«

»


Print this Post

காந்தியும் காமமும் – 1


அன்புள்ள ஜெயமோகன்,

மோகன்தாஸ¤ம் மகாத்மாவும் என்ற கட்டுரையில்  ஆண்பெண் உறவு குறித்த விஷயத்தில் காந்தியின் அணுகுமுறை உங்களுக்கு உடன்பாடல்ல என்பது போல எழுதியிருந்தீர்கள். காந்தி ஒழுக்கத்தைப்பற்றி உயர்வாகப்பேசினார் என்றுதான் நான் நினைக்கிறேன். காந்தியைப்போன்ற ஒருவர் அவ்வாறுதானே சொல்ல முடியும்? அதில் என்ன தவறு இருக்கிறது என்று நினைக்கிறீர்கள்?

 சிவசுப்ரமணியம்

 ஜெயமோகன்,

 நீங்கள் காந்தியைப்பற்றி எழுதிய கட்டுரைகளை கூர்ந்து வாசித்துவருகிறேன். காந்தி இளம்பெண்களுடன் படுத்து நடத்திய காமப்பரிசோதனைகளைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? மகாத்மாக்கள் அதைச்செய்தால் தப்பில்லை என்று சொல்லப்போகிறீர்களா?

 செல்வராஜன்

  

 

 

அன்புள்ள சிவசுப்ரமணியம்,செல்வராஜன்,

 காந்தியின் உலகியல் என்பது சுயஒறுப்பு சார்ந்தது. காமமும் காதலும் சுயமலர்தல் சார்ந்தவை. அவை இரண்டும் ஒன்றுக்கொன்று நேர் எதிரானவை. ஆகவே காந்தியம் அடிப்படையிலேயே காதலுக்கும் காமத்துக்கும் எதிரான ஒரு தரிசனம். அதன்  ஆகப்பெரிய குறைபாடே அதுதான்.

 நித்ய சைதன்ய யதி அவரது கட்டுரைகளில் காந்தியை கடுமையாக நிராகரிப்பது இந்த விஷயம் குறித்தே. காந்தியின் சபர்மதி ஆசிரமத்தில் நித்யா இருந்தபோது ஒரு பெண்ணுக்கும் பையனுக்கும் இடையே காதல் இருப்பதாக ‘புகார்’ காந்தி வரை சென்றது. காந்தி பிரார்த்தனைக்கூட்டத்தில் அந்தப்பெண்ணை எழுப்பி நிற்கவைத்து பொது விசாரணை செய்தார். தேசசேவைக்கு வந்த இடத்தில் புலனடக்கம் தேவை என்று உபதேசம் செய்து உண்ணாவிரதம் இருந்து தன் தவறுக்கு பிராயச்சித்தம் செய்ய ஆணையிட்டார்.

 நித்யா அந்தப்பெண் கண்ணீருடன் கூசிக்குறுகி நின்ற கோலத்தை வர்ணிக்கிறார். அந்தப்பெண்ணின் மனத்தில் நீங்காத ஒரு வடுவாக அந்த நிகழ்ச்சி பதிவாகியிருக்கும். அவளுடைய நுண்ணுணர்வுகள் கெட்டிப்பட்டு போகும். ஒருவேளை அவள் வீம்பாக எதிர்மறைச்செயல்களில் ஈடுபடலாம். அல்லது அப்படியே குறுகி தனக்குள் ஒடுங்கிக்கொள்ளவும் செய்யலாம். ஆனால் அவளுக்கு காமத்தையும் காதலையும் அனுபவிப்பதில் நிரந்தரமான ஒரு குற்றவுணர்ச்சி உருவாகிவிட்டதென்பது உறுதி.

 ஆனால் அதேசமயம் காமத்தை குற்றவுணர்ச்சி இல்லாத ஒரு வெளிப்படைத்தன்மையுடன் பேசுவதென்றால் அதன் விளைவுகளே வேறு. உள்ளே உறைந்திருக்கும் எத்தனையோ தடைகளை தாண்டி ஆன்மா விடுபடும் தருணம் அது. ஆனால் காந்தி அதை பகிரங்க குற்றவிசாரணைதான் செய்தார்.

 அதற்கிணையான ஒரு நிகழ்ச்சி நித்யாவின் குருகுலத்தில் நடந்தது.நித்யாவின் தோழரும், நடராஜகுரு அவரது அடுத்த வாரிசாக எண்ணியிருந்தவருமான இளம்துறவி வினய சைதன்யா திடீரென ஆசிரமத்துக்கு வந்திருந்த இளம்பெண்ணிடம் காதல்வயப்பட்டார். அந்த தகவல் நடராஜகுருவுக்கு சிலரால் புகாராகக் கொடுக்கப்பட்டது. அவர்களை அழைத்து பேசியபின் ஆடல் பாடலுடன் அவர்களின் திருமணத்தை நடராஜகுரு நடத்தி வைத்தார்.

