எம்.எ·ப்.ஹ¤செய்ன் கடிதம்.

அன்புள்ள ஜெயமோகன்,

ஹிந்து தெய்வங்களின் திருவுருவங்கள் விக்டோரிய ஒழுக்கவியலாளர்களின் கட்டமைப்புக்கும் இரசனைக்கும் உருவானவை அல்ல என்பது சரியான விஷயம். ஒரு குறுகலான ஒழுக்கவிதியுடன் ஹிந்து திருவுருவங்களை உருவாக்க செய்யப்படும் முயற்சிகள் மடத்தனமானவை. ஆபத்தானவை. ஹுசைனின் ஓவியங்கள் தாக்கி அழிக்கப்பட்ட செயல்கள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கவை. அவருக்கு கொலை மிரட்டல்கள் விடப்பட்டிருந்தால் அவை நிச்சயமாக நம்மை வெட்கி தலைகுனியவே வைக்கும். அதே சமயம் அவரது ஓவிய உலகில் நுழைந்து நாம் பார்ப்பதும் அவசியம் என்றே நான் நினைக்கிறேன்.

ஹுசைனின் ஓவிய உலகு கலைஞர்களுக்கே உரிய தாறுமாறுத்தனமும் அதீத நடத்தையும் கலந்தது. ஒரு இஸ்லாமியரான அவர் ஹிந்து உருவங்களை தீட்டியது பலரை கண் தூக்கிப் பார்க்க வைதத்தது. ஹுசைன் தன் மகளின் திருமண அழைப்பிதழில் சிவன் பார்வதியை நிர்வாணமாக வரைந்திருந்தார். சிவனின் கை பார்வதியின் ஒரு புற முலையின் மீது படிந்து பற்றியிருந்தது. தனது மகளின் திருமணத்துக்கு வந்த முஸ்லீம்களை அந்த அழைப்பிதழ் நெளியச் செய்தது என்கிறார் ஹுசைன்.

ஹுசைனின் கலை நீங்கள்(ஜெ) சொல்வது போல தாவல் நிகழ்த்திற்றா அல்லது அதுவே தேங்கிப் போய்விட்டதா தெரியாது. நிச்சயமாக அவரது கலை ஒரு முன்னகர்வு என்பதும் அவர் ஒரு மேதாவியான ஆளுமை என்பதும் உண்மை. அதே போல அவரது கலை பலசமயங்களில் பிரச்சார கலையாகவே செயல்பட்டது என்பதும் உண்மை. நெருக்கடிகாலம் பிரகடனம் செய்த உடன் அந்த ஒரு நாளிலேயே இந்திராகாந்தியை துர்க்கையாக சித்தரித்தார் அவர் (அதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் பங்களாதேஷ் போருக்காக இந்திரா காந்தியை அவ்வாறு புகழ்ந்திருந்தார் வாஜ்பாய்.)

ஹுசைன் தன் அதீத உணர்ச்சிகளை மலினமாகக் காட்டக்கூடியவர்தான். வெங்கட் சுவாமிநாதன் சொல்கிறார்: “மொரார்ஜி பாய் ஹுஸேனுக்கு குரங்காகக் காட்சி அளித்தார். இது மிகவும் மலிவான உணர்ச்சி வசப்படும் ஒரு கோட்டின் எல்லைக்கே அதீதமாகச் சென்றுவிடும் பார்வை அல்லவா என்றால் அதுவும் ஹுஸேன்தான்.” ஆக, தியான நிலை தாந்திரிக மரபு இத்யாதிகளா அல்லது சாமர்த்தியமாக இந்திய மரபின் ஒரு எக்ஸாட்டிக் அம்சத்தை ஹுசைன் ஒரு உயர்தள வியாபார கலையாக்கிக் கொண்டாரா என்பது கேள்விக்குரியது.

