உங்கள் நூலகம்

கடந்த நாலைந்து வருடங்களில் நான் எந்த நகைச்சுவைக்கும் இருக்கையில் இருந்து எழுந்து ஓடி சிரித்தது இல்லை. அத்தகைய நகைச்சுவையை இன்று படித்தேன்

வலது கம்யுனிஸ்டுக் கட்சியின் சார்புள்ள என்.சி.பி.எச் வெளியிடும் ‘உங்கள்நூலகம்’ புத்தக ஆர்வலருக்கான முக்கியமான மாதஇதழ். என்.சி.பி.எச் வெளியிட்டுள்ள முக்கியமான நூல்களை அது வாசகர்களுக்கு அறிமுகம் செய்கிறது. அபூர்வமாக பிற நூல்களைப் பற்றிய மதிப்புரைகளையும் காணலாம். பல்வேறு எழுத்தாளர்கள் எழுதும் ஆய்வுக்கட்டுரைகள் இதழுக்கு அறிவார்ந்த முக்கியத்துவத்தை அளிப்பவை.

இவ்விதழ் பாப்லோ நெரூதா பற்றிய சிறப்பிதழாக வந்திருக்கிறது.’நெரூதாவை படிப்போம்’ என்று எஸ்.வி.ராஜதுரை ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். பாப்லோ நெரூதாவைப்பற்றிய வரலாற்றுக்குறிப்புகள் அவரது மனைவியின் நினைவுக்குறிப்புகள் ஆகியவையும் யூமா வாஸ¤கி மொழியாக்கம் செய்த நெரூதா எழுதிய ‘என் கவிதை வாழ்க்கை’ என்ர நெடுங்கட்டுரையும் இடம்பெற்றுள்ளது.

‘உங்களச் சுற்றியிருப்பவற்றிலிருந்து நீங்கள் துண்டித்துக் கொள்கிறீர்களா?’ என்ற வினாவுக்கு ‘ நான் துண்டித்துக் கொள்கிறேன். சட்டென்று அவையெல்லாம் அமைதியடைகின்றன. அப்போது அது என் அமைதியை குலையச் செய்கிறது’ என்ற விசித்திரமான, கற்பனையை தூண்டும், பதிலைச் சொல்கிறார் நெரூதா.

கா·ப்காவைப்பற்றி இரு கட்டுரைகள் உள்ளன. கா·ப்கா பற்றிய பேச்சுகள் இப்போது தமிழில் மிகவும் குறைவு. அவரை சென்றகால எழுத்தாளர்களில் ஒருவராக நமது இலக்கிய உலகம் அடையாளம் கண்டுகொண்டிருக்கிறது. இக்கட்டுரைகள் புதிய கண்ணோட்டங்கள் இல்லாவிட்டாலும் அவரை நினைவுறுத்துகின்றன எனலாம்.

எஸ்.வி.ராஜதுரை அவரது கட்டுரையை இப்படி முடிக்கிறார்.”…இயற்கையை தரிசிப்பதில் நெரூடாவுக்கு அத்தனை விருப்பம். புள்ளினங்கள் மீது அவருக்கு கொள்ளை ஆசை…. இயற்கையை, புள்ளினத்தை கண்டு பரவசப்படும் சமகாலத்தமிழகக் கவிஞர்களை தேடினால் இங்குலாப் போன்று யாரோ ஓரிருவர் மட்டுமே நம் கண்ணுக்குப் புலப்படுகின்றனர். நெரூடாவை படிப்போம்”

சிரித்து ,விக்கி ,கண்ணீர் மல்கிவிட்டேன். மார்க்ஸிஸ்டுகளால் நகைச்சுவை விருந்தளிக்க முடியாது என்பது ஒரு முதலாளித்துவப் பொய்தான், சந்தேகமே இல்லை.

தொடர்புக்கு

[email protected]

41 B sidco industrial estate

ambathur

chennai

600098

முந்தைய கட்டுரைதாலப்பொலி: ஒருகடிதம்
அடுத்த கட்டுரைதசாவதாரம்