 காந்தி குறைந்த பட்சம் அந்தப்பெண்ணை அவரது  அறைக்குள் கூட்டிவந்து பேசியிருக்கலாம். ஆனால் அதுகூட  அவருக்கு உறைக்கவில்லை. ஏன் என்றால் அவரைப்போல தூய்மைவாத நோக்கு கொண்டவர்களுக்கு காமத்தை சுயவதை மற்றும் துன்பம் மூலமே ஒடுக்க முடியும் என்ற எண்ணம் இருந்தது. ஆகவே முடிந்தவரை கடுமையாக, அதிகளவுக்கு அவமானத்தையும் துன்பத்தையும் அளிக்கும்விதமாக, அந்த விஷயத்தை ஒறுப்பதற்கே அவர்கள் முயல்வார்கள்

 காந்தி தனக்கே கூட அதைத்தான் செய்துகொண்டார். தான் தவறுசெய்ததாக உணர்ந்ததும் பொது மேடையில் அதை முன்வைத்து தன்னையே குற்றவிசாரணை செய்துகொண்டார். அதன் மூலம் யாருக்கு என்ன மனச்சிக்கல் உருவாகும் என அவர் யோசிக்கவில்லை. காந்தியின் கொள்கைப்படி காமம் என்பது ஓர் அழுக்கு. அதைக் களைவதே சுயத்தூய்மை. அதற்குரிய சிறந்த வழி வெளிப்படையாக இருப்பதுதான்.

 

இந்த மனநிலையை காந்திக்கு அளித்தவை இரு பெரும் மரபுகள். ஒன்று சமணம். இன்னொன்று கிறித்தவம். சமணம் காமத்தை மூன்று மன அழுக்குகளில் முதன்மையானதாக சித்தரித்து [காமம் குரோதம்,மோகம்] மொத்த ஆன்மீகமும் காமத்துக்கு எதிரானதே என்று வலியுறுத்திய ஞான மரபு.  அப்பட்டமாக  வெளிப்படையாக இருப்பதே காமமீட்பு என்று சொன்னது அது. ஆகவே சமணத்துறவிகள் முழுநிர்வாணமாக இருக்கிறார்கள்.

 காம ஒறுப்பு என்பது கிரேக்க ஒறுப்புவாத மரபுக்கு இந்தியாவில் இருந்தே சென்றிருக்கவேண்டும். வணிகர் மதமான சமணத்தின் செல்வாக்கு வணிக வழிகளில் எல்லாம் உண்டு. பட்டுவணிகப்பாதை வழியாக மைய ஆசியாவிலும் கிரேக்கத்திலும் ரோமிலும் அதன் கருத்துக்கள் சென்று சேர்ந்திருக்கலாம். உலகியல் இன்பங்களை ஒறுப்பதே ஆன்மீக நிறைவின் வழி என்று ஒறுத்தல்வாதிகள் [Gnosticism]  நம்பினார்கள்

 அவர்களில் இருந்து அந்த நம்பிக்கை கிறித்தவ மரபுக்குள் ஆழமாக ஊடுருவியது. ரோமாபுரித்திருச்சபைக்கு மாற்றாக இருந்த ஒறுத்தல்வாதக் [Gnostic Christians]  கிறித்தவக்குழுக்களிலேயே சுய ஒறுத்தல் ஒரு ஆன்மீக வழியாக இருந்தது. பின்னர் ரோமாபுரிக்கிறித்தவம் அதை ஏற்றுக்கொண்டது. துறவு என்பது திருச்சபைக்குள் ஓர் அதிகாரமாகவே உருவெடுத்தது.

 காந்தியின் துறவுவழிக்கு இந்த இரு மரபிலும் தொடக்கங்கள் உண்டு. புலனடக்கத்தை அவர் தனக்கான பாதையாக வகுத்துக்கொண்டார். அது அவருக்கு அபாரமான ஆற்றலை அளித்தது என்பதிலும் ஐயமில்லை. ஆனால் காந்தி அதை ஒரு முழுமையான வாழ்க்கை முறையாக தன் மாணவர்களுக்குப் பரிந்துரைத்தார். அதை சுதந்திரப்போராட்டத்தின் நிபந்தனைகளில் ஒன்றாக ஆக்கக்கூட முயன்றார்.