ஹுசைன் ஒரு இஸ்லாமியர் ஆனால் அவரது தொழில் இன்று தூய வாதமாக வைக்கப்படும் அந்த மதத்தின் அடிப்படைகளை நிராகரிப்பது இது அவருக்கு உள்ளத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்தியதா? ஏனென்றால் ஆபிரகாமிய மத மரபுகளிலிருந்து ஹிந்து மதத்தை கண்டு அதனால் அகஎழுச்சியை ஏதோ ஒரு விதத்தில் பெற்று அதனை பொதுப்புலத்தில் கலையாக விமர்சனமாக வைப்பவர்கள் அதன் exotic erotic தன்மைகளை மிகைப்படுத்தி வைப்பதை காணமுடிகிறது. எவ்வித அடிப்படை உளவியல் பயிற்சியும் இல்லாத மேற்கத்திய இந்தியவியலாளர்கள் இந்து தெய்வங்களை ப்ராய்டிய பகுப்பாய்வு செய்து காமரசம் சொட்ட சொட்ட மேற்கின் வரவேற்பறைகளில் coffee table புத்தகமாக வைப்பது நன்றாகவே விலை போகும் விஷயமாக இருக்கிறது.

உதாரணமாக கணபதியின் துதிக்கை ஆண்மையிழந்த குறியாகவும், அவரது உடைந்த தந்தம் அவரது காயடிப்பாகவும் இதற்கு காரணம் கணபதி தொன்மத்தின் அடிப்படையில் இருப்பது ஓடிபஸ் மனச்சிக்கலே என்றும் சொல்லும் புத்தகம் சிறந்த சமய ஒப்பீட்டுக்கான பரிசை வாங்கித்தரும். ஹுசைனின் ஓவியத்திலும் இதே தன்மை காணப்படுகிறதோ என்பது ஆராயப்பட வேண்டிய விஷயம். புலியின் வாலால் சுயஇன்பம் காணும் நிர்வாண துர்க்கையின் ஓவியம் ஒரு மேற்கத்திய ஹோட்டலின் வரவேற்பறையில் என்ன பதிவுகளை ஏற்படுத்தும்?

