தாலப்பொலி: ஒருகடிதம்

தாலப்பொலி: ஒருகடிதம்

அன்புள்ள ஜெயமோகன்,

‘தாலப்பொலி’ என்ற தூய தமிழ் வார்த்தை என்று சொல்கிறீர்கள். அந்தச்சொல் தமிழ்போலவே இல்லையே.எந்த அடிப்படையில் அதை தமிழ் என்கிறீர்கள்?

ஜஸ்டின் ராஜசேகர்

அன்புள்ள ஜஸ்டின் ராஜசேகர்,

எஸ்.வையாபுரிப்பிள்ளையின் தமிழ் பேரகராதி [சென்னை பல்கலை வெளியீடு] தமிழில் ஒரு முதன்மைச் சாதனை. இந்த வினாவுக்காக அந்த நூலை எடுத்து புரட்டி இச்சொற்களைப் பார்த்தேன். உண்மையில் பலவியப்புகள்.

தாலம் என்றால் தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் இலை என்றுதான் முதற் பொருள். ஆனால் வடமொழியில் அதற்கு வேர்ச்சொல் இல்லை.வேர்ச்சொல் இருப்பது தமிழில். ஆகவே அது இங்கிருந்துபோன சொல். ‘தால்’ என்றால் இலை என்பதுடன் நாக்கு என்றும் பழந்தமிழ் மொழியில் பொருள் உள்ளது. இலையை மரத்தின் நாக்குகளாகக் கண்ட ஒரு தொல்குடியின் விழியே மொழியாக ஆனதா அது?

அந்த வேர்ச்சொல்லில் இருந்து கற்பனையும் நடைமுறையும் கலந்து பல ஆயிரம் வருடங்களாக சொற்கள் பிறந்துகொண்டே இருக்கின்றன.இலையே உண்கலமாக ஆனதனால் தாலம் என்பது உண்கலம்  என்று பொருள் பெற்றது. பின்னர் தட்டுக்கு தாலமென்று பொருள் வந்தது. அதன்பின் தாம்பாளத்துக்கு தாலம் என்று பொருளாகியது. மலையாளத்தில் இன்றுள்ள நடைமுறை வழக்கிலும் தாலம் என்றால் தட்டுதான். தமிழ்நாட்டில் இன்று சில பகுதிகளில் வெற்றிலைத்தட்டு தாலம் என்று சொல்லப்படுகிறது.

எப்போதோ ஒரு கட்டத்தில் பூமியின் மாபெரும் வட்டவிரிவுக்கும் தாலம் என்றே பொருள் வந்தது. இலைபோல் அகன்ற யானையின் காதுக்கும் தாலம் என்றுபெயர்.

பின்னர் குறிப்பாக பனையோலைக்கு தாலம் என்றபெயர் புழங்கலாயிற்று. தாலகி என்றால் பனையிலிருந்து வடிக்கும் கள். தாலத்த்¢லிருந்து வந்ததே தாலி. மணமகன் மணமகள் கழுத்தில் கட்டும் தாலி என்பது ஒரு பனையோலைச் சுருள்தான். இளம்பனையின் ஓலை நறுக்கில் காப்பு மந்திரத்தை எழுதி  அதில் சுண்ணமும் மஞ்சளும் கலந்து பூசி இறுக்கமாகச் சுருட்டி மஞ்சள் நூலால் இறுகச் சுற்றிக்கட்டி மஞ்சள்சரடில் கோர்த்து கட்டுவார்கள். ஒரு முப்பது வருடங்களுக்கு முன்னர் வரைகூட அந்த தாலி குமரிமாவட்டத்தில் புழக்கத்தில் இருந்து நான் கண்டிருக்கிறேன்.

