கம்பனும் காமமும் :ஒருகடிதம்

//இன்றைய வாசகன் கம்பனில் தோய்வதென்பது ஒரு விடுதலை. நாம் வாழும் இரும்புச்சட்டங்களினால் ஆன உலகில் இருந்து , மண்ணிலிருந்து எழமுடியாத எடையில் இருந்து எழுந்து கனவுகளின் பெருவெளியில் அலைதல்தான் அது. அங்கே நம்மைக் கட்டுப்படுத்தும் அச்சங்கள் இல்லை. ஏமாற்றும் பாவனைகள் இல்லை. முக்கியமாக கம்பன் மெல்லமெல்ல நம்மை ஒழுக்கம் என்ற கவசத்திலிருந்தும் சற்றே விடுவித்து ஆத்மாவின்மீது இளம்காற்று படும்படி செய்கிறான். அதன் பின் தூய உள்ளுணர்வுகளினால் மட்டுமே உள்வாங்கப்படும் வனப்புகளில் உலவ விடுகிறான்.// [கம்பனும் காமமும்:அணிகளின் அணிநடை]

Pornographyலிருந்து இந்த விடுதலையைப் பெற முடியுமா? அல்லது ஏன் பெற முடியாது?

தெய்வங்களின் கதையில் இது சொல்லப்படுவதால் ஆன்ம விடுதலை கிடைக்கிறதா? சாலமனின் பாடல்களை சாதாரணமாக வாசிப்பதற்கும் இறைவனின் மனைவியாக திருச்சபை இருப்பதற்குமான உறவின் பின்னணியில் வாசிப்பதற்குமான வித்தியாசம்தானா இது?

கம்பராமாயணம் கம்பன் கால ஒழுக்க நெரிகளைச் சொல்கிறதா அல்லது இராமர் கால ஒழுக்க நெரிகளைச் சொல்கிறதா?

பதிவை படித்தபின் எழுந்த சில கேள்விகள்

சிறில் அலெக்ஸ்

***

அன்புள்ள சிறில்,

உங்கள் வினாக்களை ஒவ்வொன்றாக எண்ணிப்பார்க்கிறேன்.

ஒன்று, கம்பனின் கவிதை அளிப்பது ஆன்ம விடுதலை அல்ல. அது கலை அளிக்கும் விடுதலையே. கலை அளிக்கும் விடுதலை என்பது சுருக்கமாகச் சொன்னால் இதுதான். நாம் வாழும் நம்மை மட்டுமே மையமாகக் கொண்ட அற்பமான திட்டவட்டமான அன்றாடவாழ்க்கையிலிருந்து மேலெழவும் முழுமையுடனும் சுதந்திரத்துடனும் வாழ்க்கையைக் காணவும் செய்கிறது அது. கற்பனையை விரியச்செய்வதன் வழியாக இதை நிகழ்த்துகிறது.

கம்பராமாயணம் உண்மையில் பக்திப்பாடல்கள் மற்றும் இறைதத்துவ நூல்கள் அளிக்கும் ‘ஆன்மிக’ அனுபவத்தை அளிப்பதில்லை. அது பக்தி, இறைதத்துவம் இரண்டும் நிறைந்துள்ள பெருங்காப்பியம்தான். ஆனாலும் விஞ்சி நிற்பது கவிதைச் சுவையே. ஆதலினால்தான் தமிழ்நாட்டின் வைணவர்கள் நடுவே கம்பனுக்கு முக்கியத்துவம் இருக்கவில்லை. அதை வைணவர்கள் தங்கள் மூலநூலாகக் கொள்வதுமில்லை. இன்னொரு பக்கம் வைணவ நூல்களை ஏறிட்டும் பார்க்காத சைவ அறிஞர்கள்கூட கம்பராமாயணத்தைக் கொண்டாடினார்கள்.

உதாரணமாக மறைமலை அடிகளின் வாழ்க்கையைப்பற்றிய ஒரு குறிப்பு. அவரிடம் அ.ச.ஞானசம்பந்தன் ஒரு திருவாய்மொழிப் பாடலைச் சொல்கிறார். ‘அடாடா நன்றாக இருக்கிறதே, என்ன பாட்டு?’ என்கிறார் மறைமலை அடிகள். இது பெரியதிருவாய்மொழி என்கிறார் அ.ச.ஞா.’ரொம்ப நன்றாக இருக்கிறது. இத்தனை வயதுவரை இதையெல்லாம் ஏறிட்டும் பார்க்காமல் இருந்துவிட்டோமே’ என்கிறார் மறைமலை அடிகள். அவர்கள் அந்நேரம் வரை பேசிக் கொண்டிருந்தது கம்பராமாயணத்தைப் பற்றி. கம்பன் இந்த உக்கிரமான ‘தூய’ கவியனுபூதியாலேயே எப்போதும் அடையாளப்படுத்தப்பட்டான். அவன் கடவுளைப் பாடவில்லை. மானுட அறத்தையே கடவுளின் இடத்தில் வைத்தான். கடவுளை அதன் மனித வடிவமாகக் கண்டான்.