அவருக்கு ஹிந்து மரபிடம் ஒரு அன்பு-வெறுப்பு உறவு இருக்கிறதென்று தோன்றுகிறது. நிர்வாணத்தை ஒரு தீய சக்தியை அவர் வெறுக்கும் ஒன்றை காட்டவும் பயன்படுத்திக் கொள்கிறார் என்பதையும் சொல்லவேண்டும். (உதாரணமாக ஹிட்லரை அவர் காட்டும் விதம்) இவையெல்லாவற்றையுமே அவரிடமே ஒரு உரையாடலில் விவாதித்திருக்கலாம் அல்லது ஒரு கடுமையான விமர்சன பார்வையாகக் கூட வைத்திருக்கலாம். அவர் மீது வன்முறையை பிரயோகித்திருக்கக் கூடாது. தாந்திரீகம் என்றென்றும் நம் மரபில் இருந்து வந்துள்ளது. ராமகிருஷ்ண பரமஹம்சரின் தாந்திரீக குருவாக இருந்தவர் ஒரு பெண் என்றால் அந்த மரபு நன்றாக வேர் விட்டு நம் சமுதாயத்தில் காலனிய தேக்கநிலை காலகட்டத்திலும் கூட இருந்து வந்துள்ளது. ஆனால் அது மேலை நாட்டவருக்கான காபி மேசை வண்ண ஓவியமாக்கப்படுவதில் ஒருமலினப்படுத்துதல் உள்ளது. அத்துடன் மற்றொரு விஷயத்தையும் நீங்கள் கணக்கில் கொள்ள வேண்டும். இந்த தாந்திரிக மரபு பாலியல் ஓவியங்கள் ஆகியவற்றை ஹிந்து சமுதாயத்தின் மிக மோசமான கீழ்நிலை என்று சொல்லி அதனை இழித்தும் பழித்தும் ஒரு பெரும் பிரச்சாரம் செய்யப்பட்டு வந்துள்ளது. அதனை பரவலாக எதிர்கொள்ளும் சக்தியே இந்த பத்தாண்டுகளின் இறுதியில்தான் இந்து சமுதாயத்துக்கு மிக ஓரளவு கிடைத்துள்ளது. காந்தி கூட காஜுரேகோ கோவில்களை உடைக்க வேண்டுமென சொன்னதாக ஓஷோ சொல்லுவார் (ஓஷோ ஷாக் வேல்யூவுக்காக பொய்யும் சொல்லுவார். அவர் ஒரு பாப்-ஆன்மிக (pop-spiritual) கதை சொல்லி பாட்டாவும் கூட. காந்தியின் வார்த்தைகளில் நான் படித்தவரை இவ்வாறு பார்த்ததில்லை.) அண்மையில் நம் தமிழ்நாட்டு முதல்வர் கூட கோவில் கோபுரத்தில் இருக்கும் “ஆபாச” பொம்மைகளைக் குறித்து கிண்டல் செய்தார். திகவினர் இதனை ஒரு பெரும் பிரச்சாரமாகவே செய்கின்றனர். இன்னொரு விஷயத்தையும் கவனிக்கவேண்டும். தடைகள் வாங்குவது என்பது தனது சக்தியைக் காட்டும் ஒரு விஷயமாக இந்தியாவில் ஆகிவிட்டது. எல்லா power groupகளும் இதனை தம் இருப்பைக் காட்டும் தம் மந்தைக்கு அவர்களது சக்தி குறித்த நம்பிக்கை அளிக்கும் விஷயமாக இந்த தடை விஷயத்தைச் செய்கின்றன. சல்மான் ருஷ்டியில் தொடங்கி டாவின்ஸி கோட் வரை இதை காணலாம். மார்க்சிய தாலிபானியமும் பெயர் பெற்ற விஷயம்தான். இந்த போலி-பகுத்தறிவு தாலிபான்களைக் குறித்து இந்திய ஊடகங்களில் எந்த கேள்வியும் எழுந்தது கிடையாது. உதாரணமாக ஹுசைன் பிரச்சனையில் கலையுணர்வு குறித்து பேசும் ஃபரண்ட்லைன் ஜைன துறவிகளின் நிர்வாணத்தை தடைசெய்ய கோரும் பகுத்தறிவு குரலை ஆதரித்து கட்டுரை வெளியிடும். ஹிந்து தலிபான்கள் என நீங்கள் குறிப்பிடுபவர்கள் fringe phenomenon என்றால் மார்க்ஸிய-திராவிட வட்டங்களில் இந்த தாலிபானியம் மைய அச்சிலேயே இடம் பிடித்துள்ளது.  2001 இல் அலெக்சாண்டர் சுகொரோவின் ‘தாரஸ்’ (Taurus) எனும் திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் வெளியிடப்படவிருந்த போது அந்த திரைப்படத்துக்கு எதிராக இடதுசாரி கலாச்சார அமைப்புகள் கொடி பிடித்தன. காரணம் – அரசியல் சந்தையில் கம்யூனிஸ்ட் கட்சிகளால் விற்கப்படும் லெனினின் பிம்பத்தினை உடைப்பதாக அந்த படம் அமைந்ததுதான் (பிபிஸி. 16-நவம்பர் 2001). இத்தனைக்கும் சர்வதேச படங்களை காண்பது எல்லாதரப்பு பொதுமக்களும் அல்ல என்பதும் பெரும்பாலும் அறிவுஜீவிகள்தான். இவர்கள் காண்பதையே அறிவுஜீவிகளான பீமான்போஸும் ஜோதிபாஸுவும் கம்யூனிஸ்ட் கட்சியின் ‘இளைஞர்’படையும் தீர்மானிப்பார்கள் என்பதையும் அது இங்கு ஒரு ஊடக விவாதமாகக் கூட மாறவில்லை என்பதையும் பாருங்கள். நேர்மாறாக ராமகிருஷ்ண பரமஹம்ஸர் குறித்த சர்ச்சைக்குரிய பலவித திரித்தல்கள் கொண்ட நூல் தடைசெய்ய கோரிக்கை விடுக்கப்பட்ட போது உள்துறை அமைச்சராக இருந்த அத்வானி அதை நிராகரித்தார். ஆனால் நமது ஊடகங்கள் சில ஹிந்து கூக்குரல்களை தாலிபானியம் ஆக்கும். தாலிபானியத்துக்கோ அமைதி காக்கும். இந்த ஊடக இரட்டை டம்ளர் முறையும் ஒருவிதத்தில் விளிம்பு ஹிந்து ஆத்திர குரல்களுக்கு அதிக முக்கியத்துவமும் ஒளிவட்டமும் அளிக்கின்றன. அறிவார்ந்த எந்த விவாதமும் ஹிந்துத்துவர்களிடம் நடத்த முடியாது அவர்கள் முரடர்கள் பாசிச லும்பன்கள் அழிக்கப்பட வேண்டிய தீய சக்திகள் என காட்ட இந்த ஊடக இரட்டை டம்ளர் முறை மிக நல்ல உக்தியாகவே இருக்கிறது. ஹுசைனே தனது போரா மரபைச் சார்ந்து இஸ்லாமிய தொன்ம-வரலாற்று ஆளுமைகளை சித்தரிக்கும் போது இந்த கலைப்பார்வையை பிரயோகிக்கவில்லை என்பதையும் உலேமா கவுன்ஸில் அவரது திரைப்படத்தில் குரானின் வரிகளை பயன்படுத்தியதை எதிர்த்த போது மறுபேச்சில்லாமல் படத்தை பின்வாங்கிக்கொண்டார் என்பதையும் பார்க்க வேண்டும். ஆனால் ஒரு இஸ்லாமியர் இப்படி ஓவியங்களைத் தீட்டுவதே இன்றைய சூழலில் பெரிய விஷயம். எனவே அவரை ஒரு பிரச்சனையாக ஹிந்துத்துவர்கள் பேசவேண்டியதில்லை எனும் குரல் ஹிந்துத்துவத்தின் உள்ளிருந்தே எழுகிறது (உ-ம்: அருண் ஷோரி) என்பதையும் கவனிக்க வேண்டும்.