 Young Gandhi to Mahatma Gandhi

ஆனால் காந்தியின் மாணவர்கள் அதைக் கடைப்பிடிக்க முடியாமல் தத்தளித்தார்கள். ஆகவே கடுமையான குற்றவுணர்ச்சிக்கு ஆளானவர்கள் உண்டு. இளம் வயதின் இலட்சியவேகத்தில் , எதிர்பார்ப்பில் பிரம்மசரியத்தை பலர் கடைப்பிடித்தார்கள். ஆனால் நடுவயதான, மணமான காந்தியர்கள் அவதிப்பட்டார்கள். எம்.ஓ.மத்தாய் அவரது சுயசரிதையான நேரு யுக நினைவுகள் நூலில் அரசியலில் லீடுபட்ட காந்தியர்களில் மொரார்ஜி தேசாய் மட்டுமே பிரம்மசரியத்தை உண்மையில் நம்பினார் என்கிறார்.

 காமத்தை கையாள்வது மிகக் கடினம். ஏனென்றால் அதனுடன் நுட்பமான ஏராளமான உணர்ச்சிகள் ஊடு கலந்துள்ளன. அவற்றுக்கு மிகவிரிவான பண்பாட்டுப்பின்புலம் உள்ளது. அதை கறாராக அணுகுவது வன்முறையாகத்தான் ஆகும். நல்லெண்ணம்கொண்ட கனிவேகூட எதிர்மறை விளைவுகளை உருவாக்கலாம். 

 நித்யாவின் வகுப்புத்தோழரும், பின்னர் கிறித்தவ மதகுருவாகி பெரும்புகழ்பெற்றவருமான, ஒருவரின் அனுபவத்தை நித்யா சொன்னார். அவரது எழுபது வயதில் நடந்த நிகழ்ச்சி அது. ஓர் இளம் கன்யாஸ்திரீ கழிவறையில் சுய இன்பம் செய்துகொள்ளும்போது அவளை ‘கையும்களவுமாக’ பொறிவைத்து பிடித்து அவர்முன் கொண்டுவந்திருக்கிறார்கள். அவர் அவளிடம் அந்தரங்கமாகப் பேசினார். அப்படிச்செய்வது பெரும் பாவம் என்று அறிவுரைகூறி மன்னித்துவிட்டிருக்கிறார்.

 ஆனால் அந்த பெண் மெல்லமெல்ல நரம்புநோயாளியாக ஆகி பின்னர் முழு மனநோயாளியானார். அதைப்பற்றி நித்யாவுக்கு உணர்ச்சிகரமாக எழுதினார் அந்த மதகுரு. ‘அந்த முட்டாள் அவளிடம் அதைப்பற்றிப் பேசியிருக்கக் கூடாது. அவளே அதைப்பற்றி அவரிடம் பேசினால் அது வேறு விஷயம். அவளுடைய அந்தரங்கத்தை இவர் எப்படி அழிக்கலாம்?’ என்றார் நித்யா. ‘ஆனால் இந்த உணர்ச்சிகளை சமணர்களும் பௌத்தர்களும் கிறித்தவர்களும் கொஞ்சம்கூட புரிந்துகொள்வதில்லை. அவர்களின் ஆகப்பெரிய பலவீனமே இதுதான்’

 

கிட்டத்தட்ட இதே நிகழ்ச்சியை ஒருவர் வேறு ஒரு களத்தில் சொன்னார். விடுதலைப் புலிகள் அமைப்பு தீவிரமாக ஆரம்பித்த எண்பதுகளில் சென்னை அருகே ஒரு முகாமில் இளைஞன் ஒருவன் கழிப்பறைக்குள் சுயஇன்பம் செய்துகொள்வதை தோழர்கள் பிடித்து அவனை பொதுவிசாரணைக்கு நிறுத்தினார்கள். அவனை அடித்து தண்டித்தார்கள். அப்போது புலிகள் அமைப்பு பிரம்மசரியத்தை ஒரு முக்கியமான நெறியாக , சுய அர்ப்பணத்தின் அடையாளமாக, முன்னிறுத்தியது. புலிகள் அந்த மனைநிலையை அவர்களுக்கு முன் இருந்த இருமரபுகளில் இருந்து பெற்றுக்கொண்டிருக்கலாம். ஒன்று கத்தோலிக்க கிறித்தவம், இன்னொன்று தேரவாத பௌத்தம்.

 காமத்தை அர்ப்பணிப்புக்கு எதிரானதாகக் காணும் போக்கு உலகச்சூழலில் எங்கும் இருந்திருக்கிறது. ஆகவே காமத்தை ஒடுக்கமுனைந்து அதன் மூலம் கடுமையான வன்முறைகளை பல்வேறு அமைப்புகள் உருவாக்கியிருக்கின்றன. குறிப்பாக பிரமம்சரியத்தை பெரும் அமைப்பாக கட்டி எழுப்பியிருக்கிற கத்தோலிக்கத்திருச்சபை, கீழைநாட்டு பௌத்தசங்கங்கள் மேல் பெரிய அளவில் குற்றச்சாட்டுகள் உள்ளன.