இரண்டு, போர்னோ கிரா·பியிலிருந்து இவ்வனுபவத்தைப் பெறமுடியுமா என்று. மிக எளிய விடைதான் இதற்கு. பாலுணர்வெழுத்து அழகியல் அற்றது. அது நேரடியாக வேட்கையை மட்டுமே முன்வைப்பது, வேட்கையை மட்டுமே தூண்டும் தன்மை கொண்டது. அது ஒரு கருவி மட்டுமே.ஆகவே அதற்கு கலை மதிப்பு இல்லை. கலையம்சம் இருந்தால் அது உயரிலக்கியமாக ஆகிவிடுகிறது.

கலை என்ன செய்கிறது, அது பாலுணர்வெழுத்தில் இருந்து எப்படி வேறுபடுகிறது என்பதற்கு நுட்பமான இலக்கிய விமரிசனம் சார்ந்த விளக்கங்கள் பல நெடுங்காலமாக கொடுக்கப்பட்டுள்ளன. இதில் நான் உணர்ந்த ஒரு அம்சம் என்னவென்றால் அவ்வேறுபாட்டை தாங்களே உணர்ந்து அது ஏன் என்று யோசிப்பவர்களுக்கு மட்டுமே இந்த விளக்கங்கள் புரியும் என்பதுதான்.

இலக்கியவிமரிசன ரீதியாக கலை செய்வத ‘உன்னதமாக்கல்’ [sublimation] என்பார்கள். இந்தக் கருதுகோள் பதினாறாம் நூற்றாண்டு கற்பனாவாதப் படைப்பாளிகளால் முன்வைக்கப்பட்டது. இன்றைய பின்நவீனத்துவம் அதை வேறு கோணத்தில் மீண்டும் விளக்குகிறது.இதை நான் என் ஆழ்நதியைத்தேடி என்ற நூலில் விரிவாகப் பேசியிருக்கிறேன்.

கலை எப்போதும் எங்கும் காமம், வன்முறை, பேராசை போன்ற அடிப்படை உணர்ச்சிகளையே பேசுபொருளாகக் கொண்டுள்ளது. அவற்றை நேரடியாக முன்வைக்கும் ஒரு நூலுக்கும் கலைப்படைப்புக்கும் உள்ள வேறுபாடு என்ன? ரா·பேலின் நிர்வாண ஓவியத்துக்கும் பிளேபாய் நடுப்பக்கத்துக்கும் உள்ள வேறுபாடு என்ன? கலை அடிப்படை உணர்ச்சிகளை உன்னதப்படுத்துகிறது. காமம் காதலாக ஆகிறது. வன்முறை வீரமாக ஆகிறது. இப்படி அடிப்படை உணர்ச்சிகளை தொடர்ந்து காலகாலமாக உன்னதப்படுத்துவதன் மூலமே மனிதகுலம் அவற்றை கட்டுக்குள் கொண்டு வந்து கலாச்சாரத்தையும் நாகரீகத்தையும் சமூக அமைப்பையும் உருவாக்கியது. மீண்டும் மீண்டும் எல்லா பண்பாடும் செய்து கொண்டிருப்பது இதையே. இச்செயல் சற்றே தளர்வுற்றாலும்கூட மனிதனின் அடிப்படை இச்சைகள் மேலெழுந்து சமூகம் நிலைகுலையவும் அழிவுகளுக்கு ஆளாகவும் செய்கிறது.

அடிப்படை உணர்ச்சிகளை கலை எவ்வாறெல்லாம் உன்னதப்படுத்துகிறது என்பதற்கு விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன. ஒன்று அயன்மைப்படுத்துதல். நாம் அன்றாடம் பார்த்துக் கொண்டிருக்கும் ஒன்றையே சற்று அன்னியமாக நம்மிடமிருந்து விலக்கிச் சித்தரித்தல். இரண்டு முழுமைப்படுத்துதல். நமது அன்றாட அனுபவம் ஒன்றை பிரபஞ்சநிகழ்வுகளின் பிரம்மாண்டம் முன் வைத்துக் காட்டுதல். மூன்று, செறிவாக்கல். ஒரு வாழ்க்கை நிகழ்வை பலநூறு நுண்ணிய தகவல்கள் மூலம் மிகமிக நுட்பமான ஒன்றாக மாற்றிவிடுதல். நான்கு அழகுபடுத்துதல். அலங்காரங்கள், அணிகள் வழியாக மேலும் மேலும் அழகுபடுத்துதல். ஐந்து, தத்துவப்படுத்துதல். வாழ்க்கை நிகழ்வை தத்துவநோக்குடன் இணைப்பதன் வழியாக அதன் மீது சிந்தனையின் தளத்தை விரிப்பது இது.

