அன்புள்ள ஜெயமோகன்
சமீபத்தில் பழசி ராஜா குறித்து பார்த்த சுட்டிகள் கீழே.
ஆனந்த்
http://lh4.ggpht.com/_seLpP2eaeFA/SwFclerZz6I/AAAAAAAAAWg/5vpoefYTX5A/s400/MDSG384259.jpg
http://sify.com/movies/tamil/fullstory.php?id=14919742
http://www.ayngaran.com/frame.php?iframepath=newsdetails.php?newsid=2442
இளையராஜாவின் இசை
இளையராஜாவின் இசை பற்றிய விமரிசனங்கள் பெரும்பாலும் தன்வயமாக மட்டுமே இருக்கிறது. இசை குறித்து பலவிதமான கருத்துக்களை நாம் பரிமாரிக்கொண்டிருக்கிறோம். பெரும்பாலும் நாம் இசைகுறித்துப் பேசுவதாக நினைத்து, இசைக்கலைஞர்களைக் குறித்து மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறோம். அவை அவரது வாழ்வின் பயணம் குறித்த வியப்பாகவோ, அல்லது அவரது தரப்பை உயர்த்திப்பிடிக்கும் புகழுரையாகவோ அமைந்திருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது.
இசை தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் ஒரு கருவியாக கலைஞர்கள் இருக்கிறார்கள். காலம் அக்கலைஞர்களை தேர்ந்தெடுத்துக் கொள்கிறது. இசைக்கலைஞர்களை தவிர்த்து, இசையை குறித்த விமரிசனம் என்பது சாத்தியமே. கீழே நான் எழுதுவது புறவயமான விமரிசனம் அல்ல. முற்றிலும் தன்வயமானது மட்டுமே.
இளையராஜாவின் இசையை குறித்து பேசும்போது, நான் முக்கியமாக கவனிப்பது அவரது காலத்தைத்தான்.பழங்காலத்து இசையமைப்பாளருக்கு இருந்த ஒலிப்பதிவுக்கருவிகளை கவனித்தால், அவை “மோனோ” கருவிகள். எனவே அவர்கள் பாடலின் மெட்டுகளுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்திருந்தனர். மெட்டுகளில் அவர்களது மேதமையை காட்டமுடியும். அவ்வளவே. இந்தகாலகட்டத்தில் நுழைந்தவர் இளையராஜா. ஒரு பாடல் எங்கு, எப்படி, எதில் கேட்கப்படும் என்பது மிகவும் முக்கியமானதாக கருதவேண்டும். இளையராஜாவின் தொடக்க காலத்தில் அவரது பாடல்கள் பெரும்பாலும் கூம்பு ஒலிப்பெருக்கிகளிலும், பானைகளில் ஸ்பீக்கர் கட்டியும் கேட்கப்பட்டது. வானொலி தான் மிக முக்கிய வெகுஜன ஊடகம்.
எனவே அவரது பாடல்களில் “பாஸ்” குறைவாகவே எடுபடும். இதனால் தானோ என்னவோ அவர் அதிகமான “ட்ரெபிள்” தரும் வயலின்களை அதிகமாக பயன்படுத்தினார். அந்த ஒலிப்பெருக்கிகளிலும், வானொலியிலும் “மோனோ” வில் ட்ரெபிள்தான் கேட்கும். எனவே அவரது இசையில், “இசை” பிரதானமாகிறது. மெட்டுக்கள் முக்கியமாகிறது.
யேசுதாஸ் ஸ்டீரியோ ரிகார்டிங் கருவிகளை தருவித்தபோது, ப்ரியா திரைப்படத்தில் முதல்முறையாக ஸ்டீரியோ ரிகார்டிங் பயன்பட்டது. அதற்குத் தகுந்தாற்போல் தனது ஆளுமைகளை அவர் சற்றே மாற்றிக்கொண்டார். ஸ்டீரியோ கருவிகளை புரிந்து உணர்ந்து இசை கொடுக்கத் துவங்கினார். அப்போதுதான் “டூ இன் ஒன்” என்றழைக்கப்பட்ட டேப் ரிகார்டர் ஒரு சில வீட்டில் எட்டிப்பார்க்க ஆரம்பித்தது. ஸ்டீரியோ வந்தது அதன் சாத்தியங்களை பயன்படுத்தி அதை முன்னெடுத்ததில் இவர் தமிழ்த் திரையுலகின் முன்னோடி.
அப்போதும் அவரது ட்ரெபிள் தாக்கம் குறையவில்லையானாலும், பாஸ் கிடாரை பயன்படுத்தி வெற்றிபெற்ற பல பாடல்கள் அப்போது வந்தவையே. எண்பதுகள் இளையராஜாவின் பொற்காலம் அல்லவா? அதற்கு முக்கியக்காரணம் அப்போது கிடைத்த ஒலிப்பதிவுக் கருவிகளும், பயன்பாட்டுக் கருவிகளும் என்று சொல்லலாம்.
அதன் பின்னர் இளையராஜாவின் இசையில் பெரிதும் பயன்படுத்தப்படாத, அல்லது முன்னெடுக்கப்படாத ஒன்றாக “பாஸ்” இசையை முன்னிறுத்தி வெற்றி பெற்றவர் ரஹ்மான். பாஸ் தான் அவரது பிரதான ஆளுமை. ட்ரெபிள் குறைவாகவே பயன்படும். ரோஜா படப் பாடல்கள் வரும்போது பெரும்பாலான வீடுகளில் நல்ல இசை கேட்கும் கருவிகள் வந்துவிட்டிருந்தன. அது அவருக்கு மிகப்பெரிய சாதகமான விஷயமாகியது. அப்போது கம்ப்யூட்டர்களும் நன்றாகவே தலைகாட்டத்தொடங்கியிருந்தது
எனவே டிஜிட்டல் இசை ஒரு அலையாக அடித்தது. அப்போது இளையராஜா சிலகாலம் “காணாமல் போன”து போன்ற ஒரு மாயையும் உருவானது. ஒரு நொடி, ரஹ்மானின் இசையை கூம்பு ஸ்பீக்கர்களில் கேட்டால் எப்படி இருக்கும் என்று யோசித்தால் சிரிப்புத்தான் வரும்.