 இந்து ஞானமரபில் எப்போதுமே துறவு இருந்து வருகிறது. பின்னர் துறவியர் மடம் போன்ற அமைப்புகளை அது சமணர்களிடம் இருந்து எடுத்துக்கொண்டது. ஆனால் இங்கே உள்ள மரபே வேறு. ஒருவர் அவரே விரும்பி துறவியாக வந்தாரென்றால் பலவருடம் அவர் பிரம்மசாரியாக, மாணவராக அங்கே இருப்பார். அவரை கூர்ந்து அவதானித்து இயல்பிலேயே துறவுநாட்டம் கொண்டவர்  அவர் என்று தெளிந்தபின்னரே அவருக்கு துறவு அளிக்கப்படும். பலசமயம் அதற்கு பதினைந்து வருடங்கள்கூட ஆகும்.

 இக்காலகட்டத்தில் அவரது வழூக்கள் எல்லாமே இயல்பாகவே கருதப்படும்.  நூற்றுக்கு தொண்ணூற்றொன்பது பேர் அந்த காலகட்டத்திலேயே மணம்புரிந்துகொள்வார்கள்.  அதன்பின் இல்லற மாணவர்களாக அவர்கள் நீடிப்பார்கள். உதாரணமாக நித்யா குருகுலத்தில் துறவியாக ஆவதற்காக வந்தவர்கள்  இரண்டாயிரம்பேருக்கு மேல் இருப்பார்கள். துறவியாக ஆனவர்கள் பதினெட்டுபேர் மட்டுமே.

 இங்கே ஒரு வினா எழும், ஏன் துறவு என்ற கருத்து இத்தனை விரிவாக பெரும்பாலான மதங்களில் முன் வைக்கப்பட்டிருக்கிறது? காமம் பசியைப்போலவே இயற்கையானது அல்லவா? இயற்கையான ஒன்றை ஏன் ஒடுக்க வேண்டும்? காமத்தை அடக்குவது வழியாக நாம் நம் உள்ளத்தை திரிபடைய செய்து பலவகையான மனக்கோளாறுகளுக்கு ஆளாகிறோம் அல்லவா? அனேகமாக இந்த வினாவை ·ப்ராய்டிய அடித்தளம் கொண்டவர்கள் ஒரு நிரூபிக்கப்பட்ட உண்மை போலக் கேட்பதுண்டு.

 மனிதனுக்கு இப்போதிருக்கும் காமம் இயல்பானதாக, இயற்கையால் அளிக்கப்பட்டதாக, இல்லை என்பதே அதற்கான பதிலாகும். இன்றைய மனிதனுக்கு காமம் பசியைப்போன்றதல்ல. நூற்றாண்டுகளாக மனிதனின் காமம் உடலில் இருந்து உள்ளத்துக்கு மாற்றப்பட்டுவிட்டது. மனிதன் அளவுக்கு காமத்தையே எண்ணிக்கொண்டிருக்கும் பிற உயிரினம் ஏதும் இருக்க முடியாது. உள்ளத்துக்கு எல்லை இல்லை. ஆகவே மானுடனின் காமத்துக்கும் எல்லையே இல்லை. அது அவனுக்குள் பெருகிப்பெருகிச் சென்றபடியே இருக்கும். உண்மையில் காமத்தை கட்டுப்படுத்துதல் என்ற செயலைவிட ஒரு சாதாரண மனிதனுக்குள் இருக்கும் இந்த காமம் பலமடங்கு செயற்கையானது.

 இயற்கையில் கட்டற்றது என ஏதும் இல்லை. ஒவ்வொன்றும் பிறிதொன்றால் சரியாகக் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதே இயற்கையில் நாம் காணும் முரணியக்கத்தை உருவாக்குகிறது. ஒரேஒரு புல் கூட கட்டுப்படுத்தப்படாமல் விடப்பட்டால் பூமியை மூடிவிடும். ஒவ்வொரு உயிருக்குள்ளும் விரியவும் பரவவும் ஆக்ரமிக்கவும்  வெல்லவும் நீடிக்கவும் கூடிய ஆற்றல் உள்ளது. அதை இன்னொன்றின் ஆற்றல் தடுத்துநிறுத்தும்போதே இயற்கையின் சமநிலை இயக்கம் சாத்தியமாகிறது. புலி இல்லாமல் மான் இருந்தால் காடு அழியும், மானும் அழியும்.

 மானுடக்காமம் மனத்துக்குச் செல்லும்போது  அதற்குக் கட்டுப்பாடே இல்லை. அது செல்லும் தூரம் கற்பனைக்கும் அப்பாற்பட்டது. அதை கட்டுப்படுத்துவது ஒரே மறுதரப்புதான், உடல். அது எல்லையற்ற ஆற்றலுடையது அல்ல. காமத்தில் கட்டுப்பாடில்லாமல் இறங்கியவர்கள் உடலைத்தான் முதலில் அழிக்கிறார்கள். அதன் பின் உள்ளத்தை. ஏன் என்றால் அத்துமீறும்தோறும் காமம் வக்கிரமாகவே மாறும்.