[தமிழ் மைய நிலம் போல வேற்றுமொழி மற்றும் பண்பாட்டு ஆதிக்கம் இல்லாதிருந்தமையால் தொல்தமிழ் சடங்குகள் பல குமரிமாவட்ட பகுதிகளிலும் மேற்குமலைப்பகுதிகளிலும் கேரள ஆலயங்களிலும் இப்போதும் நீடிக்கின்றன. தொல்தமிழ் வாழ்வு பற்றிய ஆராய்ச்சிக்கு முக்கியமான பல தரவுகளை அளிக்கும் இடங்கள் இவை]

உண்மையில் தாலி என்றால் மணமங்கலச் சின்னம் மட்டும் அல்ல. தாலிக்கொழுந்து என்ற நகை உண்டு. இது பனைஓலைக் குருத்தால் செய்யப்படும் சிறிய நகை. தமிழ்நாட்டுப்பகுதியில் கழுத்தில் அணிவார்கள். இப்போது இதை அப்பெயரிலேயே பொன்னில்செய்து அணிகிறார்கள். குமரிமாட்டப்பகுதிகளில் பொதுவாக உடலில் கட்டும் காப்பு [தாயத்து] களை எல்லாமே தாலி என்பது வழக்கம். பிள்ளை பிறந்த ஐந்தாம் நாள் கணியன் வந்து குருத்தோலையில் மந்திரம் குறித்து சுருட்டி கழுத்தில் கட்டும் வழக்கம் இருந்தது. இதற்கு ‘ஜெபிச்சுகெட்டு’ என்றும் ‘குருத்தோலை மங்களம்’ என்றும் பெயர். ஆரம்பகாலத்தில் கிறிஸ்த்தவர்களாக மாறியவர்கள் ஏசுவின் நாமத்தை இவ்வாறு ஜெபித்து கட்டினார்கள்.

பழங்காலத்தில் ஈற்றுமுறி அல்லது பேற்றுமுறி என்று சொல்லப்படும் வடமேற்குபகுதியில் உள்ள பிரசவத்துக்கேயான தனி அறையில் இருந்து குழந்தையை வெளியே கொண்டு வருவதே ஐந்தாம் நாள்தான். பேற்றுமுறி சோற்றுகற்றாழை காஞ்சிரகொப்பு முதலிய பலவகை பொருட்களினால் தீமைகளில் இருந்து பாதுகாக்கப்பட்டிருக்கும். ஐந்தாம் நாள் அப்பாதுகாப்பு குழந்தைக்கு இல்லாமலாகிறது.ஐம்படைத்தாலி என்று இதையே சங்கப்பாடல்கள் சொல்கின்றன. ஐம்படைத்தாலி களையாமலேயே போருக்குச் சென்ற தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன் சோழர்களையும் வேளிர்களையும் வென்றான் என்பது புறநாநூற்று மிகை நவிர்ச்சிப்பாடல்.

இதன் பின் இருபத்தியெட்டாம் நாள் ஊர்கூடி விருந்தளித்து இடுப்பில் கட்டுவது இருபத்தெட்டு கெட்டு என்றும் அரைத்தாலி என்றும் சொல்லப்பட்டது. இதுவும் பனையோலையே. நானும் அதை அணிந்திருக்கிறேன் என்று தெரியும். அப்போதெல்லாம் பெரும்பணக்காரர்கள்தான் ஓலையை வெள்ளிக் குழாய்க்குள்  செலுத்தி கட்டுவார்கள். இப்போது எல்லாமே பொன் தான். தாலி என்றால் பொன் என்ற பொருள் வந்துவிட்டிருக்கிறது! பனையோலையும் இல்லை, கணியர்களும் இல்லை. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என அவர்கள் பம்பாய்க்கும் அரேபியாவுக்கும் வேலை தேடிச் சென்றிருக்கக் கூடும்.