புதிய பரிணாமம் எடுத்துவந்த ஒரு இசையிலும் தனது மேதமையால் மீண்டெழுந்து வந்து காதலுக்கு மரியாதை படத்தில் எழுந்து நின்றார் ராஜா. அது அவரது அடுத்த பரிணாம இசையில் அவரது தொடக்கம் என்று சொல்வேன். அதன் பிறகு அவர் பாஸ், ட்ரெபிள் என எல்லாம் கலந்த இசையை அவரது பாணியில் தந்து இன்னமும் நம்மை கட்டிப்போடுகிறார். இதுதான் அப்ஸலூட் இண்டெலிஜன்ஸ் & ம்யூசிகல் சென்ஸ் என்று சொல்வேன்.
தமிழ் சினிமா இசை, இசைக்கருவிகள், ஒலிப்பதிவு கருவிகள் என்று இளையராஜாவோடே வளர்ந்த ஒன்று. இதில் இளையராஜாவின் மேதமை அவர் மாறிவந்த ஒலி தொழில் நுட்பத்தில் தனது ஆளுமையை நிறுவிக்காட்டியதுதான். அதில் அவர் ஒரு ராட்சசன். அந்தகாலத்தில் இசையை மட்டுமே பிரதானமாகக் கொண்டு இசையமைத்தனர் அதனால் அவர்கள் குரலுக்கும், இசை மெட்டுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்தனர். “கட்டோடு குழலாட ஆட” அல்லது “என்னுயிர்த் தோழி கேளொரு சேதி” பாடலை ஒரு நிமிடம் நினைத்துப்பாருங்களேன். இசையே தேவையில்லை. குரல் மட்டுமே போதுமானது. ராஜாவின் பெரும்பாலான பாடல்கள் அப்படித்தான்.
எந்த ஒரு பாடல் எந்த ஒரு இசைக்கருவியும் இன்றி பாடமுடிகிறதோ, பாடினால் இனிமையாக இருக்க முடியுமோ, அது நல்ல பாடல். இசைக்கோர்வைகள் எல்லாம் அதற்கு ஒரு மேலதிக சுவை. இளமையெனும் பூங்காற்று, சட்டென இந்தப்பாடல் தோன்றியதனால் சொல்கிறேன், போன்ற ஆயிரக்கணக்கான பாடல்கள் இதுபோல இசைக்கருவிகள் இல்லாமல் பாடினாலும் சுகமாக இருக்கும். இவை மெட்டுக்களின் மேன்மை. இது இசையின் அடிப்படை.
தற்போது வரும் பல பாடல்களில் இசையை தவிர்த்துவிட்டுப் பாருங்களேன். உதாரணமாக ரஹ்மானின் பல பாடல்களும், ஹாரிஸின் பல பாடல்களும் சொல்லலாம். இப்போதெல்லாம் கையில் கம்ப்யூட்டர் இருக்கிறது. ஒரு டப்பா குரலைக்கூட (உ-ம்) தேவன், சுரேஷ் பீட்டர்ஸ் மற்றும் பலர் இருக்கிறார்கள். ஹாரிஸுக்கு இன்னும் அதிகப்பிரச்சனை, ராஜா மோனோ,ஸ்டீரியோ, மல்டி ட்ராக் என கைவைத்துவிட்டார்.
ரஹ்மான் பாஸைப்பிடித்துக்கொண்டார்.ஹரிஸு ம் எதாவது புதுமை செய்ய்வேண்டுமே, என்ன செய்வது? ஆணை பெண் குரலிலும், பெண்னை ஆண் குரலிலும் பாடவைத்து புண்ணியம் கட்டிக்கொண்டார். எப்போதும் ஆண் தாழ்ந்த சுருதியில் கீழேயும், பெண் அதே சுருதியில் மேலேயும் பாடுவது தான் இருந்திருக்கிறது. இவர் அதை தலைகீழாக்கிக்கொண்டு பிழைத்துவிட்டார். இது இசையில் ஒரு நல்ல நகைச்சுவை.
மெட்டுக்களின் இனிமையில் ஜி.ராமனாதன், கே.வி.மஹாதேவன், எம்.எஸ்.வி. என எல்லாரும் ஆளுமைகளை நிறுவிவிட்டிருந்தபோது இசையின் மற்றொரு பரிமானமாக வந்து சேர்ந்த இளையராஜா இசையின் பரிணாமத்துடன் வளர்ந்து இன்று பெரும் ஆலமரம்போல் நிற்பது எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது. இளையராஜாவின் இசை குறித்து நிறைய பேசலாம். பேசிக்கொண்டே இருக்கலாம். வாழ்நாள் முழுவதும்.
அன்புள்ள ராம்
என்னமோ சொல்கிறீர்கள். எனக்கென்னவோ எல்லா பாட்டும் நன்றாகவே இருப்பதுமாதிரித்தான் இருக்கிறது. சரி, வாசிப்பவர்களுக்கு ஏதாவது புரியலாம்
ஜெ