 ஆகவேதான் காமத்தைக் கட்டுப்படுத்தும் விழுமியங்கள் எல்லா சமூகத்திலும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இருவகைக் கட்டுப்பாடுகள். ஒன்று நேரடியான ஒழுக்கக் கட்டுப்பாடு. இன்னொன்று காமத்தை காதலாக ஆக்கி உன்னதப்படுத்துவதன் மூலம் உருவாக்கப்படும் கட்டுப்பாடு. இவ்விரு கட்டுப்பாடுகள் வழியாக ஒழுகிச்செல்லும்போதே மானுடவாழ்க்கை சமநிலையில் இருக்கிறது. அந்தச்சமநிலையில்தான் அது இயல்பாக இருக்கமுடியும்.

 இயற்கையானது என்று காமத்தை கட்டின்றி விடுவோமென்றால் நாம் மிகமிகச் செயற்கையான ஒரு நிலையைச் சென்றடைவோம். இயற்கையில்  எந்த உயிரும் இருக்காத நிலை. நாய் கார்த்திகை மாசத்தில் இருப்பதுபோல வருடம்முழுக்க இருந்தால் அது பட்டினிகிடந்து சாகும். காமம் கட்டற்று ஓடும்  மனதில் வேறெந்த சிந்தனையும் இருக்காது. வேறெந்த தளத்திலும் அதற்கு வாழ்க்கை இருக்காது. அன்றாடவாழ்க்கையில் ஒரு காமத்தை கட்டுபப்டுத்தும் விசை நம்மில் இருக்க வேண்டும், மிகப்பெரும்பாலானவர்களில் இருக்கிறது.

 இதன் அடுத்த நிலையே காமத்தை ஒறுத்தல் என்பது. ஓர் உயர் இலட்சியத்துக்காக நம்மை சமர்ப்பணம் செய்யும்போது நம்முடைய முழுக்கவனமும், மொத்தச் செயல்பாடும் அதற்கு அளிக்கப்படவேண்டும் என்றால் நம்முடைய இன்பங்களை ஒடுக்கியே ஆகவேண்டும். இன்பங்களில் தலையாயது காமம் என்பதனால்தான் அதை ஒடுக்கவேண்டும் என்று சொல்லப்படுகிறது. காமத்தை ஒடுக்காதவர்களால் எந்தவகையான பரப்புநர் பணியையும் செய்யமுடியாது. சமண பௌத்த துறவிகள், கிறித்தவ மிஷனரிகள் மட்டுமல்ல கம்யூனிஸ்டுத்தலைவர்கள்கூட விதிவிலக்கல்ல.

 

இது அனைவருக்கும் சாத்தியமல்ல. அந்த அர்ப்பணிப்பின் தீவிரமே அதை தீர்மானிக்கிறது. இது எப்போதைக்கும் சாத்தியமல்ல. இலட்சியவேகத்தின் உந்துசக்தி வேகமிழக்கையில் யதார்த்தத்துக்கு வரும்போது காமம் மேலெழுகிறது. ஆகவேதான் பொதுவாக  மத, கட்சி அமைப்புகளில் இளம் வயதில் பிரம்மசரியம் பயில்பவர்கள் நடுவயதில் இல்வாழ்க்கைக்கு மீள்கிறார்கள். அது இயல்பானது.

 காமத்தை வெல்லலில் உச்சநிலை என்பது யோகம். முழுமையுண்மையை அறிவதென்பது அறிபவனை மெல்ல மெல்ல விலக்கி அறிவு மட்டுமேயாகி நிற்கும் நிலையை அடைவதே. அதற்கு தன்னுள் இருக்கும் காமத்தையும் வெறுப்புகளையும் ஆசைகளையும் ஒருவன் தாண்டவேண்டியிருக்கிறது. இல்லையேல் அந்த காமத்தையும் வெறுப்புகளையும் ஆசைகளையும்தான் அவன் உண்மை என்று கண்டுகொண்டிருப்பான். அதைத்தாண்டியே மெய்மை உள்ளது என அவன் அறியவும்செய்வான்.

 மிக எளிமையாகவே இந்த விஷயத்தை நாம் பார்க்கலாம். நமக்கு மிகவும் பிடித்திருக்கும் ஒன்றின் யதார்த்ததை, நமக்கு பிடிக்காத ஒன்றின் யதார்த்ததை,  நாம் மிகவும் ஆசைப்படும் ஒன்றின் யதார்த்தத்தை நம்மால் அறிய முடிவதில்லை. அந்த தனிப்பட்ட உணர்ச்சிநிலைகளை விலக்கி மனதை தூய அறிதல் நோக்கிக் கொண்டுசெல்லும் பயணமே யோகம். காமத்தை வெல்லல் அதன் முதல் படி. இங்கே காம ஒறுத்தல் அல்ல காமத்தை வெல்லலே முன்வைக்கப்படுகிறது என்பதைக் கவனிக்கலாம். அதற்காகவே துறவு என்ற நெறி உருவாகி வந்தது.     