பனையோலை விசிறிக்கு தாலவட்டம் என்று பெயர் என்கிறது அகராதி. இந்தப் பெயர் குமரிமாட்டத்தில் இல்லை. ஆனால் திருவிழாக்களில் யானைமீது சாமி ஊர்வலமாக எழுந்தருளும்போது இருபக்கங்களிலும் பல வண்ணங்களில் மாற்றி மாற்றி பிடிக்கப்படும் வட்டமான அலங்கார வடிவங்களுக்கு தாலவட்டம் என்ற பெயர் உண்டு. மருவி ஆலவட்டம் என்று ஆகியிருக்கிறது. பொருள் தெரியாமலேயே ஆலவட்டம் போடுதல் என்று சொல்லி பழகியிருமிருகிறோம். தாலவட்டம் என்று அத்தகைய ராஜகம்பீர விசிறிகளை மட்டுமே சொல்ல வேண்டும்போல.

தாலிப்பெட்டி அல்லது தாலப்பெட்டி என்றால் பனை ஓலையால் இறுக்கி முடைந்து செய்யப்பட்ட செவ்வகவடிவப் பெட்டி. மூடிபோடும்படி இருக்கும். உள்ளே தேன்மெழுகு பூசி நீர்ப்பாதுகாப்பு செய்வதும் உண்டு. ஓலைகள் காகிதங்களைக் கையோடு கொண்டு போவதற்கானது. இலகுவானது. தாலப்பாய் என்றால் பனம்பாய். என் அம்மா தாலப்பாய், தாலிப்பெட்டி எல்லாமே அற்புதமாக முடைவாள். பனைகள் மண்டிய நட்டாலம் பகுதியிருந்து வந்தவள் அவள். நானும் முடைவதுண்டு. அப்போது அம்மா செய்யும் பெரும்பாலான கைத்தொழில்கள் எனக்கும் தெரியும். பெட்டிக்கு நாலுமுனைகள் உண்டு. ஒருமுனையை மடக்கி அங்கிருந்து முறுக்கி விரித்துக்கொண்டே செல்லவேண்டும். அதன் விளிம்புகளை மணிகட்டியதுபோல மடித்து அலங்காரம்செய்வது பெரிய கலை. முக்குகளை வாறுகடை என்று சொல்லப்படும் பனைநாரால் இறுக்க வேண்டும். கடுக்காய்ச்சாயம் பூசி அதை அழகுபடுத்துவதும் உண்டு. முப்பது வருடங்களாகிறது இவற்றை நான் கண்னால் கண்டு.

என் சிறுவயதில் குழந்தைகளை தூங்கவைக்கும் ஆட்டுதொட்டில் பனையோலையில் செய்யப்பட்டது. சொல்லப்போனால் பாட்டி தூங்கிய அதே தொட்டில் பேரனுக்கும் மச்சில் இருந்து எடுக்கப்படும். இறுக்கமாக பனையோலையில் செய்யப்பட்ட இது பொதுவாக செவ்வக வடிவில் இருக்கும். எங்கள் வீட்டில் மட்டும் நீள்வட்ட வடிவில் இருந்தது குடிச்சிறப்பு என்று சொல்லப்பட்டது. குழந்தையின் நீர் கீழே வழிந்தோடிவிடும். விளிம்புகளில் பனைநார் வேலைப்பாடுகள் உண்டு. வண்ணச் சித்திரங்கள். மச்சில் கட்டியும் ஆட்டலாம். குறுக்கே கம்பு கொடுத்து கட்டில் அருகே நிற்கவும் வைக்கலாம். இதை ஆட்டுவதே தாலாட்டு. பாடுவது தாலே தாலேலோ.

‘பொலிக’ என்பது ஒரு தொல்தமிழ் வாழ்த்து. பொலிதலென்றால் செழித்தல், விளைதல், அழகுறுதல், ஒளியுறுதல்,சிறத்தல் என்றெல்லாம் அர்த்தம் உண்டு. ஆனால் மூலப்பொருள் விளைச்சல் என்றே இருந்திருக்கும் என்பதை குமரிமாவட்ட பேச்சுவழக்கு காட்டுகிறது ‘பொலி என்ன உண்டு?’ என்றால் விளைச்சல் என்று மட்டுமே பொருள். வயலில் அறுத்து கட்டும் ஒரு ஆள் சுமக்கும் கற்றைநெல்லுக்கும் பொலி என்றே பெயர். நாஞ்சில் நாட்டில் பொலி என்றால் நெற்குவியல். கண்ணால் மதிப்பிடப்படும் ஓர் அளவு அது. எத்தனை மரக்கால் இருக்கும் என்று நாஞ்சில்நாடனிடம் கேட்க வேண்டும்.

