வுசெய்துபார்க்கலாம் என்ற எண்ணம் இல்லை.

இப்படிப்பட்ட ஆய்வுச்சூழலில் நின்றபடித்தான் நாம் சைவ வைணவ மோதல்களை பார்க்க வேண்டும். ராமானுஜர் வரலாற்றில் அவர் கிருமிகண்டசோழன் என்பவரால் சைவத்துக்கு மாறும்படி வற்புறுத்தப்பட்டதாகவும் அவரைக் காட்டிக்கொடுக்க மறுத்த கூரத்தாழ்வார் குருடாக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இரண்டாம் குலோத்துங்க சோழன்தான் கிருமிகண்டசோழன் என்று சில ஆய்வாளர் சொல்கிறார்கள். இது ராமானுஜரின் காலம் பனிரண்டாம் நூற்றாண்டு என்ற தகவலில் இருந்து ஊகிக்கப்படுவது. இதிலிருந்தே கமலஹாசன் தன் கதைநிகழ்வை உருவாக்கியிருக்கிறார். ஒரு புனைவுக்கு வரலாற்றில் ஒரு ஆதாரம் இருந்தாலே போதும். ஆகவே அவரது புனைவு சரியானதே.

ஆனால் இரண்டாம் குலோத்துங்க சோழன் எங்கும் வைணவ ஆலயங்களை இடித்ததாக அல்லது சிலைகளை அகற்றியதாக வேறு வரலாறு அல்லது ஐதீகம் ஏதும் இல்லை. அப்படியானால் இதை எப்படிக் காண்பது? மீண்டும், ஐதீகங்களை நான் மறுக்க மாட்டேன் என்று சொல்ல விரும்புகிறேன். பிற்காலச் சோழர்கள் பெரும்பாலும் அனைவருமே சைவர்கள். ஆகவே சைவம் அதிகார மதமாகப் பேருருவம் கொண்டு வளர்ந்த காலகட்டம் இது. அப்போது வைணவம் புறக்கணிப்புக்கும் சற்றே அடக்குமுறைக்குள் ஆளாகியிருக்கலாம். இதற்கு ஆதாரமாக நான் காண்பது அக்காலகட்டத்தில் திருவிதாங்கூர் [அக்காலத்து தென்சேரநாடு] நாட்டை பிடித்த சோழர்கள் அதிகாரம் மூலம் இங்குள்ள ஆலயங்களில் தாந்த்ரீக வழிபாட்டை நீக்கி ஆகம வழிபாட்டை புகுத்தினார்கள் என்ற செயலையே. முந்நூறு வருடம் கழித்து சோழர் ஆட்சி போனதுமே மீண்டும் தாந்த்ரீக வழிபாட்டுமுறை வந்தது.

ராமானுஜர்தான் வைணவத்தின் எழுச்சிக்குக் காரணமானவர். வைணவத்தை மக்கள்மதமாக ஆக்கியவர் அவரே. அவருக்குப்பின்னரே இன்றுள்ள வைணவப் பேராலயங்களும் அமைப்புகளும் உருவாகி வந்தன. ஆகவே அந்த எழுச்சியை அன்றைய அதிகார சைவம் கடுமையாக எதிர்த்திருக்கும் என்பது ஊகிக்க்க கூடியதே. ராமானுஜர் வரலாற்றைப் பார்த்தால் அவர் வைணவத்தை மக்கள்மயமாக்கியமைக்கு எதிரான மேலும் கொடுமையான எதிர்ப்பு வைதீக வைணவத்தில் இருந்துதான் வந்தது என்பதைக் காணலாம். ஆகவே ‘தசாவதாரம்’ காட்டும் நிகழ்ச்சி நடந்திருக்க்க கூடியதே.

ஆனால் இம்மதமோதல்களை மத்திய ஐரோப்பிய மதப்போர்களுடனும் அரேபிய மத அழிப்புகளுடனும் ஒப்பிட்டு நிறுவ முயலும் வரலாற்றாசிரியர்கள் உள்நோக்கம் கொண்ட பொய்யர்கள் என்றே சொல்வேன்.  சைவ வைணவக் காழ்ப்பும் கசப்பும் நெடுங்காலம் மிக வலுவாக இருந்துள்ளன. இன்றுகூட ஓரளவு நீடிக்கின்றன. ஆனால் சைவ வைணவ மோதலால் ஒரு சிவ, விஷ்ணு ஆலயமாவது அழிக்கப்பட்டதாக நம் புராண ஐதீக மரபுகளில் தகவல் இல்லை. பேரளவில் மக்கள் கொல்லப்பட்டதாகவோ, நேரடியான மதப்போர்கள் நிகழ்ந்ததாகவோ கேள்விபட்டதேயில்லை. அதே சமயம் சோழ அரசகுலத்துக்குள்ளேயே வைணவர்களான மன்னர்களும்  அரசிகளும் இருந்திருக்கிறார்கள் என்பதை நாம் காண்கிறோம்.