 ஆனால் துறவு என்பது வெறுமே வேண்டாம் என்று சொல்லிவிடுவது அல்ல. அப்படிச் சொல்வது எளிய விஷயம் அல்ல. ஏனென்றால் காமம் மிக இயல்பான ஒரு மானுட ஆற்றல். அதை ஒடுக்கும்தோறும் அது வளரும். அதை கட்டுப்படுத்தப் படுத்த அது ரகசியமாக ஆகும். ஆகவேதான் சமண கிறித்தவ மரபுகளில் அதை அம்பலப்படுத்தச் சொல்கிறார்கள். அது ஒரு குரூரமான மருத்துவம். காமத்தை கட்டுப்படுத்த கூட்டாக வாழ்ந்து தனிமையை தவிர்த்தல், கடுமையாக உடலை வருத்திக்கொள்ளுதல், சேவைகளில் மிகத்தீவிரமாக ஈடுபடுதல் தினசரி சுய விமரிசனம் செய்தல் போன்ற வழிகளை கிறித்தவம் கையாளுகிறது.

 இவற்றை எதிர்மறை வழிகள் என்றே இந்துமரபு எண்ணுகிறது. நேர்நிலையான பல வழிகளை அது கண்டெடுத்துள்ளது. யோகத்துடன் இணையாவிட்டால் துறவு பொருளற்றுவிடும் என்பதே  இந்திய மரபாகும். யோகமுறைகள் இரு வழிகளில் செயல்படுத்தப்படுகின்றன.ஒன்று, அன்றாடச்செயல்கள் சார்ந்தவை. அதாவது புற  உலகம் சார்ந்தவை. இரண்டு,  மனச்செயல் சார்ந்தவை,அகம் சார்ந்தவை.

 புற உலகம் நம்முள் நுழைவதை குறைத்துக்கொள்ளுதல் என்று முதல் தளத்தைச் சொல்லலாம். யோகநூல்கள் அதை யமநியமங்கள் என்கின்றன. புலன்கள் படியும் உலகத்தை எளிமையானதாக நேர்நிலையானதாக வைத்துக்கொள்ளுதல் இது. ஒரு நகரத்தில் வாழ்பவரை விட ஒரு இனிய ஆசிரமத்தில் வாழ்பவருக்கு புலனடக்கம் எளிதானது. இதற்கு சீரான வாழ்க்கைநெறிகளையும் பல்வேறு வகையான உடல்சார் பயிற்சிகளையும் யோகம் பரிந்துரை செய்கிறது.

 அகத்தை வெல்ல யோகம் மிகவிரிவான ஒரு மனப்பயிற்சி முறையைச் சொல்கிறது. அதன் படிநிலைகள் பல. பொதுவாக, காமத்தை தடுப்பதோ அல்லது தவிர்ப்பதோ அல்ல அதன் வழிமுறை. காமத்தை விலகி நின்று கூர்ந்து அவதானிப்பதாகும். ‘அறிதலே கடந்துசெல்லல்’ என்பது அதன் கோட்பாடு. ஒன்றை அறியும்தோறும் அது நமக்குக் கட்டுபடுகிறது, நாம் அதில் ஈடுபடுவது குறைகிறது.

 காமத்தை அழகியல் மூலம், பக்தி மூலம் உன்னதப்படுத்திக்கொள்ளுதல் [sublimation] பௌத்தம் உட்பட உள்ள யோகாசார மரபுகளில் உள்ள வழிமுறை. உதாரணமாக காமம் கலையாக மாற்றப்படும்போது அதன் இயல்பே மாறிவிடுகிறது. அம்பிகையின் கொங்கைகளை போற்றிப்பாடுவது காமம்தான், ஆனால் அங்கே காமம் அழகியலாக மாறுவதனால் காம உணர்ச்சிக்குப் பதில் மேன்மைப்படுத்தப்பட்ட உணர்ச்சிகளே உருவாகின்றன. நம்முடைய பக்திமரபில் இதைக் காணலாம். அஜந்தா ஓவியங்களிலும் இதைக் காணலாம்

 காமத்தை மற்று பலவாக பகுப்பதும் உருமாற்றுவதும் யோகத்தில் உண்டு. சூரபதுமனை வென்ற முருகன் அவனையே தன் வேலும் கொடியுமாக ஆக்கிக்கொண்டான் என்ற கதையின் பொருள் இதுவே. சூரன் என்ற அசுரன் வழிபடும் தெய்வமாக ஆகிவிடுகிறான். இந்த செயல்முறைகள் விரிவாகப்பேசவேண்டிய வேறு விஷயம்.