மன்னனுக்கோ கோயிலுக்கோ கொடுக்கவேண்டிய முதல் திறை நெல்லும் பொலி எனப்படும். களத்தில் நெல்லை பதரோடு அள்ளி காற்றில் வீசி பதரும் கூளமும் களைதல் பொலி தூற்றுதல் என்று பெயர். களத்துப் பாட்டுக்கு  பொலிப்பாட்டு என்று பெயர். குமரிமாவட்டத்தில் ஆவணி மாதத்தில் விவசாய வீடுகளில் ‘நிறபொலி’ என்ற சடங்கு உண்டு. நெற்கதிர், மாந்தளிர், மஞ்சள்கொத்து போன்றவற்றை கட்டி அறைகளுக்குள் தொங்க விடுதல். தொல்தமிழர்களின் வளச்சடங்குகளில் ஒன்று இது. வீடுபொலித்தல் என்றும் சொல்வார்கள். அம்மன் கோயில்கலில் அலங்காரம்செய்வதை காவுபொலித்தல் என்பதுண்டு. காவு என்றால் தமிழில் காடு. சேரநாட்டு அம்மன்கள் அனைத்துமே காட்டில் அமர்ந்த அன்னையரே.

பொலிப்பு என்றால் புணர்ச்சி. பொலிகாளை என்ற சொல் அப்படி வந்ததே. விளைவிப்பதனால் .பொலிப்பு என்ற சொல்லுக்கு திருமணமான மணமகளுக்கு வரும் தனி அழகு என்றும் பொருள் உண்டு. ‘பெண்ணுக்க பொலிப்ப கண்டா கொந்நையில பொன்னு பூத்த மாதிரில்லா’ என்று சொல்வார்கள். விஷ¤ என்று கேரளம் கொண்டாடுவது தமிழகம் மறந்த தொல்தமிழரின் வசந்த விழாவை. கொன்றை பூப்பதே அதன் அடையாளம்.’பொலனணி கொன்றை’ என்று சங்க இலக்கியம் அதைப்பற்றி பன்னிப் பன்னிப் பாடுகிறது. கொன்றை பூப்பத்ற்குள் பொருள்வயின் சென்ற தலைவன் வந்தாக வேண்டும், இன்றும் அதை ‘கணிக்கொந்ந’ என்று கேரளத்தில் கொண்டாடுகிறார்கள். கொன்றை பூப்பதை ‘விஷ¤ப்பொலி’ என்பார்கள். பொருள்வயின் வளைகுடாச் சென்றவர்கள் வான் வழி வந்துசேர்கிறார்கள்.

பொலிவு என்ற சொல் இன்றும் நம்மிடம் புழக்கத்தில் உள்ளது. பொலிவது பொலம் அல்லது பொன். பொன்னால் ஆன அணிகலனும் பொனன் என்றும் பொலம் என்றும் சொல்லப்பட்டது. தாலப்பொலி என்றால் இதுதான். தாம்பாளத்தில் இருக்கும் பொலிவு. மலர்கள் பழங்கள் மங்கலபொருகள் விளக்கு…

ஒரு தமிழ்ச்சொல் நம் பண்பாட்டின் ஆழங்களுக்கு கொண்டுசெல்லக் கூடியது. அந்த பயணம் இலையையும் நாக்கையும் ஒன்றாகக் கண்ட கவித்துவமே மனமாக ஆன தொல்பழங்குடி ஒன்றை நோக்கி நம்மை வழிநடத்தும்.

கம்பனும் காமமும் :ஒருகடிதம்

முந்தைய கட்டுரைகம்பனும் காமமும் :ஒருகடிதம்
அடுத்த கட்டுரைஉங்கள் நூலகம்