இதையெல்லாம் சொல்வது வன்முறைக்கோ அல்லது கலை தணிக்கைக்கோ ஆதரவளிப்பதற்காக அல்ல என்பதையும் தெளிவாக சொல்ல வேண்டியிருக்கிறது. நீங்கள் சொல்லும் “ஹிந்து தாலிபானியம்” என்று அழைக்கும் விஷயத்தில் ஹிந்து மதத்தின் மீது வைக்கப்படும் மிக மோசமான பிரச்சார கீழ்த்தனங்கள் சரியான விதத்தில் எதிர்கொள்ளப்படாததும், நம் போலி-மதச்சார்பின்மை அரசு இந்தியாவில் இயங்கும் இதர அடிப்படைவாத சக்திகளுக்கு அடிபணிந்து போவதும் இத்தகைய விக்டோ ரிய ஒழுங்கியல் சார்ந்த ஹிந்து மத மீட்டெழுச்சியாளர்கள் ஒரு அதிக டெஸிபல் குரலாக எழுவதற்கு வழி வகுக்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும் என நினைக்கிறேன். டானிஷ் கார்ட்டூன் விவகாரத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளை ஆதரிக்கும் மார்க்சியர்கள் ஹுசைனுக்கு ரவிவர்மா விருது வழங்குகிறேன் என்று சொல்ல என்ன யோக்கியதை இருக்கிறது என பாருங்கள்.