 யோகம் என்பது சிதறிச் சிதறி அன்றாட உலகம் மீது பரவும் பிரக்ஞையை குவித்து முழுமைப்படுத்தும் ஒரு கலை.  முழுமைநிலையில் காமம் தவிர்க்கப்படுவதில்லை, அனைத்துமாக நிற்கும் பிரக்ஞையின் ஒரு பகுதியாக அதுவும் இயல்பாக நிற்கிறது. மனம் முழுக்க பரவி நின்று ஆட்டமிடும் அதன் இயல்பு இல்லாமலாக்கப்படுகிறது. முழுமையை உணர்ந்த மனதுக்கு காமம் அழகின்  ஊற்றுமுகமாக மாறிவிடும். அது அவனுக்குப் பிரபஞ்ச தரிசனத்தை அளிக்கும் ஒரு வழியாகவும் ஆகும்

 ஆகவேதான்  அகம் விழிப்புற்றால் புலனடக்கமே தேவையில்லை என்றது நம் சித்தர் மரபு. அகம் நிறைந்தவனுக்கு புலன்கள் அமுதத்தை மட்டுமே அளிக்கும் என்பது யோகமரபின் ஞானம். 

 காந்திக்கு  இந்திய மரபில் எந்த முறையான பயிற்சியும் இருக்கவில்லை. ஆகவே அவருக்கு இந்திய ஞான மரபில் புலன்களை வெல்ல முழுமைநோக்கிச்செல்ல உருவாக்கப்பட்டிருந்த முறைகள் எதுவுமே தெரியவில்லை. மட்டுமல்ல அவற்றைப் பொருட்படுத்தக்கூடிய மனநிலை கொண்டவரும் அல்ல அவர். அவரது மனம் மேற்கே பயின்றது. அவரது அகத்தில் இருந்த சமணம் அவருக்கு பிறப்பிலேயே கிடைத்தது. சமணத்தில் யோகமரபு பெரிய முக்கியத்துவம் உடையதல்ல. புலன்களை வெல்லுதல் அல்ல மூடிவிடுதலே அவர்களின் வழி. ‘ஐந்தவித்தல்’ என குறள் அதையே சொல்கிறது. கடுமையான விரதங்களே அவர்களின் வழி.

 காந்தி கிறித்தவத்தில் இருந்து தன் புலனடக்கமுறைகளை எடுத்துக்கொண்டார். குற்றவுணர்ச்சியையே புலனடக்கத்துக்கான முக்கியமான கருவியாக அவர்கள் நினைக்கிறார்கள். காமத்தை  ஆதிபாவம் என்று விலக்கும் கிறித்தவம் அதை சாத்தானின் ஆயுதம் என்கிறது. அறிக்கையிடுதல் மனம் வருந்துதல் பிராயச்சித்தம் செய்தல் மூலம் காமத்தை தாண்ட முனைவது அதன் வழி.  காந்தியின் ஆசிரமங்களில் இருந்த முறை அதுவே.

 அது  சாதாரண மனிதர்களுக்கு மிகப்பெரிய துன்பத்தை அளிக்கக்கூடியது. காந்தி தன் ஆசிரமவாசிகளை இந்தவழிமுறையால் கடுமையான சோதனைகளுக்கு ஆளாக்கினார். தன்னை அவர் ஒடுக்கிக்கொண்டார், தன்னைப்போலவே பிறரையும் நடத்தியதனால் அவர்கள் தாளமுடியாத இம்சையை அனுபவித்தனர்.

 அத்துடன் காந்தி காமத்தை அணுகிய முறை மிக வரண்டதாக இருந்தது. சோதனைச்சாலையில் சடலத்தை அறுத்து பார்ப்பது போல அவர் காமத்தை  ஆராய்ந்தார். காமம் என்பது மிக உணர்ச்சிகரமான ஒன்று.  அது சாராம்சத்தில் மிக எளிமையான ஒரு செயலாக இருக்கலாம். ஆனால் பல்லாயிரம் வருடங்களாக மனிதன் அதன் மீது ஏற்றிய உணர்ச்சிநிலைகள், படிமங்கள் அதில் உள்ளன. அவற்றையெல்லாம் ஒரே வீச்சாக புறந்தள்ளி மீண்டும் அதை ஒரு எளிய உடற்செயலாக குறுக்குவது சாத்தியமே அல்ல. காந்தி அதைத்தான் செய்ய முயன்றார், தனக்கு மட்டுமல்ல தன்னைச் சார்ந்தவர்களுக்கும்.