இன்னும் பல வகைகளைச் சொல்லிக் கொண்டே செல்லலாம். கலைக்கும் பாலுணர்வெழுத்துக்குமான வேறுபாடு என்பது கலைமூலம் மிகஎளிதில் உணரத்தக்கது. சுருங்கச்சொன்னால் அது உருவாக்கும் விளைவே அதற்கான ஆதாரம். ஆனால் மைக்கேலாஞ்சலோ காலம் முதல் மீண்டும் மீண்டும் மதவாதிகளிடமும் ஒழுக்க வாதிகளிடமும் இதை விளக்க முயன்று முயன்று தோற்றுக் கொண்டே இருக்கிறது மேலை அறிவுலகம்.

உன்னதமாக்கல் என்ற கோணத்திலேயே நாம் சமணக் காப்பியமான சீவகசிந்தாமணி இன்பச்சுவை காப்பியமாக இருப்பதை புரிந்துகொள்ள முடியும். பிக்குகள் தங்கியிருந்த  அஜந்தா குகைகளில் நிர்வாண ஓவியங்கள் இருந்ததைப் புரிந்து கொள்ள முடியும்.

எப்போதும் ஒரு அம்சத்தை மட்டும் வெளிப்படையாகவே காணலாம். பாலுணர்வுக்கலை என்பது வெளிப்படையானது, அப்பட்டமானது. காரணம் அது நம் இச்சையுடன் மட்டும் உரையாட விரும்புகிறது. உன்னதமாக்கல் நோக்கம் கொண்ட கலை என்பது எப்போதுமே அனுபவத்தை ‘இன்னொன்றாக’ ஆக்க முயல்கிறது. அது நம் அழகுணர்வுடன் பேச விரும்புகிறது. நம் இச்சைகளை மெல்ல தீண்டி எழுப்பி அழகுணர்வு நோக்கிக் கொண்டு செல்ல முயல்கிறது.

மதத்தால்தான் இவை கலையாக உணரப்படுகின்றனவா என்றீர்கள். சங்கப்பாடல்கள் மதச் சார்பு அற்றவைதானே? குறுந்தொகையும் கலித்தொகையும் எப்படி கலையாக உணரப்பட்டன? பிராகிருத மொழியிலும் கதாசப்தபதி போன்ற அகச்சுவை நூல்கள் பல உள்ளன. அவையும் கலைப்படைப்புகளாகவே கொள்ளப்பட்டன.

காமத்தை பக்தியுடன் இணைப்பது என்பது ஒரு வகையான உன்னதமாக்கல். அருணகிரிநாதரின் திருப்புகழும், ஜெயதேவரின் அஷ்டபதியும் சிறந்த உதாரணங்கள். பக்தி இணையும்போது காமம் ஒரு பிரபஞ்ச உணர்வாக மேலெழுகிறது. தன்னை இழந்து பிறிதில் கரைவதற்கான ஆதி உத்வேகம் ஒன்றின் குரலாக அகு ஆகிவிடுகிறது

சாலமோன் பாடல்கள் உலகக் கவிதையின் உச்சங்களில் ஒன்று. [குறிப்பாக இப்போதுள்ள 95 ஆம் வருடத்தைய மொழிபெயர்ப்பின் அழகிய தமிழில் படிக்கும்போது நெஞ்சை அள்ளுகின்றன. அதைப்பற்றி நான் தனியாகவே எழுத  வேண்டும்] அவை எளிமையானவை. செவ்வ்வியல் இரு கட்டங்களைக் கொண்டது. முதல் கட்டத்தில் எளிமை, உத்வேகம் ஆகியவற்றின் மூலமே அது முழுமையை உணரச் செய்வதாக இருக்கும். இரண்டாம் கட்டத்தில் அது நுட்பம் விரிவு மூலம் அதே முழுமையை உணரச்செய்யும். கம்பன் இரண்டாம் கட்டம்.

சாலமோன் பாடல்கள், ஸ்பெயினின் புனித ஜானின் பாடல்கள் முதலியவை பிரபஞ்ச அனுபவத்தின் சாயலை ஏற்றுவதன் மூலம் காமத்தை உன்னதப்படுத்திய கவிதைகள். புனித ஜானை சித்திரவதை செய்த மதவாதிகள் சாலமோனை மறு விளக்கம் அளித்து வைத்துக் கொண்டார்கள். அதுவும் ஒருவகை சித்திரவதையே.