மேலும் சில தகவல் பிழைகளை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். பாண்டியினருகில் ஜைன முனிவர்களை தாக்கியவர்கள் பெரியார் திக எனும் கும்பலை சார்ந்தவர்கள்.திகம்பர ஜைன முனிவர்களுக்கு ஆதரவாக உள்ளூர் மற்றும் கர்நாடக ஹிந்து இயக்கங்கள் களமிறங்க முனைந்தன. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட பதட்டத்தினால் காவல்துறை அந்த துறவிகளுக்கு பாதுகாப்பளித்தது இதனை 2006 ஜூன் 6 தேதியிட்ட ஆசியன் ஏஜ் செய்தியில் பார்க்கலாம்.

மேலும் ஆனந்த மார்க்கத்துக்கு எதிரான மிக உக்கிரமான தடை காங்கிரஸின் நெருக்கடி காலத்தின் போது ஏற்பட்டது. (முரண்நகையாக அதே நெருக்கடி பிரகடனத்தை ஹுசைன் ஆதரித்தார்) ஆனந்த மார்க்கத்தின் மீதான மிக மோசமான வதந்திகள் இந்திரா அரசால் பரப்பப்பட்ட போது அதனை மக்களிடம் கொண்டு செல்லும் பணியை கர்ம சிரத்தையாக சிரமேற்கொண்டு செய்தது அப்போது குஷ்வந்த் சிங் ஆசிரியராக இருந்த இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி ஆஃப் இந்தியாதான். நாகர்கோவிலில் ஆனந்தமார்க்கிகளின் கூட்டம் நடந்த போது உள்ளூர் ஹிந்து இயக்கங்கள் அதற்கு உதவின என்பதும் எனக்கு நினைவிருக்கிறது.

பணிவன்புடன்

அரவிந்தன் நீலகண்டன்

Invading the Sacred: அமெரிக்காவில் நிகழும் இந்துமத ”ஆய்வுகள்” – பகுதி (1)   http://www.tamilhindu.com/2009/11/invading-the-sacred-book-review/

http://www.invadingthesacred.com/

அன்புள்ள அரவிந்தன்,

உங்கள் கடிதத்துக்கும் என் கட்டுரைக்கும் இடையே உள்ள முக்கியமான வேறுபாடு இதுதான், நான் ஹுசெய்ன் மீதான நம்பிக்கையில் இருந்து பேசுகிறேன். அந்த நம்பிக்கை என்பது அவரது மற்ற ஓவியங்கள் மூலம் அவர் நிகழ்த்திய ஒட்டுமொத்த பங்களிப்பைச் சேர்ந்து என் மனதில் உருவானது. நீங்கள் நேர் மாறாக அவர் மீதான அவநம்பிக்கையில் இருந்து பேசுகிறீர்கள்.

அந்த அவநம்பிக்கை மெல்ல மெல்ல மும்பையில் இஸ்லாமியர் மீது உருவாகி இன்று மிக வலிமையாக உள்ளது. தொண்ணூறுகள் வரை கூட மும்பையில் பொதுவாக இந்துக்கள் இஸ்லாமியர்களை மிக நெருக்கமானவர்களாகவே எண்ணினார்கள். கலை இலக்கியத்துறைகளில் அந்த நம்பிக்கை வலுவாகவே இருந்தது. ஆனால் மும்பை குண்டு வெடிப்பு அவர்களின் அந்த நம்பிக்கையைத் தகர்த்தது. அந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் மும்பையிலும் மகாராஷ்டிராவில்பொதுவாகவும் முஸ்லீம்களின் தேசபக்தி, சகமதத்தவர் மீதான நேசம் ஆகியவை ஆழமான அவநம்பிக்கையுடன் மட்டுமே அணுகப்படுகின்றன

அதற்குக் காரணங்களில் ஒன்று, மும்பைக் குண்டுவெடிப்புகள் மட்டும் அல்ல. அந்தக் குண்டுவெடிப்புளுக்குப் பின் இஸ்லாமிய அமைப்புகள் சிலவும் இதழாளர்களும் நடந்துகொண்ட முறையே. அக்குண்டுவெடிப்பை நியாயப்படுத்தும் குரலில் அவர்கள் பேசினார்கள். குண்டுவைத்தவனின் மன உணர்வுகளைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பது ஒருவகை நியாயப்படுத்தலே.