காந்தி காமத்தைச்சார்ந்து செய்த சோதனைகள் ஒன்றை விரிவாக அறியாமல் அதனுடன் விளையாடும் முயற்சிகள். தென்னாப்ரிக்காவில் இருக்கையில் நாற்பது வயதை ஒட்டி காந்தி புலனடக்கம் பயில்கிறார். ஆனால் புலனடக்கத்தைச் சாத்தியமாக்கும் எந்த யோக நெறிகளையும் அப்போது அவர் செய்யவில்லை. அல்லது மதநம்பிக்கை சார்ந்த விரதங்கள் போன்ற செயல்களிலும் ஈடுபடவில்லை.

ஆகவே அவருக்குள் காமம் குமுறியபடியே தான் இருந்திருக்கும். அதற்கு அவர் லண்டனில் வாழ்ந்தபோது தொடர்புகொண்டிருந்த சில கிறித்தவக் குழுக்களில் இருந்து கற்றுக்கொண்டபடி கடுமையான நோன்புகள் மூலம் உடலை ஒடுக்கித்தான் மனதை ஒடுக்கினார். இருந்தும் அவரது ஆழத்தில் காமம் இருந்தது. அவர் கனவுகளில் காமத்தை உணர்ந்து மனச்சோர்வடைந்தார். காமத்தை ஓயாது சோதனை செய்து பார்த்துக்கொண்டே இருந்தார் காந்தி. அதாவது காமத்தை புறவயப்பார்வை என்ற வெயிலில் போட்டு காயவைத்து சுக்காக ஆக்கிக்கொள்ளமுடியுமா என்று முயன்றபடியே இருந்தார்.

அந்தச்சோதனைகளில் அவர் சலிப்பும் ஏமாற்றமும்தான் அடைந்துகொண்டிருந்தார். தான் செய்துகொண்டிருக்கும் சோதனைகள் அனைவருக்கும் உரியதல்ல என்றும் உணரவில்லை. அதை அனைவருக்கும் அவர் பரிந்துரை செய்தது மட்டுமல்ல சீடர்களுக்கு கட்டாயப்படுத்தவும்செய்தார். அவர்கள் அதை கடைப்பிடிக்கமுடியவில்லை என்று கண்டு அதிலும் சோர்வடைந்தார்.

கடைசிக்காலகட்டத்தில் காந்தி சில தாந்த்ரீகச் செயல்பாடுகளில் நாட்டம் கொண்டிருந்தார். ஆனால் எந்த குருவழிகாட்டலும் இல்லாமல் தனக்குத்தோன்றியபடி தன் உடலை வைத்துச் சோதனைசெய்தார். பெருங்காட்டுக்குள் திசையறிதல் இல்லாமல்சென்றுவிட்டவர் போல தத்தளித்தார். தன் முழு விசையாலும் மூர்க்கமாக தன் காமத்துடன் மோதிச்சரிந்தார்.

காந்தியைப்பொறுத்தவரை ஒட்டுமொத்த வாழ்க்கையே சோதனையும் போராட்டமும் மட்டும்தான். வேறு எதுவுமே அல்ல. மகிழ்ச்சி என்பதே  அச்சோதனையில் அடையும் வெற்றி மட்டுமே. எல்லா செயல்களும் ஆன்ம மேம்பாட்டுக்கான படிகளே. அது அவருக்குச் சரி, பிறருக்கும் அப்படி என்று சொல்லமுடியாது. வாழ்க்கையின் கொண்டாட்டங்களையும் உல்லாசங்களையும் அவர் ஆன்மாவுக்கு எதிரானதாகவே கண்டார். ஆகவே நல்ல உணவு, நல்ல இசை, நல்ல கலைகள் எதுவுமே அவருக்கு முக்கியமானதாகப் படவில்லை. ஏன், அவர் குருவாகப்போற்றிய லேவ் தஸ்தோயின் ஒரு நாவலைக்கூட அவர் வாசிக்கவில்லை. வாசிக்கவேண்டுமென எண்ணவும் இல்லை.

தனிப்பட்ட முறையிலும் நான் கொஞ்சம்கூட ஏற்றுக்கொள்ள முடியாத கருத்துநிலை இது. வாழ்க்கை என்பது ஒரு தீராத அறிதல். ஆகவே ஒரு தீராத போராட்டம். ஆனால் அதேசமயம் அது கொண்டாட்டமும் கூடத்தான். கலை, இலக்கியம், இயற்கை அளிக்கும் உவகை இல்லாமல் என்னளவில் வாழ்க்கை அர்த்தபூர்வமானதல்ல. ஆகவே நான் காந்தி முன்வைக்கும் காமம் குறித்த எல்லா கருத்துக்களையும் முதிராத கருத்துக்கள் என்று முற்றாக நிராகரிக்கிறேன்.

[மேலும்]

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/5130

1 ping

  1. காந்தி கடிதங்கள்

    […] காந்தியும் காமமும் 1 காந்தியும் காமமும் 2 காந்தியும் […]

Comments have been disabled.