பதினைந்தாம் நூற்றாண்டில் மெல்லமெல்ல தமிழகம் நாயக்கர் ஆட்சிக்கு வந்த காலம் முதல் சைவ வைணவ ஒற்றுமைக்கான முயற்சியை அவர்கள் தீவிரமாகவே முன்னெடுத்தார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் தீவிர வைணவர்கள். ஆனால் தமிழ்நாட்டின் பெரும்பாலான சிவ ஆலயங்களை அவர்கள்தான் புதுப்பித்து மாபெரும் ராயகோபுரங்களைக் கட்டினார்கள். அருகருகே மாபெரும் சிவன் கோயிலையும் விஷ்ணுகோயிலையும் அமைப்பது அவர்களின் வழக்கம். ஸ்ரீரங்கத்திலிருந்து கூப்பிடு தொலைவில்தான் திருவானைக்கா சிவன் கோயில் உள்ளது. இதை எங்கும் காணலாம்.

சிவன் கோயிலுக்குள் விஷ்ணுவுக்கு கருவறையும் விஷ்ணு கோயிலுக்குள் சிவலிங்க பிரதிஷ்டையும் செய்தார்கள். நெல்லையப்பர் சன்னிக்கு அடியில் பள்ளிகொண்ட கோவிந்தராஜபெருமாள் சன்னிதி உண்டு. சிதம்பரம் கோயிலுக்குள் அதேயளவுபெரிதாக கோவிந்தராஜபெருமாள் சன்னிதி உண்டு. அதேபோல திருக்கணங்குடி விஷ்ணுகோயிலுக்குள் சிவலிங்கம் பிரதிஷ்டை இருந்ததை நானே கண்டிருக்கிறேன். இருபது வருடம் முன்பு திருப்பணி செய்த டி.வி.எஸ் நிர்வாகம் [அவர்களின் சொந்த ஊர் அது] சிவலிங்கத்தை தூக்கி வெளியே எங்கேயோ போட்டுவிட்டார்கள் என்று ஒரு பரபரப்பான வழக்கு அடிபட்டது. கிருமி கண்டசோழர்கள் இப்போதும் இருக்கிறார்கள்தான்.

நாயக்கர்களுக்குப் பின் ஏறத்தாழ ஐநூறு வருடங்களாக தமிழ்நாட்டில் சைவ வைணவ முரண்பாடு இல்லை என்றே சொல்லலாம்.’அரியும் சிவனும் ஒண்ணு, அறியாதோர் வாயிலே மண்ணு’ என்ற நாட்டுமொழி அதிலிருந்து உருவானதே. இன்று தமிழ்நாட்டில் உள்ள இந்துக்களில் சைவப்பிள்ளைமார், நாட்டுக்கோட்டைச்செட்டியார் போன்ற மிகமிகச் சிலரே சுத்த சைவர்கள். அய்யங்கார்கள், கோனார்கள், நாயிடுக்கள் எனச் சிலரே தீவிர வைணவர்கள். மீதி தொண்ணூறு சத இந்துக்கள் அரியையும் அரனையும் இணையாகக் கருதி வணங்குபவர்கள்.அதற்கு நாம் நாயக்கர்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.

கமல்ஹாசன் தன் படத்தில் காட்டியது முறையா என்ற கேள்வியில் பொருள் இருப்பதாக எனக்குப் படவில்லை. வரலாறு நாம் வெட்கி ஒளித்துக்கொள்ளவேண்டிய மர்மப்பிராந்தியம் அல்ல.  எப்படியானாலும் அது நம் வரலாறு. நம் சாதிய ஒடுக்குமுறைகள், மூடநம்பிக்கைகள் , பேதங்கள் ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது குறைவாக வெட்கப்படவேண்டிய விஷயம்தான் இது. அதைப்பற்றிப் பேசுவது இயல்பானது. அதைக் கடந்துசெல்ல அது அவசியமானது.  அக்காட்சி சைவர்களை அல்லவா இழிவுசெய்கிறது என்ற உங்கள் வினாவே நாம் அதைக் கடந்துசென்றுவிட்டோம் என்பதன் ஆதாரம். அப்படி கடந்துசெல்ல வேண்டிய பல விஷயங்கள் உள்ளன.

இணையத்தில் எழுதும் இந்துத்துவர்களை படிக்கிறேன். அல்லும்பகலும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளை எண்ணி எண்ணி அவர்கள் இஸ்லாமியப்பாணி மதவெறிக்கு மானசீகமாக மாறிவிட்டிருக்கிறார்கள். மிகக்குறுகலான ஒரு தரப்பை வைத்துக் கொண்டு உலகெல்லாம் எதிரிகளைக் கண்டுபிடிக்க அலைகிறார்கள்.

முந்தைய கட்டுரைஉங்கள் நூலகம்
அடுத்த கட்டுரைதசாவதாரம்:இருகடிதங்கள்