இதனால்தான் மிக முக்கியமான சக ஓவியர்கள் கூட ஹுஸெய்னை எதிர்க்கிறார்கள். அவரை ஐயப்படுகிறவர்களில் அவரது நேற்றைய நெருக்கமான தோழர்களும் உண்டு. மிக மிக துரதிருஷ்ட வசமான நிலை இது. மும்பைக் குண்டுவெடிப்பின் பிறகு கண்டனங்களைத் தெரிவிக்க ஹுஸெய்ன் மறுத்துவிட்டார் என மும்பையில் வாழும் பரோடா பள்ளியைச் சேர்ந்த முக்கியமான ஓவியர் ஒருவர் தனிப்பட்ட முறையில் எனக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகிறார்.

இந்த வகையான ஐயங்களின் கோணத்தில் பார்ப்பதனாலேயே அவரது ஓவியங்கள் வேறு பொருள் அளிக்கின்றன. படிமங்களின் இயல்பே அதுதான். அர்த்தங்கள் ரசிகனின் மனதில்தான் உருவாகின்றன.

ஹுசெய்ன் வரைந்த சிவகாம சுந்தரர் படிமத்தை, தேவியின் மார்பகத்தைப் பற்றிய சிவனின் சிலையை, சர்வசாதாரணமாக சோழர்கால வெண்கலச் சிலைகளில் காணலாம். அதைத்தான் ஹுஸெய்ன் மறு ஆக்கம் செய்திருந்தார்.

ஆனந்தமார்க்கத்துக்கு எதிராக கல்கத்தாவில் இடதுசாரிகளும், இந்திய தேசிய காங்கிரஸ் அரசும் கடுமையான நேரடித்தாக்குதல்களை நடத்தின. ஆனந்த மார்க்கத்தைச் சேர்ந்த பதினெட்டு துறவிகளை இடதுசாரித் தொண்டர்கள் முச்சந்திகளில் அடித்தே கொன்றிருக்கிறார்கள். தலைச்சேரி சித்தாசிரமத்தை அங்கே சுற்றுச்சுவருக்குள் அந்த உறுப்பினர்கள் நிர்வாணமாக வாழ்கிறார்கள் என்பதனால் நான்குமுறை அடித்து நொறுக்கி அங்கிருந்த சாதுக்களை படுகாயப்படுத்தினார்கள் மார்க்ஸியக் கம்யூனிஸ்டுக் கட்சியினர்.

மாற்றுக்கருத்துக்கள் ஒழிக்கப்படவேண்டியவை என்ற அடிப்படை கோட்பாடு கொண்ட அமைப்பு கம்யூனிஸ்டுக் கட்சி. ஸ்டாலினை ஒக்கலில் வைத்துக்கொண்டு இடதுசாரிகள் பேசும் எந்த கருத்துச்சுதந்திரப் பிரசங்கத்தையும் நான் அபத்தநாடகமாக மட்டுமே பார்க்கிறேன். தஸ்லீமா நஸ் ரீனுக்கு இடம் கொடுக்க மறுத்து துரத்திய இடதுசாரிகள் ஹுஸெய்னுக்கு ‘அடைக்கலம்’ கொடுக்க அழைப்பு விடுத்தது அவர்களின் அயோக்கியத்தனமான அரசியல் மட்டுமே.