2000த்தில் நாங்கள் ‘சொல்புதிது’ இதழில் இதற்காக ஒரு தனி நூல்பகுதியே வெளியிட்டிருக்கிறோம். நித்ய சைதன்ய யதி ஜெயதேவரையும் புனித ஜானையும் ஒப்பிட்டு எழுதிய கட்டுரையுடன்.

கம்பன் கவிதை கம்பன் காலத்து ஒழுக்க நெறிகளைச் சொல்கிறதா, இல்லை ராமன் காலத்தையதையா என்ற கேள்வி கலையனுபவத்தை பாலியல் மீறலின் அனுபவமாக மட்டும் எடுத்துக் கொண்டதன் விளைவு. ஏனென்றால் கம்பன் மிக உறுதியான ஒழுக்கவாதி. கடவுளின் இடத்தில் மானுட அறத்தை வைக்கும் படைப்பு கம்பராமாயணம் என்றேன். அறத்திலிருந்து முளைத்து எழும் ஒரு இலட்சிய ஒழுக்க நெறியையே கம்பராமாயணம் முன்வைக்கிறது. ஈன்றோர் மைந்தர் உறவு, இல்லற உறவு, சகோதரர் உறவு மட்டுமல்ல எதிரிகளுக்கு இடையேயான உறவுகூட இலட்சிய உறவாக அமையும்படி உருவாக்கப்பட்ட படைப்பு அது.

கம்பன் பேசும் ஒழுக்கம் எங்கும் இருந்தது அல்ல. இருக்கலாமென அவன் விழைந்தது. கம்பராமாயணம் தமிழ்ப் பண்பாட்டின் இலட்சியக் கனவின் உச்சம். காமத்தை உன்னதபப்டுத்தி கலையாக ஆக்கும் அவன் உறவுகளை வன்முறையை அரசியலை எல்லாமே அபப்டி உன்னதபப்டுத்துகிறார்.

காமத்தை உன்னதப்படுத்தும் கவித்துவ அனுபவம் மூலம் அவன் அளிக்கும் ஒழுக்க விடுதலை என நான் சொல்வது நமது இன்றைய பாவனைகளுக்கு அளிக்கும் விடுதலையையே. அன்று அவனது உச்சகட்ட ஒழுக்கநெறிகளுக்கும் வருணனைகளில் உள்ள காமத்தின் கொண்டாட்டத்துக்கும் இடையே முரண்பாடு இருப்பதாகவே உணரப்பட்டிருக்காது.

ராமன் காலத்து ஒழுக்கம் என்பது நாம் ராமாயணம் மூலம் அறிவதே. இரு பெரும் இதிகாசங்களும் பெரும் வாழ்க்கைப்பரப்பில் பலவகையான ஒழுக்க நெறிகளைப் பேசுகின்றன. அவற்றுக்கு இடையே இயல்பான ஊடாட்டமும் உள்ளது. உச்சநிலையாக ஒரு இலட்சிய  அறத்தை, ஒழுக்கத்தைப் பற்றி அவை பேசுகின்றன. அவை இலக்கியப் படைப்புகள் ஆதலால் அவற்றைப் பற்றி விரித்துப் பேச இன்றும் இடமுள்ளது. பிறன்மனை நோக்கா பேராண்மை கொண்ட ராமன் அண்ணன் மனைவியை மணந்த சுக்ரீவனை அது அவன் குலத்தின் அறம் என சாதாரணமாக ஏற்றுக் கொள்கிறான் என்பதே உதாரணம்.

வான்மீகியின் காவியம் சாலமோனின் பாடல்களைப்போல முதற்கட்டச் செவ்வியல். எளிமையும் தீவிரமும் கொண்டது. அதில் உள்ள வருணனைகள் கம்பனில் வேறு தோற்றம் கொள்கின்றன. உதாரணமாக வனவாசம் செய்யும் சீதையும் ராமனும் ஒரு குளத்தில் நீராடி காமமாடும் காட்சியை வால்மீகி எழுதுகிறார். இரு அழகிய மீன்கள் போல இயல்பாகக் காட்டப்படும் அக்காட்சியை கம்பனால் எழுத முடியாது. அப்படி ஒரு காட்சிகூட கம்பனில் இல்லை. அவன் மனம் அதை ஏற்காது. அவன் அதை நுட்பங்கள் செறிந்த அணியலங்காரங்கள் மிகுந்த இன்னொருவகை அழகனுபவமாகவே காட்டுவான்.

ஜெயமோகன்

கம்பனும் காமமும்:அணிகளின் அணிநடை

கேள்வி பதில் – 13

காமமும் கம்பனும்- ஒரு காலைநேரம்

கம்பனும் காமமும், இரண்டு

கம்பனும் காமமும் 3:அருளும் மருளும் அது

முந்தைய கட்டுரைதமிழினி ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைதாலப்பொலி: ஒருகடிதம்