இ.எம்.எஸை குறிப்புணர்த்த வாய்ப்புள்ள ஒருவரி, நம்பூதிரி என்ற சொல், ஒர் ஊழல் அரசியல்வாதியைச் சுட்ட பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதற்காகவே அருந்ததி ராயின் ‘சிறிய விஷயங்களின் கடவுளை’ தெருவுக்கு வந்து எதிர்த்தவர்கள் இடதுசாரிகள்.

திராவிடர் கழகத்தையும் அதன் வழிவந்தவர்களையும் பொறுத்தவரை அவர்களால் எந்தக் கலையையும், எந்த நுண்சிந்தனையையும் புரிந்துகொள்ள முடியாது என்பதே இதுவரை நாம் காண்பது. அவர்களிடம் உனக்கு ஒரு நியாயம் பிறருக்கு ஒரு நியாயமா என்ற கேள்வியைக்கூட எவரும் கேட்க முடியாது. அந்த தர்க்கத்துக்கு எல்லாம் அவர்கள் கட்டுப்படமாட்டார்கள்.

ஆனந்தமார்க்கம் இந்து அமைப்புகளால் காசியில் தாக்கபப்ட்டுள்ளது. தலைச்சேரி சித்தாசிரிரமத்தின் மீது கல்வீசியிருக்கிறார்கள் அவர்கள். அது இடதுசாரிகளும் திராவிடர்கழகத்தினரும் அன்றாடம் செய்துவரும் அடாவடியே. அதை  நகல்செய்யத்தான் இந்து குண்டர்களும் முயல்கிறார்கள் என்பதே நான் சொல்வது. ‘ஏன் அவர்கள் மட்டும் செய்யலாமோ’ என்பதல்ல அதற்குப் பதில்.

இன்று மேலை ஊடகங்களில் இந்து படிமங்களை திட்டமிட்டு இழிவுசெய்து அவற்றை கவித்துவமாகவோ தத்துவம் சார்ந்தோ கையாள முடியாத நிலையை உருவாக்கும் வேலைகள் கல்வித்துறை சார்ந்து நடந்துகொண்டிருக்கின்றன என நான் அறிவேன். இயந்திரத்தனமான ·ப்ராய்டியத்தை கீழைநாடுகள் மேல் பிரயோகித்த ஆலன் டண்டிஸ் போன்ற அரைவேக்காட்டு ஆய்வாளர்களை பெரிய மேதைகளாக முன்வைத்து மேற்கு அறிவுலகு இந்த அரசியல் சதியைச் செய்து வருகிறது.

ஆனால் இந்தியப் படிம மரபை படைப்பூக்கத்துடன் பயன்படுத்துவதும் இதுவும் முற்றிலும் வேறுபட்டவை. அந்த வேறுபாட்டை இந்துக்கள்தான் முன்வைக்கவேண்டும். இரண்டும் ஒன்றே என்றும்,  தாங்கள் செய்வது படைப்பூக்கத்துடன் ஆராய்வதே என்றும்தான் மேலைநாட்டு திரிப்பாளர்கள் சொல்வார்கள். அவர்களை எதிர்கொள்ளும் வழி அவதூறையும் கலையையும் பிரித்துப் பார்க்கும் நிதானமே.

ஆனால் அந்த நிதானத்தை இழந்து, வேறுபாடுகளைத் தாங்களே அழித்து, கலைமீது போர் தொடுப்பது என்பது அவதூறு செய்பவர்களுக்கு தாங்கள் அறிஞர்கள் என சொல்லிக்கொள்ள வாய்ப்பளிப்பதே. அந்த நடைமுறை யதார்த்தம் கூடத் தெரியாத தெருக்குண்டர்களால் இப்போது இவ்விஷயங்கள் கையாளப்படுகின்றன.

ஜெ

மறுபிரசுரம் முதற்பிரசுரம் Nov 17, 2009

முந்தைய கட்டுரைஅம்மா வந்தாள் -கேசவமணி
அடுத்த கட்டுரைஇருதீவுகள் ஒன்பது நாட்கள் – 1